Wednesday, November 3, 2010
சாத்தானின் புன்னகை
குழந்தைக்குள்
நுழைகிறது சமூகம்
ஒரு மோசமான படையெடுப்பாய்.
விளைநிலம் அழித்து
எழுகின்ற கட்டடமாய்.
நிஜங்கள்
நிழற்படங்களாகி
நிழற்படங்கள்
வார்த்தைகளாகி
குழந்தை
செய்தித்தாள் ஆகிறது.
தனிமரம்
தோப்பாகிவிடுகிறது
புதிய தளிர்கள்
தோன்றுவதில்லை
பூக்கள் எதுவும்
மலர்வதில்லை.
குழந்தைக்குள்
சமூகம் நுழையும் நாள்
குழந்தையின்
இறந்தநாள் ஆகிறது.
மாமரத்தில்
தேங்காய் காய்க்க
ரோஜாச் செடியில்
புடலங்காய் தோன்ற
கோழி பால் சுரக்க
மாடு முட்டையிட
வகுப்பறையில் நடக்கிறது
விபரீத ரசாயனம்.
'எழுத்தறிவித்தவன்
இறைவன் ஆகும்'
பிரம்படிக்குப் பயந்து
ஒப்பிக்கிறது குழந்தை.
சாத்தான்
புன்னகைக்கிறான்.
'என்ன ஆகப்போகிறாய்?'
என்னும் கேள்விக்கு
என்னென்னவோ சொல்கிறது
குழந்தை.
'மீண்டும் குழந்தையாகப் போகிறேன்'
என்று சொல்வதில்லையே
எந்தவொரு குழந்தையும்.
ஒரு குழந்தை
பிரஜையாகும்போது
ஒரு பிரபஞ்சவிதை
அழிந்துவிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
இழந்து விட்ட குழந்தை தனம் எண்ணி பெருமூச்சு விடவைக்கிறது. நல்ல கவிதை.
ReplyDelete//'என்ன ஆகப்போகிறாய்?'
ReplyDeleteஎன்னும் கேள்விக்கு
என்னென்னவோ சொல்கிறது
குழந்தை.
'மீண்டும் குழந்தையாகப் போகிறேன்'
என்று சொல்வதில்லையே
எந்தவொரு குழந்தையும்.//
'அவர்களை என்னிடம் வரவிடுங்கள்'
சமூகம்தான் தடுக்கிறது குழந்தைகள் இறைவனின் அருகில் செல்வதை.
நம்முடைய ஆசைகளையும் ஏமாற்றங்களையும் குழந்தைகளின் மீது ஏற்றிப் பார்க்கிறோம்.சுமைதாங்காமல் குழந்தை கோணிப் போகிறது.