Wednesday, January 10, 2024

2024 - முதல் ஐந்து நூற்கள்

 இந்த ஆண்டுக்கு (உண்மையில் திசம்பர் 2023 பதிப்பு) எழுதிய நூல்கள் மொத்தம் 12. அச்சகத்தில் இருந்து சென்னை புத்தகத் திருவிழாவில் சீர்மை அரங்கிற்கு இதுவரை வந்து சேர்ந்திருப்பவை ஐந்து நூற்கள். முகநூலில் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியே அறிமுகம் எழுதினேன். அவற்றை இங்கே தொகுத்துத் தருகிறேன்.

1. ரூமியின் ருபாயியாத்


உலகெங்கும் கடந்த கால் நூற்றாண்டு காலமாக அதிகமான அளவில் மொழிபெயர்க்கப்படும் கவிஞர் யார்? ஐயமின்றி, மவ்லானா ரூமி என்று சொல்லலாம். 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி ஞானியின் கவிதைகள் எப்படி நவீன மொழிபுகளாக வெளிப்பட்டு உள்ளங்களை ஈர்க்கிறது என்று பலரும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர்.
எனது எழுத்துப் பணியின் நூல் வடிவம் கூட மவ்லானா ரூமியின் மொழிபெயர்ப்பைக் கொண்டே தொடங்கிற்று. ஏ.ஜே.ஆர்பெர்ரி செய்த ஆங்கில ஆக்கத்தைத் துணை கொண்டு ஃபார்சி மொழியிலான மூலத்தையும் பயின்று ஏறத்தாழ எழுபது ருபாயியாத் (நான்கு அடிகளால் ஆன கவிதை)களைத் தமிழாக்கம் செய்து ஒலிக்குறிப்புகளுடனும் மூல ஃபார்சியுடனும் பிரதி ஒன்றை உருவாக்கினேன். அதனை பேராசிரியர் ஷே.நாகூர் கனி அண்ணன் 2007-இல் நூலாக வெளியிட்டார். அதன் தலைப்பு “ரகசிய ரோஜா.”
எனது அந்த நூல் தனிச்சுற்றுக்கு என்பது போல் சூஃபித்துவ ஆர்வம் கொண்ட மற்றும் அவ்வழியில் ஈடுபட்டுப் பயிற்சி எடுக்கின்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
அதன் பின்னர் ரூமியின் சிந்தனைச் சுடர்களை இரண்டு மூன்று வரிகளே கொண்ட கவிதைகள் போல் எழுதிய தொகுப்பு “ரூமியின் வைரங்கள்” வெளியானது (பேராசிரியர் மு.சாதிக் பாட்சா அவர்களின் ‘ராஜா பப்ளிகேஷன்ஸ்’) அதனைப் பின்னர் இலங்கையில் நண்பர் முஹம்மது சாப்ரி அவர்கள் “கஜல்” பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டார்.
என்.சத்தியமூர்த்தியின் ”தாகம் கொண்ட மீன் ஒன்று” (ஆங்கிலத்தில் கோல்மன் பார்க்ஸ் மொழிபெயர்த்த தொகுப்பான “The Essential Rumi" என்னும் நூலினை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட தமிழாக்கம்) மிகவும் பாராட்டப்பட்ட ஒன்று. அண்மையில் க. மோகனரங்கன் மொழிபெயர்ப்பில் “இதயங்களின் உதவியாளர்” என்னும் நூல் வெளிவந்து பெருங்கவனம் பெற்றுள்ளது.
இந்தச் சூழலில்தான் எனது மொழிபெயர்ப்பிலான “ரூமியின் ருபாயியாத்” நூலினை இப்போது சீர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்த நூலைப் பற்றி கவிஞர் நிஷா மன்சூர் இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதிய தனது முகநூல் இடுகையில் இப்படிச் சொல்கிறார்:
"இதுவரை தமிழில் வெளிவந்த ரூமி மெளலானா மொழிபெயர்ப்புகளில் சிறந்த மொழிபெயர்ப்பு எதுவென நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டார்கள்.
சர்வ நிச்சயமாக ரமீஸ் பிலாலியின் மொழியாக்கத்தில் வெளியான "ரூமியின் வைரங்கள்"தான் தமிழின் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகும்."
அவர் அப்படி உணர்கிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அதையும் தாண்டிய ஒரு பெருநூலை “ரூமியின் ருபாயியாத்” என்னும் தலைப்பில் இப்போது தந்திருக்கிறேன் (323 பக்கங்கள்) இதில் 410 ருபாயியாத் கவிதைகள் இருக்கின்றன. (இவற்றின் மூல ஃபார்சி வரிகளின் ஒலிபெயர்ப்பையும் (transliteration) இணைப்பாகத் தந்திருக்கிறேன். தேவையான இடங்களில், பாடல்களை விளங்கிக் கொள்வதற்கான அடிக்குறிப்புகளும் தந்திருக்கிறேன்.
ரூமியின் நூல் என்றாலே அதனை மிக அழகான வடிவமைப்பில் பதிப்பிக்க வேண்டும் என்று தோன்றுவது இயல்பு. “தாகம் கொண்ட மீன் ஒன்று” மற்றும் “இதயங்களின் உதவியாளர்” ஆகிய நூற்களின் அச்சாக்கம் மிகுந்த அழகியல் உணர்வுடன் செய்யப்பட்டிருந்தன. (எனது “ரகசிய ரோஜா”, “ரூமியின் வைரங்கள்”, நாகூர் ரூமி எழுதிய “பாரசீகக் கவிஞானி மவ்லானா ரூமியின் கவிதைகள் கதைகள்” ஆகிய நூற்களின் அச்சாக்கத்தை விட பன்மடங்கு அழகாக என்று சொல்வேன்.)
இப்போது சீர்மை வெளியிட்டிருக்கும் “ரூமியின் ருபாயியாத்” அச்சாக்கத்தில் அந்தத் தரநிலையை எட்டியிருக்கிறது. இறையருளால் சீர்மை மேலும் பல புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.

2. ரூமியின் ஞானப் பேருரைகள்


உலகின் பெரும் சிந்தனையாளர்கள் தாமே ஒரு சிந்தனைப் பள்ளியாகத் திகழும் ஆளுமையாக இருப்பார்கள். எனவே அவர்களின் சிந்தனை முறையை அவர்களின் பெயராலேயே அழைக்கும் மரபும் இருக்கிறது.
உதாரணமாக, மகாத்மா காந்தியின் சிந்தனைகளை “காந்தியம்” என்று சொல்கிறோம். அதே போல் பெரியாரியம், அம்பேத்கரியம் என்றெல்லாம் சொல்லாடல்கள் உள்ளன.
இது சிறந்த கவிஞர்களுக்கும் பொருந்தும்.
மகாகவி பாரதியின் சிந்தனைகளை “பாரதியம்” என்று சொல்கிறோம்.
உருதுவின் மகாகவியான அல்லாமா இக்பாலின் சிந்தனைகளை “இக்பாலிய்யத்” (அதாவது, இக்பாலியம்) என்றே அழைக்கிறார்கள்.
அதுபோல், ஃபார்சி மொழியின் மகாகவியான மவ்லானா ரூமியின் சிந்தனைகளை “ரூமித்துவம்” அல்லது “ரூமியியம்” என்று நாம் குறிப்பிடலாம்.
மவ்லானா ரூமி தொடர்பில் நான் இதுவரை எழுதியுள்ள நூற்களைப் பட்டியலிட்டு அவற்றை “ரூமித்துவ நூற்கள்” என்றே சீர்மை பதிப்பகம் குறிப்பிட்டிருக்கிறது.
எலிஃப் ஷஃபாக் எழுதி நான் தமிழில் மொழிபெயர்த்த “காதலின் நாற்பது விதிகள்” என்னும் நாவல், இத்ரீஸ் ஷாஹ்வின் “ரூமியின் வாழ்வில் நூறு கதைகள்” ஆகிய நூற்கள் ரூமியின் சரிதை நிகழ்வுகளை நமக்குக் காட்சிப்படுத்துகின்றன.
இப்போது வெளியாகியிருக்கும் “ரூமியின் ருபாயியாத்” என்னும் நூல் மவ்லானா ரூமியின் 410 குறுங்கவிதைகளைத் தமிழில் தருகிறது. (விளக்கக் குறிப்புகளும் ஒலிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளன.)
எனினும், ஒரு மகாகவியின் கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர் எத்தகைய சிந்தனை முறைமையில் இருந்து எழுதுகிறார், அவரின் சிந்தை எத்தகைய கருத்தியல்களைக் கொண்டு இயங்குகிறது என்பதை நான் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு உதவி செய்யும் வகையில் அந்தக் கவிஞரைப் பற்றிய ஆய்வு நூற்கள் எழுதப்படுவது உண்டு.
ஆனால், அந்தக் கவிஞரே தனது சிந்தனைகளை உரைநடையில் பேசியோ எழுதியோ வைத்திருந்தால் அது அவரைப் புரிந்து கொள்ள மிகச் சிறந்த கருவியாகும்.
மவ்லானா ரூமி அப்படி ஓர் அற்புதமான உரைநடை நூலை நமக்குத் தந்திருக்கிறார். அது, அவர் தனது சீடர்களுக்கு ஆற்றிய ஞான உரைகளின் தொகுப்பு நூலான “ஃபீஹி மா ஃபீஹி” என்பதாகும். இந்நூலை மூல மொழியான ஃபார்சியில் வாசித்து, அதன் உருது மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்களையும் துணை கொண்டு, தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். “ஃபீஹி மா ஃபீஹி - ரூமியின் ஞானப் பேருரைகள்” என்னும் தலைப்பில் அதனை சீர்மை தற்போது வெளியிட்டுள்ளது.
’ரூமித்துவம்’ பற்றி அறிய விரும்புவோர்க்கு இது ஓர் இன்றியமையாத நூல்.விசி

3. விசித்திரர்களின் புத்தகம் (ஸூஃபி நாவல்)


தமிழ் நாவல்களில் மெய்யியல் சிந்தனைகள் எப்படியெல்லாம் இடம் பெற்றுள்ளன என்று ஆராய்ச்சி நிகழ்த்த கவிஞர் ஜார்ஜ் ஜோசஃபுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ஸூஃபித்துவப் பின்னணியில் போதிய நாவல்கள் இல்லை என்பதைக் கண்டோம். தமிழிலேயே எழுதப்பட்ட ஸூஃபி நாவல் என்று நாகூர் ரூமியின் ”திராட்சைகளின் இதயம்” மட்டுமே கிடைத்தது.
இந்த நிலை மாற வேண்டும் என்பதற்கான முன்னெடுப்பில் சீர்மை பதிப்பகம் ஸூஃபி நாவல்களைத் தமிழில் கொண்டு வரத் தொடங்கிற்று. அந்த மொழிபெயர்ப்புப் பணியை நான் ஏற்றேன். அதன்படி, இதுவரை வெளியாகியுள்ள ஸூஃபித்துவ நாவல்கள் நான்கு:
1. காதலின் நாற்பது விதிகள் (எலிஃப் ஷஃபாக்)
2. ஜின்களின் ஆசான் (இர்விங் கர்ஷ்மார்)
3. அஹில்லா (முஅதஸ் மத்தர்)
4. விசித்திரர்களின் புத்தகம் (அயான் தல்லாஸ்)
இவற்றுள், தற்போது வெளி வந்திருக்கும் நான்காம் நாவலான “விசித்திரர்களின் புத்தகம்” முந்தைய மூன்று நாவல்களில் இருந்து சில அம்சங்களில் வேறுபடுகிறது.
முதலில், இது ஒரு நிஜக் கதை. அயான் தல்லாஸ் ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்து ஒரு நடிகராகவும் நாடக எழுத்தாளராகவும் இருந்தார். அவர் பின்னாளில் மொரோக்கோ நாட்டிற்கு வந்து இஸ்லாமை ஏற்று ஸூஃபித்துவ நெறியில் இணைந்து அப்துல் காதிர் அஸ்-ஸூஃபி என்று ஆகி, தன் வாழ்வின் கனிந்த காலத்தில் ஒரு ஸூஃபி குருவாகப் பரிணமித்தார். இந்த வாழ்க்கை வரலாற்றின் முதற்கட்டத்தை கொஞ்சம் புனைவு கலந்து அவரே ஒரு நாவலாக எழுதியிருக்கும் கதைதான் “விசித்திரர்களின் புத்தகம்” (The Book of Strangers) என்னும் நாவல்.
மெய்யறிவுக்கான தேடல் ஒரு நபரை எந்த அளவுக்கு கால இட எல்லைகளைக் கடந்து செல்ல வைக்கும் என்பதற்கு இந்தக் கதை ஓர் ஆவணமாக நமக்குக் கிடைத்திருக்கிறது.

4. சிவப்புக் கந்தகம் (ஸூஃபி கோட்பாட்டியல் நூல்)


ஸூஃபித்துவம் குறித்த கவனம் உலக அளவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனைப் பற்றிய சரியான நூற்கள் வெளிவர வேண்டிய தேவை மிக முக்கியமானது. அந்தத் தேவை தமிழில் அதிகம் உள்ளது. அதற்கான முன்னெடுப்புகள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கிவிட்டது எனலாம். அவ்வகையில் எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாக்கவி, நெல்லிக்குப்பம் அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத், ஆர்.பி.எம்.கனி, டி.எம். மூசா கான் காதிரி, மகான் ஆரணி பாவா முதலியோரை நான் நினைவு கூர்கிறேன். இவர்களுள், முதல் மூவரின் நூற்கள் அனைத்து மதத்தினரும் எளிதில் வாசிக்கும் நடையில் அமைந்தவை.
இந்த முன்னெடுப்புகளின் தொடர்ச்சியில் ”சூஃபி வழி” என்னும் பெருநூலையும், “மவ்லானா ரூமியின் கவிதைகள் கதைகள்”, “நாகூர் நாயகம் அற்புத வரலாறு” , “ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்” முதலிய நூற்களை எழுதிய நாகூர் ரூமி அவர்களைக் குறிப்பிட வேண்டும். எனினும் இந்தப் பணி ஒற்றை ஆளால் முடியும் ஒன்றல்ல.
என்னால் இயன்ற அளவு ஸூஃபித்துவம் சார்ந்த, ஆழமும் அழுத்தமும் கொண்ட செவ்வியல் நூற்களை மொழிபெயர்த்து வருகிறேன்.
எந்த ஓர் அறிவுத் துறையையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் எனில் அந்தத் துறை சார்ந்த சொல்லாடல்களையும் அடிக்கருத்துக்களையும் கோட்பாடுகளையும் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான நூற்களை நாம் வாசிக்க வேண்டும். ஸூஃபித்துவத்துவமும் இந்த நியதிக்கு விதிவிலக்கல்ல.
எனவே, ஸூஃபித்துவக் கருத்தியல் தொடர்பான ஆதார நூற்களை மொழிபெயர்க்கும் வரிசையில், ஏற்கனவே இமாம் அல்-குஷைரியின் “ரிசாலத்துல் குஷைரிய்யா - சூஃபிக் கோட்பாடுகள்” நூலும், மவ்லானா ரூமியின் ”ஃபீஹி மா ஃபீஹி ரூமியின் ஞானப் பேருரைகள்” ஆகியவற்றைத் தமிழுக்குத் தந்திருக்கும் நிலையில், அப்துல்லாஹ் இப்னு அபீபக்ரு அல்ஐதறூஸ் அவர்கள் எழுதிய “கிப்ரீத்துல் அஹ்மர்” என்னும் ஸூஃபிக் கோட்பாட்டு நூலின் தமிழாக்கம் ”சிவப்புக் கந்தகம்” என்னும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது.
இந்த புத்தகம் அளவால் சிறியது; சிந்தனையால் பெரியது. ஸூஃபி வழியின் படிநிலைகளை விவரிக்கும் நூல் இது. ஸூஃபித்துவத்தில் ஒரு குருவின் கீழ் பயிற்சி பெறும் ஆன்மிகச் சாதகர்கள் அடையும் அனுபவங்களின் படிநிலைகளை வரைபடம் போல் சித்திரத்திக்கும் கட்டமைப்புக் கொண்ட அற்புதமான நூல் இது. ஸூஃபித்துவம் சார்ந்த நூற்றுக்கணக்கான அறபுச் சொல்லாடல்கள் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது. ஸூஃபித்துவம் பற்றி ஆழமாக அறிய விரும்புவோருக்கு இந்நூல் அடுத்த கட்டத்துக்க்கான முன்னகர்வை நல்கும் என்று நம்புகிறேன்.

5. மலை முகட்டில் ஒரு குடில்
(குர்ஆனிய ஞானக் கட்டுரைகள்)


சீர்மை பதிப்பக வெளியீடாக அண்மையில் வந்திருக்கும் எனது கட்டுரை நூல் “மலை முகட்டில் ஒரு குடில்”. இதில் 17 கட்டுரைகள் உள்ளன. இவை குர்ஆன் வசனங்களை அடிப்படையாக வைத்து ஆன்மிக நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஆகும். எனவே இவற்றில் ஸூஃபித்துவச் சுவை இருக்கும்.
கட்டுரைகள் ஒவ்வொன்றும் அளவால் சிறியவைதான், சில பக்கங்கள் வருபவைதான். நீளமான கட்டுரைகள் அல்ல.
நூலின் முன்னுரையில் இருந்து சில பகுதிகள்:
”ஒளி நிறமற்றது. ஆனால், ஆடியின் வழியே பாயும் போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிகின்றது. மழைக் காலத்தில் நீராடி வழியே பாயும் கதிரொளி வானவில்லாய் வெளிப்படுகிறது. அதுபோல், குர்ஆன் வசனங்கள் ஒளி ஆகும். அவை அடியேனின் சிந்தை என்னும் ஆடியின் வழியே பல்வேறு கருத்துருவங்களாக வெளிப்பட்டதன் பதிவுகளே இக்கட்டுரைகள். எனவே, வானவில் போல் இந்த நூல் ஒரு ஞானவில்!
”இவை 2007 முதல் 2018 வரையிலான காலத்தில் பல்வேறு சூழல்களில் எழுதப்பட்டவை.”
”இக்கட்டுரைகளில் மூன்று வித மொழிநடை அமைந்திருப்பதை இப்போது அவதானிக்கிறேன். முதல் ஒன்பது கட்டுரைகள் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களது மொழிநடையைப் பின்பற்றி எழுதப்பட்டன. ஏனைய கட்டுரைகள் தர்க்கம் என்னும் கருவி கொண்டு சிந்தனையை முன்னகர்த்தி வளர்ந்து செல்பவை.”
”இக்கட்டுரைகள் அனைத்தையும் இணைக்கும் மைய இழை மாமறையாம் குர்ஆன் மட்டுமே. எனினும், இக்கட்டுரைகளில் பல்சமய மற்றும் பல்தத்துவ ஒப்பாய்வுப் பார்வைகள் ஆங்காங்கே இருக்கின்றன. ஞானம் என்னும் நமது தொலைந்த ஒட்டகம் சீனாவில் மேய்ந்து கொண்டிருந்தாலும் அதனைப் பிடித்துக் கொண்டு வரத்தான் வேண்டும் அல்லவா?”





புத்தகத் திருவிழா 2024

சென்னையில் நடைபெற்று வரும் 2024-ற்கான புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சீர்மை பதிப்பகம் நான் மொழிபெயர்த்த மற்றும் எழுதிய நூற்களைக் கொண்டு வருகிறது. இதுவரை ஐந்து நூற்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. மேலும் ஏழு நூற்கள் அச்சில் இருக்கின்றன. பொங்கலுக்குள் வந்துவிடும் என்று நண்பர் உவைஸ் அஹ்மத் சொன்னார். 

கடந்த ஆறாம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று ஒருநாள் பயணமாக மனைவி மற்றும் மகனுடன் சென்னைக்குக் கிளம்பினேன். முந்தைய நாள்தான் நண்பர் கொள்ளு நதீமிடமும் உவைஸ் அஹ்மதிடமும் தகவல் சொன்னேன். உடனடியாக என் வருகையை அறிவித்து ஒரு போஸ்டரை முகநூலில் ஏற்றிவிட்டார்கள். 




உவைஸ் அஹ்மத், சாளை பஷீர், இஸ்மாயில் சேட் அன்ஸாரி, அஸ்வத் ஷரீஅத்தி ஆகியோர் உள்ளிட்ட சீர்மைக்குழுவினரைச் சந்தித்தேன் (சீர்மை அரங்க எண்- 318). பின்னர், மதிய உணவுக்கு முன் ஆறாம் “bay" வரை உள்ள கடைகளை அலசிச் சில நூற்களை வாங்கினேன். 

             திரு.பாலா பாரதி


இடையில் ஓரிடத்தில், யாரோ என்னைப் பேர் சொல்லி அழைக்க, திரும்பினால் பாலா பாரதி நின்றுகொண்டிருந்தார். “காக்கைக் கூடு” அரங்கிற்கு அழைத்தார். அவர் எழுதி வெளியாகியிருக்கும் “பாறை ஓவியங்களைத் தேடிப் பயணம் - தொகுதி 1” நூலை வாங்கினேன். மானுடவியல் மற்றும் தொல்லியல் நோக்கில் தமிழுக்கு அது மிக முக்கியமான ஒரு நூல். 


      நண்பன் சதீஷ் குமாருடன்.


மதிய உணவுக்கு நந்தனம் புகாரியில் அமர்ந்திருந்தபோது அலைபேசியில் என் கல்லூரிப் பருவத்து நண்பன் சதீஷ் குமார் அழைத்தான். சொன்னபடி முக்கால் மணி நேரத்தில் தாம்பரத்தில் இருந்து வந்துவிட்டான். எனது நூல்களை எல்லாம் பார்த்துவிட்டு “மலை முகட்டில் ஒரு குடில்” வாங்கியவன் ’ஆட்டோகிராஃப் போடு’ என்று சட்டென்று நீட்டியபோது என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினேன். ஆட்டோகிராஃப் போடும் அளவுக்கு நான் பெரிய ஆள் அல்ல. அதுவும், நண்பனுக்கா போடுவது? என்று தயங்கினேன். ஊரிலிருந்து புறப்படும்போதே (என்+)அவள் பார்க்கர் பேனாவை எடுத்து வைத்திருந்தாள். இதை அவள் எதிர்பார்த்திருக்கிறாள்! அது நிறைவேற என் நண்பனே வந்திருக்கிறான். ஆட்டோகிராஃப் இட்ட காட்சியை மகன் நதீம் கைப்பேசியில் சுட்டுவிட்டான். ஆக, வரலாற்றைப் பதிவு செய்துவிட்டார்கள். ”என்னய்யா நடக்குது இங்யெ?” என்னும் மூமண்ட்டாக இருந்த கணங்கள் எனக்கு. பொதுவாக நான் கணக்கில் ரொம்ப வீக். இதுவோ ஆண்டவன் கணக்கின் படிகளில் ஒன்று!


அரங்கிற்கு வரும் வாசகர்கள் என் புத்தகங்களை எடுக்கிறார்களா என்று பார்ப்பதே சுவாரஸ்யமாக இருந்தது. வாங்கியும் செல்கிறார்கள் என்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. அரங்குக்குள் நுழைந்த தம்பதியர் இருவர் எனது எல்லா நூற்களையும் எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாக இருந்தனர். கடைசியில் நான் மொழிபெயர்த்த நான்காம் நாவலான “விசித்திரர்களின் புத்தகம்” (அயான் தல்லாஸ்) நூலையும் “ஹிஜாப்” என்னும் நூலையும் வாங்கினார்கள். அந்த இணையர் சீர்மை பதிப்பகத்தின் வெளியீடுகளைத் தொடர்ந்து வாங்கி வருபவர்கள் என்றும் அந்தக் கணவரின் பெயர் ஆத்தூர் கலைச்செல்வன் என்றும் பின்னர் சீர்மை பதிப்பகம் இட்ட முகநூல் இடுகை வழி அறிந்தேன்.


மதியம் சீர்மை அரங்குக்கு மூத்த எழுத்தாளர் பாவண்ணன் வந்தார். நண்பர் சாளை பஷீர் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் என்று. நான் மொழிபெயர்த்த சில நூற்களை அவரிடம் காட்டினேன். “காதலின் நாற்பது விதிகள்” நாவலைப் பற்றி ஏற்கனவே அவருக்குத் தெரிந்திருந்தது.

“பேராசிரியராக இருந்து கொண்டு இதெல்லாம் எழுதுறதுக்கு நேரம் இருக்கா?” என்று கேட்டார்.

“இதுக்கெல்லாம் நேரம் தருகிற வேலையாக இருக்க வேண்டும் என்றுதான் நான் பேராசிரியராகவே ஆனேன்” என்று பதில் சொன்னபோது சிரித்துவிட்டார்.

என் பெருமிதமிகு மாணவரும் கவிஞரும் புனைகதையாளருமான ஜார்ஜ் ஜோசஃப் எழுதிய “எமரால்ட்” சிறுகதைத் தொகுப்பை அவர் ஸ்டாலிலேயே வெளியிட்டார்.


மாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தபோது இலங்கையில் இருந்து எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சிராஜ் மஷ்ஹூர் வந்தார். அவருடனான சுவாரஸ்யமான உரையாடலில் என் உறவினரும் இலங்கையில் “இளம்பிறை” என்னும் இலக்கிய இதழின் வழி ஆளுமைகள் பலரையும் அறிமுகப் படுத்தியவருமான எம்.ஏ.றஹ்மான் அவர்களைப் பற்றியும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அறிவுப் புலத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இயங்கி வரும் உள்ளங்களின் சகவாசம் தந்த புத்துணர்ச்சியுடன் திருச்சிக்கு வீடு திரும்பியபோது நள்ளிரவு மணி ஒன்றரை ஆகியிருந்தது. சென்னையிலிருந்து திருச்சி வரை நெடுகிலும் ஓயாத மழை.