Wednesday, March 6, 2013

இன்று தெரிந்த இழை



வியப்பின் அலைகள் அடுத்தடுத்து மனதில் மோதிக் கொண்டிருந்தன.

முத்துக்கள் சிதறிக் கிடப்பது போல் தெரிகின்றன. ஆனால் கண்ணுக்குத் தெரியாத இழை ஒன்றில் அவை ஏற்கனவே கோர்க்கப்பட்டே கிடக்கின்றன.

இன்று என் இதயத்தில் அந்த இழை தட்டுப்பட்டது.

காலை 8:30, கல்லூரியில் முதல் பிரிவேளை. முதுகலைத் தமிழ் வகுப்பில் நாகூர் ரூமியின் ”சூஃபி வழி” நூலை முன்வைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். லைலா மஜ்னூன் கதை ஒரு சூஃபிக் கதை என்று அவர் அதில் எழுதியிருந்ததை விளக்கினேன்.
அப்துல் ரகுமான் ஒரு கட்டுரையில் லைலா மஜ்னூன் கதையைச் செறிவு கொண்ட நாடகம் போல் எழுதியிருந்ததை எடுத்துச் சொன்னேன். அதில் ஒரு காட்சி:

ஸ்லேட்டில் மஜ்னூன் மீண்டும் மீண்டும் லைலாவின் பெயரையே எழுதிக் கொண்டிருக்கிறான். அதைப் பார்க்கும் அவள் அவனிடமிருந்து பலகையைப் பிடுங்கி லைலா என்ற பெயருக்குப் பக்கத்தில் கயஸ் என்று அவனின் இயற்பெயரை எழுதுகிறாள். (மஜ்னூன் என்பது அவனுக்குப் பட்டப்பெயர். பித்தன் என்று பொருள்!) உடனே அவன் அவளிடமிருந்து பலகையைப் பறித்துத் தன் பெயரை அழிக்கிறான். அவளிடம் சொல்கிறான், “இப்படி நம் பெயர்களைத் தனித்தனியே எழுதாதே. லைலா என்று எழுதினாலே அதற்கு கயஸ் என்றுதான் அர்த்தம்!”

பாடம் முடிந்து வந்துவிட்ட பிறகு இவ்விஷயம் மறந்துவிட்டது. மீண்டும் இடைவேளையில் இழை ஓடிற்று. அப்துல் ரகுமானுக்குச் சொல்-பொருள் என்னும் இணையின் மீது தனி ப்ரீத்தி உண்டு. “சொல்லும் பொருளும் அமரக் காதலர்களாக எனக்குத் தெரிகிறார்கள்” என்று அவர் எங்கோ எழுதியிருப்பது ஞாபகம் வந்தது.

தன் கஜல் கவிதைகளில்கூட அவர் ஒரு துளியை இப்படி வரைகிறார்:
“என் காதல் கடிதம்
இப்படித்தான் தொடங்கியது:
நான் வெறும் சொல்லே
நீயே அதன் பொருள்”

தொலை மாவட்டம் ஒன்றில் உள்ள ஒரு கல்லூரிக்காக வினாத்தாள் குறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். நண்பகல் 12:00. உச்ச வேளையில் ஓர் உச்சக் கவிதையைப் புரட்ட நேர்ந்தது. பாரதியாரின் கண்ணம்மா என் காதலி வரிசையில் யோகம் என்ற கவிதை. அதில் அப்துல் ரகுமானின் முன்னோடி தென்பட்டான் இப்படி:
“பேசு பொருள் நீ எனக்கு
பேணும் மொழி நான் உனக்கு”

பொருள் என்றால் அர்த்தம். மொழி என்பது சொல்லைக் குறிக்கும்.

சிந்தனை இப்படி ஓடுகையில் தொல்காப்பிய வரி ஒன்று சிந்தனையில் மின்னிற்று:
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”. வியப்பாக இருந்தது, இந்த வரியைத்தான் காலை இரண்டாம் பிரிவேளையில் இளங்கலை வகுப்பில் பாடத்தினூடே பேசிவிட்டு வந்திருந்தேன்.

அனைத்துச் சொல்லும் ஏதேனும் பொருளைக் குறிப்பதாகவே இருக்கிறது; ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருளாவது உண்டு என்பது மட்டும் இவ்வரியின் அர்த்தம் அன்று. இந்த வரியைத் தொல்காப்பியர் ஒரு வரட்டு இலக்கணத் தகவலாக மட்டும் எழுதியிருப்பார் என்று எண்ணுவது பிழை. ஏகாரத்தில் முடியும் இந்த வரி அவரின் மனத்தில் எழுந்த தீரா வியப்பு ஒன்றை ஒலிப்பதாகவே நான் உணர்கிறேன். “அடடா! எல்லாச் சொல்லும் பொருளைக் குறிப்பதாகவே இருக்கிறதே!” என்ற வியப்பு. அர்த்தம் அற்ற சொல் அவணி மிசை இல்லை என்று அறிந்த கணத்தின் ஆழ்ந்த ஆனந்த வியப்பு அது.

இரவு 9:00. உண்டி முடித்து நீர் குடித்து எழுந்த போது மனத்தில் ஓர் பாடலும் எழுந்தது. நபி பெருமான் மீது காதல் கொண்டு புனையப்பட்ட ’நாத்’ என்னும் வகைப் பாடல். உணர்வில் உயிர் பொங்கி உள்ளம் உருகிட உருது மொழியில் ரஜாவுல் ஹக் அலீமி ஷாஹ் ஆமிரி அவர்கள் இயற்றியது. அவர்களே பாடக் கேட்டுச் சொக்கிப் போயிருக்கிறேன். அந்தப் பாடலை முன்பு எப்போதோ ஓர் அட்டையில் எழுதி வைத்திருந்தேன். முதல் கண்ணி மட்டும் நினைவில் இருந்தது:
“இரவு உங்கள் கூந்தலின் அசைவு
விடியல் உங்கள் முகத்தின் அழகு
என் இதயமெனும் கிண்ணத்தில்
என் பார்வை எனும் திருவோட்டில்
கொஞ்சம் ஒளிப்பிச்சை போடுங்கள் நபியே!”
(ராத் தேரீ ஸுல்ஃபோன்கா உதாரா ஸுப்ஹு தேரே ருஃக்சார் கீபீ
காஸ்ஸாயே தில் கஷ்கோலே நஜர் மே டால்தே குச் அன்வார் கீபீ)

பாடலை முழுமையாய்ப் படிக்கும் ஆவலுடன் தேடினேன். புத்தக அடுக்குகளுக்கு இடையே அகப்பட்டது. எடுத்துப் பாடிக்கொண்டே வரும்போது வியப்பின் இன்னொரு அலை அப்பாடலின் ஐந்தாம் கண்ணியில் அடித்தது.

அந்த ஐந்தாம் கண்ணி மிகவும் நுட்பமானது. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள ரகசியமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருப்பதைச் சொல்லும் கண்ணி அது. அதில் சொல்லும் பொருளும் சொல்லப்பட்டிருந்தது:
“துகளிலே பாலை
துளியிலே பரவை
திரையிலே ஜுவாலை
காதலில் அழகு
வார்த்தையில் அர்த்தம்
அடிமையில் இறைவன்
என்னில் உம் ரகசியம்
கண்டு கொண்டேன்”
(தர்ரே மே சஹ்ரா கத்ரே மே தர்யா பர்தே மே ஜல்வா இஷ்க் மே ஹுஸ்ன்
லஃப்ஸ் மே மஃனா அப்த் மே மவ்லா முஜ் மே தேரே அஸ்ரார் கீபீ)
(குறிப்பு: பரவை என்றால் கடல். உருதுவில் என்ன மெட்டில் மகான் பாடினார்களோ அதே மெட்டில் தமிழாக்கம் செய்திருப்பதால் இப்படி பழந்தமிழ்ப் பதம் ஒன்றினைப் பயன்படுத்த நேர்ந்தது.)



3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. “அடடா! எல்லாச் சொல்லும் பொருளைக் குறிப்பதாகவே இருக்கிறதே!”-- இதில் வியப்பென்ன வேண்டியிருக்கிறது?

    "அர்த்தம் அற்ற சொல் அவணி மிசை இல்லை என்று அறிந்த கணத்தின் ஆழ்ந்த ஆனந்த வியப்பு அது". -- அர்த்தம் அற்ற சொல் அவனியில் இல்லை என்று கண்டதில் ஆழ்ந்த ஆனந்த வியப்பு எதுக்கு வந்ததாம்? அர்த்தம் அற்ற சொல்லே இல்லை என்று சொல்ல தொல்காப்பியன் எதற்க்கு? அவனின் வியப்பும்தான் எதற்க்கு?

    எல்லாச் சொல்லும் "ஒரு" பொருளைக் குறிப்பதாகவே இருக்கிறதே என்று உணர்ந்த கணத்தின் ஆழ்ந்த ஆனந்த வியப்பு என்றால் அதை அர்த்தமுள்ள வியப்பாக ஏற்றுக்கொள்ள முடியும்.

    வானம்,பூமி,மனிதன்,மிருகம்,பறவை,தாவரம்,ஊர்வன,பறப்பன, நிற்ப்பன,நடப்பன,மேகம்,மழை,இடி,மின்னல்,பூக்கள்,புற்கள் என அனைத்து சொற்க்களும் தனித்தனியே ஒவ்வொரு பொருளையும், ஆழ்ந்து சிந்திக்கையில் ஒட்டுமொத்தமாய் எல்லாச் சொல்லும் "அல்லாஹ்" என்கிற ஒரே சொல்லையும், அதற்க்கான பொருளையும் மட்டுமே குறிக்கின்றன என்று கண்டிருந்தால் அப்படி உணர்ந்த கணத்தில் ஆழ்ந்த, ஆனந்த வியப்பு ஏற்றுக்கொள்ள கூடியது ...வியந்து பாராட்டி, அனுபவிக்க கூடியது என்று நினைக்கிறேன்

    ReplyDelete