Tuesday, November 6, 2012

கண்ணீரும் புன்னகையும்


பிள்ளைகள் அரபிப் பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள். அரபி அட்சரங்களை அசைவுகளுடன் அண்ணன் சொல்லித் தர தங்கை வாசித்துக் கொண்டிருந்தாள்.
இடையிடையே அவளுக்குச் சிரிப்பு பொங்கிற்று. ஆசிரியராய்த் தன்னை பாவித்துக் கொண்ட அண்ணன் அவளிடம் சொன்னான்: “சிரிக்காதே. அல்லாஹ்விடம் பேசும்போது இப்படித்தான் சிரிப்பியா?”

இதைக் கேட்டதும் மனத்தில் ஓர் உரையாடல்:
“அல்லாஹ்வுடன் பேசும்போது சிரிக்கலாமா? அப்படி யாரும் சிரித்ததாகத் தெரியவில்லை. தொழுகை என்பது அல்லாஹ்வுடன் வசனிப்பது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அதில் சிரிப்பிற்கு இடம் இல்லைதான். ஆனால் தனிப்பட்ட முறையில் இறைவனுடன் உரையாடுவதான முனாஜாத் என்னும் வகைகளிலும் கண்ணீர் உள்ள அளவு நகை இல்லையே?”

“ஆமாம். கண்ணீரின் ஆழம் நகையில் இல்லை. எனினும் ஆண்டவனுடன் அடியான் கொண்டிருக்கும் உறவில் சிரிப்பிற்கு அறவே இடம் இல்லை என்று என்னால் எண்ண முடியவில்லை. சிரிப்புக்கள் பதியப்படாமல் போயிருக்கலாம். கண்ணீர் மட்டுமே பதிவாகியிருக்கலாம்.

கண்ணீர் ஒரு ரசவாதம். அதன் தன்மை சிரிப்பில் இல்லை. ஆனால் சிரிப்பும் ஒருவகை ரசவாதம்தான் என்பதை சூஃபிகள் அறிந்துள்ளனர். அது வலி இல்லாத அறுவை சிகிச்சை.
ஆனால் நோயில்லாத இடங்களில் எல்லாம் கத்தியை வைத்துக் கீறிக் கொண்டிருந்தால் அது அறுவை சிகிச்சை அல்ல. கோரப் படுகொலை! எனவேதான் வெற்று நகைச்சுவை என்பது ஆன்மிகத்தில் நச்சு என்று நவிலப்பட்டது. அதிகமாகச் சிரிப்பது அறியாமையின் அடையாளம் எனப்பட்டது. அதிகமாகச் சிரித்தால் இதயம் செத்துவிடும் என்பது நபிமொழி ஒன்றின் கருத்து. அதே சமயம், ‘உன் மனத்தை மிகவும் கொடுமை செய்யாதே. அது குருடாகிவிடும்’ என்று ஹழ்ரத் அலீ (ரலி) கூறியதும் முக்கியமான ஒன்று.

என்னைப் பொருத்தவரை ஞானமில்லாச் சிரிப்பு எந்த அளவு அபத்தமானதோ ஞானமில்லாக் கண்ணீரும் அதே அளவு அபத்தமானதுதான். வலிந்து சிரிப்பது போன்றே வலிந்து அழுவதும் அசிங்கமானது. இயல்பாகத் துளிர்க்கும் கண்ணீரும் இயல்பாக மலரும் புன்னகையும் ஆன்மிகத்திற்குத் தடைகள் அல்ல. இயல்பான உணர்வாய் இருக்கும் பட்சத்தில் எதுவும் இறைவனின் ஏற்பைப் பெறும் என்பதே என் தெளிவு.”

“அடடே! நீங்கள் சொன்ன சொல் கலீல் ஜிப்ரானை நியாபகப் படுத்துகிறது. அவர் தன்னுடைய ஒரு நூலுக்கு “TEARS AND LAUGHTER” (கண்ணீரும் சிரிப்பும்) என்று பெயர் வைத்திருக்கிறார். ”TEARS AND SMILES” (கண்ணீரும் புன்னகையும்) என்று வைத்திருக்கலாமே? அவர் ஏன் சிரிப்பு என்றார்?”

“நீங்கள் கேட்ட கேள்விக்கு ஓஷோவிடம்தான் பதில் கேட்க வேண்டும். ‘ஞானம் அடைந்தவுடன் நீங்கள் செய்த முதல் காரியம் என்ன?’ என்று அவரிடம் கேட்கப்பட்டது. அவர் சொன்னார், ‘ஞானம் அடைந்தவுடன் நான் சிரித்தேன்! என் முயற்சி எத்தனை அபத்தமானது என்று எண்ணிச் சிரித்தேன். ஏனெனில் நானல்லாத ஒன்றைத்தான் அடைவது சாத்தியம். ஏற்கனவே என் இயல்பாக இருக்கும் ஒன்றைக் கண்டுகொள்ளாமல் நான் இத்தனை காலம் அதைத் தேடி அலைந்ததை நினைத்துச் சிரித்தேன்’

எவன் உள்ளத்தில் உண்மை உறைகின்றதோ அவனது கண்ணீரின் முடிவில் புன்னகை தோன்றும். சூரியன் சுடரும் பகலில் மழை பெய்யும் போதுதான் வானவில் தோன்ற முடியும். அது இரவில் மழை பெய்தால் தோன்றுவதில்லை அல்லவா?

நீங்கள் வானவில்லை மழையின் அடையாளம் என்கிறீர்கள். நான் வானவில் என்பது சூரியனின் அடையாளம் என்கிறேன்.

அதுபோல் கண்ணீரை உலர்த்தும் புன்னகை உண்மையின் முகவரியாய் உள்ளது.
எனினும் கண்ணீரின் முடிவில் ஒருவன் புன்னகை செய்தால் அது மிகவும் இயல்பானது என்றே நாம் எடுத்துக் கொள்வோம். ஆனால் கண்ணீரின் முடிவில் ஒருவன் வெடிப்புறச் சிரித்தான் என்றால் நாம் மிரண்டுவிடுவோம். ஏன்?

கண்ணீர் கழுவிய கணத்தில் உண்மையின் நிழலை மட்டுமே கண்டவன் புன்னகை செய்கிறான். அதன் முகத்தை முதல் முறையாக தரிசிப்பவன் சிரிக்கிறான். கலீல் ஜிப்ரான் அதனால்தான் ‘TEARS AND LAUGHTER’ என்கிறார்.

“விலாவறச் சிரித்திட்டேனே” என்கிறார் அப்பர்.

விலா எலும்புகள் நோகச் சிரித்தாராம். அதாவது கண்ணீர் வரும் வகையில் சிரித்திருக்கிறார்.

கண்ணீரில் இருந்து சிரிப்பும், சிரிப்பில் இருந்து கண்ணீருமாக அதுவே ஒரு ஞான வேள்வி!
’இந்த உலகத்தை உற்று நோக்கும் எவனும் சிரிக்காமல் இருக்க முடியாது’ என்கிறார் ஓஷோ. அத்தனை அபத்தங்கள் இங்கே கொட்டிக் கிடப்பதை ஞானியின் கண்கள் கண்டுகொள்கின்றன.

மீண்டும் அந்த வினா: “அல்லாஹ்வுடன் பேசும்போது சிரிக்கக் கூடாதா அத்தா?”
“நீ உன் நண்பனுடன் பேசும்போது சிரிப்பாயா மாட்டாயா?”

“சிரிப்பேன்”

“அல்லாஹ்வும் நீயும் நண்பர்கள் என்றால் அவனுடன் பேசும்போது ஏன் சிரிக்கக் கூடாது?”
’அறிக, நிச்சயமாக இறைவனின் நேசர்களுக்கு அச்சம் இல்லை. அவர்கள் கவல்வதும் இல்லை’ என்பது திருக்குர்ஆன் சொல்லும் சேதி. அச்சமும் கவலையும் இல்லாதவன் சிரிப்பதற்குத் தடைகள் ஏது?

எனினும் அவர்களின் சிரிப்பு சராசரி மனிதர்களின் சிரிப்பினின்றும் வேறுபட்ட ஒன்று.
சராசரி மனிதர்களின் சிரிப்புணர்வை நினைத்தால் எனக்கு அழுகையே வந்துவிடும் போலிருக்கிறது. அற்பமான நகைச்சுவைத் துணுக்குகளுக்கும் காட்சிகளுக்கும் மக்கள் நக்கிச் சிரிப்பதைப் பரவலாகப் பார்க்க முடிகிறது.

கிச்சு கிச்சு மூட்டினால் சிரிக்கும் குழந்தையின் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். அதில் ஏதும் தப்பில்லை. ஆனால் சொறி பிடித்த கைகளால் தங்கள் மனத்தின் அக்குளை அடிக்கடி கிச்சு கிச்சு மூட்ட வைத்துச் சிரிக்கிறார்கள்!

நம் சிரிப்பு வெளியே இருந்து வருகின்றது.
ஞானிகளின் சிரிப்பு உள்ளே இருந்து வருகின்றது.
நம் சிரிப்பு சப்தங்களால் ஆனது.
ஞானிகளின் சிரிப்பு மௌனங்களால் ஆனது.
நம் சிரிப்பு மாற்றாரைப் புண்படுத்துவதாக உள்ளது
ஞானிகளின் சிரிப்பு மாற்றாரைப் பண்படுத்துவதாக உள்ளது.

ஞானிகள் சிரிக்கும்போது மனம் வித்தாகவும் வாய் பூவாகவும் இருக்கின்றன. பலர் சிரிப்பதைப் பார்க்கும்போது வாயை வள்ளலாக்கி அதனிடம் மனத்தை ஒரு பிச்சைப் பாத்திரமாக ஏந்தி நிற்பது தெரிகிறது.

சிரிப்பு மனிதனின் தனிச்சிறப்பு என்கிறார்கள். விலங்குகள் சிரிப்பதில்லையாம். மனிதன் மட்டுமே சிரிக்கின்றானாம்.

காட்டில் யானை ஒன்று இறந்துவிட்டால் சக யானைகள் சூழ நின்று துக்கம் பேணுகின்றன. அவற்றின் கண்களில் கண்ணீர் கசிகின்றது. பிறருக்காக அழும் குணம் விலங்குகளிடமும் உள்ளது என்பதை இது காட்டுகின்றது.

மனிதனிடமோ பிறருக்காக அழும் குணம் அரிதாகிவிட்டது. அது ஏதோ மாமனிதர்களின் – மனிதப் புனிதர்களின் பண்பு என்பது போல் அவன் ஆக்கிவிட்டான். பிறரின் துன்பத்தைப் பார்த்து அவன் சிரிக்கிறான். இதுதான் சிரிப்பு மனிதனின் தனிச்சிறப்பு என்பதன் லட்சணமா? வரமாகக் கிடைத்த ஒன்றை அவன் எவ்வளவு பெரிய சாபமாக மாற்றிவிட்டான்!

’இறைவா! பிறர் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலை வந்த போதும் பிறருக்காக அழும் நிலையில் என்னை ஆக்கி வைப்பாயாக!’ என்று பிரார்த்திப்போம்.

“சரி, அப்படியே, ‘என்னையே நான் பார்த்துச் சிரிக்கும் நிலையும் அருள்வாயாக!’ என்றும் கேட்போம். இதெல்லாம் இருக்கட்டும். ஞானிகளில் சிரிப்பவர்களும் இருக்கிறார்கள் சிரிக்காதவர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் கவனித்திருக்கிறேன். இது ஏன்?”

“ஞான நிலைகள் பல. அவற்றில் யார் எந்நிலையில் இருக்கிறார்களோ அதற்குத் தக அவர்களின் அகமும் முகமும் அசைவும் உரையும் அமைகின்றன.
நண்பர்கள் உரையாடும் போது சிரிப்பும் கலகலப்பும் இருக்கும் என்றேன். ஆனால் காதலில் அந்த அளவு இருக்காது.

காதலின் உரையாடலில் சிரிப்பு உப்பைப் போல் இருக்கும். அதன் உணவு வேறு உணர்வு. அதன் சுவை மௌனத்தில்தான் தெரியும்.

ஆரம்பத்தில் இருக்கும் பேச்சும் சிரிப்பும் கலவியின் ஆழத்தில் மௌனமாகிவிடும். எதுபோல் எனில், கரையில் சப்தமிட்டுப் புரளும் கடலின் அலைகள் அதன் ஆழத்தில் அமைதியாய் அசைவது போல்.

ஞானக் காதலிலும் இந்நிலைகள் உள்ளன.”

”சில ஞானிகளிடம் சிரிப்பும் கலகலப்பும் அறவே இல்லையே?”

“அது இன்னும் மேலான ஒரு நிலை. காதலி என்ற மறுநபர் உள்ள நிலையில்தான் காதலன் பேசிச் சிரிக்கிறான். இருவர் ஒன்றாகும் கணங்களில் அவை மறைந்து போகின்றன.
நீ தனிமையில் அமர்ந்திருக்கும் போது பேச்சும் சிரிப்பும் இருக்குமா? நீ மட்டும் இருக்கும் போது அங்கே மௌனமாகத்தானே இருப்பாய்?

இறைவனே இருக்கிறான் என்னும் அனுபவத்தில் தான் அற்று இருக்கும் ஞானியிடம் காதலின் பேச்சும் சிரிப்பும்கூட மறைந்து விடுகின்றன.”


Friday, November 2, 2012

அசல்கள்




இவ்வுலகில்
மனிதர்கள் என்று பலருண்டு
அவர்களில்
மனிதர்கள் எத்தனை பேர்?

இவ்வுலகில்
ஆண்கள் என்று பலருண்டு
அவர்களில்
ஆண்கள் எத்தனை பேர்?

இவ்வுலகில்
பெண்கள் என்று பலருண்டு
அவர்களில்
பெண்கள் எத்தனை பேர்?

இவ்வுலகில்
கவிஞர்கள் என்று பலருண்டு
அவர்களில்
கவிஞர்கள் எத்தனை பேர்?

இவ்வுலகில்
ஞானிகள் என்று பலருண்டு
அவர்களில்
ஞானிகள் எத்தனை பேர்?

இவ்வுலகில்
குழந்தைகள் உண்டு பல
அத்தனையும்
குழந்தைகளே!

Thursday, November 1, 2012

கூடு பேறு




மழைக் காலம் தொடங்கியது. இதுவரை காணாமல் போயிருந்த தும்பிகள் இருசோடி சிறகுகள் கொண்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டுள்ளன. ஒரு வாரமாய் நடந்து வந்த நிகழ்வு ஒன்று என் நினைவை விட்டு நீங்காமல் ஈரமாய் இருக்கிறது இன்னும்.

கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய ஒரு நாள் நண்பகல், வாசலில் காலணியைக் கழற்றி வைக்கும் போதே சகதர்மினி சலித்தபடிச் சொன்னாள்: “ரெண்டு குருவிக வந்து அட்டகாசம் பண்ணுதுக. இங்க பாருங்க.”

அவள் கை காட்டிய இடத்தில் புல்லின் இதழ்கள் கிடந்தன. ஸ்ப்ளிட் ஏ.சியின் வெளிச் சாதனத்திற்குக் கீழே, முற்றத்தில். “ஏ.சி பெட்டிக்குப் பின்னாடி கூடு கட்டப் பாக்குது. இப்படி புல்லுகளக் கொண்டு வந்து போட்டுக்கிட்டே இருக்குக. அதுல புல்லு நிக்கவும் மாட்டேங்குது.”

சிதறிக்கிடந்த புல்லின் இதழ்களை வாரி எடுத்துக் கொண்டு போய் கீழே போட்டுவிட்டு வந்தேன். ”சரி இனி வராது. பாத்துக்கலாம்.”

அந்தப் புல்லின் இதழ்கள் பார்க்க அழகாக இருந்தன. ’புத்துணர்ச்சி’ என்னும் சொல்லின் வடிவமாய்த் தெரிந்தன. உயிரின் ஈரம் காயாத அதன் பச்சை நிறம் இச்சை போல் இருந்தது. அரை அடி நீளத்தில் ரிப்பன் போன்ற புல்லிதழ்கள். “I sing the body electric” என்று பாடிய வால்ட் விடமன் தன் நூலுக்கு “Leaves of Grass” என்று பெயர் சூட்டியதை நினைவு கூர்ந்தேன். இளமையின் நலம் இலங்கும் உடல் அந்தப் புல்லின் இதழ்கள் போன்றவைதான்!

அந்தச் சிட்டுக் குருவிகள் அந்தப் புல்லின் இதழ்களை எங்கிருந்து எடுத்து வருகின்றன என்று சிந்தித்தேன். முன்னூறு அடிகள் தொலைவில் உள்ள ராணுவ மைதானத்தில்தான் இந்தப் புற்கள் வளர்ந்துள்ளன. அங்கிருந்து ஒவ்வொன்றாகப் பறித்துக் கொண்டு வருகின்றன என்று தெரிந்தது.

குருவிகள் கூடு கட்ட வருகின்றன என்ற சேதியே கேட்டவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பாட்டி வீட்டில் தங்கிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் தினம் தினம் பறவைகளின் பள்ளியெழுச்சிப் பாடல் கேட்டுப் பரவசம் அடைவேன். இப்போதெல்லாம் ஒற்றைப் பறவையின் ஒலிகூட அரிதாகிவிட்டது. அலைபேசிக் கும்பினிகளின் கம்பிக் கோபுரங்கள் ஆங்காங்கே எழுந்த பின்னர் குருவிக் கூட்டங்கள் காணாமல் போய்விட்டன.

’சிட்டுக் குருவிக்கு ராஜாளியின் வலிமையைத் தருவாயாக’ என்பது அல்லாமா இக்பாலின் பிரார்த்தனைகளில் ஒன்று. அதுபோல், “அலைபேசிக் கோபுரங்களின் கம்பிகளில் கூடு கட்டி வாழும் வலிமையை குருவிகளுக்கு அருள்வாயாக!” என்று எல்லாம் வல்ல இறைவனிடம் நானும் வேண்டுகின்றேன். ஏர்டெல், ஏர்செல், ரிலையன்ஸ், பி.எஸ்.என்.எல் இத்தியாதிகளின் கோபுரங்களில் எல்லாம் குருவிகளின் கூடுகள் தோன்றுவதாக! ஆமீன்!

’அவை இனி வாரா’ என்று சகதர்மினியிடம் சொன்னேன் அல்லவா? என் கணிப்புப் பொய்த்தது. மறுபடி மறுபடி அந்தக் குருவிகள் கூடு கட்டும் நோக்கில் புல்லிதழ்களைக் கொண்டு வந்து போட்டன. ஏ.சி க்ளாம்ப்பில் கூடு கட்டுவதற்கு வாகான அமைப்பே இல்லை. இது அந்தக் குருவிகளுக்குப் புரியாதா? என்று நான் ஆச்சரியப்பட்டேன்.

மீண்டும் மீண்டும் அப்படி இரண்டு நாட்களாக நடந்த பின் ஒருநாள் சகதர்மினி சொன்னாள்: “இப்படி அட்டகாசம் பண்ணுதுகளே. கட்டிட்டுத்தான் போகட்டும்னு விட்டுடலாம்னு பாத்தா ஃபேன்ல அப்படியே உள்ளெ இழுத்துருமேன்னு பயமா இருக்கு. வேற எடத்துக்கும் போகாது போலிருக்கு.”

பல மில்லியன் முறைகள் சிறகு சிவிறிக்கொண்டு பல மைல்கள் நாளெல்லாம் சுற்றி மலர்களில் தேன் எடுக்கவும், மரங்களிலும் கட்டடங்களிலும் அடை கட்டவும் தேனீக்களின் உள்ளத்தில் உணர்வை எழுப்பும் இறைவன் இந்தக் குருவிகளுக்கும் என் வீட்டில்தான் கூடு கட்ட வேண்டும் என்னும் உள்ளுணர்வை எழுப்பிவிட்டான் போலும்.

“ஆண்டவன் அதுக மனசுல இங்கதான் கூடு கட்டணும்னு உத்தரவு போட்டிருந்தா அத மீறி அதுங்க எப்படிச் செயல்பட முடியும் சொல்லு? நாம எத்தன தடவ தொறத்தி அடிச்சாலும் அது திரும்ப திரும்ப இங்கதான் வந்துக்கிட்டிருக்கும். அதுக்கு இங்கதான் சாவணும்னு இருந்தாலும் வேற வழி இல்ல. மனுஷன் வாழ்க்கையே அப்படித்தானே இருக்கு?” என்றேன் நான்.

“அல்லாஹ் காப்பாத்தட்டும். அதுங்க நம்ம வீட்ல வந்து சாக வேணாம். வேற வழி எதாச்சும் யோசிச்சுப் பாருங்க. அதுங்க வேற எடத்துக்குப் போயிடட்டும்” என்று சொல்லிவிட்டு அவள் அடுக்களைக்குப் போனாள்.

ஒரு ஞாயிற்றுக் கிழமையின் காலை. கசப்பும் இனிமையும் இழையோடும் லாட்டே அருந்திய பின் தியானத்தில் பொருந்தி இருந்தேன். முற்றம் சென்ற சகதர்மினி அவசரமாக அழைத்தாள்.

“குருவிங்க வந்திருக்குப் பாருங்க”

“நீயே அத விரட்டிடேம்ப்பா”

”நீங்களே வந்து விரட்டிப் பாருங்க. நாலு நாளா நான் தொறத்திக்கிட்டுத்தான் இருக்கேன். போக மாட்டேங்குதே”

வராந்தாவில் ஓரத்திற்குச் சென்றேன். நான் நோக்கி வருவதைக் கண்டவுடன் பதறிக் கொண்டு இரண்டு சிட்டுக் குருவிகள் புல்லிதழ்களைப் போட்டுவிட்டு விற்றிட்டுச் சென்று மின்கம்பியில் அமர்ந்தன. அருகில் சென்று நின்று கூர்ந்து பார்த்தேன். என் கைப்பிடியில் அடங்கி விடும். அத்தனைச் சிறிய உடல் கொண்ட பறவை. கரிய நிறத்தில் சிறகுகள். தலையிலும் கருமை. உடல், நனைந்த செங்கல் நிறம். மெருகேற்றிய கன்னங் கரிய நிறத்தில் சின்னஞ் சிறிய அலகு. அதில்தான் அத்தனை நீளமான புல்லிதழைக் கவ்விக் கொண்டு வந்துள்ளது என்று எண்ணுகையில் வியப்பாக இருந்தது. என்னவொரு உழைப்பு!

அதன் கண்கள் பளபளக்கும் கருநிறக் கண்ணாடிக் கல் போல் இருந்தது. அதில் ஓர் ஏக்கமும் கனவும் இருந்ததாகப் பட்டது. கூர்ந்து அதன் கண்களைப் பார்த்த கணத்தில் தோன்றிற்று அது வேறு வடிவத்தில் உள்ள ‘நான்’தான் என்று!

“குருவியே! உன்னை நான் ஏன் துறத்துகிறேன் தெரியுமா? இந்த இடம் உனக்குப் பாதுகாப்பாய் இல்லை. எந்திர விசிறி உன்னையும் உன் மனைவியையும் அப்படியே கூட்டோடு உள்ளே இழுத்துக் கொன்று விடும். நினைக்கவே பயமாக இல்லையா? எனவே காற்று தாலாட்டும் ஏதேனும் மரக்கிளை தேடிச் சென்றுவிடு” – இவ்வாறு அதனுடன் மானசீகமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே அது விர்றென்று பறந்து வேறு பக்கமாக உள்ளே வர முயன்றது. நான் அப்பக்கமும் போய் அதை துறத்தினேன். மின் கம்பியில் அமர்ந்து சில நொடிகள் பார்த்துவிட்டுப் புறப்பட்டுப் போனது. அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த இணைக் குருவியும் அதன் பின்னாலேயே பறந்து போனது. ஒருவேளை தன்னுள் அது அண்டங்கள் சுமக்கிறதோ?

திரும்பிய என்னிடம் சகதர்மினி சொன்னாள், “உங்களைப் பார்த்ததும் இப்படிப் பயந்து ஓடிச்சே. என்னைப் பார்த்தப்ப துளிகூட பயப்படல.”

நான் என்ன அவ்வளவு கொடூரமானவனா? இல்லை, பெண்மையில் அது அளவற்ற கருணையின் சாயலை தரிசித்துவிட்டது போலும்!

“இனி வராதுப்பா” என்று மட்டும் அவளிடம் சொன்னேன். ‘மானஸ மொழியில் சொல்லி அனுப்பிவிட்டேன்’ என்பதை என் மனதிலேயே சென்சார் செய்துவிட்டேன்.

ஆமீன்! ததாஸ்து! என்பனவும் அன்னவை வேறு மொழி எதிலும் அந்த முகூர்த்தத்தில் சொல்லப்படவில்லை போலும். நான் என்ன முனிவனா? தலையைப் பிய்த்துக் கொள்வது போல் தத்து பித்தென்று எழுதிப் பட்டம் பெற்ற ’முனைவன்’தானே? நான் நினைப்பதா நடக்கும்? அன்று மாலையே குருவிகள் மீண்டும் ஆஜர்!

என்னைக் கண்டதும் அவை அபிநயிக்கும் அச்சம் வெறும் நடிப்புப் போல் தோன்றியது. அவை போவதும் வருவதுமாய் விளையாடத் தொடங்கிவிட்டன. அவற்றைத் தடுக்க வழி அறியாது தவித்தபோது வீட்டிற்கு வந்திருந்த மாமா ஒரு உத்தி உரைத்தார். வேட்டுச் சத்தம் கேட்டால் இந்தப் பக்கமே பிறகு தலை வைத்துப் பறக்காதாம்! தீபாவளியின் பட்டாசு வெடி வகைகளை நான் கண்ணில் பார்த்து வருஷங்கள் பலவாச்சு. வேறு ஐடியா யோசிப்போம் என்று எண்ணுகையில் என் சிந்தனையில் செல்ல மகளின் குழந்தைப் பொம்மை சிரித்தது.

படுக்க வைத்தால் கண்கள் மூடித் தூங்கும். நிமிர்த்தி வைத்தால் அகலத் திறந்து நீல விழிகளால் நோக்கும். அந்தப் பஞ்சுப் பொதிப் பொம்மையை ஏ.சி வெளிச் சாதனத்தின் க்ளாம்ப்பில் அமர வைத்துவிட்டால்? அதைக் காணும் குருவி ஆள் இருப்பதாக எண்ணி அதன் பின் வராது என்ற திட்டம் தீட்டப்பட்டது. அப்போதே அமுலுக்கும் வந்தது.

இரண்டு நாட்கள் கழிந்தன. அந்த இரண்டு சிட்டுக் குருவிகள் அதன் பின் வரவே இல்லை. பொம்மை வீட்டுக்குள் வந்துவிட்டது. நான்கைந்து நாட்கள், வெளிக் கிளம்பும் போதெல்லாம் என் கண்கள் அவற்றைத் தேடித் துழாவின. தென்படவில்லை.

பின் ஒரு நாள் வானம் திறந்து கொண்டு நான்கு நாழிகை மழை கொட்டித் தீர்த்தது. வானம் வெறித்த பின் கதவு திறந்து வந்து முற்றத்தில் நின்றேன். மரக் கொப்புகளில் இருந்து மழைத் துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன.

அந்தக் குருவிகள் வேறு எங்காவது கூடு கட்டியிருக்கும். பரம்பொருளின் அலகிலா அருளில் இருந்து வெளிப்படும் ஆனந்தக் கலவியின் அடையாளமாய் அந்த இணையின் பெண் அதில் முட்டைகள் இட்டு வைத்திருக்கவும் கூடும்.

இப்படி எண்ணிக் கொண்டிருக்கையில் ஒரு நடை அவற்றின் வீடு வரை சென்று விசாரித்து விட்டு வர வேண்டும் போல் தோன்றியது.

இளையராஜா




கான்க்ரீட் அறைக்குள்
காடு விரிக்கும் உன்
கானம்

இளவெயில் உடையும்
மூங்கிற் காட்டில்
நிறுத்தும் என்னை
உன் குழலிசை

வயலின் ஊடாய்
வளையும்
மருத மாருதமாய்
மயக்கும் உன்
வயலின் இசை!

கிதார் கருவி-
நீ மீட்டுகையில்
இசையின் அருவி!

ஏழு ஸவரங்கள்
ஏழு கடல்கள்
என்பதறிந்தேன்
உன் பாடல்களின்
அலைகளில்

ஆர்மோனியச் சாவிகளில்
ஆன்மாவின் பூட்டுக்களைத்
திறப்பவன் நீ

நவரசங்களை
நாதத்தில் தோய்த்து நீ
நவில்கையில்
நான்காம் பரிமாணம்
நெற்றிபுள்ளியில் குவிந்து
நெருப்புப் புள்ளியாய்
ஒளிரும்

விண் வாசமும்
மண் வாசமும்
இணைந்த
பெண் வாசமாய்
உன்
பண் வாசம்

சிற்றின்பம் பேசும்
சிறுவாசகத்திலும்
பேரின்பம் பேசும்
திருவாசகத்தின்
பக்திச் சுவையை
பாவிப்பாய்

இருவரை
ஒருவராக்கும்
காதலின் சந்நிதியில்
கடவுளைத் தரிசித்து
சேவிப்பாய்!

உன்
ராகங்களில்
மோகங்கள்
யோகங்கள்
ஆவதுண்டு

உன் இசை
பிம்பங்களுக்குப்
பின்னணி ஆனாலும்
வாழ்வின்
நிஜம் தேடியே
நீள்கின்றன

உன் இசை
செயற்கைச் சூழலில்
செல்லுலாய்ட் கனவுகளுக்குச்
செப்பப்பட்டாலும்
இயற்கையின்
இதயத்துடிப்பை
இயம்பாமல்
இருந்ததில்லை

மழைக் காலத்தின்
மத்தியான
மஞ்சள் வெய்யிலில்
தலை சிலுப்பி நிற்கும்
தென்னை மரத்துக்கும்
தெம்மாங்கு போடுவாய்

வயற்காட்டின்
வரப்பில் கால் வைத்து
வாய்க்காலில் முகம் பார்க்கும்
புல்லின் மடலுக்கும்
பூபாளம் பாடுவாய்

உன்
இசைக் குறிப்புக்கள்
எழுதப்பட்ட காகிதம்
திசைக் குறிப்புக்கள்
தென்படாத
கா கீதம்!

மும்மூர்த்திகள்
மூளை பிசைந்து
இழைத்துத் தந்த
இசை இயலில்...
நாட்டுப்புறத்தின்
நாயகனாய்
நீ வந்து
நாத்து நட்டாய்
இசை வயலில்!

காப்பியில் அமிர்தம்
கடைந்தவன் நீ!

தன்யாசியைத்
தழுவும்
சன்யாசி!

அம்சத்வனியின்
அம்சங்களை
இம்சை செய்யாமல்
இன்னிசை ஆக்கியவன்!

மோகனம்
மௌனத்தின்
வாகனம்
என்னும்படியாய்
மெட்டமைத்தாய்

செவிகள் எளிதில்
செரிக்க முடியாத
செவ்விசையை
எவ்விசையும்
ஏற்கும் வண்ணம்
கட்டமைத்தாய்!

வார்த்தை வாணர்
வடித்துத் தரும்
வரிகளுக்கு
உன் இசை
ஆடையாய் இருப்பதுண்டு;
அறிந்தே அவசியாமாய்ப்
பாடையாய் இருப்பதுண்டு;
முன்னிறுத்தும்
மேடையாய் இருப்பதுண்டு;
வளர நீர் பாய்ச்சும்
ஓடையாய் இருப்பதுண்டு;
வரள வெயில் பாய்ச்சும்
கோடையாய் இருப்பதுண்டு!

வீணையை
விறகாக்கும்
விரகத்தை
வர்ணங்களால்
வரைந்து காட்டினாய்
ரக ரகமாய்

அதில்-
ஆதி தாளத்தின்
ஆகர்ஷனங்களை
அனுபவிக்கத் தந்தாய்
சுக சுகமாய்!

சிருங்காரம் ஒரு
ஆகாரம் --அதற்கு
ஆன்மிகம்
ஆதாரம்
என்றபடி -
எழுதினாய் இசை
இந்திய மரபில்
நின்றபடி!

வான்கா
தஞ்சாவூர் ஓவியம்
வரைந்ததுபோல்
கிராமஃபோன் காணாத
கிராமிய இசைக்குள்
மொஸார்ட்டை
மொழிவாய்!

தத்தகாரம்
தொட்டெடுத்து
தழைய தழைய
மெட்டெடுத்து
அதற்குள்
’பாக்’கின் பாணியைப்
பிழிவாய்!

திரையிசையில் நீ
தீட்டிய
பாட்டோவியங்கள் – வெறும்
கோட்டோவியங்கள் - அந்த
மெட்டுக்கள் என்னும்
மொட்டுக்களை நீ
மலர்த்தினால்
ஆயிரம் ஆல்பங்கள் ஆகும்!

இருதயத்தின் துடிப்பில்
இருக்கின்ற ஒருலயம்
உன்னிடம் ஆனது
வாத்தியத்தில்
வசம்!

’இசைஞானி’ என்றுனக்கு
இயம்பப்படும் பட்டம்
பொய்யல்ல,
நிசம்!

நாயன்மார் தமிழின்
நயங்களை
ஓசையில் நீ
ஓர்கிறாய் என்று
செப்பலாம்

’அவர்
ஆழ்வார் போல்வார்’
என்றுனை உரைத்தால்
அட்டியின்றி
ஒப்பலாம்

சித்தர் வாக்கியங்கள்
சிந்திப்பவனே!
மஸ்தானை மனதில்
வந்திப்பவனே!
மகரிஷியின் வழியில்
மோனிப்பவனே!
கரைந்துருகி என்றும்
கானிப்பவனே!

’இசையின் மூலம்
மௌனம்’
என்பதறியும்
உன் தியானம்

ஒருபோது-
’வெறும் காற்றன்றி
வேறென்ன?’
என்பாய் எளிதாக

மறுபோது-
’எப்படிப் பெயரிடுவேன்?’
என்று வியப்பாய்
மெலிதாக!

பால் நிலாப்
பாதையில்
பாட்டுக்கள்
பகர்ந்தபடி

நாளும் நடைபோடு
கடல் நோக்கி செல்லும்
நதியாய் நகர்ந்தபடி!

’அவனன்றி ஓர்
அணுவும் அசையாது’
என்பதுபோல்
’அவனின்றி ஒரு
ஸ்வரமும் இசைக்காது’

இதனைக்
கண்டவனும்
கொண்டவனும்
விண்டவனும்
ஆனாய்

அதனால்தான்
இன்னமும் உன்
இசை பாய்கிறது
எம் காதுகளில்
தேனாய்!


a