(இக்கட்டுரை எஸ்.பாலபாரதி அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் எழுதப்பட்டு அவரால் 'பண்புடன்' இணைய இதழில் [www.panbudan.com] மார்ச்சில் வெளியிடப்பட்டது.)
”சூஃபி யார்?” இந்தக் கேள்விக்கு வரையறுப்பது போல் ஒரு பதிலைச் சொல்ல முடியாது. இதனை அறிந்தே பாரசீகத்தில் ஒரு சொலவடை உருவானது: “சூஃபி யார்? சூஃபியே சூஃபி!” (சூஃபி ச்சீஸ்த் சூஃபி சூஃபீஸ்த்).
எனினும், சூஃபி என்பவர் முஸ்லிம் ஞானி, முஸ்லிம் சித்தர், முஸ்லிம் யோகி, முஸ்லிம் அத்வைதி என்றெல்லாம் அடையாளப்படுத்தும் பதில்கள் உண்டு. இந்தியச் சூழலில் இந்த பதில்களே சூஃபி என்பவர் யார் என்று சட்டென்று அறிமுகப்படுத்தப் பொருத்தமானவை.
ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. சூஃபி என்பவர் மிகவும் சாதாரண மனிதராக, மற்ற மனிதர்களில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளாத ஒருவராக வாழக் கூடும். அதாவது, சாதாரண மனிதர்களின் வாழ்க்கை முறை சூஃபியாக இருப்பதற்குத் தடையானதல்ல. சூஃபிகள் பல கோலங்களில் உலகெங்கும் நிறைந்திருக்கிறார்கள். டீக்கடைக்காரர், பெட்டிக்கடை வியாபாரி, தொழில் அதிபர், ஆசிரியர், மருத்துவர், பொறிஞர், ஆசாரி, நாவிதர், விளையாட்டு வீரர், சிப்பாய், இல்லத்தரசி, தோட்டக்கலைஞர், ப்ளம்பர், ஓட்டுநர்- நடத்துநர், தள்ளுவண்டி வியாபாரி, அரசியல் தலைவர் (?)… இப்படி எந்தக் கோலத்திலும் சூஃபிகள் இருக்கலாம்.
சூஃபிகள் எல்லாம் சராசரி மனிதர்களைப் போலவே இருப்பார்கள் என்றாலும் அவர்கள் அகத்தில் விழிப்புப் பெற்றவர்கள். இந்த அண்ட சராசரத்தின் அடிப்படையாக இருக்கும் இறைவனுடன் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். மின்சாரம் பாயாத இரும்புச் சங்கிலியும், பாயும் இரும்புச் சங்கிலியும் பார்வைக்கு ஒரே மாதிரி தெரியலாம். ஆனால் தொட்டுப்பார்க்கும் போது அவை தரும் அனுபவம் நிச்சயமாக ஒன்றுபோல் இருக்காது. சூஃபிகள் இறையாற்றல் செயல்படும் கருவிகள்!
இந்தப் புள்ளியை விளக்க ஓர் அழகான உதாரணம் தருகிறேன். என் மனம் கவர்ந்த எழுத்தாளரான யுவன் சந்திரசேகர் எழுதிய “வெளியேற்றம்” என்னும் நாவலில் ஒரு பகுதி வருகிறது. குரு தன் ஆன்மிக வாழ்வின் ஆரம்பக் கட்டங்களைப் பற்றிச் சொல்கிறார், தன் சீடனான வேதம் என்பவனிடம். அப்போது நிகழுமொரு உரையாடல்:
”அவரோடயே கிளம்பிவிட்டீர்களா?
அட அட. அவர்களெல்லாம் மகான்கள் வேதம். பரப்பிரும்மம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே, அது. நம்மை மாதிரிச் சாதாரணர்கள் அண்ட முடியாது. நெருப்பை ஈ மொய்க்க முடியுமா என்ன?
குரு சிரித்தார்.”
இந்த உரையாடல் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த வரியை யுவன் சந்திரசேகர் தன் கற்பனையால் எழுதினாராக இருக்கலாம். அல்லது இதை நான் ஏற்கனவே எங்கே படித்தேனோ அங்கிருந்து எடுத்திருக்க வேண்டும். ஆம், இதே வரி சூஃபி மகான் முகைதீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் வாழ்க்கை சம்பவத்தில் வருகிறது. அதைச் சொல்கிறேன்.
அது கி.பி.பதினோராம் நூற்றாண்டு. இராக் நாட்டின் பக்தாத் நகரில் இருந்த நிஜாமிய்யா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சமயக் கல்வியை முழுமையாகக் கற்றுத் தேர்ந்து சமய அறிஞர் (ஆலிம்) என்னும் பட்டமும் பெற்று வெளியேறுகிறார் முகைதீன் ஆண்டகை. ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது அவருக்குப் புரிகிறது. ஏட்டில் பெற்ற சமயக் கல்வி இறையனுபவத்தை, ஞானத்தைத் தராது என்றும் அதற்கான கலையைத் தக்க குருவிடம் பெற வேண்டும் என்றும் உணர்கிறார். விதியில் தனக்கென்று எழுதப்பட்டுள்ள ஆன்மிக குருவைத் தேடிப் பல நபர்களைச் சந்திக்கிறார். நல்ல அறிஞர்களாக இருந்தவர்கள்கூட குரு என்னும் ஸ்தானத்தில் தன்னைக் கவரவில்லை என்று உணர்கிறார். அப்படி பாக்தாத் நகர வீதிகளில் ஒருநாள் நடந்துகொண்டிருந்தபோது எதிரே ஒரு சர்பத் வியாபாரி தன்னுடைய வண்டியைத் தள்ளிக்கொண்டு வருவதைப் பார்க்கிறார். மக்களின் பார்வைக்குப் படாத ஒரு விஷயம் முகைதீன் ஆண்டகையின் கூர்மையான கவனிப்பில் விழுகிறது. அதாவது அந்த சர்பத் வியாபாரியின் இனிப்புப் பதார்த்தங்கள் மீது ஈக்கள் மொய்க்கவில்லை. இது பற்றி அவரிடம் வினவியபோது அவர் அலட்டிக் கொள்ளாமல் “நெருப்பில் ஈக்கள் மொய்ப்பதில்லை தம்பி” என்று சொல்கிறார். ஹழ்ரத் ஹம்மாத் என்னும் அவரே தான் தேடிய குரு என்று அவரிடம் முகைதீன் ஆண்டகை தீட்சை பெற்றார்.
மௌலானா ரூமியின் வாழ்விலும் இதே போல் ஒரு நிகழ்ச்சி. அவருடைய மூன்றாம் குருவாக விளங்கியவர் சலாஹுத்தீன் ஸர்கூப் என்பவர். அவர் ஒரு பொற் கொல்லர். அவரைத் தன் குருவாக மௌலானா ரூமி எப்படித் தெரிந்துகொண்டார்கள் என்பது சுவாரஸ்யமானது. ஒருநாள் அவர்கள் தன் மாணவர்களுடன் கடைவீதியில் நடந்து கொண்டிருந்தபோது சலாஹுத்தீனின் பட்டறையைக் கடந்து செல்ல நேர்ந்தது. அப்போது சலாஹுத்தீன் வேலையில் ஈடுபட்டிருந்தார். அவர் சுத்தியலால் தட்டும் ஓசை மௌலானா ரூமியை அப்படியே இழுத்துப் பிடித்து நிறுத்திவிட்டது. ஆழ்ந்த தியானத்தில் மட்டுமே கேட்கும் கிரகங்களின் இசை (சவ்த்தெ சர்மத்) அந்தக் கொல்லரின் சுத்தியலிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது! சமயக் கல்வியில் கரைகண்ட மேதையாக, ஆயிரத்திற்கும் மேலான மாணவர்களைப் பெற்றிருந்த மௌலானா ரூமி மக்களின் பார்வையில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்த சலாஹுத்தின் ஸர்கூப் அவர்களை அக்கணமே தன் ஆன்மிக வழித்துணையாக ஏற்றுக் கொண்டார்கள்.
இந்தச் சம்பவத்தை நாம் எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்? ”சலாஹுத்தீன் தெய்வாம்சம் பொருந்திய மகான். பூர்வாசிரமத்தில் அவர் பத்தாயிரம் ஆண்டுகள் நவகிரகங்களில் தவமியற்றியவர்” என்று அவரைச் சுற்றி ஒரு புனைகதையை உருவாக்கி மனதில் கிராஃபிக்ஸ் செய்யப் போகிறோமா? இச்சம்பவத்தில் ’நமக்கு’ ஏதேனும் போதனை இருக்கிறதா? என் அறிவில் படும் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். பிரபஞ்சத்தில் அண்டகோளங்கள் ஒருவித ஒழுங்குமுறையில், தாள கதியில், லயத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சலாஹுத்தீன் ஸர்கூப் அந்தப் பிரபஞ்ச இயக்கத்துடன் ஒத்திசைந்து இயங்குபவராக இருந்திருக்க வேண்டும். அது அவரின் தொழிலில் பிரதிபலித்தது. அதனையே மௌலானா ரூமியின் அகப்பார்வை கண்டுகொண்டது. அந்த ஒத்திசைவைத் தன் இயல்பான அசைவுகளில் உருவாக்கியதே அவர் செய்த ஆன்மிக சாதனை. இதை நாமும் நம் அன்றாட வாழ்வில் கொண்டு வரலாம் அல்லவா?
நான் சார்திருக்கும் சூஃபிப் பள்ளியின் குருமார்களில், குரு-சிஷ்ய சங்கிலித் தொடரில் எனது குருநாதருக்கு மேல் நான்காம் தலைமுறையில் இருப்பவர் கமாலுல்லாஹ் ஷாஹ் என்னும் சூஃபி மகான். அவர்கள் செகந்தராபாதில் மீன் கடையும் தானியக் கடையும் வைத்திருந்த வியாபாரி. அதனால் மக்கள் அவர்களை ’மச்லீவாலே’ (மீன்காரர்) என்றே அழைத்தார்கள். வெளித்தோற்றத்தில் ’மச்லீவாலே’யாக இருந்த அவர்கள் அந்தரங்கத்தில் அல்லாஹ்வாலே (இறைஞானி)யாக இருந்தார்கள். மீன்காரராக அவரைப் பார்த்த மக்கள் அவரிடம் மீன்களை வாங்கிக் கொண்டார்கள். இறைஞானியாக அவரைப் புரிந்து கொண்ட சிலரே அவரிடம் தீட்சையும் பயிற்சியும் பெற்று இறைவனை அடைந்துகொண்டார்கள்.
மச்லீவாலே அவர்களின் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்ந்ததான பதிவுகள் உள்ளன. இவர்கள் செய்த ஒருவகை ஆன்மிகப் பயிற்சி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. மிகவும் இலகுவான, ரசனையான அதே சமயம் ஆழமான ஒரு பயிற்சி அது. காலாற உலா செல்லும்போது காடுமேடுகளில் அலைந்து விதவிதமான இலைகளைச் சேகரித்துக் கொண்டு வருவார்களாம். வீட்டில் அமர்ந்து அவற்றைத் தன்முன் வைத்துக்கொண்டு ஒவ்வொரு இலையாகக் கையில் எடுத்து அவதானித்து “ஹக் ஜாஹிர் பசூறத்தே ஷை” – ’ஒவ்வொரு தோற்றத்திலும் இறைவனின் உள்ளமையே வெளிப்பட்டுள்ளது’ என்று சொல்லிக் கொண்டிருப்பார்களாம். (இந்த ஞானியின் தர்கா ஹைதராபாதில் காசீ கோடா என்னும் இடத்தில் இருக்கிறது.)
சூஃபிகள் சராசரி சூழல்களில் இறையாற்றல் செயல்படுவதைக் கண்டு பரவசத்தில் இருக்கிறார்கள். இறைவன் வெளிப்படுவது நம்முடைய நடைமுறை வாழ்வில்தான் என்னும் உண்மையை அறிந்துகொண்டவர்கள் அவர்கள். இங்கே இப்போதே இறைவனை உணரலாம். அதற்கான வித்தை தெரிந்தவர்கள் அவர்கள். இதனை சூஃபி மகாகவி மௌலானா ரூமி இவ்வாறு பாடுகிறார்:
“நீ பார்க்கும் செங்கல்லில்
சூஃபி கண்ணாடியைக் காண்கிறார்.
நீ வரண்ட நிலத்தைப் பார்த்து அயர்கிறாய்
சூஃபி அதில் இடுப்பளவு தாவரங்கள்
அசைவதைக் காண்கிறார்”
சூஃபிகள் சராசரியான வாழ்க்கைச் சூழலில்தான் வாழ்கிறார்கள் என்றால் நம் வாழ்வில் சூஃபித்துவம் இருக்கத்தானே செய்யும்? நாமும் சூஃபிகளாக முடியும் அல்லவா? என்று நீங்கள் கேட்கலாம். முடியும், நிச்சயம் முடியும். தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவனுக்குத் தான் விழித்தெழ வேண்டும் என்னும் சிந்தனை வந்துவிட்டாலே அவன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டிருக்கிருக்கிறான் என்றுதான் அர்த்தம்!
உலகப் புகழ் பெற்ற ஆன்மிக-மருத்துவ எழுத்தாளரான தீபக் சோப்ரா எழுதிய அற்புதமான நூல் “SYNCHRO DESTINY”. அதில் நம்மை நோக்கி அவர் ஒரு வினா தொடுக்கிறார்: “Would you recognise a miracle if you saw one?” (அற்புதம் ஒன்றை நீ கண்டால் உன்னால் அதை அடையாளம் காண முடியுமா?). இந்தக் கேள்விக்கான விடை போல் அவர் தன் முன்னுரையில் பின்வருமாறு சொல்கிறார்:
“அற்புதங்கள் தினமும் நிகழ்கின்றன. ஏதோ குக்கிராமங்களிலோ அல்லது பூமிப்பரப்பின் குறுக்கே கிடக்கின்ற புனிதத் தளங்களிலோ மட்டுமல்ல; இங்கே, நம்முடைய சொந்த வாழ்க்கையில். தம் மறைவான மூலத்தில் இருந்து குமிழியிட்டு எழுந்து, வாய்ப்புக்களால் நம்மைச் சூழ்ந்து, பின் மறைந்து விடுகின்றன. அவை நம் அன்றாட வாழ்வின் எரிமீன்கள். எரிமீன்களை நாம் காணும்போது அவற்றின் அபூர்வ தன்மை அவற்றை நமக்கு வினோதமாகக் காட்டுகின்றன, ஆனால் அவை எல்லா நேரமும் வானத்தின் குறுக்கே பாய்ந்துகொண்டுதான் இருக்கின்றன. சூரிய வெளிச்சத்தில் கண்கள் கூசுவதால் பகலில் நாம் அவற்றைக் காண்பதில்லை; இரவிலோ, சரியான நேரத்தில் இருளான தெளிந்த வானில் நாம் பார்த்தால் மட்டுமே அவை தென்படுகின்றன. அதீதமானவை என்று நாம் எண்ணியபோதும் அற்புதங்கள் தினமும் நம் பிரக்ஞையின் குறுக்கே பாய்ந்துகொண்டுதான் இருக்கின்றன.”
அற்புதங்களைக் கண்டுகொள்வது எப்படி? அல்லது அவை வெளிப்படும் சூழ்நிலைகளை நம் வாழ்வில் உருவாக்குவது எப்படி? இதற்கான பயிற்சிகளைத்தான் தீபக் சோப்ரா தன் நூலில் சொல்கிறார். “Harnessing the infinite power of coincidence to create miracles” (அற்புதங்களை உருவாக்க ஏதேச்சையின் அளவற்ற சக்தியைக் கையாளுதல்) என்று தன் நூலின் பொருண்மையை ஒற்றை வரியில் தெரிவிக்கிறார். ”இந்த அண்ட சராசரத்தின் அடிப்படையாக இருக்கும் இறைவனுடன் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்” என்று சூஃபிகளைப் பற்றி நான் ஆரம்பத்தில் சொன்னேனே, அந்த இணைப்பை உருவாக்குவது பற்றித்தான் தீபக் சோப்ரா நவீன மொழியில் பேசுகிறார்.
“அற்புதம்” என்னும் சொல்லுக்கு சூஃபிகளின் மொழியில் இரண்டு கலைச் சொற்கள் உண்டு. முஃஜிஸா மற்றும் கராமத். இரண்டுக்குமே அற்புதம் என்றுதான் வெளிப்பொருள். அற்புதங்கள் வெளிப்படும் கருவிகளாக இருவகை மனிதர்கள் உள்ளனர். இறைத்தூதர்கள் (நபிமார்கள்) மற்றும் இறைநேசர்கள் (அவ்லியாக்கள் – சூஃபிகள்). இறைத்தூதர்களின் வழியே நிகழும் அற்புதம் ‘முஃஜிஸா’ என்றும் இறைநேசர்களின் வழியே நிகழும் அற்புதம் ‘கராமத்’ என்றும் சொல்லப்படும். இவ்வார்த்தைகளின் அக்ராதிப் பொருளைக் கவனித்தால் அதில் ஆழமான தத்துவங்களைத் தரிசிக்க முடியும்.
முஃஜிஸா என்னும் சொல்லின் வேர் ’இஜ்ஸ்’ என்பது. அதன் பொருள் இயலாமை! அதாவது பரிபூரண இயலாமை நிலையில் தன்னை முழுமையாக இறைவனின் கைகளில் ஒப்படைத்துவிட்டவரின், சுய-இச்சை என்பது துளியும் இல்லாத நிலை பெற்றவர்களின் வழியே இறைவன் நிகழ்த்தும் அற்புதமே முஃஜிஸா எனப்படும்! அதனைச் செய்வது இறைவன்தான். இறைத்தூதர் அதற்கான கருவி மட்டுமே. மோசஸ் கடலினைப் பிளந்ததும் தன் கையை வெண்மையாக்கிக் காட்டியதும் போன்ற அற்புதங்கள், இயேசுநாதர் வியாதிகளை சொஸ்தப்படுத்தியதும் இறந்தவரை உயிர்பெறச் செய்ததுமான அற்புதங்கள், நபிகள் நாயகம் நிகழ்த்திய பல அற்புதங்கள் ஆகியவை எல்லாம் இந்த வகைப்பட்டவையே.
கராமத் என்னும் சொல்லின் வேர் ‘கரம்’ என்பது. அதன் பொருள் நேசம். கருணை, அருள், அன்பு ஆகிய அர்த்தபாவங்களும் பொருந்தும். இந்தவகை அற்புதம் என்பது அருள் பொங்கும் நிலையால் உண்டாவது. இறைவனின் கருணை இறைநேசர்களான சூஃபிகளின் இதயங்களில் பொங்கி மனிதகுலத்தை நோக்கிப் பாயும் நிலையில் நிகழும் சம்பவங்களை எல்லாம் கராமத் என்று சொல்லலாம், அவை இயல்பான செயல்களாக இருந்தாலும் சரிதான், அல்லது இயல்பை மீறியவையாக இருந்தாலும் சரிதான்.
இந்தப் புள்ளியில்தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இருக்கிறது. அதாவது சூஃபித்துவத்தின் வித்து எது என்று பார்க்கின்றபோது ‘அன்பு’ என்றே சொல்லிவிடலாம். சூஃபிகள் யார் என்னும் கேள்வியை இக்கட்டுரையின் ஆரம்பத்தில் எழுப்பியபோது முஸ்லிம் சித்தர்/யோகி/ஞானி என்று மூன்று பதில்களைப் பார்த்தோம். ஆனால் அவற்றைவிடப் பொருத்தமான, பிரபலமான ஒரு வருணிப்பு சூஃபிகள் இறைக் காதலர்கள் (Sufis are lovers of God) என்பதே!
சூஃபிகள் இறைவனை ஆழமாக நேசிக்கிறார்கள். அந்த நேசம் ’இஷ்க்’ - ’இறைக்காதல்’ எனப்படுகிறது. இறைவன் அவர்களை நேசிக்கிறான். அந்த நேசம் ‘விலாயத் (தோழமை/ நேசம்) எனப்படுகிறது. எனவே சூஃபிகளை ‘அவ்லியா’ (இறைநேசர்கள்) என்றும் அழைக்கிறோம். இந்த இறைநேசம் சூஃபிகளின் வழியே படைப்புக்களின் மீது பிரதிபலிக்கிறது. அதனை ‘கராமத்’ என்கிறோம். இந்த மூன்றாவது கட்டம்தான் சூஃபிகளை மனிதகுலத்தின் தொண்டர்களாக இயங்கவைக்கிறது.
”படைப்புக்கள் இறைவனின் குடும்பமாகும்” (அல்-ஃகல்கு இயாலுல்லாஹ்) என்பது நபிகள் நாயகத்தின் அருள்மொழி. இதனை மேற்கோள் காட்டி சூஃபி மகான் சுபூரிஷாஹ் பைஜி அவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள்:
“படைப்பினங்கள் அடங்கலும் அல்லாஹ்வுடைய குடும்பமாகும். குடும்பம் என்று சொன்னால், கணவன் – மனைவி சேர்ந்து வாழும் குடும்பம் அல்ல. எல்லாம் அவனுடைய ஞானப் பூங்காவிலிருந்த வஸ்துகளாகும் என்ற பொருளாகும். ஒரு குடும்பம் நிம்மதியாக இருப்பதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எனவே அனைவரையும் நேசிப்பது நம் மீது கடமையாகும். அனைத்து சிருஷ்டிகளின் ஞானங்களும் அதைப் படைத்த ஆண்டவனின் ஞானமும் (ஆன்மிகம்) அறிந்த மனிதர்கள்தான் ஆன்மிகவாதிகள். அவர்களின் நோக்கமே எல்லோரும் நலமாக இருக்க வேண்டும். காரணம் எல்லோரும் அவன் படைப்புகள். இத்தகைய உயர்ந்த வாழ்வதற்கு அருள் பாலிப்பானாக!” (’நூருன்னூர்’ நூலின் வாழ்த்துரை.)
இந்த அடிப்படையில்தான் இந்தியாவின் மாபெரும் சூஃபி ஞானியான காஜா மொய்னுதீன் சிஷ்தி அவர்கள் இப்படிக் கொள்கை வகுத்தார்கள்: “அனைவருக்கும் அன்பு; ஒருவர்மீதும் பகையில்லை” (Love towards all and malice towards none.)
’அப்படியானால் சூஃபிகளுக்குக் கோபமே வராதா? அல்லது அவர்கள் வீரவுணர்வை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்களா?’ என்று கேட்கலாம். தீமைக்கு எதிராகப் போராடுவதற்குத் தேவைப்படும்போது அவர்கள் வீரத்தை வெளிப்படுத்தவே செய்வார்கள். அது உலக அமைதியை உண்டாக்கவும், நீதியை நிலைநாட்டவுமாக இருக்கும். அந்த அடிப்படையில் அப்படியான போராட்டங்களும் ’கராமத்’ என்றே சொல்லப்படுகின்றன. அறத்தை நிலைநாட்டும் அத்தகைய மறவுணர்வும்கூட அன்பின் வெளிப்பாடு என்றே சூஃபிகள் காண்கிறார்கள். ஏனேனில் ஆன்மிக வாழ்வின் ஆதார உணர்வு அன்பே ஆகும்.
’படைக்குப் பிந்து, பந்திக்கு முந்து’ என்று ஒரு அழகான பழமொழி உண்டு. பகையைத் தள்ளிப்போடு, உறவை உடனே உருவாக்கு என்பதுதான் அதன் உள்ளர்த்தம். வேறு வழியே இல்லை என்னும் நிலையில் தீமையை அழிக்க ஆயுதம் ஏந்துவதில் தவறில்லை. எனினும் அதன் நோக்கம் அமைதியை ஏற்படுத்துவதாகவே இருக்க வேண்டும். “வாளைவிட வாளின் நிழலை நீங்கள் தேர்ந்து கொள்ளுங்கள்” என்பது நபிகள் நாயகத்தின் அருள்மொழி. இதன் அடிப்படையில்தான் சூஃபிகள் அன்பின் வழிமுறையே சிறந்தது என்று தெளிந்து தேர்ந்துள்ளார்கள்.
”இறைவனின் குணங்களில் உன்னை உருவாக்கிக்கொள்” (தஃகல்லகூ பிஅஃக்லாக்கில்லாஹ்) என்று நபிகள் நாயகம் நவின்றுள்ளார்கள். இறைவனின் திருப்பண்புகளைக் குறிக்கும் ‘அழகிய திருநாமங்கள்’ (அஸ்மாஉல் ஹுஸ்னா) தொண்ணூற்றொன்பது என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவை திருக்குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு படைப்பிலும் அந்த இறைப் பண்புகள் சிலவோ பலவோ ஏதேனுமொரு வகையில் செயல்படுகின்றன. அவற்றில் ஒன்று அல்லது சில மிகைத்து நிற்பதும் உண்டு.
உதாரணமாக, இறைவனின் திருநாமங்களில் ஒன்று “அர்-ரஜ்ஜாக்”. இதன் வெளிப்படையான பொருள் “உணவளிப்பவன்” என்பது. இந்தத் திருநாமம் யாரில் மிகைத்திருக்கிறதோ அவர்கள் உயிர்களுக்கு உண்டி கொடுக்க வேண்டும் என்னும் சிந்தனையிலும் செயலிலும் பேரின்பம் காண்பார்கள். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கமலக்கண்ணன் என்று ஒரு நண்பன் இருந்தான். தினமும் கேண்ட்டீனில் ஐந்து பேருக்காவது டீ-வடை வாங்கித் தருவான். கையில் எவ்வளவு துட்டு இருந்தாலும் தான் மட்டும் தனியாக சாப்பிடவே மாட்டான். பகிர்ந்து உண்ண யாருமே இல்லை என்றாலும், அல்லது கையில் அப்போது பணம் இல்லை என்றாலும் மனநிம்மதி இன்றி வாடிப் போய்விடுவான். “அர்-ரஜ்ஜாக்” என்னும் திருநாமத்தின் செயல்பாடு அவன்மீது மிகைத்திருப்பதாக நான் அப்போது அவனிடம் சொன்னேன்.
இப்படி இறைப்பண்புகளைக் குறிக்கும் திருநாமங்கள் தொண்ணூற்றொன்பது இருப்பினும் இறைவனின் சுயத்தைக் குறிக்கும் “அல்லாஹ்” என்னும் திருப்பெயருடன் இணைந்த ஒருநாமம் “ரஹ்மான்” (அளவற்ற அருளாளன்) என்பதே. எப்படி எனில், திருக்குர்ஆனின் ஆரம்பமாகவும், அதன் அத்தியாயங்களின் (ஒரு அத்தியாயத்தைத் தவிர) ஆரம்ப மந்திரமாகவும், முஸ்லிம்கள் செய்யும் அனைத்து செயல்களின் துவக்க மந்திரமாகவும் இருப்பது “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்பது. “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹ்வின் நாமத்தால்” என்பது இதன் அர்த்தம் (ஆ.கா.அப்துல் ஹமீது பாக்கவியின் மொழிபெயர்ப்பு). ரஹ்மான் – அளவற்ற அருளாளன்; ரஹீம் – நிகரற்ற அன்புடையோன்.
சூஃபி மகான் ஒருவரிடம் சில காலம் தீட்சையும் பயிற்சியும் பெற்ற இராமலிங்க அடிகளார் இந்த மந்திரத்தின் தாத்பரியத்தை உணர்ந்திருக்க வேண்டும். இறைவன் ஜோதிமயமானவன் (’அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கிறான்’ – திருக்குர்ஆன் 24:35) என்பதையும் சேர்த்து “அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் சோதி” என்று தமிழ் மந்திரம் ஆக்கினார்.
ஆக, இறைவனின் திருநாமங்களுள் அன்பு, அருள், கருணை, நேசம் ஆகிய அர்த்தபாவங்களைக் கொண்டுள்ள ரஹ்மான் என்னும் திருப்பெயர் விசேஷமானது. இறைவனின் உள்ளமைப் பெயரோடு இணைத்துச் சொல்லப்படுவது. அதாவது, இறைவனின் சுயம் கருணை மயமானது, அன்பு மயமானது என்பது குறிப்பு. (’அன்பே சிவம்’ என்று திருமூலர் சொல்வதைக் கவனிக்கவும்.)
சூஃபித்துவத்தின் வேர்கள் நபிகள் நாயகம் மற்றும் நபித்தோழர்களால் அரேபிய மண்ணில் கி.பி ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகளில் ஊன்றப்பட்டபோதும் அதன் அபரிதமான வளர்ச்சி என்பது பாரசீக சாம்ராஜ்யத்தில் கி,பி.10 – 15ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்தது. அதன் வரலாற்றை, “The Development of Metaphysics in Persia” என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வாக வரைந்த மகாகவி இக்பால் அவர்கள் சூஃபிகளின் போதனைகளில் இறைவன் மூன்று முக்கியமான கோணங்களில் விளக்கப்பட்டுள்ளதாகக் காட்டுகிறார்: ஒளி, அறிவு மற்றும் காதல் (LIGHT, WISDOM and LOVE).
காதலை அடிப்படையாக வைத்து இறைவனை விளக்கிய சூஃபித்துவச் சிந்தனைப் பள்ளிகள் ‘மகாகுரு’ (ஷைகுல் அக்பர்) என்று போற்றப்படும் இப்னுல் அரபி அவர்களின் விளக்கங்களில் இருந்து வளர்ந்தவை. அப்பள்ளிகளில் முக்கியமான இரு ஆளுமைகள் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர்களான ஃபக்ருத்தீன் இராக்கி மற்றும் மௌலானா ரூமி. முன்னவர் எழுதிய ”லமஆத்” (ஒளிச்சுடர்கள்) என்னும் ஞானகிரந்தம் சூஃபிப் பள்ளிகளில் ஒரு முக்கியமான பாடநூலாகும். அதில் இறைவனின் சுயத்தைக் குறிக்க ’இஷ்க்’ (காதல்) என்னும் சொல்லைத்தான் பயன்படுத்துகிறார். பின்னவர் எழுதிய ‘மஸ்னவி’, ‘தீவானே கபீர்’ ஆகிய காவியங்களும் அவர் உருவாக்கிய மௌலவிய்யா சூஃபிப் பள்ளியும் இறைக்காதலையே தம் அடிப்ப்படையாகக் கொண்டவை.
சூஃபிகள் இறைவனின் காதலர்கள் (Sufis are lovers of God) என்று சொல்லப்படுவதன் பின்னணி இதுதான். மற்றபடி, காதல் என்னும் வார்த்தை இன்று பொதுமக்களின் வழக்கில் அடைந்துள்ள மேலோட்டமான பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. சூஃபிகள் வெறுமனே கடலைப் பார்த்துக்கொண்டு கடற்கரையில் கடலை போடும் காதலர்கள் அல்ல. இறைக்கடலில் மூழ்கி ஞான முத்துக்களை எடுத்துவரும் காதலர்கள். (’இணங்கு மெய்ஞ்ஞானப் பேரின்பக் கடலின் இன்னமுது எடுத்தெமக்கு அளிப்போன்’ என்று குணங்குடி மஸ்தான் தன் குருவைப் பற்றிச் சொல்கிறார்.)
திருக்குர்ஆன் துவக்க மந்திரத்தில் அல்லாஹ் என்னும சுயப்பெயருடன் ரஹ்மான் என்னும் திருப்பெயர் இணைந்துள்ளது என்றால், அதனை அடுத்து இணைந்துள்ள பெயர் ‘ரஹீம்’ என்பதாகும். இவ்விரு திருப்பெயர்களின் வேர்ச்சொல் ’ரஹிம’ என்பது. ’ரஹிம்’ அல்லது ‘ரிஹ்ம்’ என்றால் கருவறை என்றும் ரத்த உறவு என்றும் பொருள். எனவேதான் இறைவன், “நான் ரஹ்மான். நான் ரத்த உறவைப் படைத்து அதன் பெயரை என் பெயரிலிருந்து வைத்துள்ளேன். எவர் அதைப் பேணுகின்றாரோ அவரை நான் பேணுகிறேன், எவர் அதைத் துண்டிக்கின்றாரோ அவரை நான் தண்டிக்கிறேன்” என்று சொல்வதாக நபிகள் நாயகம் நவின்றார்கள் (ஹதீஸ் குத்ஸி, நூல்கள்: அதபல் முஃப்ரத், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி.)
’சிருஷ்டிகள் அனைத்தும் இறைவனின் கருணையால், அன்பால் படைக்கப்பட்டுள்ளன. அவை ஒன்றோடொன்று உறவு கொண்டவையாக உள்ளன’ என்று எளிமையாகவும் சுருக்கமாகவும் இவ்விஷயத்தைப் புரிந்துகொள்ளலாம். “படைப்புக்கள் அனைத்தும் இறைவனின் குடும்பம்” (அல்-ஃகல்கு இயாலுல்லாஹ்) என்னும் நபிமொழியும், அதனால் சகல சிருஷ்டிகள் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்னும் விளக்கமும் இந்த மந்திரத்தின் உட்பொருள் விளக்கங்களே என்பதை அறிக.
இதுவரை சொன்னதிலிருந்து சூஃபி என்பவர் பற்றி நேசம்/ அன்பு/ காதல் என்னும் அடிப்படையில் மூன்று கருத்துக்களைச் சொல்லலாம்:
சூஃபி என்பவர் இறைவனை ஆழமாக நேசிப்பவர்.
சூஃபி என்பவர் இறைவனால் நேசிக்கப்படுபவர்.
சூஃபி என்பவர் படைப்புக்கள் அனைத்தின்மீதும் அன்பு காட்டுபவர்.
“ஏகமாய்க் காண்பதே காட்சி” என்று சொல்லப்படுகிறதே, அந்த அகக் காட்சியை சூஃபிகள் அன்பின் வழியிலேயே அடைந்து கொண்டார்கள். “அனைத்து சிருஷ்டிகளின் அடிப்படையாய் உள்ள பரம்பொருள் ஒன்றே” என்னும் ஞானத்தை அன்பினால் உணர்ந்து அறிவில் தெளிந்து அதிலேயே ஊறித் திளைத்தார்கள். அந்த ஏகத்துவ உள்ளமை ஞானம் அவர்களில் எந்த அளவுக்குச் சுடர்ந்து கொண்டிருந்தது என்பதை விளங்க ஒரு சம்பவம் சொல்கிறேன், கேளுங்கள்.
சூஃபி மகான் ஜுனைது அவர்கள் ஒருநாள் சந்தையின் பக்கம் நின்றுகொண்டிருந்தார்கள். பல வியாபாரிகளும் மக்களுமாய் ஆரவாரமாக இருந்த அந்தக் கூட்டத்தில் தன் அகப்பார்வையைச் செலுத்தி அத்தனை பேரையும் இறைவன் தன்னில் தரிப்படுத்தி ஆட்டி அசைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துச் சொக்கிப் போயிருந்தார்கள். பிரபஞ்சத்தில் எப்பொருளும் தன்னிலிருந்து பிரிந்ததல்ல, அனைத்திற்கும் ஆதாரமாய் இருக்கும் உள்ளமை ஒன்றே என்னும் கவனத்தில் இருந்தார்கள். அப்போது அங்கே மாட்டுவண்டி ஒன்று வந்துகொண்டிருந்தது. வண்டியை இழுத்துவரும் மாட்டின்மீது பார்வை செலுத்தினார்கள். தானும் அந்த மாடும் ஒன்றே என்னும் உணர்வில் லயித்தார்கள். அந்த நேரம் வண்டியோட்டி சாட்டையால் மாட்டின் முதுகில் சுள்ளென்று விளாசினான். ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஜுனைது வாய்விட்டு அலறினார்கள். “என்னங்க, இங்க நான் மாட்டை அடிச்சாக்க நீங்க ஏன் கத்துறீங்க?” என்று அந்த வண்டிக்காரன் கேட்டான். “என் குரு எனக்குச் சொல்லித் தந்த ஞானம் ஒன்னு இருக்குப்பா. அதுபடிக்கு நான் இந்த மாட்டைப் பாத்துக்கிட்டிருக்கிறப்ப நீ சாட்டையை விளாசிட்டே. இங்க பாரு என்னாச்சுன்னு” என்று சொல்லிக்கொண்டே தன் அங்கியைக் கழற்றி முதுகைக் காட்டினார்கள். முதுகில் சாட்டையடி கோடு போட்டுத் தடித்திருந்தது!
இந்தச் சம்பவத்தின் அடித்தளமாக உள்ள ஏகத்துவ ஞானத்தை ஆன்மிகத்தின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு விளக்க லைலா-மஜ்னூன் கதையில் ஒரு சம்பவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. லைலாவும் மஜ்னூனும் பால்ய பருவத்தில் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். அப்போதே அவர்கள் உள்ளம் கலந்து ஒருவராகி விட்டார்கள். காதலில் ஒருவரில் ஒருவர் கரைந்து போய்விட்டார்கள். ஒருநாள், ஏதோ தவறு செய்துவிட்டான் என்று மஜ்னூனின் உள்ளங்கையில் ஆசிரியர் பிரம்பால் அடிக்கிறார். சற்று தள்ளி நின்று இதனைப் பார்த்துக் கொண்டிருந்த லைலா துடித்து உதறிக்கொண்டு அழுகிறாள். ஒருகணம் ஒன்றும் விளங்காத ஆசிரியர் அவளை அழைத்து உள்ளங்கையைக் காட்டச் சொல்லிப் பார்க்கிறார். பிரம்படியின் காயம் அதில் இருந்தது.
முன்னே சொன்ன நிலை முழுமை பெற்ற இறைக்காதலால் நிகழ்ந்தது. பின்னே சொன்ன காவியக் காட்சி இறைக்காதலுக்கு மனிதக் காதல் ஒரு விளக்கக் கருவி என்பதையும் நல்லதொரு ஆரம்பப்புள்ளி என்பதையும் காட்டுகிறது. இருமையைக் கரைத்து ஒருமையை உணர்வதற்குக் காதலைவிட வேறு சிறந்த வழி ஏது?
இறைவனை ஒருவர் நேசிக்கிறார் என்பதன் அடையாளமாகவும், இறைவன் அவரை நேசிக்கிறான் என்பதன் அடையாளமாகவும் அவர் படைப்புக்கள் மீது அன்பு காட்ட வேண்டும். இல்லையெனில் சமய நூற்களைக் கரைத்துக் குடித்ததனால் எந்தப் பயனும் இல்லை. இதனைப் பல சூஃபிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். உதாரணமாக இருவரைப் பார்ப்போம்.
’இஹ்யா உலூமித்தீன்’ என்னும் மாபெரிய நூலை எழுதியவர்கள் இமாம் கஸ்ஸாலி. தன் காலத்தின் கல்விக் கடலாகத் திகழ்ந்த சூஃபி மகானான அவர் சொல்கிறார்: “ஒருமுறை என் கனவில் இறைவன் பேசினான். ‘கஸ்ஸாலியே! உங்களுக்கு இவ்வளவு ஞானத்தை நான் ஏன் தந்தேன் தெரியுமா?’ என்று கேட்டான். நான் ’தெரியவில்லை’ என்றேன். ’அறிந்துகொள்ளுங்கள். ஒருமுறை நீங்கள் ஆழ்ந்த சிந்தனையில் எழுதிக் கொண்டிருந்தபோது ஈ ஒன்று தாகத்துடன் பறந்து வந்து நீங்கள் எழுதிக் கொண்டிருந்த காகிதத்தில் அமர்ந்தது. எழுத்துப் புள்ளியின் காயாத மைத்துளியைச் சுவைத்தது. அது குடித்து முடிக்கும்வரை எழுதுகோலை அசைக்காமல் அதன் மீது இரக்கம் காட்டினீர்கள். அந்தக் கருணைக்காகத்தான் உங்களுக்கு நான் ஞானத்தை வழங்கினேன்’ என்று இறைவன் சொன்னான்.”
இதே போன்ற தன் கனவு அனுபவத்தை சூஃபி ஞானி அபூபக்கர் ஷிப்லி சொல்கிறார்கள்: “கனவில் இறைவன் என்னிடம், ‘ஷிப்லெயே! உங்களுக்கு நான் ஏன் ஞானத்தைக் கொடுத்தேன் என்று அறிவீரா?’ என்று கேட்டான். நான் ‘தெரியாது’ என்றேன். ‘ஒருமுறை நீங்கள் அதிகாலை நேரத் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தீர்கள். அது மிகக் கடுமையான பனி நிலவிய குளிர்காலம். நீங்கள் வீட்டுக்கு விரைந்து கொண்டிருக்கும்போது பூனைக்குட்டி ஒன்று முனகும் சத்தத்தைக் கேட்டீர்கள். தேடிப் பார்த்தபோது சாலை ஓரத்தில் இருந்த ஒரு முட்புதருக்குள் பூனைக்குட்டி ஒன்று விழுந்து தவிப்பதைக் கண்டீர்கள். உடனே அதனை லாவகமாக மீட்டெடுத்து உங்கள் சால்வையால் சுற்றி அதற்குக் கதகதப்பு உண்டாக்கி வீட்டுக்கு எடுத்துச் சென்று கிண்ணத்தில் பால் வைத்தீர்கள். அந்த இரக்கத்திற்காகவே உங்களுக்கு நான் ஞானத்தை அளித்தேன்’ என்று இறைவன் சொன்னான்.”
ஊருக்கு வெளியே வரண்ட பாலைவனத்தில் ஒரு கிணற்றடியில் நின்றாள் விலைமாது ஒருத்தி. அங்கே தாகத்துடன் ஓடி வந்து நின்ற ஒரு நாய் பரிதாபமாக அவளுடைய முகத்தைப் பார்த்தது. அந்த நாயின்மீது அவளுக்கு இரக்கம் சுரந்தது. தன் ஆடையை முறுக்கிக் கிணற்றுக்குள் விட்டு நனைத்தெடுத்து அந்த நாயின் வாய்க்குள் தண்ணீரைப் பிழிந்துவிட்டாள். இந்தக் காருண்யத்திற்காக இறைவன் அவளுடைய பாவஙளை எல்லாம் மன்னித்து அவளுக்குச் சொர்க்கத்தில் இடமளித்தான். இது ஒரு பிரபலமான நபிமொழி.
‘நான் சூஃபியாக முடியுமா?’ என்று நீங்கள் நினைத்தால் முதலில் உங்கள் இதயத்தில் அன்பு இருக்கிறதா என்று பாருங்கள். நேசம், காதல், பாசம், நட்பு, கருணை, இரக்கம் இப்படியாக அன்பின் எந்தக் கோலமாக இருந்தாலும் சரி. காமம்தான் இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்களிடம் கச்சாப் பொருள் இருக்கிறது. தூய்மை செய்துவிடலாம். ஆனால் இவை எதுவுமே இதயத்தில் இல்லை என்றால் மிகவும் சிரமம். அன்பு செலுத்துவதற்கான ஆற்றலை இழந்துவிடாமல் இருப்பதே ஆன்மிகத்தின் முதல் தேவை என்று ஓஷோவோ ரூமியோ அல்லது அவர்களைப் போன்ற ஞானி யாரோ ஒருவர் சொல்லியிருக்கிறார். அன்பின் நெருப்புப் பொறி உள்ளத்தில் இருந்தால் போதும். அதை ஊதிப் பற்றவைத்து வளர்த்தால் ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கலாம்.
சூஃபிகள் விருட்சங்கள், நாம் விதைகள். விதைதான் விருட்சமாகிறது. மண்ணுள் தன்னைப் புதைத்துக்கொண்டு, தன் விதைமையின் எல்லைகளை இழந்து, மெல்ல முளைவிட்டு நிமிர்ந்து, செடியாகி வளர்ந்து கிளைகள் பரப்பி மரமாகியுள்ளது. அதன் கிளைகளில் பறவைகள் கூடு கட்டுகின்றன. அதன் பூக்களில் வண்டுகள் மொய்க்கின்றன. அதன் கனிகளை விலங்குகளும் மனிதர்களும் புசிக்கிறார்கள். அதன் நிழலில் உயிரினங்கள் இளைப்பாறுகின்றன.
“இந்த மரமும் என்னைப் போல் ஒரு விதையாக இருந்ததுதான். இதுக்கு என்ன இவ்வளவு மவுசு இன்னிக்கு? இந்தப் பறவைகள் மனிதர்கள்லாம் என்கிட்ட வரக்கூடாதா? நானும் எல்லோருக்கும் உதவி செய்ய மாட்டேனா?” என்று ஒரு விதை அந்த விருட்சத்தைப் பார்த்துப் பொறாமைப் படுவதில் அர்த்தமில்லை. இந்த விதையும் காரியத்தில் தானும் ஒரு மரமாக வளரும்போது அதனை நாடி எல்லோரும் வருவார்கள்.
”அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு”
என்கிறார் பாரதியார். அன்பெனும் தவத்தில் மூழ்குவோம். நம்முள் உறங்கிக் கிடக்கும் சூஃபித்துவ விதை கண் விழிக்கட்டும். விருட்சமாக விஸ்வரூபம் கொள்ளட்டும்.
நீங்கள் சொல்வது போல் இப்போதெல்லாம் காதல் என்ற வார்த்தை காமத்தோடு இணைத்தே பார்க்க படுகிறது.
ReplyDeleteமஜ்னூனின் கையை அடித்தவுடன் லைலாவுடன் கையில் தழும்பு வருவது லைலா தனது சுயத்தை அங்கே இழந்து அவள் ம்ஜ்னூனாகவே மாறிவிட்டாள் என்பதை காட்டுகிறது..
இதே போல் ஒவ்வொருவரும் அனைவரது மீதும் அன்பு வைத்தால் அவர்களுக்கு ஏற்படும் வலிகளின் தழும்புகளை தானே உணர முடியும்.
சூஃபி வழியில் வரும் போதனைகள் எல்லாம் நாம் வேறு என்று வேறுபடுத்தி பார்ப்பதை தடை செய்து ஓர்மை எனும் தவ்ஹீதிலேயே தான் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது.
ஒரு கவிதை இப்படி கூட வருமே..
கதவு தட்டப்பட்ட போது யாரது? என்று கேட்ட போது - ‘நான்’ என்று வந்த பதிலுக்கு - கதவு திறக்க ம்றுக்கப்படும்.
மீண்டும் கதவு தட்டப்பட்டு “யாரது?” என்று கேட்கப்படும் போது - “நீங்க தான்” என்று சொன்னதும் - ‘இங்கே இருவருக்கு இடமில்லை’ என்று கதவு திறக்கப்படுகிறது.
- எனக்கு தெரிந்தது இரண்டு காசு மதிப்பு தான்..