Tuesday, July 28, 2020

தூங்காத கண்ணில் நீங்காத கனவு



      நண்பர் நூருல் அமீன் ஃபைஜி எழுதியிருக்கும் புதிய நாவல் “கனவுக்குள் கனவு”. கிண்டிலில் வெளியிட்டுள்ளார். பத்து நாட்களுக்கு முன் படித்து முடித்தேன்.


      அன்றிரவே, நாவலைப் பற்றி அவரிடம் அலைபேசியில் அழைத்துப் பேசினேன். “ஒரு நாவலாகத் தேருகிறதா?” என்று கேட்டார். ”நாவல் என்னும் இலக்கிய வகைமையின் இலக்கணம் பற்றும் பரிணாமங்களை வைத்துச் சொல்வதெனில் இது பாஸாகிவிட்டது என்று சொல்லலாம். ஆனால் டிஸ்டிங்ஷன் வாங்கவில்லை” என்று கறாராகவே சொல்லிவிட்டேன். ஏனெனில் இலக்கிய உலகின் சாதனையாக நிற்குமொரு படைப்பை உருவாக்குவது என்பது அவரது நோக்கம் அல்ல என்பதை யான் அறிவேன். “ஆனால், இந்த நாவல் ஆன்மிகத் தேடல் உள்ளோருக்கு ஒரு விளக்காக இருக்கும்” என்றும் சொன்னேன்.



      ”முதல் வாசிப்பு என்பது முன்னோட்டம் மட்டுமே. இந்த நாவலை நான் மீண்டும் மீண்டும் பலமுறை படிக்க வேண்டியிருக்கும். படிப்பேன்” என்றும் நண்பரிடம் சொன்னேன். இது கவனிக்க வேண்டிய ஒன்று.

      ஒரு நாவலை நாம் பல முறை படிக்கிறோம் எனில் எற்றுக்கு? பல காரணங்கள் இருக்கலாம். மொழிநடையின் சுவைக்காக இருக்கலாம். கதை நல்கும் உணர்வுகளுக்காக இருக்கலாம். கற்பனையின் அழகுக்காக இருக்கலாம். கதை முன்வைக்கும் கருத்தியலுக்காக இருக்கலாம். இந்த நாவலை மீண்டும் மீண்டும் நான் படிக்க வேண்டியிருக்கும் என்று நான் சொல்லக் காரணம் சிந்தனை.

      இந்த நாவலை நான் வேறு இரண்டு நாவல்களுடன் ஒப்பிட்டு நண்பரிடம் பேசினேன். நாகூர் ரூமி எழுதிய “திராட்சைகளின் இதயம்” மற்றும் ஜெயமோகன் எழுதிய “விஷ்ணுபுரம்” நாவலின் தத்துவ விவாதப் பகுதிகள்.


       ”நண்பர் நாகூர் ரூமி அவர்கள் எழுதிய ‘திராட்சைகளின் இதயம்’ ஒரு சூஃபி ஞானியின் வாழ்க்கையைப் பதிவு செய்த முதல் நாவல் என்று அதன் பின் அட்டையிலேயே குறிப்பிட்டிருந்தது. அப்பொருண்மையில் வந்துள்ள இரண்டாவது நாவலாக இதனை நான் கருதுகிறேன் என்று சொன்னேன். நாகூர் ரூமியின் நாவல் ஒரு சூஃபிப் பள்ளியில் (தரீக்கா) கோட்பாட்டுச் சிந்தனைகள் எவ்வாறு இருக்கும் என்பதைக் காட்டவில்லை. குரு-சிஷ்ய உறவு நிலையைப் பற்றி கவனப்படுத்திய அற்புதமான நாவல் அது. அவ்வகையில் தனது நோக்கத்தில் அந்நாவல் வெற்றி பெற்றுவிட்டது. நூருல் அமீன் அவர்களின் “கனவுக்குள் கனவு” என்னும் இந்த நாவல் சூஃபிப் பள்ளியினுள் ஆன்மிகக் கோட்பாட்டுச் சிந்தனைகள் புழங்கப்படுவது பற்றிய ஓர் அறிமுகத்தைத் தருகிறது. (இஃது, நண்பர் நூருல் அமீன் ஃபைஜி அவர்களும் அடியேனும் சார்ந்திருக்கும் “சில்சிலாயே நூரிய்யா” என்னும் சூஃபிப் பள்ளியில் புழங்கும் சிந்தனையோட்டம் குறித்த நேரடியான அனுபவப் பதிவு. பிற சூஃபிப் பள்ளிகளிலும் இப்படியேதான் இருக்கும் என்பதில்லை. வேறுபடலாம்.)

     ”தமிழில் எழுதப்பட்ட முதல் சூஃபி நாவல் என்று இதைச் சொல்லவேண்டும்” என்று நாகூர் ரூமி அவர்களே தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டிருப்பதைப் படித்து நெஞ்சம் நெகிழ்ந்து மகிழ்ந்தேன். தான் எழுதிய “திராட்சைகளின் இதயம்” இருக்க, இந்நாவலை ’முதல் சூஃபி நாவல்’ என்று அவர் குறிப்பிட்டதன் காரணம், நான் மேலே சொல்லியிருக்கும் புரிதலின் அடிப்படையிலாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.

     இது நூருல் அமீன் ஃபைஜி அவர்களின் மூன்றாம் நூல். முதலிரண்டும் சூஃபி மெய்ஞான உரைநடை நூற்கள். ”அகப்பார்வை”, “ஏகத்துவ இறைஞானம் – ஓர் எளிய விளக்கம்” ஆகிய அந்நூற்களும் சிந்தனைக்கு மிகுந்த வெளிச்சம் பயப்பவை. பன்முறை வாசிக்க வேண்டியவை. இந்நூலோ புனைகதை. எனினும், பொழுது போக்கு நூலன்று. ஆழமான சூஃபிக் கோட்பாடுகள் பற்றிய சிந்தனைகளை ஆங்காங்கே கதையினூடாக நமக்கு நல்கிச் செல்லும் ஞான நூல்தான் இது. அவ்வகையில் இதனை நார்வேஜிய எழுத்தாளர் ஜோஸ்டின் கார்டர் எழுதிய “Sophie’s World” என்னும் தத்துவ நாவலுடன் ஒப்பு நோக்கத் தோன்றுகிறது.

     இந்த நாவலில் மீண்டும் மீண்டும் பேசப்படும் சூஃபி ஞானி இப்னுல் அறபி (ரஹ்) அவர்களே. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. நிறைவாகவும் உள்ளது. ஏனெனில் சூஃபித்துவம் என்பது என்ன? சூஃபி என்றால் யார்? என்னும் வினாக்களுக்கு ஊடகங்களில் முன்வைக்கப்படும் விடைகள் எல்லாம் மௌலானா ரூமி (ரஹ்) அவர்களின் கவிதை (மொழி பெயர்ப்புக்)கள் மற்றும் அவர்கள் வடிவமைத்த ”ரக்ஸ்” என்னும் சுழல் நடனம் ஆகியவற்றை முன்வைத்தே அமைகின்றன. மௌலானா ரூமி (ரஹ்) அவர்களைப் போல் திரித்தும் பிழையாகவும் பொது வெளியில் முன்வைக்கப்பட்ட பிறிதொரு சூஃபி ஞானி இல்லை.

     மௌலானா ரூமி (ரஹ்) அவர்களின் ஞானக் காவியமான “மஸ்னவி” அனைத்து சூஃபிப் பள்ளிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் படிக்கப்படுவதும் ஆகும். ஆனால், அவர்கள் உருவாக்கிய “மௌலவிய்யா” என்னும் சூஃபிப் பள்ளி உலக அளவில் ஒரு பிரதானமான சூஃபிப் பள்ளியன்று. காதிரிய்யா, நக்‌ஷபந்திய்யா, சிஷ்திய்யா, ரிஃபாயிய்யா, ஷாதுலிய்யா ஆகியவையே மாபெரும் சூஃபிப் பள்ளிகள். ஹத்தாதிய்யா, சன்னூசிய்யா, ஜர்ராஹிய்யா முதலிய சூஃபிப் பள்ளிகளின் அளவிற்குக் கூட மௌலவிய்யா சூஃபிப் பள்ளியைக் குறிப்பிட முடியாது. அவ்வகையில், உலகில் உள்ள பெரும்பான்மை சூஃபிகளிடம் சுழல் நடனம் என்னும் ஆன்மிகப் பயிற்சி இல்லை.

     இந்தியாவிலும் காதிரிய்யா, சிஷ்திய்யா ஆகியவையே முதன்மையான சூஃபிப் பள்ளிகள். ஷாதுலிய்யா, நக்‌ஷபந்திய்யா, உவைசிய்யா, ரிஃபாயிய்யா போன்ற பள்ளிகளும் உள்ளன. ஆனால், யானறிய மௌலவிய்யா நெறி இங்கே செயல்படுவதாகத் தெரியவில்லை. அண்மையில் வெளியான “சூஃபியும் சுஜாதையும்” என்னும் மலையாளத் திரைப்படம் மௌலவிய்யா நெறியில் பயிற்சி பெறுமொரு சூஃபியைக் காட்டுகிறது. “சூஃபி என்பவர் யார்?” என்று கேட்கும் சுஜாதாவுக்கு அவளின் பாட்டி கூறும் விடை இது: “சூஃபிகள் பாடலும் ஆடலும் செய்கின்ற சந்நியாசிகள்” அந்தப் பாட்டியைச் சொல்லிக் குத்தமில்லை. சூஃபித்துவம் பற்றி பொதுமக்களிடம் உருவாக்கப்பட்டுள்ள பொய்யானதொரு பிம்பம் இதுதான். (படத்தில் வரும் சூஃபி பாங்கு சொல்கிறார், பேணுதலாகத் தொழுகிறார் என்பது ஓர் ஆறுதல்.)



   
















  ஒரு திரைப்படத்தைப் பற்றி இங்கே இவ்வளவு பேசுவானேன் என்று நீங்கள் நினைக்கலாம். காரணமுண்டு. நூருல் அமீன் ஃபைஜி அவர்களின் இந்த நாவல் சூஃபித்துவம் குறித்த அத்தகைய பொய்யான பிம்பத்தைத் தகர்க்கிறது. சூஃபி என்பவர் ஞான போதையில், ஆனந்தக் களிப்பில் திளைப்பவர் (மஸ்தான்!) என்னும் தவறான புரிதலின் மீது விழிப்புணர்வு நல்குகிறது. இப்பகுதியை கவனிக்கவும்: “ஃபனா, Ecstasy என்ற பரவசம் இதெல்லாம் நமது பாதையிலிருந்தாலும் அவை நமது இறுதி நோக்கமல்ல. உறுதியான இறைநம்பிக்கையைத் தரும் இறைஞானப் பாடங்களும், பயிற்சிகளும், அது மூலமா நம் அனைத்து தேவைகளுக்கும் இறைவனையே சார்ந்து வாழும் மனநிலையைப் பெறுவதும்தான் நம் பாதையின் முக்கிய நோக்கம். ஆகவே ஃபனாவோ, பரவச நிலையோ உங்க நோக்கமா இருக்கக் கூடாது.” (பக்.91). இது, சூஃபி நெறியில் தன்னை இணைத்துக்கொள்ள வரும் அன்பில் என்பவனிடம் ஹஜ்ரத் அவர்கள் கூறுவது. நடனம் இசை போன்ற எளிய கவர்ச்சிகள் உண்மையான சூஃபித்துவம் அல்ல என்பதை இந்நாவல் உணர்த்தும்.

      இந்த நாவல் மௌலானா ரூமி (ரஹ்) அவர்களின் பிம்பத்தை அல்லாது இப்னுல் அறபி (ரஹ்) அவர்களின் மாதிரியை முன் வைக்கிறது என்றும் அதுதான் இக்காலத்தில் மிகத் தேவைப்படுகிறது என்றும் முன்னம் குறிப்பிட்டேன். இவ்விரு மாபெரும் சூஃபி ஆளுமைகளின் வெளிப்பாடு (இல்கா) குறித்த ஓர் அவதானம் இங்கே நம் கவனத்திற்குரியது. அதாவது, மெய்ஞ்ஞானத்தின் உயர் தளத்தில் அறிவும் காதலும் ஒன்றே. மௌலானா ரூமி (ரஹ்) அவர்களின் ஆளுமையில் அறிவு காதலாக வெளிப்பட்டுள்ளது, இப்னுல் அறபி (ரஹ்) அவர்களின் ஆளுமையில் காதல் அறிவாக வெளிப்பட்டுள்ளது.” (ஏதோவொரு நூலில் படித்தது. பெயர் நினைவில்லை. வில்லியம் சிட்டிக் சொன்னதாக இருக்கலாம்.)

      எனவே, அறிவு இல்லாத காதலும், காதல் இல்லாத அறிவும் சூஃபித்துவம் அல்ல. (இங்கே அறிவு என்பது இறைவனது உள்ளமை, பண்புகள், செயல்கள் மற்றும் உடைமைகள் ஆகிய நான்கினைப் பற்றிய அறிவைக் குறிக்கிறது (’ஹிக்மத்’ என்னும் அறபுச் சொல் இதனைக் குறிக்கும்) என்பதையும், காதல் என்பது இறைக்காதலைக் குறிக்கும் என்பதையும் நினைவு கொள்க.)

      இந்நாவலின் தலைப்பு “கனவுக்குள் கனவு” என்பது. இதைப் பற்றி ஹஜ்ரத் அவர்கள் விளக்குவதாக நூலின் பிற்பகுதியில் சில அத்தியாயங்கள் செல்கின்றன. ஆன்மிக சாதகர்களுக்கு அதி சுவையான பகுதிகளாக அவை அமையும். “கனவுக்குள் கனவு என்பது இப்னு அரபி அவர்கள் சொல்லும் ஒரு முக்கிய concept.” (பக்.224) என்று அதில் ஓரிடத்தில் ஹஜ்ரத் குறிப்பிடுகிறார். இறைவனது இல்மு (அறிவு) என்னும் ஞானப் பூங்காவில்தான் அனைத்துப் படைப்புக்களும் இருக்கின்றன. நமது உண்மையான் முகவரி அஃதே. ஆதி இறையோனின் அறிவுக் கற்பனையையே இங்கே கனவு என்னும் சொல் குறிக்கின்றது. இதைப் படிக்கும்போது எனக்குத் தோன்றிற்று: இறைவனுக்குத் தூக்கம் என்பது இல்லை. அவனுக்கு மறதியும் கிடையாது. அவனது அறிவில் அனாதியாகவே இருந்து வருபவர்களே நாம். அவனது அறிவை விட்டு ஒருபோதும் மறையவும் மாட்டோம். எனவே, நம்மை “தூங்காத கண்ணில் நீங்காத கனவு” என்று சொல்லலாம்!

இனி, நாவலை வாசியுங்கள். பெரும்பயன் பெறுவீர். இச்சொல் உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.

      சூஃபித்துவத்தின் உண்மையான முகத்தைப் பொது வெளியில் தரிசனப்படுத்தும் பணியை இந்நாவல் செய்கிறது. சூஃபித்துவம் குறித்து ஊடகங்களில் உருவாக்கப்பட்டு வந்துள்ள, வருகின்ற பொய்யான பிம்பங்களை இது போன்ற முயற்சிகளால் கலைக்க வேண்டியது காலத்தின் தேவை. இறையருள் அதனைச் சாதிக்கும். “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. திண்ணமாக அசத்தியம் அழிவதேயாம்” என்பது இறை வாக்கு (குர்ஆன்: 17:81). நண்பர் நூருல் அமீன் ஃபைஜி அவர்கள் எழுதியுள்ள முந்தைய நூற்களும், அவரது மூன்றாம் நூலான இந்நாவலும் சத்தியப் பேரொளியின் சுடர்கள் வீசும் சிந்தனை வெளிகளாக இருக்கின்றன. ஏகப் பரம்பொருளாம் அல்லாஹு தஆலா அன்னாருக்கு உடல் மன உயிர் நலங்களுடன் கூடிய நீடித்த ஆயுளை அருளி மேலும் பல ஞான நூற்களை எழுதும்படிச் செய்வானாக.

1 comment:

  1. ஐயா வணக்கம். கனவுக்குள் கனவு நூல் விமர்சனம் மிகச் சிறப்பு. சூபியும் சுஜாதையும் திரைப்படம் பார்க்கலாமா என்பதைத் தெரிவிக்கவும் ஐயா... தங்களிடத்தில் திராட்சைகளின் இதயம் பாடம் கேட்டது எங்கள் பேறு. திராட்சைகளின் இதயத்தால்தாலும் தங்கள் உரையாலும் தான் நாகூர்ரூமி போன்ற ஆளுமைகளின் அறிமுகம் எமக்குக் கிட்டியது (நன்றி). சூஃபியிசம் பற்றித் தெரிந்து கொள்ள நூல்கள் பரிந்துரையோ அல்லது உங்களின் சொந்த ஆக்கத்தையோ தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி

    ReplyDelete