Monday, July 9, 2012

விழிப்பு




அதிகாலை மூச்சு
அழைக்கின்றது
இதயமே!
இறைவனிடம் வசனிக்கச் செல்

தூக்கத்தில் பேசுபவனுடன்
உரையாடுவதில்லை
விழித்திருக்கும் எவரும்

தூங்குபவனின் பேச்சை
விழித்திருப்பவன் அறிவான்
தூங்குபவனுக்கோ
அவன் பேச்சே புரியாது

ஜுரத்தில் உளறிக்கொண்டிருப்போரை
விட்டெழுந்து வெளியேறு
உன்னை ஏன் தாக்க வேண்டும்
உளறலின் ஜுரம்?

விழித்திருப்பவனின் விழிப்பும்
தூங்குபவனின் தூக்கமும்
விழித்திருப்பவனுக்குத் தெரியும்

தூங்குபவனுக்குத் தெரிந்ததெல்லாம்
தன் ’விழிப்பு’ மட்டுமே
அவன் தன் விழிப்பிற்குள்
உன்னை அழைப்பது
உன்னை உறங்க வைப்பதே

தூக்கத்தில்
அவரவர் கனவை
அவரவர் பேசுகிறார்
இவன் கனவை
எப்படிப் பேசுவான் அவன்?
அவன் கனவை
இவன் அல்லது உவன்?

ஒருவன் வியர்க்கிறான்
கனவின் துன்பத்தில்
இன்னொருவன்
கனவின் இன்பத்தில்

இருவரின் நாற்றமும்
விழித்தவனுக்கு ஒன்றே

வசந்தம் வரவேற்கும்
வைகறையின் விழிப்பில்
கனவின் சுவடுகள்
கரைந்து போகட்டும்

இதயம்
இறைவனிடம்
விரைந்து போகட்டும்.


1 comment: