Saturday, September 23, 2017

காதல் காதல் காதல்



Image result for black bird woman
       
      மகாகவி பாரதியார் எழுதிய மகத்தான நெடுங்கவிதை ”குயில் பாட்டு”. குயிலும் மாடும் குரங்கும் வரும் அக்கவிதை வெற்றுக் கற்பனை அன்று; அஃதொரு பொழுதுபோக்குக் கவிதையும் அல்ல. 

      அது ஓர் ஆன்மிகக் காவியம். வேத ஞானத்தைக் குறியீடாகப் பேசும் பனுவல். அப்பாட்டின் முடிவில் இதனை பாரதியே சொல்கிறார். ஒரு சவால் விடுகிறார்: ”ஆன்ற தமிழ்ப்புலவீர்! கற்பனையே ஆனாலும் / வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க / யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?”

      இந்தப் பாட்டில் குயில் என்று வருவது மனிதனின் ஆன்மாவைக் குறிக்கும் என்னும் அளவில் புரிந்து கொண்டாலே போதும். பல மர்ம முடிச்சுக்கள் நெகிழும், அவிழும்.

ஆன்மா இறைவனைக் காதலிக்கிறது. அந்தக் காதலையே ஞானிகள் அனைவரும் பேசினர். மனிதக் காதலை ஒரு குறியீடாக வைத்துக்கொண்டு அவர்கள் புனிதக் காதலை விளக்கினர். பாரதியின் குயிலும் அந்தப் புனிதக் காதலையே நாடித் தவிக்கிறது.

குயிற்பாட்டில் மிகவும் பிரபலமடைந்துவிட்ட வரி இதுதான்:

“காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்”

இதே போல் இன்னும் பல வரிகள் அந்தக் குயில் கூறுவதாக வருகின்றன. எனினும் இவ்வரி ஒன்று மட்டும் மிகவும் பிரபலம் அடைந்து விட்டது. இவ்வரி சந்த அமைப்பிலும் எளிய சொற்களின் தேர்விலும் குயில் கூவுவது போலவே அமைந்துள்ளது. நேர் நேர் என்னும் சீரமைப்புக் கொண்டு நேராக நெஞ்சில் சேதியைச் செருகுகின்றது.

இதே கருத்து வேறிரு இடங்களில் வேறு சொற்களில் சொல்லப்பட்டுள்ளது:

“காதலை வேண்டிக் கரைகின்றேன்
இல்லை எனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்”

என்றும்,

“காதலோ காதல்
இனிக் காதல் கிடைத்திலதேல்
சாதலோ சாதல்”

என்றும் குயில் புலம்பித் தவிப்பதாக பாரதி பாடுகிறார். எனினும் ‘காதல் காதல் காதல்’ என்று வரும் அந்த வரியே பெரும்புகழ் பெற்றது.

“ஆச வச்சேன் உன்மேல / அரளி வச்சேன் கொல்லையில” என்னும் நாட்டுப்புறப் பாடல் வரிகள் பாரதியின் வரிகளையே கவித்துவத்தில் விஞ்சி விட்டன என்றொரு கருத்துண்டு. கவிஞர் அறிவுமதி மேடையில் இதனைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இஃதோர் அவசரப் பிழை.
Image result for t n ramachandran

இதே போலொரு கருத்தினை மீண்டும் அண்மையில் கேட்டேன், பாரதியை அவரது மொழிபெயர்ப்பாளர் விஞ்சிவிட்டார் என்று. பாரதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அந்த அறிஞர் ‘சேக்கிழார் அடிப்பொடி’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் தி.ந.ராமச்சந்திரன் அவர்கள் (சுருக்கமாக டி.என்.ஆர்). அவரது ஆங்கிலப் பெயர்ப்பில் பாரதியின் வரிகள் இப்படி அமைகின்றன:

“Love, Love, Love, Love;
If Love should flit
Life must quit.”

     டி.என்.ஆர் செய்த இம்மொழிபெயர்ப்புப் பற்றி ஆங்கிலப் பேராசிரியர் திரு.ஷர்மா அவர்கள் சொல்கிறார், “நான் அவரது பாரதி மொழிபெயர்ப்புக்கள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். அவை நன்றாக உள்ளன. ஆனால் மூலத்தையே அவர் விஞ்சுவதாகத் தோன்றும் அடி ஒன்று இருக்கிறது.” (”I’ve gone through all his translations of Bharathi. They’re fine. But there is one passage where he seems to excel the original.”).

 இப்படிச் சொல்லிவிட்டு அவர் மேற்கண்ட வரிகளை மேற்கோள் காட்டுகிறார். அவர் அப்படிக் கருதுவதற்கான காரணத்தையும் தொடர்ந்து சொல்கிறார்: ”மூலத்தை அவர் விஞ்சிவிட்டதாகத் தோன்றும் அடி இதுதான். ஏனெனில் காதல் என்பது மீண்டும் மீண்டும் நிகழும் செயலாக இருக்கலாம். ஆனால் சாவு என்பது ஒரே ஒரு முறை மட்டுமே நிகழ முடியும்.” (And this is the passage where he excels the original. Because love can be a repetitive action, but death can happen only once.) [காண்க: Sekizaar Adi-p-Podi T.N.Ramachandran : A documentary,  https://www.youtube.com/watch?v=__pasa5tskc, 38:47 – 39:47].

தான் பாரதியை விஞ்சிவிட்டதாக டி.என்.ஆர் ஒப்புக்கொள்வாரா? ஒருபோதும் இல்லை. திருவிழாவில் தந்தையின் தோளின் மீது அமர்ந்தபடி வித்தையைக் கண்டு களிக்கும் பிள்ளையைப் போல், பாரதியின் தோள்மீது அமர்ந்துதானே புதிய தரிசனங்களை அவர் அடைகிறார். எனவே, நிஜத்தை விடவும் நீளமாக இருக்கிறது என்பதால் நிழல் வென்றுவிட்டது என்று சொல்வது பிழை. 


Image result for black bird woman
"bird woman" by Gabriel Moreno.

குயில் இங்கே ஆன்மாவின் குறியீடு என்று சொன்னேன். அது இறைவனின் மீது ஒருதலைக் காதல் கொண்டுள்ளது. இறைவன் அப்படித்தான் சோதிக்கின்றான். சில காலம் ஒருதலையாகத் தவிக்க விட்டுப் பிறகே ஆட்கொள்கிறான். உலகம் கண்ட இறைஞானியர் பலரின் வாழ்வும் இவ்வுண்மைக்குச் சான்று பகர்கின்றன.

இறைவன், ஒற்றைப் பூவுக்கோ பாசாங்குச் சொல்லுக்கோ வாழ்த்து அட்டைக்கோ மதி மயங்கும் அசட்டுப் பெண்ணல்லன். அவனது காதலின் தீயில் முழுதும் எரிந்து சாம்பலான ஒருவனையே தனது காதலின் ஃபீனிக்ஸ் பறவையாக எழுப்புகின்றான். அவர்களையே ’தெய்வீக உலகின் பறவைகள்’ (தாயிரே லாஹூத்) என்கிறது சூஃபித்துவம்.

காதல் என்பது உள்ளத்தில் பற்றும் தீ. ”உள்ளத் தனல் பெருக” அக்குயில் “இன்னிசைத் தீம்பாடல்” செய்ததாக பாரதி சொல்கிறார். அந்த இசையே காதல் என்னும் தீயின் வடிவம்தான். ’நாதக் கனலினிலே நம்முயிரைப் போக்கோமோ?’ என்கிறார் அவர்.

ஒருதலைக் காதல் என்பது எரிதழல். அது சம்மதம் பெற்றுவிடும்போது தீபம் ஆகிவிடுகிறது. விட்டிலோ இரண்டிலுமே எரிகிறது!

“காதல் உயிரூட்டலாம்
அல்லது கொல்லலாம்.
யாருக்குக் கவலை?
காதலிக்கப்படாவிடினும்
நான் காதலிப்பேன் ஆகுக”

என்கிறார் டி.என்.ஆர். (“Love may vivify or kill. Who bothers! Let me love, though unloved”, கண்ணன் பாட்டு ஆங்கிலப் பெயர்ப்பு முன்னுரை).

இக்கருத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் (தீ) பற்றுகிறார் இப்படி:

“நீ காதலிக்காவிட்டால் என்ன?
ஒரு பக்கம் பற்றினாலும்
அது நெருப்புதான்”



Image result for kaviko abdul rahman
பாரதியின் ஆழ்ந்த கவியுளம் கண்டோருள் அப்துல் ரகுமானும் ஒருவர். அவரும்கூட சில போழ்து பாரதியின் தோள்மீது அமர்ந்து பிரபஞ்சத் திருவிழாவில் தெய்வீக லீலைகளை தரிசித்திருக்கிறார். ‘அப்பா நான் உன்னை விட உசரமாகிவிட்டேன்’ என்று தோளேறிய பிள்ளை செல்லச் சீண்டல் செய்வது போல் அவர் சொல்கிறார்:

“காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்

என்றான் பாரதி
அது தவறு

காதல் காதல் காதல்
காதல் வந்தால் காதல் வந்தால்
சாதல் சாதல் சாதல்

என்பதுதான் சரி.” 




No comments:

Post a Comment