Monday, October 25, 2010

லைலா பிறந்த கதை

அமர காதல், தெய்வீகக் காதல் என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கு உதாரணமாக சில காதலர்களை நாம் இலக்கியங்களில் கண்டு வருகிறோம். காதலின் முழுப் பரிமாணங்களையும் தொட்டுணர்த்திவிட வேண்டும் என்னும் லட்சியம் பல மகாகவிகளிடம் இருந்துள்ளது. ரோமியோ-ஜூலியட்,
ஹீர்-ராஞ்ஜா, ஷீரீன்-ஃபரஹாத், சலீம்-அனார்கலி, அம்பிகாபதி-அமராவதி என்று நீளும் பட்டியலில் உண்மையில் முதலிடம் கொடுக்கவேண்டும் என்றால் அது லைலா-மஜ்னூன் ஜோடிக்குத்தான்! அந்த அளவு மீண்டும் மீண்டும் எடுத்துப் பேசப்படுகின்ற ARCHETYPE LOVERS இந்த இணை. 



இவர்களில் பல ஜோடிகள் கவிஞர்களின் கற்பனைதான். சில ஜோடிகள் பாதி கற்பனைகள். சலீம் என்னும் முகலாய இளவரசன் மாமன்னர் அக்பரின் மகன்தான். ஆனால் அனார்கலி என்ற பாத்திரம் கவிஞன் ஒருவனின் கற்பனையில் உருவானதே. இடுகாட்டில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த உருதுக் கவிஞன் ஒருவன் 'அனார்கலி - நடன மாது' என்று பெயர் வெட்டப்பட்ட ஒரு கல்லறையைக் கண்டு கற்பனையில் ஆழ்ந்ததாகவும், முகலாய இளவரசன் சலீமையும்  (பட்டப் பெயர் ஜெஹாங்கீர்) வைத்து ஒரு காதல் கதையை உருவாக்கி விட்டதாகவும் ஒரு குறிப்பு உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மக்களின் கூட்டு நினைவில் ஆழமாக வேரூன்றிவிட்ட இந்தக்  காதல் கதை, அவர்களின் கனவுக்காவியம், பல முறை திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளது. இனிய கனவென்றால் மீண்டும் மீண்டும் காண யார்தான் மறுப்பார்கள்! குறிப்பாக, கே.ஆசிஃப் இந்தக் கதையை "முகலே அஃஸம்" - 'மாபெரிய முகல் மன்னன்' என்னும் தலைப்பில் 1960 -ல் படமாக எடுத்தார். அப்போதே இரண்டு மில்லியன் டாலர் செலவில் ஒன்பது ஆண்டுகள் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. எழுபது காப்பிகள் போடப்பட்ட சாதனை வேறு. ஒரு சில காட்சிகள் மட்டும் வண்ணத்தில் எடுக்கப்பட்டன. இன்றைய பணக் கணக்கிற்கு அட்ஜஸ்ட் செய்து பார்த்தால் அதன் வசூல் 308 மில்லியன் டாலர்கள் வருகிறது என்கிறார்கள். 2004 -ல் முழுவதும் வண்ணப் படமாக வெளியிடப்பட்டு இருபத்தைந்து வாரங்கள் ஓடியது! தமிழில் டப்பிங் செய்யப்பட்டும் வெளிவந்தது.



ஆனால், இஸ்லாமிய உலகம் முழுவதிலும் உன்னதக் காதலின் குறியீடாக நிறுவப்பட்டுள்ள ஜோடி லைலா-மஜ்னூன்தான். அரபு நாட்டின் பெதோயின் இனத்தில் உருவான ஒரு நாடோடிக் கதை இது. சிலர் இது உண்மைக் கதை என்றும் நம்புகிறார்கள். இருக்கலாம். உன்னதப்படுத்தப்பட்ட உண்மைச் சம்பவமாக இருக்கக் கூடும். கி.பி.7 -ஆம் நூற்றாண்டில் அரேபியாவின் நஜ்த் பகுதியில் வாழ்ந்த 'கைஸ் இப்னுல் முலவ்வா' என்பவனைப் பற்றிய கதை இது. தன் பால்ய பருவத்திலிருந்தே லைலா என்னும் தன் தோழியின்மீது ஆழமான அன்புகொண்டு வளர்கிறான் அவன். அன்பு முற்றிக் காதலாகிறது. தன் காதலைக் கவிதைகளாக வெளிப்படுத்துகிறான். இப்படிச் சொல்வதைவிட, அவளின் பெயரைக் கவிதைகளாலும் இசையாலும் அலங்கரிக்கிறான் என்று சொல்லலாம்! காதலின் சக்திக்குத் தன்னை முழுவதுமாகக் கொடுத்துவிட்ட கைஸ் அலங்கோலமாக ஒரு பக்கிரியைப்  போல் ஆகிவிட்டான். மக்கள் அவனை "மஜ்னூன்" என்று அழைக்க ஆரம்பித்து அதுவே அவனுக்குப் பெயராகிவிடுகிறது. ஜுனூன் என்னும் அரபிச் சொல் "வெறி கொண்ட பித்து நிலை"யைக் குறிக்கும். மஜ்னூன் என்றால் பித்தன் என்று பொருள். மஜ்னூனின் தந்தை தன் மகனுக்கு லைலாவை மனம் முடித்து வைக்க அவளின் தந்தையிடம் பெண் கேட்கிறார். ஒரு கிறுக்கனுக்கு என் மகளைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி லைலாவின் தந்தை மறுத்துவிடுகிறார். அவளை வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிடுகிறார். இதனால் மனமுடைந்த மஜ்னூன் வனாந்தரங்களில் திரிகிறான். இராக் நாட்டிற்குத் தன் கணவனுடன் அனுப்பப்பட்ட லைலா அவனுடன் இணைய மறுத்துவிடுகிறாள். மஜ்னூனின் நினைவில் நோய்ப்பட்டு இறந்துபோகிறாள். இந்தச் செய்தியை அறிந்த மஜ்னூன் பாலைவனத்தில் உயிர் துறக்கிறான்.



இந்த நாடோடி அரபுக் கதையைப் பாரசீக மொழியில் கற்பனை கலந்து எழுதிய கவிஞர் நிஜாமி அதை உலகப் புகழ் பெற்ற இலக்கியமாக ஆக்கிவிட்டார். பதினாறாம் நூற்றாண்டில் அதை ஃபுஜூலி என்னும் கவிஞர் துருக்கிமொழியில் காவியமாக்கினார். அதனைத் தொடர்ந்து பலரும் பல்வேறு மொழிகளில் 'லைலா-மஜ்னூன்' காவியம் எழுதியிருக்கிறார்கள். நிஜாமி,  ஃபுஜூலி ஆகியோரின் காவியங்களில் பல இடைச்செருகல்கள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ரீமிக்ஸ் 'லாலா-மஜ்னூன்'கள் தோன்றினார்கள். 

நிஜாமியும் ஃபுஜூலியும் சூபி மரபில் இருந்தவர்கள் என்பதால் 'லைலா-மஜ்னூன்' கதைக்கு ஆன்மிகக் குறியீட்டுத் தன்மையை வழங்கிவிட்டார்கள். மனிதக் காதலைக் கருவியாகக் கொண்டு இறைக் காதலை மிக எளிதாகப் பேசிவிடமுடியும் என்பதை உலகின் எல்லா ஆன்மிக மரபுகளும் கண்டுள்ளன. இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால் ஆன்மிக உணர்வுகளை மனிதத் தளத்தில் பிரதிபலித்துக் காட்டுவதற்கு காதலை விடவும் சிறந்த கருவி வேறு இல்லை! எனவே சூபிகள் லைலா-மஜ்னூன் குறியீட்டைத் தங்களின் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்கள்.

லைலாவின் தெருவில் அலைந்துகொண்டிருந்த மஜ்னூன், அவள் வீட்டின் சுவர்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துப் பரிகாசம் செய்தவர்களின் காதுகளில் விழுமாறு ஒரு கவிதை படிக்கிறான்:

"லைலாவின் தெருவில்
அவள் வீட்டின் சுவர்களை
முத்தமிடுகிறேன் நான்.
இந்தச் சுவற்றின் மீதோ 
அல்லது அந்தச் சுவற்றின் மீதோ 
காதல் கொண்டவனல்ல நான்.
என் மனதில் பொங்கி வழிவது
அந்த வீட்டுக்குள் இருப்பவளின் காதலே!"   

உலகெங்கும் உள்ள முஸ்லிம்களிடம் பரவியுள்ள "தப்லீக்" இயக்கத்தின் பாட நூலான "அமல்களின் சிறப்புக்கள்" என்னும் நூலில்கூட இந்தக் கவிதை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது! இறைவனின் நினைவில் சதா மூழ்கியிருத்தல் என்னும் நிலையை விளக்குவதற்கு இந்தக் கவிதையை மவ்லவி ஜகரிய்யா எடுத்தாண்டுள்ளார் என்பது மனிதக் காதலை வைத்து இறைக் காதலை விளக்கும் உத்தியைக் காட்டுகிறது. இறைவனைக் காதலியாகக் குறிப்பிடும் சூபி "நாயகி-நாயக" பாவனையின் சாயை இது.



இறைவனை அடையும் வழிகளைக் கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் என்று நான்காக வகுத்த சுவாமி விவேகானந்தர், பக்தி யோகத்தை விளக்கும்போது இந்த நாயக நாயகி முறையைத்தான் மனித சுபாவத்திற்கு மிகவும் நெருங்கி வருவதாகவும், நான்கில் மிக விரைவில் பயன்தரக் கூடியதாகவும், அதிக இனிமையானது என்றும் குறிப்பிட்டு அதனை 'மதுர யோகம்' என்று சிலாகித்தார்.



வைணவ மரபில் "ராதா-கிருஷ்ணன்" ஜோடி உன்னதக் காதலுக்கு இலக்கணமாகக் கூறப்படுகிறது. ராதை என்னும் பாத்திரம் ஒரு பக்தனின் ஆன்மாவுக்குக் குறியீடாகக் காணப்படும்போது இறைக்காதலின் தளத்தில் விளக்கங்கள் மலர்வதைக் காணலாம்.அவ்வாறு ஜெயதேவரின் "கீத கோவிந்தம்" விளக்கப்படுகிறது.

அதைப்போலவே லைலா-மஜ்னூன் கதையை இறைக்காதலை விளக்குவதற்கான ஒரு குறியீடாக சூபிகள் பயன்படுத்துகின்றார்கள். நிஜாமியின் இந்தக் காவியத்தை உரைநடையில் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் காலின் டர்னர் (COLIN TURNER ). இஸ்லாமிய வரலாற்றில் டாக்டர் பட்டம் பெற்ற இவர் தர்ஹம் பல்கலைக்கழகத்தில் பாரசீக மொழியும் இஸ்லாமியமும் பயிற்றுவிக்கிறார். திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒன்றும் வெளியிட்டுள்ளார். "லைலா மஜ்னூன்" நூலின் முன்னுரையில் அவர் சொல்கிறார்: "மர்மமான காதல் உலகத்தை, அதன் எந்தப் பகுதியையும் விட்டுவிடாமல், முழுமையாக நிஜாமி வரைந்துகாட்டிவிட்டார்" (Nizami maps the whole of the mysterious world of love, leaving no region uncharted.)



"தேவையற்ற ஒன்று தன்னிடம் இருப்பதன் வலியையும்
தேவையான ஒன்று தன்னிடம் இல்லாததன் வலியையும்
மனிதன் மட்டுமே உணர முடியும்!"

என்று தொடங்குகிறது லைலா-மஜ்னூன் கதை. இந்த நிலையில் உள்ள எந்த ஓர் ஆணும் அல்லது பெண்ணும் தன்னை லைலாவாக அல்லது மஜ்னூனாக இனம் கண்டுகொள்ள முடியும். இவ்வாறு மனம் முழுவதும், உயிர் முழுவதும் புகுந்து நிறைந்து ஆட்கொண்டு பைத்தியமாய் ஆட்டிவைக்கின்ற ஒன்றை "ழாஹிர்" (ZAHIR ) என்று குறிப்பிடுகிறார் போர்த்துகீசிய எழுத்தாளர் பாலோ கோயல்லோ (PAULO COELHO ). இஸ்லாமிய மரபிலிருந்து தான் அறிந்துகொண்டதாக அவர் கூறும் இந்தக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து "ழாஹிர்" என்னும் பெயரில் ஒரு நாவலே எழுதியிருக்கிறார். அதன் கதாநாயகன் லைலாவைத் தேடி அலையும் மஜ்னூனைப் போலவே தன் மனைவியைத் தேடி அலைகிறான்!

மேற்கத்திய இசை உலகில் 'லைலா' என்னும் பெயரைப் பல கோடி உதடுகள் முனுமுனுக்கும்படிச் செய்தவர் ராக் பாடகர் எரிக் க்ளாப்டன் (ERIC CLAPTON ). புகழ் பெற்ற "பீட்டில்ஸ்" இசைக்குழுவில் இருந்த ஜார்ஜ் ஹாரிசனுடன் (GEORGE HARRISON ) 1960 -ல் இணைந்து பணியாற்றத் தொடங்கினார் எரிக் க்ளாப்டன். 1966 -ல் பட்டி பாய்ட் (PATTIE BOYD ) என்னும் 'மாடலை' ஹாரிசன் மணந்தார். சிக்கல் அதிலிருந்து தொடங்கியது. தன் நண்பனின் மனைவியின் மீது தான் காதல் வயப்படுவதை எரிக் க்ளாப்டன் உணர்ந்தார். மறக்க முயன்றால் இன்னும் அதிகமாக மனம் பைத்தியமானது. உதறித்தள்ள முடியாத அந்த அதீத சக்திக்குத் தன்னை இழந்துகொண்டிருந்த குழப்பமான நிலையில் நிஜாமி எழுதிய "லைலா-மஜ்னூன்" கதையைத் தன் நண்பரும் நாடக ஆசிரியருமான இயான் தல்லாஸ் (IAN DALLAAS ) என்பவரிடமிருந்து கேட்டறிந்தார்.



இயான் தல்லாஸ் 1930 -ல் ஸ்காட்லாந்தில் பிறந்தவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். பின்னர் பல மேடை நாடகங்களையும் தொலைக்காட்சி தொடர்களையும் இயற்றினார். 1967 -ல் மொரோக்கோ நாட்டின் ஃபேஸ் (FES ) நகரில் ஷைக் அப்துல் கரீம் தாவூதி என்பவற்றின் முன்னிலையில் இஸ்லாத்தில் இணைந்தார். பின்னர், ஷைக் முஹம்மது இப்னுல் ஹபீப் என்பவரிடம் சூபி ஆன்மிக தீட்சை பெற்று "அப்துல் காதிர் அஸ்-சூபி" என்று அழைக்கப்படலானார். அவர் சார்ந்த சூபி வழி "தர்காவி-ஷாதிலி-காதிரி தரீக்கா" என்று அழைக்கப்படுகிறது. 1980 -ல் 'முராபிதூன் அகில உலக இயக்கம்' என்னும் சூபிஞான இயக்கத்தையும், 2004 -ல் தென்னாப்பிரிக்காவின் கேப் டவ்ன் நகரில் 'தல்லாஸ் கல்லூரி'யையும் துவங்கினார். எரிக் க்ளாப்டனுடன் நட்பு கொண்டிருந்த காலகட்டத்தில், அதாவது அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பே, இயான் தல்லாஸ் என்னும் பெயரில் அவரது "THE TIME OF THE BEDOUIN 'THE BOOK OF AMAL' - ON THE POLITICS OF POWER " என்ற நூல் வெளியானது. அரபுப் பழங்குடியான பெதோயின் இனத்தைப் பற்றி ஆய்வு செய்த அவர் நிஜாமியின் லைலா-மஜ்னூன் கதையை நன்றாக அறிந்திருந்தார்.



எரிக்கின் நிலையை அவதானித்த தல்லாஸ்,"நீ என்னடா  இப்படி மஜ்னூன் ஆயிட்ட?" என்று அவரிடம் சொல்லியிருக்க வேண்டும். மஜ்நூனாகத் தன்னைக் கண்ட எரிக் க்ளாப்டன் தன் 'காதலி' பட்டி பாய்டை லைலாவாக உருவகித்துக் கொண்டார். தன் உணர்வுகளை ஒரு பாடலாக எழுதி இசையமைத்தார். 1970 -ல் 'DEREK AND THE DOMINOS ' என்னும் ஆல்பத்தில் அந்தப் பாடல் வெளியானது. ஏழு நிமிடங்களுக்கு மேல் நீண்ட பாடலாக இருந்ததால் முதலில் அது 'ஹிட்' ஆகவில்லை. பின்னர் மெல்ல மெல்ல ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்து எரிக் கிளாப்டனின் மாஸ்டர் பீஸாக ஆகிவிட்டது. இருபது வருடங்கள் கழித்து அப்பாடலின் 'அகோஸ்டிக்' பிரதி வெளியிடப்பட்டு 1993 -ல் சிறந்த ராக் பாடலுக்கான கிராமி விருதைப் பெற்றது.



தன் காதலியை லைலாவாக வைத்து எரிக் க்ளாப்டன் பாடிய வரிகள் இவை:

"உன் அருகில் யாரும் காத்திருக்காமல்
நீ தனிமையில் தவிக்கும்போது என்ன செய்வாய்?
நீண்ட காலம் ஓடிக்கொண்டும் ஒளிந்துகொண்டும்
இருந்துவிட்டாய் நீ
அது உன் வெற்றுப் பெருமிதம் என்று தெரியும் உனக்கு!

லைலா! என்னை மண்டியிட வைத்தாய்.
லைலா! கெஞ்சுகிறேன் நான், என் அன்பே!
லைலா! என் இனிய காதலி,
நோகும் மனதிற்கு ஆறுதல் தா!

உனக்கொரு ஆறுதல் தருவதாய் எண்ணி
முதியவன் உன்னை மூழ்கடித்தான்!
ஒரு முட்டாளைப் போல
நான் உன்மேல் காதலானேன்!
நீ என் உலகைத் தலைகீழாக்கினாய்!
லைலா...

முற்றும் நான் பித்தனாய் முடியுமுன்
நிலைமையைச் சீராக்கு.
வழியேதும் நமக்கில்லை என்று சொல்லாதே!
என் காதல் வீண் என்று சொல்லாதே!
லைலா..."




   
   
    

1 comment:

  1. ///இறைவனை அடையும் வழிகளைக் கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் என்று நான்காக வகுத்த சுவாமி விவேகானந்தர், பக்தி யோகத்தை விளக்கும்போது இந்த நாயக நாயகி முறையைத்தான் மனித சுபாவத்திற்கு மிகவும் நெருங்கி வருவதாகவும், நான்கில் மிக விரைவில் பயன்தரக் கூடியதாகவும், அதிக இனிமையானது என்றும் குறிப்பிட்டு அதனை 'மதுர யோகம்' என்று சிலாகித்தார்.///


    அப்பாடி! இந்த மதுர‌ பாவத்தை புரிந்து கொண்ட ஒரு முஸ்லிமா? ஆச்சரியமாக உள்ளது.

    ReplyDelete