Wednesday, June 4, 2025

ஹோஷ் தர் தம்

 தற்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் ஆன்மிக நூல் ஒன்றின் முதல் அத்தியாயம் இது. ஸூஃபிகள் மேற்கொள்ளும் மூச்சுப் பயிற்சி பற்றிய ஒரு விளக்கம்.











ஹோஷ் தர் தம்

(சுவாசத்தில் சுதாரிப்பாக இருத்தல்)

            ஃபார்சி மொழியில் ”ஹோஷ்” என்றால் சுதாரிப்பு, “தம்” என்றால் மூச்சு. “ஹோஷ் தர் தம்” என்றால் ’மூச்சில் சுதாரிப்பு’ என்று பொருள்.

            உலகில் தோன்றிய ஆன்மிக நெறிகள் அனைத்துமே ஆன்மிகத்தின் அடைப்படை என்று மூச்சையே சுட்டிக் காட்டியுள்ளன. ஆன்மிகத்தில் ஈடுபடும் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் மூச்சின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

            மூச்சே உயிரின் அடையாளமாக இருக்கிறது. மனித உடலுக்குள் ”ரூஹ்” என்னும் உயிர் இறைவனின் மூச்சாகவே உள்ளே நுழைந்தது என்று குர்’ஆன் உணர்த்துகிறது:

மனிதனை நான் செவ்வையாக்கி அவருக்குள் எனது உயிரில் இருந்து ஊதியதும் நீவிர் அனைவரும் அவருக்குச் சிரம் பணிவீராக!  (குர்’ஆன்: 15:29)

            எனவே, மூச்சு என்பது உயிருடன் இருப்பதன் அடையாளமாக நிகழ்ந்து வருகிறது. உயிர் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு படைப்பிலும் மூச்சின் இயக்கம் இருக்கிறது.

            மனிதனின் அடிப்படைத் தேவைகள் உணவு உடை உறையுள் என்று மூன்றைச் சொல்கிறோம். ஆனால் இவை மூன்றையும்விட மூச்சே அடிப்படை என்பது உண்மை.

            அடிப்படைத் தேவைகளின் அவசியத்தின் அளவை மதிப்பிட்டால், உறைவிடத்தை விட உடையும், உடையை விட உணவும் மிக அவசியம் என்றாகும்.

பனி மலைகளிலும் புல்வெளிகளிலும் பாலைவனங்களிலும் உலவித் திரிந்த நாடோடி மக்களுக்கு வீடுகள் இல்லை, ஆனால் ஆடைகள் தேவைப்பட்டன. உயிருள்ள தாவர, விலங்கு இனங்களுக்கு ஆடைகள் இல்லை, ஆனால் உணவு தேவைப்படுகிறது. எனவே உணவே ஏனைய இரண்டை விட அதிக அவசியம் என்று அறிகிறோம்.

ஆனால், உண்ண உணவும் குடிக்கத் தண்ணீரும் இல்லாத நிலையில்கூட ஒருவரின் / ஒன்றின் உயிர் சட்டென்று போய்விடாது. மூச்சு ஓடிக் கொண்டிருக்கும் வரை உயிரும் இருக்கிறது.

மூச்சு என்பது ரூஹ் என்னும் உயிருடன் மட்டுமல்லாது நஃப்ஸ் என்னும் மனத்துடனும் தொடர்பு கொண்டுள்ளது. அதையே நாம் ஆன்மா என்றும் அழைக்கிறோம். மனத்தைத் தூய்மையாக்கி வெற்றி பெறுவதே ஆன்மிகம். மனத்தை உயர் நிலைக்குக் கொண்டு போவதே ஆன்மிகம்.

மனத்தைத் தூய்மையாக்கி உயர் நிலை எய்தச் செய்ய மூச்சு என்னும் கருவியை முறைப்படிக் கையாள வேண்டியுள்ளது. இதில் இருந்தே ஆன்மிகத்தில் மூச்சு இன்றியமையாத இடம் பெறுகிறது.

அறபியில் ‘நஃப்ஸ்’ என்னும் சொல் மனத்தையும் ‘நஃபஸ்’ என்னும் சொல் மூச்சையும் குறிக்கிறது. ஒரே வேரில் இருந்தே இவ்விரு சொற்களும் வருகின்றன. இதில் இருந்தே இவ்விரண்டும் தொடர்பு உடையவை என்பதை அறியலாம்.

”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. இது ஒரு ஞான வாசகம் ஆகும். வயல்களில் அறுவடை முடிந்து நெல் மணிகளில் இருந்து பதர்களைப் பிரிப்பதற்காக முறத்தில் இட்டுப் புடைப்பார்கள். காற்று வீசும்போதுதான் அதைச் செய்ய முடியும். அதையே இப்பழமொழி குறிக்கிறது என்று பொதுவாக எண்ணுகிறோம். சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே ஒரு காரியத்தைச் சாதித்துவிட வேண்டும் என்பதைக் குறிப்பதாகக் கருதுகிறோம். ஆனால் இதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. “உன் உடலில் மூச்சு ஓடிக் கொண்டிருக்கும்போதே அதில் பயிற்சி செய்யும் முறையை ஒரு குருவிடம் கற்று அதன்படி பயிற்சி செய்து உன் மனத்தைத் தூய்மை ஆக்கிக் கொள்” என்பதே அதன் பொருள் என்று ஸூஃபி மகான் ‘தில்நவாஸ்’ ஃபைஜி ஷாஹ் நூரீ (கத்தசல்லாஹு சிர்ரஹுல் அஜீஸ்) அவர்கள் சொல்கிறார்கள்.







 

ஒவ்வொரு மூச்சிலும் இறைவனை நினைவு கூர்வதை ஸூஃபி நெறியின் புழக்க பாஷையில் (இஸ்திலாஹில்), “பாசே அன்ஃபாஸ்” என்று குறிப்பிடுகிறார்கள். இது ஒரு ஃபார்சி சொற்றொடர் ஆகும். இதன் பொருள் “மூச்சுக்களைப் பாதுகாத்தல்” என்பதாகும். [இதனைப் பாமர வழக்கில் பாசன்பாஸ் என்று கூறுவதும் உண்டு.]

மூச்சு என்பது இறைவனின் மிகப் பெரிய அருட்கொடைகளில் ஒன்றாகும். அதனை வீணாக்காமல் இருப்பதும், அதற்கு நன்றி செலுத்துவதும் மனிதனின் மீது கடமையாக இருக்கிறது. “குலிஸ்தான்” என்னும் நூலின் தொடக்கத்தில் இமாம் சஃ’தி ஷீராஸி (ரஹ்) சொல்கிறார்கள்:

”உள்ளே செல்லும் மூச்சு வாழ்வை அதிகப்படுத்துவதாக உள்ளது. வெளியே வரும் மூச்சு ஜீவனுக்கு சுகம் அளிக்கிறது. எனவே ஒவ்வொரு மூச்சிலும் இரண்டு அருட்கொடைகள் உள்ளன. ஒவ்வொரு அருட்கொடைக்கும் நன்றி செலுத்துவது கடமையாக உள்ளது.”

இந்த நன்றியறிதல் ஒவ்வொரு மூச்சிலும் இறைவனை நினைவு கூர்வதாலேயே நிறைவேற்றப்பட முடியும் என்று ஸூஃபிகள் சொல்கின்றனர்.











இதில் ஒரு நுட்பமும் உண்டு. அருட்கொடை என்பது இறைவன் தன் கருணையால் நமக்கு அருள்வதாகும். அது நம் உழைப்பால் உண்டாவது அல்ல. அவ்விதத்தில், மூச்சு என்பது முழுமையான ஓர் அருட்கொடையே. ஏனெனில், மூச்சு நம் முயற்சி இல்லாமலேயே இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டி என் ஷைஃகு நாயகம் அல்லாமா பிலாலி ஷாஹ் ஜுஹூரி (தாமத் பரக்காத்துஹும்) அவர்கள் சொல்கிறார்கள்:

“இரவில் நீ உறங்கும்போது நீயா மூச்சு விடுகிறாய்? நீயே உன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறாய்? பிறகு எப்படி நீ மூச்சு விடுவதாகச் சொல்ல முடியும்? உன்னை மூச்சை இயக்குபவன் அல்லாஹ். அவன்தான் காற்றை உள்ளே செலுத்துகிறான், பின்னர் வெளியேறவும் செய்கிறான். இரவில் உன் மூச்சை இயக்குபவன் அல்லாஹ் என்றால், அந்த உன் தேவையை பகலில் உனக்கு நிறைவேற்ற வேறு ஒருவரையா வைப்பான்? அல்லது நீயே நிறைவேற்றிக் கொள் என்றா சொல்வான்? பகலிலும் அந்தத் தேவையை அவனேதான் உனக்கு நிறைவேற்றுவான். எனவே, இருபத்து நான்கு மணி நேரமும் உன்னை மூச்சு விட வைப்பவன் அல்லாஹ்தான். அதனால், ஒவ்வொரு மூச்சிலும் அவனை நீ திக்ரு (தியானம்) செய். விழித்திருக்கும்போது நீ உன் மூச்சில் அவனை திக்ரு செய்தால், நீ தூங்கும்போது உன் மூச்சில் அவனே திக்ரை நடத்தி அதன் பலனை உனக்கு எழுதிவிடுவான்!”

பாசே அன்ஃபாஸ் என்னும் இந்த மூச்சு திக்ரு ஆன்மிகப் பயிற்சியின் அடிப்படை ஆகும். இது செம்மை ஆகாமல் வேறு பயிற்சிகள் நடக்காது. மவ்லானா ரூமி (ரஹ்) கணிச்சி / குந்தாலி (pickaxe) என்னும் கருவியைக் குறியீடாகக் கொண்டு இந்த மூச்சு பயிற்சியை விளக்கியுள்ளார்.[அன்ஃபாஸ் = மூச்சுகள்; ஃபாஸ் = கணிச்சி என்னும் நிலக் கோடரி]. அவர் சொல்கிறார்:

“உன் வீட்டின் அடித்தளத்தில் ஒரு பொக்கிஷம் மறைந்துள்ளது.

எழு, கையில் கணிச்சியை எடுத்துக்கொண்டு வேலையில் இறங்கு.

உன் இந்த பழுதுபட்ட வீட்டின் தரையைப் பெயர்த்து எடு,

உள்ளே மறைந்து கிடக்கும் பொக்கிஷத்தை அடைந்துகொள்.

அந்த மாணிக்கக் கற்களைக் கொண்டு செல்வந்தன் ஆகிவிடு.

இது போல் ஆயிரம் வீடுகளை அது உனக்குப் பெற்றுத் தருமே!

இன்னும் நீ ஏன் இந்த அற்ப வீட்டில் வாழ்கிறாய் என் அன்பே!

கூடிய விரைவில் இவ்வீடு தானகவே விழத்தான் போகிறது;

அப்போது இந்த பொக்கிஷம் வெளிப்பட்டால் அது உனதாய் இராது

நீ இவ்வீட்டை இடிக்கும் வேலையைத் தொடங்கு இக்கணமே

அந்தப் பொக்கிஷம் உன் உழைப்புக்கான சன்மானமே

பிய்ந்து போகும் கூரைக்கு ஒட்டுப் போடுவதையும்

இடிந்து விழும் சுவருக்குப் பூசுவதையும் விட்டுவிடு இப்போதே.

சீக்கிரம்! குந்தாலியைக் கையில் எடுத்து தரையைத் தோண்டு!

ஒட்டுப் போடுதலும் பூச்சு வேலையும் என்பதென்ன?

உண்பதும் குடிப்பதும் ஆகும்.

உன் இந்த உடல் எனும் அங்கி அவ்வப்போது கிழிகிறது,

உணவாலும் இழி மனத்தின் திருப்திகளாலும்

அதை நீ அன்றாடம் ஒட்டுத் தைப்பதில் மூழ்கியுள்ளாய்;

நிலக் கோடரியால் அடித்தளத்தில் ஓரிடத்தைப் பிளந்து பார்,

உன் நிலத்தினுள் மாணிக்கம் ஒன்று சுடர் விடுவதைப் பார்!”

                                                                        (மஸ்னவி ஷரீஃப்)

”அல்லாஹ்” என்னும் திருநாமத்தைக் கொண்டே ஸூஃபிகள் இந்த மூச்சு திக்ரு என்னும் பயிற்சியைச் செய்கின்றனர். “அல்லாஹு அல்லாஹ்” அல்லது “அல்லாஹ் அல்லாஹ்” என்று ஒரு மூச்சு சுழற்சியில் (அதாவது உள்மூச்சு + வெளிமூச்சு) உள்ளத்தால் உச்சரித்து மூச்சை லயப்படுத்தி நிதானமாகச் செய்வதே பாசே அன்ஃபாஸ் என்னும் மூச்சுப் பயிற்சி ஆகும். இதன் தொடர்பாக இரண்டு ஹதீஸ்கள் கவனத்திற்குரியன:

”உலகில் அல்லாஹு அல்லாஹு என்று சொல்லப்படாமல் ஆகும் வரை உலக முடிவு நிகழாது (லா தகூமுஸ் ஸாஅத்து ஹத்தா லா யுகால ஃபில் அர்ளி அல்லாஹு அல்லாஹு).” (சஹீஹ் முஸ்லிம் #148-அ)

”அல்லாஹு அல்லாஹு என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் உலகமுடிவு ஏற்படாது (லா தகூமுஸ் ஸாஅத்து அலா அஹதின்ய் யகூலு அல்லாஹு அல்லாஹு).” (சஹீஹ் முஸ்லிம் #148-ஆ)

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படுவது வெறுமனே நாவால் அல்லாஹ் அல்லாஹ் என்று உச்சரித்துக் கொண்டிருப்பதை அல்ல, ஒருவரின் உடலும் உள்ளமும் உயிரும் இறைவனின் திக்ரில் ஊறியிருப்பதைக் குறிக்கும் என்றும் அதற்கான பயிற்சியே மூச்சு திக்ரு என்றும் ஸூஃபிகள் கூறுகின்றனர்.

’அல்லாஹ்’ என்பது இறைவனின் சுயநாமம் (இஸ்மே ஜாத்) ஆகும். முச்சு என்பது உயிருள்ள ஒருவரின் ஜாத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே, இறைவனின் சுயநாமத்தைக் கொண்டு திக்ரு செய்யும் சாதகனின் ஜாத் (சுயம், being) வரை அது தாக்கம் ஏற்படுத்துகிறது. அந்நிலையை அடைந்த ஒருவரின் அசைவிலும் அந்த லயம் வெளிப்படுகிறது. அவர் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறார்.

நக்‌ஷ்பந்திய்யா நெறியின் பதினோரு அடிப்படைக் கோட்பாடுகளுள் முதல் எட்டுக் கோட்பாடுகளை வரையறுத்த ஷைஃகு அப்துல் ஃகாலிக் அல்-குஜ்தவானி (ரஹ்) சொல்கிறார்: “விவேகமான சாதகன் தன் உள்ளே சென்று வெளியேறும் தன் மூச்சை அலட்சியத்தை விட்டும் பாதுகாப்பதன் மூலம் தன் இதயத்தை எப்போதும் இறைவனின் பிரசன்னத்திலேயே வைத்திருக்க வேண்டும். வழிபாடுகளாலும் சேவைகளாலும் தன் மூச்சுக்கு அவன் உயிரூட்ட வேண்டும். இந்த வழிபாட்டை அவன் தன் ரட்ச்கனுக்கு முழு ஜீவனுடன் சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில் இறை நினைவுடன் உள்ளே இழுக்கப்படும், வெளியே விடப்படும் ஒவ்வொரு முச்சும் உயிருள்ளதும் இறைவனுடன் தொடர்புடையதும் ஆகும். அலட்சியமாக உள்வாங்கவும் வெளியிடவும் படுகின்ற ஒவ்வொரு மூச்சும் செத்ததும், இறைவனுடன் தொடர்பற்றதும் ஆகும்.”

மகானின் கருத்துக்கு அடிப்படையாக ஹதீஸ் ஒன்று அமைந்துள்ளது: நபி (ஸல்) சொன்னார்கள்: ”தன் ரட்சகனை தியானிக்கும் ஒருவருக்கும் தியானிக்காத ஒருவருக்கும் உதாரணமாவது உயிருள்ளவரும் செத்தவரும் போன்றதாகும்.” (ஸஹீஹுல் புஃகாரி #6407).

நக்‌ஷ்பந்திய்யா ஆன்மிக நெறியின் முதல்வரான ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) சொல்கிறார்கள்: ”நம் நெறி மூச்சை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. ஒவ்வொரு உள்மூச்சையும் வெளிமூச்சையும் கவனித்துப் பேணுவது அவசியம் ஆகும். மேலும், உள்மூச்சுக்கும் வெளிமூச்சுக்குமான இடைவெளியையும் பாதுகாக்க வேண்டும்.”

ஷைஃகு உபைதுல்லாஹ் அஹ்ரார் (ரஹ்) சொல்கிறார்: “இந்த நெறியில் ஈடுபடும் சாதகனின் மிக முக்கியமான பணியே தன் மூச்சைப் பாதுகாப்பதுதான். தன் மூச்சை எவனால் பாதுகாக்க முடியவில்லையோ ’அவன் தன்னையே தொலைத்துவிட்டான்’ என்று சொல்லப்படும்.”

மவ்லானா சஃ’துத்தீன் காஷ்கரீ (ரஹ்) சொல்கிறார்கள்: “ஹோஷ் தர் தம் என்பது அலட்சியத்திற்கு அல்லது மறதிக்கு இடம் தராமல் இறைவன் தன்னுடன் இருக்கிறான் என்ற பிரக்ஞையுடன் ஒரு மூச்சில் இருந்து இன்னொரு மூச்சுக்கு நகர்வதாகும். அப்படியாக, நம் ஒவ்வொரு மூச்சிலும் ஹக்கின் நியாபகம் இருப்பதாகும்.”

ஷைஃகு நஜ்முத்தீன் குப்ரா (ரஹ்) தனது ஃபவாத்திஹுல் ஜமால் என்னும் நூலில் எழுதியுள்ளதாவது: “உயிரினம் ஒவ்வொன்றின் உடலிலும் அவற்றின் மூச்சினால் திக்ரு ஓடிக் கொண்டே இருக்கிறது, அவை நாடாமலேயே. அது அவற்றின் அடிபணிதலின் ஓர் அடையாளம் ஆகும். அது அவை படைக்கப்பட்டதன் ஓர் அம்சமாகும். தம் மூச்சால், அல்லாஹ் என்னும் திருநாமத்தின் “ஹா” என்னும் எழுத்தின் ஓசை ஒவ்வொரு உள்மூச்சிலும் வெளிமூச்சிலும் செய்யப்படுகிறது. அது, மறைவான சுயம் இறைவனின் தனித்தன்மையை வலியுறுத்துவதன் அடையாளம் ஆகும். எனவே படைத்தவனின் சுயத்தை உணர அந்த மூச்சுடன் நாம் சுதாரிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.”

”இல் ஸூஃபிஸ்மோ” என்னும் தன் நூலில் நக்‌ஷ்பந்திய்யா குருவான ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் மிக நுட்பமான சில அவதானங்களை நமக்குச் சொல்கிறார்: “அக விழிப்படைந்த எந்த ஷைஃகும் ஒரே ஒரு மூச்சைக் கூட பேணாமல் இல்லை. அது அனைத்து குருநாதர்களையும் அனைத்து ஆன்மிக நெறிகளையும் (தரீக்காக்களையும்) இணைக்கின்ற மெல்லிய இழை ஆகும். அது நம் சுயங்களை நம் சில்சிலாவின் (கொடிவழியின்) முன்னோர்களுடன் இணைத்து வைக்கிறது. … … ’ஒரே ஒரு மூச்சைக்கூட தவறவிட்டுவிடாதே’. இதுதான் திறவுகோல்.”

ஆன்மிகத்தின் அடிப்படையான ஒரு பயிற்சிக்கு மூச்சு ஏன் தேர்ந்து வைக்கப் பட்டுள்ளது என்பதற்கு ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் அழகான காரணம் ஒன்றைச் சொல்கிறார்: “நக்‌ஷ்பந்தி நெறியின் பயணம் மிக இலகுவான, துரிதமான, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய பொதுவான விடயங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. அது உங்கள் வாழ்வின் அடிப்படையான இயக்கங்களின் மீது கவனம் குவிக்குமாறு அழைக்கிறது.”

இறை தியானம் பண்ணாத சராசரி மனிதருக்கு, ஒரு மூச்சுக்கு மூன்று நொடிகள் என்று கணக்கு வைத்தால் ஒரு நிமிடத்திற்கு இருபது மூச்சுகளும், ஒரு மணிநேரத்திற்கு 1200 மூச்சுகளும், நாள் ஒன்றுக்கு 28,800 மூச்சுகளும் ஆகின்றன. மூச்சு திக்ரில் ஈடுபடுவோரின் மூச்சு ஆழமாகி நிதானமாகி வரும்போது இந்த எண்ணிக்கை குறையும். ஆனால், இறை நினைவில் கழிக்கப்பட்ட மூச்சு மட்டுமே மனிதனை அவன் படைக்கப்பட்டதன் லட்சியத்தை நோக்கி முன்னேற்றும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, ஸூஃபி நெறியில் செல்லும் சாதகன் அதிகம் மௌனமாக இருக்கிறான். பேசினால் அவசியம் கருதி சில சொற்கள் மட்டுமே பேசுகிறான். “பேச்சை சுருக்கு, மூச்சைப் பெருக்கு” என்பதை அவன் கடைப்பிடிக்கிறான்.

Friday, May 30, 2025

ஸூஃபித்துவமும் இறைஞானமும்

அன்பர்களே! நீண்ட இடைவேளை எடுத்துக் கொண்டுவிட்டேன். ஒருசில நூல்களை மொழி பெயர்த்து முடித்திருக்கிறேன். அவற்றில் இருந்து சில பகுதிகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

துருக்கி நாட்டைச் சேர்ந்த ஸூஃபி ஞானியும் குருவுமான ஹாஜி மூசா தோப்பாஷ் எஃபந்தி என்பார் எழுதிய “தஸவ்வுஃப் வ மஃ’ரிஃபா” என்னும் நூலினை “ஸூஃபித்துவமும் இறைஞானமும்” என்று தமிழாக்கம் செய்திருக்கிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

அதிலிருந்து...



ஸூஃபித்துவம் அல்லது தஸவ்வுஃப் என்பது கரை இல்லாத கடல் ஆகும். அது பிரபஞ்சம் முழுவதையும் வளைத்து அடக்கியுள்ள இறைவனின் பேரறிவு ஆகும்.

            ஸூஃபித்துவம் என்பது மஃ’ரிஃபா – அல்லாஹ்வைப் பற்றிய ஞானம்.

            இது விளக்கி உரைக்க முடியாதது. எனினும், ஒவ்வொருவரும் தமது புரிதிறனுக்கும் ஆன்மிக நிலைக்கும் ஏற்ப இதைப் பற்றிப் பேசுகின்றனர்.

            பிரபஞ்சத்தின் பெருமிதமான இறைத்தூதர் நபி (ஸல்) நவின்றார்கள்:

            ”என் ரட்சகனே! நான் எப்படி உன்னைப் புகழ முடியும்! நீ உன்னை நீயே புகழ்ந்துகொண்டபடி இருக்கிறாய்!”

            மேலான அல்லாஹ்வின் அறிவுடன் ஒப்பிடும்போது இறைத்தூதரின் அறிவு என்பது அந்தக் கடலில் ஒரு துளிதான். ஏனைய பெரும் இறைத்தூதர்களின் அறிவோ நபி (ஸல்) அவர்களின் அறிவுடன் ஒப்பிடும்போது கடலில் ஒரு துளிதான்! இறைநேசர்களின் அறிவோ நபி (ஸல்) தவிர உள்ள பெரும் இறைத்தூதர்களின் அறிவுடன் ஒப்பிடும்போது கடலில் ஒரு துளிதான். இதிலிருந்து, ஸூஃபித்துவம் என்பது முடிவோ எல்லையோ வரம்போ இல்லாத தெய்வீக அறிவு என்று உணர்கிறோம்.

            இந்த முடிவிலியில் இருந்து ஒவ்வொருவரும் தமது பங்குக்கு ஏற்ப அடைந்து கொள்கின்றனர். அடையப்பட்ட இந்த அறிவு என்பது கடலில் ஒரு துளி அளவு கூட தேராது என்பதால் ஸூஃபித்துவ உலகில் அல்லாஹ்வின் அடியார் ஒவ்வொருவரும் அவன் அவருக்கு அருள்கின்ற அறிவின் அளவுக்கே அவனை அவதானிக்கவும் அடையவும் இயலும்.

            எனவே, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அறிவின் அளவுக்கே ஸூஃபிகள் பேச முடியும். மேலோனான அல்லாஹ்வின் ஆன்மிகக் கருவூலம் ஒரு சிலருக்கே திறக்கும் என்றாலும், சிறப்பான சில இறைஞானிகளுக்கு அவனின் அருள் விசாலமாகவும் ஆழமாகவும் உள்ளது.

            வாஜிபுல் உஜூது என்னும் அவசிய உள்ளமை ஆன இறைவனுக்கு கோடானு கோடி அடியார்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவனின் வெளிப்பாடு வேறுபடுகிறது. இந்த நோக்கில், கோடிக் கணக்கான மக்களின் அறிவும் நம்பிக்கையும் சமம் அல்ல. அவை அதேதான் என்று தோன்றலாம், ஆனால் வெவ்வேறானவை.

            இறை அறிவின் வெளிப்பாடும் போகப் போக மாறுகிறது. நேற்று வரை அவன் வெளிப்படுத்தாத ஓர் அறிவை இன்று நாம் கண்டு கொள்ளலாம், நாளை அதனினும் வேறான ஓர் அறிவைக் கொண்டு நாம் போஷிக்கப்படலாம்.

            சுருக்கமாகச் சொன்னால், அது முடிவிலியான ஓர் அறிவாகும். அதன் அம்சத்தை  பேனாக்களும் நுண்ணோக்கிகளும், தொலை நோக்கிகளும், புறவயமான அறிவுத் துறைகள் அனைத்தும் அளந்துவிட முடியாது.

            வானவர் மீக்காயீல் பிரபஞ்சத்தில் பயணிக்க விரும்பினார். அவர் பத்து ஆண்டுகள் பறந்தார். ஆனால் எந்த ஓர் அறிவையும் அடைய முடியவில்லை (இத்தனைக்கும் வானவரின் வேகத்துடன் ஒப்பிட்டால் ஒளியின் வேகம் என்பது மாட்டு வண்டியின் வேகமாகவே இருக்கும்!) அவர் மேலும் ஒரு பத்து ஆண்டுகள் அவகாசம் கேட்டார். அது அவருக்கு வழங்கப்பட்டது. மீண்டும் அவர் தோல்வி அடைந்தார். அவரின் சிறகுகள் தீப்பற்றிக் கொண்டன. அதன் பின்னர், அல்லாஹ்வின் வல்லமையின் முன்னே சிரம் சாய்க்க வேண்டும் என்று அவர் உணர்ந்தார். உடனே சஜ்தா செய்து, “சுப்ஹான றப்பியல் அஃ’லா” (மிக உயர்வான என் ரட்சகன் பரிசுத்தமானவன்) என்று ஓதினார்.



              

அனுபவ ரீதியான இறைஞானத்தின் பரந்து விரிந்த இந்தக் களத்தில் தம் இயலாமை மற்றும் பலகீனத்தைப் புரிந்து கொள்கின்ற அடியார்கள் சிலர் இருக்கின்றனர். அல்-ஹக்கின் மகத்துவத்தின் முன்னால் அவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

            வேறு சிலர் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவனை வியப்புடன் அவதானிக்கின்றனர்.

            வேறு சிலர் தெய்வீக வல்லமையின் முன்னால் வாயடைத்து நா எழாமல் மௌனம் ஆகிவிடுகின்றனர்.

            வேறு சிலருக்கோ பேச்சாற்றல் மீண்டும் தரப்படுகிறது. அவர்கள் மேலான அல்லாஹ்வையும் அவனின் அருள்களையும் உதவிகளையும் தாராளத்தையும் அவதானித்து அவற்றைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கின்றனர்.

            மலைகளும் சிகரங்களும் சமவெளிகளும்கூட சிலருக்குக் குறுகலாகி விடுகிறது.

            சிலர் ஒரு சிறிய குடிலுக்குள் புகுந்து அதிலேயே தம் வாழ்க்கையைக் கழிக்கின்றனர்.

            சிலர் நேசத்தால் முழுமையாக ஆட்கொள்ளப் படுகின்றனர். அவர்கள் செல்வம், உடைமைகள், சந்ததிகள், உலக வீடுகள் என்று எதையுமே வேண்டுவதில்லை. அவர்களின் ஆசை எல்லாம் ஏகனான அல்லாஹ் ஒருவனே.

            மாபெரும் இறைஞானியரின் பங்குகளும்கூட பல்வகைப் பட்டவை, வெவ்வேறு ஆனவை. ஒருவருக்கு அருளப்பட்டது இன்னொருவருக்கு அருளப்படுவது இல்லை. ஒருவர் அறிவதை இன்னொருவர் அறியார்.

            எனினும், அனுபவ அறிவால் கண்ணியப்படுத்தப்பட்ட ஒவ்வொருவரும் இறுதியில் மேலோனான அல்லாஹ்வை விளங்கி அடைந்து கொள்கிறார். தம் படைப்பு நோக்கத்தை நன்றாக அறிந்திருக்கும் அவர்கள் அல்லாஹ்வின் வல்லமையின் முன்னால் தம் மீது சுமத்தப்பட்டுள்ள கடமை என்ன என்பதைத் தெளிவாக அறிந்து அதனைப் பேரார்வத்துடனும் நேசத்துடனும் செய்கின்றனர்.

            மஃ’ரிஃபா என்னும் அறிவில் முன்னேற்றம் என்பது இதயத்தின் உலகம் எவ்வளவு ஒளிமயமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது என்பதைப் பொறுத்து அமைகிறது.

             சத்தியப் பாதையில் செல்லும் சாதகனிடம் நான்கு குணங்கள் இருக்கும்போது தெய்வீக உதிப்பு அதன் முழுமையான அருளுடனும் கருணையுடனும் இதயத்தின் உலகின் மீது இறங்குகிறது. அவை பின்வருமாறு:

            அ) தீவிரமான நேர்மை இருப்பது.

            ஆ) உறுதிப்பாடான (இஸ்திகாமா) நபர்களுடன் சேர்ந்திருப்பது.

            இ) சிரத்தையும் விடாமுயற்சியும்

            ஈ) முழுமையான சரணாகதி.

            நற்குணம், தாராளம், இரக்கம், பணிவு முதலிய நல்ல பண்புகள் ஸூஃபிகளுக்கு அருளப்படுகின்றன. ஒவ்வொருவருடனும் நன்றாக பழகிக்கொண்டு, அவர்கள் அகப்பார்வை மற்றும் சிரத்தையுடன் முன் நோக்குகின்றனர். அவர்களின் ஒவ்வொரு நடத்தையும் செய்கையும் குர்’ஆனின் கட்டளைகளுக்கு உடன்பட்டதாகவும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் நடத்தை மற்றும் செயல் ஆகியவற்றுக்கு இயைந்ததாகவும் உள்ளது.

            அவர்கள் தூயவனான அல்லாஹ்வையும் அவனின் திருத்தூதரையும் தம் உயிர்கள், உடைமைகள், செல்வம், மற்றும் சந்ததிகள் அனைத்தையும் விட மேலாக நேசிக்கின்றனர்.

            நேசத்தின் கோப்பையில் இருந்து பருகும்படி அருளப்பட்டிருக்கவில்லை என்றால் அவர்களால் இந்த நுட்பமான அறிவையும் அந்தஸ்த்தையும் அடைந்திருக்க முடியாது.



               



ஸூஃபிகளின் செய்முறைகள் ஆரம்ப நிலையில் வேறுபடுவதாகத் தோன்றினாலும் வல்லமையும் செம்மையும் கொண்ட அல்லாஹ்வைப் பற்றிய அறிவு என்னும் புள்ளியில் அவை அனைத்தும் கடைசியில் ஒன்றாகின்றன.

            ஆனால், இதே பாதையில் தத்துவவாதிகள் செல்ல ஆரம்பிக்கும்போது அவர்களால் கருத்து உடன்பட முடிவதில்லை. இதற்குக் காரணம் அவர்களின் தன்முனைப்புகள் (egos) எப்போதும் அடங்காமல் ரகளை பண்ணுகின்றன. இந்த நபர்கள் மேலான அல்லாஹ்வைக் கண்டடைய முடியாது. எனவே அவர்கள் கடைசியில் ஒருவருக்கு ஒருவர் பகைவர்கள் ஆகி ஒருவரை ஒருவர் சபித்துக் கொண்டு முடிகின்றனர். அடிப்படை அற்ற பல்வேறு கருத்துக்களையும் கோட்பாடுகளையும் அவர்கள் முன் வைக்கின்றனர். தம் எதிர்பார்ப்புகளால் அவர்கள் சுருங்கிப் போகின்றனர்,

            இஸ்லாமும் தத்துவமும் ஒன்று கலக்காது. மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி மற்றும் இமாம் கஜ்ஜாலி போன்ற மாபெரும் இறை நேசர்களை முஸ்லிம் தத்துவவாதிகள் (Philosophers) என்று சொல்ல முடியாது. அவர்கள் ஸூஃபிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

            ஸூஃபித்துவம் என்பது குர்’ஆனின் கட்டளைகளுக்கும் இறைத்தூதரின் மேலான சுன்னாஹ்வுக்கும் (நபிவழிக்கும்) முற்றிலும் அடிபணிவதாகும்.

            குர்’ஆனின் கட்டளைகள் அல்லது ஷரீஆ என்பது ஒரு தொலி / ஓடு என்றால் தரீக்கா என்பது அதன் உள்ளிருக்கும் பருப்பு ஆகும். எனினும், தன் தொலி / ஓடு இல்லாத ஒரு பருப்பு இருக்கும் என்று நாம் யோசிக்க முடியாது. ஓடு அதன் சாராம்சத்துடன் இணைக்கப்படும்போது அதுவே பூரணத்துவத்தை (கமாலிய்யா) தேடுவோரின் பாதை ஆகும்.

            மேம்படுத்தப்பட்ட ஆன்மிகம் கொண்டுள்ள குருநாதர்கள் தமக்கு வழங்கப்படும் பானத்தை அருந்தும்போது அவர்கள் முன்னேறுகின்றனர். ஒரு கட்டத்தில் அவர்களின் சுதாரிப்பு அவர்களின் போதையை மிகைத்து விடுகிறது, அவர்களின் பணிவு மேலும் மேலும் அதிகமாகிறது. அவர்கள் அழிந்துவிடுகின்றனர். ஏக இறைவனுடன் சேர்வதே அவர்களின் ஒரே ஆசை ஆகிறது. அல்லாஹ்வின் ஏற்பையும் பொருத்தத்தையும் அடைவதைத் தவிர உள்ள ஆசைகள் அனைத்தும் இன்மை ஆக்கப்பட்டு அவர்கள் தம்மையே மறந்துவிட்டுள்ளனர்.


Sunday, February 16, 2025

இமாம் சஃ’தி - ஓர் அறிமுகம்

 ஃபார்சி மொழியில் அற இலக்கியங்கள் எழுதிய முக்கியமான ஸூஃபி ஞானக் கவிஞர் இமாம் சஃதி (ரஹ்) அவர்கள். அன்னார் எழுதிய ஒரு சிறிய கவிதை நூல் ”பந்த் நாமா” (அறிவுரைப் பனுவல்). இது கரீமாயே சஃதி என்றும் அழைக்கப் படுகிறது. இந்நூலினை நான் ஃபார்சியில் இருந்து தமிழில் பெயர்த்து வருகிறேன். பார்வைக்காக, 1906-ஆம் ஆண்டு ஆர்தர் நெய்லர் வல்லாஸ்டன் செய்த ஆங்கிலப் பெயர்ப்பை வைத்திருக்கிறேன். அதில் இமாம் சஃ’தி ஷீராஸி (ரஹ்) அவர்களைப் பற்றிய அழகான ஓர் அறிமுக உரையை அவர் எழுதியுள்ளார். அதன் தமிழாக்கத்தை இங்கே தருகிறேன்.


பெரிதும் கொண்டாடப்படும் ஃபார்சி மொழிக் கவிஞரான ஷைஃகு முஸ்லிஹுத்தீன் சஃ’தி அவர்கள் ஷீராஸ் என்னும் ஊரில் பொ.ஆ 1175 மற்றும் 1193 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பிறந்தார். அவரின் தந்தை பெயர் அப்துல்லாஹ். அவர் பாரசீக நாட்டின் அதாபக் மன்னரான சஃ’த் இப்னு ஜங்கி (பொ.ஆ 1195 – 1226) என்பாரின் அவையில் ஒரு சிறிய பதவியில் பணியாற்றினார் என்று கருதப்படுகிறது. அந்த மன்னரின் பெயரில் இருந்தே ஷைஃகு அவர்கள் தன் புனைபெயரான சஃ’தி என்பதை வரித்துக் கொண்டார்.

            அவர் தன் தொடக்கக் கல்வியைத் தன் சொந்த ஊரிலேயே பெற்றார். சில காலத்துக்குப் பின்னர், பாக்தாதில் உள்ள இஸ்லாமியக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே அவர் ஓர் இளம் மாணவராக இருந்தபோது, அவரின் தேவைகளை அறிந்த நல்லுள்ளம் கொண்ட செல்வந்தர் ஒருவர் அவரிடம் நட்பு கொண்டு உதவினார். மேலும், கல்லூரியின் பேராசிரியர் ஒருவரும் சஃ’திக்கு உதவிகள் புரிந்தார். அதன் பின்னர் அவர் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடுவதற்காக தனிமையில் ஒதுங்கி இறை ரகசியங்களை தியானித்தார். அவரின் பயபக்தியான உணர்ச்சிகள் அவரை மக்கா நகருக்கு யாத்திரை செய்யத் தூண்டின – அவர் அந்த ஹஜ் என்னும் புனிதப் பயணத்தை பதினான்கு முறை காலால் நடந்தே நிறைவேற்றியுள்ளார். சமய நற்குணங்கள் குடிகொண்டவரான சஃ’தி  விரைவிலேயே தன் ஆன்மிக நிலைக்காகப் பிரபலம் ஆகிவிட்டார். அஃது அவருக்கு ஷைஃகு (கண்ணியமும் அந்தஸ்த்தும் உள்ள ஒருவர்) என்னும் பட்டத்தினைப் பெற்றுத் தந்தது. அதன் பின்னர் அவர் அப்படியே அழைக்கப்பட்டார்.

தன் வாழ்வில் பல்லாண்டுகளை அவர் பயணங்களில் கழித்தார். இதை அவர் சொல்லும் வார்த்தைகளைக் கொண்டே நாம் அறியலாம்: “நான் உலகின் பல பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறேன். எங்கே போனாலும் அந்த ஊரின் மக்களுடன் மிக சகஜமாகப் பழகுவேன். ஒவ்வொரு மூலையிலும் ஏதோ ஒன்றை நான் அடைந்திருக்கிறேன். ஒவ்வொரு அறுவடையில் இருந்தும் எனக்கான தானியத்தைச் சேகரித்திருக்கிறேன்.”1

            இன்னொரு சம்பவத்தில் இருந்து நாம் அறிவதாவது, அவர் குஜராத்தின் சோம்நாத் ஆலயத்தில் நிகழ்த்தப்படும் காட்டுமிராண்டித் தனமான சடங்குகளைப் பார்த்து வெகுண்டு உணர்ச்சி வசப்பட்டு அதன் பூசாரியைத் தூக்கித் தலைகீழாகக் கிணற்றுக்குள் போட்டுவிட்டார்.

            அவரே குறிப்பிடும் இன்னொரு சம்பவம் அவரது வாழ்வின் அடுத்த முக்கியமான நிகழ்வைக் காட்டுகிறது: “திமிஷ்கில் என் நண்பர்களின் சகவாசம் அலுப்பூட்டியதால் நான் ஜெருசலேமின் பாழ்நிலப் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த பாமரர்களுடன் சேர்ந்துகொண்டேன். அப்போது ஒருநாள் பரங்கியர்கள்2 என்னைக் கைது செய்து திரிபோலியில் கோட்டைக் கொத்தளங்கள் கட்டும் பணியில் யூதர்களுடன் சேர்ந்து களி மண் தோண்டும் வேலையில் என்னைப் போட்டுவிட்டார்கள். என் முற்கால நண்பனான ஒருவன் அந்த வழியே போக நேர்ந்தது. அவன் என்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டான். அவன் அலெப்போவின் பிரமுகர்களில் ஒருவன். அவன் என்னைப் பார்த்து, ‘நீ என்ன இந்த நிலைக்கு ஆகிவிட்டாய்? நீ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டான். நான் சொன்னேன், ‘நான் இறைவன் மீது மட்டுமே பரஞ்சாட்ட வேண்டும் என்று எண்ணி மனிதர்களின் சகவாசத்தைத் துறந்து மலைகளிலும் காடுகளிலும் அலைந்தேன். ஆனால் இப்போது நீயே என் நிலையை முடிவு செய்துகொள். மனிதர்கள் என்று சொல்வதற்கே தகுதி இல்லாத ஆட்களுடன் நான் கொட்டகையில் அடைபட்டுக் கிடக்கிறேன். ஏதிலாருடன் பூங்காவில் சுதந்திரமாக நடப்பதை விட நண்பர்களுடன் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கிடப்பது மேலானது.’ அவன் என் இழி நிலை மீது இரக்கம் கொண்டான். பத்து தீனார்கள் கொடுத்து என்னைப் பரங்கியரிடம் இருந்து விடுவித்தான். என்னை அவனுடன் அலெப்போவுக்குக் கூட்டிக்கொண்டு போனான். என் நண்பனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவளை அவன் எனக்குத் திருமணம் முடித்து வைத்தான். நான் அவளுக்கு மஹர் (திருமணக் கொடை) தருவதற்காக அவனே எனக்கு ஒரு நூறு தீனார்கள்3 பரிசளித்தான். சில காலம் கழித்து என் மனைவி தன் சுபாவத்தை வெளிப்படுத்தினாள். அவள் சிடுமூஞ்சியாகவும், வாக்குவாதம் செய்பவளாகவும், பிடிவாதக்காரியாகவும், ஏசுபவளாகவும் இருந்தாள். எனவே என் வாழ்வின் மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது. ‘சான்றோன் ஒருவனின் வீட்டில் இருக்கும் தீய பெண் இந்த உலகத்திலேயே ஒரு நரகமாக இருக்கிறாள்’ என்று சும்மாவா சொன்னார்கள்? தீய பெண் ஒருத்தியுடன் நீ எப்படி உறவாடுகிறாய் என்பதில் எச்சரிக்கையாக இரு. இறைவா! இந்தத் தீய சோதனையை விட்டும் எம்மைக் காப்பாயாக!”

            சாதுரியமாக பதில் சொல்வதில் சஃதி கெட்டிக்காரர். இரண்டு சம்பவங்கள் சொல்லப் போதுமானவை. ஒருமுறை அவரின் மனைவி அவரை இப்படித் திட்டினாள்: “பரங்கியருக்குப் பத்து தீனார்கள் கொடுத்து என் தந்தை விடுதலை செய்த ஆள்தானே நீங்கள்?” சஃதி நிதானமாக பதில் சொன்னார்: “ஆம். உண்மைதான். பத்து தீனார்களுக்கு அவர்களிடம் இருந்து விடுதலை செய்து நூறு தீனார்களுக்கு உன்னிடம் சிக்க வைத்துவிட்டார்!”

            இன்னொரு தருணத்தில், சஃதியைத் தன் போட்டியாளராக எண்ணிய தப்ரேஸின் புலவன் ஒருவன், சஃ’தி தன் விடயத்தில் தலையிடுவதாகச் சினந்து அவரிடம் வெடுக்கென்று கேட்டான்: “ஓய், எங்கிருந்துய்யா வர்ற?” அதற்கு சஃ’தி, “ஷீராஸ் என்னும் இன்பமயமான ஊரிலிருந்து” என்று பதிலளித்தார். அந்தப் புலவன் மிகவும் நக்கலாகச் சொன்னான்: “தப்ரேஸில் ஷீராஸிகள் நாய்களை விட அதிகம்.” சஃ’தி கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று பதிலடி கொடுத்தார், “எங்க ஊர் நிலை அப்படியே தலைகீழ். அங்கே தப்ரேஸிகள் நாய்களை விடக் கம்மி!” ஆனால், அத்துடன் ஏட்டிக்குப் போட்டி முடிந்துவிடவில்லை. சஃ’தியின் தலை வழுக்கையாக இருப்பதை அந்தப் புலவன் கிண்டல் செய்தான். தன் கையில் இருந்த பாத்திரம் ஒன்றை கவிழ்த்துக் காட்டி, “ஷீராஸிகளின் மண்டை எப்போதும் இந்தச் சட்டியின் அடிப்பக்கம் மாதிரி வழுக்கையாக இருக்கிறதே எப்படி?” என்று கேட்டான். சஃ’தி சளைக்காமல் உடனே சுடச்சுட பதிலடி கொடுத்தார்: “அதே நியதிப்படி, தப்ரேஸிகளின் மண்டை அந்தச் சட்டியின் உள் பக்கம் மாதிரி காலியாகவே இருக்கிறதே எப்படி?”

            முதல் திருமணம் கசப்பான அனுபவங்களையே தந்தது என்றாலும், அதனால் மனம் தளர்ந்துவிடாத சஃ’தி, அரேபியாவில் தான் பயணித்தபோது இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணுடன் அவர் அன்பாகவும் அமைதியாகவும் வாழ்ந்தார் என்று ஊகிக்கலாம். அந்த உறவில் பிறந்த குழந்தை ஒன்று சிறு பிராயத்திலேயே இறந்துவிட்டதை அவர் மனவேதனையுடன் எழுதியிருப்பதில் இருந்து அதனை நாம் அறிகிறோம்.

            எனினும், சஃதி இல்லற இன்பத்தை நிறைவாக அனுபவித்தாரா என்பது ஐயமே. ஏனெனில், அவர் தன் கவிதை ஒன்றில் இப்படி அறிவுரை சொல்கிறார்: “ஒவ்வொரு இளவேனிலிலும், புத்தாண்டு நாளில், ஒரு புதிய மனைவியைத் தேர்ந்தெடு. ஏனெனில் கடந்த ஆண்டின் பஞ்சாங்கம் இந்த ஆண்டு உதவாது!”

            சஃ’தியின் விருந்தோம்பல் மிகவும் பிரசித்தியானது. அவர் மிக தடபுடலாக விருந்தளிப்பதில் விருப்பம் கொண்டவர். ஒரு தருணத்தில், தன் போட்டிப் புலவன் ஒருவனுக்கு அவர் ராஜபோக விருந்து கொடுத்ததில் அவன் வியந்துபோய், அது போல் தாரளமாகத் தன்னால் திருப்பிச் செய்ய இயலாது என்பதை உணர்ந்தான். சஃ’தி அவன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்த போது அந்தப் பேரறிஞரின் முன் மிக எளிமையான உணவுகளைப் பரத்தி வைத்தான். தான் அப்படி விருந்து கொடுப்பதை அவன் மிக அழகான முறையில் விளக்கிச் சொன்னான்:

            ”நான் உங்களிடம் மூன்று நாட்கள் தங்கியிருந்து மகிழ்ந்த போது உங்களின் விருந்து மேஜையில் நீங்கள் எனக்கு அளித்த உபசரிப்பைப் போல் என்னால் ஒரு நாள் கூட தர முடியாது. ஆனால், இந்த மாதிரியான எனது சிக்கனமான உபசரிப்பால் நான் செலவைப் பற்றிக் கவலைப் படாமல் உங்களை உபசரித்தபடி உங்களுடன் இருக்கும் மகிழ்ச்சியைப் பல ஆண்டுகள் பெற முடியும்!”

            சஃ’தி தன் வாழ்வின் கடைசிக் காலத்தில் ஷீராஸுக்கு அருகில் ஒரு குடிலில் ஒதுங்கி இருந்தார். அங்கே தன் நேரத்தை அவர் இறை வழிபாட்டிலும் அந்த நாட்டின் மேன் மக்களின் வருகையை ஏற்பதிலும் கழித்தார்.

            சர் கோர் ஔஸ்லி சொல்கிறார்: “அவரின் சால்பு மிக்க சந்திப்பாளர்களே அவருக்கு வேண்டிய உணவுகளையும் வேறு பொருட்களையும் கொண்டு வந்து தருவது வழக்கமாக இருந்தது. அவர்களுடன் சேர்ந்து தானும் உண்டது போக மீதமுள்ள உணவுகளை எல்லாம் அவர் தன் ஜன்னலில் தொங்க விட்டிருந்த பை ஒன்றில் போட்டு வைப்பார். ஷீராஸின் மரவெட்டியர் தினமும் அவரின் குடில் வழியே கடந்து போவார்கள். அவர்களில் எவரேனும் பசியோடு இருந்தால் அந்த உணவை எடுத்துக் கொள்வார்கள். இந்தச் சூழலில் நடந்த ஒரு நிகழ்வாக பாரசீகர்கள் நம்பும் ஒரு நிகழ்வு உண்டு. அதாவது, ஒருநாள், மரவெட்டி போல் மாறுவேடம் அணிந்த மனிதன் ஒருவன் சஃ’தி தொங்க விட்டிருந்த உணவுக் கூடையை அணுகினான். அதைத் திருட வேண்டும் என்பது அவனின் நோக்கமாக இருந்தது. ஆனால் அவன் அதிலிருந்து கையில் எடுத்தபோது அவனின் கை காய்ந்து பட்டுப் போய்விட்டது. அது ஷைஃகு செய்யும் கராமத் (அற்புதம்) என்று கருதிய அவன் அவரின் உதவி கோரிக் கதறினான். அந்த ஞானி அவனிடம் எரிச்சலான குரலில் வினவினார்: ’யோவ், நிஜமாகவே நீ ஒரு மரவெட்டி என்றால், உன் கையில் சிலாம்பு ஏறிய தழும்புகள் எங்கே? உன் கை காப்புக் காய்த்துப் போயிருக்க வேண்டுமே, அது எங்கே? இல்லை நீ ஒரு திருடன் என்றால், ஒன்னுடைய கன்னக்கோலும் கயிறும் எங்கே? இப்படி அழுது புலம்புவதை விட்டும் உன்னைத் தடுக்கும் உன் தைரியமும் மனவுறுதியும் எங்கே?’ இப்படி அவனைக் கடிந்து கொண்டாலும், அவன் மீது இரக்கம் கொண்டு அவனின் கை மீண்டும் நலம் பெற வேண்டும் என்று துஆ (பிரார்த்தனை) செய்தார். அவனுக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் சொல்லி, அவன் திருடிக் கொண்டு போக நினைத்த பொருட்களில் ஒரு பகுதியை அவனுக்குத் தந்தார்.”

            பொ.ஆ 1256-இல் பாரசீகத்தின் முகலாய சாம்ராஜ்யத்தை அதாபக்குகளின் கைக்கு மாறியபோது ஒரு சம்பவம் நடந்தது. ஷீராஸின் ராணுவத் தளபதி அந்த ஊரின் காய்கறி வியாபாரிகளுக்கும் சந்தைக் கடைக்காரர்களுக்கும் ஒரு நிபந்தனை விதித்தார். மிக மலிவான விலை உள்ள பேரீச்சம் பழங்களை அதிகமான விலைக்கு அவர்கள் அரசிடம் இருந்து வாங்க வேண்டும் என்பதே அது. இந்த விடயம் ஷைஃகு சஃ’தியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அவர் முகலாய ஆளுநருக்கு கவிதை நடையில் ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்: “என் சகோதரன் அணிய கீழாடை கூட இல்லை; அவன் பேரீச்சம் பழங்களை அதிக விலைக்கு வாங்க வேண்டும் என்று தொல்லை! இதை விட ஒரு மனிதனுக்கு இருக்க முடியாது ஓர் அவல நிலை!” சஃ’தியின் கவிதை மக்களுக்குச் சாதகமாக வேலை செய்தது. ஷைஃகின் வறுமைப்பட்ட சகோதரனுக்கு இலவசமாகவே பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டதுடன், “அவன் அத்தனை வறுமையில் வாடுகிறான் என்பதை அறிந்ததற்காக” அவனுக்கு ஒரு “சிறிய தொகை”யும் உதவியாக வழங்கப்பட்டது.

            பொ.ஆ. 1265-இல் பாரசீகத்தில் இரண்டாம் முறையாக முகலாயர்கள் ஆட்சியில் அமர்ந்தபோது அரசன் ஒருநாள் தன் அமைச்சர்களுடன் சஃதியைச் சந்திக்க வந்தான். தான் ஒரு அரசனாக இருந்தபோதும் அமைச்சர்கள் அனைவரும் சஃ’தியை அரசனை விட அதிக மதிப்புடன் நடத்துவதைப் பார்த்து வியந்தான். அந்த வினோதமான சூழலுக்கு என்ன காரணம் என்று அவன் கேட்டபோது, உலகமெங்கும் தன் கவிதைகளால் பெயர் அறியப்பட்டுள்ள ஞானியான ஷைஃகு பற்றி அரசன் கேள்விப்பட்டதில்லையா என்று அவர்கள் திருப்பிக் கேட்டனர். அதன் விளைவாக, ஷைஃகு தன் அரண்மனைக்கு வந்து தனக்கு “ஏதேனும் அறிவுரை” வழங்க வேண்டும் என்று சஃ’தி அழைக்கப்பட்டார். “நீ இந்த உலகத்தில் இருந்து எதையுமே மறுமைக்கு எடுத்துச் செல்ல முடியாது. ஒரு நற்கூலி அல்லது ஒரு தண்டனை மட்டுமே உனக்குக் கிடைக்கும். இப்போது, எதைத் தேர்ந்தெடுப்பது என்பது உன் கையில் உள்ளது” என்று அவர் அறிவுரை கூறினார். அரசன் தான் அவமானப் பட்டதாக உணர்ந்தான். அதை சஃ’தி அறிந்து கொண்டார். எனவே, தான் அங்கிருந்து கிளம்பும்போது அவனின் காதில் பின்வரும் கவிதையைச் சொன்னார்:

            அரசன் இறைவனின் நிழல் ஆவான்

            நிழல் தன் மூலத்தை நெருங்கியிருக்க வேண்டும்.

            வாள் ஆட்சி புரியவில்லை என்றால்

            கீழ்களின் மனம் நன்மை செய்ய இயலாது.

            உலகில் தோன்றும் நீர்மைகள் யாவும்

            அரசனின் நேர்மைக்குக் கட்டியம் கூறும்;

            ஒவ்வொரு எண்ணமும் பிசகாய் உள்ளோனிடம்

            எவ்வாறு நாடு நன்மைகளை அடையும்?

            அதே ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களில் ஒருவர் சஃ’தியிடம் ஐந்து வினாக்களை முன்வைத்து விடை கோரினார்.

(1)    யார் சிறந்தவர் – மனிதனா? அசுரனா?

(2)    என் பகைவன் என்னிடம் சமரசம் அடையவிடில் நான் என்ன செய்ய வேண்டும்?

(3)    மக்காவுக்குப் பயணம் செல்பவன் அந்தக் கடமையை விட்டவனை விட மேலானவன் அல்லனா?

(4)    ஹழ்ரத் அலீ1-யின் வமிசக்காரன் பிறரை விட மேலானவனா?

(5)    ஞானக் கவிஞரே! நீங்கள் வளர்க்கும் பறவைகளைப் பேணுவதற்காக ஒரு தலைப்பாகையும் 500 தீனார்களும் கொண்ட அன்பளிப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

அந்தச் செய்தியை சஃ’தியிடம் கொண்டு போன தூதுவன் தன்னையே அவரின் ”பறவை”களில் ஒன்றாகக் கருதி தன் பைக்குள் 150 தீனார்களைப் போட்டுக் கொண்டு மீதம் 350 தீனார்களை சஃ’தியிடம் கொடுத்தான். அவன் களவாடியதைக் கண்டுபிடித்துவிட்ட சஃ’தி அதனை சமிக்ஞை செய்து பின்வருமாறு பதில் எழுதினார்:

கண்ணியமான அன்பளிப்பும் பணமும்

எனக்கு அனுப்பி வைத்தீர்.

நும் செல்வம் பெருகட்டும்,

நும் பகைவர் நும் பாதத்தின் கீழே உருளட்டும்!

ஒவ்வொரு தீனாருக்கும் நும் ஆயுளில் ஆண்டு ஒன்று கூடட்டும்,

அப்படியாக இந்த உலகில் நீவிர்

முந்நூற்று ஐம்பது வயது வாழ்வீர்!

ஞானியின் கவிமடலை வாசித்ததும் அவருக்குக் கருவூலத்தில் இருந்து பத்தாயிரம் தீனார்கள் பரிசு அனுப்பி வைக்கும்படி அமைச்சர் அறிவித்தார். ஆனால் அப்போது கருவூலக் காப்பாளர் இறந்து போனார். அதனால் பரிசுத் தொகை வழங்கப்படாமல் இருந்தது. சிறிது காலம் சென்றதும் அதை அமைச்சருக்கு சஃ’தி கவனத்தில் கொண்டு வந்தார். நடந்ததை அறிந்த அமைச்சர் சஃ’திக்கு ஐம்பதாயிரம் தீனார்கள் பரிசளிக்கும்படி உத்தரவிட்டார். ஷீராஸில் கட்டப்பட்டு வரும் ”முசாஃபிர் ஃகானா” (பயணியர் விடுதி)க்கு அதன் ஒரு பகுதியை ஒதுக்குமாறு அவர் வேண்டுகோளும் விடுத்தார். சஃ’தி எழுதிய முதல் நான்கு விடைகளுக்கு என்ன சன்மானம் அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை.


ஷைஃகு சஃதி பொ.ஆ.1291-இல் ஷீராஸில் தன் முதிய வயதில் மரணம் அடைந்தார். அவரின் கவிதை வரிகள் பொறிக்கப்பட்டுள்ள அவரின் அடக்கத்தலம் மிகுந்த கண்ணியத்துடன் போற்றப்பட்டு வந்தது. பின்னாளில் அது கைவிடப்பட்ட நிலையில் பாழடைந்து விட்டது. எனினும் பாரசீகத்தின் மிக மேன்மையான கவிஞர்கள் மற்றும் அறிஞர்களில் ஒருவரின் ஓய்விடம் என்று அடையாளம் காணும் வகையில் அதன் எஞ்சிய பகுதிகள் நல்ல நிலையில் இருக்கின்றன.

 உள்ளூர் நாட்குறிப்பாளர் ஒருவர் அவரின் உருவத்தை இப்படி வருணிக்கிறார்: “சஃ’தி குள்ளமானவர். லட்சணமானவர் அல்லர். அவரின் தலை நீளமாக இருந்தது. அது ஆழ்ந்த சிந்தனை மற்றும் ஞானத்தைக் காட்டுவதாக இருந்தது. அவரின் ஆடை மிக எளிமையாகவும் அதே சமயம் சிறப்பாகவும் இருந்தது. ஒரு தலைப்பாகை, ஜுப்பாவின் மீது அணியப்பட்ட நீளமான நீல நிற அங்கி, கையில் ஒரு அஸா (கைத்தடி). இந்த கண்ணியமிக்க பாணரின் பண்பு மிக உயர்வானதாகவும் அவர் ஒரு பேராளுமை என்று காட்டுவதாகவும் இருந்தது. அவர் மிகவும் இங்கிதமானவராக, நண்பர்களுக்கு இணக்கமானவராக, பகைவருக்கும் தாராளமானவராக இருந்தார். விகடத்தில் தன் காலத்தின் அறிவன்மார் அனைவரையும் விஞ்சுபவராக இருந்தார். அவரின் நகைச்சுவை எந்த அளவுக்கு ஆற்றல் உடையதாக இருந்தது என்றால் அதைக் கேட்டால் எத்தகைய கடுமயான உம்மணாமூஞ்சிக் காரனும் கலகலவென்று சிரித்துவிடுவான். அனுபவமிக்க இளைஞர்களின் வட்டத்தில் அவர் ஒரு சின்னப் பையனாகவும், மனிதப் புனிதர்களின் சமூகத்தில் ஒரு ஞானியாகவும் இருந்தார். சுருக்கமாகச் சொன்னால், அவர் ஒரு நிறைவான அறிஞர், செவ்விய ஃபார்சி மொழிப் புலமை கொண்ட உன்னதமான குரு, இறையியலில் ஒரு தெளிவான வழிகாட்டி, வாழ்க்கை மற்றும் நல்லறம் பற்றி சொல்லோவியம் தீட்டிய இலக்கியவாதி.”

“ஆயிரம் பாடல்களின் அருங்குயில்” என்று அழைக்கப்படும் ஷைஃகு சஃ’தி அவர்கள் எழுதியதாக நன்கு அறியப்படும் பனுவல்கள்:


அ) பூஸ்தான் (கனித் தோட்டம்) – அறக் கருத்துக்களும் வாழ்க்கை நியதிகளும் பொதிந்த அற்புதமான கவிதை நூல்.

ஆ) குலிஸ்தான் (ரோஜா வனம்) – ஃபார்சி இலக்கியத்தில் அதிகம் படிக்கப்படும் நூல் என்று இதனைக் கருதலாம். இந்த அழகான நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிடும்போது ஈஸ்ட்விக் எழுதினார்: “பள்ளி மாணவன் தன் முதல் பாடங்களை இதில் கற்கிறான். கல்வி நிறைந்த அறிஞன் இதனை மேற்கோள் காட்டுகிறான். இதில் உள்ள அடிகள் பலவும் பழமொழிகள் ஆகிவிட்டன. இஃது எழுதப்பட்ட காலத்தை நாம் கருதினால் – பதின்மூன்றாம் நூற்றாண்டின் முதல் பாதியில் – ஐரோப்பாவின் மீது காரிருள் படர்ந்திருந்தது – அந்தோ! குறைந்தபட்சம் அது உணரப்படாத ஓர் இருள் என்று ஒப்ப வேண்டும் – அத்தகைய காலத்தில் இந்த நூலில் எழுதப்பட்டுள்ள கருத்துக்கள் பலவும், அதில் இருக்கும் இறைப் பண்புகள் குறித்த ஒளிமிகு பார்வைகளும் நிச்சயமாக அற்புதமானவையே.”

இ) பந்த் நாமா அல்லது அறிவுச் சுருள் (கரீமா)4 -  இருபதாம் நூற்றாண்டின் தத்துவச் சூழலுக்கும் பொருந்தி வருகின்ற கருத்துக்கள் பொதிந்த சிறிய கவிதை நூல். செறிவும் நேர்த்தியும் கொண்ட இந்நூல் ஃபார்சி மொழியறிந்த கிழக்குலகு நெடுகிலும் மிகப் பிரபலமான ஒன்றாகத் திகழ்கிறது. இந்நூல் அழகான சொற்கோவை கொண்டிருப்பதுடன் அச்சொற்கள் மனத்தில் பதியும்படி மிகச் சரளமாகச் சொல்லக்கூடிய சந்தத்தில் அமைந்திருப்பதும் இதற்குக் காரணம் எனலாம். எனவே இதன் அடிகள் மனனம் செய்யப்படும் வழக்கம் இருக்கிறது. வேறெந்த ஃபார்சி மொழி நூலை விடவும் இந்நூல் அந்தப் பேறு பெற்றுள்ளது. பைரன் எழுதிய “Lover’s Last Adieu” என்னும் கவிதையின் சந்தத்தை சஃ’தியின் பந்த் நாமா என்னும் அறிவுச்சுருளில் உள்ள சந்தத்துடன் ஒப்பிடலாம். இரண்டிலிருந்தும் அடிகளை அருகருகே வைத்துப் பார்த்தால் இதை உணரலாம்:

“The roses of love glad the garden of life”

“கரீமா ப-பஃக்ஷாயே பர் ஹாலே மா”

இன்னும் ஒரு விடயம் மட்டும் சொல்வதற்கு உள்ளது. அதாவது, இந்த நாட்டில் கடந்த நூறு ஆண்டுகளில் பந்த் நாமா என்னும் அறிவுச்சுருளின் எவ்வொரு மொழி பெயர்ப்பும் பதிக்கப்படவில்லை (தன்னளவில் பூர்த்தியாகாத கிளாட்வினின் பிரதி 1801-இல் பிற்சேர்க்கையான மொழிபெயர்ப்புடன் வெளியிடப்பட்டது.) எனினும், பம்பாயில் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அறிஞர் ஒருவர் அதனை ஆங்கிலத்தில் பெயர்த்தார் என்று தெரிகிறது. அவ்விரண்டு நூற்களுமே இப்போது அச்சில் இல்லை. நடைமுறையில் அந்த மொழிபெயர்ப்புப் பிரதிகள் இப்போது ஆங்கிலேயப் பொது மக்களுக்குக் கிடைப்பதாக இல்லை என்று சொல்லலாம். எனவே, இந்தப் பிரதியை வெளியிடுவதில் தடை ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

                                                                                                ஆர்தன் என். வல்லாஸ்டன்.

க்ளென் ஹில், வால்மர்

மே 6, 1906.

  ________________________________________

1 இதை அவர் சிறிய ஆசியா, பார்பரி, அபிசீனியா, எகிப்து, சிரியா, ஃபலஸ்தீன், அர்மேனியா, அரேபியா, ஈரானின் பல்வேறு மாகாணங்கள், மற்றும் இந்தியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களுக்குப் பயணித்த பின்னர் எழுதியிருக்க வேண்டும். இந்த அலைவுகளின் காலத்திலும்கூட அவரின் பெயர் அனைவராலும் அறியப்படாமல் இல்லை.

2 அதாவது சிலுவைப் போராளிகள்.

3 இன்றைய பண மதிப்பின்படி நூறு தீனார்கள் என்பது இங்கிலாந்துப் பணத்தில் ஒரு பென்னி மதிப்பு வரும். ஆனால் சஃ’தியின் காலத்தில் ஒரு தீனார் என்பது ஏழு அல்லது எட்டு ஷில்லிங் மதிப்பு இருந்திருக்கும்.

[குறிப்பு: ஷில்லிங் என்னும் நாணயம் 1960-களில் வழக்கொழிந்துவிட்டது. அப்போது அது ஒரு பவுண்டில் இருபதில் ஒரு பங்கு மதிப்பாக இருந்தது. அதாவது, 20 ஷில்லிங் = 1 பவுண்ட். இன்று ஒரு பவுண்ட் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 109 ரூபாய் ஆகும். எனவே ஒரு ஷில்லிங் என்பது 109 / 20 = 5.45 ரூபாய் ஆகும். ஆக, 1 தீனார் =  8 ஷில்லிங் = 5.45 x 8 = 43.6 ரூபாய் ஆகும். எனவே, 100 தீனார் என்பது 43.6 x 100 = 4360 ரூபாய் ஆகும். இதுவே, சஃ’தி வழங்கிய மஹர் என்னும் திருமணக் கொடையின் தொகை – ரமீஸ் பிலாலி]

4 தொல் கையெழுத்துப் பிரதிகளில் இந்தப் பனுவல் காணப்படவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். இது பொ.ஆ.1438 வாக்கில்தான் முதன் முதலாக சஃ’தி எழுதியதாகச் சொல்லப்பட்டது.


1906-இல் வல்லாஸ்டன் இதை எழுதியபோது இமாம் சஃ’தியின் அடக்கத்தலம் பாழ்நிலையில் இருந்திருக்கலாம். ஆனால் பின்னர் அது மராமத்துச் செய்யப்பட்டு இன்று வரை அழகிய வடிவில் பேணப்படுகிறது. ஸூஃபித்துவ சாதகர்கள் வருகை நல்கும் தலமாக அமைந்திருக்கிறது.