Tuesday, November 30, 2010

ஆறு முகங்கள்

சுவிஸ் நாட்டு ஸ்படிகவியல் விஞ்ஞானி (CRYSTALLOGRAPHER ) லூயிஸ் ஆல்பெர்ட் நெக்கர் தன் ஆய்வுக்கூடத்தில் ஒரு ஸ்படிகத் துகளை ஆழ்ந்து நோக்கி ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆராய்ச்சி மண்டையைக் கசக்கவே சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று வெளியே சென்று வந்தார். (பாத்ரூம் போயிருக்கலாம். அல்லது டீ குடிக்கப் போயிருக்கலாம். அல்லது போயிருக்கலாம். விடுங்க மனுஷன.) அவர் திரும்பி வந்து அந்த ஸ்படிகத் துகளைக் கண்டபோது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தத் துகள் திரும்பிக் கிடந்தது. கூடத்தில் வேறு யாருமில்லை. துகள் எப்படிப் புரண்டது? என்று யோசித்தார்.( ஸ்படிகத் துகள் மூச்சாவுக்கோ அல்லது டீ குடிக்கவோ போய் வந்திருக்க முடியாது.)
 அவர் யோசனையுடன் அந்த ஸ்படிகத் துகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது மீண்டும் சட்டென்று புரண்டு படுத்தது! என்னடா இது, ஒரு துளியூண்டு ஸ்படிகம் இப்படி டக்காயட்டி வேலை காட்டுது என்று குழம்பிப்போய் நெக்கர் அந்தத் துகளை ஆழ்ந்து கவனித்தார். என்ன நடக்கிறது என்பது சட்டென்று அவர் மூளையில் பிடிபட்டது. உண்மையில் அந்தத் துகள் புரளவெல்லாம் இல்லை. அது தேமேவென்று அப்படியேதான் கிடக்கிறது. நெக்கரின் மூளையில் உள்ள பார்வைப் புலனில்தான் அந்த காட்சி மாற்றம் நடக்கிறது. அந்த ஸ்படிகத்தின் வடிவம் அதனை இரு வேறு முறைகளில் பார்க்கத் தக்கதாக உள்ளது. கீழ்நோக்கி இடதுபக்கம் சாய்ந்ததாக அல்லது மேல்நோக்கி  வலதுபக்கம் சாய்ந்ததாக.1832 -ல் நெக்கர் தான் கண்டறிந்த அந்த "காட்சிப் பிழை" உருவமான "NECKER CUBE " (நெக்கர் கனசதுரம்) படத்தை வெளியிட்டார். மனித மூளையின் செயல்பாடுகளை, அது புறவுலகத்தை அகவயமாக உருவகப் படுத்திக்கொள்ளும் புலப்பாட்டு முறையை ஆராயும் நரம்பியலர்கள் (NEUROLOGISTS ) தங்கள் ஆய்வில் நெக்கர் கனசதுரம் போன்ற இருண்மை வடிவங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் முக்கியமாகக் காண்கிறார்கள். 

கனசதுரத்தின் இந்தப் பண்பும் "AS ABOVE SO BELOW " என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகக் காண்கிறேன். அதாதவது அந்தத் தத்துவத்திற்கான கச்சிதமான வடிவமாக கனசதுரம் இருக்கிறது. கனசதுர இறையாலயமான கஃபாவிற்கும் இதற்கும் ஒரு தொடர்புண்டு. இறைவிதானத்தில் இருந்து இறங்கும் அருள் கஃபாவில் இறங்குகிறது, அங்கிருந்து உலகெங்கும் பரவிச் செல்கிறது. அதேபோல் வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் கஃபாவில் திரண்டு அங்கிருந்து இறைவிதானத்திற்கு உயர்த்தப் படுகின்றன என்பதை இந்த வடிவத்தின் இருண்மைப் பண்பு பிரதிபலிக்கின்றது எனலாம். 

ஒரு கனசதுரத்தில் ஆறு பக்கங்கள் உள்ளன என்பது பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறது. ஆங்கிலத்தில் '6 SIDES ' என்று கூறுவதை '6 FACETS ' என்றும் சொல்லலாம். அதை அப்படியே தமிழில் சொல்வதென்றால் "ஆறுமுகம்" என்றாகிறது. கனசதுரத்தின் ஆறு பக்கங்கள் மூன்று பரிமாண இடத்தின் (3D SPACE ) X , Y , Z என்னும் மூன்று அச்சுக்களின் (AXIS ) வழியே தோன்றும் ஆறு திசைகளைக் குறிக்கும். இடம், வலம், மேல், கீழ், முன், பின் என்று ஆறு திசைகளைக் குறிக்கிறது. இறைவனின் அருள் பிரபஞ்சமெங்கும் பரவுவதை ஆறு திசைகளில் பரவுவதாகக் கொண்டு கஃபாவின் ஆறு பக்கங்கள் குறிக்கின்றன. 

இறைவனின் பண்புகளைக் குறித்து சிந்தித்த இந்து ஆன்மிக மரபு மூன்று பண்புகளை முதன்மைப்படுத்தி "சத் சித் ஆனந்தம்" என்று அவனை வருணித்தது. இவற்றுடன் தொடர்புடைய பண்புகளில் "அழகு" என்னும் பண்பு சிறப்பிடம் பெற்றது. உலகின் எல்லா ஆன்மிக மரபுகளும் இறைவன் அழகு மயமானவன் என்னும் கருத்தைக் கொண்டுள்ளன. அவனுடைய அழகு பிரபஞ்சமெங்கும் வெளிப்பட்டுள்ளது என்னும் தத்துவத்தைக் குறியீடாகச் சொல்ல நினைத்தவர்கள் அதற்கு ஒரு அழகிய இளைஞனின் வடிவத்தைக் கொடுத்தார்கள். ஆறு திசைகளிலும் அந்த அழகு விரிகிறது என்று காட்ட அந்த உருவத்திற்கு ஆறு முகங்களை வைத்தார்கள்.


அழகு என்பதற்குச் செந்தமிழில் எழில், முருகு போன்ற சொற்களும் உள்ளன. அழகு என்னும் தத்துவமே குறியீடாக "முருகன்" என்று உருவகிக்கப் பட்டது. ( அதனால்தான் திரு.வி.க தன் நூலுக்கு 'முருகன் அல்லது அழகு' என்று பெயர் வைத்தார். அதில் இந்தத் தத்துவத்தின் விளக்கத்தைக் காணலாம்.'அழகன்' என்று கூறாமல் 'அழகு' என்று சொல்லியிருப்பது OBJECT IS SUBJECT என்று அவர் சொல்லுவதாகப் படுகிறது). அந்த அழகு ஆறு திசைகளில் விரிவதால் 'ஆறுமுகம்' (சண்முகம்) ஆனது. ஒவ்வொரு முகமும் ஒரு திசையைக் குறிக்கும். அதில் மேல்நோக்கிய முகம் முக்கியமானது என்பார்கள். அதற்கு "அதோமுகம்" என்று பெயர். AS ABOVE SO BELOW என்பதால் போலும்!

திசை என்பதைக் குறிக்க "முகம்" என்னும் சொல் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருப்பதைப் போலவே அரபியிலும் இருக்கிறது. திருக்குரானிலேயே அப்படிப் பயன்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.
கபாவின் திசை தெரியாவிட்டால் எந்த திசையை மணம் உணர்கிறதோ அந்த திசையை நோக்கித் தொழுகை செய்யலாம் என்று அனுமதி அளித்து இறங்கிய வசனம் அது.
"கிழக்கும் மேற்கும்
அல்லாஹ்விற்குரிய.
எத்திசை நீ திரும்பினும்
அத்திசையில் அல்லாஹ்வின் 
முகம் நிறைந்துள்ளது.
நிச்சயமாக அல்லாஹ்
எங்கும் நிறைந்தவன்
எல்லாம் அறிந்தவன்."
(2 : 115 )

என்பது அந்த வாசத்தின் கருத்து. அரபி மூலத்தில் "வஜ்ஹுல்லாஹ்" என்னும் சொற்றொடர் வந்துள்ளது. "அல்லாஹ்வின் முகம்" என்பது அதன் நேரடிப் பொருள். முகம் என்பது இறைவனின் உள்ளமையைக் குறிக்கும் என்று சூஃபிகள் கூறுகின்றனர். 'அல்லாவின் திசை' என்னும் சார்புப் பொருளும் சொல்லப்படுகிறது.

ஆறு திசைகள்  கஃபாவுடன்  மட்டுமல்ல, அதனை மையப்புள்ளியாக வைத்து நிகழ்த்தப்படும் தொழுகையுடனும் தொடர்பு கொண்டுள்ளன. அதைப் பின்னர் சொல்கிறேன்.  

3 comments:

 1. உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும்
  அறிவு பூர்வமானது ஆராய்ச்சி பூர்வமானது
  ஆச்சர்யமானது.

  ReplyDelete
 2. ஓர் இந்துவே கூட ஆறுமுகத்தை இப்படியும் காணலாம் என்று அறிவானா என்று
  தெரியவில்லை. நல்ல புரிதல்.

  ReplyDelete
 3. உங்கள் கட்டுரைகள் அருமை

  ReplyDelete