Tuesday, November 4, 2025

ரகசியங்களின் ரகசியம் - 1

 


டான் ப்ரவ்ன் எழுதிய நாவலான “தி சீக்ரட் ஆஃப் சீக்ரட்ஸ்” (ரகசியங்களின் ரகசியம்)-ஐ  மூன்று நாட்களாக வாசித்து இன்று (30-10-2025) காலை பதினோரு மணிக்கு முடித்தேன். இது அவரின் ஒன்பதாம் நாவல் என்பதால் 9-9-2025 அன்று வெளியீடு என்று திட்டமிட்டு அப்படியே வெளியானது.  என் பிறந்த நாளுக்கான ’அட்வான்ஸ்’ பரிசாக 14-தேதி சுடச் சுட பானுவிடமிருந்து கிடைத்தது.

            டான் ப்ரவ்ன் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் நாவல் எழுத்தாளர்தான். அவரின் நாவல்கள் 57 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன என்கிறார்கள். தமிழிலிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் எழுத்துக்களை நான் விரும்புவதால் ஆங்கிலத்தில்தான் படிக்கிறேன். 



            டான் ப்ரவ்ன் இதுகாறும் ஒன்பது நாவல்களும் ஒரு சிறார் நூலும் எழுதியுள்ளார். நான் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். வெளியான கால வரிசைப்படி அவர் எழுதிய நூல்களின் பட்டியல் இது:

1.      டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் (1998)

2.      ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் (2000)

3.      டிசெப்ஷன் பாய்ண்ட் (2001)

4.      தி டா வின்சி கோட் (2003)

5.      தி லாஸ்ட் சிம்பல் (2009)

6.      இன்ஃபர்னோ (2013)

7.      ஆரிஜின் (2017)

8.      வைல்டு சிம்ஃபனி (2020)

9.      தி சீக்ரட் ஆஃப் சீக்ரட்ஸ் (2025)


 

இந்த ஒன்பது நூற்களில் ’வைல்டு சிம்ஃபனி’ என்பது சிறுவர்களுக்கான நூல். டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் மற்றும் டிசப்ஷன் பாய்ண்ட் ஆகியவை ‘தனித்த’ நாவல்கள் (Stand alone novels). ஏனைய ஆறு நாவல்களும் “ராபர்ட் லாங்டன்” (Robert Langdon Series) என்று அடையாளம் பெறுகின்றன. “குறியியலாளர்” (symbologist) ஆன, ஹார்வார்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் லாங்டன் இந்த நாவல்களின் கதாநாயகன்.

இதில் சில நாவல்கள் பற்றியும், வைல்டு சிம்ஃபனி நூல் பற்றியும் ஏற்கனவே சில கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். “டான் ப்ரவ்ன் பற்றி தமிழில் பரவலாக அறியக் கிடைக்கவில்லை. ஒரு சில கட்டுரைகள் மட்டுமே கண்ணில் பட்டன. நீங்கள் அவரின் எல்லா நூல்களையும் வாசித்திருக்கிறீர்கள். அவரைப் பற்றி நீங்கள் ஒரு நூல் எழுத வேண்டும்” என்று எழுத்தாளரும் பேராசிரியருமான நண்பர் அதங்கோடு அனிஷ்குமார் சென்ற மாதம் என்னிடம் வலியுறுத்தினார். இன்று மாலை வாக்கிங் போய்க் கொண்டிருந்தபோது கைப்பேசியில் அழைத்து ‘இப்போ என்ன படிச்சுக்கிட்டிருக்கீங்க?’ என்று கேட்டார். இன்றுதான் TSOS முடித்தேன் என்று சொன்னதும் மீண்டும் வலியுறுத்தினார்: “டான் ப்ரவ்னை நாம் ஏன் வாசிக்க வேண்டும் என்பது பற்றி எழுதுங்கள்.”

டான் ப்ரவ்ன் பற்றி ஒரு தனி நூலெல்லாம் எழுதும் எண்ணம் எனக்கு இல்லை. அவரின் நூல்கள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் ஏன் வாசிக்கிறேன்? ஒரு நூலை அல்லது எழுத்தாளுமையை நாம் தொடர்ந்து வாசிப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ’தி டா வின்சி கோட்’ வெளியான நாளில் இருந்து கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக நான் டான் ப்ரவ்ன் நாவல்களைத் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். ஆனால் அவரின் எந்த நாவலையும் மீண்டும் மீண்டும் வாசித்தது கிடையாது. இதில்தான், அவரைப் பற்றி ஒரு நூல் எழுதும் எண்ணமெல்லாம் தோன்றவில்லை என்பதற்கான பதில் இருக்கிறது. டான் ப்ரவ்ன் என் மதிப்பீட்டில் ஒரு சுவாரஸ்யமான எழுத்தாளர். ‘பிரதி தரும் இன்பம்’ (Pleasure of the text) என்பது அவரின் நூல்களில் நிச்சயம் (எனக்குக்) கிடைக்கிறது. முதன்மைக் காரணங்களில் அதுவும் ஒன்று என்பதை மறுக்க முடியாது. ஆனால், பரவலாக வாசிக்கப்படும் எல்லோருடைய நூல்களிலும் இந்த அம்சம் இருக்கத்தானே செய்யும்? சேட்டன் பகத்தின் நாவல்களில் இருக்காதா? ஜான் கிரீனின் நாவல்களில் இருக்காதா? என் மகள் சுவாரஸ்யத்துடன் வாசிக்கும் இந்த எழுத்தாளிகளை எனக்குக் கையில் எடுத்துப் பார்க்கவும் தோன்றவில்லை.

டான் ப்ரவ்ன் நாவல்களை வாசிப்பதற்கான வேறு காரணங்களில் ஒன்று அவரின் நாவல்களில் கையாளப்படும் குறியீட்டியல். குறிப்பாக, ஐரோப்பிய கிறித்துவ வரலாற்றின் உள்மடிப்புகளை வெளிச்சமிட்டுக் காட்டும் குறியீடுகளை அவரின் பிரதிகள் கண்ணழித்துக் காட்டுகின்றன. அடுத்து, அவரின் கதைகளில் ஆன்மிகமும் நவீன அறிவியலும் சந்திக்கும் புள்ளிகள் பேசப்படுகின்றன. அடுத்து, அவரின் கதாநாயகன் பேராசிரியர் ராபர்ட் லாங்டன் என்னும் பாத்திரம்.

டான் பரவ்னின் நாவல்களில் சமயக் குறியீடுகள் பற்றி அதிகம் பேசப்படுவதால் அவை தொடர்பான ஆளுமைகளையும் நூல்களையும் அவர் குறிப்பிடுகிறார். எனவே, அவற்றை வாசிக்கவும் தூண்டப்பட்டு நான் வாங்கி வாசித்த நூற்கள் என்று ஒரு பட்டியல் உள்ளது. அவற்றில் சில நூற்களைக் கடைசியில் சொல்கிறேன்.

            டான் ப்ரவ்னின் நாவல்களில் இருந்து ’கருத்து மேற்கோள்கள்’ சமூக ஊடகங்களில் அவரின் வாசகர்களால் தொடர்ந்து காட்டப்பட்டு வருகின்றன. அவரே அப்படிப்பட்ட கருத்துக்களை எழுதியிருக்கிறார் என்பதுடன் கலை, சமயம், அறிவியல், அரசியல் முதலிய துறைகளின் ஆளுமைகள் சொன்ன கருத்துக்களையும் தன் நாவல்களில் ஆங்காங்கே குறிப்பிடுகிறார். அவர் ஒரு நாவலை எழுதுவதற்கு எவ்வளவு மெனக்கெட்டுப் பரவலாகவும் ஆழமாகவும் வாசிக்கிறார் என்பதை இது காட்டுகிறது.


            
TSOS நாவலும் அப்படியான ஒரு மேற்கோளுடன்தான் ஆரம்பமாகிறது. அது நவீன விஞ்ஞான உலகின் ’ராட்சஸ’ மேதையான நிக்கோலா டெஸ்லாவின் கருத்து: ”விஞ்ஞானம் மீப்பொருளியல் நிகழ்வுகளை ஆராய ஆரம்பிக்கும் நாளில் அது முந்தைய நூற்றாண்டுகள் அனைத்திலும் அடைந்ததை விட அதிக முன்னேற்றத்தை அடையும்.”

            அப்படியான ஒரு மீப்பொருளியல் ஆய்வைப் பற்றித்தான் இந்த நாவல் பேசுகிறது. ஆனால், இது கொலைகளும் சண்டைகளும் தப்பித்து ஓடுதலும் என்று விறுவிறுப்பாகச் செல்லும் ஒரு த்ரில்லர் நாவல்! டான் ப்ரவ்னின் தனித்தன்மையான பாணியே இதுதான். டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் மற்றும் டிசப்ஷென் பாய்ண்ட் ஆகியவற்றில் நவீன விஞ்ஞானத் துறைகளில் நிகழும் conspiracies கதைச் சிக்கலாக அமையும். இதற்கு முன் அவர் எழுதியுள்ள ராபர்ட் லாங்டன் வரிசையின் முதல் மூன்று நாவல்களில் கிறித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இல்லுமினாட்டி, ஓபஸ் டெய், ஃப்ரீமேசன்ஸ் ஆகிய ரகசிய அமைப்புகளும் அவை சார்ந்த குறியீட்டுச் சிக்கல்களும் கதையை முன்னகர்த்திச் சென்றன. இன்ஃபெர்னோ மற்றும் ஆரிஜின் ஆகிய நாவல்களில் நவீன விஞ்ஞானத்திற்கும் சமயத் தொன்மத்திற்குமான மோதலே கதையின் முரணியக்கமாக அமைந்தது. அந்த வரிசையில் தி சீக்ரெட் ஆஃப் சீக்ரட்ஸ் நாவலை மூன்றாவதாக வைத்துப் பார்க்க முடிகிறது.

            டான் ப்ரவ்ன் தன் நாவல்களில் சமயம், கலை, மற்றும் விஞ்ஞானம் சார்ந்த பல்வேறு அமைப்புகளைச் சுட்டிக் காட்டுகிறார். அவற்றில் சில ரகசியமாக இயங்குபவை, அல்லது ரகசிய முகமும் உள்ளவை ஆகும். இந்த நாவலில் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ ஒரு ரகசியத் திட்டத்தைச் செயற்படுத்துவதாகக் காட்டியுள்ளார். அது மனிதனின் மூளை இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத் துறை ஆய்வு. அந்த ஆய்வு வெற்றி பெறும் பட்சத்தில் அதை அமெரிக்க ராணுவத்திற்கான ஆயுதமாகக் கையாளலாம் என்பது சிஐஏ-வின் திட்டம்.

            அப்படியெல்லாம் சிஐஏ-வை எதிர்மறையாகக் காட்டி அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் நாவல் எழுதிவிட முடியுமா? நிச்சயம் முடியாது. எனவே, டான் ப்ரவ்ன் ஒரு திருகு வைக்கிறார். சிஐஏ என்னவோ நல்ல திட்டம்தான் தீட்டிற்று. அதில் நேர்ந்த முறைகேடுகள் அதன் தலைமைக்குத் தெரியாமல் மறைவாக அதன் ஓர் அதிகாரி செய்தவை ஆகும். பாவம், அந்த அமைப்புக்கு இதெல்லாம் ஒன்றுமே தெரியாது! டான் ப்ரவ்னுக்கும் இப்படியான ஒரு டிபிக்கல் அமெரிக்கன் டிப்ளமஸி தேவைப்படுகிறது. நாவலிலேயே ஓரிடத்தில் செக் குடியரசுக்கான அமெரிக்கத் தூதரான ஹெய்டெல் நெகல் இப்படிச் சொல்கிறார்: “மனித பிரக்ஞையின் முழுத்திறனைக் கையாள்வதில் நாம் முதல் ஆளாக இருப்பதில்தான் அமெரிக்காவின் எதிர்காலமே இருக்கிறது என்று சிஐஏ-வின் இயக்குநர் தீவிரமாக நம்புகிறார். அணுவுக்குள் பொதிந்திருக்கும் அபரிதமான சக்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் முதன்முதலில் அனுமானித்தபோது அமெரிக்க அரசு ரகசியமான இயற்பியல் ஆராய்ச்சிகளுக்காக கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்தது, அதனால்தான் நாம் அணுக்குண்டை வைத்து எல்லோரையும் தோற்கடித்தோம் என்று எனக்கு நினைவூட்ட அவர் வெட்கப்படவில்லை. ஒருவேளை நாம் அதைச் செய்யாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ரஷ்யாவிடம் மட்டுமே குண்டு இருந்திருந்தால்? அல்லது ஜெர்மனியிடம்? அல்லது ஜப்பானிடம்?”

            ஆம், வேறு நாடுகளிடம் நவீன ஆயுதங்கள் இருந்தால் அது உலகத்துக்கே அச்சுறுத்தல் ஆகிவிடும். அமெரிக்காவிடம் இருந்தால்தான் அது உலகத்தையே காப்பாற்றும். ஏனெனில் அமெரிக்காதான் உலக அமைதிக்காகப் பாடுபடும் ஒரே நாடு. உலகத்துக்கான கதாநாயகன் அந்த நாடுதான், அல்லது அந்நாட்டின் அதிபர்தான். இந்த அடிக்கருத்து டான் ப்ரவ்னின் நாவல்களிலும் இருக்கிறது என்பது இந்த நாவலில் அப்பட்டமாகத் தெரிகிறது. இதுதான் இந்த நாவலில் நான் உணர்ந்த மிகப் பெரிய குறை.

            மற்றபடி, நாவலில் டான் ப்ரவ்ன் பல்வேறு உளவியல் மருத்துவக் கோட்பாடுகளை அறிமுகம் செய்து விளக்கும்போது வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். இந்த நாவலின் 110-ஆம் அத்தியாயத்தில் கதாநாயகி கேத்தரின் அடைந்த மனநிலை பற்றி ஒரு வரி எழுதுகிறார்: “A collage of concepts now flooded her mind.” நாவலைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிப் போடுவோம் என்று யோசித்த வேளையில் என் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. பட்டியல் கொடுத்தாலே மூச்சு முட்டும் போலுள்ளது.

            நாவலின் கதைப்பின்னலில் டான் ப்ரவ்ன் ஆழமான பல உளவியல் கோட்பாடுகள் பற்றிப் பேசுகிறார். மரணத்திற்கு நெருக்கமான அனுபவம் (NDE – Near Death Experience),  தேகாதீத / உடற்கடந்த / மீவுடல் அனுபவம் (OBE – Out of Body Experience), திடீர் வலிப்புத்தாக்கம் (epileptic seizure), பின்-வலிப்பு நிலை (Postictal State), ஒத்திசைவு (synchronization), இடைநிலை நினைவாற்றல் குறைபாடு (Interictal Memory Impairment)  ஆகியவை அவற்றில் சில. இது பற்றி அவர் தரும் சுவாரஸ்யமான விளக்கங்களைக் கட்டாயம் சொல்கிறேன்.

            இன்னொரு பட்டியல் தரலாம். இந்த நாவலில் டான் ப்ரவ்ன் ஆங்காங்கே சுட்டிக் காட்டியிருக்கும் நூல்கள். அவற்றில் சில நூல்களை வாசித்துப் பார்க்க வேண்டும் என்று வாசகர்கள் தூண்டப்படுவார்கள் என்பது திண்ணம். பட்டியல் இதோ:

1.      ”ஃப்யூட்டிலிட்டி” (நாவல், 1898) – மார்கன் ராபர்ட்ஸன்.

2.      “கோடக்ஸ் கிகாஸ்” – ஒரு கிறித்துவத் துறவி.

3.      “தி ஸ்ட்ரக்ச்சர் ஆஃப் சைன்டிஃபிக் ரெவல்யூஷன்ஸ்” (1962) – தாமஸ் குஹ்ன்.

4.      ”லைஃப் ஆஃப்டர் லைஃப்” (1975) – ரேமண்ட் மூடி.

5.      “ஃபீலிங் தி ஃப்யூச்சர்” (கட்டுரை, 2011) – டேரில் பெம்.

6.      ”தி ஐலாண்ட் ஆஃப் டாக்டர் மாரீ” (1896) – ஹெச்.ஜி. வெல்ஸ்.

7.      “தி த்ரீ ஃபேசஸ் ஆஃப் ஈவ்” (1967) – கார்பெட் ஹெச். திக்பென், மற்றும் ஹெர்வே எம். க்ளெக்லி.

8.      “ஸ்டேஞ்சர்ஸ் இன் மை பாடி” (1958) – ஈவ்லின் லான்சஸ்டர் மற்றும் ஜேம்ஸ் பாலிங்.

9.      “சிபில்” (1973) – ஃப்ளோரா ரெட்டா ஷ்ரைபர்.

10.   “தி ஸ்ட்ரேஞ் கேஸ் ஆஃப் டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைட்” (1886) – ராபர்ட் லூயில் ஸ்டீவன்ஸன்.

மேற்சொன்ன பட்டியலே தவிர 85-ஆம் அத்தியாயத்தில் உள்ள இந்தப் பத்தியிலும் மீவுளவியல் தொடர்பான அறிஞர்களையும் நூல்களையும் சுட்டிக் காட்டுகிறார்: “ஹரால்ட் புத்தாஃப், ரஸ்ஸல் டார்க், எட்வின் மே, டீன் ராடின், ப்ரெண்டா டன், ராபர்ட் மாரிஸ், ஜூலியா மாஸ்ப்ரிஜ், ராபர்ட் ஜாஹ்ன் மற்றும் பல மதிப்புமிக்க அறிவாளுமைகள் ப்ளாஸ்மா இயற்பியல், நான்லீனியர் கணிதவியல், பிரக்ஞை மானுடவியல் போன்ற பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க கண்டறிதல்களை நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் எழுதிய பிரபலமான நூல்களுக்கு லிமிட்லெஸ் மைண்ட், ரிமோட் பெர்சப்ஷன்ஸ், தி செவென்த் சென்ஸ், அனோமலஸ் காக்னிஷன், மற்றும் ரியல் மேஜிக் போன்ற தலைப்புகள் இடப்பட்டுள்ளன.”

இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்களில் டீன் ராடின் என்னும் பெயரை நான் கரிக்கோலால் அடிக்கோடு இட்டு வைத்தேன். அவரின் “தி நோயட்டிக் யூனிவர்ஸ்” (2009) மற்றும் “சூப்பர்நார்மல்” (2013) ஆகிய இரண்டு நூல்களை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். எனக்குப் பிடித்தமான விஞ்ஞானிகளில் அவரும் ஒருவர். அவர் கலிஃபோர்னியாவில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் நோயட்டிக் சைன்சஸ் என்னும் நிறுவனத்தில் ஆராய்ச்சி இயக்குநராகப் பணியாற்றும் மீவுளவியலாளர் ஆவார். ரியல் மேஜிக் என்பது அவர் எழுதிய இன்னொரு நூல்.

தி நோயட்டிக் யூனிவர்ஸ் என்னும் அவரின் நூலினை நான் வாங்கி வாசிக்கத் தூண்டுதலாக இருந்தது டாக்டர் ருத்ரன் எழுதிய “தேடாதே” என்னும் சிறிய நூல். அந்த நூல் உருவாக மூல காரணம் ஓஷோவின் “தி செர்ச்” என்னும் நூல்! அது ஜென் ஆன்மிக மரபில் உள்ள “ஜென்னின் பத்து எருதுகள்” என்னும் குறியீட்டுப் படத்தின் விளக்கவுரை ஆகும். ஒவ்வொரு எருதும் மனிதப் பிரக்ஞையின் ஒரு நிலையைச் சுட்டுகின்றது. அதில் நோயசிஸ் மற்றும் யூனியோ மிஸ்டிக்கா ஆகிய இரண்டும் சூப்பர் கான்சியஸ்னெஸ் என்னும் உயர் பிரக்ஞை நிலைகளாகும் [ஓஷோவின் மேலும் இரண்டு நூல்கள் நினைவுக்கு வருகின்றன. ஸூஃபி ஞானி ஹகீம் சனாயி எழுதிய ஹதீக்காவின் சில கவிதைகளை விளக்கி அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பான ’யூனியோ மிஸ்டிக்கா’, மற்றும் இந்தியச் சமூக்த்தில் மிகப் பெரிய அதிர்ச்சியை அக்காலத்தில் உண்டாக்கி அவரை எல்லோரும் காமச் சாமியார் என்று அழைக்கக் காரணமாய் இருந்த ‘செக்ஸ் டூ சூப்பர் கான்ஷியஸ்னெஸ்’ (தமிழில் ஸ்வாமி மோகன் பாரதி இதற்கு ‘காமத்தில் இருந்து கடவுளுக்கு’ என்று தலைப்புக் கொடுத்தார்.) டான் ப்ரவ்னின் நாவலில் ஓரிடத்தில் ராபர்ட் லாங்டனிடம் கேத்தரின் சொல்கிறாள்: “மீவுடல் அனுபவங்கள் பற்றிய நோயட்டிக் பார்வையுடன் பாலுறவு மிக நெருக்கமாக ஒத்துப் போகிறது” (‘sex is closely related to the noetic view of out-of-body experiences.’ P.419.)].

மேலே உள்ள பட்டியலில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள ”ஃப்யூட்டிலிட்டி” என்னும் நாவல் பற்றிய செய்தி சுவாரஸ்யமானது. அதனை மார்கன் ராபர்ட்ஸன் 1898-ஆம் ஆண்டில் எழுதினார். அட்லாண்டிக் பெருங்கடலின் குறுக்காகப் பயணிக்கும் பெரிய கப்பல் ஒன்று பனிப்பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாவதுதான் நாவலின் கதை. இந்த நாவல் வெளியாகிப் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் டைட்டானிக் கப்பல் அதே பெருங்கடலில் அதே விதத்தில் விபத்துக்கு உள்ளானது. நாவலில் மார்கன் கப்பலுக்கு டைட்டன் என்று பெயர் சூட்டியிருந்தார்! நவீன மீவுளவியல் இதனை Precognition (முன்னறிதல்) என்றும் Titanic Premonition என்றும் கூறுகிறது.

தி சீக்ரட் ஆஃப் சீக்ரட்ஸ் என்னும் இந்த நாவலின் அடிப்படையாக அமைவது பொருள் முதல் வாதத்துக்கும் கருத்து முதல் வாதத்துக்குமான முரணியக்கம் அல்லது மோதல் என்று சொல்லலாம். இதன் அடிப்படையிலான விவாதமும் இந்த நாவலில் பரவலாக உண்டு. இந்த இரண்டு தரப்புக்கான பிரதிநிதிகளாக இரண்டு கதைமாந்தரை டான் ப்ரவ்ன் உருவாக்கிக் கொள்கிறார்: டாக்டர் ப்ரிகிட்டா கெஸ்னர் (பொருள்முதல்வாதி), மற்றும் டாக்டர் கேத்தரின் சாலமன் (கருத்துமுதல்வாதி; நோயட்டிக் விஞ்ஞானி.) இந்த இரண்டு பெண்களுக்கு இடைநிலையில் இருப்பவர் ப்ரொஃபஸ்ஸர் ராபர்ட் லாங்டன் என்னும் குறியியலாளர்.

மனிதப் பிரக்ஞையை இந்த இரண்டு தரப்புகளும் விளக்கும் போக்குகளின் முரண்பாடு இந்த நாவலில் “Materialism versus Noetics” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மனிதப் பிரக்ஞையும்  அதில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும், அது மீவியற்கையான மீவியற்பியலான நிகழ்வுகளாக இருந்தாலும் சரியே, முழுக்க முழுக்கப் பருப்பொருளியல் நோக்கிலேயே விளக்கப்பட்டுவிட முடியும் என்றும் அவை அனைத்தும் மூளையில் இருக்கும் நியூரல் வலைப்பின்னல் மற்றும் வேதியியல் மாற்றங்களால் உண்டாகுபவை மட்டுமே என்றும் பொருள்முதல்வாதம் கருதுகிறது. இதற்கு எதிராக நோயட்டிக்ஸ் துறையினர் தம் கருத்தை முன்வைக்கின்றனர்.  பிரக்ஞை என்பது மூளைச் செயற்பாடுகளால் உண்டாகும் ஒன்றல்ல. அது இடவெளி, காலம், மற்றும் சக்தி என்பது போல் பிரபஞ்சத்தின் அடிப்படையான ஓர் அம்சமாகும். மேலும், அது உடலுக்குள் கட்டுப்பட்டதுமன்று என்பது அவர்களின் பார்வை.

சிந்தனை அல்லது பிரக்ஞையே பருப்பொருளை உருவாக்குகிறது என்பது கருத்துமுதல்வாதம் அல்லது ஆன்மிகத்தின் பார்வை. இது மிகவும் பழமையான ஒன்றுதான். டான் ப்ரவ்ன் அதற்கான உதாரணங்களை ஓரிடத்தில் தருகிறார்:

“இந்தக் கருத்து – எண்ணங்களே எதார்த்தத்தை உருவாக்குகின்றன என்னும் கோட்பாடு – பெரும்பான்மையான ஆன்மிக போதனைகளின் மையக் கருவாக அமைந்திருக்கிறது.

புத்தர்: நம் எண்ணங்களால் உலகை உருவாக்குகிறோம்.

ஏசுநாதர்: பிரார்த்தனையில் நீ கேட்பது எதுவாயினும் அது உனதாகும்.

ஹிந்துயிசம்: இறையாற்றல் உள்ளவன் நீ.

இந்தக் கோட்பாடு நவீன முற்போக்குச் சிந்தனையாளர்களாலும் கலையுலக மேதைகளாலும் எதிரொலிக்கப்படும் ஒன்றுதான் என்பது லாங்டனுக்குத் தெரியும். வணிக குரு ராபின் ஷர்மா பறைசாற்றினார்: ஒவ்வொன்றும் இரண்டு முறை படைக்கப்படுகிறது; முதலில் மனத்தில், அடுத்து எதார்த்தத்தில். பாப்லோ பிக்காசோவின் மிகப் பிரபலமான மேற்கோள்: நீ கற்பனை செய்ய முடிந்த அனைத்தும் நிஜம்.” (ப.49)


இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகும் என்னும் வினாவுக்கு சமயங்கள் சொல்லி வந்த விடையையே நோயடிக் அறிவியல் தன் கோட்பாடாக முன் வைக்கிறது. அது பற்றி இந்நாவலில் கேத்தரின் சொல்கிறாள்: “இந்தக் கோட்பாடு Non-local Consciousness எனப்படுகிறது. ’பிரக்ஞை என்பது உங்கள் மூளையில் குறிப்பாக அமைந்திருக்கவில்லை (not localized in your brain)… ஆனால் அது எங்குமிருக்கிறது’ என்பதே அதன் கருதுகோள். அதாவது, பிரக்ஞை என்பது பிரபஞ்சம் முழுவதிலும் பரவியுள்ளது.” (ப.262).

அப்படியானால் மனித மூளையில் பிரக்ஞையே இல்லையா? என்று கேட்க வேண்டாம். டான் ப்ரவ்ன் அப்படிச் சொல்லவில்லை. மனித மூளை என்பது Clouds computing முறையில் இயங்கும் ஒரு செல்ஃபோன் மாதிரி என்று அவர் உவமை கூறி விளக்குகிறார். பிரபஞ்சமளாவிய பிரக்ஞை என்னும் மேகத்தில் (cloud) இருந்து அது தகவல்களை உள்வாங்கிக் கொள்கிறது. (ப.265)

இந்த பிரபஞ்சமளாவிய பிரக்ஞையை தொல் ஆன்மிக மரபுகள் பல்வேறு பெயரிட்டு அழைத்து வந்துள்ளன என்பதை லாங்டன் நினைவு கூர்கிறார்: ஆகாசவெளி [இதனைக் கடுவெளி என்று ஒரு சித்தர் பாடியுள்ளார். அவருக்குப் பெயரே கடுவெளிச் சித்தர்.], பிரபஞ்ச மனம், பிரபஞ்ச பிரக்ஞை, விண்ணுணர்வு [உணர்வு என்பது conscience, உணர்ச்சி என்பது emotion என்பார் தி.ந.ராமச்சந்திரன்.], மற்றும் கடவுளின் ராஜியம். (ப.265)

பிரபஞ்ச பிரக்ஞையில் இருந்து மனித மூளை தனக்கான பகுதியை உள்வாங்கிக் கொள்கிறது என்பதற்கு டான் ப்ரவ்ன் தரும் இன்னொரு உதாரணம் வானொலிப் பெட்டி. பல்வேறு ஒலிபரப்பு நிலையங்களின் ரேடியோ அலைகள் இடவெளியெங்கும் விரவியுள்ளன. அவற்றில் ஒரு குறிப்பிட்ட நிலையத்தின் அலைவரிசைக்கு வானொலிப்பெட்டி சுருதி (டியூன்) சேர்கிறது. அந்த ஒத்திசைந்த அதிர்வலை மட்டும் வானொலிப்பெட்டிக்குள் நுழைகிறது. அதைத்தான் வானொலிப் பெட்டி ஒலியாக மாற்றி வெளியிடுகிறது. மனித மூளை இந்த வானொலிப் பெட்டியைப் போல் இருக்கிறது. “மூளை ஒரு ரிசீவர் (அலைவாங்கி)… பிரக்ஞை உள்நோக்கிப் பாய்கிறது, வெளிநோக்கி அல்ல (The brain is a receiver... and consciousness flows in, not out.)” (ப.281)

                "Man with a Halo" - painting by Jean Michael Basquiat

  அறிவர், ஞானியர், இறைத்தூதர் போன்றோரைச் சித்திரிக்கும் ஓவியங்களில் அவர்களின் தலைக்கு மேல் வரையப்படும் ஒளிவட்டம் (halo) வரையப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். சில ஒளிவட்டங்கள் அதிலிருந்து எட்டுத் திசையிலும் பரவும் ஒளிச்சுடர்களையும் கொண்டிருக்கும். ஒளிவட்டம் குறித்து லாங்டனுக்கு கேத்தரீன் விளக்குகிறாள்: ”பொதுவாக ஒளிவட்டங்கள் என்பது ஞானியின் தலையிலிருந்து பிரக்ஞை வெளியே பாய்வதாக விளங்கப்படுகிறது. நாம் ஒளிவட்டத்தை நேர்மாறாக அர்த்தப்படுத்தி வருகிறோம். அந்த ஒளிச்சுடர்கள் பிரக்ஞையின் சுடர்களைக் குறிக்கின்றன… உள்நோக்கிப் பாய்பவை… வெளிநோக்கி அல்ல. ஒருவருக்கு ஞானமடைந்த மனம் இருக்கிறது என்று சொல்வதன் பொருள் அவருக்கு ‘சிறப்பான ரிசீவர்’ இருக்கிறது என்பதுதான்.” (ப.280)

இதை லாங்டன் சமயங்கள் கூறும் இறைத்தூதர்கள் பற்றிய செய்தியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார். அவர்கள் இறைவனிடமிருந்து செய்தியைப் பெறுகிறார்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் ரிசீவர்கள்தாம் (ப.280). இந்த விளக்கம் சரியாகத்தான் இருக்கிறது என்று அவர் ஒப்புக் கொள்கிறார்.

ப்ளாஸ்மா இயற்பியல், நான்லீனியர் கணிதவியல், மற்றும் பிரக்ஞை மானுடவியல் முதலிய நவீன அறிவியல் துறைகள் இந்தக் கருத்துக்களை மெல்ல மெல்ல நிரூபித்து வருகின்றன. சூப்பர் பொசிஷன் என்னும் கோட்பாடு சொல்கிறது: “எல்லாப் பொருட்களும் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் இருந்து வருகின்றன” (ப.266).

இந்நாவலில் கருத்துமுதல் வாதம் பேசப்படும் மேலும் சில இடங்கள்:

1.”உன் பிரக்ஞை உன் மூளையால் உருவாக்கப்படும் ஒன்றல்ல. வாஸ்தவத்தில், உன் பிரக்ஞை உன் தலைக்குள் அமைந்த ஒன்றுமல்ல.” (ப.16)

2. லாங்டன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபடி மரச்செறிவை நோக்கி நின்றார். அப்போது பறவைகளின் பெருங்கூட்டம் ஒன்று ஏக காலத்தில் அப்படியே கொத்தாக எழுந்து ஒன்றாகப் பறந்து வட்டமடித்தன. பறவைகளால் ஆன இன்ன வடிவமென்றில்லாத முகில் ஒன்று வானத்தின் குறுக்காக நகர்வதைக் கண்ட லாங்டன் ‘பிரபஞ்சம் என்னைப் பரிகாசம் பண்ணுகிறது’ என்று எண்ணினார். சென்ற ஆண்டு ஜோன்ஸுடன் பேசிக் கொண்டிருக்கையில், சிட்டுக் குருவிகளின் கூட்டம் ஒன்றைத் திரையில் காட்டி கேத்தரின் சொன்னது நினைவு வந்தது: “பிரிவு என்பது ஒரு மாயை. இந்தச் செயற்பாடு நடத்தை ஒத்திசைவு (behavioral synchronization) எனப்படுகிறது. இது இயற்கை முழுவதிலும் இருக்கிறது.” (ப.235). மேலும், கேத்தரின் சொன்னாள்: “குருவிகள் ஒன்றாக அசைகின்றன, ஏனெனில் அவை ஒன்றுதான்… உள்ளிணைந்த ஓர் அமைப்பு. பிரிவே இல்லை.” (ப.236)

3. பிரிவு என்பது நம் பகிர்மாயை (Seperation is our shared delusion.) (ப.236)

4. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னார்: “நாம் பிரபஞ்சம் என்று அழைக்கின்ற ஒன்றின் ஒரு பகுதியே மனிதன்… அவன் தன்னையும் தன் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் ஆகியவற்றையும் ஏனையவற்றிடம் இருந்து பிரிந்தவையாக அனுபவம் கொள்கிறான். இது அவனின் பிரக்ஞையில் உண்டாகியுள்ள ஒருவிதத் தோற்ற மயக்கம் (optical delusion). இந்த மயக்கம் நமக்கு ஒருவிதமான சிறை.”

[ஒப்பீடு: அ) “நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, நீங்களெல்லாம் சொப்பனம் தானோ? வெறும் தோற்ற மயக்கங்களோ?” – மகாகவி பாரதியார். ஆ) “சொந்தச் சிறைகள்” – கவிக்கோ அப்துல் ரகுமான்.] (பக்.236-237).

            5.”உலகில் நாம் தனித்திருக்கிறோம் என்று நினைத்தது மனிதகுலத்தின் மிகப்பெரிய பகிர்மாயை என்பதை நாம் ஒருநாள் காணத்தான் போகிறோம்.” (ப.237)

(to be continued...)


Sunday, November 2, 2025

வாசிப்பு வடிகட்டி


என் வீட்டு நூலகத்தைப் பார்த்துவிட்டு இத்தனை நூல்களா என்று வியந்தவர்கள் உண்டு. ‘இவ்வளவு நூல்களையும் படித்திருக்கிறீர்களா?’ என்று ஒருவர் கேட்டிருக்கிறார். உண்மையில் என் வீட்டு நூலகம் அத்தனை பெரியது கிடையாது. இரண்டாயிரம் நூல்கள் இருக்கலாம். இடத்தை அடைக்கிறதே என்று முன்பு ஒருமுறை பல நூல்களை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். எனக்குத் தேவைப்படும் என்று நினைத்த நூல்களை மட்டும் வைத்திருக்கிறேன். ஆனால், அது முற்றுப் பெற்ற சேகரம் அல்ல. அறிவுத் தேடல் உள்ள ஒருவரின் நூலகம் ஒருபோதும் முற்றுப் பெற முடியாது. அது எப்போதும் வளர்ந்து கொண்டே போகும். என் சேகரமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

            இதுவரை நான் வாசித்த நூல்களின் எண்ணிக்கையை நான் கணக்கு வைக்கவில்லை. பெரிய எண்ணிக்கை ஒன்றைச் சொல்லுவதில் பெருமிதமும் இருக்க முடியாது. “நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும்” என்று திருவள்ளுவர் குட்டு வைக்கிறார். உன்னதமான ஒரே ஒரு நூலை மட்டும் கசடறக் கற்பது நிச்சயமாக ஒரு பெரிய சாதனைதான். அப்படிக் கற்றவர்கள் இருக்கிறார்கள். அந்தரிகி வந்தனமு (salutations to them all).


            ஒருமுறை, ”இவ்வளவு நூல்களைப் படித்தால் மண்டை குழம்பிவிடாதா?” என்று என்னிடம் மாணவன் ஒருவன் கேட்டான். “அது ஒருவரின் brain capacity - மூளைத் திறனைப் பொறுத்தது. பத்து நூல்கள் படித்து மண்டை குழம்பிப் போகிறவனும் உண்டு. பத்தாயிரம் நூல்கள் படித்தாலும் இயல்பாக இருப்பவனும் உண்டு” என்று சொன்னேன். வாசித்ததை எல்லாம் நினைவில் வைக்க வேண்டும் என்று கவல்பவன் நிச்சயமாக வாசிப்பால் மனப் பிறழ்வே அடைவான்.

            வாசிப்புப் பழக்கமும் இசைத்திறனும் உள்ள தாவரவியல் பேராசிரியரான என் நண்பர் அஸ்லம் ஒருமுறை தொடர் புத்தக வாசிப்புப் பற்றி மாணவர்களிடம் இப்படிச் சொன்னார்: “Cruising through knowledge.” இந்த வாசகம் எனக்கொரு உவமையைச் சிந்திக்கத் தருகிறது. கடலில் செல்லும் மீன்பிடிப் படகு. திருலோக சீதாராமின் நூல் தலைப்பும் நினைவுக்கு வருகிறது: “இலக்கியப் படகு.”



            பாத்திரக் கடல், ஜவுளிக் கடல் என்றெல்லாம் விளம்பரம் செய்கிறார்களே, அது போல் நூல்களின் சேகரத்தை புத்தகக் கடல் என்று கற்பனை செய்யலாம். மனம் என்னும் படகை வாசகன் அந்தக் கடலில் செலுத்துகிறான். மீனவர் கடலுக்கு தினமும் செல்வது போல் அன்றாட வாசிப்பு.

மீனவர் கடல் நீரை அள்ளி படகுக்குள் நிரப்ப மாட்டார். அது போல் வாசிக்கும் எல்லாச் சொற்களையும் நம் மனதிற்குள் நிரப்புவது இல்லை.

மீனவர் கடலின் விளைச்சலான மீன்களை வலை வீசிப் பிடிக்கிறார். வாசகன் அது போல் தன் ரசனை அல்லது சிந்தனை என்னும் வலையை வீசி ஒரு நூல் தருகின்ற முக்கியமான கருத்துக்களை மட்டும் பிடித்துக் கொள்கிறான்.

மீனவர் தான் பிடித்த எல்லா மீன்களையும் தானே சாப்பிடுவதில்லை. வாசகன் தான் அள்ளி வந்த எல்லாக் கருத்துக்களையும் செரித்துக் கொள்வதில்லை. சில நூற்கள் ருசிக்கத் தக்கவை, வெகு சில நூற்களே செரிக்கத்தக்கவை என்பர். அப்படிச் செரிக்கின்ற கருத்துக்கள்தாம் ஒருவரின் ஆளுமையை உருவாக்குகிறது.

”தி புக் லெகாஸி” என்னும் முகநூல் வாய்க்காலில் நேற்று வாசிப்புக் குறித்து ஒரு சிறிய நீதிக் கதையைப் படித்தேன். அதை இங்கே தமிழாக்கித் தருகிறேன்:

 ஆர்வமுள்ள சீடன் ஒருவன் தன் ஆசானிடம் கேட்கிறான், “நான் ஏகப்பட்ட நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் பெரும்பாலான நூல்கள் மறந்து போய்விட்டன. படிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?”

ஆசான் அவனை மௌனமாகப் பார்த்தார். அவன் வினாவுக்கு அவர் விடை ஏதும் சொல்லவில்லை.

சில நாட்கள் கழிந்தன. அவர்கள் ஆற்றங்கரை ஒன்றில் அமர்ந்திருந்தனர். திடீரென்று அந்த முதிய ஆசான் அவனிடம் சொன்னார்: “எனக்கு தாகமாக இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா. ஆனால், அங்கே தரையில் கிடக்கும் பழைய வடிகட்டியில் அள்ளி வா.”

சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. “ஓட்டைகளால் ஆன வடிகட்டியை வைத்து எப்படி நீரை அள்ள முடியும்?” என்று மனதில் எண்ணினான். ஆனால் ஆசானிடம் வாதாடும் தைரியமும் இல்லை. அவன் குழப்பத்துடன் அவரைப் பார்த்தான். அவர் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்துவிட்டார். வேறு வழியின்றி துரு ஏறிக் கிடந்த அந்தப் பழைய வடிகட்டியை எடுத்துக் கொண்டு ஆற்றில் நீர் சேந்தச் சென்றான்.

ஒருமுறை, இருமுறை, பலமுறை அவன் நீர் அள்ள முயன்றபோதும் ஒரு சொட்டு நீரைக் கூட அள்ள முடியவில்லை. எப்படி முடியும்? தன் உள்ளங்கையால் ஓட்டைகளை அடைத்துக்கொண்டு அள்ளிப் பார்த்தான். அப்போதும் தண்ணீர் வழிந்து போனது.

களைத்தும் வெறுத்தும் அவன் ஆசானிடம் திரும்பி வந்தான். “மன்னியுங்கள் ஆசானே! என்னால் நீர் அள்ளி வர முடியவில்லை. அதற்குச் சாத்தியமே இல்லை” என்றான்.

ஆசான் அவனைக் கனிவாகப் பார்த்துச் சொன்னார், ”பரவாயில்லை. உன் மீது குற்றம் ஏதுமில்லை. வடிகட்டியை வைத்து நீர் அள்ள முடியாது என்பது எனக்கும் தெரியும். ஆனால், இப்போது உன் வடிகட்டியைப் பார்.”

அப்போதுதான் அவன் தன் கையில் வைத்திருக்கும் வடிகட்டியை கவனித்துப் பார்த்தான். துருவேறிய பழைய வடிகட்டி இப்போது புத்தம் புதுசு போல் பளபளத்தது. அதில் தண்ணீர் தங்கவே இல்லை என்றாலும் நீரோட்டம் அதைக் கழுவி சுத்தமாக்கி விட்டிருந்தது.

ஆசான் அவனிடம் சொன்னார்: “வாசிப்பு இதைத்தான் செய்கிறது. ஒவ்வொரு தகவலையும் நீ நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வடிகட்டியில் நீர் போவது போல் நீ வாசிப்பதெல்லாம் நழுவிப் போகிறது என்றாலும் கவலை இல்லை. ஏனெனில், நீ வாசிக்கும்போது உன் மனம் புத்துயிர் பெறுகிறது. உன் ஆன்மா புதிதாகிறது. உன் சிந்தனைகளில் உயிர்வளி ஏறுகிறது. அதை நீ அப்போது கவனிக்காமல் இருந்தாலும் ஒவ்வொரு கணமும் நீ உள்ளும் புறமும் மாற்றப்பட்டு வருகிறாய்.”

அதுதான் வாசிப்பின் உண்மையான நோக்கம். உன் நினைவை நிரப்பிக் கொள்வது அல்ல; உன் மனம் மாசில்லாமல் தூய்மை அடைவது!

மேற்சொன்ன கதை நன்றாகத்தான் இருக்கிறது. நூறு சதவிகித உண்மை என்றெல்லாம் பின்னூட்டம் இட்டிருந்தார்கள். ஆனால், என்னால் அப்படி ஏற்க முடியவில்லை. என் வாசிப்பும் அனுபவமும் வேறு விதமாகச் சொல்கிறது.

எல்லா நூல்களும் மனதைச் செம்மைப்படுத்தி விடாது. மனதைக் கெடுக்கக் கூடிய நூல்களும் இருக்கத்தான் செய்கின்றன. எனவே, மனதைத் தூய்மை ஆக்கக் கூடிய நூல்கள் என்று தேர்ந்தெடுத்துப் படித்தால்தான் உண்டு. அப்படிப் படித்தாலும் ஒருவரின் மனம் தூய்மை ஆகிவிடும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. வேதத்தையே படித்தாலும் மனக் கசடு நீங்காதார் உண்டு. ‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்று ஒரு சொலவம் இருக்கிறதே!

நிறைய நூல்களை வாசித்து நான் கண்டு கொண்ட உண்மைகளில் ஒன்று, வாசிப்பதால் மனம் தூய்மை அடையாது என்பதுதான். ’வித்யா கர்வம்’ என்னும் படித்த ஆணவம் வேண்டுமானால் உண்டாகும், நிறைய பேருக்கு அப்படி உண்டாகி விடுகிறது. வெகு சிலரே அதிலிருந்து தப்பிக்கின்றனர். அதற்கு ஆன்மிகப் பயிற்சி வேண்டும்.

தன்னார்வமாக வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்பவர்களுக்கே இந்த நிலை என்றால், கல்விப் புலம் சார்ந்து பட்டங்களைச் சேகரிப்பவர்களின் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள்தாம் படித்த முட்டாள்களாக உருவாகிறார்கள். இந்தியாவிலேயே அதிக பட்டங்கள் பெற்றவர், எண்பது வயதில் தன் பிஏ பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டிருப்பவர் என்கிற ரீதியில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது அவர்கள் மீது பரிதாபம்தான் தோன்றுகிறது. எப்படிப்பட்ட வடிகட்டிய முட்டாள்கள். இந்தப் பட்டங்களால் சமூகத்தில் தமக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்று நினைப்பவர்கள் இவர்கள். முறைசார் கல்வி என்பது ஓர் அரசியல் பெருமிதம். அதைப் பற்றி அறிவுலக மேதைகள் எவ்வளவு ஒவ்வாமையுடன் சொல்லியிருக்கிறார்கள் என்பதைச் சற்று சிந்தித்தால் போதும், அது எவ்வளவு போலித்தனமானது என்பது விளங்கும்:



”மனிதர்கள் அறிவிலிகளாகப் பிறக்கின்றனர், முட்டாள்களாக அல்ல. கல்விதான் அவர்களை முட்டாள்கள் ஆக்குகிறது!” (“Men are born ignorant, not stupid. They are made stupid by education”) என்கிறார் பெட்ரண்ட் ரஸ்ஸல்.

“கல்வியையும் நுண்ணறிவையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். உன்னிடம் ஒரு பிஎச்டி (முனைவர்) பட்டம் இருக்கும் நிலையில் நீ ஒரு முட்டாளாக இருக்கலாம்” (“Never confuse education with intelligence. You can have a PhD and still be an idiot”) என்கிறார் விஞ்ஞானி ரிச்சர்ட் ஃபெய்ன்மேன்.

           “படிப்பு என்பது வயிற்றுச் சோற்றுக்கு வழியில்லாதவர்கள் மாதச் சம்பளத்துக்கு வழிதேடிக் கொள்ளும் முயற்சி” என்கிறார் சிந்தனையாளரும் இலக்கிய மேதையுமான ஜெயகாந்தன்.

            இப்படியெல்லாம் சொல்கிறார்கள் என்றால், உண்மையான கல்வி எது? உண்மையான அறிவு எது? நூல்களை வாசிப்பதால் பெறப்படும் அறிவுக்கு எல்லை இருக்கிறது. அதற்கு அப்பால்தான் மெய்யறிவு உள்ளது என்று உணர்வதே அதன் ஆரம்பம் ஆகும். அந்த மெய்யறிவை அடைவதற்கான பயிற்சி முறையே ஆன்மிகம். அதுவே உண்மையான கல்வி.

           ”நான் இன்னும் மெய்யறிவில் செம்மை நிலையை அடையவில்லை என்று உணர்கிறேன். ஏனெனில் எனக்கு இன்னமும் நூல்களை வாசிக்கும் ஆர்வம் இருக்கிறது” என்று ஸூஃபி மகான் ஹக்கீமி ஷாஹ் ஃபைஜி அவர்கள் என்னிடம் ஒருமுறை சொன்னார்கள். மெய்யறிதலின் புலத்திற்குள் நுழைந்துவிட்ட ஒருவர்க்கு நூல்கள் தேவைப்படாது என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் நூல்களே வாசிக்க மாட்டார்கள் என்பது இதன் அர்த்தமன்று. தனக்குத் தேவைப்படாத நிலையிலும் தன்னால் வழிகாட்டப்படும் சாதகர்களின் தேவை கருதி ஓர் ஆசான் நூல்களின் வாசிப்பைத் தொடர்பவராக இருக்கலாம். மகான் அவர்கள் அந்த நிலையில் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் சொன்னது என் நிலையை எனக்கு உணர்த்துவதற்கான வழிகாட்டல் என்றும் நான் புரிந்துகொண்டேன்.

        நூல்கள் வாசிக்கும் ஆர்வம் எனக்கு இன்னமும் தொடர்கிறது; அகத்தைத் தூய்மையாக்கும் ஆன்மிகப் பயிற்சியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

Sunday, October 26, 2025

உவந்தனம் பெரிதே!

 


சென்ற திங்கள் என் பிறந்தநாளுக்கு ஜார்ஜ் ஜோசப் பரிசு ஒன்று கொடுத்தார்: “நீங்க விரும்பிப் படிப்பீங்கன்னு தோனுச்சு சார், இந்த நூல் வாங்கிட்டு வந்தேன்.” அவர் கொடுத்தது கரிகாலன் எழுதிய “நோம் என் நெஞ்சே”. ‘சங்க காலப் பெண்பாற் புலவர்கள் வாழ்வும் எழுத்தும்’ என்பது இந்நூலின் பொருண்மை. சங்க காலப் பெண்பாற் புலவர்கள் இயற்றிய பாடல்களை எல்லாம் திரட்டியெடுத்து ”சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள் மூலமும் உரையும்” என்னும் தலைப்பில் ந.முருகேச பாண்டியன் ஒரு நூல் தந்திருக்கிறார்.  சங்கக் கவிதைகளை நம் வாழ்வில் காணும் அன்றாட நிகழ்வுகளோடு இயைத்துக் காணும் உத்தியுடன் ஜெயமோகன் “சங்கச் சித்திரங்கள்” எழுதினார். கரிகாலன் எழுதிய நூல் இவ்விரண்டுக்கும் இடை நிலையில் அமைகிறது. சுவைஞனாகவும் அறிஞனாகவும் ஒருங்கிருந்து அணுகி பெண்பாற் புலவோரின் சங்கப் பாடல்களை, நாற்பத்திரண்டு கட்டுரைகளாக நாம் புலனுண்ண அளித்திருக்கிறார்.

            பதினைந்து நாட்களுக்கு முன் இந்த நூலினை வாசிக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது கையில் எடுப்பதும் இரண்டு மூன்று கட்டுரைகளை வாசித்துவிட்டு வைத்துவிடுவதுமாகப் போய்க் கொண்டிருந்தது. பத்து நாட்களுக்கு முன் பாதி வாசித்து வைத்ததோடு மறந்தே போனேன். வேறு அலுவல்கள் நேரத்தைப் பிடித்துக் கொண்டன. முந்தாநாள் காலையில், ஓய்வாக முகநூலில் மூழ்கியிருந்தேன். ப்ரூனோ மார்ஸ் என்னும் மேற்கத்திய நவீன இசைக் கூத்தனின் ஃபினஸ்ஸ் (Finesse) என்னும் பாடலின் இடையிசை (interlude)-இல் அவன் தன் குழுவுடன் ஆடும் நடன அசைவுகள் எப்படி ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்திற்று என்பதை ரீல்ஸ் ஒன்று காட்டிற்று. தொடர்ந்து. ப்ரூனோ மார்ஸின் நடன மற்றும் இசைத் தத்துவம் பற்றிய காணொலி ஒன்றையும் பார்த்து முடித்தேன். வியப்பாக இருந்தது.


            
கைப்பேசியை அணைத்து வைத்துவிட்டு சும்மா அமர்ந்திருந்தபோது, பத்து நாட்களுக்கு முன் பாதியில் கை மறந்து வைத்த ‘நோம் என் நெஞ்சே’ நூல் நினைவுவர அதன் வாசிப்பைத் தொடரலாம் என்று எடுத்தேன். பதினைந்தாம் கட்டுரையுடன் நிறுத்தியிருந்ததால் பதினாறாம் கட்டுரையை விரித்தேன். “காலம் தோறும் வளரும் காதல் கதைகள்!” என்பது தலைப்பு. ஆட்டனத்தி ஆதிமந்தி இணையரின் காதல் குறித்து இதில் பேச ஆரம்பித்தார். பின்வரும் வரிகளை வாசித்தபோது இன்பச் சிலிர்ப்பு:

“ஆட்டனத்தி அழகும் வீரமும் ஆடற்கலையும் இணைந்த இளைஞன். இவனை சேர இளவரசனாகவும் சிலர் கூறுவதுண்டு. நீச்சலையும் நடனத்தையும் இணைத்ததோரு நடன அழகியலில் இவன் விற்பன்னன்”(ப.62). நான் உடனே ப்ரூனோ மார்ஸை ஆட்டனத்தியாகக் கண்டேன். அல்லது, கால் இடத் தொலைவுகளைக் கடந்து என் கற்பனையில் ஆட்டனத்தியும் ப்ரூனோ மார்ஸும் அத்விதம் ஆகிவிட்டனர். என் சிலிர்ப்பை வாட்ஸாப் வழியில் கரிகாலனுக்கும் ஜார்ஜ் ஜோசப்புக்கும் அனுப்பினேன். கரிகாலன் இதயப் படம் போட்டார். ஜார்ஜ் ஜோசப், “நீச்சல் நடனம் இதுபோல்தான் இருந்திருக்குமோ?” என்று சொல்லி ஒரு தம்ஸப் போட்டார்.

கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து வாசித்தேன். வெளியே கார்காலப் பெரும்பொழுதின் சூழல் வேறு. எம்குடிச் சிறுமகள் உருளைக் கிழங்கும் பாற்களிம்பும் கொண்டு சுடச்சுட அருஞ்சுவை அடிசில் ஒன்று உண்ணத் தந்தாள். அத்துடன் தலைப்பேசியில் நல்லிசையும் சேர்ந்துகொண்டது. பண்ணும் பட்சணமும் பைந்தமிழ்ப் பனுவலும் ஒருங்கே பெற்றேம் யாம்!

இன்று, ’நோம் என் நெஞ்சே’ நூலை அரை மணி நேரத்திற்கு முன் வாசித்து முடித்தேன். நல்ல தமிழை ருசிக்கவும் சங்கத் தமிழரின் வாழ்வியலை அறியவும் விழைவோர் இந்நூலை வாசிக்கலாம். பண்டைத் தமிழரின் பண்பாடு பற்றி ஆழ்ந்து சிந்திப்போருக்கு இந்நூலில் ஆங்காங்கே சிந்தனைக் களங்கள் தென்படும். இந்நூல் நெடுகிலும் கரிகாலன் பல புதிய பார்வைகளை முன்வைத்து நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார். ஈங்கிவண் கூறுவல் சிறிதே!

சங்க காலம் என்பது தமிழர் வரலாற்றில் ஒரு  transition period ஆகும். அது, சாதியற்ற தமிழர் சாதியத் தமிழாக மாற்றம் அடைந்த காலக் கட்டம் என்று பக்தவத்சல பாரதி அவதானிக்கிறார். மேலும், கற்கருவிகளைக் கையாண்ட போது பூசல்களும் சண்டைகளும் நிகழ்ந்த நிலை மாறி இரும்புக் கருவிகளைக் கையாளத் தொடங்கியதும் போர்கள் பெருகிய காலக் கட்டம் என்று இதனைக் கரிகாலன் அவதானிக்கிறார். தமிழினத்தார் தம்முள்ளே சண்டைகளும் சமர்களும் நிகழ்த்தினர் என்பதைச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. எற்றுக்கு? கரிகாலன் தயங்காமல் உண்மை மொழிகிறார்: “உற்பத்திக் கருவிகளான மனிதனை அடிமையாக்கவும், நிலங்களை அபகரித்து செல்வங்களைக் கொள்ளையிடவும், எல்லைகளை விரிக்கவும் தமிழ் மண்ணில் போர்கள் நிகழத் தொடங்கின. வீரம் ஒரு பண்பாடாக மாறியது. உடையோரைச் சார்ந்த புலவர்கள் போர்த்தொழிலைப் பாடினார்கள்” (ப.112).

இதே போல், “உடைமைச் சமூகம், ஆநிரை சமூகத்திலிருந்து உருப்பெறுகிறது” (ப.123) என்றும், “விருந்து என்கிற நாகரீகம் தோன்றுவதற்கு முன்புவரை இனக்குழு சமூகத்தில் அகமணமுறையே இருந்தது. விருந்து பண்பாடு வளர்ந்த பிறகே புறமணமுறை வளர்கிறது” (ப.123) என்றும், “ஆதி நிலவுடைமை மதிப்பீட்டால் ஆனதே சங்கக் கவிதைகள்” (ப.29) என்றும், ‘அவ்வையை வயதானவளாகக் காட்டுவதில் ஆணாதிக்க மனநிலையும் இருந்தது. கள்ளுண்ட அதியன் காலத்து அவ்வை(யைத்) தமிழ் மனங்களிலிருந்து மறைத்து புனிதப்படுத்தும் முயற்சி!” (ப.96) என்றும் அவர் தரும் அவதானிப்புகள் எல்லாம் ஆழ்ந்த வரலாற்றுப் பார்வை கொண்டுள்ளன.

சங்க காலத்தில் பாணர்களும் புலவர்களும் இருந்துள்ளனர். ஒருவரே இரண்டுமான இருந்ததும் உண்டு. “குறுநிலப் பரப்புகளாக இருந்த திணை நிலங்களை பாடிய பாணர் மரபு மெல்ல பெருநிலங்களைப் பாடிய புலவர் மரபாக உருமாறுகிறது” (ப.19) என்று கூறி, “பாணர்கள் அலைகுடிகள். புலவரோ நிலைக்குடிகள். புலவர்களே போர், வீரம், அரசு அதிகாரம் போன்ற மதிப்பீடுகளை உருவாக்கி திணை வாழ்வை மாற்றியதில் செல்வாக்கு மிகுந்தவர்கள். மொழி எவ்வாறு அதிகாரமாகிறது என்பதை ஆராயும் அமைப்பியலை வாசித்தவர்கள் இப்பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்” (பக்.19-20) என்று கரிகாலன் சிந்திக்கத் தூண்டுகிறார்.

சங்ககாலத்தில் பரத்தமை ஒழுக்கம் என்று ஒன்று வகுக்கப்பட்டிருந்தது. தொல்காப்பியம் அதற்கான இலக்கணத்தைச் சொல்கிறது. திருமணம் செய்த மனைவியே அன்றி இல்லற வரையறைக்கு அப்பால் ஓர் ஆண்மகன் பலவகையான பெண்களுடன் உறவு கொண்டிருந்தான். அவர்கள் காமக் கிழத்தியர் என்றும் பரத்தையர் என்றும் வகைப்பட்டனர். இவர்களிலும் பல வகைப்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் உண்டு. இத்தகைய சூழ்நிலை இருந்தால் மணமுறிவு (divorce) நிகழ்ந்திருக்க வேண்டுமே? அப்படி நிகழ்ந்ததற்கான குறிப்பேதும் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால், ஊடல் மட்டும் இருந்திருக்கிறது. அது குறித்துக் கரிகாலன் ஆய்ந்து சொல்கிறார்: “பெண்களுக்கிடையே ஏற்றத் தாழ்வின் காரணமாக சமநிலையின்மையை ஆணாதிக்க மதிப்பீடு உருவாக்கியிருந்தது. அது ஆணின் இருப்பை சிறிதும் அசைக்காமல் பார்த்துக் கொண்டது” (ப.107).

கரிகாலன் என்னும் ஆய்வறிஞர் அவ்வப்போது, நக்கீரனுக்கே நெற்றிக்கண் கிடைத்துவிட்டது போன்றும் தோன்றுகிறார். அந்த நெருப்புப் பார்வைக்கு வள்ளுவரும் தப்பவில்லை: “திருவள்ளுவர் மீது கோபம் கொள்ளும் இடங்களும் இருக்கவே செய்கின்றன. வரைவின் மகளிர் அதிகாரத்தின் பத்து குறட்பாக்களும் வள்ளுவனை பிற்போக்காளனாகக் காட்டுபவை!” (ப.105). இன்னோர் இடத்தில் 1115-ஆம் திருக்குறளை மேற்கோள் காட்டி கரிகாலன் சொல்கிறார்: ”காம்பு களையாத அனிச்சம் மலரை சூடினால் பெண் இடை தாங்காது! வள்ளுவர் வருத்தப்படுகிறார். அழகின் வழி பெண் உடலை பலவீனமாக்கிய ஆண் தந்திரமே இது” (ப.109).

பரத்தையர் குறித்துப் பேசுமிடத்தில் அந்த நெற்றிக்கண் தொல்காப்பியரையும் சுடுகிறது: “புராதன சமூகம் உதிர்ந்து உருவாகிய் உடைமைச் சமூகத்தில் ஆணுக்கு இரண்டு கிழத்திகள் தேவைப்பட்டனர். வாரிசைப் பெற்றுக் கொடுக்க இல்லக்கிழத்தியும், விதம் விதமாக இன்பத்தை அள்ளிக் கொடுக்க காமக்கிழத்திகளும் தேவைப்பட்டனர். இதைதான் ‘பெருமையும் உரனும் ஆடூஉ மேன’ என்றார் தொல்காப்பியர். இதுதான் ஆணுக்கான பெருமை, வீரம் எல்லாம்!” (ப.105).

வெறுமனே செய்திகளை அடுக்கிச் சொல்லிக் கொண்டு போகும் நூலாக இல்லாமல் கரிகாலன் தானே ஒரு கவிஞர் என்பதால் அற்புதமான உவமைகளும் உருவகங்களும் கொண்டு கருத்துக்களைத் தீட்டியிருக்கிறார். அதற்கு ஒரு சான்று: “காதல், நடுக்குளத்தில் பூத்திருக்கும் மலர். சிலர் பறித்து கரை சேர்கிறார்கள். சிலர் மூழ்கிவிடுகிறார்கள். சிலர் வேடிக்கை பார்க்கிறார்கள்!” (ப.127).

சங்க இலக்கியத்தில் பாலைத் திணைப் பாடல்களே மிகுதி. அந்தத் திணை பிரிவின் துயரைப் பேசுவதாகும். பாலைப் பாடல்களை ஆண் புலவர்கள் பாடியுள்ளனர் என்றாலும் அவை தலைவியோ தோழியோ பாடுவதாகவே பெரிதும் அமைக்கப் பட்டுள்ளன. இதற்கான புள்ளிவிவரங்களைத் தருமிடத்தில் கரிகாலன் இப்படிச் சொல்கிறார்: “ஏனோ ஆண்களுக்கு பெண்களின் கண்ணீர் ருசி காலம் தோறும் பிடித்திருக்கிறது” (ப.47). இதை வாசித்தபோது “அனல் காற்று” நாவலில் ஜெயமோகன் எழுதிய ஒரு வரி நினைவுக்கு வந்தது: ”கண்ணீரும் பெண்களுக்கு ஓர் உறவுச்சம்.”

கரிகாலன் பெண்ணை வியந்தும் நயந்தும் கொண்டாடும் இடங்கள் ரசனையானவை. வெள்ளிவீதியாரைப் பற்றிச் சொல்லும்போது “பிரிவு என்பது வெளியாக, காலமாக இவரது கவிதைகளில் தோன்றி காமத்தின் அவதியைப் பிழிந்து தருகிறது” (ப.12) என்கிறார். மேலும், “ஆதி கானகத்தில் பெண்களே பருவங்களை அறிந்திருந்தார்கள். அவர்கள் உடல் ஐந்திணை நிலம், மனம்தான் பருவம்” (ப.38) என்று குறிப்பிடுகிறார். இவற்றில், இயற்பியலின் அடிப்படை அம்சங்களான வெளி மற்றும் காலம் (Space and Time) ஆகியவற்றின் பிரதிநிதியாகப் பெண்ணை அவதானிப்பது ஆழ்ந்த உளவியலும் மெய்யியலும் முயங்கிய ஒரு பார்வை ஆகிறது.

பெண் குறித்துப் பேசும்போது அவளுடலின் தனித்த அடையாளமாக இருக்கும் மார்பகம் பற்றியும் பேச வேண்டியதாகிறது. வருமுலையாரித்தி என்னும் சங்கப் பெண் புலவர் எழுதிய கவிதை பற்றிய கட்டுரையில் சில முக்கியமான செய்திகளைக் கரிகாலன் சொல்கிறார். ஆப்ரிக்க நாடுகளில் நிகழ்த்தப்படும் ‘முலை தேய்த்தல்’ என்னும் கொடூரமான சடங்கு பற்றி அவர் சொல்லும்போது திடுக்கிட்டேன். அறபு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் நிலவும் பெண்களுக்கான விருத்தசேதனச் சடங்கு என்னும் சிக்கலைப் பற்றி நினைவு கூர்ந்தேன்.

சங்க காலத்தில் ‘முலை’ என்னும் சொல் மிக இயல்பாகப் புழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று அது ஓர் அவையல் கிளவி (unparliamentary word) ஆகியுள்ளது. சங்கப் பெண் புலவோருள் ‘வருமுலையாரித்தி’ என்று ஒருவருக்குப் பெயரே இருந்திருக்கிறது என்பதையும் கரிகாலன் சுட்டிக் காட்டுகிறார். கழார் கீரன் எயிற்றியார் பாடிய பாடல்கள் பற்றிய கட்டுரையில் “முலை அழகியல்” பண்டைத் தமிழரிடம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இதுபோல், ஆங்கித்தில் ’பூப் ஈஸ்தடிக்ஸ்’ என்று எவராவது எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

மேற்சொன்ன கழார் கீரன் எயிற்றியார் எழுதிய நற்றிணை 312-ஆம் பாடலில் “எதிர்த்த தித்தி முற்றா முலையள்” என்று ஒரு தொடர் வருகிறது. அதில் உள்ள தித்தி என்னும் சொல்லுக்கு, “முலை முகட்டில் இருக்கும் கருமை” என்று கரிகாலன் அருஞ்சொற்பொருள் உரைத்துள்ளார். முலைக் காம்பினைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்களான teats மற்றும் tits ஆகியவற்றுக்கு இச்சொல்லே மூலமாதல் வேண்டும். மொழி வல்லார் ஆய்க.


கரிகாலனின் இந்நூல் வழி சில சுவையான சொற்களையும் நாம் அறிகிறோம். சில உதாரணங்கள் காட்டுதும்:

அ) அணல் – தாடி என்பதற்கான தமிழ்ச்சொல் (’மையணல் காளை’ – புறநானூறு #83; ‘புல் அணலோன்’ – புறம் #299).

ஆ) அல்லங்காடி – இரவு முழுதும் இயங்கும் அங்காடி. சங்க காலத்தில் இருந்துள்ளது.

இ) வயா நோய் – கருவுற்ற பெண்டிர்க்கு முதல் மூன்று மாதங்களில் தோன்றும் மசக்கை.  

ஈ) கழிகல மகளிர் – விதவையர்; கைம்பெண்டிர்; widows. [மனைவியை இழந்த பின்னர் மறுமணம் செய்யாமல் துறவு கொண்ட ஆணைப் பற்றியும் ஒரு குறிப்புண்டு; இத்தனைக்கும் அவன் மகளிர் பலருடன் வாழ்ந்தவன்தான். (மாற்பித்தியார் எழுதிய புறநானூறு #251 & 252-ஆம் பாடல்கள்; சங்க காலத்து ஷாஜஹான்!)

ஆ) தொடலை – ஒருவர் ஒளிய பிறர் அவரைக் கண்டுபிடித்துத் தொட்டு விளையாடுவது. இன்றைய கண்ணாமூச்சு விளையாட்டு.

”தமிழர் ஒவ்வொருவரும் தம் நூலகத்தில் வைத்துப் போற்றும் நூலாக இது அமையும் என்பது திண்ணம். தமிழ் மாணவர்களுக்கு, முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு, இந்நூல் ஒரு அவசியமாக இருக்கும்” (ப.4) என்கிறார் கரிகாலன். அதுவே என் வாசிப்பின் வழி நான் இந்நூலுக்குத் தரும் மதிப்பீடுமாகும்.

இந்நூலினை ‘படைப்பு பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. அதன் உரிமையாளர் ஜின்னா அஸ்மி என்னும் முகம்மது அலி ஜின்னா நான் பணியாற்றும் ஜமால் முகம்மது கல்லூரியில், அப்போது நான் முதுகலைத் தமிழ் படித்த காலத்தில் எம்.சி.ஏ படித்துக் கொண்டிருந்தார். மரபுக் கவிதை எழுதுவதில் திறமை கொண்டவர். அவரின் முதல் கவிதைத் தொகுப்பு அந்த மாணவப் பருவத்திலேயே எம் கல்லூரி ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது. அந்த நூலுக்குத் தலைப்புச் சூட்டும் ஆலோசனைக் கூட்டம் என் அறையில்தான் நடந்தது. நண்பரும் எழுத்தாளருமான மானசீகன், நாவலரும் பேராசிரியருமான அப்துர் ரஹீம் ஆகியோர் உடனிருந்தனர். ‘வெளிச்சத்தின் முகவரி’ என்று அதற்குப் பெயர் சூட்டினோம். இது நடந்தது 2002-இல். அண்மையில்தான் மீண்டும் ஜின்னா அஸ்மியுடன் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் முந்நூறு நூற்களுக்கும் மேல் வெளியிட்டிருக்கும் பதிப்பாளராகத் திகழ்ந்து தமிழ்ப்பணி ஆற்றுகிறார். ’நோம் என் நெஞ்சே’ நூல் உருவாக்கத்தில் என் நண்பரின் பங்களிப்பும் இருப்பது கண்டு யாஅம் உவந்தனம் பெரிதே!

Friday, October 3, 2025

ஞானச் சுடர் எங்கும் பரவுக!

சகோதரர் முனைவர் எச்.முகம்மது சலீம் அவர்கள் தொகுப்பாசிரியராக உருவாக்கியிருக்கும் “தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபிச் சுடர்கள்” என்னும் நூலுக்கு ஆய்வுரை எழுதியுள்ளேன். அது அந்த நூலிலேயே இடம்பெற்றுள்ளது. அதனை இங்கே தருகிறேன்,

தக்கலையைச் சேர்ந்த சகோதரர் சலீம் அவர்கள் பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிக்கிறார். இலக்கிய மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான தோழர் ஹாமீம் முஸ்தஃபா அவர்களின் உறவினர். இந்நூலினை மணலி அப்துல் காதர் அவர்களின் நன்னூல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மூவருக்கும் எனது நன்றிகள்.


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

            அகிலங்களுக்கு அருட்கொடை ஆன அண்ணலெம் பெருமானார் மீதும் அன்னாரின் தூய குடும்பத்தார் மீதும் சத்திய சகவாசியர் மீதும் ஏகனின் பேரருள் என்றென்றும் இலங்கட்டுமாக.

            ”தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபிச் சுடர்கள்” என்னும் இந்நூலினை சகோதரர் ஹெச்.முஹம்மது சலீம் அவர்கள் அனுப்பித் தந்து அணிந்துரை எழுதப் பணித்தார்கள். இந்த ஆராய்ச்சி நூலுக்கு அணிந்துரை எழுதும் பேறு எனக்குக் கிடைத்திருப்பது இறைவனின் பேரருளால் மட்டுமேயாகும்.

            இந்நூல் இஸ்லாமிய மெய்ஞ்ஞானத் தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்து கவியுளம் கண்டோரான அறிஞன்மார் ஐவரால் எழுதப்பட்ட பத்துக் கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறங்குகின்றது.

            ’தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபிச் சுடர்கள்’ தமிழ் என்னும் தருப்பணத்தில் படிந்து நம் கண்கள் கூசாத வண்ணம் அழகு காட்டுகின்றன.

            இவை மெய்ஞ்ஞானம் பேசும் கட்டுரைகளாகும். ஞானம் நவில்கையில் செவிநுகர் கனிகள் என்று சிந்தை சிலிர்ப்போர் சிலர். ஞானம் என்னும் சொல் காதில் விழும் கணத்தில் காத தூரம் கடுகி ஓடுவோர் பலர். ’கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்பதே இறைஞானியர் இந்த அவனியில் மக்கள் திரளிடம் அடைந்த அனுபவம். 

            எனினும், இதற்கென இஷ்டப்பட்டு உழைப்போர் இருப்பதால் இந்த ஞானக் கடை கஷ்டப்பட்டுத் தொடர்ந்தாலும் ஒருபோதும் நஷ்டப்பட்டு விடாது என்பது உறுதி. இதற்கு இறைக் காப்பே நிறை காப்பு.

            இந்நூலின் செம்பாகம் சகோதரர் முகம்மது சலீம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. 198 பக்க நூலில் அவர் எழுதியிருக்கும் நான்கு கட்டுரைகள் 103 பக்கங்கள் அமைந்து சரிபாதியாகத் திகழ்கின்றன. மேலும் இந்நூலில் தோழர் ஹாமீம் முஸ்தபா எழுதிய மூன்று கட்டுரைகள் உள்ளன. தக்கலை எம்.எஸ்.பஷீர், ரஹ்மத் ராஜகுமாரன், மற்றும் செந்தாமரை கே.பி.எஸ்.ஹமீது ஆகியோர் எழுதிய மூன்று கட்டுரைகளும் உள்ளன.

            சகோதரர் எச்.முகம்மது சலீம் அவர்கள் ஸூஃபி மெய்ஞ்ஞான இலக்கியங்களில், குறிப்பாக பீரப்பாவின் நூற்களில் பெரிதும் ஈடுபாடுள்ள பெற்றியர்; அவற்றில் ஆழ்ந்து தான் கண்டடைந்த கருத்துக்களை நீர்மையும் நேர்மையும் பொலிய வெளியிடுவதில் வெற்றியர்.

            பீரப்பாவின் ஞான இலக்கியப் பரவல் என்பது ஒரு தனிப்பெரும் அறிவுத் துறை என்று அவர் கண்டிருப்பதால் அதற்கு ‘அப்பாவியம்’ என்னும் அழகிய பெயரும் அளித்திருக்கிறார்.

            அன்னார் எழுதியுள்ள ’இயற்கைப் பாடம்’, ‘எண்ணெண்ப’, ‘எழுத்தென்ப’, ’அப்பாவியம்’ ஆகிய நூற்களை நான் வாசித்து ஆன்மிக உணர்வுக்கு ஊட்டமும் அறிவுக்குப் பயனும் அடைந்திருக்கிறேன். அவ்வழியில், இந்நூல் இன்னுமொரு நன்னூல்.

            படைப்பினையும் படைப்பாளனாகிய இறைவனையும் தனித்தும் தொடர்பு படுத்தியும் அறியும் நிலையே மெஞ்ஞானமாகும்” என்று இந்நூலினுள் அவர் குறிப்பிடுகிறார். இது, அவரது அறிவுத் தெளிவுக்குச் சான்றாகும். ஏக இறைவன் தன் படைப்புக்களுடன் இருந்தாலும் அவன் ஒருபோதும் படைப்பாகிவிட மாட்டான், படைப்பு ஒருபோதும் இறைவனாகிவிடாது என்னும் கொள்கைத் தெளிவினை இது காட்டுவதுடன், இறைவனை “ஷஃ’னே தன்ஸீஹ்” மற்றும் “ஷஃ’னே தஷ்பீஹ்” (தனித்திருத்தல் மற்றும் உடனிருத்தல்; Transcendence & Immanence) ஆகிய நிலைகளில் விளக்கித் தரும் ஸூஃபிகளின் பார்வையையும் இந்த வரையறை சுட்டிக் காட்டுகிறது.

            ஞானக் குறம் பற்றி எழுதும்போது, ”கைக்குறி கூறுதலில் மணல்கூட்டி கூடற்சுழி குறித்து கூறும் குறமரபு இழ்ழைந்தோடக் காண்கிறோம். சீவக சிந்தாமணி, முத்தொள்ளாயிரம், திருச் சிற்றம்பலக் கோவை போன்ற நூல்களில் காணப்படும் குறமரபு இங்கும் பேணப்படும் பான்மை காண்கிறோம்” என்று நூலாசிரியர் தரும் பதிவு தமிழ் இலக்கியப் பரப்பில் அவருக்கிருக்கும் தோய்ந்த வாசிப்பினைக் காட்டும்.


            
பீரப்பா தான் எழுதிய செம்பாக நூற்களுக்கு ஞானம் என்னும் சொல் பிறங்கும் தலைப்புக்களைச் சூட்டியுள்ளார். அந்தத் தலைப்புக்களுக்கு இடையிலான பொருத்தப்பாடுகளின் பக்கம் சலீம் அவர்கள் சமிக்ஞை காட்டியுள்ளார் என்பதையும் நான் கண்டு கொண்டேன். ’ஞானப் பூட்டு’ என்னும் நூலின் தலைப்புடன் ’ஞானத் திறவுகோல்’ என்னும் நூற்றலைப்பைப் பொருத்தி, “அரிய மெஞ்ஞானப் பெரும் பொருளை பூட்டிவைத்த பொக்கிஷமாய் ஞானப் பூட்டில் வழங்கிய பீர்முஹம்மது சாஹிபு அப்பா அவர்கள் மறவாமல் ஞானத் திறவுகோலையும் தந்து சென்றுள்ளார்கள்” என்று கூறும் நயம் நனி இனிது.

            இக்குறிப்பினை வாசித்தபோது என் சிந்தை இதே திசையில் சிந்தித்து பீரப்பாவின் நூற்தலைப்புகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தி அர்த்தம் எடுத்து மகிழ்ந்தது. மஹரிபத்து மாலை அணிந்த ஞானக் குறவஞ்சி ஞானத் தித்தி ஊதியபடி ஞான நடனம் ஆடுகிறாள். அவளுக்கு மெஞ்ஞானக் களஞ்சியம் ஒன்று பரிசளிக்கப்படுகிறது. ’பிஸ்மில்’ ஓதி ஞானப் புகழ்ச்சி செய்து அவள் அதன் ஞானப் பூட்டை ஞானத் திறவுகோலால் திறக்கிறாள். அதனுள் ஞான முச்சுடர் வீசும் ஞான ரத்தினங்களை ஞானக் கண்ணால் கண்டு ஞான ஆனந்தக் களிப்பு எய்துகிறாள்.  இவ்வாறு ஞான விகடச் சமர்த்தாக யோசித்துப் பார்த்து மகிழ்ந்தேன்! இது ஓர் உவகைக் கற்பனைதான்.

            ’சீரியஸ்’ சிந்திப்பிற்கு இன்னொன்று சொல்வேன். ஞானப் பூட்டு முழுமையாய்க் கிடைத்திருக்க, ஞானத் திறவுகோல் என்னும் பனுவலின் காப்புப் பாடல் ஒன்று மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது என்னும் செய்தியை நான் ஓர்ந்தேன். ஞான வாழ்வு என்பதே அப்படித்தானே? தான் என்னும் பூட்டு அனைவரிடமும் இருக்கிறது. அதன் திறவுகோல் அத்தனை எளிதில் கையளிக்கப் படுவதில்லை. மிகுந்த தேடலுக்குப் பின்னரே அது கிடைக்கிறது. எனவே, அப்பா உரைத்த ஞானத் திறவுகோலை நாம் தேடித்தான் அடைய வேண்டும் என்று இறைவன் மறைத்துவிட்டான் போலும். இந்தக் காப்புப் பாடலில், “ரப்பனா திறவுகோல் தந்து எனைக் காத்தருள்” என்று பீரப்பா பிரார்த்திப்பது போல் அந்தத் திறவுகோலை இறைவனேதான் ஒருவருக்குத் தந்தருள வேண்டும்.

            தோழர் ஹாமீம் முஸ்தபா அவர்கள் இற்றைச் சூழலில் மிகக் காத்திரமான சமூக அரசியல் கவிதைகளை எழுதி வருபவர். ’தமிழின் மஹ்மூது தர்வேஷ்’ என்று அவரை அழைக்கலாம். இந்நூலில் இடம்பெற்றிருக்கும் அவரின் கட்டுரைகள் நவீன ஆய்வுப் பார்வைகளுடன் எழுதப்பட்டுள்ளன. ‘மாலை’ என்னும் சிற்றிலக்கிய வகை பற்றிப் பேசுமிடத்தில் அவர் தரும் அவதானங்கள் கூர்ந்து நோக்குதற்கும் மேலாய்வு செய்தற்கும் உரியவையாக உள்ளன. ”சிற்றிலக்கிய வடிவமாக மாலை இருந்தாலும் தமிழில் இஸ்லாம் சமயம் சார்ந்து உருவான இலக்கியங்களுக்கு மாலை என்று பெயர் குறிப்பிடும் வழக்கம் இருந்ததாகத் தெரிகிறது” என்று அவர் குறிப்பிடுவதை ஓர்ந்தால் ’மாலை’ மயக்கம் நீங்கித் தெளிவு பிறக்கும்.


            
”முன்பெல்லாம் சில முஸ்லிம் வீடுகளில் புறாக்கின் ஓவியம் சுவரில் மாட்டப்பட்டிருக்கும்” என்று ஹாமீம் முஸ்தபா தரும் செய்தியும் பரந்துபட்ட ஆய்வு ஒன்றிற்கான களம் ஆகும். சில வீடுகளில் நானும் அந்த ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன். கடைசியாக அதை நான் திருச்சி நத்தர்வலி தர்காத் தெருவின் நுழைவாயிலுக்கு எதிர்ப்புறம் அமைந்திருக்கும் ’சாந்த் மஸ்தான் தர்கா’வில் கண்டேன். இன்றும் அது இருக்கக்கூடும். இந்த ஓவியத்தை முதன் முதலில் வரைந்தவர் யார்? அது தமிழகத்துக்கு எப்போது யாரால் வந்துற்றது? என்றெல்லாம் வினா எழுப்பி விடைகள் காணும்போது பல்பண்பாட்டு நுட்பங்கள் பலவற்றை நாம் அறியலாம்.

            ”பொதுவாக தமிழ் மரபில் நின்றுகொண்டு காப்பிய இலக்கியம் படைப்பவர்கள் தமிழ்நாட்டின் நிலவியல் பின்புலம் சார்ந்து அவற்றைப் படைத்தளிப்பது என்பது ஒரு மரபாகப் பேணப்பட்டு வருகிறது” என்று ஹாமீம் முஸ்தபா எழுதுகிறார். சீறாப் புராந்த்திலும் அறபு நாட்டை ஐநில வருணனையுடன் உமறுப் புலவர் வரைந்து காட்டுகிறார். அதற்குக் காரணம் இந்த இலக்கிய மரபுதான். செய்யுள் வழக்கு மற்றும் நாடக வழக்கு என்று தொல்காப்பியம் குறிப்பிடும் இலக்கணங்களை அறிந்தால் இதில் குழப்பம் ஏற்படாது. அறபு நிலம் பெரிதும் பாலைவனமாக இருப்பது நாடக வழக்கு (எதார்த்த நிலை) ஆகும். அறபு நிலத்தை ஐவகை நிலங்கள் கொண்ட ஒன்றாகப் பாடுவது தமிழிலக்கணத்தைப் பின்பற்றி இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் வகுத்துக் கொண்ட செய்யுள் வழக்காகும். இதில் தவறு ஏதும் இல்லை.

            ’புறாக்’ என்னும் விண்புரவியின் பெயர் இஸ்லாமிய நவீன உலகில் செலுத்தும் தாக்கத்திற்கு ஹாமீம் முஸ்தபா பல உதாரணங்களைக் காட்டியுள்ளார். விமான நிலையம், ஆளில்லாப் போர் விமானம், விண்வெளி மையம், கடல்சார் சேவை மையம் முதலியவற்றுக்கு புறாக் என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகிறார். என் உறவினர் ஒருவர் தன் மகிழுந்துக்கு புறாக் என்று பெயர் சூட்டியிருப்பதும், என் வசிப்பிடப் பகுதியில் ’புறாக்’ என்னும் ஆட்டோ ஒன்று ஓடுவதும் நினைவுக்கு வருகிறது. இவையும் அதன் தாக்கம் உணர்த்தும்.


            
ஆலிப்புலவர் இயற்றிய ’மிகுறாஜ் மாலை’யில் ஒரு பகுதியின் பெயர் “அறுஷியல்”. இச்சொல்லினை இனாம்குளத்தூர் ஷாகுல் ஹமீது ஹஜ்ரத் (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். “அரசியல் மீது நமக்கு நம்பிக்கை இல்லை; நாம் அர்ஷியல் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்று அவர்கள் சொல்வதை இங்கே நினைவு கூர்கிறேன்.

            இந்நூலின் வழியாக நாம் அறியலாகும் இன்னொரு முக்கியமான பண்பாட்டு அம்சம் இஸ்லாமிய இலக்கியங்களின் முற்றோதலாகும். ஹாமீம் முஸ்தபா எழுதியுள்ள ”முற்றோதல் மரபும் இஸ்லாமிய இலக்கியங்கள் முற்றோதப்படுதலும்” என்னும் கட்டுரை இந்த மரபின் நீள அகலங்களைத் துலக்கிக் காட்டுகிறது. அவர், இந்த முற்றோதல் மரபு பற்றி எப்போதும் சிலாகித்துப் பேசுபவர் என்பதை அவருடன் பழகியோர் அறிவர்.

            ”வலிமார்கள் எனப்படும் இறைநேசர்கள், சூஃபிகள் இவர்களிடம் தொழிற்பட்ட முக்கியமான குணங்களுள் ஒன்று இஸ்லாத்தை வட்டாரப்படுத்துதல்” என்று ஹாமீம் முஸ்தபா கூறுவது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த வட்டாரப்படுத்தல் மீது உலகமயமாக்கலின் காலச் சூழல் வழி ஒற்றை மயமாக்குதல் செலுத்தும் தாக்கத்தினை விரிவாகப் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது.

            ”இஸ்லாம் உருவான நிலப்பரப்பான அரபு வட்டாரத்தில் தரீக்காக்கள் சார்ந்த எத்தகைய அசைவுகளும் இல்லை” என்று ஹாமீம் முஸ்தபா சொல்வது சவூதிக் குடும்பத்தின் வல்லாட்சி உருவான காலத்திற்குப் பின் ஏற்பட்ட நிலையைக் குறிப்பதாக விளங்குகிறேன். இதுவும் விரிவான உரையாடலுக்குரிய ஒரு புள்ளியாகும்.

            ஹாமீம் முஸ்தபா எழுதியுள்ள “16, 17 நூற்றாண்டு குமரி மாவட்டமும் தமிழ் இஸ்லாமிய இலக்கியங்களும்” என்னும் கட்டுரையும் வரலாற்று நோக்கில் குமரி மாவட்டம் பற்றிய சுவையான செய்திகளை நல்குகின்றது.

            ”கோட்டாறு புலவர் ஞானியார் ஷெய்கு முகியித்தீன் மலுக்கு முதலியார்” என்னும் கட்டுரையில் பன்னூலாசிரியர் தக்கலை எம்.எஸ்.பஷீர் “தீட்சை அளித்தவர்” என்னும் உட்தலைப்பின் கீழ் இப்படி எழுதுகிறார், ”சூபி ஞானி மன்சூர் ஹல்லாஜின் சீடர்களில் ஒருவரான மௌலானா செய்யிது தமீம் குதுபுஸ்ஸமான் மௌலானா செய்யிது ஜமாலுல் மாஹீ பரிய்யி ஆவார் என அறியப்படுகிறது.” இந்தச் செய்தி கருத்து மயக்கத்தை ஏற்படுத்துகிறது. இவர்தான் கோட்டாறு ஞானியாருக்கு தீட்சை வழங்கினாரா? அப்படிச் சொல்ல இயலவில்லை. மன்ஸூர் ஹல்லாஜ் (ரஹ்) அவர்களின் காலம் பொ.ஆ 858 – 922 (ஹிஜ்ரி 244 – 309); கோட்டாறு ஞானியாரின் காலம் பொ.ஆ 1769 – 1794 (ஹிஜ்ரி 1167 – 1209) ஆகும். இருவருக்கும் இடையே எட்டு நூற்றாண்டுகள் இடைவெளி இருப்பதால் மன்ஸூர் ஹல்லாஜின் சீடரிடம் இவர் நேரடியாக தீட்சை பெற்றிருக்க வாய்ப்பில்லை என்பது போதறும். கோட்டாறு ஞானியார் அவர்கள் மானசீக தீட்சை பெற்றிருப்பார் என்றே கருத முடிகிறது. ’நாஞ்சில் நன்மொழியோன்’ எழுதிய இக்கட்டுரை வழி ஞானியாரப்பாவின் அகப் பரிமாணங்களை நான் அறிந்து மகிழ்ந்தேன்.

இக்கட்டுரைப் பொருண்மையின் மேல் விளக்கங்களை இந்நூலின் இறுதிக் கட்டுரையான “ஞானியார் சாகிபு: ஓர் அறிமுகமும் சில பகிர்வுகளும்” என்னும் கட்டுரை தருகிறது. [இக்கட்டுரையின் அடிக்குறிப்பு எண்#3 ஞானியார் சாகிபிற்கு தீட்சை அருளியவர் குறித்துக் குறிப்பிடுகிறது. அதிலும் ஆண்டுக் கணக்கு இடிக்கிறது. கோட்டாறு வந்துற்ற அந்த மகான் ஹல்லாஜிய்யா ஞானக் கொடிவழியில் வந்த ஒருவராதல் வேண்டும் என்பதே சாத்தியம்.] இக்கட்டுரையை இயற்றிய செந்தாமரை கே.பி.எஸ்.ஹமீது அவர்கள் ஞானியார் சாகிபின் கொள்ளுப் பேரரும், சதாவதானி செய்குத்தம்பிப் பாவலரின் மகனாரும் என்பதால் ஹல்லாஜிய்யா தரீக்கா குறித்தும் ஞானியார் சாகிபு குறித்தும் அவரால் நேரடி அனுபவத்திலிருந்து பேச இயல்கிறது. அதே சமயம் ஹல்லாஜிய ஞான முழக்கம் கருத்துப் பிறழ்வுகளுக்கும் வழி வகுத்துவிடும் வாய்ப்புகள் உண்டு என்று அவர் உரைப்பது ஞான முதிர்வு அடையாத இளம் பிள்ளைகளுக்கும், ஞான சூன்யர்களான அறியாப் பிள்ளைகளுக்கும் ஓர் எச்சரிக்கை ஆகும். இதற்கு மேல் இக்கட்டுரை பற்றிப் பேசாமல் ‘சுருட்டி மறைக்க’ வேண்டும் என்று உணர்கிறேன் எனில் அது எவ்வளவு ஆழமான ஒன்று என்பது புலப்படும்.

            ”வேதபுராணம்” என்னும் ஒப்பரிய ஞானப் பனுவலினை இன்பத் தமிழில் இயற்றி மாநிலம் பயனுற அளித்த மகான் நூஹ் லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்கள் பற்றி ரஹ்மத் ராஜகுமாரன் எழுதியுள்ள கட்டுரை அற்புதங்கள் நிறைந்த அன்னாரின் வாழ்க்கை குறித்த கோட்டுச் சித்திரமாக அமைந்துள்ளது. குச்சி, எலியின் உடல், தன் உடல், ஒரு ஆன்மிகக் குழுவினரின் உடல்கள் ஆகியவற்றின் துண்டான பகுதிகளை மீண்டும் ஒட்ட வைத்து முழுமைப்படுத்தும் அற்புதங்கள் விரிவதால் இந்தக் கட்டுரைக்கு “உறுப்புக்களை ஒட்ட வைக்கும் மகான் நூஹ் லெப்பை ஆலிம் (ரஹ்)” என்று ர.ரா தலைப்பிட்டுள்ளார். இப்னு அறபி (ரஹ்) அவர்களின் ‘ஃபுஸூசுல் ஹிகம்’ நூலைக் கசடற கற்றல் – கராமாத் என்னும் அற்புதங்கள் – விசித்திரமான ஒரு சூழலில் திருமணம் – இல்லற வாழ்க்கை – வேத புராணம் இயற்றல் – இறப்பு என்னும் கட்டங்களாக அமைந்த ஆலிமவர்களின் வாழ்க்கையில் இருந்து அற்புதங்கள் நிகழ்ந்த பகுதியை பெரிதும் முன்னிறுத்துவதால் இத்தலைப்புப் பொருத்தமாக உள்ளது.

            ஆயிரம் கட்டுரைகள் எழுதிய பின்னும் அயராது எழுதி எழுதி மேற்செல்லும் ர.ரா அவர்களது கட்டுரையின் தொடர்ச்சி போல் முகம்மது சலீம் எழுதிய “வேதபுராணம் என்னும் ஞான வித்தகம்” என்னும் இச்சிறு கட்டுரை அமைந்துள்ளது. இதில் வேதபுராணத்தின் கட்டமைப்பை வரைந்து காட்டிய பின்னர், “தமிழ் சூபி இலக்கிய வெளியில் பயிற்சியும் ஆர்வமும் உள்ள ஆய்வறிஞர்கள் வேதபுராணம் குறித்து ஆழமாக ஆய்வு செய்து இந்த பேரறிவுக் களஞ்சியத்தின் அருமை பெருமைகளைத் தமிழ் இலக்கிய உலகம் உணர வழிவகை செய்ய வேண்டும்” என்று முகம்மது சலீம் குறிப்பிட்டுள்ளார். அவர் கோரும் அப்பணி பெரும்பணியும் அரும்பணியும் ஆகும். மகான் நூஹ் லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்கள் தன் இளம் பருவத்தில் ஷைகுல் அக்பர் இப்னு அறபி (ரஹ்) எழுதிய “ஃபுஸூசுல் ஹிகம்” என்னும் நூலினை ஆழ்ந்து கற்றவராதலால் அதன் அகமிய வெளிச்சத்தில் வேதபுராணத்தை எழுதியிருப்பார் என்று அனுமானிக்கலாம். இந்த அனுமான நோக்கில் வேதபுராணம் ஆராயப்படல் வேண்டும். ஆர்.பி.எம் கனி அவர்கள் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகட்கு முன் வெளியிட்ட “மெய்யறிவின் ஒளிச்சுடர்கள்” என்னும் நூல் ஃபுஸூசுல் ஹிகம் நூலின் தோராயமான மற்றும் முழுமையல்லாத தமிழாக்கமாகத் திகழ்கிறது. அந்நூலின் முழுமையான தமிழாக்கத்தை இறைஞானி ஹகீமி ஷாஹ் ஃபைஜி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் செய்து அச்சுக்கு ஆயத்தம் ஆகி வருகிறது. அந்நூல் வெளியாகும் பட்சத்தில் மேற்சொன்ன ஆராய்ச்சிக்கு வழி பிறக்கும், இன் ஷா அல்லாஹ்.

            பீரப்பா அவர்கள் கேரளாவின் பீர்மேடு முதல் குமரிமுனை வரை புலங்கள் பல பெயர்ந்து தவமியற்றினார்கள் என்பது போன்றே பல திசைகளில் இருந்தும் பயணித்து வந்த ஞானச் செய்திகளை உள்வாங்கி கிரகித்து உண்மை கண்டு அவற்றைத் தன் இலக்கியங்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஞானமணி மாலையில் பீரப்பா ஓர் உருவகக் கதையும் அதற்கு விளக்கமும் உரைக்கிறார்கள். அந்தக் கதை ஜென் ஞான நெறியிலும் இந்து மத வேதாந்த நெறியிலும் காணக் கிடைக்கிறது! ஒரே கதை பல்வேறு சிந்தனைப் பள்ளிகளால் தமக்குத் தகுந்தபடி பிரதியாக்கப்படும் என்பதற்கு இஃதொரு சான்று.

            “சூழ்வனத்தில் ஒரு சோம்பி இருந்தாற்போல் மாளவிருக்கும் மனிதர்காள்” என்று நம்மை அழைத்து அந்தக் கதையைச் சொல்கிறார் பீரப்பா. “புலி ஒன்று ஒருவனைத் துரத்துகிறது. அவன் ஓடிப் போய் ஒரு கிணற்றில் விழுகிறான். கிணற்றுக்குள் கொடி ஒன்று படர்ந்துள்ளது. அதை அவன் பிடித்துக் கொண்டு தொங்குகிறான். மேலே இருந்து அந்தப் புலி அவனை கவனித்துக் கொண்டு நிற்கிறது. அப்போது அந்த வேரினை இரண்டு எலிகள் கடிக்க ஆரம்பிக்கின்றன. அவன் கீழே பார்க்கிறான். நீர் இல்லாத அந்தப் பாழ் கிணற்றில் நெருப்பும் தேளும் பாம்பும் கிடக்கின்றன. இப்போது அவன் எப்படி மகிழ்ச்சி அடைய முடியும்?” என்பதே கதை. இதற்கான விளக்கத்தையும் பீரப்பா உரைக்கிறார்: “துரத்திய புலி என்பது மரணம் ஆகும். கிணறுதான் இந்த உலகம். அவன் பிடித்த கொடிதான் இன்றைய நாள். அந்தக் கொடியைக் கடித்து நறுக்கும் எலிகள்தாம் பகலும் இரவும் (சூரியனும் நிலாவும்).”

            ஜென் தத்துவக் கதைகளில் இதன் பிரதி சற்று வேறுபடுகிறது. அந்த மனிதன் பிடித்திருக்கும் கொடியில் கொத்தாகப் பழங்கள் தொங்குகின்றன. மேலே நிற்கும் புலியையும் கீழே கிடக்கும் விஷ ஜந்துக்களையும், தான் பற்றியிருக்கும் கொடியை நறுக்கும் எலிகளையும் மறந்து அவன் பழங்களைப் புசிக்கிறான். ’ஆஹா, எம்புட்டு ருசி!’ என்று மகிழ்கிறான். இவ்வுலகை அனுபவித்தல் என்பது இத்தகையதே என்பது ஜென் கதை உணர்த்தும் நீதியா? இருக்கலாம். சிலர் வேறு கோணத்திலும் விளக்குகின்றனர். அதாவது, வாழ்வில் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதிலும் மகிழ்ச்சி நல்கும் விடயங்கள் இருக்கவே செய்யும், அதை நாம் அடையாளம் காண வேண்டும் என்று சொல்கின்றனர்.

            சரி, அவன் எவ்வளவு நேரம்தான் அந்தப் பழங்களை ருசிக்க முடியும்? எலிகள் அந்தக் கொடியை நறுக்கிவிட்டால் அவன் கீழே விழுந்து செத்துவிடுவானே? இப்போது அவன் எப்படித் தப்பிப்பான்? என்று வினாக்கள் எழுகின்றன. இந்தக் கதைக்கு வேதாந்திகளின் பிரதி விடை சொல்கிறது. அவர்கள் இக்கதையில் அந்த மனிதனின் நண்பனை வர வைக்கிறார்கள். அவன் ஒரு சிறந்த் வேடன். அவன் அந்தப் புலியை விரட்டிவிட்டு, கிணற்றுக்குள் கிடக்கும் மனிதனிடம் ஒரு கயிற்றைப் போடுகிறான். கிணற்றுக்குள் கிடப்பவன் கொடியை விட்டு அந்தக் கயிற்றைப் பற்ற வேண்டும். அப்படிச் செய்தால் அந்த நண்பன் அவனை மேலே இழுத்துக் காப்பாற்றிவிடுவான். அந்த நண்பன்தான் குருநாதர். அவர் வீசும் கயிறு என்பது அவர் வழங்கும் தீட்சையும் பயிற்சியும் ஆகும்.

            இந்த நூலினை நான் வாசித்தபோது என் சிந்தையில் சுடர்ந்த சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டு என் அணிந்துரையை நிறைவு செய்ய விழைகிறேன்.     


   

            பீரப்பா, ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா, மற்றும் உமறுப் புலவர் ஆகியோர் சமகாலத்தவர் என்றாலும் மூவருள் உமறுப் புலவரே ஏனைய இருவரினும் மிக இளையவர். பீரப்பாவின் பாடல்களை உமறுப் புலவர் அறிந்திருக்க வேண்டும் என்று கருதலாம். பீரப்பாவின் தாக்கமும் அவரின் பாடல்களில் இருக்க வாய்ப்பு உண்டு. உதாரணமாக, “கருவுருவாய்த் திருவுருவாய் கருவிலுறு மருவுருவாய் திருவுருவாய்…” என்று இறைவனை வருணித்துச் செல்கிறது பீரப்பா பாடிய ’ரோசு மீசாக்கு மாலை’யின் திறப்புச் செய்யுள். உமறுப் புலவர் இயற்றிய சீறாப்புராணத்தின் காப்புச் செய்யுளிலேயே இதன் தாக்கத்தைக் காண்கிறோம்:  ”திருவுருவாய் உணருருவாய் அறிவினொடு தெளிவிடத்துஞ் சிந்தியாத / அருவுருவாய் உருவுருவாய் அகம் புறமும் தன்னியலா வடங்கா வின்பத் / தொருவுருவாய் இன்மையினில் உண்மையினைத் தோற்றுவிக்கும் ஒளியாய் யாவும் / மருவுருவாய் வளர்காவல் முதலவனைப் பணிந்துள்ளி வாழ்த்து வாமே.”  இது போல் சீறாப் புராணத்தில் எங்கெல்லாம் பீரப்பாவின் தாக்கம் இருக்கிறது என்று ஒரு தனி ஆய்வே நிகழ்த்தலாம்.

            பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார், ஆலிப்புலவர் போன்ற மெய்ஞ்ஞானியர் யாத்த பனுவல்களைப் பற்றி ஆராய்ச்சியுடன் விளக்கி எழுதப்படும் நூலொன்று பாமரர் ஈடுபட்டு வாசிக்கும்படி அமைவது சாத்தியமில்லை என்றே சொல்லிவிடலாம். எல்லோர்க்குமான எளிய அறிமுக நூலாக இத்தகைய நூற்கள் எழுதப்படும்போது மெய்ஞ்ஞானம் மழுக்கப்பட்டு ஒளி குறைந்துவிடும் வாய்ப்புள்ளது. அதே சமயம், பொது மக்களும் இதனை எடுத்து வாசிக்க ஆர்வமுறும் வகையில் எழுதுவது அவசியமாகிறது. இதனை எப்படிச் சாதிப்பது? முடிந்த அளவு பிறமொழி மேற்கோள்களைத் தவிர்ப்பது ஒரு வழி. விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய நூலான “தி ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்” என்பது உலகெங்கும் பேரெண்ணிக்கையில் விற்பனை ஆன ஒன்றாகும். அதன் முன்னுரையில் அவர் சொல்வார்: “என் பதிப்பாளர் என்னிடம் சொன்னார், ’நீங்கள் இந்நூலில் இடும் ஒவ்வொரு அறிவியல் சூத்திரமும் சமன்பாடும் இந்த நூலின் விற்பனையைப் பாதியாகக் குறைத்துவிடும்.’ எனவே இதில் நான் முடிந்த அளவு அறிவியல் சூத்திரங்களையும் சமன்பாடுகளையும் தவிர்த்திருக்கிறேன்.” இந்த உத்தி இந்நூலிலும் கையாளப்பட்டுள்ளது.

            உதாரணமாக, “பரமா நபியைப் படைத்திலையாகிற் படைப்பொன்றும் இல்லை என்று உரமாய் மொழிந்த என் உத்தமனே” என்னும் பீரப்பாவின் மேற்கோளைக் காட்டும்போது, “லவ்லாக்க லவ்லாக்க லமா ஃகலக்த்தல் அஃப்லாக்” (நபியே! நீவிரில்லை எனில் வானாதிகளைப் படைத்திரேன்) என்னும் அறபி மேற்கோளினை எழுதலாம். அதேபோல், ”பெருகு தொன்னூறோடொன்பதும் அரிய திருநாமமென்று” என்னும் வரியின் செய்திக்கு, “இன்ன லில்லாஹி திஸ்’அத்த வ திஸ்’ஈன இஸ்மன், மிஃத்த இல்லா வாஹிதா” (திண்ணமாக அல்லாஹ்வுக்கு தொன்னூற்றொன்பது பெயர்கள் உள, நூற்றுக்கு ஒன்றின்றி) என்று அறபி மேற்கோள் எழுதலாம். [இப்படி எழுதுவதில் இன்னொரு சிக்கலும் உண்டு. ஸூஃபி வட்டங்களில் புழக்கத்தில் உள்ள சில ஹதீஸ்களுக்கு எடுகோள் காட்ட இயலாது. அவற்றை ஏற்கும் விடயத்தில் பெரிய ஆராய்ச்சிகளைத் தனியே விளக்கமாக எழுத வேண்டியிருக்கும். மேலே நாம் சுட்டிய இரண்டு ஹதீஸ்களில் முதலாவது இதற்கு ஒரு சான்று. இரண்டாவது ஹதீஸுக்கான எடுகோள்: ஸஹீஹுல் புஃகாரி #7392.] இப்படி அறபியில் மேற்கோள் காட்டி எழுதும்போது பொது வாசகரிடம் அந்நூல் வரவேற்புப் பெறாமல் போய்விடக்கூடும். ஆனால், அத்தகு சான்றாதார எடுகோள்கள் காட்டப்படாத பட்சத்தில் ஆராய்ச்சி நூலின் வலிமை சற்றே குறைபடும் என்பதும் எதார்த்தம். இந்நூலின் கட்டுரையாளர்கள் இவ்விரண்டு நிலைகளுக்கும் நடுநின்று எழுதியுள்ளார் என்பது என் அவதானம்.

            ’தெற்கிலிருந்து ஒளிரும் சூஃபிச் சுடர்கள்’ நாற்றிசையும் பரவி ஞான வெளிச்சம் இலங்கட்டும்.