Friday, November 23, 2012

ஒவ்வொரு தோசையிலும்



ஒரு சராசரி வாசகன் எப்போது இலக்கியவாதி ஆகிறான்? என்ற சர்ச்சை கிளம்பியது வகுப்பில். நிறைய நூற்களைப் படித்துவிட்டால் இலக்கியவாதி ஆகிவிடலாம் என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. எவ்வளவு நூற்கள் என்று எதாவது கணக்கு இருக்கிறதா என்ன? ‘இலக்கிய ரீதியாகச் சிந்திப்பவன்தான் இலக்கியவாதி’ என்று சொன்னேன். இலக்கிய ரீதியாகச் சிந்திப்பது என்றால் என்ன? என்ற கேள்வி எழுப்பபட்டது. இது என்னடா இது, கிணறு வெட்ட பூதங்களாகக் கிளம்புகிறதே என்று ரூட்டை மாற்றினேன்.

“ஒருவன் இன்னொரு தோசை வேண்டும், இன்னொரு தோசை வேண்டும் என்று நூறு தோசைகளை வாங்கிச் சாப்பிடுகிறான். அவனுக்கும் இலக்கியத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியுதா?

“இல்லை”

“அதே இன்னொரு ஆள் இரண்டாம் தோசைக்கு ஆர்டர் கொடுக்கும் போதே ‘அம்மா தோசையின் இன்னொரு பிரதி கிடைக்குமா?’ன்னு கேட்குறான்னு வை, அவன் நவீன இலக்கிய வட்டத்திற்குள் நுழைந்தே விட்டான்னு அர்த்தம்”

“எப்பூடி சார்?”

“அதாவது தோசை என்பது ஒரு ப்ரோட்டோடைப். வீடுகளிலும் விடுதிகளிலும் கல்லில் ஊற்றப்படுவதெல்லாம் அதன் பிரதிகளே என்னும் பிரக்ஞை அவனிடம் இருக்கிறது.”

“அப்டீன்னா, இலக்கிய விமரிசகன் யார்?”

“தோசையே சாப்பிடாட்டியும், டைனிங் ஹாலில் இருந்தபடியே கிச்சனை நோக்கி ‘என்னது தோசை தீய்ற வாடை வருதுன்னு?’ சொல்றான்னு வச்சுக்க, அவன்தான் இலக்கிய விமரிசகன். Critical thinking on dosai from the desk of the connoisseur என்று அவன் இதை 
வைத்து நானூற்றி சொச்ச பக்கங்களில் ஒரு நூலே எழுதிவிடுவான்”

‘சார், நவீனத்துவத்துக்கும் பின்-நவீனத்துவத்துக்கும் என்ன சார் வித்தியாசம்?’

‘பின்-நவீனத்துவம்கிறது நவீனத்துவத்துக்குப் பின்னாடி நிக்கிற நவீனத்துவம். இதன்படிப் பார்த்தால் நவீனத்துவம்னா என்னங்கறதுதான் விளங்குறதுக்குக் கொஞ்சம் கஷ்டம்னு தெரியுது”

“சார், கிண்டல் பண்ணாதீங்க. நான் சீரியஸாக் கேக்குறேன். சீரியசாவே பதில் சொல்லுங்க”

“ஓக்கே. நவீனத்துவம்கிறது தோசைய வட்டமாச் சுடாம சதுரமாகவும் முக்கோணமாகவும் செவ்வகமாகவும் சுடுறது. பெண்டகன் ஷேப்ல தோசை சுட்டா அது அமெரிக்க நவீனத்துவம். பின்–நவீனத்துவம்னா மையப்புள்ளி இல்லாம தோசை சுடுறது. இந்த விளக்கத்தின்படிப் பார்த்தால் பின்–நவீனத்துவம்தான் ரொம்ப கஷ்டம்”

இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நினைவிலி மனத்தின் நனவோடை (Stream of consciousness என்று வில்லியம் ஜேம்ஸ் சொன்னது) முந்திய நாள் இரவு கிச்சனுக்கு ஓடுகிறது. சகதர்மினி தோசை ஊற்றிக் கொண்டிருக்கிறாள். நான்-ஸ்டிக் கல்லின் நடுவில் இறங்கும் மாவு அடுத்து வளையம் வளையமாகப் பரப்பப் படுகிறது. எத்தனை கான்செண்ட்ரிக் வட்டங்கள் என்று என் கணிதப் பிரக்ஞை எண்ணவும் திகிலாகிறேன். இலக்கியவாதி + ஆன்மிகவாதி என்னும் அடையாளமே தாங்க முடியல. இது வேற என்ன புதுசா? என்று சுயநிந்தனைக்கு என் உள்மனம் சொன்னது, ‘இல்லப்பா, இந்தக் காட்சியை ராமாநுஜம் பார்த்தான்னா என்ன நினைப்பான்னு ஒரு சின்ன கற்பனை. வேறொன்றுமில்லை. இலக்கியவாதின்னா நாலு தினுசா யோசிக்கத் தெரியனுமா இல்லையா? An epic should be written by an erudite scholar-னு சொல்வாங்க. இப்ப கவனி. சகதர்மினி தோசையின் மையப் புள்ளியிலிருந்து அதன் விளிம்பு வரை அதன் ஓர் ஆரத்தில் தோசைத் திருப்பியின் பக்கவாட்டினைக் கொண்டு வெட்டுகிறாள். பிறகு அந்த ஆரவெட்டிலிருந்து அப்படியே தோசையை சுருட்டிக்கொண்டு வர அது ஒரு கூம்பு வடிவம் பெறுகிறது. அதை ஒரு கூடாரம் போல் தட்டில் எடுத்து வைத்து மேசையில் காத்திருக்கும் பிள்ளைக்கு எடுத்துச் செல்கிறாள். ராமாநுஜம் இதைப் பார்த்தால் அந்த கான்செண்ட்ரிக் வளைவுகளின் உருவாக்கத்திற்கும், வட்டம் ஒரு கூம்பாக மாறுவதற்குமான ஒரு கணித சூத்திரத்தை இந்நேரம் சிந்தித்திருக்க மாட்டானா? அதிலிருந்து புதிய தியரி எதையாவது அவன் கண்டுபிடித்திருக்கக் கூடும். Mathamatical analysis of Dosa from the master’s desk! நீயும்தான் இருக்கிறாயே, மண்டு மண்டு’

தோசைக்கும் கணிதத்திற்கும் என்ன தொடர்போ, யானறியேன். ஆனால் அடியேன் தோசை சுட முயன்றபோது அது நான் கணக்குப் பரிட்சை எழுதிய அனுபவம் போலவே இருந்தது. அதாவது கல்லில் ஊற்றும்போதே தோசை தாறுமாறாகப் பிய்ந்து கொண்டு வந்தது!

மணி அடிக்கவும் அத்துடன் அந்த வகுப்பு முடிவுற்றது. இலக்கியவாதி ஆவதற்கு ஒரே வழி இனி தோசை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இட்லி பூரி ஆப்பம் என்று சாப்பிடுவதுதான் என்ற நல்ல முடிவை நோக்கி மாணவர்களை நகர்த்திய திருப்தியுடன் ஸ்டாஃப் ரூமுக்குத் திரும்பினேன்.

இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு மீண்டும் வகுப்பு. “பா.விஜய் ஒரு தத்துவ வித்தகர்” என்று சொல்கிறான் ஒரு மாணவன். ரொம்பக் கடுப்பேத்றார் மை லார்ட்! – என்னும் ஸ்திதிக்கு நான் ஆளாகிறேன். தத்துவம் என்றால் என்ன? என்னும் கேள்வியை எழுப்பி அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிட எனக்குள் இருக்கும் இம்சை அரசன் சித்தம் கொண்டாலும் நல்ல புத்தி சொல்லி நளினமாகப் பேசத் தொடங்குகிறேன்.

”ஜெயமோகன் அற்புதமாக ஒரு விளக்கம் சொல்றார் தம்பி:
‘சிந்தனை என்பது மூச்சு; தத்துவம் என்பது பிராணாயாமம்’”

“கவிதையா சார்?”

“இதை வைரமுத்து எழுதினாத்தான் கவிதை. ஜெயமோகன் எழுதினாக்க கவிதை இல்லை”

“ஏன் சார் அப்படி?”

“ஏன்னா வைரமுத்து கவிப்பேரரசு. ஆனால் ஜெயமோகன் அப்படி அல்ல”

“ஒருத்தர் கவிஞர்னும் ஒருத்தர் கவிஞர் இல்லைன்னும் எப்படி சார் முடிவு செய்றது?”
(ரொம்பக் கடுப்பேத்றார் மை லார்டு! – பார்ட் 2)

“பாக்குற எல்லாத்திலயும் ஒரு கவித்துவத்தை உணரணும் தம்பி. அவன்தான் கவிஞன். உதாரணமா,
‘பல்லேலக்கா பாளையத்தில்
வெள்ளைக் காக்காய்
மல்லாக்கப் பறக்குது’
என்று சாரு நிவேதிதா எழுதும் வரிகளைப் பார். (அவர் இதை உரைநடையாகத்தான் எழுதினார். அடியேனுக்கு இது ஒரு கவிதையாகத் தெரிந்ததால் மடக்கிப் போட்டிருக்கிறேன்.) இதில் சர்ரியலிசம் இருக்கிறது தெரியுதா? மேல் மிச்சமாக ஸ்ட்ரக்ச்சுரலிஸமும் உனக்கு தரிசனமானால் நீ கவிதையே எழுதாவிட்டாலும் கவிஞன்தான் தம்பி”

Bingo! சிறிது நேர மௌனம் நிலவ ஏதோ எக்ஸானந்தா நடத்தும் யோகா க்ளாஸ் போல் தோன்ற சுதாரித்துக் கொள்கிறேன்.

”ஜெயமோகன் சொல்றார்: சிந்தனை என்பது மூச்சு; தத்துவம் என்பது பிராணாயாமம். அதாவது மூச்சைப் முறையாகப் பயன்படுத்துவது. அப்படிப் பயன்படுத்தும் போது சாதாரணமாக மூச்சு விடுகையில் கிடைக்காத பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன என்னும் விளக்கங்கள் அவரின் இந்த உதாரணத்திலிருந்து விரிகின்றன. இன்னும் சொல்லலாம். இயல்பான மூச்சு ஆழமாக இல்லை. நுரையீரல் நிரம்பி விரியும்படி மனிதர்கள் மூச்சு விடுவதில்லை. அரைகுறை மூச்சுத்தான் விடுறாங்க. ஆனால் பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி அதை ஆழமாக்குது. அது போல் மேம்போக்கான சிந்தனைகளை ஆழமாக்குவதுதான் தத்துவ முறைமை. எந்தச் சிந்தனையாயிருந்தாலும் அதை முறைமைக்குள் கொண்டு வந்தால் அது ஒரு தத்துவமாகிவிடும். ஆனால், தத்துவவாதி எல்லோருமே ஞானிகள் அல்ல. அது இன்னும் ஒருபடி மேல”

“அப்ப தத்துவஞானிங்கறவன் யாரு சார்?”

“அத்தர் வாசம் வீசினாலும் மல நாற்றம் அடித்தாலும் பிராணாயாமம் பிசகாமல் இருப்பவன்!”

மணி அடித்தது.


பின் குறிப்பு: இப்பதிவில் எஸ்.ராமகிருஷ்ணனைப் பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லையே என்று சிறு வருத்தம் எழவே, தலைப்பை அவர் பாணியில் இட்டு நிம்மதி அடைந்தேன்.

Thursday, November 22, 2012

ஜென்டில்மேனரிசம்ஸ் ஆஃப் இந்தியா


என் தந்தையுடன் கதைத்துக் கொண்டிருந்துவிட்டு இதை எழுதத் தொடங்குகிறேன். உரையாடல் என்றால் சரிவிகித டயலாக் அல்ல. அவரின் மனத்தில் நினைவுகளின் பிரவாகம். எனவே ’ம்’ ‘அடடே’ ‘ம், சொல்லுங்க’ ‘ஆஹா’ ‘ஆங் தெரியும் தெரியும்’ முதலிய வார்த்தைகளில் மட்டும் என் பேச்சைச் சுருக்கிக் கொண்டு அவர் பேசுவதை ரசித்துக் கொண்டிருந்தேன்.

தன் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களின் சுவாரஸ்யமான சம்பவங்கள் பலவற்றை என்த் டைம் என்னிடம் சொல்கிறார் எனினும் காதுகளைத் தீட்டிக்கொண்டு கேட்டேன். அப்படிக் கேட்க வேண்டும் என்பது இலக்கியங்கள் எனக்குக் கற்றுத் தந்த ஒன்று. தன்னுடைய காலத்தை அவர் என்னில் பாதுகாக்க நினைக்கிறார். புதிதாக ஏதாவது ஒரு நினைவு இப்போது மேலெழுந்து வந்து வெளிப்படக்கூடும். எனவே, அவரின் ஃப்ளோவைத் தடுக்காமல், ‘இதையே எத்தனை தடவதான் சொல்லுவீங்க’ என்று அலுத்துக் கொண்டு ஜெனரேஷன் கேப் என்னும் அபத்தத்தை வெளிக்காட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். சங்க இலக்கியம், காப்பியங்கள் எல்லாம் படிக்கிறோமே, அதன் வழி நம்மில் வந்து சேர்வது மூதாதையரின் காலம்தான் அல்லவா? என் தந்தை தன் நினைவுகளைச் சொல்லக் கேட்டுக்கொண்டிருந்தது ஏதோ சங்க இலக்கிய வாசிப்பின் இன்பத்தை நல்கியது. எதிர்பார்த்தது போலவே புதிதாக ஒரு தகவலை இன்று சொன்னார். திட்டமிடாமல் சர்ரியலிசமாய் நினைவடுக்குகளின் அடியாழத்திலிருந்து வந்த அந்தத் துணுக்கு கவித்துவமான ஒரு ஹாஸ்யம்.

ANDY என்று ஒரு நண்பன் இருந்திருக்கிறான். (தமிழில் எழுதினால் ஆண்டி என்று வருகிறது. எனவே இப்பெயரை ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டியுள்ளது. ’நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ என்றும்கூட பாடிக் கலாய்த்திருப்பார்கள். என் தந்தை இதைச் சொல்லிக் கொண்டிருக்கையில் மேற்கிந்திய கிரிக்கட் வீரர் Andy Flower-ஐ நாங்கள் ’ஆண்டிப் புலவர்’ என்று சொன்னது நியாபகம் வந்தது.) அவனை எல்லோரும் AUNTY AUNTY என்று கூப்பிடவும் அவனுக்கு பேஜாராகிவிட்டது. லொள்ஸ் தாங்காமல் கெஜட்டில் கொடுத்துத் தன் பெயரை மாற்றிக்கொண்டே வந்துவிட்டானாம். சிரித்த முகத்தோடு வந்திறங்கி “இப்ப என்ன பண்ணுவீங்க? என் பெயரை மாத்திக்கிட்டேன். Now my name is Andu” என்று சொல்லியிருக்கிறான். இதைக் கேட்டு எல்லோரும் வெடித்துச் சிரித்திருக்கிறார்கள். “டேய் இங்கப்பார்றா இவன, வருஷம்னு பேரு வச்சிக்கிட்டு வந்திருக்கான்” என்று ஒருவன் சொல்ல, அது என்னவென்று புரியாமல் ‘ஆண்டு’ மண்டு போல் முழித்தானாம்.

இது போன்ற பல சம்பவங்களை என் தந்தை பேசக் கேட்டிருந்த போது என் மனத்தில் என் கல்லூரி நண்பர்களின் நியாபகம் உதித்துக் கொண்டிருந்தது. எத்தனைப் பேர்கள்! அவர்களுக்குத்தான் எத்தனைப் பட்டப்பெயர்கள்! சில வருடங்களுக்கு முன் கல்லூரி நண்பன் ஒருவனைச் சந்தித்த போது அவர்களைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டோம். அந்த உரையாடல் ஏறத்தாழ பின்வருமாறு அமைந்திருந்தது:

“buffalo எப்படிடா இருக்கான்?”
“பெங்க்ளூர்லதான் இருக்கான். ஒரு பையன் அவனுக்கு”
“பால்குட்டியும் அவன்கூடதான் ஒர்க் பண்றானாமே? இப்பவும் அப்படியேதான் இருக்கானா?”
“அப்படியேவா இருப்பான். இப்ப அவன் ப்ராஜக்ட் லீடர். கல்யாணமாகி ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க”
“வருஷம் போறதே தெரியலடா”
“கம்பிச்சூபா எங்க இருக்கான்?”
“துபாய்ல ஏதோவொரு ஷாப்பிங் மால்ல இருக்கானாம். அவங்க ஃபேமிலி இப்ப இங்க இல்ல. கோயம்புத்தூர் பக்கம் போய்ட்டாங்கன்னு அவன் கசின் சொன்னான்”
“மச்சான் பெங்க்ளூர்லதானே இருக்கான்?”
“ஆமாம், கனடா போறதுக்கு வாய்ப்பிருக்குன்னு சொன்னான். மச்சக்காளையும் பிதாஜியும் காலேஜ்லதான் இருக்காங்க”
“சூப்பர்மேனோட அப்பா தவறிப்போய்ட்டாராம்ப்பா, போன மாசம்.”
“நீ போயிருந்தியா?”
“இல்லப்பா, எனக்கே லேட்டாத்தான் தகவல் கெடச்சுது, நாசர் சொன்னான். அவனும் லீவு முடிஞ்சு ஜெர்மனிக்குப் போயிட்டான்”
“சரிடா மொசேக், நேரமாச்சு. ஃப்ரீயாயிருந்தா வீட்டுக்கு வா”

சில பெயர்கள் மட்டுமே இங்கே கொடுத்திருக்கிறேன். ‘சத்யராஜ்’, ‘சீவலப்பேரி பாண்டி’, வெறிச்செல்வன், காக்றோச் என்ற பெயர்களும் இப்போது நியாபகம் வருகின்றன. அவர்களில் பலரின் இயற்பெயர்கள் இப்போது நினைவில் இல்லை. ஒவ்வொரு பட்டப்பெயருக்குப் பின்னும் ஒரு சிறு காரண நிகழ்வு இருக்கும். அவற்றையெல்லாம் மெல்ல யோசித்து எழுதினால் ஒரு நாவலாகிவிடும்
.
இப்போது அந்த நண்பர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் அது போல் பட்டப்பெயர்கள் அவர்களுக்கு இருக்குமா என்று யோசித்தேன். மேற்கண்ட சம்பாஷனை அலுவலகங்களில் நிகழ்கிறதா? என் தந்தை தன்னுடைய கொலீக்ஸுகளை எல்லாம் அவர்களின் இயற்பெயரை அல்லது இயற்பெயரின் சுருக்கத்தைச் சொல்லி மட்டுமே குறிப்பது கவனத்தில் வந்தது. அவர்களுக்கும் சின்ன வயதில் பட்டப்பெயர்கள் இருந்திருக்கக் கூடும். என் அசட்டுத்தனத்தைப் பார்த்தீர்களா? என் தந்தைக்கு என்ன பட்டப்பெயர் என்பதை இனிமேல்தான் நான் கேட்டறிய வேண்டும். (அல்லது பட்டப்பெயரே இல்லையா? எனக்கு ஒரு பட்டப்பெயர் இருந்ததாக நியாபகம் இல்லை. இது எனக்கென்று ஒரு தனிப்பட்ட ஆளுமை இல்லாததைக் காட்டுகிறது போலும். அட்லீஸ்ட் கோமாளித்தனமான ஓர் ஆளுமையாவது இருந்தால்தானே பட்டப்பெயர் உண்டாகும்? அதுகூட எனக்கு இருக்கவில்லை போலும்)

ஒரு இந்திய அலுவலகத்தில் உரையாடல் எப்படியிருக்கும் என்பதற்கு அடியேனின் அனுபவத்திலிருந்தே ஒரு மாதிரியை (model / example என்னும் அர்த்தத்தில் சொல்கிறேன். ஒரு மாதிரியானவர்கள் இருப்பார்கள் என்பதும் உண்மைதான்.) இங்கே கற்பனை செய்யலாம்:

“என்ன ராமநாதன் சார், காலைலேர்ந்து ஒரே டென்ஷனா உக்காந்திருக்கீங்க?”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார், நேத்திலேர்ந்து ஒரு சைடா தலைல வலி உயிர் போவுது. இந்த அசைன்மண்ட் வொர்க்கெ வேற இன்னிக்கே முடிச்சாவனும்”
“சைமன் சார் என்ன திடீர்னு நாலு நாள் சியெல் போட்டிருக்காரு?”
“மாமனாரோட அண்ணன் தவறிப் போய்ட்டாராம்.”
“முதலியார்தானே அவரு? இல்ல பிள்ளைமாரா? எந்த ஊரு?”
“என்ன சார் இதுகூட தெரியாம இருக்கீங்க. அவரு சைவப் பிள்ளை சார். நான் படையாச்சி. அவருக்குப் பட்டுக்கோட்டை பக்கம் எதோ கிராமம். ஆல்பர்ட் சாருக்கும் அந்தப் பக்கம்தான் நெட்டிவ் ப்ளேஸ்”
“அப்படியா?, காஃபியும் வடையும் வாங்கிட்டு வரச்சொல்லலாம். நீங்க வேற தலை வலிக்குதுங்கறீங்க. இந்த அட்டெண்டர் பய எங்க போய்த் தொலஞ்சான்?”
“குத்தூஸ் சார் என்னமோ ஜெராக்ஸ் எடுக்க அனுப்ச்சாரு. போனவன் போனவன்தான். என்ன குத்தூஸ் சார், எப்ப வருவான்னு சொல்லிட்டுப் போனானா?”
“அர்ஜெண்ட்டான்னு கேட்டான். அப்படியே போய் ஸ்டீஃபன் சாருக்கு கரெண்ட் பில் கட்டிட்டு வர்றேன்னு...

மாதிரி போதுமென்று தோன்றுகிறது. இயற்பெயர்களின் பின்னால் சார் சேர்த்து எல்லோருக்கும் சர் பட்டம் வழங்கி கௌரவிக்கும் இந்தப் பழக்கம் பிரிட்டிஷ் ஆட்சியின் மோசமான ஒரு உளவியல் நோயாக நம்மில் வேரோடிக் கிடக்கிறது. சினிமாத் துறையின் பேட்டிகளை தொலைக்காட்சியில் காணும்போது இந்த ஒரு காரணத்துக்காகவே எரிச்சல் கிளம்புவதுண்டு. ‘சிவாஜி சார்தான் என் மானசீக குரு’ ‘மணிரத்னம் சார் சொன்னபடியே செஞ்சேன்’ ‘ரஜினி சார்னாலதான் இன்னிக்கு இந்த நெலமைல இருக்கேன்’ ‘கமல் சாரிகிட்ட கத்துக்க இன்னும் எவ்வளவோ இருக்கு’ ‘இளையராஜா சாரோட ம்யூசிக்னா எனக்கு உயிரு’ ‘அமீர் சார் அப்பவே சொன்னாரு நீ நல்லா வருவேம்மான்னு’ என்றெல்லாம் எல்லோரையும் சார் போட்டுக் குறிப்பிடுவார்கள். அவர்களெல்லாம் எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்தியார்களோ என்று ஒரு பிரம்மை தட்டும்!

அல்லது ஒருவேளை இங்கே எவனுமே உயிரெழுத்தோ மெய்யெழுத்தோ கிடையாது. எல்லோருமே சார்பெழுத்துக்கள்தான், ஒருவரை ஒருவர் சார்ந்துதான் ஜீவிக்க முடியும் என்பதுதான் இப்படி சார் போட்டு சிம்பாலிக்காக உணர்த்தப் படுகிறதா? ஆக, தாய்மொழியை மிகவும் சாரமுள்ள மொழியாக்கி விட்டோம்! சார் என்று விளிப்பது கண்ணியமான ஒரு மேனரிஸம் என்றும், அப்படி விளிக்கப்படுபவர் ஒரு ஜென்ட்டில்மேன் என்றும் நம்முள் ஒரு கருத்தியல் வளர்க்கப் பட்டுள்ளது. ”வார்த்தைய அளந்து பேசுங்க சார். இல்லாட்டி பல்லப் பேத்துருவேன்” என்பது போல் ரௌத்திரம் பழகும் போதும் சர் பட்டம் வழங்கி எதிராளியைக் கௌரவப்படுத்தும் நாகரிகம் நம்முடையது. இதுதான் ஜெண்ட்டில்மேனரிசம்ஸ் ஆஃப் இந்தியா!

என் தந்தைக்கு எப்படியோ அப்படியே இந்தியாவின் அனைத்து அலுவலக நிலையிலும் தம்முடன் பணியாற்றுவோரின் ஜாதி என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சாதீய கண்ணோட்டம் நிழலாடிக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் அது ஓர் ஆயுதமாகிப் பழிவாங்கும்.

இந்த நிலை கல்லூரி நாட்களில் இருந்ததில்லை என்பதை எண்ணிப் பார்க்கிறேன். என் நண்பன் கமலக்கண்ணனின் அக்காவுக்குத் திருமணம் நடந்தபோது முதல் நாள் இரவு விருந்திற்கே மண்டபத்திற்குச் சென்றுவிட்டோம். அஸ்லமும் காதரும் அடியேனும் பரிமாறும் பணியில் ஈடுபட்டுவிட்டு திருமணத்தில் வழங்குவதற்காக மஞ்சள் பைகளுக்குள் தேங்காய், வெற்றிலை + சீவல், குங்குமச் சிமிழ் முதலியவற்றை யாமம் வரை நிரப்பினோம். திருமண விருந்து வரை மறுநாள் உடனிருந்து கவனித்துக் கொண்டோம். இன்ன தேதி வரைக்கும் அவன் இந்து என்பது (பெயரால்) தெரியுமே தவிர என்ன சாதி என்பது எங்களுக்குத் தெரியாது.

இந்த மனநிலை கல்லூரிக் காலக் கட்டத்திற்குப் பின் மாறிவிடும் போலும். என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் “அவர் என்ன கேஸ்ட்?” என்று என் பெரியத்தா ஒருமுறை கேட்டார்கள். ‘தெரியாது’ என்றேன். “என்னடா இப்படிச் சொல்றே? இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்க வேணாமா?” என்று அவர்கள் கேட்டது ஏன் என்று எனக்கு விளங்கவே இல்லை. “அதெல்லாம் எதுக்குத் தெரிஞ்சுக்கணும்?” என்று கேட்டேன். “தெரியணும்ப்பா. கேட்டுச் சொல்லு” என்று மட்டும் சொன்னார்கள். பிறகு விசாரித்துவிட்டுச் சொன்னேன், “அவர் சாதி பேதங்களை நாடார்.”

##########

I LIKE THIS!


Wednesday, November 21, 2012

வீட்டாமை தீர்ப்புகள்



இந்தியாவின் இருபெரும் இதிகாசங்கள் எவை என்று எதிர்பாராக் கேள்வியை முன்வைத்தால் இல்லத்தரசிகள் சொல்லும் பதில் இப்படியாக இருக்கக்கூடும்:
1.  நாதஸ்வரம் 
2.  தென்றல்

தொலைக்காட்சி மெகா சீரியல்கள் இதிகாசங்கள் போல் இழுத்துக் கொண்டே செல்வதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. தாய்க்குலம் அவற்றை மாஞ்சு மாஞ்சு மூக்கைச் சிந்திக்கொண்டே பார்ப்பதைப் பார்க்கும் போது ஆற்றொணா வேதனைக்கு ஆளாகிறேன். இதாவது பரவாயில்லை. நிச்சயதார்த்தம் அல்லது திருமணத்திற்குச் சென்று வந்தது, விடுமுறை சுற்றுலா போய் வந்தது போன்ற காரணங்களால் பார்க்கத் தவறிப்போன எபிஸோடுகளை ஐபேட், லேப்டாப் ஏதாவதொன்றில் இணையத்திற்குள் புகுந்து அவர்கள் காண்கிறார்கள் என்பதை அறிந்தபோது நொந்தே போனேன். பெண்கள் இயல்பாகவே மாஸோச்சிஸ்டுகள் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் சுய சித்ரவதை என்பது இந்த அளவுக்குப் போகும் என்று நான் கனவிலும் கண்டதில்லை. எத்தனை நுட்பமான ஆனால் எத்தனைக் காத்திரமான வன்முறையை இந்தப் பெண்கள் தம் ஆன்மாவின் மீது பிரயோகிக்கிறார்கள் என்று பாருங்கள்!

அதிலும் சில சீரியல்களை இந்தியிலும் தமிழிலும் பைலிங்குவலாக வேறு தொடர்ந்து பார்த்து ஒப்பாய்வெல்லாம் செய்கிறார்கள். ஏ ரிஷ்தா க்யா கெஹ்லாதா ஹே? என்று ஒரு பாடாவதித் தொடர். பெயரிலேயே தெரிகிறதே, எழுதுபவர்களுக்கே கதை என்ன என்பது தெரியாமல்தான் இத்தனை நாள் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது. தாய்க்குலத்திற்கும் மெகா சீரியல்களுக்கும் இடையிலான உறவு பற்றியும் இதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் பால்கவி.

பால்கவியை இப்போதுதான் முதன்முதலில் கேள்விப் படுகிறீர்கள் அல்லவா? பால்கவி ஒரு வேலையில்லாப் பட்டதாரி. அதிலும் ரொம்பநாள் வேலை கிடைக்காமல் சும்மாவே இருப்பதால் வே.இ.பட்டதாரி என்னும் டெஸிக்னேஷனையும் தாண்டி இப்போது நாதாரி என்று அவனின் தந்தை பாராட்டும் அளவுக்கு வந்திருக்கிறான். ”ஏன்ப்பா இப்படிச் சும்மாவே இருக்க?” என்று ஒருமுறை அவனைக் கேட்டேன், எனக்கெல்லாம் ஒரு வேலை இருக்கிறது என்ற திமிரில். சித்தனைப் போல் சிரித்துவிட்டு “சும்மனாச்சிக்கும்தான் சும்மா இருக்கிறேன்” என்றான். அதற்கு மேல் நான் ஒன்றும் கேட்கவில்லை. கேட்டால் முந்நூற்றி எழுபத்தெட்டு பக்கங்கள் வரும் அளவுக்கு ஆய்வுரை நிகழ்த்துவான். அவன் ஒரு தத்துவவாதி. ஆனால் அவன் தன்னை ஒரு கவிஞனாகத்தான் முன்னிறுத்த விரும்புகிறான். பால்கவி என்னும் புனைபெயர் அதன் விளைவே. அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் ஆகியவை தந்த முப்பால்கவி என்று வள்ளுவரை விள்ளலாம். அவரைபோல் தானோ இவனும் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இப்பெயரின் பின்னணி வேறு. வேலை வெட்டி இல்லாதவன்லாம் இனிமேட்டு இந்த வீட்ல சாப்பிட வேண்டாம் என்று குடும்பத் தலைவரான அப்பா சொல்லிவிட்டதால் ரோஷக்கார வே.இ.ப ஆன இவன் கடந்த ஐந்து வருடங்களாகப் பெரும்பாலும் நண்பனொருவன் வைத்திருக்கும் ஆவின் பாலகத்தில் பாலும் பன்னும் பிஸ்கோத்தும் மட்டுமே உட்கொண்டு ஜீவித்து வருகிறான் என்ற அடிப்படையில் பால்கவி என்னும் புனைபெயரைச் சூட்டிக்கொண்டான். தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை தினங்களிலும் கூட வீட்டில் பட்சண பலகாரம் எதுவுமே எடுத்துக்கொள்வது கிடையாதாம். அந்நாட்களில் நண்பர்கள் அவனை அழைத்துச் சென்று இம்பாலாவில் வாங்கித்தரும் வான்கோழி பிரியாணி ஒரு ஹாஃபும் தந்தூரி லெக் பீஸ் ஒன்றும் மிகவும் ருசித்துச் சாப்பிடுவான்.

பால்கவி சும்மா இருக்கிறான் என்று சொல்லப்படுவது தவறான கருத்து. அவனின் மூளை நாளொன்றுக்கு இருபத்தியேழு மணிநேரமும் தீவிரமாக இயங்கிக் கொண்டே இருக்கிறது என்பதை அவனின் அணுக்கத் தோழர்கள் அறிவர். வள்ளுவர் சொன்ன முப்பாலிலும் அவன் டீ காஃபி பூஸ்ட் எல்லாம் போட்டுவிட்டான். குறிப்பாக, கடைப்பாலைச் சுண்டக் காய்ச்சிக் கோவா ஆக்கியிருக்கிறான். அப்படியொரு நவீன உளவியல் ஆய்வாளனாகவும் பால்கவி திகழ்கிறான். அவனுடைய திறனாய்வு மேதைமைக்கு ஒரு சான்று, “ஃபிராய்டிய நோக்கில் கவிக்கோ அப்துல் ரகுமானின் படைப்புக்கள்” என்னும் தலைப்பில் அவன் செய்த எம்.ஃபில் ஆய்வு. பின்னால் இது ‘கழு-தை’ என்னும் சிற்றிலக்கிய மாத இதழில் தொடராக வெளிவந்து நாலு பேரால் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. தமிழிலக்கிய சிந்தனைப் போக்கையே மாற்றி அமைத்த அந்த ஆய்வின் முதல் அத்தியாயத்திலேயே, ‘உறங்கும் அழகி, அவளுக்கு நிலா என்று பேர், சலவை மொட்டு, முத்தங்கள் ஓய்வதில்லை, ரகசியப் பூ, பால்வீதி போன்று கவிக்கோவின் நூற்தலைப்புக்கள் எல்லாம் குறியீடாகப் பாலியல் பொருள் தருவனவாக இருக்கின்றன’ என்னும் விஷயத்தை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தான். (கவிக்கோ எழுதிய கவிதையொன்றின் தலைப்பான ‘காடாலிங்கனக் குறிகள்’ என்பதை அவன் ஒருமுறை சொன்னபோது ‘அடடே மலையாளப் பெயராட்டம் இருக்கே?’ என்று கேட்டான் கு.குசலா.) இப்படியாக, குறுக்கு வெட்டுத் தோற்றப் பகுப்பாய்வு என்று சொல்லிக் கத்திரிக்காயை வெட்டுவது போல் கவிக்கோவின் படைப்பாளுமையை பிரித்து மேய்ந்திருந்தான். அந்தப் படுபாவிதான் இந்தப் பால்கவி.   

டி.வி சீரியல்களைப் பற்றி இரண்டு மணிநேரம் சிந்தித்து மண்டை காய்ந்த காரணத்தால் ஆவின் பாலகத்திற்குச் சென்று வரலாம் என்று எண்ணி சப்பலை மாட்டிக் கொண்டு கிளம்பினான். வழியில் அவன் நண்பர்களில் ஒருவனான அருள்மிகு. கடபோச்சே எதிர்ப்பட்டான். அவனையும் அழைத்துக் கொண்டு பூங்காவில் போய் அரச மரத்தின் குளிர்நீழல் பரவியதும், பட்சிகளின் பாடல்கள் பரவசப் படுத்துவதுமான ஒரு ரம்யமான சூழலில் சிமெண்டுப் பலகையில் அமர்ந்து காலை முதல் தன் கபாலத்தைக் காய்ச்சிக் கொண்டிருக்கும் பிரச்சனையைச் சொன்னான். நிச்சயமாக இதற்கு மிக அருமையானதொரு விளக்கத்தை அருள்மிகு. கடபோச்சே சொல்வான் என்பது பால்கவிக்குத் தெரியும்.

அருள்மிகு கடபோச்சே அவர்களையும் இப்போதுதான் முதன்முதலில் காண்கிறோம் ஆதலால் அவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்: இயற்பெயர் சுந்தர வடிவேலு. அது இப்போது அவருக்கே நினைவிருக்குமா என்று தெரியவில்லை. எல்லோரும் அவரை அழைப்பது அருள்மிகு. கடபோச்சே என்றுதான். அவர் என்னும் இந்த மரியாதைக்கும் அடைமொழி மற்றும் பட்டப்பெயருக்கும் ஒரு பின்னணி உளது. அதைப் புரிந்து கொள்ள இரண்டு கீவோர்டுகளை அதாவது கலைச்சொற்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்: ரிம்போச்சே மற்றும் வடபோச்சே.

ரிம்போச்சே என்பது திபெத்திய பௌத்தத்தில் ஒரு கௌரவப் பட்டம். ரிம்போச்சே என்பதன் பொருள் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் என்பதாகும். திபெத்தியர்கள் கைலாச மலையை “காங் ரிம்போச்சே” – விலைமதிக்க முடியாத பனிமலை என்று அழைக்கிறார்கள். புத்த பிட்சுக்களுக்கு இப்பட்டம் இருநிலைகளில் வழங்கப் படுகிறது. ஒன்று அவர்களின் மறுபிறப்புக் கோட்பாடு சார்ந்தது. புத்த குருமார்கள் மறுபிறப்பெடுத்து வந்துகொண்டே இருப்பார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை. அப்படிப் பிறந்தவர்களுக்கு ரிம்போச்சே என்னும் பட்டம் தானாகவே உண்டாகிவிடும். அப்படி அல்லாதவர்களுக்கு அவர்களின் ஆன்மிக முன்னேற்றத்தைச் சோதித்தறிந்து இப்பட்டம் வழங்கப்படுகிறது. தாந்திரீக பௌத்தத்தை திபெத்திற்குக் கொண்டு வந்த இரண்டாம் புத்தரான பத்மசம்பவரை ’குரு ரிம்போச்சே’ என்று அழைக்கிறார்கள். மறுபிறப்பாளராகக் கருதப்படுபவரை அவர்கள் துல்கு என்று அழைக்கிறார்கள். நமக்கெல்லாம் வம்சா வழி / பரம்பரைத் தொடர் இருப்பதைப் போல் துல்குக்களுக்கு மறுபிறப்பு வழித்தொடர் பதிவு செய்யப்பட்டுள்ளது. திபெத்திய பௌத்த குருமார்களில் முக்கியமான பதவிகள் தலாய் லாமா, பன்ச்சென் லாமா மற்றும் கர்மாபா. இவர்கள் மூவருமே துல்குக்களாக இருப்பர். பதினான்காம் தலாய் லாமா அவருக்கு முந்திய பதின்மூன்று தலாய் லாமாக்களின் மறுபிறப்பாக வந்தவர் என்று கருதப்படுகிறது. அந்த வம்சத் தொடரின் மூலமாக அவலகிடோஷ்வரர் என்னும் போதிசத்துவர் இருக்கிறார். மறுபிறப்பெடுக்கும் துல்குக்களில் பெண்களும் உண்டு. சில துல்குக்கள் என்ன காரணத்தினாலோ ஐரோப்பா அமெரிக்காவிலெல்லாம் இந்தக் கலிகாலத்தில் பிறந்து தொலைத்துத் தாங்கள் ரிம்போச்சேக்கள்தான் என்பதை நிரூபிக்க ரொம்பவும் நொம்பலப் படுகிறார்களாம்.

ரிம்போச்சே பற்றி “The Reincarnation of Khensur Rimpoche”, “The Unmistaken Child”, “Tulku”, “My Reincarnation”  போன்ற ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 1992-ல் சங்கீத் சிவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘யோதா’ என்னும் மலையாளப் படத்தில் ரிம்போச்சே கதாப்பாத்திரம் வருகிறது. 1986-ல் வெளிவந்த அமெரிக்கப் படமான “The Golden Child”-ஐத் தழுவி எழுதப்பட்டது யோதா.

லாமாவின் மறுபிறப்பாக அடையாளம் காணப்பட்ட ஒரு சிறுவனுக்கு எதிர்ப்படும் சூரிய கிரகணத்திற்கு முன் ரிம்போச்சேவாக முடிசூட்ட நாள் குறிக்கிறது பௌத்த மடாலயம். அப்பகுதியில் உள்ள மாந்திரீகக் குழு ஒன்று தாங்கள் அமானுஷ்ய சக்திகளை அடையும் பொருட்டு முடிசூட்டலுக்கு முன் ரிம்போச்சேவை பலி கொடுக்க வேண்டும் என்று அவனைக் கடத்திக் கொண்டு போய்விடுகிறார்கள். அவன் அவர்களின் பிடியிலிருந்து தப்பி காத்மண்டூ நகரில் தலைமறைவாகி விடுகிறான். இதே காலக்கட்டத்தில் கேரள கிராமம் ஒன்றில் தைப்பிரம்பிள் அசோகன் என்னும் வேலையில்லா இளைஞனுக்கும் அதே ஊரில் உள்ள அரசுமுட்டில் அப்புக்குட்டன் என்பவனுக்கும் பகை முற்றுகிறது. அசோகன் அங்கிருந்தால் நிச்சயமாக ஒரு கொலை செய்வான் என்று கணிகன் கூற, அவனை நேபாளத்தில் இருக்கும் மாமனான கிருஷ்ணக் குட்டி மேனனின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறாள் அவனின் அம்மா. அசோகன் அங்கு செல்வதை அறிந்த அப்புக்குட்டன் அவனுக்கு முன்பே அங்கு சென்று தான்தான் அசோகன் என்று சொல்லித் தங்குகிறான். அசோகன் வந்து சேரும்போது அவனை ஆள்மாறட்டக்காரன் என்று சொல்லித் துரத்தியடிக்கிறார்கள். அவன் காத்மண்டூவின் தெருக்களில் அலையும்போது ரிம்போச்சேவுடன் நட்பு உண்டாகிறது.

கிருஷ்ணக் குட்டி மேனனுக்கு அஷ்வதி என்று ஒரு மகள். காத்மண்டூ பல்கலக்கழகத்தில் நேபாள சமயவியல் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறாள். அவளை மணந்து கொள்ள அப்புக்குட்டன் திட்டம் தீட்டுகிறான். ரிம்போச்சேவின் உதவி கொண்டு அதை அசோகன் முறியடிக்கிறான். உண்மையான அசோகன் யார் என்பதும் தெரிய வருகிறது. அசோகனுக்கும் அஷ்வதிக்கும் உள்ளம் இரண்டும் செம்புலப் பெயல் நீர் போல தாம் கலக்கின்றன. அதாவது காதல். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒரு டூயட் பாடலில் அவர்கள் லயித்திருக்கும் போது மாந்திரீகக் கும்பல் வந்து ரிம்போச்சேவைப் பிடித்துச் செல்கிறது. தடுக்க முயலும் அசோகன் கண் பார்வயை இழக்கிறான்; அஷ்வதிக்கு அடிதடியில் பலத்த காயங்கள். அவர்களை நேபாளின் ஆதிவாசிகள் அரவணைத்துக் காக்கிறார்கள். அந்த ஆதிவாசிகள்தான் ரிம்போச்சேவின் மடாலயத்தைக் காலந்தோறும் பாதுகாத்து வருபவர்கள். அவர்களின் தலைவன் சில குறிப்புக்களை வைத்து அசோகன்தான் ரிம்போச்சேவை மீட்பதற்குப் போதிசத்துவரால் தேர்ந்தெடுக்கப் பட்டவன் என்று கூறுகிறான். கண்பார்வை இல்லாத நிலையிலும் அபாரமாக குங்க்ஃபூ போடும் அளவுக்கு அசோகனுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவன் ரிம்போச்சேவை மீட்டு வருகிறான். சூரிய கிரகணத்திற்கு முன்னாள் இரவில் ரிம்போச்சேவுக்கு முடி சூட்டப்படுகிறது. அப்போது அங்கு வரும் மாந்திரீகவாதிகளின் தலைவனுடன் கடுமையாக மோதி அவனைக் கொல்கிறான் அசோகன். அதன் பின் அவனுடன் பொருத வரும் அப்புக்குட்டனையும் நையப் புடைத்து அனுப்பிவிட்டு அஷ்வதியை மணந்து கொள்கிறான். (மோகன்லால், மதூ, புனீத் இஸ்ஸார், ஜகதி ஸ்ரீகுமார், ஊர்வசி, ஒடுவில் உன்னிகிருஷ்ணன் முதலியோர் நடித்துள்ள இப்படத்தில் ரிம்போச்சேவாக நடித்திருக்கும் சிறுவனின் பெயர் சித்தார்த்தா!)

அடுத்த கலைச்சொல் வடபோச்சே. இது வடை போச்சே என்பதன் பேச்சுவழக்கு வடிவம் என்பதையும் வைகைப் புயல் என்று புலவர் புகழ்ந்தேத்தும் வடிவேலு ‘போக்கிரியில்’ பேசிய ஒரு கையறுநிலை வசனம் என்பதையும் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியுமாதலால் மேல் விளக்கம் வேண்டற்பாலதன்று.

இனி நார்த்தாமலை சுந்தர வடிவேலு அவர்களுக்கு பெற்றோரிட்ட அந்நாமகரணம் மறைந்து அருள்மிகு. கடபோச்சே என்னும் பட்டப்பெயர் உருவான வரலாற்றைக் காண்போம். நார்த்தாமலையிலிருந்து திருச்சி மன்னார்புரம் புறம்போக்குக் குடிசைப் பகுதிக்கு அவர் வந்து செட்டில் ஆன போது அவரின் அகவை பதினொன்று. பத்து வருடங்கள் கழித்து ஒரு விபத்தில் பெற்றோரை இழந்து அனாதை ஆனார். அதே குடிசைப் பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்னும் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இது நடந்தது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. ஆர்.பி.எஃப்புக்குச் சொந்தமான இடம் என்று சொல்லப்பட்டாலும் இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அந்தக் குடிசைப் பகுதி மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் இருந்தது. எனவே பசை உள்ளவர்கள் பெரிய பெரிய பில்டிங்குகளெல்லாம் கட்டி கடைகள் என்ன, லாட்ஜ் என்ன, கம்ப்யூட்டர் மையங்கள்கூட அதில் வந்துவிட்டன. அப்போதுதான் விதியில் ஒரு திருப்பம் வந்தது. சிங்கார சென்னையைத் தொடர்ந்து திருச்சியையும் சிங்காரமாக்கும் பொருட்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டு மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. முதல் வேலையாக இடையூறாய் நிற்கும் கட்டிடங்கள் எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. மன்னார்புரம் நால்ரோட்டிலும் மதுரைக்குச் செல்லும் ரிங் டோடு அமைப்பதற்காக ஒரு 4வே மேம்பாலம் திட்டமிட்டிருந்ததால், ஒரு சுபதினத்தின் காலையில், ஆடவர்கள் நெட்டி முறித்தபடியே டீக்கடை முன் ஆஜராகும் சுபயோக வேளையில் ராட்சத புல்டோசர்கள் சகிதமாக அதிகாரிகளும் போலீசும் வந்து நின்றார்கள். வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் விளக்கப் படவே, ‘ஐயோ நம்ம ஊட்ட இடிக்கப் போறாங்களே” என்று தலையில் இடி விழுந்தது போல் ஜனங்கள் கூடி ஒரே ஆர்ப்பாட்டம். அன்று வேலை எதுவும் ஓடவில்லை. இப்படியே ஒருவார காலம் போயிற்று. கமிஷ்னரிடம் பேச்சுவார்த்தை அது இது என்று என்னென்னவோக்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சுபயோக சுபதினத்தில் சுப்ரபாதத்தில் என்க்றோச்மெண்ட் வேலைகள் ஆரம்பமாயின. மக்கள் குழுமி இதைக் காணச் சகியாமல் ஹிட்டடித்த காக்றோச்களைப் போல் ரோட்டில் மல்லாந்து விழுந்து நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறினார்கள். இன்றைய தேதிக்கு  எல்லோரும் சுபிட்சமாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். சமீபத்தில் கூட இளைய தளபதி விஜய் அதிரடியாகக் கலக்கும் ‘துப்பாக்கி’க்கு ரசிகர் மன்றத்தின் சார்பில் ஒரு ப்ளாட் சைஸில் ஃப்ளெக்ஸ் போர்டு வைத்து தல ரசிகர்களைச் சீண்டியிருந்தார்கள். அவர்கள் எவ்வளவு பரவசமான வாழ்க்கை நிலை கொண்டுள்ளார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று!

அந்த என்க்றோச்மெண்ட்டில்தான் சுந்தர வடிவேலு வைத்திருந்த கடையும் இடிக்கப்பட்டது. தவிட்டு பிஸ்கெட்டுகள், கடலைமிட்டாய் சூடமிட்டாய் புளிப்பு மிட்டாய் வகையறாக்கள், பீடி சிகரெட் பான்பராக் புகையிலை அன்ன பிற வஸ்துக்கள் ஆகியவை விற்ற சிறிய கடை அது. ஆனால் அதுதான் அவருக்கு வாழ்வின் ஆதாரமாய் இருந்தது. கண்முன் கடை இடிவதைப் பார்த்துக்கொண்டே மிகவும் சாந்தமாக நின்றிருந்தார் அவர். என்னடா இப்படி நிக்கிறான், அதிர்ச்சியில் மரை கழண்டு விட்டதா என்று பயந்து தோளைப் பற்றி உலுக்கியபோது, ஒரு லேசான சலிப்புடன் ‘கட போச்சே’ என்றார். அவ்வளவுதான். அதற்கு மேல் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. மகான்களுக்கே உரிய மனோதிடமா இல்லையா சொல்லுங்கள். தன் விஞ்ஞான ஆராய்ச்சித் தாள்கள் எல்லாம் டைமண்ட் என்ற செல்ல நாய்க்குட்டி தட்டிவிட்ட மெழுகுவத்தியில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததைச் சாந்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தாராம் தாமல் ஆல்வா எடிசன். கேட்டதற்கு ‘என் தவறுகள் எல்லாம் எரிந்துவிட்டன. இனி புதிதாய்த் தொடங்கலாம்’ என்றாராம். அதுபோல் நின்றார் சுந்தர வடிவேல். அவர் மனைவி தேன்மொழியும் ஒருவாரம் கழித்துப் புதிதாக ஒரு வாழ்க்கையைத் தொடங்கிக் கொண்டார். மெக்கானிக் ஏகாம்பரத்துடன் ஓடிவிட்டதாகவும் தஞ்சாவூர் பக்கம் எங்கோ இருப்பதாகவும் பேச்சு. அதையும் மௌனமாக ஏற்றுக்கொண்டார், ‘கல்யாணமாகி பத்து வருஷமாச்சுங்க. புள்ள பூச்சி எதுவும் உண்டாகல்ல. இனியாச்சும் வாய்க்கட்டுமே. பாவம் ஒரு பொண்ணு தாயாகாம இருக்கிறது நல்லாவா இருக்கு?’ என்று மட்டும் சொன்னார். எப்பேர்பட்ட மனுஷன். பவ்லோ கோய்லோவின் நாவலில் இடம் பெற வேண்டிய பாத்திரம் என்று நினைத்துக் கொண்டேன். சிறு பிள்ளையிலிருந்தே இப்படியொரு அசாத்திய பக்குவத்துடன் அவர் இருப்பதாகக் கூறுகிறார்கள். ‘அதோட சுபாவமே அப்படித்தாம்ப்பா’ என்றார் காமாட்சிக் கிழவி. இதெல்லாம் சேர்ந்துதான் அவருக்கு அருள்மிகு. கடபோச்சே என்னும் பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.

செ, அறிமுகமே இவ்வளவு தூரம் கொண்டு வந்துவிட்டது. ஆக, பால்கவியும் அருள்மிகு கடபோச்சேவும் ரம்யமான சூழலில் பூங்காவில் அமர்ந்திருந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் மெகா சீரியல்கள் பார்ப்பதை முன்னிட்டு அவர்களின் உளவியலைத் தன்னால் புரிந்து கொள்ள முடியாத சிக்கலை பால்கவி முன்வைத்தான். அருள்மிகு கடபோச்சே சிரித்துக் கொண்டே, ”கேணப்பயலே, இதெல்லாம் ஒரு விஷயமா? பெண்ணுக்கு இயல்பாகவே ஒரு நார்சிசஸ் சிண்ட்ரோம் உண்டு. தன் அழகைக் கண்ணாடியில் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க நினைப்பாள். அதேதான் இது. மெகா சீரியல் அவுங்களுக்கு ஒரு mirror, அவ்வளவுதான்” என்றார்.
அவரின் கையில் ஒரு இத்துப்போன மஞ்சள் நிறப் பையில் ஏதோ சாணித்தாள் கட்டொன்று இருப்பதைக் கண்டு அது என்னவென்று கேட்டான் பால்கவி.

குடுமியான்மலையில் இருந்து ராஜா கனி என்னும் நண்பர் அனுப்பியுள்ள ’கத்திக்கப்பல்’ என்னும் பத்திரிகை அது என்றும் தமிழ்ப்படத்தில் பதிவாகியுள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்டிருக்கும் முக்கியமான மாற்றத்தைப் பற்றி அதில் சுவாரஸ்யமான ஒரு கட்டுரையை ராஜா கனி எழுதியிருப்பதாகவும் அருள்மிகு கடபோச்சே சொன்னார். ஆர்வம் எழ அப்போதே அதை வாங்கிக் கொண்டான் பால்கவி. அவன் பத்துமுறை படித்து மெய்சிலிர்த்த அந்தக் கட்டுரையின் சாராம்சம் பின்வருமாறு:

தமிழ்ப்பட கிராமம் என்று பிரபலமாக அழைக்கப்படும் Xபட்டி என்னும் அந்தச் சிற்றூரில் இன்னமும் தமிழ்ப் பாரம்பரியத்திற்கு மரியாதை கொடுத்து நாட்டாமை முறை அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சேட்டலைட் சேனல்கள், இண்டர்நெட் வழங்கும் ஃபேஸ்புக் ஆர்க்குட் யூட்யூப் கூகிள் யாஹூ போன்ற சேவைகள், எல்லோர் கையிலும் செல்பேசிகள், பொங்கலை முன்னிட்டுப் பதினெட்டுப் பட்டிகளுக்கிடையிலான 20-20 டோர்னமெண்ட், அதிமேதாவிகள் அரை டஜன் பேரை உறுப்பினர்களாகக் கொண்ட இலக்கியச் சதுரம் என்று என்னதான் நவீன அம்சங்கள்
பெற்றுத் திகழ்ந்த போதும் பழமரபைப் பேணுபவர்களாக இவ்வூர் மக்கள் இருக்கிறார்கள்.

நாட்டாமை பொறுப்பு வகிக்கும் பானா சூனா மணியக்கவுண்டரை நான் சந்திக்கச் சென்றபோது அவர் மரத்தடிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன என்றும் வீட்டிலேயே பஞ்சாயத்து வைத்துத் தீர்ப்புக் கூறுகிறார் என்றும் கேள்விப்பட்டு வீட்டுக்குப் போய் அவரைச் சந்திதேன். அம்மணியை அழைத்து தாகசாந்திக்கு வெண்கலச் சொம்பு நிரம்ப மோர் தந்து உபசரித்தார். அறுபது வயது இருக்கும். ஆனால் கருங்கல் சிலை போல் கட்டுமஸ்தாக இருந்தார். நாட்டாமை என்றால் அணில் வால் போல் இருபக்கமும் நீண்ட மீசை இருக்க வேண்டும் எனபதுதானே மரபு. ஆனால் அந்த அணில் வால் இரண்டையும் இவர் பக்கவாட்டில் side burns-களாக வைத்திருந்தார். மீசை இருக்கவேண்டிய இடத்தில் தீக்காயத்தின் தழும்புகளும் கரப்பான் பூச்சி மீசை போல் மையால் போட்ட கோடும்தான் இருந்தன. இதற்கு ஏதேனுமொரு ஃப்ளேஷ் பேக் நிச்சயமாக இருக்க வேண்டும். நமக்கெதுக்கு வம்பு, நாட்டாமையாச் சொன்னால் சொல்லட்டும் என்று அதை நான் கேட்கவே இல்லை. அவரும் சொல்லவில்லை. ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன் ஊரில் ஏற்பட்ட ஏதோ கலவரத்தில் தீக்காயம் ஆனதிலிருந்துதான் கரிகாலனுக்கு ஒரு கால் கரிந்து விட்டதாகச் சொல்லப்படுவது போல் புட்டமெல்லாம் எரிந்து கரிந்து போய் – அதற்குப் பெருமையாக ஒரு பெயர்கூட வைத்து அழைக்கப்பட முடியாத நிலையில் – வீட்டிலிருந்த படியே தீர்ப்பு வழங்கி வருகிறாராம். “நாட்டாமையாக இருந்த நான் இப்ப வீட்டாமை ஆகிவிட்டேன்” என்று சொல்லிச் சிரித்தார்.

கிராமப் பஞ்சாயத்து முறையில் வீட்டாமை பானா சூனா மானா அவர்கள் செய்திருக்கும் புதுமை என்னவெனில் நாட்டாமை / வீட்டாமை நினைத்தால் வீ.பி.கோ செக்‌ஷன்களைப் புத்தாக்கம் செய்து சட்டத் திருத்தங்களை இயற்றி அமுல் படுத்துவதுதான். அதற்கான காரணம் என்னவென்று வினவியபோது அவர சொன்னதாவது: “பயலுக பழைய தண்டனைகளுக்குப் பரம்பரைப் பரம்பரையாப் பழகிப் போடுறானுங்க. அதுனால ஜீன்லயே ஒரு இம்யூனிட்டி வந்துடுதுங்க தம்பி. காலத்துக்குத் தகுந்தாப்ல தண்டனைய மாத்தணுங்கற திட்டம் அதுக்குத்தான்.” என்ன மாதிரியான புதுத்திட்டங்கள் வைத்திருக்கிறார் என்று கேட்டபோது லேட்டஸ்ட்டாக இயற்றப்பட்ட வீட்டாமை வீக்ளியை எடுத்துத் தந்து குறிப்பெடுத்துக் கொள்ளும்படிக் கூறிவிட்டு அம்மணி முதுகு தேய்த்துவிட நீராடும் ஆனந்தத்தை நோக்கி வீட்டின் பின்புறம் போய்விட்டார். என் நெஞ்சை நக்கிய சில தண்டனைகளை மட்டும் நான் குறித்துக் கொண்டேன்.

வீ.பி.கோ #12: குற்றவாளி ஆண் என்னும் பட்சத்தில் ஒரு மாத காலம் அனைத்து மொழிகளின் அனைத்து மெகா சீரியல்களையும் ஒன்றுவிடாமல் அல்லும் பகலும் தொடர்ந்து பார்க்க வேண்டும். குற்றவாளி பெண் என்னும் பட்சத்தில் ஒரு மாத காலம் எந்த மெகா சீரியலையும் பார்க்காமல் அதற்குப் பதிலாக BBC, CNN மற்றும் நரி வரலாறு ஆகிய சேனல்களை மட்டுமே பார்க்க வேண்டும். தண்டனை காலத்தில் குற்றவாளிகளுக்குப் பைத்தியம் பிடித்தால் அதற்கு வீட்டாமை பொறுப்பல்ல.

வீ.பி.கோ #18: கோணங்கியின் பிதிரா, பாழி ஆகிய நாவல்களை முழுமையாக மனனம் செய்து சொற் பிறழாமல் எழுதிக் காட்ட வேண்டும்.

மேற்கண்ட சட்டத்தின் மீது உள்ளூர் பிரமுகர்களில் ஒருவரான ஜவுளிக்கடை சேனா கானா மூனா தாவூத் பாட்சா ராவுத்தர் அவர்கள் ஆட்சேபனை தெரிவித்து முஸ்லிம்களுக்கான தனிச்சட்டம் வேண்டும் என்று ஜமாத் கேட்டுக்கொண்டதன் பேரில் பின்வரும் உபச்சட்டம் இயற்றப்பட்டது.

வீ.பி.கோ #18(A): முஸ்லிம் முரசு மாத இதழின் இரண்டாண்டு தொகுப்புக்களை முழுமையாக மனனம் செய்து சொற் பிறழாமல் எழுதிக் காட்ட வேண்டும்.

வீ.பி.கோ #27: பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த திரைப்படத்தைத் தனி ஆளாக அமர்ந்து தியேட்டரில் தொடர்ச்சியாக மூன்று காட்சிகள் காண வேண்டும். (டிக்கட் செலவை பஞ்சாயத்து ஏற்கும். ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் ஆள் இருக்கிறானா பூட்டானா என்று சோதிக்கப்படும்)

வீ.பி.கோ #30: நாய்க்குட்டியைத் துரத்திக் கொண்டு ஓடும் யுவதியைத் தன் சட்டையைச் சாட்டைபோல் முறுக்கி வீசி, ரோட்டில் விரைந்து வரும் லாரியில் அடிபடாமல் சரத்குமார் காப்பாற்றும் விளம்பரத்தை இருநூறு முறை தொடர்ந்து பார்க்க வேண்டும்.

Tuesday, November 20, 2012

பாட மாற்றும் மாற்றுப் பாடமும்



’பாடபேத பூதங்கள்’ என்று ஒரு சொற்றொடர் சொல்வார் டி.என்.ஆர். அது போல் ‘பாடநூல் பூதங்கள்’ என்று சொல்லலாம் போல் தோன்றுகிறது. அவ்வப்போது பாடநூலில் அபத்தம் அரசியல் பாகுபாடு பாரபட்சம் போன்ற பூதங்கள் தலைவிரித்துத் தாண்டவம் ஆடுவதைக் கண்டு வருகிறோம். இப்போதும் இரண்டு பாடநூல் பூதங்கள் கிளம்பி வந்து களேபரம் செய்து கொண்டுள்ளன.

ஒரு பூதத்தை விரட்டும் பணியில் தமிழகத் தலைவர்கள் அனைவரும் ஏகோபித்து என்னென்னவோ செய்து வருகிறார்கள். அப்பிரச்சனை செய்தித்தாள்களில் விரிவாக முதல் பக்கத்திலேயே எழுதப்பட்டது. இன்னொரு பூதம் குட்டிப் பூதம் என்பதைப் போல் அதற்கு அவ்வளவு பெரிய கவரேஜ் கிடைக்காமல் நான்காம் பக்கத்தில் ஒரு பத்தியின் நடுவில் ஒரு ஜாண் அளவில் மட்டும் போடப்பட்டது. ஆனால் அந்தக் குட்டிப் பூதத்தின் ஸ்கோப்தான் உலகளாவிய ஒன்றாக எனக்குப் படுகிறது. ஏனெனில் அது உணவை அடிப்படையாகக் கொண்டது. எந்தத் தேசம், மதம், மொழி, இனம், ஜாதி ஆனாலும் மனிதர்களுக்கு உணவு அடிப்படைத் தேவை அல்லவா?

சிபிஎஸ்சி பாடநூலில் உள்ள அந்தப் பாடபூதம் இப்படிச் சொல்கிறதாம்: புலால் உண்பவர்கள் பொய் சொல்வார்கள், களவு செய்வார்கள், வாக்குறுதிக்கு மாறு செய்வார்கள் இத்தியாதி. அதாவது நான்வெஜ்கள் எல்லாம் தீயவர்களாக இருப்பார்கள். இதை எந்த ஆய்வுக்கூடத்தில் எந்த விஞ்ஞானி கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. நோபல் பரிசுக்குத் தகுதியான கண்டுபிடிப்பு அல்லவா இது? இப்படிப்பட்ட அறிவு வளர்க்கும் பாடங்கள்தான் ஒளிமயமான எதிர்கால இந்தியாவை உருவாக்கும். (அப்புறாணி கேட்கிறான்: இந்தப் பாடத்தை எழுதியவர் புத்தரின் கொள்கையைச் சேர்ந்தவராக இருப்பாராட்ருக்கு, இல்லீங்களா?)

எவனோ ஒரு கூமுட்டை எழுதிய ஓர் அசட்டுக் கருத்துக்கு அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அதுவும் பாடநூலில்தானே எழுதினான்? அது குழந்தைகளின் பிரக்ஞையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு ஒரு விழுக்காட்டிற்கும் கம்மியாகத்தான் இருக்கவேண்டும். என் ஆளுமையில் தாக்கம் செலுத்திய பாடம் என்று நான் முதுகலை பட்டப்படிப்புப் படித்தது வரையிலான எந்தப் பாடத்தையும் என்னால் சொல்ல முடியவில்லை. இந்தியக் கல்வியமைப்பின் நிலை இப்படியாகத்தான் உள்ளது. இதில் நம் அறிவுக்கு எட்டாத நன்மைகள் உள்ளன என்பதே என் உள்ளுணர்வால் நான் கொண்டிருக்கும் நம்பிக்கை.
.
இப்படியொரு பாடத்தை அதை எழுதியவர் எப்படி எழுதினார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ‘சைவ உணவுமுறை நன்று’ என்பது அவரின் அடிப்படை நம்பிக்கையாக இருக்கும். அந்த நம்பிக்கை காலப்போக்கில் ‘அசைவ உணவு முறை தீது’ என்னும் குட்டியைப் போடும். இன்னும் சில காலம் சென்று ‘வெஜ்ஜுகள் நல்லவர்கள்’ என்னும் பார்வையை ஈனும். அதற்கு அடிப்படையாக அமையும் தர்க்கம்: ‘நல்ல உணவை உண்பவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். ஏனெனில் நன்மை நன்மையையே உருவாக்கும். சைவ உணவு நல்லது. எனவே சைவ உணவு மட்டுமே உண்பவர்கள் நல்லவர்களாவர்’

இப்படியொரு பார்வை அந்த பிரகஸ்பதியின் மனதில் வேரூன்றிய பின் இன்னொரு கருத்து மெல்ல உருவாகி வரும்: ‘நான்வெஜ்ஜுகள் தீயவர்கள்’. அதற்கான தர்க்கத்தை நீங்கள் மேற்படி தர்க்கத்தில் இருந்து எளிதாக ஊகித்துக் கொள்ளலாம்.

அதன்பின் நிகழ்வது மிகைப்பாடு. நெறி வெறியாகும் நிலை அது. அதன் வெளிப்பாடுதான் இந்தப் பாடம்.

இதைச் சொல்லும்போது ’இஸ்லாமியப் பெண்ணியம்’ என்னும் நூலில் ஹெச்.ஜி.ரசூல், ‘பர்தா அணியாத பெண்கள் அனைவரும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொல்வது அராஜகம் ஆகும்’ என்று எழுதியிருந்தது நியாபகம் வருகிறது. நியாயமான கருத்துத்தான். உலகம் கறுப்பு வெள்ளையாக இல்லை. ஆனால் கறுப்பு வெள்ளையாகச் சிந்திக்கும்படி மனங்கள் கண்டிஷன் செய்யப்பட்டுள்ளன. அப்படிச் சிந்திக்கும் மனங்களுக்கு உண்மை புலப்படாது என்பதே உண்மை!


‘பர்தா அணியாத பெண்கள் அனைவரும் ஒழுக்கம் கெட்டவர்கள்’ என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அப்படியேதான் ‘பர்தா அணிந்தவர்கள் அனைவரும் ஒழுக்கமானவர்களாகத்தான் இருப்பார்கள்’ என்னும் கருத்தும். அது ஒரு நல்ல நம்பிக்கை ஆகலாம். ஆனால் பர்தா அணியாதவரகள் அனைவரும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று நம்புவதில் நல்லெண்ணம் எதுவும் இல்லை; நிச்சயமாக அது கெட்ட நம்பிக்கைதான்.
உண்மையில் பர்தா அணியாதவர்களில் ஒழுக்கமானவர்களும் உண்டு, ஒழுக்கமற்றவர்களும் உண்டு. அதேபோல், பர்தா அணிந்தவர்களில் ஒழுக்கம் உள்ளவர்களும் உண்டு, ஒழுக்கமற்றவர்களும் உண்டு. (இலக்கிய சாட்சியத்திற்கு டாக்டர் கதீஜா மும்தாஜின் ‘பர்ஸா’ நாவலைப் பாருங்கள். ஒழுக்க வரையறைகளை மீறுவோரின் கைகளில் பர்தாவும் ஒரு கருவியாகும் நிலையை அதில் சுட்டியுள்ளார். ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்படும் சட்டம் அந்நோக்கத்திற்கு எதிரான நிலைக்கு ஒரு கேடயமாக மாற்றிக்கொள்ளப்படும் நிலை மனித குலம் முழுக்கவும் உண்டு.)

பர்தாவிலும் கூட ஒற்றை அளவுகோல் எதுவும் முஸ்லிம் அறிஞர்களிடையே இல்லை. முஸ்லிம் நாடுகளில் பர்தாவின் அளவுகோல்கள் வேறுபட்டுக் கிடக்கின்றன. உள்ளூரிலேயே இங்கே வேறு வேறு விதங்களில் பர்தா அனுஷ்டிக்கப்படுவதைக் காண முடிகிறது. என் மனைவி முகம் தெரியுமாறான பர்தா அணிகிறாள். அவளின் சகோதரி ஒருவர் முகம் தெரியாமல் கண்கள் மட்டும் தெரியுமாறு பர்தா அணிகிறார். இன்னும் சிலர் அந்தக் கண் பகுதிக்கும் வலை வைத்து அணிகிறார்கள். சிலர் கைப்பகுதியும் அன்னிய ஆடவரின் பார்வையில் பட்டுவிடக் கூடாது என்று வெண்ணிற உறைகள் அணிந்து கொள்கிறார்கள். என் அம்மாவும் சின்னம்மாக்களும் தலையில் கறுப்புத் துப்பட்டா ஒன்றைச் சுற்றிக் கொள்கிறார்கள். இன்னமும், புதுக்கோட்டை பக்கம் உள்ள பெண்கள் பலர் தமிழகத்தில் மட்டுமே காணலாகும் வெள்ளை நிற துப்பட்டி அணிகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அதுதான் பர்தா / கோஷா எல்லாம். இந்த வெள்ளை துப்பட்டி பர்தாவே கிடையாது என்றும், சேலை மீது கட்டப்படும் இன்னொரு சேலை மட்டுமே என்றும் ஒரு வாதமுண்டு. இப்படி அளவுகோல்கள் பல. என்ன, ஒழுக்கத்தில் விழுக்காடுகள் இருக்கின்றதோ? முகம் தெரிவது ஆபாசம், ஒழுக்கக்கேடு ஒருவர் கருதுகிறார் எனில், என் மனைவியை அவர் அப்படிக் கருதுவதை நான் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? எவ்வளவு பேசினாலும் அவர்களுக்குப் புரியாது. பார்வை வேறுபாடுகள் அத்தனை உறுதியாக உள்ளபோது என்ன செய்ய முடியும்? ‘அடப் போங்க, பெரிசா ஒழுக்கத்தைக் கண்டுபுடிச்சிட்டீங்க’ என்பதாகத்தான் சொல்ல முடியும்.

உண்மையில் இந்த ஒழுக்கம் X ஒழுக்கமின்மை என்னும் முரணியக்கத்தில் தீர்ப்புக்கள் (ஃபத்வா) வழங்குவது மிகவும் சிக்கலாகத்தான் உள்ளது. மனிதர்களைக் கூர்ந்து அவதானித்தால் முழுமையாகக் கெட்டவர்கள் என்று யாரையும் முடிவு செய்ய முடியாது.

”தீயவர்கள்தான் கெட்ட வார்த்தை பேசுவார்கள்” என்பது ஏறத்தாழ எல்லாப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்குப் பாலபாடம் போல் கற்றுக் கொடுப்பதுதான். நான் சிறுவனாக இருந்தபோது ‘கம்னாட்டி’ என்பது மகா கெட்ட வார்த்தை என்று எனக்குச் சொல்லப்பட்டது. ஏனெனில், அண்டை வீட்டுப் பையன் அதை நிமிஷத்துக் கொருதரம் செப்புவான். அவன் பெற்றொரும் சகோதரிகளும் அப்படியே. கெட்ட வார்த்தைகள் பேசக்கூடாது என்னும் விதி அவர்களின் வீட்டிலும் உண்டு. ஆனால் ‘கம்னாட்டி’ என்பது அவர்கள் வீட்டில் கெட்ட வார்த்தை அல்ல, அவ்வளவுதான். யோசித்துப் பார்த்தால் இது ஒவ்வொரு நாடும் வரையறுத்துக் கொள்ளும் சட்டத்தைப் போல்தான் உள்ளது. “தீயவர்கள்தான் கெட்ட வார்த்தை பேசுவார்கள்” என்னும் எளிய விதியை என் அண்டை வீடே முதலில் குழப்பி விட்டது.

கல்லூரியில் ஒரு நண்பன் இருந்தான். ஐந்து வேளை நேமமாகத் தொழுவான். மேல் அமலாக மிஸ்வாக் என்னும் தூரிகைக்குச்சி கொண்டு ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும் பல் துலக்குவான். அவ்வாறு செய்வது நபிவழி. எனவே, என் வாயை விட அவனின் வாய் தூய்மையாகவும் வாசமாகவும் இருக்கத்தான் வேண்டும். ஆனால், கோபத்தில் அவன் பேசும்போது கெட்ட வார்த்தைகள் சும்மா அருவி மாதிரி கொட்டும். அரை மணிநேரம் அவன் பேசியதை சென்ஸார் செய்தால் எஞ்சும் விஷயம் இரண்டு நிமிஷத்துக்குத் தேராது! ரமலான் மாதத்தைக் கண்ணியப்படுத்த வேண்டும் என்பதற்கான அந்த ஒரு மாதத்தில் மட்டும் கெட்ட வார்த்தையே பேசாமல் மிகப் பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொள்வான். “நோம்பு முடியட்டுண்டா…அஹ்ஹ்.. வச்சிக்கிறேன் கச்சேரிய” என்று சொல்லிக் கொண்டிருப்பான். அணைக்கட்டில் நீர் தேங்குவது போல் dirty words அவனுக்குள் சேகரமாகிக் கொண்டிருக்கும் போலும். ரமலான் முடிந்து பிறை தெரிந்ததுதான் தாமதம், அணைக்கட்டின் அடைப்புத் திறந்தது போல் இன்னாச் சொற்களின் வெள்ளம் நுரை ததும்பப் பாய்ந்தோடும். (கலீல் ஜிப்ரானின் ஒரு கதையில் நாய்கள் ஒரு சபதம் எடுத்துக் கொள்ளும். இனி குரைப்பதில்லை என்று. பத்து நாட்கள் விரதம் பேணிய பின், பௌர்ணமி இரவில் நிலாவைக் கண்டதும் கட்டுங்கடங்காத ஆவல் மீற அதுவரை அடக்கி வைத்திருந்ததை எல்லாம் சேர்த்துக் குரைத்துத் தள்ளும்.) இப்படிப்பட்டவன் அவன். அதற்காக அவனை நான் ஒழுக்கம் கெட்டவன் என்று சொல்ல முடியாது. மாஞ்சு மாஞ்சு தன் நண்பர்களுக்கு அவன் உதவி செய்வது போல் என்னால் முடியாது என்பது எனக்குத் தெரியும். அவனை நான் கெட்டவன் என்று சொன்னால் அது அராஜகம். அது மட்டுமல்ல, இன்று நான் அறிந்திருக்கும் நிலையில், கெட்ட வார்த்தைகள் என்று முத்திரை குத்தப்பட்ட வார்த்தைகளுக்கு விரிவான மானுடவியல் பின்புலம் இருப்பதை என் மனம் கவனிக்கின்றது. அவை ஃபிராய்டிய ரீதியான உளவியல் ஆய்வுக்குரிய ஸ்பெசிமன்கள் ஆகின்றன.

ஒழுக்கம் என்பதன் வெளி அடையாளங்கள் வெறும் வேஷங்களாக மாறிப் போகக்கூடும் என்பதை நினைக்கையில் ஒரு சம்பவம் நியாபகம் வருகிறது. மிகப்பெரிய ‘இபாதத்தாளி’ என்று பொது மக்கள் பார்வைக்கு உயர்வாகத் தெரிந்த ஒருவர், மதறாவில் ஒரு மாணவச் சிறுவனை பின்(வன்)புணர்ச்சி செய்தார் என்ற சேதி சில வருடங்களுக்கு முன் செய்தித்தாள்களில் வந்தது. அந்த தாடியுருவியை நான் நேரில் கண்டிருக்கிறேன். ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி தீனை எத்த வேண்டியவர் இப்படித் தகாத வழியில் ஊனை எத்தும் எத்தனாய் இருந்தது ஏன்? இத்தனைக்கும் மித்த விஷயங்களில் அவர் மீது யாரும் எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை. இன்சொல்லர், அறிவாளி, திறமையானவர் என்றே சொன்னார்கள்.

“மதுவே பாவங்களின் ஆணிவேர்” என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு. ஆனால் ஆணிவேர்களில் சல்லி வேர்கள் கட்டாயம் முளைத்தே ஆகவேண்டும் என்று சில்லியாக எண்ண முடியாது. சில செடிகளில் ஆணி வேர் மட்டுமே இருக்கும் என்பது போல் சிலரிடம் குடிப்பழக்கம் மட்டுமே இருப்பதுண்டு. அருகம்புல்லில் சல்லி வேர்கள் மட்டுமே கொத்தாக இருப்பது போல் சில புல்லர்களிடம் குடிப்பழக்கம் இல்லை எனினும் மற்ற எல்லா அக்கிர்மங்களும் இருப்பதும் உண்டு. என் உறவினர் ஒருவர், என் தந்தை வயது அவருக்கு, வாழ்வில் என்ன கசப்போ, மொடாக் குடியராக இருந்தார். எந்த மனக்கவலைக்கும் மது ஒரு தீர்வு அல்ல என்பதை நான் அறிவேன். எந்த லாகிரி மெட்டீரியலில் அடைக்கலம் தேடுவதும் மனிதன் என்னும் தகுதிக்கே கேவலம் என்று எண்ணுபவன் நான். வாழ்வின் பிரச்சனைகளைக் களையும் தீர்வு நம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் பேரமைதியான ஆனந்தம் மட்டுமே என்பது என் கொள்கை. அந்த வகையில் என்னுடைய அந்த உறவினர் மீது எனக்குப் பரிதாபம் இருந்தது. கவனிக்கவும், பரிதாபம் மட்டுமே இருந்தது. ஏனெனில் அவர் நல்லவர். அடுத்தவன் சொத்துப் பங்கை அபகரிப்பதற்காக அல்லும் பகலும் சிந்திப்பவர் அல்ல. அவர் பாட்டுக்குத் தானுண்டு தன் குடி உண்டு என்றிருந்தார், கடைசி வரை. குடித்துவிட்டு யாரையும் வாய்க்கு வந்தபடித் திட்டியதில்லை அல்லது தெருவில் போகும் பெண்களை வம்பிழுத்ததில்லை.

எனவே, “குடி போதையில் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரன்” என்று தினத்தந்தியில் வரும் செய்தியை வைத்துக்கொண்டு குடிப்பவன் எல்லாம் கட்டாயம் கற்பழிப்பான் என்ற ஒரு கருத்தை உருவாக்கி, மேலே நான் சொன்னவர் கற்பழிப்பார் என்று நான் நினைக்க முடியுமா? அல்லது கற்பழிப்பவன் எல்லாம் குடிகாரனாகத்தான் இருந்தாக வேண்டும் என்று எண்ண முடியுமா? அல்லது, குடிப்பழக்கம் இல்லாதவன் காமுகனாக இருக்கவே மாட்டான் என்று சொல்ல முடியுமா?

இதையெல்லாம் சொல்வது எதற்கெனில், வெளிக் கோலத்தை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது என்பதற்குத்தான். மோசமானவர்கள் என்று நாம் நினைக்கும் நபர்களுக்குள் உன்னதங்கள் ஒளிந்து கிடக்கலாம். உன்னதமானவர்கள் என்று நாம் வியக்கும் நபர்களுக்குள் வக்கிரங்களும் மனப் பிறழ்வுகளும் குடியிருக்கக் கூடும். ழீன் ழெனெ சொல்வது இங்கே நியாபகம் வருகிறது: “I recognize in thieves, traitors and murderers, in the ruthless and the cunning, a deep beauty – a sunken beauty”

மீண்டும் சிபிஎஸ்சி பாடநூல் சர்ச்சைக்கு வருவோம்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதில் நிறைய உட்சிக்கல்கள் இருப்பதும் விளங்கும். ஒரு பொருளை சைவம் என்றோ அசைவம் என்றோ தரம் பிரிப்பதில் மொத்த இந்தியாவிலும் ஒரே அளவுகோல் இல்லை. இதர மாநிலங்களில் மீன் அசைவம் என்றால் மேற்கு வங்கத்தில் சைவம். அங்கே பிராமணர்களே மீன் சாப்பிடுவார்கள். ராமகிருஷ்ண பரமஹம்ஸரே மீன் சாப்பிட்டிருக்கிறார். அவர் பிராமணர்தான்.

சிபிஎஸ்சி பாடநூலின் படிக்கு மீன் சைவமா அசைவமா என்று தெரியவில்லை. அசைவம் எனில் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு போலிச் சாமியார் என்று சொல்லலாமா? M பதிவுசெய்துள்ள பாரநூலான ‘The Gospel of Sri Ramakrishna’ வெறும் குப்பை என்று தள்ளிவிட முடியுமா?

மட்டுமல்ல. வேதகால ரிஷிகள் மாம்ச உணவு சுவைத்தவர்கள்தான். சைவ உணவு முறை என்பதே புத்தரின் போதனைகளுக்குப் பின்னர்தான் இந்து மதத்தில் வரித்துக் கொள்ளப்பட்டது. எனில், ஞானம் இலங்கும் மகா வாக்கியங்களைத் தன்னுள் கொண்ட வேதங்களையும் வேதமுடிவுகளான உபநிஷத்துக்களையும் புளுகு மூட்டைகள் என்று சொல்லிக் கொளுத்தி விடலாமா?

விஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமான ராமரும் கிருஷ்ணரும் சத்திரியர்கள் என்பதும் அவர்கள் புலால் உண்பவர்கள் என்பதும் உண்மை அல்லவா? (ராமன் மாம்சமும் மதுவும் உண்டதாக வால்மீகி ராமாயணம் சொல்வதன் அடிப்படையில்.) எனில், வேதசாரம் என்றழைக்கப்படும் கண்ணனின் வாய்மொழியான ‘பகவத் கீதை’ பொய்நூல் என்று சொல்வதா?

இப்படியெல்லாம் பல சிந்தனைகள் வந்தாலும், சிறுவர்கள் சொல்லும் ஒரு தர்க்க விளையாட்டும் நியாபகம் வந்தது:
”ஔவையார் சொல்கிறார் ‘கிழவிகளை நம்பாதே’”
புரிகிறதா?
ஔவையார் ஒரு கிழவி. எனவே அவரை நம்பக்கூடாது. எனவே ‘கிழவிகளை நம்பாதே’ என்பது பொய்; ‘கிழவிகளை நம்பு’ என்பது உண்மை. எனில் ஔவையாரை நம்பவேண்டும். அவர் சொல்கிறார் ‘கிழவிகளை நம்பாதே’... இப்படியே சுத்திக் கொண்டிருக்கும்.

சிபிஎஸ்சியில் புலால் உணவு பற்றி எழுதப்பட்டிருக்கும் பாடமும், அதை நான் ஏற்றுக்கொள்ளும் கணமே இப்படித் தன்னிலேயே இறந்துபடும் தர்க்கத்தைக் கொண்ட ஒரு தற்கொலை வாக்கியம் ஆகிவிடும்.

நான் Non-Vegetarian. ‘புலால் உண்பவன் பொய் சொல்வான்’ என்று நானே சொன்னால் அது ஒரு முரண் ஆகிறது. அதன்படி நான் சொல்வது பொய். எனவே, ‘புலால் உண்பவன் உண்மையே சொல்வான்’ என்றாகிறது. அதன்படி நான் சொல்வது உண்மை. அப்படியானால் ‘புலால் உண்பவன் பொய் சொல்வான்’. அதன்படி Non-vegatarian ஆகிய நான் சொல்வது பொய். எனவே ’புலால் உண்பவன் உண்மையே சொல்வான்’ இப்படிச் சுற்றிக் கொண்டே இருக்கலாம்.

எனவே இந்த புல்ஷிட் பாடநூலை அப்படியே விட்டுவிட்டாலும் பாதகமில்லை. ஏனெனில் பாடநூல்தான் நம் வாழ்க்கையை உருவாக்குகிறது என்னும் நிலை இங்கே இல்லை. இருக்கவும் முடியாது. வாழ்க்கை என்னும் பாடநூல் என்ன பாடத்தைக் கற்றுத் தருகிறதோ அதைத்தான் நாம் நம்புகிறோம்.

என் கண் எதிரில் நான் எத்தனையோ பேரை நாளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எல்லா அயோக்கியத்தனமும் அராத்தும் செய்பவர்கள் எல்லா வகையறாக்களிலும் இருக்கிறார்கள். அதேபோல், நன்மக்களும் எல்லா வகையறாக்களிலும் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பொது அடையாளத்தைச் சுட்டி, ‘இவர்களே இப்படித்தான்’ என்று நன்மையாகவோ தீமையாகவோ சான்றளிப்பதெல்லாம் ஒரு பேச்சு சுவாரஸ்யத்திற்காகப் பிதற்றப் படுவனவே அன்றி நிஜமல்ல.

எல்லாத் துலுக்கனும் தின்னு கெட்டவன் என்பது உண்மை அல்ல. தின்னு கெட்டவர்கள் எல்லா மதத்திலும், சாதியிலும் உண்டு.
எல்லாப் பாப்பானும் கணக்கிலே சூரப்புலி என்பதோ கற்பூர புத்தி கொண்டவன் என்பதோ உண்மை அல்ல. தர்ப்பையைக் கொளுத்திப் போட்டாலும் பற்றிக்கொள்ளாத மூளைகள், எல்லா மத்திலும் இருப்பது போலவே, அங்கும் உண்டு.
எல்லா நாயக்கனும் முட்டாள் அல்ல. இது என்ன லாஜிக் என்றே எனக்குப் புரியவில்லை. ஏனெனில் முட்டாள்கள் எல்லா வகையறாக்களிலும் உண்டு.
எல்லாச் செட்டியாரும் கஞ்சனாகத்தான் இருந்தாக வேண்டும் என்று விதி அல்ல. கஞ்சப் பிசுநாறிகள் எல்லா வகைகளிலும் உண்டு.

இதைத்தான் நடைமுறை வழங்கும் பாடம் என்று சொல்கிறேன். இன மத தேசிய சாதிய அடையாளங்களாகச் சொல்லப்படுவதை வைத்துத் தனி மனிதர்களை எடை போடக் கூடாது என்னும் பாடத்தை நம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவோம். அதுவே அவர்களுக்கு நாம் உடனடியாக வழங்க வேண்டிய மாற்றுப் பாடம் ஆகும்.

Sunday, November 18, 2012

Cockatoo



பெண்களுக்கு இயல்பாகவே உள்ளுணர்வு கொஞ்சம் ஜாஸ்தி என்று உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அவர்களை இறைவன் introvert-களாகப் படைத்திருக்கிறான். இது உண்மை என்பதை மீண்டும் மீண்டும் அடியேனின் பொஞ்சாதி எண்பித்துக் காட்டி வருகிறாள்.

கண்களுக்கு அவள் மை தீட்டுவதைப் பார்க்கும் போதெல்லாம் ”மை போட்ட கண்ணழகி” என்று டீசுவேன். (உண்மையில் eve-teasing என்பது கணவன் தன் மனைவியைச் செல்லமாக கேலி செய்வதுதான். ஏனெனில் ஆதாம்-ஏவாள் இருவரும் தம்பதிகள். எவ்வுறவும் அல்லாத, ’all Indians are my brothers and sisters (except x) என்னும் தேசிய வாக்குறுதியின்படி சகோதரியாய் இருக்கும் வாய்ப்பமைந்த பெண்ணை டீஸ் செய்வதை எப்படி ஈவ் டீசிங் என்பது? வேண்டுமானால் fem-teasing என்று சொல்லிக் கொள்ளலாம்.

‘மை போட்ட கண்ணழகி’ என்பது ஏதோ புஷ்பவனம் குப்புசாமியின் பாடல் பாணியிலான வருணனை என்று மட்டும் நினைக்க வேண்டாம். சமயப் பின்னணியில் இதற்கொரு விளக்கம் உள்ளது. ’கண்ணழகி’ என்பது குர்ஆனில் சொர்க்கக் கன்னிகளைக் குறிக்கும் பெயர் – ஹூருல் ஈன். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்த பதிவிரதைகள் மறுமையில் சொர்க்கத்தில் நித்ய கன்னிகளாக இருப்பார்கள் என்பதொரு ஐதிஹ்யம். (சொர்க்கக் கன்னிகள் வேறொரு தனிப் படைப்பு என்ற பார்வையும் உண்டு.) சதிவிரதர்களாக (சதி என்றால் மனைவி என்று பொருள். சூழ்ச்சி என்று அர்த்தம் அல்ல. ஆனால் சதி(1)விரதர்கள் சதி(2)விரதர்களாக இருப்பதும் உண்டு என்பதைத் தமிழனாய்ப் பிறக்கும் பேறு பெற்ற எவரும் தினத்தந்தியில் ஒரு பெர்சனல் சர்வே செய்து அறிந்து கொள்ளலாம்.) தொடர்ச்சி – சதிவிரதர்களாக இருப்பவர்கள் மறுமையில் கண்ணழகர்களாய் இருப்பார்களா என்பது தெரியவில்லை. இயல்பாகவே, ஆண்களின் கண்களுக்கு அழகு கொஞ்சம் கம்மிதானே?

இனி மை பற்றிய இனிமையான விளக்கம். மைபோட்டுப் பார்ப்பது என்று சொல்வார்கள் அல்லவா? நகை, வெள்ளாடு, குண்டான் கிண்டான் காணாமல் போய்விட்டால் மந்திர திருஷ்டியால் கண்டறிந்து சொல்பவர்கள் இருக்கிறார்கள். வெற்றிலையில் மை போட்டுப் பார்ப்பார்கள். யுவன் சந்திரசேகர் இதை வைத்து அற்புதமான சிறுகதை ஒன்று எழுதியிருக்கிறார் (நூல்: ’ஏற்கனவே’) அதில் ஒரு சாஹிப் வெற்றிலையில் மை போட்டுப் பார்ப்பார். அவருக்கு கஸ்டமரின் கடந்த கால சம்பவங்கள் live telecast-ஆகத் தெரியும். காலத்தைப் பொருத்தவரை அதை ஒருவகையில் நேரடி ஒளிபரப்பு என்று சொல்லலாம் எனினும் தன்மையைப் பொருத்தவரை அதை ஹைலைட்ஸ் என்றுதான் சொல்ல வேண்டும். விவகாரமாகத்தானே அவரைத் தேடி வந்திருக்கிறார்கள்? எனவே அவன் செய்த தப்புக்களைக் காட்டிக் கொடுக்கும். இப்படிக் குடிசைக்குள் அமர்ந்த படியே ஜேம்ஸ் பாண்ட் வேலையைச் செய்து முடித்துவிடும் சில மாந்த்ரீகர்கள் மிகச் சொற்ப தட்சணையாக 007 ருபாய் மட்டும் வைத்தால் போதும் என்பார்களாம்.

’மை போட்ட கண்ணழகி’ என்று நான் சகதர்மினியை சொன்னதற்கு இதுவும் ஒரு காரணம். என் மனத்தில் உள்ள எதையும் நான் அவளிடமிருந்து மறைத்துவிட முடியாது. அவள் பார்வைக்கு எக்ஸ்ரே சக்தி இருக்கிறதோ என்பது போல் ‘என்ன விஷயம்? சொல்லுங்க’ என்று ஆரம்பித்துவிடுவாள். ஒன்றுமில்லை என்றாலும் நம்ப மாட்டாள். ‘இன்னிக்குக் காலேஜ்ல என்ன நடந்தது?’ என்று தொடங்கி நாலைந்து கேள்விகளில் பூனை வெளியே வரும்படிச் செய்துவிடுவாள். என் மன அலைவரிசையில் லேசான பிசகு இருந்தாலும் கண்டுபிடித்துவிடும் டிடெக்டர் அவளின் மனம். ஆனால் இதெல்லாம் ஓர் அபூர்வ சக்தியே கிடையாதாம். நம் முகமே சொல்லிவிடுமாம். முயல் பிடிக்கும் ராஜபாளையத்தை மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுமாம்!

இத்தனையும் சொன்னதற்கு இன்னொரு நிகழ்ச்சி காரணம். என் வீட்டுக்குப் பின்னால் உள்ள என் உறவினர் ஒருவர் பறவைப் பிரியர். சாப்பிடுவதில் அல்ல, வளர்ப்பதில். இரண்டாண்டுகளுக்கு முன் மொட்டை மாடியில் ஒரு சின்ன பீரோல் சைஸில் டப்பாக்கள் வைத்துப் புறா வளர்த்து வந்தவர் இப்போது மொட்டை மாடி முழுவதையும் வளைத்துக் கட்டி லார்ஜ் ஸ்கேலில் பலவகைப் பறவைகளை வளர்த்து வருகிறார். அவர் வீட்டு பெட்ரூமில் மின்சாரத்தில் இயங்கும் இன்க்யுபேட்டர் ஒன்று வைத்திருந்தார். அதற்குள் நான்கு முட்டைகள் இருந்தன. கேட்டபோது அவை புறா முட்டைகள் என்றும், குஞ்சு பொறித்து வந்ததும் ஒருமாதம் பாதுகாத்து வளர்த்தால் சந்தையில் ஒரு புறா இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்குப் போகும் என்றும் சொன்னார். அவ்வளவு விலை கொடுத்தா புறாவை வாங்குவார்கள்? என்று நான் வாய் பிளந்து கேட்டேன். அவையெல்லாம் ஏதோ ஸ்பெஷல் ஜாதிப் புறாக்களாம். அதுவே குறைந்த விலை என்றும் மார்க்கெட்டில் ஏக கிராக்கி இருப்பதாகவும் சொன்னார். புறாவிற்கு இப்படியொரு சந்தை மதிப்பு இருப்பது தெரிந்திருந்தால், “ஒரு புறாவுக்காகப் போரா? ஒரே அக்கப்போராக இருக்கிறதே?” என்று 23-ஆம் புலிகேசி வசனம் பேசியிருக்க மாட்டான் என்று தோன்றிற்று.
மேற்படி பறவைப் பிரியர் / வியாபாரி வெண்கிளி ஒன்று வாங்கி வைத்தார். பச்சைக் கிளியின் அழகோ நளினமோ அதனிடம் இல்லை. ராட்சத சைஸில் வெள்ளை வெளேறென்று இருந்தது. கருஞ்சாம்பல் நிறத்தில் தடித்த அலகு. தலையில் நாலைந்து இறகுகள் விசிறி போல் இருக்கின்றன. முதலில் பார்த்தபோது அது ஓர் ஆந்தை என்றே நினைத்தேன். உற்றுப் பார்த்தபோதுதான் சர்க்கஸில் சைக்கிள் ஓட்டும் பறவை என்று தெரிந்தது. அதன் பெயர் என்னவோ காக்கெட்டூ என்று சகதர்மினி சொன்னாள்.

என் வீட்டின் பின் பால்கனியில் இருந்து பார்த்தால் பத்தடித் தொலைவில் தெரிவது போல் அதற்கொரு கூண்டு அமைத்துவிட்டார் பறவைக்காரர். பார்த்து ரசிக்கலாமே, கொஞ்சிப் பேசலாமே என்று நினைத்த ரசனையில் அந்த வெண்கிளியே மண் அள்ளிப் போட்டது. ஆமாம், நாள் தவறாமல் காலையில் ஏழு மணியிலிருந்து ஒன்பது மணி வரை இரண்டு மணிநேரம் கத்திக் கதறுகிறது. ‘கிளிப்பேச்சு கேட்கவா’ என்று படமெடுத்தாரே ஃபாசில். இந்தக் கிளியின் பேச்சை ஒருவாரம் கேட்டிருந்தால்கூட அப்படி ஒரு படமே எடுத்திருக்க மாட்டார். அப்படி ஒரு அசுர சாரீரம் அதற்கு. பன்றியைப் போலவும் சில சமயம் அடிபட்ட தெருநாயைப் போலவும் கத்துகிறது. கத்துகிறது என்று சொல்வது கூட மரியாதையான வார்த்தை என்றே சொல்ல வேண்டும். ‘கத்தும் குயிலோசை’ என்றானே பாரதி. அந்தக் கத்தலெல்லாம் இதனிடம் பிச்சை வாங்க வேண்டும். அப்படிக் கதறுகிறது. தண்ணி அடித்துவிட்டுப் பேசும் அரசியல் தொண்டனின் குரல் கணக்காக இருக்கிறதே என்று நொந்து போனேன். கேட்டுக் கேட்டுத் தலையெல்லாம் வலிக்கிறது என்று சகதர்மினி சொன்னாள். பாவம், கிச்சனில் அவள் வகையாக மாட்டிக் கொண்டாள். ட்யூட்டி நேரத்தில் காக்கட்டூவின் காட்டுக் கதறலை அவள் கேட்டே அகவேண்டியிருக்கிறது.

நான்கு நாட்களுக்கு முன் ஒரு காட்சி. அந்த வெண்கிளியை கொண்டு வந்து வீட்டின் முன் பால்கனியில் வைத்திருந்தார்கள். அது பாட்டுக்கு சும்மா உட்கார்ந்திருந்தது. என் சின்னம்மா வீட்டிலிருது நாங்கள் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தோம். எல்லோரும் கிளியை வேடிக்கை பார்த்தார்கள். ‘பறந்து போய்டாதா?’ என்று என் பாட்டி கேட்டார். அப்போது சகதர்மினி சொன்னாள்: ‘வாய் கிழியக் கத்தத்தான் தெரியும். பறக்காது.’

இது ஏதோ எனக்கு அசரீரி போல் ஒலித்தது! அடியேனின் ஆன்மிக நிலையை அல்லாஹ் அவளின் வார்த்தைகள் வழியே குறிப்புக் காட்டுகிறான் என்பது போல் தோன்றிற்று.