Thursday, April 12, 2012

மனக்கேணிஃபேண்ட்டஸி திரைப்படமான ‘TWILIGHT’-ல் ஒரு காட்சி. இரத்தக் காட்டேரி இனத்தைச் சேர்ந்த வாலிபன் (என்றும் பதினேழு) எட்வர்டு கல்லன் அவ்வூரின் பேரழகியான இசபெல்லா ஸ்வான் என்னும் பெண்ணுடன் காதலில் வீழ்கிறான். (கள்ளன்!) அவளும் அவனைக் காதலிக்கிறாள், அவன் ஒரு காட்டேரி என்பது தெரிந்தே! ஒரு விபத்திலிருந்து அவளின் உயிரை எட்வர்டு காப்பாற்றுகிறான், மிக அசாதாரணமான வேகத்துடனும் பலத்துடனும். இன்னொரு முறை, சுற்றுலா சென்ற ஊரில் இசபெல்லா நள்ளிரவில் தனியே வீதியில் உலாத்திக் கொண்டிருக்கும்போது சில போக்கிரிகள் அவளை வம்பிழுக்கும் போது எங்கிருந்தோ சட்டென்று வரும் எட்வர்டு அவர்களிடமிருந்து அவளின் கற்பைக் காப்பாற்றுகிறான். அன்று இரவு அவர்கள் இருவரும் உணவு உண்பதற்காக ஒரு ரெஸ்டாரண்ட்டுக்குப் போகிறார்கள். எட்வர்டு தன்னை ரகசியமாகத் தொடர்ந்து வருகிறான் என்று சந்தேகப்படும் இசபெல்லா அவன் எப்படித் தன்னைக் காப்பாற்ற அந்த இடத்திற்கு அவ்வளவு வேகமாக வந்தான் என்று அவனிடம் வினவுகிறாள். பிறரின் மனதைப் படிக்கும் ஆற்றல் தனக்கு இருப்பதை அப்போது எட்வர்டு அவளிடம் சொல்கிறான். அந்த உரையாடல்:
நீ என்னைப் பின் தொடர்கிறாயா?”
“நான்... நான் உன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று உணர்கிறேன்”
“அப்படீன்னா நீ என்னைத் தொடர்ந்து வந்திருக்க?”
“உனக்கு என் உதவி தேவைப்படும்வரை இடைவெளி இருக்கட்டும்னு இருந்தேன். அப்போதான் அந்தப் பொறுக்கிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் கேட்டேன்.”
“என்ன சொல்ற, அவுங்க நெனக்கிறத நீ கேட்டியா?”
”………”
“அப்படீன்னா, நீ என்ன… நீ மனதைப் படிக்கிறவனா?”
“இங்கே இருக்கிற எல்லோரோட மனதையும் என்னால படிக்க முடியுது, உன் மனதைத் தவிர. அவுங்க மனசுல இருக்கிறதெல்லாம்… பணம், காமம், பணம், காமம்... அப்புறம் உன் மனதைப் பார்த்தால்… ஒன்றுமே இல்லை. இது ரொம்பவும் வெறுப்பூட்டுவதா இருக்கு.”
என் மனதில் ஏதாவது கோளாறா?”
(இசபெல்லா இப்படிக் கேட்டதும் எட்வர்டு ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறான்.)
“பாரு, மனங்களை என்னால படிக்க முடியுதுன்னு நான் சொல்றேன், நீ உன்னிடம் ஏதோ குறை இருக்குன்னு நெனக்கிற.”

இந்தக் கடைசி வசனம் என் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. எத்தனை அழகான வசனம்! இசபெல்லாவும் எட்வர்டும் இரண்டு விதமான மனங்களின் பிரதிநிதிகள். ஒரு மனம் மிகவும் சாதாரணமானது, களங்கமற்றது. இயற்கையான நிலையில் எந்தக் கீறலும் இல்லாமல் நிர்மலமாக இருப்பது. ஒரு குழந்தையின் மனம் என்று சொல்லலாம். இன்னொரு மனம் சராசரி மனநிலைக்கு அப்பாற்பட்டது. அசாதரணமான ஆற்றல் ஒன்று அதனிடம் லபித்துள்ளது. பிற மனங்களுக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தி அதற்குள்ளது. ஆனால் அந்த நிலை அதற்கு ஒரு வரமாக இல்லை. சராசரி மனங்களின் விகாரங்களைக் கண்டு கண்டு நொந்து போயிருக்கிறது அது.

தூய்மையான காற்றை நாம் பார்க்க முடிவதில்லை. இசபெல்லாவின் மனம் அப்படியிருக்கிறது. அதனால்தான் எட்வர்டால் அதனைப் படிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே அவன் அவள்மீது காதல் கொள்கிறான். அவளின் மனமே அவனுக்குத் தூய ஆக்ஸிஜன் போல் புத்துணர்ச்சி அளிப்பதாகிறது.

மாசடைந்த புகையை நாம் பார்க்க முடிகிறது. அந்த விடுதியில் அமர்ந்திருப்பவர்களின் மனங்கள் அப்படியிருக்கின்றன. அதனால்தான் எட்வர்டால் அவர்களின் எண்ணங்களைப் படிக்க முடிகிறது.

தூய காற்றைக் கண்கள் காணமுடியவில்லை என்றால் அது காற்றின் குறை அல்லவே? ஆனால் இசபெல்லா தன் மனத்தில் ஏதேனும் குறை இருக்குமோ என்று நினைக்கிறாள். இது அவளுடைய அப்பாவித்தனத்தைக் காட்டுகிறது. இதை நினைத்தே எட்வர்டு நமட்டுச் சிரிப்பை உதிர்க்கிறான். அமானுஷ்யமான ஆற்றல் கொண்டுள்ள தன் மனம்தான் சிக்கலானது, குறை கொண்டது என்று அவன் சொல்கிறான்.

மனித மனதில் பல ஆற்றல்கள் மறைந்து கிடக்கின்றன என்று ஆன்மிகவாதிகளும் உளவியலாளர்களும் சொல்கிறார்கள். ஆனால் அந்த ஆற்றல்கள் எந்த வகையில் விழிப்படைகின்றன என்பதைப் பொருத்தே அவை வரமா சாபமா என்று சொல்ல முடியும். மனத்தின் அமானுஷ்யமான ஆற்றல் என்பது எல்லா நிலைகளிலும் மேன்மையானதாக அமையும் என்பதில்லை.

விழிப்படையக் கூடாத நேரத்தில் விழித்துக்கொள்ளும் மனோசக்தி, அல்லது விழிக்க வேண்டிய முறையில் அல்லாது விபத்தாக விழித்துக்கொள்ளும் மனோசக்தி பெரும்பாலும் பாதகமாக அமைந்துவிடக்கூடும்.

ரஸ்புடினுக்கும் பற்பல பாபாக்களுக்கும் கிடைத்த மனோசக்திகளை நான் இவ்வகையில்தான் காண்கிறேன். அதற்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் பெரிது என்றே புரிந்துவைத்திருக்கிறேன், ஆன்மிகத்தில் அவற்றை ஒத்த ஆற்றல்கள் வெளிப்படலாம் என்றாலும்கூட.

சட்டென்று சொல்லாமல் கொள்ளாமல் (கொல்லாமல்!) விழிப்படைந்துவிடும் மனோசக்தியானது அதனைப் பெற்றவரால் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது நிலைமை இன்னும் பரிதாபம். அமெரிக்காவில் ஒரு பெண்மணிக்குத் தலையில் அடிப்பட்ட பின் எல்லா வானொலி அலைவரிசைகளும் இலவசமாகவே கேட்க ஆரம்பித்துவிட்டதாம், வெறும் காதுகளில், அதுவும் எல்லாம் ஏககாலத்தில்! குறிப்பிட்ட அலைவரிசையை மட்டும் தேர்ந்தெடுப்பதற்கோ அல்லது வானொலியை அணைப்பதற்கோ அந்தப் பெண்ணின் காதுகளில் எந்த வசதியும் இல்லை! இந்த நரக வேதனையை நினைத்துப் பார்த்தாலே குலை நடுங்குகிறது ஐயா! (ஒருவேளை நம் பெண்களுக்கு இப்படி எல்லா மெகா சீரியல்களும் தெரிய ஆரம்பித்துவிட்டால் அதை சொர்க்க வரமாக நினைப்பார்களோ?)

உண்மையான ஆன்மிகவாதிகள் வரமாக நினைப்பது மனோசக்திகளையோ அஷ்டமா சித்திகளையோ அல்ல, மனமற்ற நிலையைத்தான். மற்றவரின் எண்ணங்கள் தன் மனதில் பிரதிபலிக்கும் நிலையை அல்ல, அப்படி நடப்பதற்கு முற்காரணமாக அமைவதான, தன் மனதில் எந்த எண்ணச் சலனமும் இல்லாத மௌன நிலையைத்தான்!

ரமண மகரிஷியின் காலத்தில் நடந்ததாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. அவருடைய முக்கியமான வேலையே தன்னைக் காண வருபவர்களின் மனத்தில் எண்ணங்களின் அலைகளை சாந்தப்படுத்துவதாக இருந்தது. அப்போது சாமியார் ஒருவரின் சீடர்கள் ரமணரின் சீடர்களைச் சந்தித்துத் தங்கள் குருவின் ஆன்மிக ஆற்றல்களை, அவரின் சித்திகளின் பெருமைகளை எல்லாம் சொல்லி ‘இப்படியெல்லாம் உங்கள் குருவால் செய்ய முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ரமணரின் சீடர்கள் மிகவும் அழகான ஆழமான பதில் ஒன்றைச் சொன்னார்களாம்: “உங்கள் குருவிற்கு இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்ற மனம் இருக்கிறது. அதனால் செய்கிறார். ஆனால் எங்கள் குருவிற்கு இதையெல்லாம் செய்யவேண்டும் என்று எண்ணுவதற்கு ஒரு மனம் இல்லையே!”

உண்மையில் மிகப் பெரிய அற்புதம் இந்த மனமற்ற நிலைதான். இந்தக் கருத்து ஜென் தத்துவத்தில் மிகவும் வலியுறுத்தப்படும் ஒன்று. “எப்போது ஒரு மனிதன் அசாதாரணமானவன் ஆகிறான்?” என்று சீடன் கேட்ட கேள்விக்கு ஒரு ஜென் குரு இப்படி பதில் சொல்கிறார், “அவன் மிகவும் சாதாரணமாக இருக்கும்போது!”

தான் அசாதாரணமாக இருக்கவேண்டும் என்னும் எண்ணம்தான் எல்லா மனிதர்களின் மனதிலும் சதா ஓடிக்கொண்டே இருக்கிறதே? அதை நிதர்சனமாக்குவதற்கு அவர்கள் செய்யும் பிரயத்தனங்கள் கொஞ்ச நஞ்சமா? மனிதனின் முயற்சிகளுக்கான உந்து சக்தி என்று இதனைப் பார்க்கலாம் என்றாலும் அதன் எல்லைகளை அவன் உணராதபோது அது தன்முனைப்பின் தாண்டவம் ஆகிவிடுகிறது. அந்த ஜென் குரு சொன்னது போல் மிகவும் சாதாரணமாக இருப்பதுதான் இந்த உலகில் மிகவும் அசாதாரணமானது. ஆனால் ‘நான் சாதாரணமானவன்’ என்று மனதில் நினைப்பு வந்துவிடுமானால் முதலுக்கே மோசமாகிவிட்டது என்று பொருள்!

மனதின் இந்தச் சிக்கலை இமாம் கஸ்ஸாலி அவர்கள் விளக்கியிருக்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள்: “எளிய ஆடைகள் அணிவது ஓர் நற்பண்புதான். ஆனால் ‘மக்கள் என் ஆடைகளைப் பார்த்து என்னை மிகவும் எளிமையானவன் என்று போற்றுவார்கள்’ என்னும் நினைப்பில் ஒருவன் எளிய ஆடைகளை அணிந்தால் அது ஆடம்பரமான ஆடைகளை அணிவதை விடவும் மிகவும் கர்வம் பிடித்த காரியம் ஆகும். அப்போது அது ஒரு நற்பண்பே அல்ல.”

மெஹர் பாபாவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கே நினைவு கூரலாம். பேசுவதையே நிறுத்திவிட்டு மௌன நிலையில் கரைந்து கொண்டிருந்தவர் மெஹர் பாபா. அவருடைய மனக்கடலில் எண்ண அலைகள் எழுவதே அபூர்வமாகிவிட்டதாம். நாமெல்லாம் சிந்தனை இல்லாமல் இருப்பதற்குப் பெரும்பாடு படுகிறோம் என்றால் அவர் ஓரிரு சிந்தனைகளைக் கொண்டு வருவதற்கே முயற்சி செய்யவேண்டி இருந்ததாம். அப்போது, பிறரின் மனதில் ஓடும் எண்ணங்களைச் சரியாக வாசித்துச் சொல்லிவிடும் ஆற்றல் கொண்ட ஒருவன் அவரை ஒருமுறை சந்திக்க வருகிறான். கண்களை மூடி அமர்ந்து கொண்டு தன் முன்னால் உள்ள மனிதரின் மனதில் ஓடும் எண்ணங்களை அப்படியே சொல்லிவிடுவான். மெஹர் பாபாவின் முன் அவன் அமர்த்தப்படுகிறான். கண்களை மூடி அமர்ந்த அவன் ஓரிரு நிமிடங்களிலேயே வெலவெலத்துப் போய்விட்டான். மெஹர் பாபாவின் மனதை அவனால் படிக்கவே முடியவில்லை. அவர் தப்பித்து எங்காவது போய்விட்டாரா என்று கண்களை லேசாகத் திறந்து பார்க்கிறான். அவர் அங்கேயே சிரித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். மீண்டும் முயற்சி செய்கிறான். ஒருமணி நேரத்தில் அவன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டான். ‘என்ன வகையான மனிதர் இவர். நான் எவ்வளவோ துழாவிப் பார்த்தேன், இவரின் மனதில் ஒரு சிந்தனைகூட இல்லை!’ என்று சொன்னானாம்.

சூஃபித்துவத்தின் பால பாடமே தனக்கு எவ்விதச் சக்தியும் இல்லை என்பதுதான். “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்னும் மந்திரம் இஸ்லாமிய அடிப்படை மந்திரங்களில் ஒன்று. “அல்லாஹ்வைக் கொண்டே அன்றி எனக்கு எவ்வித ஆற்றலோ சக்தியோ இல்லை” என்பதே அதன் பொருள். உடல் சக்தி, மனோ சக்தி எதுவும் எந்தப் படைப்புக்கும் சுயமாக இல்லை. ஆனால் அல்லாஹ்வின் சக்தி நம்மில் பிரதிபலித்தால் மட்டுமே நம்மால் எதையும் செய்ய முடியும். ஒரு கொசுவின் இறகுகள் அசைவதும் அவனின் சக்தியைக் கொண்டுதான். கண்கள் இமைப்பதும் இறைவனின் ஆற்றலைக் கொண்டுதான்.

இக்கருத்தை மௌலானா ரூமி இப்படிச் சொல்கிறார்கள்:
“லா ஹவ்ல வலா குவ்வத்த என்று
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க நினைத்தேன்
என்னால் அது முடியவில்லை!”
அதாவது, எனக்குச் சக்தியில்லை என்று கூறுவதற்கான சக்தியும் இறைவனிடமிருந்தே வரவேண்டும்!

இறைத்தூதர்களும் இறைநேசர்களும் செய்த பல அற்புதங்கள் உள்ளன. ஆனால் உண்மையில் அவற்றை அவர்கள் விரும்பிச் செய்யவில்லை. சொல்லப்போனால் அவற்றைச் செய்தது அவர்களே அல்ல. அவை அவர்களின் வழியாக நிகழ்ந்தவை மட்டுமே. முள்ளை முள்ளால் எடுப்பது போல் ஒரு தீய மனதின் ஆட்டத்திற்கு எதிராகத்தான் வேறு வழியின்றி அவை நிகழ்த்தப்பட்டிருக்கும். மூசா நபியின் அற்புதம் எகிப்தின் மாந்திரீக வாதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது போல். அப்போதும் கூட அந்த அற்புதம் அவர்களுடைய கைத்தடியின் வழியாகத்தான் நிகழ்ந்தது. கைத்தடிக்கு எப்படி சுய இச்சை இல்லையோ அதே போல் மூசா நபிக்கும் சுய இச்சை இல்லை. இதுதான் இறைத்தூதர்கள் மற்றும் இறைநேசர்களின் மனநிலை.

என் குருநாதர் சொன்னார்கள், “இறைநேசர்கள் ஒருபோதும் அற்புதங்கள் நிகழ்த்த ஆசைப்பட மாட்டார்கள். அது எப்போதாவது அவர்களின் வழியே நிகழும்போதும்கூட அதைக்கொண்டு பிரபலமாகிவிடுமோ என்று கூச்சப்படுவார்கள், எப்படியென்றால், ஒரு பெண் தன் மாதவிடாய் பிறருக்கு வெளியாகிவிடுமோ என்று கூச்சப்படுவதைப் போல!”

’விளையாட்டின் ஆனந்தம்’ என்னும் பாடலில் குணங்குடி மஸ்தான் (ரஹ்) அவர்கள் பாடுகிறார்கள்:
“அண்ட கோடிகளும் ஓர் பந்தெனக் கைக்குள்
அடக்கி விளையாட வல்லீர்
அகிலம் ஓர் ஏழினையும் ஆடும் கறங்குபோல்
ஆட்டி விளையாட வல்லீர்”
இறைவனின் அருளைக் கொண்டு இப்படியான ஆற்றல் ஓர் இறைநேசருக்கு இருப்பது ஒன்றும் இயலாத காரியமல்ல. ஆனால் இறைநேசரின் உண்மையான மேன்மை இத்தகைய ஆற்றலை அடைவதில் இல்லை. மாறாக இப்படிப்பட்ட ஆற்றலைக் கொண்டு சித்துவேலைகள் செய்யாமல் இருப்பதில்தான் இருக்கிறது. காதலியைச் சந்திக்கப் போய்க்கொண்டிருக்கும் காதலன் ஒருவன் தெருவில் சிறுவர்கள் விளையாடும் பந்தினைப் பொறுக்கியெடுத்து வித்தை காட்டி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க மாட்டான். இந்தப் பிரபஞ்ச வீதியில் உருண்டுகொண்டிருக்கும் பந்துகளிடம் இறைநேசர்களுக்கு என்ன வேலை இருக்கிறது? அவர்கள் தங்கள் இதயம் கவர்ந்த இறைவனை அடையச் சென்றுகொண்டிருப்பவர்கள் அல்லவா?

ஆன்மிகப் பயிற்சிகளில் ஒரு கட்டம் வருகிறது. அது மனம் என்னும் மண்ணை ஆழமாகத் தோண்டுவது போன்றதுதான். அப்போது ஒரு நிலை வரை வெறும் மண் மட்டுமே வந்துகொண்டுள்ளது. பிறகு கசடுகள் குழைந்த கச்சா எண்ணெய் வருகிறது. மனத்தின் ஆற்றல்கள் வெளிப்படுவதுதான் அந்தக் கச்சா எண்ணெய். அதை அடைவது ஒன்றும் பெரிய வேலை அல்ல. அந்தக் கச்சா எண்ணெய்யைத் தூய்மை செய்வதுதான் உண்மையான பணி. அவசரப்பட்டு கச்சா எண்ணெய்யையே விளக்கில் கொட்டுபவன் விளக்கைப் பழுதாக்கி விடுவான். அதை அப்படியே வாகனத்தில் ஊற்றுபவன் வாகனத்தைப் பழுதாக்கி விடுவான்.

உண்மையான இறைஞானிகள் தங்கள் மனத்தின் கச்சா எண்ணெய்யைத் தூய்மையாக்கி விளக்கில் ஊற்றி விட்டார்கள். தெய்விகத்தின் ஒளிச்சுடரை ஏற்றி வைத்து நமக்கெல்லாம் வெளிச்சம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்!

2 comments:

  1. //மனித மனதில் பல ஆற்றல்கள் மறைந்து கிடக்கின்றன என்று ஆன்மிகவாதிகளும் உளவியலாளர்களும் சொல்கிறார்கள். ஆனால் அந்த ஆற்றல்கள் எந்த வகையில் விழிப்படைகின்றன என்பதைப் பொருத்தே அவை வரமா சாபமா என்று சொல்ல முடியும். மனத்தின் அமானுஷ்யமான ஆற்றல் என்பது எல்லா நிலைகளிலும் மேன்மையானதாக அமையும் என்பதில்லை./// சரியான வார்த்தைகள். எங்கோ ஓஷோவின் புத்தகத்தில் படித்தது.'எல்லா மதங்களுமே மனிதனை முதலில் நல்லவனாக மாற்றிவிட்டு பிறகு ஞானமடைதலைப் பற்றி பேச விரும்புகின்றன. கெட்டமனதுக்கு சக்திகள் கிடைக்குமானால் அவ்வளவுதான்.இதற்காக பிரம்மபிரயத்னப் படுகின்றன.'

    ReplyDelete
  2. ஈசாவஸ்ய உபநிஷத்தின் சாரம்; முதலில் இருளிலிருந்து ஒளிக்கு என்னை அழைத்துப்போ. பிறகு அந்த ஒளித்திரையையும் விலக்கி உண்மையை காண்பி என்கிறது. 'ஒளித்திரையை விலக்கு' அருமையான வாக்கியம்.இருளை விலக்கு என்பதை எல்லோரும் ஆமோதிப்பர். ஆனால் ஒளித்திரையையும் விலக்கு என்பதை வெகு சிலரே-அகங்காரமற்ற மனமே-ஏற்றுக் கொள்ளும்.

    ReplyDelete