Tuesday, September 26, 2017

யாதினும் மெல்லோன்



      எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்... என்று ஆரம்பம் செய்கிறார்கள்.

      சர்வ வல்லமை கொண்ட ஆண்டவன் என்று இறைவனைச் சுட்டுகிறார்கள்.

      எல்லையற்ற வல்லமை கொண்டவன் என்றும் வருணிக்கின்றார்கள்.

      ’அந்த வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்’ என்று ஒலிக்கின்றது அல்லாஹ்வைத் தமிழ் செய்த பாடல்.

      அவன் வல்லோன் மட்டுமா? மெல்லோனும் அல்லவா?

      அவன் வலியன் மட்டுமா? எளியோனும் அல்லவா?

      இறைவன் வன்மைப் பண்பு கொண்டவன் என்று நினைக்கப் பாமர மனமே போதும். அவன் மென்மைப் பண்பு கொண்டவன் என்றும் உணர மனம் பக்குவப்பட வேண்டும்.

      ”அல்லாஹ் மென்மையானவன்; அவன் மென்மையை விரும்புகிறான்” என்று நபிகள் நாயகம் நவில்கிறார்கள். [சஹீஹ் முஸ்லிம்: 2593].

      இந்த அருள்மொழியின் மூலப்பிரதியில் உள்ள அரபிச் சொல் ”ரிஃப்க்” என்பதாகும். அதன் அர்த்தப் பிரிகைகளில் ஒன்றுதான் மென்மை என்பது. உண்மையில் அச்சொல் மென்மை சார்ந்த அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கியது. உதாரணமாக, நளினம் என்றும் அதற்குப் பொருள் தரலாம்.

      எனவே, “அல்லாஹ் நளினமானவன்; அவன் நளினத்தை விரும்புகிறான்”.

      இறைவனின் மென்மைக்கு ஏதேனும் உவமை காட்ட முடியுமா?

      இறைவனுக்கு உவமை கூறக்கூடாது என்பதொரு நியதி. என்ன சொன்னாலும் தப்பாகத்தான் ஆகும் என்பதால். அவன் ஒப்புவமை அற்றோன் அல்லவா?

       ”எப்பொருளும் அவனுக்கு ஒப்பென்று இல்லை” (42:11) என்கிறது குர்ஆன்.

     இருப்பினும் அவனை நினைவூட்டாத பொருள் ஏதேனும் இருக்கிறதா?

 Image result for sufi with rose

      ”எந்தப் பூவும்
       உன்னைப் போல் இல்லை
       ஆனால்
       ஒவ்வொரு பூவும்
       உன்னையே நினைவூட்டுகிறது”

      என்று பாடினான் ஒரு கஸல் கவிஞன்.

      அப்படித்தான் ஒரு நிகழ்வில், “இந்தத் தாய்க்கு அவளின் பிள்ளை மீதுள்ள பாசத்தை விடவும் அல்லாஹ் தனது அடியானின் மீது பிரியமுள்ளவன்” என்று நபிகள் நாயகம் ஒப்பிட்டு உயர்த்திச் சொன்னார்கள். (சஹீஹ் புகாரி: 5653).

      இறைவன் நம் மீது பரிவு காட்டுவதைச் சொல்ல வந்த வள்ளலார் “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து...” என்று பாடினார்.

      அதுபோல், நாமும் ஓர் ஒப்பீடு சொல்லி, இறைவன் இதனினும் மென்மையானவன் என்று சொல்லிச் சொல்லி இன்பம் அடையலாமே? எதைச் சொல்வது?

      மென்மை என்றதும் நம் நினைவுக்கு வருவன எவை? பூ, பெண், குழந்தை, பட்டு, தென்றல்...

      எதைச் சொன்னாலும் அதனினும் இறைவன் மென்மையானவன் அல்லவா? அவன் யாதினும் மெல்லோன்.

      நபித்தோழர் அனஸ் அவர்கள் சொல்கிறார்கள், “நபியின் உள்ளங்கையை விடவும் மென்மையான பட்டு எதையும் நான் தொட்டதில்லை. அவர்களின் வியர்வையை விடவும் வாசமான நறுமணம் எதையும் நான் முகர்ந்ததில்லை” (சஹீஹ் புகாரி: 3561).

      நபியில் வெளிப்படுவது இறைவனின் மென்மை அன்றி வேறல்ல. நபியில் கமழ்வது தெய்வீக மணம் அன்றி வேறல்ல.

Image result for sufi with rose 
 
      இறைவனால்தான் பூவும் மென்மையாக இருக்கிறது. இந்த ஞானம் தோன்றித்தான் தாயுமானவர் பூசைக்குப் பூப்பறிக்கச் சென்றவிடத்தில் பூவிலேயே இறைவனை உணர்ந்தார். “பார்க்கும் மலரூடு நீயே இருத்தி” என்று பரவசத்துடன் பாடினார்.
     
 இறைவன் பூவினும் மெல்லோன் என்று சொல்லலாம்தான். ஆனால், பூவை விடவும் மென்மையான விசயம் ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

      ”மலரினும் மெல்லிது காமம் / சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்” என்று சொல்லி வியக்க வைக்கிறார் அவர்.

      ’காமம்’ இன்று ஓர் ஆபாச வார்த்தை ஆகிவிட்டது. முப்பால் தந்த வள்ளுவர் தம் நூலின் மூன்றாம் பாலுக்குக் காமத்துப் பால் என்றே பெயர் சூட்டினார். அவர் காலத்தில் காமம் என்பது காதலின் மலர்ச்சி. அது வெறும் உடற் கிளர்ச்சி அல்ல.

      வள்ளுவர் மெய்ப்பொருள் காணும் அறிவு பெற்றவர். காமம் என்னும் ’மெய்’ப்பொருளில் இறைமை என்னும் மெய்ப்பொருளின் ஜோதி கண்டவர். அறிவுடையார்க்குக் காமம் என்பது பால். அறிவிலார்க்குக் காமம் என்பது கள். 

’பால் போல கள்ளும் உண்டு; நிறத்தாலே ரெண்டும் ஒன்று’ என்பார் கண்ணதாசன். ஒன்று சித்தம் அளிப்பது. மற்றது சித்தம் அழிப்பது. ஒன்று போதை போன்ற போதம். மற்றது போதம் போன்ற போதை. 

”மெல்லிது...” என்பதை tender என்று ஜி.யூ.போப்பும் ‘soft’ என்று கவியோகி சுத்தானந்த பாரதியும் ஆங்கிலம் ஆக்கியுள்ளனர். எனினும், மெல்லிது என்னும் சொல்லின் நுட்பமான அர்த்தம் இச்சொற்களிலும் மேலும், delicate, gentle போன்ற சொற்களிலும் வெளிப்படவில்லை என்று ஆங்கிலப் புலமை ஆழங்காற்பட்ட அறிஞர் தி.ந.ராமச்சந்திரன் சொல்கிறார். ’மெல்லிது’ என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் சாத்தியமல்ல என்னும் முடிவுக்கு வந்து, ”மெல்லிது மெல்லிது மெல்லிது. வள்ளுவன் சொன்ன சொல்லிது சொல்லிது சொல்லிது” என்று அமைகிறார்.

பூக்களில் மிகவும் மென்மையான பூ எது? அனிச்சம் என்று கூறுகிறது தமிழ். எவ்வளவு மென்மை? “,மோப்பக் குழையும் அனிச்சம்” என்கிறார் வள்ளுவர். அதாவது, அனிச்சம்பூ முகர்ந்து பார்த்தாலே வதங்கிவிடுமாம்.

மிகவும் மென்மையாகத் தொடுவதை ஆங்கிலத்தில் feather touch என்று சொல்லும் வழக்குண்டு. பறவைகளின் இறகுகளில் மென்மையானது அன்னத்தின் இறகு போலும். அதன் உடலிலிருந்து தானாய் உதிர்ந்த இறகுக்குத் தூவி என்று பெயர்.  

Image result for feet detail painting 
Detail - "Gentle Spring" by Fredrick Augustus Sandy.
 
அனிச்சம் என்னும் பூவும், அன்னத்தின் தூவியும் பெண்களின் பாதத்தில் நெருஞ்சி முள் போல் குத்தும் என்கிறார் வள்ளுவர். அவர்களின் பாதங்கள் அவ்வளவு மென்மையாம்!

“அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்” (1120).

மலரினும் மெல்லிது காமம். பூவினும் மென்மையள் பெண்.

இறைவனால்தான் பெண் மென்மையாக இருக்கிறாள்.

இசை மென்மையானது. இறைவன் இசையினும் மென்மையானவன். இறைவனால்தான் இசை மென்மையாக இருக்கிறது.

குழந்தையின் மூச்சு மென்மையானது. இறைவன் குழவியின் மூச்சினும் மென்மையானவன். இறைவனால்தான் சிசுவின் மூச்சு மென்மையாக இருக்கிறது.

எதைச் சொன்னாலும் இப்படிப் போய்க்கொண்டேதானே இருக்கும். இறைவன் யாதினும் மெல்லோன். அதை அவரவர் தம் அறிவு நிலைக்கேற்ப சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.

கிறித்துவ ஞான மரபில் தோன்றிய புனிதர் சியனாவின் கேத்தரீன் ஒரு மென்மையான விஷயத்தைச் சொல்கிறார்: முத்தம்!

Image result for virgin and child auguste ernest hebert 
"VIrgin and the Child" by Antoine Auguste Ernest Herbert.

அது காதலியின் முத்தம் அல்ல. அதைவிடவும் அழகான ஆழமான ஒரு முத்தத்தை முன்வைத்து அவர் பேசுகிறார். அதைப் படித்தபோது ஒரு நொடி என் மூச்சு நின்றுவிட்டது!

”God’s heart is more gentle than the Virgin’s first kiss upon the Christ” என்கிறார் அவர்.

”இறைவனின் இதயம்
மென்மையானது,
ஏசுவின் மீது
கன்னி (மேரி) இட்ட
முதல் முத்தத்தினும்.”
                                                                                               

No comments:

Post a Comment