4.09.2011 தேதியிட்ட ’கல்கி’யில் நாகூர் ரூமி எழுதியுள்ள “பிருந்தாவனில் வந்த கடவுள்” என்னும் சிறுகதை வெளியாகியுள்ளது. கல்கி பத்திரிகையை நான் கடைசியாகப் பார்த்தது இருபது வருடங்களுக்கு முன் சிங்கராச்சாரி என்னும் ’சிங்கம் மாமா’ வீட்டில். இந்தக் கதையை நான் நாகூர் ரூமியின் இணைய தளத்தில்தான் படித்தேன். தலைப்பே முஸ்லிம்களின் மனதிற்கு அலர்ஜியாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. கண் கண்ட கடவுள், காது கேட்ட கடவுள், நாவு ருசித்த கடவுள் என்றெல்லாம் ஒரு முஸ்லிம் பேச முடியாதல்லவா? இந்து மதத்தில் அப்படி அல்ல. “அன்னம் பிரஹ்மம்” என்று ருசிக்கலாம். உண்ணும் நீர், வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று சிலாகிக்கலாம். அங்கு கதையே வேறு. இதய தெய்வம் என்று ஒருவரைச் சொல்லலாம். அப்படிச் சொல்லப்பட்டவருக்கே ஒரு கிட்னி தெய்வம் தேவைப்படும் நிலை ஏற்படலாம்.
ஆனால் ஒரு முஸ்லிம் இப்படி எழுதினால் ‘உம்மா’ அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காதல்லவா? ’நாகூர் ரூமி இணைவைத்து விட்டார்’ என்னும் ஃபத்வாக்கள் தாங்கிய கண்டனங்கள் முக்கியமான முஸ்லிம் பத்திரிகைகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன். ஹெச்.ஜி.ரசூல் எழுதிய “மைலாஞ்சி” என்னும் கவிதை நூல் சில வருடங்களுக்கு முன் அலப்பரையைக் கிளப்பியபோது அப்படித்தான் ’சிந்தனைச் சரம்’ இதழில் அது குறித்து ஒரு தொடர் விவாதமே நடந்தது. “ரூமி எழுதியிருப்பது பச்சை ஷிர்க்” என்று ஒருவர் சொல்ல, அது பச்சை ஷிர்க்கா இல்லை சிவப்பு ஷிர்க்கா இல்லாவிட்டால் வேறு ஏதாவது வண்ணத்தில் அமைந்த ஷிர்க்கா என்பது பற்றி மார்க்க மேதைகள் ஆய்வு மேற்கொள்ளலாம். இப்போதுதான் கலர் கலராக ஷிர்க்கை அடையாளம் காணும் அளவுக்கு ’ஷிர்க்காலஜி’ முத்திவிட்டதே!
இந்தக் கதை கலிகாலப் பத்திரிகையில் வெளியாகி இருப்பது வேறு ஒரு ஆய்வுக் கோணத்தை உருவாக்கித் தருகிறது. ”அவாள் பத்திரிகை ஆயிற்றே… அப்படியானால்?... சிந்தித்துப் பார் தம்பி, நாகூர் ரூமி பார்ப்பன வலையில் சிக்கிவிட்டார் என்பதைத்தானே இது காட்டுகிறது?” என்று யாராவது ஒரு அபூX கருத்து கூறலாம் அல்லவா?
’பிருந்தாவனில் வந்த கடவுள்’ என்னும் தலைப்பைப் பார்த்தவுடன் புதுமைப் பித்தன் எழுதிய ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ என்னும் சிறுகதை என் நினைவுக்கு வந்தது. அதில் கடவுள் ரயிலில் வந்து இறங்கி ஒரு ரிக்ஷாவில் பயணம் செய்வதாக அவர் எழுதியிருப்பார். “கடவுள் ஆதாமுடன் நடந்தார்” – GOD WALKED WITH ADAM என்று பைபிளில் ஒரு வாசகம் உண்டு. நூத்துக்கு ஒரு பேச்சு! ஆதாமுடன் அவர் நடக்கும்போது, பின் அவர் ஏன் ரிக்ஷாவில் ஏறிச் செல்லக்கூடாது என்று புதுமைப் பித்தன் நினைத்தாரோ என்னவோ? அந்தக் கடவுள்தான் இப்போது பிருந்தாவனில் ரிசர்வ் செய்துகொண்டு வந்துவிட்டாரா?
நாகூர் ரூமி எழுதிய சிறுகதையின் சுருக்கம்:
அமீர் என்பவன் பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸ்ஸில் பயணிக்கிறான். படிப்பதற்காக ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ”தெரிந்ததிலிருந்து விடுதலை” என்னும் நூலை எடுத்துக் கையில் வைத்தவுடன் அவனுக்கு எதிரே இருந்தவர் அந்த நூலை முன்வைத்துப் பேசத் தொடங்குகிறார். இருவருக்கும் கருத்து வேறுபடுகிறது. அந்த ஆசாமி தன் கட்சியை ருஜுப்படுத்த தொடர்ந்து விவாதித்துக் கொண்டே வருகிறார். இரண்டு மணிநேரம் விவாதம் நடக்கிறது. அப்போது அங்கே ஒரு சிறுவன் பிச்சை எடுத்துக் கொண்டு வருகிறான். அவனை நாகூர் ரூமி இப்படி வருணிக்கிறார்:
”ஒரு சின்ன பையன். ஒரு ஐந்தாறு வயதுக்குள்தான் இருக்கும். ஒரு காலியான பிஸ்லேரி பாட்டிலின் மீது ஏறி அதை இழுத்து இழுத்து சவாரி செய்துகொண்டே வந்தான். ஊனமுற்ற சின்னப்பையன். கூட யாருமில்லாமல் தனியாகத்தான் பிச்சை கேட்டுகொண்டே வந்தான். பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது. ஒல்லியான தனது கைகளை தூக்கிக்காட்டி “பசிக்கிது” என்று சொல்லிக்கொண்டே வந்தான். சிலர் சில்லரை போட்டனர். சிலர் சும்மா பார்க்காதமாதிரி இருந்தனர். அவனுக்கு ஏதாவது பணம் தரலாம் என்று எண்ணி அமீர் தன் தோள்பையைத் திறந்து காசைத்தேடியபோதுதான் அது நடந்தது.”
என்ன நடந்தது? அதாவது, அமீரின் சீட்டில் பக்கத்தில் இருந்தவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ’அம்மா’ அந்தச் சிறுவனைத் தூக்கி அமரவைத்து அவனுடைய முகத்தை அலம்பித் துடைத்துவிட்டு அவனுக்குச் சோறு பிசைந்து ஊட்டிவிடுகிறாள். அக்காட்சியை எல்லோரும் அதிசயித்துப் பார்க்கிறார்கள். பிறகு மீண்டும் அந்தச் சிறுவனை அவனுடைய வாகனத்தில் இறக்கிவைத்து அனுப்புகிறாள். ஸ்டேஷன் வந்ததும் அவள் பாட்டுக்கு இறங்கிச் சென்றுவிடுகிறாள்.
இந்தக் கதை முடிவில் நாகூர் ரூமி இவ்வாறு எழுதுகிறார்:
”கடவுள் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விகளையும் விவாதங்களையும் அழித்துவிட்டு அவள் சென்றிருந்தாள். இதுதான் சமயம் என்று அமீரும் ஜே.கே.யின் ரசிகரிடமிருந்து தப்பித்து வெளியில் வந்தான்.ஆனால் பட்டுப்புடவை கட்டி நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து தன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த கடவுளோடு பிருந்தாவனில் பிரயாணம் செய்வோம் என்று அமீர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அடிடாஸ் பையோடு கடவுள் இறங்கிப் போன திசையையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்றான்.”
கதையைப் படித்து முடித்ததும் நான் ஒரு நிமிஷம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். “பிருந்தாவனில் வந்த கடவுள்” என்று நா.ரூ யாரைச் சொல்கிறார்? உணவு ஊட்டி விட்ட ’அந்த அம்மா’வை. அவர் அப்படிச் சொல்லியிருப்பதில் எனக்கு அவ்வளவு திருப்தி ஏற்படவில்லை. நானாக இருந்தால் ‘பிருந்தாவனில் வந்த கடவுள்’ என்று அந்தப் பிச்சைக்காரச் சிறுவனைத்தான் சொல்லியிருப்பேன்! அந்த டைட்டிலுக்கு அவன்தான் இன்னும் பொருத்தமானவன் என்பது என் கருத்து!
இந்தக் கருத்து என் மனதில் தோன்ற அடிப்படையாக இருந்தது ஒரு ஹதீஸ் (நபிமொழி). அது இது:
”அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:- நபி (ஸல்) கூறினார்கள் நிச்சயமாக அல்லாஹுத்தஆலா மறுமை நாளில் (அடியானை நோக்கி) கூறுவான்:- ஆதமுடைய மகனே! நான் நோயுற்று இருந்தேன். நீ நோய் விசாரிக்க வரவில்லையே?
அடியான்:- நீயே அகிலங்களின் இரட்சகனாக இருக்க உன்னை நான் எவ்வாறு நோய் விசாரிப்பேன்?
அல்லாஹ்:- எனது இன்ன அடியான் நோய் வாய்ப்பட்டிருந்தான். அவனை நீ நோய் விசாரிக்க வரவில்லை. அவனை நீ நோய் விசாரித்திருந்தால் நிச்சயமாக அந்த நோயாளியிடத்தில் (உள்ளமையின் அடிப்படையில்) என்னைத்தானே பெற்றிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?
அல்லாஹ்:- ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு தருமாறு வேண்டினேன். நீ எனக்கு உணவளிக்கவில்லையே?
அடியான்:- ரப்பே! நீயே அகிலங்கள் அனைத்தின் ரப்பாக இருக்க நான் எப்படி உனக்கு உணவளிப்பேன்?
அல்லாஹ்:- எனது இன்ன அடியான் உன்னிடத்தில் உணவு கேட்டான். நீ அவனுக்கு உணவளிக்கவில்லை. நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அவனிடத்தில் நீ என்னைத்தானே பெற்றிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?
அல்லாஹ்:- ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் குடிக்க கேட்டேன். நீ எனக்கு நீர் குடிப்பாட்டவில்லையே?
அடியான்:- ரப்பே! நீயே அகிலங்கள் அனைத்தின் இரட்சகனாக இருக்க நான் உனக்கு எவ்வாறு நீர் குடிப்பாட்டுவேன்?
அல்லாஹ்:- எனது இன்ன அடியான் உன்னிடத்தில் நீர் குடிக்க கேட்டான். நீ அவனுக்கு நீர் குடிப்பாட்டியிருந்தால் அவனிடத்தில் நீ என்னைத் தானே பெற்றிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?
(முஸ்லிம் ஷரீப், மிஷ்காத் பக்கம் 134)
[இந்த ஹதீஸை மௌலவி அல்ஹாஜ் ஷைக் அப்துல் காதிர் மன்பஈ (‘இர்ஃபானீஷாஹ் நூரி’) அவர்கள் எழுதிய “குர்ஆன் ஹதீஸ் ஒளியில் அல்லாஹ் நம்முடன்” என்னும் நூலில் இருந்து அப்படியே கொடுத்துள்ளேன் (பக்: 40,41).]
(மேலும்: அல்-அதபல் முஃப்ரதல் புஹாரி, ஹதீஸ் எண்:517).
(இந்த ஹதீஸை ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்டுள்ள ‘ஸஹீஹ் முஸ்லிம்’ தொகுப்புக்களில் கண்டுபிடிப்பது பெரும்பாடாக இருந்தது. இணையத்தில் உள்ள எல்லா ஹதீஸ் தளங்களிலும் இந்த ஹதீஸ் முஸ்லிம் ஷரீஃபில் 32-ம் நூலான ‘கிதாபல் பிர்ரி வஸ்ஸிலதி வல் ஆதாப்’ என்பதில் 11-ம் பாடமான “பாபல் ஃபள்லி இயாதத்தில் மரீள்” (நோயாளிகளை நலம் விசாரிப்பதன் சிறப்பு) என்பதில் அமைந்துள்ள 6232-ம் ஹதீஸ் என்றே குறிப்பிடுகின்றன. ரஹ்மத் அறக்கட்டளையின் ஸஹீஹ் முஸ்லிமில் இந்த ஹதீஸ் நான்காம் பாகத்தில் 45-வது நூலாகவும் (கிதாப் என்பது அத்தியாயம் எனப்பட்டுள்ளது), 13-ம் பாடமாகவும், அதில் ஹதீஸ் எண்: 5021 என்பதாகவும் அமைந்துள்ளது.)
இந்த நபிமொழியில் நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. கொஞ்சம் காது கொடுங்கள் சகோதரர்களே!
”என் அடியான் நோய்ப்பட்டிருந்தான். அவனை நீ ஏன் நலம் விசாரிக்கவில்லை?”, “என் அடியான் பசியோடு வந்து உணவு கேட்டான். அவனுக்கு நீ ஏன் உணவளிக்கவில்லை?”, “என் அடியான் தாகத்தோடு வந்து நீர் கேட்டான். அவனுக்கு நீ ஏன் நீர் புகட்டவில்லை?” என்பதாக அல்லாஹ் கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால், கேட்கப்பட்ட அடியானுக்கு எந்தக் குழப்பமும் வந்திருக்காது. ஏதாவது சாக்குப் போக்கு சொல்லிச் சமாளிக்க முயன்றிருக்கலாம்.
ஆனால் அல்லாஹ் எப்படிக் கேட்கிறான் என்று பாருங்கள்: “நான் நோயுற்று இருந்தேன். நீ நோய் விசாரிக்க வரவில்லையே?”, “நான் உன்னிடத்தில் உணவு தருமாறு வேண்டினேன். நீ எனக்கு உணவளிக்கவில்லையே?”, “நான் உன்னிடத்தில் தண்ணீர் குடிக்க கேட்டேன். நீ எனக்கு நீர் குடிப்பாட்டவில்லையே?”
இந்த இடத்தில், இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்கள் சொன்னதாதத் திருக்குர்ஆன் கூறும் வசனங்கள் நம் கவனத்திற்குரியவை:
“நிச்சயமாக இவை (சிலைகள்) எனக்கு விரோதிகளே,
அகிலங்களின் இறைவனைத் தவிர.
(ஃப இன்னஹும் அதுவ்வுல்லீ இல்லா றப்பல் ஆலமீன்)
அவனே என்னைப் படைத்தான், பின்னும்
அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கின்றான்.
(அல்லதீ ஃகலகனீ ஃபஹுவ யஹ்தீனீ)
அவனே எனக்கு உணவளிக்கின்றான்,
அவனே எனக்குக் குடிப்பாட்டுகின்றான்.
(வல்லதீ ஹுவ யுத்இமுனீ வ யஸ்கீனீ)
நான் நோயுற்ற காலத்தில்,
அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.
(வ இதா மரிள்து ஃபஹுவ யஷ்ஃபீனீ)
அவனே என்னை மரிக்கச் செய்கிறான், மேலும்
அவனே என்னை உயிர்ப்பிப்பான்.
(வல்லதீ யுமீதுனீ த்ஸும்ம ய்ஹ்யீனீ)”
(26:77-81)
’அகிலங்களின் ரட்சகன்’ (றப்புல் ஆலமீன்) என்று அல்லாஹ்வைக் குறிப்பிட்டு, வருணனை (தஃரீஃப்) செய்து அதன் விளக்கங்களாக, அதாவது அல்லாஹ்வுடைய ரட்சகத் தன்மையின் (ருபூபிய்யத்) விளக்கங்களாக இப்றாஹீம் (அலை) அவர்கள் சொன்னவற்றைக் கவனியுங்கள். அல்லாஹ்தான் படைப்பவன், நேர்வழி காட்டுபவன், உணவளிப்பவன், குடிப்பாட்டுபவன், குணப்படுத்துபவன், மரிக்கச் செய்பவன், உயிர்ப்பிப்பவன் என்று சொல்கிறார்கள்.
இந்த விளக்கம் எல்லாம் மேற்கண்ட ஹதீஸில் வரும் அடியானுக்கும் தெரியத்தான் செய்கிறது. அதனால்தான் அல்லாஹ் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவன் திகைத்துப் போய், ”நீயே அகிலங்களின் இரட்சகனாக இருக்க உன்னை நான் எவ்வாறு நோய் விசாரிப்பேன்?” என்றும், ”ரப்பே! நீயே அகிலங்கள் அனைத்தின் ரப்பாக இருக்க நான் எப்படி உனக்கு உணவளிப்பேன்?” என்றும், ”ரப்பே! நீயே அகிலங்கள் அனைத்தின் இரட்சகனாக இருக்க நான் உனக்கு எவ்வாறு நீர் குடிப்பாட்டுவேன்?” என்றும் கேட்கிறான். (யா ரப்பி, கைஃப அஊதுக / உத்இமுக / அஸ்கீக, வ அன்த றப்புல் ஆலமீன்.) அதாவது நோய்க்கு நிவாரணம் அளித்தல், உணவளித்தல் மற்றும் நீர் புகட்டல் என்னும் ரட்சகத்தன்மைகள் அல்லாஹ்வுடையவை என்று அறிந்திருப்பதால்தான் அந்த அடியான் “றப்புல் ஆலமீன்” என்னும் வருணிப்பைக் (தஃரீஃப்-ஐக்) குறிப்பிட்டுப் பேசுகிறான்.
இதில் விசேஷமாக (26:80)-ஆம் வசனத்தைக் கவனியுங்கள். “நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான். (வ இதா மரிள்து ஃபஹுவ யஷ்ஃபீனீ)” என்று நோயுற்றதைத் தன் பக்கத்தில் சாட்டிச் சொல்லியிருக்கிறார்கள். “அல்லாஹ்வே என்னை நோயாக்கினான்” என்றுகூட சொல்லவில்லை. ஆனால் மேற்சொன்ன ஹதீஸில் அல்லாஹ் தன் அடியானைப் பார்த்து “ஆதமுடைய மகனே! நான் நோயுற்று இருந்தேன். நீ நோய் விசாரிக்க வரவில்லையே?” என்று கேட்பான் என்பதாக வந்துள்ளது!
இதில் நாம் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். “ஃபுலான அடியார் ரொம்ப சீரியஸாகி ஐ.சி.யுவில் இருக்கிறார். போய் அவரைப் பார்த்து நலம் விசாரித்து வந்தேன்” என்று சொல்லத்தான் நமக்கு உரிமை உண்டு. “அல்லாஹ்வுக்கு சீரியஸாகி விட்டது (நவூதுபில்லாஹி), நான் போய் நலம் விசாரித்து வந்தேன்” என்பதாகவெல்லாம் பேசக் கூடாது. அதற்கு மேற்படி சஹீஹான ஹதீசை ஆதாரம் காட்டி வாதாடவும் கூடாது.
மேற்காணும் ஹதீஸ் ஒரு நுட்பமான விஷயத்தின் பக்கம் நம் கவனத்தைத் திருப்புகிறது. அல்லாஹ்தான் நிவாரணம் தருபவன், உணவளிப்பவன், குடிப்பாட்டுபவன் என்று அவனது ரட்சகத்தன்மையை (ருபூபிய்யத்), அவனது ஷாஃபீ, ரஸ்ஸாக் என்னும் பண்புகளை (சிஃபாத்) மட்டும் அறிந்து வைத்திருப்பது போதாது. அவனது சுயம் (தாத்) உள்ளமை (உஜூது) பற்றிய அறிவு அடியானுக்கு அவசியம். அதைத்தான் அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்க்கிறான் என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது. அல்லாஹ்வின் ரட்சகத்தன்மையை மட்டும், பண்புகளை மட்டும் அறிந்திருப்பது அவனை அறிந்ததாக முடியாது. அல்லாஹ்வின் சுயத்தை (தாத்) அறிந்தவர்கள்தான் அவனை அறிந்தவர்கள் என்று சொல்ல முடியும்.
அதுமட்டுமல்ல, அவனது ரட்சகப் பண்புகளை ஆழ்ந்து சிந்திப்பதால் அவனது சுயம் (தாத்) பற்றி அறிய முடியும் என்பதையும் இந்த ஹதீஸ் காட்டுகிறது. பண்பு (சிஃபத்) என்பது சுயம் (தாத்)-இன் பக்கம் வழிகாட்டுவதாகவே உள்ளது. அதே சமயம், அல்லாஹ்வின் சுயத்தை, அவனது உள்ளமையை நாம் அதன் தனித்த தூய நிலையில் (தன்ஸீஹ்) ஒருபோதும் அறிய முடியாது. (”படைப்புக்கள் உள்ளமையின் வாடையைக் கூட ஒருபோதும் நுகர்ந்ததில்லை – அல்ஃகல்க் மா ஷம்மத் ராயிஹதல் உஜூது அபதன்” என்கிறார்கள் சூஃபி மகாஞானி இப்னுல் அரபி(ரஹ்)); அவனது சுயத்தை, படைப்புக்களின் சுயத்திற்கு அவன் பொருத்தமாக (ஐன் –ஆக) இருந்து அவற்றின் மூலம் அவன் தன் ரட்சகத் தன்மைகளை (சிஃபாத்தே ருபூபிய்யத்) வெளியாக்குகின்ற நிலை (தஷ்பீஹ்) கொண்டுதான் அறிய முடியும். இதையும் இந்த ஹதீஸ் சுட்டிக் காட்டுகிறது. எப்படி எனில், மேற்கண்ட ஹதீஸின் கட்டமைப்பை ஆழ்ந்து கவனியுங்கள்.
இந்த ஹதீஸ் கேள்வி-பதில் நிகழ்வாக அமைந்துள்ளது. சரியாகச் சொன்னால், கேள்வி-பதில்-விளக்கம் என்னும் அமைப்பில் உள்ளது. இன்னும் சரியாகப் பார்த்தால் கேள்வி- சந்தேகம்- விளக்கம் என்னும் அமைப்பில் உள்ளது. அதாவது, அல்லாஹ் கேள்வி கேட்கிறான் - அவன் எந்த அடிப்படையில் கேள்வி கேட்கிறான் என்பதே அடியானுக்கு விளங்காததால் அந்த அடியான் தான் அறிந்த நிலையில் இருந்து ஐயத்தை எழுப்புகிறான் – பின் அதற்கு அல்லாஹ் விளக்கம் சொல்கிறான்.
அல்லாஹ் உள்ளமை (உஜூது) அடிப்படையில் ஐனிய்யத்தின் படித்தரத்தில் கேள்வி கேட்கிறான்.
அடியானின் அறிவு ரட்சகப் பண்புகளின் (சிஃபாத்தே ருபூபிய்யத்) படித்தரத்தில் மட்டுமே இருப்பதால் அதை அவனால் கிரகிக்க முடியவில்லை.
பின் அல்லாஹ் தன் கேள்வியை தஷ்பீஹ் நிலையில் வைத்து விளக்குகிறான்.
நோயாளியை நலம் விசாரிப்பது, பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது, நீர் புகட்டுவது என்பதெல்லாம் நற்கருமங்கள்தான். ஆனால் இவற்றை வெறுமனே செய்வது மட்டுமோ, நோயாளியைப் பார்த்து ‘அல்லாஹ் உங்களுக்கு குணமளிப்பானாக’ என்று ஆறுதல் சொல்வது மட்டுமோ, அல்லது அவர் மீது ஆயத்துக்களை ஓதி ஊதிவிட்டுத் தன்னை பெரிய வணக்கசாலியாகக் காட்டிக் கொள்வது மட்டுமோ நற்கருமங்களின் நோக்கம் அல்ல. நற்கருமங்களின் ஒரே நோக்கம் என்ன என்பதை இந்த ஹதீஸ் காட்டுகிறது: அல்லாஹ்வை அடைவது! அந்த ஒரே நோக்கம் நிறைவேற வேண்டும் எனில் அல்லாஹ்வின் ரட்சகத்தன்மை பற்றிய அறிவு மட்டும் போதாது, அவனுடைய உள்ளமை பற்றிய அறிவும் வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸ் காட்டுகிறது.
அல்லாஹ்வின் ரட்சகப் பண்புகள் படைப்புக்களின் மூலமாகத்தான் வெளியாகின்றன என்பதை அறிவது மிக எளிது.
அல்லாஹ்தான் உணவளிக்கிறான். ஆனால் அது பல்வேறு படைப்புக்களின் வழியாகத்தான் வருகிறது. அதனால்தான் மேற்கண்ட ஹதீஸில் நீ ஏன் உணவளிக்கவில்லை, நீ ஏன் நீர் புகட்டவில்லை என்று அடியானைப் பார்த்துக் கேட்கிறான்.
அல்லாஹ்தான் படைக்கிறான். ஆனால் குழந்தைகள் எப்படி வருகின்றன? புனித இரவுகளில் வானிலிருந்து வானவர்கள் இறங்கி வருவது போல் படை படையாக இறங்கி வந்து அட்ரஸ் வைத்துக்கொண்டு அதனதன் வீடுகளுக்குச் சென்று தாய் தந்தையருக்கு நடுவில் படுத்துக் கொள்கின்றனவா? இல்லையே! அவை முதலிரவில் அல்லது அதற்கு அடுத்து ஏதேனும் ஒரு இரவில் (இரவாகத்தான் இருக்க வேண்டும் என்பதுமில்லை!) உருவாகின்றன. அல்லாஹ் என்ன செய்கிறான்? ஆணின் விந்தணுவைப் பெண்ணின் கருவறைக்குள் செலுத்துகிறான். அதைக் கருமுட்டையுடன் இணைக்கிறான். கருவை உருவாக்கிச் சன்னஞ் சன்னமாக வளர்க்கிறான். பக்குவத்தில் பிரசவமாக்கி வெளியேற்றுகிறான்.
இப்படியாக, அல்லாஹ்வின் ரட்சகப் பண்புகள் படைப்புக்களின் மூலமாகத்தான் வெளியாகின்றன என்பதை அறிவது மிக எளிது. ஆனால் அவனது உள்ளமை பற்றி அறிவது லேசுபட்டதல்ல. மனிதன் அதை அறிய வேண்டும் எனபதைத்தான் அல்லாஹ் எதிர்பார்க்கிறான். அதனால்தான் உணவுகொடுப்பவனில், நலம் விசாரிப்பவனில் தன்னை வைத்துக் கூறாமல் நோய்ப்பட்டவனில், பசி கொண்டவனில் தன்னை வைத்துக் கூறியுள்ளான்.
இன்னொன்றையும் கவனியுங்கள். “நான் நோய்ப்பட்டிருந்தேன்” என்று சொல்லும் அல்லாஹ் அடியான் நோய்ப்பட்டதை மறுக்கவில்லை. அதை விளக்கும் போது “என் அடியான் நோய்ப்பட்டிருந்தான்” என்று சொல்கிறான்.
“நான் உணவு கேட்டேன்” என்று சொல்லும் அல்லாஹ் அடியான் கேட்டதை மறுக்கவில்லை. அதை விளக்கும்போது “என் அடியான் உணவு கேட்டான்” என்று சொல்கிறான்.
“நான் நீர் கேட்டேன்” என்று சொல்லும் அல்லாஹ் அடியான் கேட்டதை மறுக்கவில்லை. அதை விளக்கும்போது “என் அடியான் நீர் கேட்டான்” என்று சொல்கிறான்.
அடியான் கேட்டதும் அல்லாஹ் கேட்டதும் இருவேறு நிகழ்வுகள் அல்ல. ஒரே நிகழ்வு!
அடியான் கேட்டதிலேயே அல்லாஹ் கேட்டது இருக்கிறது!
இது எப்படி என்பதை அறிவதுதான் ஏகத்துவ அறிவு (இல்முத் தவ்ஹீத்). அதற்கு ரட்ச்கப் பண்புகளை அறிவது மட்டும் போதாது. அல்லாஹ்வின் சுயம் (தாத்) மற்றும் உள்ளமை (உஹூது) பற்றிய அறிவு அவசியம்.
இந்த வாசக அமைப்பைப் போன்றே பின்வரும் திருக்குர்ஆன் வசனம் அமைந்துள்ளதைக் கவனிக்கவும்:
”அவர்களை நீங்கள் வெட்டவில்லை (ஃபலம் தக்துலூஹும்)
மாறாக, அல்லாஹ்தான் அவர்களை வெட்டினான் (வலாகின்னல்லாஹ கதலஹும்)
நீங்கள் எறியவில்லை (வமா ரமைத்த)
நீங்கள் எறிந்தபோது (இத் ரமைத்த)
மாறாக அல்லாஹ்வே எறிந்தான் ( வலாகின்னல்லாஹ ரமா)”
(8:17)
மேற்கண்ட திருவசனத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதல் பகுதி எதிரிகளை வெட்டியதைப் பற்றியது. இரண்டாம் பகுதி எதிரிகள் மீது நபி (ஸல்) அவர்கள் பொடிக் கற்களை எறிந்ததைப் பற்றியது. முதற்பகுதி வாசக அமைப்பிலிருந்து இரண்டாம் பகுதியின் வாசக அமைப்பு சற்றே வேறுபட்டுள்ளது.
இரண்டாம் பகுதி வாசக அமைப்பைக் கவனியுங்கள். ’நீங்கள் எறியவில்லை’ என்று சொல்லி நபியின் செய்யவில்லை என்று அல்லாஹ் மறுக்கிறான் (நஃபீ), உடனே ’நீங்கள் எறிந்தபோது’ என்று சொல்லி நபியின் செயலை உறுதிப்படுத்துகிறான் (இஸ்பாத்). இப்போது நபி எறியவில்லை என்று மட்டும் சொல்வதும் தவறு, நபிதான் எறிந்தார்கள் என்று சொல்வதும் தவறு. மேலும் சொல்கிறான், “ஆனால் அல்லாஹ்தான் எறிந்தான்”. ஆக இவ்வாசகம் நஃபீ-இஸ்பாத்-ஐனிய்யத் என்னும் அமைப்பில் உள்ளது. இது ஒரே நிகழ்வைப் பற்றிய வசனம். நபியின் செயலே அல்லாஹ்வின் செயலாகவும் இருக்கிறது. ஆனால் நபி ஒருபோதும் அல்லாஹ் அல்ல. இது எப்படி என்று விளங்குவதுதான் ஏகத்துவ ஞானம்.
இப்போது 8:17-ஆம் வசனத்தின் முதற்பகுதி வாசக அமைப்பைக் கவனியுங்கள். “அவர்களை நீங்கள் வெட்டவில்லை” என்பதில் நபியின் செய்யவில்லை என்று அல்லாஹ் மறுக்கிறான் (நஃபீ), உடனே “ஆனால் அல்லாஹ்தாஹ் வெட்டினான்” என்று சொல்லி அதைத் தன் செயலாகச் சொல்லிவிடுகிறான். ஆக இந்த வாசகம் நஃபீ – ஐனிய்யத் என்னும் அமைப்பில் உள்ளது. இதில் “நீங்கள் வெட்டியபோது” என்பதாக இஸ்பாத் இல்லாதது ஏன்?
முதற்பகுதி பன்மையில் பேசுவது ஏன்? இரண்டாம் பகுதி ஒருமையில் பேசுவது ஏன்?
இக்கேள்விகளை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
அல்லாஹ்வை அகில உலகங்களின் ரட்சகன் (றப்புல் ஆலமீன்) என்று சொல்லி அதன் வருணிப்புக்களை இப்றாஹீம் (அலை) அவர்கள் சொன்னதான (26:77-81) திருவசனங்களை மேலே குறிப்பிட்டேன். அவர்களே ஐனிய்யத் என்னும் அடிப்படையில் அல்லாஹ்வின் உள்ளமை (உஜூது) மற்றும் சுயம் (தாத்) பற்றிச் சொல்லியுள்ள ஞான வாசகமும் திருக்குர்ஆனில் பதிவாகியுள்ளது.
“வானங்களையும் பூமியையும்
மாதிரியின்றிப் படைத்தவனின்
முகத்துடன் என் முகத்தை
முற்றிலும் ஆக்கிவிட்டேன்.
இல்லை நான்
இணைவைப்போரில்.
(இன்னீ வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ
ஃபதரஸ் சமாவாத்தி வல் அர்ள ஹனீஃபன்
வமா அனா மினல் முஷ்ரிகீன்)
(6:79)
மேற்காட்டப்பட்ட ஹதீஸின் கீழ் சூஃபி மகான் இர்ஃபானீ ஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள் பின்வரும் சுருக்கமான குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்கள்:
“இந்த ஹதீஸில் (ஃபவஜத்தனீ இன்தஹு) அவனிடத்தில் என்னையே பெற்றிருப்பாய் என்ற வாசகம் அய்னியத் (இறைவன் சிருஷ்டியுடன் சேர்ந்துள்ள நிலை), கைரியத் (இறைவன் சிருஷ்டிக்கு வேறாக உள்ள நிலை) இரண்டையும் தரிப்படுத்துகிறது. ‘நான் நோயாளியாக இருப்பேன்’ என்று அல்லாஹ் கூறவில்லை. நோயாளியில் என்னைப் பெற்றுக் கொள்வாய் என்று கூறியுள்ளான். அதாவது (ஜாதன் – உருவத்தைக் கவனித்து) நோயாளியை நீர் கண்டாலும் (உஜூதன் – உள்ளமையைக் கவனித்து) அவனில் நானே மௌஜூதாக (தரிப்பட்டவனாக) இருக்கிறேன் என்று கூறியுள்ளான்.”
(’குர் ஆன் ஹதீஸ் ஒளியில் அல்லாஹ் நம்முடன்’, பக்கம்:41).
அகப்பார்வை உள்ளவர்கள் நோயாளி மற்றும் பிச்சைக்காரன் போன்றவர்களில்கூட அல்லாஹ்வை அடைந்து கொள்வார்கள். அகக்குருடர்களோ நபி(ஸல்) அவர்களில்கூட அல்லாஹ்வை அடைந்துகொள்ள மாட்டார்கள்.
ரொம்ப அருமை...
ReplyDeleteசடனா எனக்கு புரிந்து விடவில்லை...
சிந்தனையை தான் தூண்டுகிறது...
உங்களின் பார்வையின்படியே புரிந்து கொள்வதில் எனக்கு சிரமம் இருக்கிறது. என்னுடைய தன்மை அந்த அளவில் தான் இருக்கிறது..
----------------
”முதற்பகுதி பன்மையில் பேசுவது ஏன்? இரண்டாம் பகுதி ஒருமையில் பேசுவது ஏன்?
இக்கேள்விகளை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.” -
ஏன் இப்படி...?
///இந்து மதத்தில் அப்படி அல்ல. “அன்னம் பிரஹ்மம்” என்று ருசிக்கலாம். உண்ணும் நீர், வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று சிலாகிக்கலாம். அங்கு கதையே வேறு.///
ReplyDeleteஆமாம். 'நமஸ்தே வாயோ! த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாசி' என்று என்று
அந்த க்ஷணத்திற்கு வாயுவை ப்ரம்மமமாக்கி நமஸ்கரிக்கலாம். அப்புறம் அக்னியை. வரிசையாக எதையெல்லாம் பார்க்கிறோமோ அதையெல்லாம் ப்ரம்மம் என்று சொல்லிவிட்டு, இதெல்லாம் இல்லையோ,வேறு ஏதோ ஒண்ணோ
என்று 'நேதி நேதி'க்கு வந்து விடலாம். யாரும் கோபிக்க மாட்டார்கள்.
'தேவலையே, நல்ல தேடல் இருக்கே'என்று பாராட்டுவார்கள்.இல்லாவிட்டால்
'குட்டி வேதாந்தம் குடியைக் கெடுக்கும்.பேசாம வேலையப்பாரு' என்று ஆப்பு வைத்துவிடுவார்கள்.
no asker! no teller!