முட்டம், சங்குத்துறை… அடுத்ததாக சொத்தவிளை கடற்கரையில் நின்றிருந்தேன்.
கடற்கரைகள் வேறு வேறாக இருந்தாலும் கடல் ஒன்றுதான். அரபிக்கடல். ஆனால் ஒவ்வொரு இடத்திலும்
அலைகள் ஒவ்வொரு விதமாக இருந்தன. முட்டத்தில் குமுறிப் பாய்ந்தன என்றால் இங்கே சொத்தவிளையில்
நிதானமாக வந்து கால்களைத் தழுவுகின்றன.
கரைகளுக்கு வேறு வேறு பெயர்கள் வைத்துக்கொண்டது நாம்தான். கடல்
ஒன்றுதான்.
குழந்தைகள் குதூகலத்துடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நானும்
அவர்களுடன் கடலலைகள் கால்களில் மோத நின்றேன். சில அலைகள் நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு
எட்டாமலேயே திரும்பிப் போய்விட்டன. சில அலைகள் வெறுமனே வந்து தொட்டுச் சென்றன. தங்கள்
முழங்கால் அளவுக்குப் பாய்ந்து வந்து தாண்டிச் செல்லும் ‘பெரிய’ அலைகளைக் குழந்தைகள்
ஆர்வமுடன் எதிர்பார்த்தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் எந்த அலை அப்படிப் பெரிதாக
உருவாகி வரும் என்று கணித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
எனக்குச்
சட்டென்று ஞானிகள் சொல்லும் பழைய உவமை நினைவுக்கு வந்தது:
“இறைவா!
நீ கடல்
நாம்
உன் அலைகள்”
அலைகள்
தோன்றும் இடத்தைப் பார்த்துக் குழந்தைகள் கத்திக் கொண்டிருந்தார்கள், அந்த அலை பெரிதாகி
வரும் என்றோ அல்லது அது விரைவிலேயே அமுங்கி விடும் என்றோ.
ஒவ்வொரு
குழந்தையும் பிறக்கும் போதே நாமும் இப்படித்தான் எதிர்பார்க்கிறோம். அது நீண்ட காலம்
வாழவேண்டும். வாழ்வில் ‘பெரிய ஆளாக’ அது வரவேண்டும். இப்படிப் பல எதிர்பார்ப்புக்கள்.
சில குழந்தைகள் சிறு வயதிலேயே அல்ப்பாயுசில் போய்விடுகின்றன. சிலர் நடுத்தர வயது வரை
வாழ்கிறார்கள். சிலர் நீண்ட காலம் வயோதிகப் பருவம் எய்தி வாழ்ந்து பின் மறைகிறார்கள்.
அதேபோல்
சில அலைகள் எழுந்த வேகத்தில் அமுங்கி விட்டன. சில அலைகள் சிறிது தூரம் புரண்ட பின்
விழுந்துவிட்டன. சில அலைகள் மட்டும் சீறிப் பாய்ந்து வேகமாக ஓடிக் கரையில் நன்றாக ஏறி
நனைத்துவிட்டு மீண்டு சென்றன. அந்த நீண்ட அலைகள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஊட்டின.
வாழாத அலைகள் அவர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தை அளித்தன.
எந்த
அலை எப்படிப் பாய்கிறது என்பது கடலினை எவ்விதத்திலும் பாதித்ததாகத் தெரியவில்லை. அதன்
விசாலமான பரப்பில் இந்த அலைகள் விளிம்பில் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கின்றன.
சிறிய
அலை, நடு அலை, பெரிய அலை என்று எல்லாமே மீண்டும் அந்தக் கடலுக்குள்தான் மீள்கின்றன.
குழந்தை இறந்தாலும் சரி, வயோதிகர் இறந்தாலும் சரி நாம் சொல்வது ஒன்றுதான் “நாம் இறைவனுக்கு
உரியவர்கள். அவனிடமே நாம் மீண்டுகொண்டிருக்கிறோம்”
நடு அலையாக
நான் நின்றுகொண்டிருந்தேன். நான்கு சிறிய அலைகள் என் முன் விளையாடிக் கொண்டிருந்தன.
நான் என மனதில் சொல்லிக் கொண்டேன்,
“எங்கள்
இறைவா! நீ கடலாக இருக்கிறாய்
நாங்கள்
உன் அலைகளாக இருக்கிறோம்”
"நான் என மனதில் சொல்லிக் கொண்டேன்,..."
ReplyDelete- நீங்களும் ஒரு ஞானி தான்...
எந்த அலை எப்படிப் பாய்கிறது என்பது கடலினை எவ்விதத்திலும் பாதித்ததாகத் தெரியவில்லை. அதன் விசாலமான பரப்பில் இந்த அலைகள் விளிம்பில் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கின்றன.
- பெரிதாக உருவாகும் அலையைப் போலவும் வயோதிகப் பருவம் எய்தி வாழும் மனிதர்களைப் போலவும் உங்களின் எழுத்து என்னுள் தங்கி விட்டிருக்கிறது.