Saturday, September 9, 2017

ஒரு சூஃபியின் டைரி - 8



தெய்வீக அரசவைக்கு (#54-56)
Image result for blue light sufi 
painting by Emine Tokmakkaya.
 
#54 இறைத்தூதர்களுடன் சவாரி செய்தல்
      நமது இறைத்தூதர் (ஸல்...) அவர்களையும் இதர இறைத்தூதர்களையும் தீர்க்கதரிசிகளையும் அனைத்து ஞானிகளையும் கண்டேன். அவர்களெல்லோரும் ஒட்டகைகள் மீது இவர்ந்து வந்தார்கள். நான் இறைத்தூதர் (ஸல்...) அவர்களுக்கு வலதுபுறம் சவாரி செய்து வந்தேன். அவர்களின் ஆடைகள் பொன்னாலும் முத்துக்களாலும் ஆகியிருக்கக் கண்டேன். அவர்கள் அனைவரும் ஓருடல் போல் தோன்றினர், தீயின் நடுவில் ஓர் தூய செம்பொன் போன்று, காற்றில் கிழித்துச் செல்லுவது போன்று. காற்றிலொரு வெண்புறாவைப் போல் ஜிப்ரீல் அவர்கள் மக்களை வழிநடத்திடக் கண்டேன். கூடுகையில் விரையும் படைவீரர்களைப் போல் அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டு விரைந்து செல்லக் கண்டேன். நானெனது கூட்டாளிகளை நினைவு கூர்ந்து அழைத்தேன். அவர்களது நிலைகளின் ஆற்றல்களுக்கேற்ப, அவர்களை அருகிலும் தொலைவிலும் கண்டு அப்பால் திரும்பிக்கொண்டேன். என்னுடன் ஒருவர் மட்டும் சவாரி செய்து வந்தார். அவரின் ஆடை நீல ஒளியால் ஆனது போல் இருந்தது. அது போல் நான் கண்டதே இல்லை. தனது குதிரை என்னை எட்டிப் பிடிக்கும்படிச் செய்தார். தனது புரவியின் கடிவாளத்தை அத்தனை அழகாக அவர் பிடித்திருந்தார். அவர் என்னுடன் பேசினார்.

Related image 
sufi whirling painting by Emine Tokmakkaya.
 
#55 இறை பிரசன்னத்தை அணுகுதல்
      இறைவன் நிலைநிறுத்தியிருந்த சக்தியின் பிரசன்னத்தை யாம் அடைந்தோம். இறைவன் எமக்கு அவனது சந்திப்பை வழங்கினான். எமக்கு அவன் அமைதி நல்கினான். அதன் பின் நான் கடவுளின் படைப்புக்களில் மேலும் பலவற்றைக் கண்டேன். இறைவன் நாடிய காலம் கடந்து போகும்வரை வியப்பிலாழ்ந்து தனித்திருந்தேன். மேலான இறைவன் எனக்கு மகத்துவத்தின் திரைகளைத் திறந்தான். அத்திரைகளுக்கு அப்பால் நானொரு மகத்துவத்தை வல்லமையை ஆற்றலை மாட்சிமையைக் கண்டேன். பெருங்கடல்களையும் ஒளிகளையும் கண்டேன். அவை எல்லாம் படைப்புக்களுக்குக் காட்டிட இயலாதன. மருண்டு நிற்கும் ஓர் இரவலனைப் போல் நான் மகத்துவத்தின் வாசலில் நின்றேன். மகத்துவத்தின் பலகணியிலிருந்து அவன் என்னிடம் பேசினான். ’இரவலனே! இங்கே எப்படி வந்தாய்?’ என்றான். அவனை நோக்கி நான் விரிவுணர்ந்தேன். “என் இறைவா! என் நண்பா! என் ரட்சகா! உன் உதவி தாராளம் தயை ஆகியவற்றால் இங்கு வந்தேன்” என்றேன்.

Related image 
sufi gathering in sudan.
 
#56 இறையருள்களுக்கு அர்ப்பணம்
      என் கடந்த காலத்தில் நடந்தனவாக இவற்றையே நான் நினைவு கூர்கிறேன். நான் மறந்து போனவற்றை எல்லாம் நினைவு கூர்வேன் எனில் அவை பல நூற்களின் பக்கங்களை நிரப்பிவிடும். இப்போதெனக்கு ஐம்பத்தைந்து வயது. இறைவனின் நாட்டத்தால், எனது வாலிபம் முதல் இந்நாள் வரை, ஒரு பகலோ ஓர் இரவோ மறைவுலகின் ஒரு திரைநீக்கமேனும் இல்லாமல் கழிந்ததில்லை. மாபெரும் சாட்சியங்களையும் நித்தியமான பண்புகளையும் இறைத்தூத ஏற்றங்களையும் மீண்டும் மீண்டும் நான் கண்டேன். அவை யாவும் மேலான இறைவன் என் மீது கொண்ட கருணையிலிருந்து வந்தவை. அவன் தான் நாடியோருக்குத் தருகின்றான். “திண்ணமாக அருள் அல்லாஹ்வின் கையிலுள்ளது. அதனை அவன் தான் நாடியோருக்குத் தருகின்றான்” (குர்ஆன்:3:73). “அல்லாஹ் தன் அருளுக்குத் தான் நாடியோரைத் தேர்கின்றான்” (குர்ஆன்:2:105). இப்படித்தரங்கள் கொண்டு தனது தூதர்களையும் நேசர்களையும் மேன்மைப்படுத்தி வைக்கும் இறைவனுக்கே எல்லாப் புகழும். தத்துவவாதிகள் [அவர்களை விட்டும் இவ்வுலகை அல்லாஹ் தூய்மைப்படுத்துவானாக!] கூறுவது போல் அல்லாது, காரணமோ தோற்றுவாயோ ஏதுமின்றியும் அவர்களின் கடுமுயற்சி அல்லது கட்டுப்பாட்டிற்காக என்றல்லாது இதனை அவன் செய்கிறான். இறையுதவி கொண்டு இனி நான் திரைநீக்க நிகழ்வுகள் பற்றியும், சாட்சியாதலின் ரகசியங்கள் பற்றியும், தெய்வீக அரசாட்சியின் அற்புதங்கள் பற்றியும், வானவருலகின் பிரதேசங்கள் பற்றியும் நேய உரையாடல்கள் பற்றியும், பரவசங்களில் தோன்றுவன குறித்தும் எழுதுவேன், இறைவன் நாடினால். அதில் எனக்கு அவனே போதுமானவன், மேலும், ”பரஞ்சாட்ட எத்தனைச் சிறந்தோன்!” (குர்ஆன்:3:173).

No comments:

Post a Comment