Sunday, February 6, 2011

மேடைக் காட்சிகள்



இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் மேடைகளுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. பட்டிமன்றம், வழக்காடு மன்றம், தனிப்பேச்சு, கவியரங்கம் என்பன போன்ற இலக்கிய மேடைகள், ஆன்மிக மேடைகள் மற்றும் குறிப்பாக அரசியல் மேடைகள். மேடைப்பேச்சு என்பது ஒரு கலையாக முழு வீச்சில் செயலாற்றிய அல்லது பயன்படுத்தப்பட்ட நூற்றாண்டு அது. எந்த ஒரு ஊடகமும் அதன் காலகட்டத்தை நிறைவு செய்துவிட்ட நிலையில் அதன் நிறைகளைப் பரிசீலிக்கும் அதே வேளையில் அதன் குறைகளை அல்லது அது வளர்ந்து வந்த பாதையில் உண்டாக்கி வைத்த போலிமைகளையும் அபத்தங்களையும் எள்ளுவதும் செய்யப்பட வேண்டிய ஒன்று. அதைத்தான் இந்தக் கட்டுரையில் நான் செய்கிறேன்.

அப்பாடா! என் சிறு வயதில் என்னைக் கவர்ந்த பேச்சாளரான பேராசிரியர். க.அன்பழகன் அவர்களின் நடையின் சாயலில் ஒரு பத்தி எழுதிவிட்டேன். ஆம், கழக ஆதரவாளர்களின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்ற வரலாற்றுப் பதிவு எனக்கு உண்டு! அதனால் பல களங்கள் கண்டவன், மேடைகள் கண்டவன் என்பதால் (அதாவது, ஒரு பார்வையாளனாக தூரத்தில் இருந்து அவற்றையெல்லாம் கண்டவன் என்பதால்) மேடைப் பேச்சு குறித்து நான் எழுதித்தான் ஆகவேண்டும்.



அது என் மாணவப் பருவம். சினிமாவை விட ஒரு கட்டத்தில் அரசியல் எங்களைக் கவர்ந்தது. தமிழில் என் ஆர்வத்தை வளர்த்துவிட்ட என் தந்தையும் பெரிய தந்தையும் கழக மேடைகளை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். நான் கொஞ்சம் வித்தியாசமானவன். கலைஞரின் பேச்சைவிடப் பேராசிரியரின் பேச்சுத்தான் என்னைப் பெரிதும் கவர்ந்தது. அவரின் தமிழ் மிகவும் செறிவானது. எனினும் அதைக் கிராமத்து மக்கள் மரியாதையுடன் கேட்டதைப் பார்த்து நான் வியப்படைந்தேன். ஏனெனில் செறிவான உணவு பலருக்குச் செறிக்காது!

ஆனால் கழக மேடைகள் பெரிதும் களை கட்டிய நாட்கள் என்று சொன்னால் அது தீப்பொறி ஆறுமுகம், இரா.வெற்றிகொண்டான் போன்றோர் பேசிய நாட்கள்தான். தமிழனின் சீரழிந்த ரசனைக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்துகின்ற பாணியில் அவர்கள் எப்படி மக்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கிறார்கள் என்பதை அப்போதே அவதானித்தேன். வெற்றிகொண்டான் வருகிறார் என்றாலே மாணவர்களின் மனத்தில் ஒரு ரகளை உண்டாகிவிடும். “வெறி கொண்டான் – வெட்டிக் கொன்றான் – வெற்றி கொண்டான்” என்று ரிதமாகப் பாடிக்கொண்டு அவர்கள் ஓடியதைப் பார்த்திருக்கிறேன். ஏதோ தலையலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைச் சங்கப் புலவன் புகழ்ந்தது போன்ற இந்த வரிகள் கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் உள்ளம் கள்வெறி கொண்ட கணங்களில் எதார்த்தத்தில் நிற்பவன் எவன்? இத்துடன் இதை நிறுத்திக் கொள்வோம். வெற்றிகொண்டான் சமீபத்தில்தான் இறந்துபோனார். துஞ்சினாரைத் தூற்றுதல் பண்பன்று. “இமயம் சரிந்தது” என்றோ “சுனாமி சுருண்டது” என்றோ போஸ்டர் அடித்துக் கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டுமே தவிர ஏகடியம் பேசக்கூடாது!



இந்தக் கட்டுரைக்கான பொறி என் மனதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் விழுந்தது. திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலைஞர் உரையாற்றினார். சிலப்பதிகாரக் காட்சி ஒன்றை மேற்கோள் காட்டித் தன் பேச்சைத் தொடங்கினார். “கையில் சிலம்பேந்திக் கண்ணகி மதுரை வீதியில் நடந்தபோது ‘நீதியும் உண்டுகொல், மன்னனும் உண்டுகொல்’ என்று கேட்டாள். நான் இங்கே கேட்கிறேன், போலீசும் உண்டுகொல்? போலீசும் உண்டுகொல்?” என்று அவர் பேசும்போது தொலைக்காட்சியில் மக்கள் கூட்டத்தைக் காட்டினார்கள். தானைத் தலைவரின் பேச்சைக் கேட்கக் கூடியிருந்த உடன்பிறப்புக்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் தெரியுமா? சிலர் சிரித்துக் கொண்டிருந்தனர். சிலர் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தனர். சிலர் மண்ணை வாரி வீசிக் கொண்டிருந்தனர். சிலர் கடலை கொரித்துக் கொண்டிருந்தனர். சிலர் கடலை போட்டுக் கொண்டிருந்தனர். இதுதான் இன்றைக்கு மேடைப் பேச்சின் கதி!

அதே தானைத் தலைவர் இன்னொரு முறை திருச்சிக்கு வந்து பேசிய பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் ஒரு பாடலின் வரிகளைச் சொல்லி பலத்த கைத்தட்டல்களையும் சீழ்கை ஒலிகளையும் பெற்றார். அப்படி என்ன பாடல் வரிகள்? புறநானூறா? அகநானூறா? பதிற்றுப்பத்தா? சிலப்பதிகாரமா? பாரதிதாசனின் பாடல் வரிகளா? ம்ஹூம். ரஜினிகாந்த் நடித்த ’முரட்டுக் காளை’ படத்திலிருந்து இரண்டு வரிகள்! கைத்தட்டு வாங்க வேண்டும் என்றால் கலைஞருக்கே இந்த கதி! மேடைப்பேச்சு என்னும் கலை மரணப் படுக்கையில் கிடக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.



மேடைப் பேச்சு என்பது இப்படி நலிந்து வரும் சூழலில் அதன் பொற்காலக் காட்சிகள் என் மனதில் விரிகின்றன. தமிழ் மேடைப் பேச்சிற்கென்று நாம் உருவாக்கிக் கொண்டுள்ள தனித்தன்மைகளை அதில் நான் உணர்கிறேன்.

மே.கா.1: கால்வட்டம், அரைவட்டம், முக்கால்வட்டம் என்று எத்தனை முன்னோட்டப் பேச்சாளிகள் மேடையேறினாலும் அனைவரும் ஒருமுறை மேடையில் இருக்கும் அனைவரையும் “அவர்களே இவர்களே” என்று அழைத்து அட்டண்டன்ஸ் எடுப்பது ஒரு செந்தமிழ் மரபாகும். அந்த வகையில் அன்றொரு நாள்…. மணி பதினொன்று ஆகிவிட்டது. பத்து மணிக்கே மல்லாந்துவிடும் வெல்லமண்டி முனுசாமிக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வருகிறது. முதலில் வீட்டில் இருப்பதுபோல் கனவு. சிறியதா பெரியதா என்று அவருக்கே தெளிவில்லை. அப்போது மேடையில் முழங்கத் தொடங்கிய ஒரு அரைவட்டம் ’அவர்களே’ பட்டியல் இட்டுக் கொண்டே வந்து “அண்ணன் வெல்லமண்டி முனுசாமி அவர்களே!...” என்று விளிக்க, கனவின் கதவிடுக்கில் அந்தச் சத்தம் உள்ளே நுழைந்தவுடன் ”ஐயோ மரகதம் அடுத்த மாசம் கட்டாயம் வாங்கித் தர்ரேன்” என்று நம் அண்ணன் அலறினார். திடுக்கிட்டு அலங்க மலங்க விழித்தார். பிறகு மீண்டும் தூக்கம். ஒரு முக்கால் வட்டம் அட்டண்டன்ஸ் போடத் தொடங்கியது. இப்போ நம் அண்ணன் எட்டாம் வகுப்பு மாப்பிள்ளை பென்ச்சில் இருந்தார், கனவில்தான். “அண்ணன் வெல்லமண்டி முனுசாமி அவர்களே!” என்ற சத்தம் கேட்டவுடன் கையைத் தூக்கிக்கொண்டு எழுந்தார்: “உள்ளேன் ஐயா.”

மே.கா.2: இருபத்தேழாம் வட்டத்துக்கு வெறும் அல்லக்கையாகவே ஐந்து ஆண்டுகள் லோ லோ என்று இங்கும் அங்கும் அலைந்து நொந்து நூடில்ஸ் ஆகிப் போயிருந்த தம்பி நிலாநேசனின் வாழ்வில் அன்று பொன்னான நாள். வட்டம் மேடையில் வரவேற்புரை ஆற்றி முடித்தவுடனே “நான் அதை வழிமொழிகிறேன்” என்று ஒலிபெருக்கியில் பேசித் தன் குரலுக்குத் தமிழ் கூறு நல்லுலகில் ஒரு முகவரியை ஏற்படுத்திக் கொள்ளும் அரிய வாய்ப்பு அவனுக்குக் கிடைத்திருந்தது. அதற்காக காலக் கருக்கலில் கண்விழித்து ஏழு முறை பல் துலக்கி ரிகர்ஸல் செய்தான். “நான் அதை வழிமொழிகிறேன்” என்று மீண்டும் மீண்டும் தலைவர்கள் நடிகர்கள் பேச்சாளர்கள் பாணியில் ஆயிரம் முறை சொல்லிப் பார்த்துக் கொண்டான். என்ன செய்வது, விதி வலிது! வட்டம் வரவேற்புரையை முடிக்கும் தருணம். இவன் தயாராகப் பின்னால் நின்றுகொண்டிருந்தான். மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்த தலைவரைப் பார்த்தான். அவரும் அவனை ஒரு பார்வை பார்த்தார். தொண்டனும் நோக்கினான் தலைவரும் நோக்கினார். அவ்வளவுதான். உள்ளே உதறல் எடுத்தது. ஒலிபெருக்கியை வளைத்துக் கதறினான்: “நான் அதை மொலிவழிகிறேன்!”

மே.கா.3: இதுவும் மேடைச் சொதப்பல் என்னும் வகையைச் சேர்ந்ததுதான். ஒரு நிகழ்ச்சியில் நன்றியுரை ஆற்றும் பொறுப்பை அவருக்கு வழங்கியிருந்தார்கள். ஒவ்வொருவராகக் குறிப்பிட்டு “…….க்கு என் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என்று சொல்ல வேண்டும். உரித்தாக்கிக் கொள்ள அவரின் கிளிநாக்கு கீழ்ப்படியவில்லை. “உரித்துத் தாக்கிக் கொல்கிறேன்” என்று பிடிவாதம் பிடித்தால் பாவம் அவர்தான் வேறு என்ன செய்வார்? நன்றிப் பெருக்குடன் சகட்டு மேனிக்கு ஒவ்வொருவராக உரித்துத் தாக்கித் தள்ளினார். எனக்குப் படு மகிழ்ச்சியாக இருந்தது!



மே.கா.4: என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மேடைச் சொதப்பல் என்று இதைத்தான் சொல்ல வேண்டும். அது ஒரு முக்கியமான விழா. முடிந்த பிறகு சிறப்பு அழைப்பாளர்கள் பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு ஒரு சிறு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை அறிவிக்க விழா நாயகர் எழுந்தார். டிஃபனைத் தமிழில் சிற்றுண்டி என்று சொல்கிறோமே. டீ காஃபிக்கும் அப்படித்தான் சொல்ல வேண்டும் என்று நினைத்துவிட்டார் போலும். மகிழ்ச்சி பொங்க அனைவரையும் பார்த்து “விழா முடிந்ததும் சிற்றுண்டியும் சிறுநீரும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைவரும் இருந்து அருந்திச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்!” என்று அறிவித்தார்!

மே.கா.5: தமிழ் மேடைப் பேச்சு மரபுகளில் ஒன்று பேச்சின் முடிவில் “இறுதியாக நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன்” என்று கூறிக்கொள்வது. இவ்வாறு கூறிக்கொள்ளும் பேச்சாளர்களில் அதை இதய சுத்தியுடன் உண்மையாகவே கடைப்பிடித்த்வர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். “கடைசியாக ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன்” என்று சொன்ன பிறகு ஒன்றரை மணி நேரம் பேசுபவர்கள் உண்டு. ஏற்கனவே ஒரு விஷயத்தைக் கூட கூறாமல் இரண்டு மணி நேரம் மொக்கை போட்டுவிட்டு இறுதியாக ஒன்றைக் கூறிக்கொள்கிறேன் என்று பேச்சாளர் சொல்லும் போது லாஜிக் உதைத்தாலும் ஏதாவது பாய்ண்ட் சொல்லமாட்டாரா என்று ஆர்வம் பிறக்கும். ஏமாற்றமும் கிடைக்கும். தமிழைத் ’தமிளு’ என்று உச்சரிக்கும் ஒருவர் இப்படித்தான் “கடைசியாக ஒன்றை நான் கூறிக் கொல்கிறேன்…” என்றார். கீழே இருந்த ஒருவர் சொன்னார், “ஏற்கனவே நிறையா கீறிக் கீறிக் கொன்னுட்டீங்க. இப்ப இது வேறயா?”



ஒரேஷன் அல்லது ஸ்பீச் என்று ஆங்கிலத்தில் கூறுவதை நாம் தமிழில் பேச்சு என்று சொன்னாலும் அதற்கென்று சிறப்பான பல பெயர்கள் இருக்கின்றன. சொற்பொழிவு, சொற்பெருக்கு என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அவை அவற்றின் நேரடிப் பொருளில் பலித்துவிட வேண்டும் என்று நான் சில நேரங்களில் விரும்புவேன். அப்படி ஆக்கிவிடக்கூடிய ஆற்றல் என் அருள்வாக்குக்கு இருப்பதைப் போன்று கற்பனை செய்ததுண்டு. அவற்றை இனி சொல்கிறேன்.

மே.கா.6: ஒரு பிரபலமான பேச்சாளர் “சொற்பொழிவு ஆற்றுவார்” என்று அறிவிக்கப்பட்டது. “அப்படியே ஆகட்டும்” என்று ஆசீர்வதித்தேன். அவர் பேசி முடித்தபோது முன்வரிசையில் அமர்ந்திருந்தோர் அவர் அடித்த ஸ்ப்ரேயில் நனைந்து போயிருந்தார்கள். மைக்கில் ஜொல் வழிந்துகொண்டிருந்தது. அவ்வளவு அற்புதமாகப் பொழிந்து தள்ளிவிட்டார்!

மே.கா.7: ஒரு பொதுக் கூட்டத்திற்கான விளம்பரத்தில் ஒரு தலைவரின் பெயரைப் போட்டு ‘கர்ஜிப்பார்” என்று எழுதியிருந்தார்கள். “அப்படியே ஆகக் கடவது” என்று ஆசி வழங்கினேன். இரவு பத்து மணி. தலைவர் ஒலிவாங்கியின் முன் வந்து நின்றார். வாழ்க முழக்கங்கள் ஒலித்து ஓய்ந்தன. என் அருள்வாக்கின் பலனால் அவர் மண்டையில் இருந்த மொழிகள் எல்லாம் மாயமாய் மறைந்து போய்விட்டதை அவரேகூட அப்போது அறிந்திருக்கவில்லை. பேசுவதற்கு வாய் திறந்தார். “கர்ர்ர்..” என்று ஒருமுறை கர்ஜித்தார்! கீழே நின்றிருந்த விசிலடிச்சான் குஞ்சுகள், தலைவர் தொண்டையைச் செருமுகிறார் என்று எண்ணி அருகிலிருப்போர் காது கிழிய விசில் எனப்படும் ஃபிகில் ஒலி எழுப்பினார்கள். ஏனேனில் மேடைப் பேச்சாளனுக்கு தொண்டை உப்புத்தாள் வைத்துத் தேய்த்தது போல் சொரசொரப்பாக இருக்க வேண்டும் என்பது தங்கத் தமிழகத்தில் ஒரு நியதி அல்லவா? அப்படி இரும்பு துரு பிடித்தது போல் தங்கள் குரல் ஆக வேண்டும் என்பதற்காகப் பீடி பற்றவைத்த விடலைகளை நான் அறிவேன். தலைவர் இன்னொரு முறை “கர்ர்ர்ர்… கர்ர்ர்ர்” என்று உருமிய போதுதான் உண்மையாகவே அவர் கர்ஜிக்கிறார் என்பது தெரிந்தது!



மே.கா.8: புரோட்டா கடைகளில் ‘முட்டை வீச்சு’ என்று ஸ்பெஷலாக ஒரு அயிட்டம் போடுகிறார்கள். அதை ஆர்டர் செய்தாலே மாஸ்டருக்கு ஒரு தனி குஷி வந்துவிடும். அதுபோல் தொண்டர்களைக் குஷி படுத்தும் காரசாரமான பேச்சை இப்போதெல்லாம் உரை வீச்சு என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு பொதுக்கூட்ட விளம்பரத்தில் அதை “உறை வீச்சு” என்று எழுதியிருந்தார்கள். அதற்கும் என் ஆசியை வழங்கி வைத்தேன். தலைவர் வந்து மைக் முன்னால் நின்று திருவாய் மலர்ந்திருக்கிருக்கிறார். பொதுக்கூட்டம் மேஜிக் ஷோ போல் ஆகிவிட்டதாம். ஆமாம், அவரின் வாயிலிருந்து தலையணை உறை, கடித உறை, கையுறை, காலுறை, ஆணுறை, இத்தியாதி உறைகள் எல்லாம் புறப்பட்டுப் பார்வையாளர்கள் மத்தியில் வீசப்பட்டுள்ளன. ஒரே கலாட்டாவாம்.



பேச்சாளர்களாக உருவாகிறோம் என்று தொலைக்காட்சியில் ‘அரட்டை அரங்கம்’ போன்ற நிகழ்ச்சிகளில் குரலின் மகரக்கட்டு உடையாத சிறுவர்களும் உடையக் கூடாத சிறுமிகளும் பெரியவர்களின் தோரணையில் வீச் வீச் என்று பேசுவது எனக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது. இந்த “உரை கீச்சு” நிகழ்ச்சிகள் ஒரு தவறான முன்னுதாரணம் என்றே நான் சொல்வேன்.

“யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்” என்பது போல் வைரமுத்து என்னென்னவோ கேட்பாரே, அதுபோல் நானும் சத்தம் இல்லாத மேடை கேட்கிறேன்.



1 comment:

  1. //டிஃபனைத் தமிழில் சிற்றுண்டி என்று சொல்கிறோமே. டீ காஃபிக்கும் அப்படித்தான் சொல்ல வேண்டும் என்று நினைத்துவிட்டார் போலும். மகிழ்ச்சி பொங்க அனைவரையும் பார்த்து “விழா முடிந்ததும் சிற்றுண்டியும் சிறுநீரும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைவரும் இருந்து அருந்திச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்!” என்று அறிவித்தார்!//

    சிரித்து சிரித்து வயிறு புண்ணாயிற்று ஐயா!

    ReplyDelete