Thursday, April 19, 2012

மெகாஹிட்


                                                                              
”வீல்”
புது வீட்டிற்குக் குடி வந்தபின் இது பத்தாம் அல்லது பதினோராம் தடவையாக அலறுகிறாள் என் சகதர்மினி. எந்த க்ஷேத்திரத்தில் இருந்து இந்த அசரீரி என்று லேசாக விழிகளை உயர்த்திப் பார்த்தேன். வழக்கம்போல் சமையலறையில் இருந்துதான். அன்னமிட்ட கையில் தோசை திருப்பியுடன் நின்றிருந்தாள். தோசை ஏதும் நன்றாக வந்துவிட்டதா? அந்த அதிர்ச்சியில்தான் இந்த அலறலா? என்று முதலில் நினைத்தேன்.

இது ஒரு தனி கதை. வாழ்வென்னும் காவியத்தில் இது ஒரு கிளைக்கதை என்று வேண்டுமானால் சொல்லலாம். அதாவது, சமையல் விஷயத்தில் சகதர்மினி உலகளாவிய சிந்தனையும் திறமையும் கொண்டவள். அரபி சுலைமானி தேநீர், அமெரிக்கன் காஃபி, முகல் பிரியாணி, காஷ்மீரி புலாவ், சிலோன் முட்டை புரோட்டா, இத்தாலியன் பீசா, ஃப்ரெஞ்சு ஃபிங்கர்ஸ் போன்ற பலவிதமான பதார்த்தங்கள் செய்து கலக்குபவள். பாருங்கள், ஜப்பானின் ஹைகூ, அரபி-பாரசீக கஜல், ஆங்கிலத்தின் லிமிரிக் சானட் போன்றவையெல்லாம் நானும் எழுதுவேன் என்று சொல்லிக்கொண்டு திராபையாக எழுதி ஜல்லியடிக்கும் என் போன்றவர்களே ‘நாங்கள் உலகளாவிய சிந்தனை கொண்டவர்கள்’ என்று பீற்றிக்கொள்ளும்போது இத்தனை நாடுகளின் உணவு வகைகளை உருப்படியாகச் சமைக்கும் சகதர்மினிகளை நாம் ஏன் உலகளாவிய சிந்தனையாளர்கள் என்று சொல்லக்கூடாது? நியாயம்தானே?

courtesy: cometokitchen.wordpress.com

இந்த உலகளாவிய சமையல் திறன்கூட இந்தியப் பெண்களுக்கே உரித்தான வரம் என்றுதான் சொல்லவேண்டும். இங்கே உள்ளூரிலேயே பிராந்தியத்துக்கு ஒவ்வொரு வகையான சமையல் இருக்கின்ற காரணத்தால் அவற்றையெல்லாம் கற்றுக்கொள்ளும் திறமை இயல்பாகவே நம் பெண்களுக்கு அமைந்துவிடுகிறது போலும். சமையல் விஷயத்தில் இங்கே ஒவ்வொரு ஊருமே ஒரு நாடுதான் என்று சொல்லலாம். எனவேதான் ‘ச்சீஸ் பர்கர்’ செய்யும் ஓர் இந்தியப் பெண்ணை நாம் அதிசயமாகப் பார்ப்பதில்லை. ஆனால் பனியாரம் சுடும் ஓர் ஐரோப்பிய ஸ்த்ரீயை நாம் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.

இப்படி உலக நாடுகளின் உணவுகளை எல்லாம் லாவகமாகச் செய்து கலக்கினாலும் தமிழர் நாகரிகத்தின் தனித்தன்மைகளில் ஒன்றான இந்த தோசை மட்டும் என் சகதர்மினியைப் பழிவாங்கிக் கொண்டிருப்பது ஏனென்று தெரியவில்லை. ஒருவேளை நான் தமிழ்ப் பேராசிரியன் என்பதாலா? அவளும் பிரயத்தனங்களுடன் எப்படியாவது தோசையை உருவாக்கிவிடத்தான் செய்கிறாள். எப்பாடு பட்டாவது மசால் தோசை, கைமா தோசை என்று அதிலும் பல வகைகளைச் சமைத்துப் பரிமாறுகிறாள். ஆனால் பதத்தில் ஏதோ ஒன்று பிசகி அவளைக் கண்கலங்க வைத்துவிடுகிறது. பெரும்பாலும் கல்லுடன் ஒட்டிக்கொண்டு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கும். கல்லில்தான் மிஸ்டேக் என்று மாற்றிப் பார்த்தாகிவிட்டது. ’நான் ஸ்டிக் பான்’ என்று சொல்கிறார்களே, அதன் பெயரே மகா பொய் என்று நிரூபிப்பதில் ஒரு குரூர திருப்தி இருக்கிறது என்பதுபோல் கோந்து போட்டது மாதிரி ஒட்டிக்கொள்கிறது. எங்கள் வீட்டு தோசை மாவுக்கு ஏன் இப்படியொரு ஐக்கிய உணர்வு என்று இன்றுவரை விளங்கவில்லை. இல்லையென்றால் ஒரு தினுசாக முறுகி வருகிறது, அதாவது ஒரே வட்டத்தில் இரவும் பகலும் இருப்பது மாதிரி, காதல் திருமணம் செய்துகொண்ட நீக்ரோவும் ஐரோப்பியனும் ஆலிங்கனத்தில் இருப்பது போல் ஒரு பாதி மட்டும் முறுகி இருக்கும். தோசை அஹிம்சையைக் கடைப்பிடித்து விட்டதென்றால் அது ஓர் இன்ப அதிர்ச்சிதான். அதனால்தான் சகதர்மினி திடீரென்று அலறியதற்கு அதுதான் காரணமாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன்.

“வீல்” என்று அலறினாள் என்றா சொன்னேன்? பாருங்கள், என் எழுத்துத் திறமை அவ்வளவுதான். அந்த அலறல் சத்தத்தைத் துல்லியமாக எழுதிக்காட்ட என்னால் முடியாது. ஏன், யாராலும் முடியாது. எந்த மொழியிலும் முடியாது. ஏதோ தோராயமாக ஒத்துவருகின்ற ஒரு சப்தத்தை நான் எழுதியிருக்கிறேன் அவ்வளவுதான். சகதர்மினிகள் எழுப்பும் பல சப்தங்கள் மொழியின் எல்லைகளைக் கடந்தவை என்பது கணவன்மார்கள் அறிந்த ஒன்றுதானே!

இரண்டாம் முறையும் அவள் அபாயக் குரல் எழுப்பியபோதுதான் நான் அலர்ட் ஆனேன். இதற்குமேலும் மடிக்கணினியில் ஓர்ந்து உட்கார்ந்திருப்பது நல்ல கணவனுக்கான லட்சணமல்ல. பிறகு நான் மடிக்கணினியை-யே கட்டிக்கொண்டு அழ வேண்டியதுதான். சபாஷ், எத்தனை நல்ல வாழ்த்து! ‘அதையே கட்டிக்கொண்டு அழுங்கள்’ என்பது சகதர்மினிகள் அவ்வப்போது பேசும் ஆப்த வாக்கியங்களில் ஒன்றுதானே? கணவன்மார்களுக்குத்தான் கட்டிக்கொண்டு அழ எத்தனை வஸ்துக்கள் வாய்த்திருக்கின்றன. தினத்தந்தி பேப்பர், ஆஃபீஸ் ஃபைல், லேப்டாப், டூவீலர், வாக்மேன், தஸ்பீஹ் மணி… நான் நினைத்துப் பார்க்கிறேன், அதையே கட்டிக்கொண்டு ஏன் சிரிக்கக் கூடாது? அழத்தான் வேண்டுமா? சகதர்மினிகள் இப்படி எரிச்சலாகப் பேசும் ஆப்த வாக்கியத்திலும் ஓர் ஆழமான தத்துவம் இருக்கிறது அன்பர்களே! ஆணின் வாழ்க்கையை முழுமை செய்பவள் அவள்தானே? அவள் இல்லாமல் வேறு எதை நீங்கள் ‘கட்டிக்’கொண்டாலும் நிம்மதி இருக்காது, மகிழ்ச்சி இருக்காது.

சரி, கையில் சட்டாப்பையுடன் நிற்பவளின் வாயிலிருந்து ஆப்த வாக்கியம் புறப்படுவதற்குள் நான் புறப்பட்டுவிட்டேன் க்ஷேத்திரம் நோக்கி.
“என்னப்பா? என்ன?”
அவள் விரலால் சுட்டிக்காட்டுகிறாள். கேஸ் சிலிண்டருக்கு அருகில் நிற்கிறது அந்த பிரஹஸ்பதி. அரக்கு நிறத்தில் பளபளக்கும் மேனியுடன், இரண்டு கைகளிலும் நீளமான வாள்களைப் பிடித்துக்கொண்டு அனாயசமாக சுழற்றும் வீரனைப் போல் இரண்டு மீசையை வைத்துக்கொண்டு – கரப்பான். அது மீசையை ஆட்டுவதைப் பார்த்தால், ‘மீசை வச்ச ஆம்பிளையா இருந்தா ஒண்டிக்கு ஒண்டி வாடா பாக்கலாம்’ என்று சவால் விடுவதைப் போல் இருக்கிறது. சகதர்மினியை பயமுறுத்தும் சத்ருக்கள் என்று நான்கைந்து பேர் இருக்கிறார்கள். பின் பால்கனியில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைக்கூடையைக் குடைய வரும் பூனை, கோழி, பல்லி போன்றவை. இந்தப் பட்டியலில் இப்போது முன்னணியில் இருப்பது கரப்பான்.

கரப்பானுக்கும் எனக்குமான உறவு என் பால்ய நாட்களிலேயே ஆரம்பமாகிவிட்ட ஒன்று. அப்போதெல்லாம் எனக்கு அதனிடம் தனிப்பட்ட பகையென்று எதுவுமில்லை. கிராமத்தில் இருந்த எங்கள் வீட்டில் அவை சர்வ சுதந்திரமாக பவனி வரும், குறிப்பாக சமையலறையில். என் அம்மா உட்பட நாங்கள் யாருமே அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. மதியம் அம்மா உறங்கிக் கொண்டிருக்கும் நேரம் பொட்டுக்கடலையும் சக்கரையும் எடுப்பதற்காகப் பதுங்கிப் பதுங்கிக் கிச்சனுக்குள் போய்ப் பார்த்தால் டப்பா மீது நின்றுகொண்டு மீசையை சுழற்றிக்கொண்டிருக்கும். “இந்தா ச்சூ” என்று விரட்டிவிட்டு வேலையைப் பார்ப்போம். எப்போதாவது ஓரிரண்டு கரப்பான் செருப்படி பட்டுச் செத்ததுண்டு.

இப்படியாக நாங்கள் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் ப்ளஸ்-டூவில் வந்து வாய்த்தது கரப்பானை ஆய்வு செய்யும் பாடம். ஒரு கண்ணாடிச் சில்லின்மீது அதை மல்லாத்திப் போட்டு கால்களைப் பரப்பிவிட்டு ஒவ்வொரு பாகமாகப் பிரித்தெடுத்து- என் பிராமண நண்பர்கள்கூட குமட்டாமல் செய்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதன் மண்டையைத் தனியாகக் கழற்றி வாய் மூக்கையெல்லாம் வேறு தனித்தனியாக எடுத்துவைக்க வேண்டுமாம்! அப்போதிலிருந்து ஆரம்பித்தது எனக்கு, கரப்பான் என்றால் வயிற்றில் ஒரு பந்தை உருட்டும்.

என்ன இருந்தாலும் கரப்பான் நான் மிகவும் வியக்கும் ஒரு ஜீவன். ரத்தத்தில் சிவப்பு கிடையாது. அது மூச்சுவிட காற்று வேண்டும், ஆனால் ஆக்சிஜன்தான் வேண்டும் என்ற கெடுபிடி இல்லை. அதனால், மீத்தேன் அதிகமாக உள்ள செவ்வாய் கிரகத்திற்குக்கூட சுற்றுலா அனுப்பி வைத்தால் ஜாலியாக இருந்துவிட்டு வருமாம். (ஆனால் செவ்வாய் என்றாலே நமக்கு மூச்சுத் திணறல்தான்!) டைனோசார்கள் காலத்திலேயே இவையும் அவர்களுடன் இருந்தனவாம். ஒரு பிரளயத்தில் அந்தப் பெரும்புள்ளிகள் எல்லாம் பூண்டோடு அழிந்துவிட இவை மட்டும் புல்பூண்டே இல்லாத பூமிப்பரப்பிலும் எப்படியோ தாக்குப் பிடித்துக்கொண்டு பிழைத்து வந்து இன்றுவரை ஜமாய்த்துக் கொண்டுள்ளன. மண்ணில் சாமானியமாக மக்காத பிளாஸ்டிக்கைக்கூட தின்று செறித்துவிடுமாம். என்னவொரு படைப்பு பார்த்தீர்களா?

ஆனால் இந்தச் சிறப்பெல்லாம் மனிதர்களின்முன் எடுபடுவதில்லை. வி.ஐ.பி பூச்சி என்பதற்காக நம் இருப்பிடத்தைத் தாரை வார்த்துக் கொடுக்கவா முடியும்? ”ஒழித்துக் கட்டுங்கள்” என்று சகதர்மினி கட்டளை போட்டுவிட்டாள். மீண்டும் என் பால்ய காலம் நியாபகம் வருகிறது. என் அம்மாவுக்கு வைரிகளாக இருந்தது கருவண்டுதான். வீட்டின் பின்னே கொள்ளையில் இருந்த பத்துப் பனிரெண்டு தென்னை மரங்களில் இருந்து ராத்திரிகளில் விர்ரென்று வீட்டிற்குள் பறந்துவரும். எலுமிச்சை சைஸில் பளபளப்பான கறுப்பாக இருக்கும் அந்த வண்டைப் பார்த்ததுமே அம்மா உச்ச ஸ்தாயியில் வீறிட்டு அலறுவார். அதை துவம்சம் செய்து அம்மாவைக் ’காப்பதற்கு’ அத்தா பாயும் காட்சி இன்னமும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது. இப்போது நான் என் சகதர்மினியின் அச்சத்தைப் போக்க இந்தக் கரப்பானை ஒழித்துக் கட்ட வேண்டும். இது இன்று நேற்று ஏற்பட்ட நடப்பாகத் தெரியவில்லை. பல்லாயிரம் வருக்டங்களுக்கு முன்பே, கானகங்களில் வாழ்ந்த காலத்தில், குகையில் பயந்து ஒடுங்கியிருக்கும் தன் துணைவியையும் குழந்தைகளையும் பாதுகாக்க ஆதி மனிதன் கையில் ஆயுதம் ஏந்தி சிங்கம் புலி போன்ற விலங்குகளுடன் சண்டையிட்டிருப்பான் அல்லவா? இது அந்த மரபின் தொடர்ச்சிதான் போலும். “ஆண்கள் பெண்களின் அதிகாரிகள்” என்று குர்ஆன் சொல்கிறது.

கரப்பானை ஒழிப்பதற்கான உத்திகளும் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. கரப்பானின் உருவத்தில் எந்தப் பரிணாம வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று நினைக்கிறேன். அதுவரை நாம் பிழைத்தோம். மென் இன் பிளாக் படத்தில் வரும் ஜந்துக்கள் போல், ஒரு கரப்பான் நாய் சைஸில் இருந்தால் நம் நிலைமை என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள். நல்ல வேளையாக அவை கறிவேப்பிலை அளவுக்கு மேல் வளர்வதில்லை. டார்வின் தியரியைப் பொய்யாக்கியவை அவை. வலியதான டைனோசர்களின் இனமே அழிந்துவிட்ட நிலையில் இந்த அற்பப் பூச்சிகள் பிழைத்துக்கொண்டன. அவற்றை ஒழிப்பதற்காக வகுக்கப்படும் உத்திகளை மீறி அடுத்த கட்டத்திற்குப் போய்விடுகின்றன.

நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு மாத்திரை வந்தது. கரப்பானின் ரசனையை எப்படியோ கண்டுபிடித்து அதற்கேற்ப அந்த மாத்திரையைத் தயாரித்திருந்தார்கள். கரப்பானுக்கு அது கேட்பரீஸ் டெம்ப்டேஷன் போல் இருக்குமாம். அதைத் தின்றுவிட்டால் போதும், சிறிது நேரத்தில் கரப்பான் டீஹைட்ரேட் ஆகிவிடும், அதாவது அதன் உடலில் உள்ள நீரெல்லாம் வத்தி குளுக்கோஸ் ஏத்த வேண்டிய நிலைக்கு வந்துவிடும். நாம் முன்பே எச்சரிக்கையாக எல்லா தண்ணீர்க் குழாய்களையும் அடைத்து வைத்துவிட வேண்டும். தண்ணீரைத் தேடி அலைந்து அல்லாடிக் கடைசியில் மண்டையைப் போட்டுவிடும். மனிதனுக்கு என்ன ஒரு குரூர புத்தி பாருங்கள். என்னதான் பூச்சிகளை அழிப்பதாக இருந்தாலும் அதில் இத்தனை கிரிமினல் அம்சம் தேவைதானா என்று தோன்றுகிறது. கொசு அடிப்பதற்கு மின்சார மட்டை வந்தபோது அமோகமாக விற்பனை ஆனது. வாங்குவது தகுமா என்று நான் மிகவும் யோசித்தேன். அது எங்கே கிடைக்கும் என்று என் நண்பரான ஒரு ஹஜ்ரத் விசாரித்தார். கொசு அடிப்பதற்கு மிக அற்புதமான கருவி என்று வேறு பாராட்டினார்.

பிறகு வந்தது ஒரு விஷ சுண்ணக் கட்டி – பாய்ஸன் ச்சாக்பீஸ். அதை வைத்துக் கரப்பான் வரும் வழிகளில் எல்லாம் கோடு வரைந்துவிட வேண்டுமாம். அதன்பின் விசா எடுக்காமல் அந்த எல்லையைக் கரப்பான் தாண்டாது என்று நமக்கு ஒரு நெனப்பு! சமையலறையின் ஷெல்ஃபுக் கட்டைகளில் எல்லாம் அவ்வப்போது கோடு வரைந்து கொண்டிருந்தேன். நாம் போடும் கோடுகளை நாமே சந்தோஷமாகத் தாண்டிக் கொண்டிருக்கும்போது கரப்பானுக்கு மட்டும் என்ன தலைவிதியா? அவையும் படு குஷியாக எல்லை மீறி வாழ்ந்து செழித்தன. விஷங்களில் கொடிய விஷம் வறுமை என்பார்கள். அந்த வறுமைக் கோட்டிற்குள் இருக்கும்போதே நம் இந்தியாவின் பெரும்பான்மை ஜனத்தொகை அமோகமாக விளைந்து கொண்டிருக்கிறதே! இந்தக் கரப்பான்களும் இந்தியாவின் பிரஜைகள்தானே, அவற்றிடம் மட்டும் அந்தப் பண்பு இல்லாமலா போய்விடும்?

இப்போது லேட்டஸ்ட்டாக வந்திருப்பது ஸ்ப்ரே. ஹிட் என்று வந்திருக்கும் இந்த ’விஷப் பீச்சி’ இல்லத்தரசிகளிடம் சூப்பர் ஹிட்டாம். கொசுவுக்கும் ஒரு ஸ்ப்ரே வந்திருப்பதாக விளம்பரத்தில் காட்டுகிறார்கள். கொசுப்பட்டாளம் வந்தவுடன் கணவனும் பிள்ளையும் வீட்டுக்கு வெளியே ஓடுகிறார்கள். இதைப் பார்க்கும் இல்லத்தரசி உடனே ஒரு ஸ்ப்ரே கேனை எடுத்து வருகிறாள். கொசுப்படை அவள் முன் வந்து ஆஜராகிறது, “தேவதையே! உன் கையால் சாவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்பது போல. ஒரு பித்தானை அமுக்கி அந்தக் கொசுப்படையை அழித்துவிடுகிறாள் அவள். வாழ்க பெருங்கருணை!

என் சகதர்மினியும் ஒரு ஹிட் வாங்கி வந்தாள். இந்த மாடலில் ஸ்ப்ரேவைப் பீச்சுவதற்கு ஒரு பீச்சாங்கோல் இருக்கிறது. துப்பாக்கிக் குழாய் போல் அதை நேராகக் கரப்பானை நோக்கிக் குறி வைத்துவிட்டு பித்தானை ஒரே அழுத்து. கரப்பான்கள் அதிர்ச்சியில் நாலைந்து ரவுண்டு ஓடிவிட்டு அப்படியே டபக்கென்று மல்லாந்து கால்களை உதறிக்கொண்டு மவுத்தாகி விடுகின்றன. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

முதலில் சில நாட்கள் சகதர்மினியே ஹிட்டைப் பயன்படுத்திக் கரப்பான்களை உண்டு இல்லை என்று வேட்டையாடிக் கொண்டிருந்தாள். கருணையே வடிவானவள்! எப்படி இது முடிகிறது என்று யோசித்துப் பார்த்தேன். பூச்சிகளுக்கும் உணவிட வேண்டும் என்னும் சிந்தனை கொண்டவள். அதனால் நாம் சாப்பிட்டு விட்டுப் போடும் குப்பையில் ஏதாவது கொஞ்சம் மிச்சமிருந்தால் பாதகமில்லை என்று நினைப்பவள். ஜீவகாருண்யை. அவள்தான் ஹிட் அடித்துக் கரப்பான்களை ஒழிக்கிறாள்.

நினைத்துப் பார்த்தால் இது வாழ்வின் நியதி என்பது புலப்படும். மான்குட்டியை சிங்கம் வேட்டையாடுகிறது. குறிப்பாக, வேட்டைக்குத் தலைமை தாங்கிச் செல்வது பெண் சிங்கம்தான். தன் பசியைவிடத் தன் குட்டிகளுக்கு உணவு வேண்டும் என்பதற்காக. அந்த வேட்டையின் பின்னணியில் இருப்பது வெறி அல்ல, கருணைதான்.

தன் பிள்ளையின் தலையில் இருக்கும் பேனை எடுத்து நசுக்கிக் கொல்வதிலிருந்து பாச்சை பல்லிகள் எதுவும் உணவுகளில் விழுந்து வைக்கக்கூடாது என்று கொல்வதெல்லாம் தன் ரத்த உறவுகளாக உள்ள ஜீவன்களின் நலனுக்காகத்தான். இதே அடிப்படையில்தான் நாம் கருணை பொங்கும் ராமன் தன் கையில் வில்லுடன் இருப்பதையும், காதலனான கிருஷ்ணன் தன் கையில் சக்கரம் வைத்திருப்பதையும் பார்க்கிறோம். தீயோரை அழிக்கும் அந்தச் சக்கரத்தை ஓர் ஆழ்வாராகவே பாவிக்கிறது வைணவம் – சக்கரத்தாழ்வான்! கல்கி அவதாரம் கையில் வாள் ஏந்தி வருவார் என்றுதான் குறிப்பு. நபிகள் நாயகம் வாள் ஏந்தி வந்தார்கள்! ‘அல்லாஹ்வின் போர்வாள்’ – ஸைஃபுல்லாஹ் என்று அவர்களை இமாம் பூஸரி வருணித்தார்கள். அவர்கள் அகில உலகங்களின் அருட்கொடை என்கிறது குர்ஆன்.

இதைச் சொல்லும்போது ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. ’எல்லா உயிர்களும் இறைவடிவம். எனவே எல்லா ஜீவன்கள் மீதும் கருணை காட்டுங்கள்’ ராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசித்ததைக் கேட்டு உள்ளம் இளகிப்போன சீடர் ஒருவர் அதே சிந்தனையாகத் தன் வீட்டிற்குச் சென்றாராம். இரவில் கொசுக்கள் பிய்த்துப் பிடுங்கவே இறைவடிவமான அவற்றை அடிப்பதா வேண்டாமா என்று அவருக்குப் பெரிய சிக்கலாகி விட்டது. அவர்தான் கொசுக்களை இறைவடிவம் என்று பார்க்கிறாரே தவிர அவை அவரை இறைவடிவம் என்று பார்ப்பதாகத் தெரியவில்லை. நள்ளிரவு வரை தத்தளித்துக் கொண்டிருந்த அவர் தன் குருவிடமே இதற்கொரு முடிவைக் கேட்டுவிடலாம் என்று அவரின் வீட்டை நோக்கிச் சென்றார். அவர் வந்த போது ராமகிருஷ்ணர் தன் மெத்தையில் அமர்ந்து ஒவ்வொரு மூட்டை பூச்சியாகத் தேடிப் பிடித்து நசுக்கிக் கொண்டிருந்தாராம். ‘இந்தப் பூச்சிகளால் பெரும் தொந்திரவப்பா. ராவெல்லாம் தூங்கவிட மாட்டேங்குது’ என்றாராம். அழித்தல் என்பதும் இறைக்கருணையின் ஒரு அம்சம்தான் என்பதை இப்படித்தான் விளங்கிக் கொள்ளவேண்டும். படைத்தல் காத்தல் அழித்தல் ஒவ்வொன்றும் சார்பானவையே. சகதர்மினி நிம்மதியாக தோசை படைக்க வேண்டுமென்றால் கரப்பான்களை அழித்துத்தான் ஆகவேண்டும்!

எப்போதெல்லாம் கரப்பான் கிச்சனிலும் பாத்ரூமிலும் அதிகரித்து அட்டகாசம் செய்கிறதோ அப்போதெல்லாம் கையில் ஹிட்டுடன் தோன்றி அவற்றை சம்ஹாரம் செய்துகொண்டிருந்தாள் சகதர்மினி. மனிதர்களில் சூப்பர்மேன் உள்ளது போல் கரப்பானிலும் சில பறப்பான்கள் உண்டு! அப்படி ஒரு சூப்பர் கரப்பான் ஒருநாள் வந்தது. ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ என்பதுபோல் அங்குமிங்கும் விர்ரென்று பறந்து அது டகல்பாஜி வேலை காட்டவும் சகதர்மினி அரண்டு போனாள். அப்போதிலிருந்து சம்ஹாரப் பணியை நான் ஏற்கவேண்டியதாயிற்று.

”வீல்” என்று அவளை அலறவைத்த கரப்பானுக்கு எதிராக நான் ஹிட்டாய்தம் ஏந்தினேன். பீச்சாங்குழலை நீட்டிவிட்டு அதை மூலை முடுக்கெல்லாம் தேடிக் கண்டுபிடித்து ஒரு ஹிட் அடித்தேன். அது லாவகமாகத் தாவிக்கொண்டு உணவு மேஜைக்கு அடியில் ஓடியது. இந்த ’விளையாட்டு’ என் பிள்ளைகளுக்கு ரொம்பவும் குஷி ஏற்றவே அவர்களும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டு வளைய வளைய வந்தார்கள். ‘அக்யூஸ்டு சப்ஜெயிலில் இருந்து தப்பித்து ஓடுகிறான். அவனை என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளுகிறேன் பார்’ என்பது போல் விரட்டித் துரத்திக் கடைசியில் ஒரு ஷாட்டில் மேற்படி ’கரபறப்பான் டபக்கென்று மல்லாந்து விழுந்து கைகளை அதாவது கால்களை உதறியது. சகராத்து நிலையில் எனக்கு எதிராக பத்துவா செய்கிறதோ? என்று பயமாக இருந்தது.

இதுவரை எத்தனை கரப்பான்கள் ஹிட் ஆயின என்று எண்ணவில்லை. ‘நூறாவது நாளை நோக்கி...” என்பது போல் இதுவும் போய்க்கொண்டிருக்கிறது. ஒருநாள் நிச்சயம் ‘மெகாஹிட்’ ஆகிவிடும்.

2 comments:

  1. ஒரு கரப்பான்பூச்சிய அடிச்சதுக்கு நாலு A4 பேப்பரா..?! :)

    ReplyDelete
  2. கரப்பான் பூச்சியை வைத்து இத்தனை விஷயம் தொட முடியுமா என்ன?
    அருமை

    ReplyDelete