”எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்க முடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில்கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக் கணங்களையே நீட்டி முடிவற்ற காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி” (ஜெயமோகன், “யட்சி”.)
மேற்காணும் வரிகளைப் படித்துக் கொண்டிருந்தபோது என் நினைவுகள் ஏழெட்டு வருடங்கள் பின்னோக்கிப் பாய்ந்து நண்பன் ரஃபீக்கின் அறையில் நின்றது. அது ஒரு மாலைப் பொழுது. நாங்கள் இளம் பேராசிரியர்களாக இருந்தோம். ரஃபீக் எனக்கு ஜூனியர். அப்போது அவன் அறையில் அரட்டை அடிப்பதற்காக தாஜ், உமர் மற்றும் ஃபைஸல் மற்றும் சிலர் இருந்ததாக ஞாபகம். எல்லோருமே அப்போது பேச்சுலர்ஸ். மனதின் ஈரமழைக் காட்டில் அழகின் சிரிப்பு சதா கவர்ச்சியுடன் ஒலித்துக் கொண்டிருக்கும் பருவம். மேசை மீது கிடந்த ஒரு வாரப்பத்திரிகையில் சொலித்துக் கொண்டிருந்த ஒரு யுவதியின் பிம்பத்தினடியாக பேச்சு தொடங்கி நகர்ந்தபோது அது என் மனதில் ஒரு ஆதாரமான கேள்வியில் வந்து நின்றுவிட்டது: “அழகு என்பது என்ன?”
நிச்சயமாக வரையறுத்துவிட முடியாத விஷயங்களில் இந்த அழகு என்பதும் ஒன்று என்பது நிச்சயம்தானே? அழகனுபவம் என்பது ஆளாளுக்கு மாறுபடுகிறது. அந்த அனுபவத்தின் அடிப்படை என்ன? என்பது போல் அரட்டை கொஞ்சம் சீரியசாகித் தத்துவத்திற்குள் நுழைந்துவிட்டது. நாங்கள் எல்லோருமே தத்துவத்தை ஒரு லாகிரி வஸ்து போல் அனுபவிப்பவர்கள் என்பதால் பேச்சின் திசையை யாரும் மாற்றவில்லை. எனவே அழகைப் பற்றிய விசாரம் கழுதை கெட்டால் குட்டிச்சுவரு என்பதுபோல் நேராக இறைவனிடம் போய் நின்றுகொண்டது.
இறைவனின் பிரதான பண்புகளில் ஒன்றாக அழகை முன்வைத்து உபநிஷத்தில் ரிஷிகள் பேசியிருக்கிறார்கள். “சத்யம் சிவம் சுந்தரம்” என்பது அவர்கள் வகுத்துத் தந்த சூத்திரம். “சத் சித் ஆனந்தம்” என்பது இன்னொரு சூத்திரம். இரண்டும் ஒரே கருத்தைத்தான் வெவேறு கலைச் சொற்களில் முன்வைக்கின்றன. அதாவது சுந்தரமும் ஆனந்தமும் தொடர்புடையவை. அழகின் விளைவு ஆனந்தம் என்பதில் அப்போது எங்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கவில்லை. ஆனால் இறைவனின் அழகு எத்தகையது?
”இறைவனின் அழகுதான் பிரபஞ்சம் எங்கும் வெளிப்படுகிறது. பிரபஞ்சத்தில் நாம் காணும் அழகு எதார்த்தத்தில் இறைவனின் அழகுதான்” என்று சூஃபிகள் கூறுகின்றார்கள். இருக்கட்டும். ஆனால் இறைவனின் அழகு எத்தகையது?
“திண்ணமாக அல்லாஹ் அழகன் (இன்னல்லாஹ ஜமீலுன்)
அவன் அழகை நேசிக்கிறான் (வ யுஹிப்புல் ஜமால்)”
என்னும் நபிமொழியின் மீது கவனம் விழுந்தது.
பத்திரிகையில் சொலித்துக்கொண்டிருந்த யுவதியின் ரசிகரான ஒரு நண்பர் சொன்னார், “இறைவனின் அழகுதான் எல்லாவற்றிலும் பிரதிபலிக்கிறது என்றால் இவளின் அழகு என்பதும் அதுதானே? அழகை இறைவன் நேசிக்கிறான் என்றால் இந்த அழகையும் அவன் நேசிக்கத்தானே செய்வான்?”
லாஜிக்கான ஒரு மடக்கு வைத்துவிட்டதாக நண்பர் கருதிக் கொண்டார். ஆனால் அதன் தர்க்கம் அப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது என்பதை அவர் அறியவில்லை.
இறைவனின் பார்வையில் அழகு என்பது எது? இறைவனின் பார்வை எத்தகையது என்பதை நாம் அறிய முடியுமா என்ன? அறியமுடியாது எனும்போது அவன் பார்வையில் அழகு என்பது எது என்று நாம் எப்படி அறிவது?
ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதனதன் ஜோடிதான் உச்ச அழகு. உலக அழகி / அழகன் என்னும் கான்செப்ட் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகள் பறவைகள் ஆகியவற்றுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு பன்றிக்கு இன்னொரு பன்றி அழகாகத் தெரியும். அது தன் ஜோடிப் பன்றியின்மீது தீரா மையல் கொண்டு ஆராக் காதலின் அவஸ்தையால் அலமந்து திரியும்ன் அல்லவா? களிற்றின் மனம் பிடியின் சௌந்தர்யத்தில் பிடிபட்டுப் போகிறது. சொறிநாய் ஒன்றும் தன் சோடியின் அழகில் வசமிழக்கும்.
நண்பரிடம் சொன்னேன், “மாப்ள, இந்த நடிகை உங்கள் பார்வையில் உலக அழகியாக இருக்கலாம். ஆனால் இவள் தெருவில் நடந்து சென்றால் உங்கள் வீட்டு நாய் தன் வாலைக்கூட ஆட்டாது. அதே சமயம் தெருவில் ஒரு சொறிநாய் ஓடினால் அதைப் பார்த்து வீட்டுநாய் மிகவும் பரபரப்படையும். உங்கள் பார்வையில் இவள் அழகு. நாயின் பார்வையில் அது அழகு. ஆனால் இறைவன் மனிதனும் அல்ல நாயும் அல்ல. இறைவனின் பார்வையில் இவள் அழகென்றால் அவனிடம் இருப்பது மனிதப் பார்வை என்றாகும். இறைவனின் பார்வையில் இந்த நாய் அழகென்றால் அவனிடம் இருப்பது நாயின் பார்வை என்றாகும். இதெல்லாம் இறைவனை நம் பார்வையின் அடியாகச் சித்தரித்துக் கொள்வதுதான். சுத்தமான ANTHROPOMORPHISM!”
இறைவனின் அழகு என்பது அவனது பண்புகள்தான். அவை எதில் வெளிப்பட்டாலும் அதை அவன் நேசிக்கிறான். “இறைவன் அழகை நேசிக்கிறான்” என்பது அவனுடைய சுய அழகின் வெளிப்பாட்டைத்தான். நிறம், அளவு மற்றும் எடை ஆகியவை இந்த உலகைச் சேர்ந்த பண்புகள். அவை இறைப்பண்புகள் அல்ல. ஆனால் இப்பண்புகள் கொண்ட பொருட்களில் இறைப்பண்புகள் வெளிப்படும்போது அவை நேசிப்பிற்குரியதாகின்றன. அவை நேசிக்கப்படுவது இறைவனின் பண்புகளுக்காகத்தான்.
”ஐம்பது கிலோ தாஜ்மகால்” என்று வருணிக்கப்பட்ட இந்தச் சொலிக்கும் யுவதியின் நிறம், அளவு மற்றும் எடை ஆகிய பண்புகள் காட்டும் உருவப்பரிமாணங்கள் இந்த உலகினைச் சேர்ந்தவை. அவை எதார்த்தத்தில் அழகே அல்ல என்று சூஃபிகள் சொல்கின்றனர். அதில் பார்வை என்ற ஓர் இறைப்பண்பு மட்டும் குறைவதாக வைத்துக்கொள்ளுங்கள், அதன் கதி என்ன? எத்தனை விகாரப்பட்டுப் போய்விடுகிறது? உயிர் என்ற இறைப்பண்பு பிரதிபலிக்கவில்லை என்றால் காரியம் முடிந்தது. ஐம்பது கிலோவுக்கும் சல்லிக்காசு மதிப்புக் கிடையாது!
ஆனால் மனிதனால் இறைப்பார்வையின் எதார்த்தத்தை அறிய முடியாது. அவன் தன் பார்வை கோணத்தில்தான் (PERSPECTIVE) அழகை தரிசிக்க முடிகிறது. இறைவனை அவனின் தூய நிலையில், அரூப நிலையில் அவனையன்றி வேறு யாரும் காண முடியாது. எனவேதான் அவன் மறுமையில் முதலில் தெரியாத ஒரு உருவத்திலும் பிறகு தெரிந்த உருவத்திலும் அடியார்களுக்குக் காட்சியாவான் என்று நபி(ஸல்) அருளினார்கள்.
இறைவனின் அழகைச் சொல்ல வந்தவர்கள் எல்லாம் மனிதப் பார்வை கோணத்தில் வைத்தே சொல்லியிருக்கிறார்கள்.
“நான் என் ரட்சகனை தாடி இல்லாத ஓர் அழகிய வாலிபனின் உருவில் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமின்சிரிப்பும்…”
“பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்…”
போன்ற வரிகள் எல்லாம் இறைவனை மனிதப் பார்வையில் வரித்துக் கொண்ட நிலைகளையே காட்டுகின்றன.
மேலே நாம் கண்ட அதே தர்க்கத்தை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வேறு ஒரு நண்பரிடம் முன்வைத்துப் பேசியதும் இங்கே ஞாபகம் வருகிறது.
“எல்லாப் பொருட்களும் இறையுள்ளமையில்தான் வெளிப்பட்டுள்ளன என்று சொல்லி எல்லாவற்றிலும் இறைவனை அகக்கண்ணால் காணும் பயிற்சியை செய்யும்போது சில நேரங்களில் மிகவும் சிக்கலாக இருக்கிறது. மலத்தில் இறைவனைப் பார்ப்பதா? என்று மனம் பதறுகிறது. அசிங்கத்தில் அவனை எப்படிக் காண்பது?” என்று கேட்டார் அந்த நண்பர். சரிதான், இந்தக் கேள்விக்கு ஸ்பஷ்டமான பதிலைச் சொல்லிவிட வேண்டியதுதான். இதற்கு அறுவை சிகிச்சைதான் தேவை என்று என் மனதில் எண்ணிக்கொண்டு பதில் சொன்னேன்.
“மலம் அசிங்கம் என்று சொன்னீர்கள். யாருக்கு? உங்களுக்கா? இறைவனுக்கா? மலஜலம் பற்றிய சட்டமெல்லாம் உங்களுக்குத்தான். இறைவனுக்கல்ல. மேலும். உங்களிடம் ஒரு கேள்வி. ரிஜ்கில் (உணவில்) உங்களால் இறைவனை தரிசிக்க முடிகிறதல்லவா? அதில் எதாவது சிக்கல் இருக்கிறதா?”
“அதில் எந்தச் சிக்கலும் இல்லை. ரிஜ்கில் (உணவில்) ரஜ்ஜாக்கை (உணவளிப்பவனை) அகக்கண்ணால் காண்பதில் சிரமம் ஒன்றுமில்லை”
“சிரமம் இல்லை என்பது உங்களுக்கு. உங்கள் பக்குவத்திற்கு. இதுவே இன்னொருவருக்குப் பெரிய பிரச்சனையாக இருக்கக் கூடும். ரிஜ்கில் ரஜ்ஜாக் இருக்கிறான் என்றால் நான் ஜாங்கிரி தின்னும்போது அல்லாஹ்வையா தின்கிறேன்? என்றுதான் அவரது அரைவேக்காட்டு அறிவு தடுமாறும். சரி, பிரியாணி என்பது ஒரு ரிஜ்க் (உணவு). யாருக்கு? உங்களுக்கா? இறைவனுக்கா?”
“நிச்சயமா எனக்குத்தான். இறைவனுக்குத்தான் பசி தாகம் உணவு குடிப்பெல்லாம் கிடையாதே.”
“ரொம்ப சரி. இப்போ நிதானமா கவனியுங்க. இறைவன் யாரு யாருக்கு உணவளிக்கிறான்?”
“இது என்னங்க கேள்வி. சர்வ கோடி சிருஷ்டிகளுக்கும் அவன்தான் உணவளிக்கிறான்.”
“உங்களுக்கு அவன் ஒரு உணவைத் தரும்போது நீங்கள் அதை உணவு என்றுதான் பார்க்கிறீர்கள். இறைவனும் அதை உணவு என்றுதான் பார்க்கிறானா?”
”போட்டுக் கொழப்புறீங்களே. இறைவனும் அதை உணவுன்னுதானே பார்க்குவான்?”
“சரி. நீங்கள் மலம் என்று சொன்னீர்ங்களே, அது ஒரு பன்றிக்கோ நாய்க்கோ உணவு அல்லவா? அதை, அதாவது அதற்கான அந்த உணவை இறைவன்தானே அதற்குத் தருகிறான்? அந்த விலங்கு தனக்கான அந்த உணவைப் பார்க்கும் போது, தனக்கு உணவு தந்ததற்காக இறைவனை நன்றியுணர்வோடு புகழ்ந்து துதிக்கும் அல்லவா?”
”நிச்சயம் புகழத்தான் செய்யும்”
”மலம் என்பது உங்களுக்கு அசிங்கம். அதுவே மேற்படி ஹைவான்களுக்கு உணவு. இறைவனின் பார்வையில் அது அசிங்கமா? உணவா? இறைவன் அதை அசிங்கம் (நஜீஸ்) என்று பார்க்கிறான் என்றால் அவனிடம் இருப்பது மனிதப்பார்வை (human perspective) என்றாகிவிடும். இறைவன் அதை உணவு என்று பார்க்கிறான் என்றால் அவனிடம் இருப்பது விலங்குப் பார்வை (animal perspective) என்றாகிவிடும். இறைவனின் பார்வை படைப்புக்களின் பார்வைக்கு அப்பாலானது அல்லவா? மனிதனுக்கு விளங்கவேண்டும் என்பதற்காக மனித மொழியில் மனிதப் பார்வையின் கோணத்தில் இறைவன் பேசியதை எல்லாம் அவனுடைய அசலான தன்மையே அதுதான் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அது ஒரு மனித பலகீனம். அப்படி எடுத்துக் கொள்வதால்தான் இறைவனை மனிதனைப் போல் பாவிக்கும் நிலை – ANTHROPOMORPHISM – உண்டாகிவிடுகிறது. இந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் மனங்களால் மலத்தில் எப்படி இறைவனை தரிசிக்க முடியும் சொல்லுங்கள்? அல்லது இறைவனின் பார்வையில் அது என்ன என்பதை எப்படி விளங்க முடியும் சொல்லுங்கள்?”
தர்க்க எல்லைகளைத் தாண்டினால்தான் பல விஷயங்கள் விளங்கும். ’அவன் அழகன்’ என்னும் எளிமையான கருத்தை விளங்கிக் கொள்வது அப்படி ஒன்றும் எளிமையான விஷயம் இல்லை பார்த்தீர்களா?
அழகான,அருமையான,அட்டகாசமான பதிவு.
ReplyDeleteதங்களிடமிருந்து இது போன்று அதிகம்
எதிர்பார்க்கிறேன். எளிமையான முறையில்
ஆழ்ந்த விளக்கம். ஜசாக்கல்லாஹு கைரா.
என்ன ஆச்சரியம்! அரபுத் தமிழனைக் கொஞ்ச காலமாக ஆளையே காணோமே, ஒன்றுமே பேசாமல் கப்சிப்னு இருக்காறே என்று நினைத்தேன். இந்தப் பதிவை ஏற்றும்போது தோன்றியது, அவர் ஏதாவது சொல்வார் என. பலித்துவிட்டது! முதல் கமெண்ட் இஸ் ஃப்ரம் ஹிம்!
ReplyDeleteஎனக்கு இதை படித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு செய்திகள் நினைவிற்கு வந்தன.
ReplyDeleteஒன்று: லைலா மஜ்னு கதையில் வருவது
இரண்டு: ‘சின்னப்பூவே மெல்லபேசு’ எனும் திரைப்படத்தில் வந்த ஒரு வசனம். எனக்கு மிகவும் பிடித்த வசனகர்த்தா காலஞ்சென்ற பிரச்சன்னகுமார் அவர்கள் எழுதியது.
முதலாவது சம்மந்தமாக: லைலா அழகாகவே இருக்க மாட்டாராம். ஆனால் கயஸ் லைலா மேல் தான் மஜ்னூனாக இருந்திருக்கிறார். இது பற்றி கேட்ட போது மஜ்னூன் லைலாவின் அழகை பற்றி இப்படி சொல்கிறார், “லைலாவின் அழகை மஜ்னூனின் கண்களால் தான் பார்க்க வேண்டும்” என்று
இரண்டாவது சம்மந்தமாக: கல்லூரியில் பேராசிரியர் ஷேக்ஸ்பியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணை பார்த்து கேள்வி கேட்பார், “அழகுன்னா என்ன, ரேகா நீ சொல்லும்மா..?” என்று
அதுக்கு ரேகா கேரக்டர் எழுந்து பதில் சொல்லும், “அழகுன்னா ரோஜாப்பூ” என்று
உடனே ஒரு மறுப்பு, ஆண்கள் அணியிலிருந்து, “இல்லை சார், எது ஒருத்தனுக்கு மன அமைதியை தருதோ அது தான் சார் அழகு, பத்து நாள் பட்டினியா கடந்தவனுக்கு பழைய சோறும் ஊறுகாயும் தான் (படத்தில் வேறு ஒரு உணவு வகை சொல்வார் என்று நினைக்கிறேன்) அழகா தெரியுமே தவிர, ரோஜாப்பூ அழகா தெரியாது சார்..”
பேராசிரியர், “வெரி குட் ராஜா, ஜுலியட் ரோமியோவுக்கு மன அமைதியை கொடுத்தாள் அழகாய் தெரிந்தாள்..”
நைமியப்பா (ரூமி அவர்களின் குட்டியப்பா மாதிரி) நன்றாகவே இருந்தாலும் திலீப் குமார் பற்றிய கருத்தை ஏற்க முடியவில்லை. ஏனெனில் எனக்கு திலீப் சாபை ரொம்ப பிடிக்கும்.
ReplyDeleteமுகலே ஆசத்தில் அந்த அளவுக்கு தான் சலீம் போன்ற போரிலேயே வாழ்க்கையை கழித்த மாவீரன் எக்ஸ்பிரஷன் காட்டுவான். அதுக்கு மேலே ஒரு படி அதிகம் போனாலும் ஓவர் எக்ஸ்பிரஷன் ஆகிவிடும் என்பது எனது தாழ்மையான கருத்து.
’எங்கே பிராமணன்’ சோ ஒரு பேட்டியில சொன்னார், எடுத்துக் கொண்டிருந்த காட்சியில் இடம்பெறாததால் நின்று பார்த்துக் கொண்டிருந்த சோ சிவாஜியின் ஓவர் ஆக்டிங் பிடிக்காமல் ஸ்டூடியோவை விட்டு வெளியே போய் விட்டாராம்.
சிவாஜியின் நடிப்பை பார்த்து எல்லோரும் கையை வேறு தட்டு தட்டுன்னு தட்டியிருக்கிறார்கள்.
சிவாஜி சோ வெளியேறினதை கவனித்து விட்டு, காரணம் கேட்ட போது, சோ இப்படி சொல்லியிருக்கிறார், “இந்த ஓவர் ஆக்டிங் சகிக்கலை” என்பது போல்
சிவாஜி சொன்னாராம், ‘எனக்கு அது ஓவர் ஆக்டிங்க்ன்னு தெரியும்.. ஆனா இயல்பா நடிச்சா நீ மட்டும் தான் கை தட்டுவே.. இப்ப பாரு எத்தனை பேரு பாராட்டுனாங்கன்னு..’
ஆகையினால், சிவாஜி நடிக்க தெரியாம ஓவர் ஆக்டிங் பண்றாருன்னு நான் சொல்ல வரலை..
ஆனா நைமியப்பாக்கு ஒரு பிடித்தம் இருந்த மாதிரி எனக்கு திலிப் குமார் தான்.
தங்கப் பதக்கம் சவுத்ரி கேரக்டரை யாரையும் பொருத்தி பார்க்க முடியாது. அந்த கம்பீரம், அந்த மிடுக்கு.. ஆனா அதே கதையம்சம் இந்தியில் ‘சக்தி’ என்று வெளியானது... அஷ்வின் குமாராக முற்றிலும் அந்த பாத்திரத்தை நினைத்து கூட பார்க்க முடியாது வேறு ஒரு டைமென்ஷனில் அவர் வெளிப்படுத்திய போது... (வார்த்தை கிடைக்கவில்லை..)
மிக அருமை மிக அழகு
ReplyDeleteநாகூர் இஸ்மாயிலின் கருத்திற்கும் எனக்கும் எந்த முரண்பாடும் இல்லை. என் ச்சாய்சும் திலீப் குமார்தான். இந்த இடத்தில் நான் நைமியப்பாவின் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளேன். அது ஒரு கண்மூடித்தனமான ரசனை. தன் ஆதர்ஷ நாயகன்தான் எதற்கும் பொருத்தமானவன் என்று அது காண்கிறது. Fan என்பதே fanatic என்பதன் சுருக்கம்தானே! அந்த மனநிலையை நான் பகடியும் செய்துள்ளதை கவனிக்கவும். அதாவது அனார்க்கலி ரோலையும் சிவாஜிக்கே தரவேண்டும் என்பதாக.
ReplyDeleteநன்றி சார்.. பகடியை கவனித்தேன்.. செம நக்கல் தான்..
ReplyDelete//அரபுத் தமிழனைக் கொஞ்ச காலமாக
ReplyDeleteஆளையே காணோமே//
ஆசானே, ரமலானில் ப்ளாக் பக்கம்
வருவதில்லை.வெகேஷன், உம்ரா
என்று சென்று விடுவேன்.
இருந்தாலும் வந்த பிறகு தங்களின்
அனைத்துப் பதிவுகளையும் படித்து கமெண்டிட்டிருக்கிறேனே
///“அதில் எந்தச் சிக்கலும் இல்லை. ரிஜ்கில் (உணவில்) ரஜ்ஜாக்கை (உணவளிப்பவனை) அகக்கண்ணால் காண்பதில் சிரமம் ஒன்றுமில்லை”///
ReplyDelete"இதமன்னம்,இதமன்னம், இதமன்னம்" என்று உபனிஷத் வாசகம் காதில் ஒலிக்கிறது.
அப்படியா? உணவில் இறைவனைக் காண்பீர்களா?
அப்புறம் 'உண்ணும் சோறு,பருகும் நீர், தின்னும் வெற்றிலை' எல்லாம் அவன்தானே!
கற்றுக் கொள்கிறேன், பேராசிரியரே! மேலும் பாடம் சொல்லுங்கள்.
நீங்களும் பின்னூட்டங்களுக்குப் பதில் அளிப்பீர்கள் என்று இங்கேதான் கண்டேன். நன்றி!!
//“எல்லாப் பொருட்களும் இறையுள்ளமையில்தான் வெளிப்பட்டுள்ளன என்று சொல்லி எல்லாவற்றிலும் இறைவனை அகக்கண்ணால் காணும் பயிற்சியை செய்யும்போது சில நேரங்களில் மிகவும் சிக்கலாக இருக்கிறது. மலத்தில் இறைவனைப் பார்ப்பதா? என்று மனம் பதறுகிறது. அசிங்கத்தில் அவனை எப்படிக் காண்பது?” என்று கேட்டார் அந்த நண்பர்//
ReplyDeleteஇறைவனை அகக் கண்ணால் காணும்போது, நாம் காண்பது அவனது அன்பு, அழகு, அறிவு. உண்ணும் உணவில் மட்டும்தான் இவை தெரிகின்றனவா... வெளியேறும் மலத்திலும் இவைகளைப் பார்க்கலாம். கொடும் மலச்சிக்கல்காரனையும், மலக்குடல் வெட்டப்பட்டவனையும் கேட்டால் சொல்வான்.
சிறப்பான ஆய்வும் அதில் தந்துள்ள விளக்கமும் உயர்வு . இறைவன் அருளால் தொடருங்கள் உங்கள் சேவையை .வாழ்த்துகள்
ReplyDelete