Friday, September 15, 2017

ஒரு சூஃபியின் டைரி - 11Related image
#76 முத்துத் தூறல்கள்
      பிறகு எனக்கு மேலே வெண்ணொளி மேகம் ஒன்றினைக் கண்டேன். அதிலிருந்து வெண் முத்துக்கள் தூறின. அவை சத்தியப் பரம்பொருளின் அழகிலிருந்து வந்தன. அவனே அவற்றை என் மீது பொழிந்திருந்தான். அது விண்டுரைக்க இயலாததாய் இருந்தது. அறிவாளிகள் அதனை விளங்க முடியாது. பிறகு அவன் அவ்வுலகை எனை விட்டும் ஒளித்தான். பிறகு நான் இந்நிகழ்வுகளின் தன்மைகளிலும் நான் மறந்துபோன திரைநீக்கங்களிலும் ஆழ்ந்தேன். இவ்வுலகங்களின் ஓர் அணுவையேனும் எந்த மனிதனோ ஜின்னோ பார்த்தார் எனில் இறை நுட்பங்களில் அவர் உருகிவிடுவார். அவனது சக்திக்கு ஒவ்வாத விவரிப்புக்களை விட்டும் இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்.


Image result for awe feeling
And I stood before a great veil in awe...
 
#77 “நான் உனது”
      இன்மையின் படித்தரத்தில் நான் அழிக்கப்படுவதை நானே கண்டேன். நான் சொன்னேன், “நின் படைப்புக்களில் மிகவும் கீழானவன் நான். நான் நினது அடிமை, நின் அடிமையின் மகன்”. உடனே, ஏகத்துவத்தின் மற்றும் வல்லமையின் தாக்குதல்கள் என் இதயத்தின் மீது இறங்கின. அவன் சொன்னான், “எனக்கு அடிமையாய் இருப்பதற்கு நீதான் யார்?” நான் சொன்னதைப் பற்றி மேலான இறைவனின் முன் நான் வெட்கிப்போனேன். நான் சொன்னேன், “நான் வேறென்ன சொல்ல? உனது ஆட்சிமையில் நானும் ஒரு பொருள் மாத்திரமே”. அவன் சொன்னான், “நீ உன்னையும் அர்ஷு முதல் பூமி வரையுள்ள நானல்லாத அனைத்தையும் மறந்துபோகும் வரை நீ ஒருபோதும் உண்மையான நம்பிக்கையாளன் ஆகமாட்டாய்”. மாபெரும் திரை ஒன்றில் நான் வியப்புற்று நின்றேன். என்னால் பேச முடியவில்லை. பிறகு நான் அவனை அவனது பெயர்கள் கொண்டு நினைவுகூர எண்ணினேன். அவன் எனக்குத் தன்னில் எனது அழிவையும் அவனுக்கான எனது ஏக்கத்தையும் கற்பித்தான். மறைவான பாலைவனங்களின் தோற்றத்தில் அவன் என்னிடம் தோன்றித் தன்னைச் சுட்டிக்காட்டி, “நான் உனது” என்றான். நான் பரவசத்தில் ஆனேன். எனது இதயம் களித்தது. பிறகு அவன் துருக்கியரின் கோலத்தில் வெளிப்பட்டான். அவனது அழகிலும் பொலிவிலும் எனது ஆன்மாவும் இதயமும் அழிந்தன. பிறகு மீண்டும் அவன் என்னை அணுகிச் சொன்னான், “இங்கே நீ ஏகத்துவத்தின் வார்த்தையால் சஞ்சலம் கொள்ள மாட்டாய், ஏனெனில் இங்கே ஏகத்துவம் என்பதொரு தந்திரம். எனது அழகு மற்றும் பொலிவு ஆகிய பண்புகளில் நானிருந்தபடி என்னை நீ தரிசித்தாய்.”

Related image
#78 அழிவின் படித்தரம்
      பிறகவன் என்னைச் சுற்றிலுமிருந்து அழகின் ஆடைகளில் அனைத்து வண்ணங்களிலும் தோன்றி என்னை பேரார்வமும் காதலும் ஏக்கமும் ஆட்கொள்ளச் செய்தான். அந்த எனது நிலையின் இனிமையில் என் உள்ளம் உருகியது. அறியப்படாத பண்புகளின் எதார்த்தங்களிலிருந்து நான் எவற்றைக் கண்டேனோ அவற்றில் எதையேனும் நான் பேசினால் அஃது இவ்வுலகை இறை மெய்ம்மைகளால் நிரப்பிவிடும். இதுவே பூர்வீகத்தின் அறிவில் ஏகத்துவத்தின் கடல்களைப் பருகிவிட்ட காதலர்கள் மற்றும் அவர்களைப் போன்றோரின் படித்தரம். அவர்கள் மகத்துவங்களின் கடல்கள் மீது இருக்கின்றனர். அவற்றின் உடைதல்களே அறிவு மற்றும் காதலின் மக்களுக்கு அறியாத மெய்ம்மைகளை வழங்குகின்றன. அவர்கள் அழிவின் படித்தரத்தில் இருக்கின்றனர். அழியாத கண்ணோ, துயர் கொள்ளா இதயமோ, நசியாத அறிவோ மறைந்து போகாத பிரக்ஞையோ அவர்களில் இல்லை. அனைவரது ஒப்புமைகளையும் வெளிப்பாடுகளையும் கடந்தவனான அவனுக்கே மகத்துவம்.

Related image
#79 பெருங்கடல்களில் நீந்துதல்
      நான் மறைவுலகில் இறைவனைத் தேடியிருந்தேன். நான் எவ்வளவு அவனைத் தேடினேனோ அவ்வளவு அதிகமாக இருத்தலிலிருந்தும், குறிப்பிட்ட கற்பனைகளிலிருந்தும் குறுக்கீடுகள் நிகழ்ந்தன. நான் அதற்கு இறைவனின் உதவியை நாடினேன். அவன் என்னைத் தனது கருணையை கிரகிக்கச் செய்தான். இருத்தலின் புலங்களிலிருந்து எனது பிரக்ஞையை வெளியேற்றினான். நான் காதலின் பெருங்கடலை அடைந்தேன். அஃது இவ்வுலகை விடவும் பெரிதாயிருந்தது. அறிவின் கடலை அடையும் வரை நான் அதனை நீந்திக் கடந்தேன். அக்கடலினையும் நீந்தினேன். பிறகு நான் ஆன்மிக ஞானத்தின் கடலை அடைந்து அதனை நீந்திக் கடந்தேன். ஏகத்துவத்தின் கடலை அடைந்தேன். அறியாதிருத்தல் மற்றும் மகத்துவத்தின் கடலினை அடையும் வரை அதனை நான் நீந்தினேன். அதனைக் கடந்து நான் திருப்பண்புகளின் பெருங்கடலை அடைந்தேன். அதன் பின் சுயத்தின் பெருங்கடலை அடைந்தேன். சத்தியப் பரம்பொருளின் மெய்ம்மையை நான் தொலைத்துவிட்டது கண்டு பெரிதும் வியந்தேன். சில நேரம் ஓய்வாக இருந்தேன். அவன் என்னிடம் வல்லமை மற்றும் அழகில் வெளிப்பட்டான். நான் கண்டன எல்லாம் அவனது வல்லமையின் முன் பெருங்கடலுக்கொரு துளி எனத் தோன்றின. அவனது நேசம் என்னைப் பரவசம் மற்றும் ஆன்மிக அகநிலைகளை நோக்கி உந்திற்று. நான் அங்கே சில நேரம் மறைந்திருந்தேன். அவன் என்னை விட்டும் மறைந்திருந்தான். வழக்கத்தினும் தாமதாக நான் எழும்படி ஆயிற்று. அது பற்றி நான் சஞ்சலமடைந்தேன்.
Related image 
Shaykh NIzam Haqqani.
 
#80 மறைந்த திருப்பண்புகளைத் தேடுதல்
       தொழுகையை முடித்து நான் தியானத்தில் அமர்ந்து சிந்தித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தபோது எனது நேரம் என்னை விட்டு நழுவியது. என் இதயம் ஆன்மிக அகநிலைகளையும் பரவசங்களையும் திரைநீக்கங்களையும் உரையாடலையும் நாடியபடி மறைவுலகில் சுழன்று போயிற்று. திடீரென்று நான் சத்தியப் பரம்பொருளைக் கண்டேன், அழகும் பொலிவும் மகத்துவமுமாக, சிவப்பு ரோஜாக்களைத் தூவியபடி (அவனது நுட்பங்களுக்கே மகிமை எல்லாம்!). நான் கூச்சலிட்டேன். சிறிது காலம் பரவசத்தில் இருந்தேன். பிறகு அவன் என்னை விட்டும் மறைந்தான். எனது பிரக்ஞை வானவருலகில் பயணித்துக் காலத்தைக் கடந்து வல்லமையின் முற்றத்தை அடைந்தது. ஆனால் சத்தியப் பரம்பொருளின் பேரழகு வெளிப்படுத்தப்படவில்லை. இறைவனுக்கான ஏக்கத்தால் நான் பெரிதும் தூண்டப்பட்டிருந்தேன் – “ஒவ்வொரு தந்தையின் மகனும் அவனது தாயின் முலையில்.” நான் நெடுநேரம் காத்திருந்தேன். நான் எனை இழந்தேன். ஆனால் மிக விசாலமாகப் பேசினேன். ஏக்கமும் காதலும் எனை ஆட்கொண்டிருந்தன. ஏனெனில், அவையே காதலர்களை இயக்குபவை. அந்த அகவிரிவையும் ஆட்படுதலையும் அனுபவித்த பின் நான் சில வார்த்தைகளைப் பேசினேன். திருப்பண்புகளின் முதல் விடியல்கள் எனக்குத் தோன்றின.

Image result for turquoise tree
#81 பசுநீல மரம்
      அந்த விடியல்கள் தோன்றியபோது அவற்றில் கால அளவைகள் இருந்தன. தற்காலிகமானவை யாவும் அழிந்திருக்கக் கண்டேன். அனைத்தும் அவை இருந்தபடி இருந்தன. மேலானவன், “ஆசனமும் பாதபீடமும் மறைந்துபோயின” என்றான், உடனே அவை மறைந்துபோயின. அதன் பின், சொர்க்கம், நரகம், வானங்கள் மற்றும் பூமி பற்றியும் அப்படியே சொன்னான். அவன் [சொர்க்கத்தின் காவலரான] ரிள்வானிடம் கூறினான், “அந்நாளில் சொர்க்கவாசிகள் தங்குமிடத்தால் மேலானர்களாகவும் ஓய்விடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்” (குர்ஆன்:25:24). அதாவது, அவர்களின் படித்தரத்தை [மகாம்] இப்படிக் குறித்தான். சொர்க்கலோகங்கள் எனக்குக் காட்டப்பட்டன. அவற்றினும் இனியதொன்றைக் கண்டேன். அங்கே நான் இறைத்தூதர்கள், வானவர்கள், கண்ணழகிகள் மற்றும் கோட்டைகளைக் கண்டேன். யாவும் சத்தியப் பரம்பொருளின் ஒளியால் நிரம்பியிருந்தனர். சொர்க்கத்தின் மரங்களில் நான் பசுநீல மரத்தைக் கண்டேன். அது ஓர் ஈச்ச மரம் போல் இருந்தது. அதில் புதிய தளிர்கள் இருந்தன. அவை முன் நீட்டியபடி பேசின. அம்மரத்தின் இனிமையும் அழகும் இவ்வுலக மக்களுக்குக் காட்சியானால் அவர்கள் அனைவரும் ஏக்கத்தால் இறந்து போவார்கள்.

Related image
#82 பூவனத்தில் அவரின் மனைவி
      பிறகு நான் என் மனைவியை ஒரு பூவனத்தில் கண்டேன். இறைவனின் பிரசன்னத்தில் அவள் இருந்தாள். பிறகு அவள் இறைவனை விட்டும் கிளம்பினாள். நான் மேலான சத்தியப் பரம்பொருளை ஒரு துருக்கியனின் கோலத்தில் கண்டேன். பிறகு என் மனைவியை நான் இறைவனின் பிரசன்னத்தில், சொர்க்கட்தின் மேலடுக்குகளில் மாளிகை ஒன்றில் இருக்கக் கண்டேன். அஃது சிவந்த மாணிக்கங்களால் ஆகியிருந்தது. ஓர் பலகையில் என் மனைவி இறைவனின் அருகில் அமர்ந்திருந்தாள், எனக்காகக் காத்திருப்பதைப் போல. பிறகு நான் மறைவிலிருந்து மேலான இறைவனின் சொல் ஒலிக்கக் கேட்டேன்: “நற்பண்புள்ள இவர்களின் பெற்றோர்களும், மனைவியரும்” [குர்ஆன்:13:23]. இச்செய்தியை நான் சிந்தித்திருந்து இந்த இறைவசனத்தின் தொடக்கத்திற்கு என் கவனத்தைச் செலுத்திச் சிந்தித்தேன், “நிலையான சுவனங்களில் இவர்களும் நற்பண்புள்ள இவர்களின் பெற்றோர்களும் மனைவியரும் பிள்ளைகளும் நுழைவார்கள்.” [குர்ஆன்:13:23]. இது எனக்கான நற்செய்தி என்று நான் உணர்ந்தேன். பிறகு நான் வைகறையில் அமர்ந்து சாஸ்வதத்தின் விடியலை தியானித்தேன்.

#83 அழகிய வடிவின் ஆறுதல்
      இந்த வேளையில், தெய்வீகத்தால் ஆடையிடப்பட்ட நிலையில் இறைவனை நான் தியானிப்பதைப் பற்றி எனது இதயத்தில் கவலைப்பட்டேன். ஏனெனில், தெய்வீக ஒருமையின் வரையறையே ‘பூர்வீகம் என்பது தற்காலிகத்தை விட்டும் தனித்தது’ என்பதுதான். ஆனால் சத்தியப் பரம்பொருள் புனிதத்தின் சபையில் என் முன் தோன்றினான், அப்பாலான ஒருவனாகிய அவன் தன்னைத் தானே, தனது காதலர்களில் நேசத்தைத் தூண்டும் ஓர் அழகிய கோலத்தில் ஆக்கிக்கொண்டவனாக. அவன் அருகில் வந்து சொன்னான், “எழு. நீ ஏதுமற்றதைச் சிந்திக்கிறாய்”. கற்பனைகளுக்கு அப்பாலான அவனது தன்மையைப் பற்றி நான் அக்கறையாவதை அவன் வெறுத்தது போலிருந்தது. எனது காதலின் ரகசியத்திற்கு ஏற்ற கோலத்தில் அவன் வெளிப்பட்டதை என் மனம் கொண்டாடிக் களித்தது. வைகறை வரை என் மனம் பரவசத்தில் பெருமூச்சுக்களும் கண்ணீரும் கொண்டிருந்தது. பிறகு அவன் ஒவ்வொரு மணிக்கூரிலும் சாஸ்வதத்தின் பேரொளிகளிலிருந்து ஒவ்வொரு திருப்பண்பு கொண்டு தோன்றினான். பிறகு அவன் என்னை விட்டு மறைந்தான். பிறகு, இறைவனை மனிதத் தன்மைகளில் சிந்திப்பது பற்றி பள்ளி மேடையிலிருந்து நான் செய்த எச்சரிப்பை என் இதயம் நினைவு கூர்ந்திருந்தது. ”மக்களை நேர்வழிப்படுத்த நீ இத்தனை நாட்கள் போதித்து வந்ததே எனது ரகசியமாகும். அவர்களுக்கு நான் சாற்றியதெல்லாம் மேலான இறைவனின் படைப்பின் அழகையே ஆகும்” என்று அது சொல்லிற்று.

#84 பிரசங்க மேடையில் உருவெளிப்பாடு
      மகத்துவத்தின் பலகணிகளில் அணுக்கமான வானவர்களால் பிரசன்னம் நிறைந்திருக்கக் கண்டேன். நான் மகத்துவமிக்க இறைவனையும் அனைத்து இறைத்தூதர்களையும் தீர்க்கதரிசிகளையும் பிரசங்க மேடையில் அமர்ந்திருக்கக் கண்டேன். நான் அதில் அமர்ந்து சாட்சி மந்திரத்தை ஓதியபோது வானவர்கள் அழுதனர். இறைத்தூதர்களும். அவன் (மகத்துவம் அவனுக்கே!) செவியேற்றான். அவனிலிருந்து திருப்தியின் அடையாளமாக ஓர் ஒளி வந்தது, அவற்றை அவன் ஏற்றுக்கொண்டான் என்பதுபோல். இறைவன் அப்பாலானவன். அவன் சொன்னான், “உயிர்த்தெழுப்பப்படுதலின் நாளில் இப்படியே ஆகும்”. என் மகனே! இந்தத் திரைநீக்கங்களெல்லாம் இறைவனை மனிதத் தன்மையில் பாவிக்கும் வெற்றுக் கற்பனைகளே என்று பார்ப்பவன், புனிதத்தின் மற்றும் நெருக்கத்தின் நறுமணத்தை அவன் முகர்ந்திருந்தாலும், ஒருபோதும் இணைவை அடைய மாட்டான். மேலும் அவனுக்குப் பலன்களும் உண்டாகாது. இவையெல்லாம் புனிதத்தின் அனுபவங்கள்; தூய்மையின் உள்ளுதல்கள்; செம்மையின் வல்லுநர்களில் நாஸ்தியின் குருமார்கள் அடைகின்ற படித்தரங்கள். உருவெளிப்பாட்டின் வல்லுநர்கள் இவற்றை தெய்வீக ஆணைகள் என்றும் சாஸ்வதத்தின் ஒளிகளின் தோற்றங்கள் என்றும் இறைவனது செயல்பாடுகளின் வழியே அவனின் திருப்பண்புகளின் தன்மைகள் வெளிப்படுதல் என்றும் கண்டுகொள்கிறார்கள்.

 Image result for sapphire
#85 காஃப் மலையில் வைகறை
      இணைவின் வைகறைக்குக் காத்திருந்தேன். ஒரு மணிக்கூர் கழிந்தது. திரைநீக்கம் ஒன்றினை அடைந்தேன். நான் காஃப் மலையடிவாரத்தில் இருக்கிறேன். நானொரு நீலக்கல்லினைக் கண்டேன். அதற்கப்பாலிருந்து சத்தியப் பரம்பொருள் எழுந்து உலகைப் பிரகாசமாக்கினான். காஃப் மலையும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த இவ்வுலகமும் அவனது வல்லமை மற்றும் அழகின் ஒளியால் வெளிச்சம் பெற்றிடக் கண்டேன். அவன் தனது திருப்பண்புகளையும் சுயத்தையும் வெளிப்படுத்தினான். பூமி அதிர்ந்தது; மலைகள் சிதறின. அஃதென்னைப் பெரிதும் கவர்ந்தது. நான் விழித்தேன். இரவின் செம்பாகம் கழிந்திருந்தது. சில காட்சிகளைத் தவிர வானவருலகிலிருந்து எதுவும் எனக்குத் திறக்கப்பட்டிருக்கவில்லை. தொழுகை அழைப்பிற்கான நேரம் வந்தபோது கரடிக்குட்டி (விண்மீன்) கூட்டத்தின் திசையிலிருந்து இறைவன் என்னை நோக்கியிருக்க கண்டேன். அவனது இணைவின் முறையில் அவன் என்னை வரவேற்றான்.

No comments:

Post a Comment