இத்தாலி நாட்டில், டுரின் நகரில் உள்ள புனித ஜான் கதீட்ரல் என்னும் தேவாலயத்தில் ஒரு கோடித்துணி உள்ளது. "SHROUD OF TURIN " என்று அழைக்கப்படும் இந்தத் துணி உலகப் புகழ் பெற்றது. வருடந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசித்துச் செல்லும் வரலாற்றுப் பொருளாகவே அது மாறிவிட்டது. அதற்கான காரணம் அதத் துணியைக் கிருத்தவர்கள் ஏசுநாதரின் கோடித்துணி என்று கருதுவதுதான். உண்மையில் அது ஏசுநாதர் அடக்கப் பட்டபோது அவர்மீது சுற்றப்பட்டிருந்த துணிதானா என்பதில் பல கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ரேடியோ கார்பன் சோதனைகள் அந்தத் துணி கி.பி.1260 - 1390 காலகட்டத்தில் எப்போதோ செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றன.
டுரின் சவக்கோடியில் ஒரு மனித உருவத்தின் முழு அச்சு உள்ளது. அது ஏசுவின் உண்மையான, வரலாற்று ஆதாரமான உருவம் என்று கத்தோலிக்க கிருத்துவர்கள் நம்புகின்றனர். 1958 -ல் போப் பயஸ் XII அது ஏசுநாதரின் முகம்தான் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மார்ச்,2010 -ல் ஹிஸ்டரி சேனல் தயாரித்த "THE REAL FACE OF JESUS " என்னும் நிகழ்ச்சிக்காக STUDIO MACBETH என்னும் நிறுவனம் ரே டௌனிங் என்பவரின் தலைமையில் கணிப்பொறி உருத்தோற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டுரின் துணியிலிருக்கும் உருவத்தை முப்பரிமாணப் படமாக உருவாக்கினார்கள். அந்தத் துணியால் சுற்றப்பட்டிருந்த உடல் உண்மையிலேயே ஏசுநாதரின் உடல்தான் என்றால் ஏசுவின் உண்மை உருவம் இதுதான் என்று தங்கள் தொழில்நுட்பம் தந்த படத்தையும் வெளியிட்டார்கள். அதில் ஏசு எப்படி இருந்தார் என்றால், கிருத்துவர்கள் அந்த முகத்தை ஏசுவின் சீடரின் முகமாகக் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! அவ்வளவு சாதாரணமாக இருந்தது!
இந்தச் செய்தி 'ஹிந்து' நாளிதழில் வெளிவந்தபோது நானும் அப்படத்தைக் கண்டேன். அது ஒரு 'ஹாலிவுட்' கதாநாயகன் முகம் போன்றெல்லாம் இல்லை. விகட நடிகர் 'சின்னி' ஜெயந்தைப் போல் இருந்தது! மூக்கு கூர்மையாக இல்லாமல் மொழுக்கென்று இருந்தது. அதைப் பார்த்தபோது ராமகிருஷ்ண பரமஹம்சரின் கனவு அனுபவம்தான் எனக்கு ஞாபகம் வந்தது.
ராமகிருஷ்ண பரமஹம்சர் ஏசுவின்மீதும் நபிகள் நாயகத்தின் மீதும் பேரன்பு கொண்டவர். இருவர் மீதும் தியானம் செய்தவர். மரியையின் கையில் குழந்தை ஏசு இருக்கும் ஒரு படத்தை ஒருமுறை பார்த்தவுடனே பரவச நிலையை அவர் எட்டியதாக ஒரு சம்பவம் உண்டு. ஏசுவையும் நபிகள் நாயகத்தையும் தான் கனவில் கண்டதாக ராமகிருஷ்ணர் கூறியுள்ளார். அதில் ஏசுவைப் பற்றி வருணிக்கும்போது ஏசுவின் மூக்கு தட்டையாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்!
ஏசு நாதரின் உருவத் தோற்றம் பற்றி நபிகள் நாயகம் கூறியுள்ள ஹதீஸ்கள் உள்ளன. நபித்தோழர் இப்னு உமர் அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில், தான் விண்ணேற்றம் சென்றபோது மோசசையும் ஏசுவையும் ஆபிரகாமையும் பார்த்ததாக நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். அதில், "ஈசா (ஏசு) சிவந்த நிறமுடையவராக, சுருள் கேசம் கொண்டவராக, அகன்ற நெஞ்சுடையவராக இருந்தார்." என்று வருணித்துள்ளார்கள்.(புகாரி, நூல்:55 , எண்: 648 )
நபித்தோழர் அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கும் இன்னொரு ஹதீஸில் ஏசு நாதரின் இரண்டாம் வருகை பற்றிய செய்தியில், "அவர் சராசரி உயரமுள்ள சிவந்த மனிதராக இருப்பார். வெளிர் மஞ்சள் நிறத்தில் இரண்டு ஆடைகள் அணிந்திருப்பார். அவர் தலையிலிருந்து நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருப்பதைப் போல் இருக்கும், ஆனால் அது நனைந்திருக்காது." என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.(சுனன் அபூ தாவூது, நூல்: 37, எண்: 4310 .)
இந்த வருணனைகள் ஏசுநாதரை ஒரு அழகான மனிதராகவே எண்ணத் தோன்றுகின்றன. அழகு என்பதும் இறைத்தூதர்களின் லட்சணங்களில் ஒன்றுதான். அக அழகும் புற அழகும் ஒன்று சேர்ந்தவர்களாகவே இறைத்தூதர்களை எண்ணமுடியும். அவர்கள் எளிமையாக இருந்திருக்கலாம். அது வேறு. ஏசுவே ஒரு நாடோடி வாழ்க்கையில் திரிந்து கொண்டிருந்தவர்தான். ஏசுவின் இந்த அம்சத்தை எழுபதுகளில் அமெரிக்க ஹிப்பிகள் வரித்துக் கொண்டார்கள். ஏசுவின் ஆளுமையைக் கௌபாய் மோல்டில் வார்த்து தங்களின் ஆதர்ஷன உருவத்தை அவர்கள் அடைந்தார்கள் என்று சொல்லலாம்!
ஏசுநாதரின் உண்மையான உருவம் என்று நவீன தொழில்நுட்ப ஆய்வுகள் முன்வைக்கும் உருவத்தை ஆன்மிக உணர்வுள்ள எந்த மனமும் ஏற்றுக் கொள்ளாது என்றே எண்ணுகிறேன். அது நேர்த்தியான வடிவில் இல்லை என்பது மட்டும் காரணமல்ல. ஆன்மிகத் தன்மையை அது பிரதிபலிக்கவில்லை என்பதும் ஒரு காரணம். அது ஒரு ரோஜாப் பூவின் சவத்தைப் போல் இருக்கிறது!
நபிகள் நாயகம் ஏசுவைப் பற்றிக் கூறியுள்ள ஹதீஸ்களின் வழியே நான் உருவகித்துக் கொள்ளும் ஏசுவின் தோற்றம் மேற்கத்திய செவ்வியல் ஓவியங்கள் காட்டும் தோற்றமாகத்தான் உள்ளது. அது மட்டுமல்ல நபிகள் நாயகத்தின் உருவத்தை நபித் தோழர்கள் வருணித்துள்ள ஹதீஸ்களைப் படிக்கும்போது அந்த அழகிய வருணிப்புக்களை அப்படியே ஏசுநாதருக்கும் என்னால் பொருத்திப் பார்க்க முடியும். ஏசுவுடன் மட்டுமல்ல மண்ணில் வந்த எல்லா இறைத்தூதர்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியும்!
"இம்மையிலும் மறுமையிலும் மொத்த மனிதகுலத்தில் மர்யமின் மகன் ஏசுவுடன் மிகவும் நெருக்கமானவன் நானே!" என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம், நூல் 30 , எண்: 5836 .) இந்த நபிமொழி ஆன்மிக ரீதியான நெருக்கத்தைப் பற்றிச் சொல்லப்பட்டது என்றபோதும் அதன் ஒரு பரிமாணமாக உருவத் தோற்றத்தையும் குறிக்கக் கூடும் என்று நான் கருதுகிறேன். ஏசுவும் நபிகள் நாயகமும் ஆபிரகாம் என்னும் ஒரே முப்பாட்டனாரின் வம்சக் கிளைகளில் வந்தவர்களே!
ஏசுநாதர் வாழ்ந்த காலத்திலேயே வரையப்பட்ட அவருடைய போர்ட்ரைட் ஓவியம் எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தாலும் அது துல்லியமாக இருக்கும் என்று கூற முடியாது. அது ஒரு வகையில் நல்லதும்கூட. அதனால்தான் ஆன்மிக அனுபவங்களுக்கு ஏற்ப அவரின் தோற்றத்தை ஒரு குறியீடாகப் பல விதங்களில் உருவகித்துக் கொள்ள முடிகிறது.
ஏசுநாதரை எத்தனையோ கவிஞர்கள் வருணித்துப் பாடியுள்ளார்கள். கலீல் கிப்ரான் வருணித்த ஒரு வரி என்னை மிகவும் அதிசத்தில் ஆழ்த்தியது. அதற்கு இணையான ஒரு வருணிப்பை நான் இதுவரை கண்டதில்லை. ஏசுநாதரின் வாயைப் பற்றிய வருணனை அது. காதலியின் சிவந்த உதடுகளை வருணித்த கவிஞர்கள்கூட இந்த அளவு அற்புதமாக வருணித்ததில்லை! அப்படி ஒரு வரியை கலீல் கிப்ரானின் ஆன்மிகக் காதல் எட்டிப் பிடித்துள்ளது. அவர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் எழுதிய நூலான "JESUS THE SON OF MAN" என்னும் நூலில் "THE WOMAN FROM BYBLOS" என்னும் அத்தியாயத்தில் வரும் வரிகள் இவை:
"He who spoke as the rivers speak
He whose voice and time were twins
He whose mouth was a red pain made sweet
He on whose lips gall would turn to honey"
இந்த நான்கு வரிகளுமே அற்புதமானவைதான். ஏசுவின் பேச்சையும் குரலையும் வாயையும் வருணிக்கின்றன. என்னை மிகவும் பாதித்தது மூன்றாம் வரி. HE WHOSE MOUTH WAS A RED PAIN MADE SWEET... பல முறை இந்த வரிகளை மீண்டும் மீண்டும் சிந்தித்திருக்கிறேன். என்னவோ செய்கிறது!
இந்த உதட்டு வருணனையில் என் மனதை ஸ்தம்பிக்கச் செய்த இன்னொரு வரியையும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும். அது ஏசுவின் அன்னை மர்யம் அவர்களைப் பற்றிய வருணனை. வருணித்த கவிஞர் மௌலானா ரூமி. சூஃபி உலகின் சிகரக் கவிஞர். பெண்ணை வருணிப்பது என்றாலே அது ரசாபாசம் ஆகிவிட வாய்ப்புகள் உண்டு. ஆன்மிகக் கவிஞர்களால்தான் பெண்ணைப் புனித நிலையில் பாட முடியும் என்பதை உலகின் மகாகவிகள் எல்லாம் நிரூபித்துள்ளார்கள். அந்த லிஸ்டில் மவ்லானா ரூமி அவர்களை நிச்சயம் முன்னணியில் வைக்கவேண்டும். ஏசுவின் பரிசுத்த அன்னையை அங்க வருணனை செய்தெல்லாம் வருணிக்க முடியாது. ஆனால் மௌலானா ரூமியின் கவிதை ஏசுவின் பிறப்பைப் பற்றிப் பேசுகிறது! அந்த வரியில் மர்யம் அவர்களின் பரிசுத்த யோனியைப் பற்றியும் எழுதியுள்ளார்! அந்தக் கவிதை வரியைக் கூறும் முன் இரண்டு விஷயங்களை கவனத்திற்காகச் சொல்லிவிடுகிறேன்.
1 . "மேலும் இம்ரானின் புதல்வியான மர்யமையும்
(அல்லாஹ் உதாரணமாக்கினான்)
அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்.
நாம் அதில் நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம்" (66 : 12 )
என்னும் திருக்குர்ஆன் வசனத்தில் அன்னை மர்யமின் மறைவுறுப்பு (அவ்ரத்) இறைவனாலேயே புனிதப்படுத்திக் கூறப்பட்டுவிட்டது.
2 . ஏசுநாதர் இஸ்லாமிய மரபில் "ஆயதுல்லாஹ்" என்று அழைக்கப்படுகிறார். இதற்கு "இறைவனின் வார்த்தை" என்று ஒரு அர்த்தம் உண்டு.
மௌலானா ரூமியின் கவிதை வரி:
"மர்யமின் உதடுகள் திறந்து
இறைவனின் வார்த்தையைப் பேசின"
இந்த ஒற்றை வரி என் மனதில் வெளிச்சமும் மின்சாரமும் பாய்ச்சிய மின்னலாய் இறங்கியது. இதற்கு மேல் புனிதப்படுத்தி ஒரு கவிஞன் பாடிவிடமுடியாது என்றே எண்ணுகிறேன். எல்லா உடல்களும் சமமானவை அல்ல. ஞானியாரின் உடல்களும் உருவங்களும் வேறு தளத்தில் பார்க்கப் படுபவை. பெண்ணையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். ஆன்மிகப் பார்வை கொண்டவர்களால்தான் அப்படிப் பார்க்கவும் முடியும் என்பதைப் பொட்டில் அடித்ததுபோல் எனக்கு உணர்த்திய வரி இது.
நல்ல அலசல்! இந்த படத்தை நானும் பார்த்து வியந்திருக்கிறேன் அப்போது..இப்படி தான் இருந்திருப்பாரோ என :)
ReplyDeleteகுரான் ஷரீஃபின் இந்த வசனத்தை ”..பற்றித்தான் வரலாற்று பேராசிரியர் கிப்பன் தம்முடைய புகழ்பெற்ற நூலாகிய “ரோமானியப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்’ என்பதில் “இதனைக் கிறிஸ்தவர்கள் ‘குர் ஆனிலிருந்து கடன் வாங்கிக் கொள்வதைப் பற்றி நாண முறவில்லை’ என்று கூறியுள்ளார்.
ReplyDeleteமேலே எழுதியுள்ளதை நான் அப்துற்-றஹீம் அவர்கள் எழுதிய நபிமார்கள் வரலாறு என்ற நூலிலிருந்து எடுத்து எழுதியிருக்கிறேன்.
//ராமகிருஷ்ண பரமஹம்சர் ஏசுவின்மீதும் நபிகள் நாயகத்தின் மீதும் பேரன்பு கொண்டவர். இருவர் மீதும் தியானம் செய்தவர். மரியையின் கையில் குழந்தை ஏசு இருக்கும் ஒரு படத்தை ஒருமுறை பார்த்தவுடனே பரவச நிலையை அவர் எட்டியதாக ஒரு சம்பவம் உண்டு. ஏசுவையும் நபிகள் நாயகத்தையும் தான் கனவில் கண்டதாக ராமகிருஷ்ணர் கூறியுள்ளார். அதில் ஏசுவைப் பற்றி வருணிக்கும்போது ஏசுவின் மூக்கு தட்டையாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்! //
ReplyDeleteதீவிர வாசிப்பு உள்ளது உங்களுக்கு. மேலோட்டமாகப் படிப்பவர்கள் இவ்வளவு நுணுக்கமாக எல்லாம் பேசமுடியாது.