Monday, November 22, 2010

ஒற்றை முலை!

போர்த்துகீசிய எழுத்தாளர் பாவ்லோ கொயல்லோ (PAULO COELHO ) எழுதிய ஒரு விநோதப் பதிவு பற்றிச் சமீபத்தில் எம்.ஜி.சுரேஷ் தன் வலைப்பூவில் ஒரு இடுகை போட்டிருந்தார். பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்சின் தொப்புளை வைத்து செய்யப்பட ஆய்வு அது! 

"கொயல்லோ தனது ‘அல்கெமிஸ்ட்’, ‘தி பில்க்ரிமேஜ்’ போன்ற பல தத்துவார்த்தமான நாவல்களுக்குப் பெயர் பெற்றவர். சூஃபிஸமும், சித்தர் மரபும் அவரிடம் ஓர் புள்ளியில் சந்திப்பதை நாம் கண்டு கொள்ள முடியும். அத்தகைய சீரியஸான மனிதரிடமிருந்து பிரிட்னியின் தொப்புள் பற்றிய வியாக்யானத்தை நான் எதிர்பார்க்கவில்லை." என்று கொயல்லோவைப் பற்றி எம்.ஜி.சுரேஷ் கூறுகிறார். அப்படி அந்த தத்துவச் சித்தன் என்னதான் சொல்லிவிட்டார் என்று தொடர்ந்து படித்தபோது உலகின் பல ஆன்மீக மரபுகள் தங்கள் ஆலயங்களைத் "தொப்புள்" என்று அழைத்திருப்பதை அவர் ஆராய்ந்துள்ளார் என்று தெரிய வந்தது. 

பண்டைய கிரீசின் அப்போலோ ஆலயத்தில் இருந்த ஒரு சலவைக் கல், ஜோர்டனில் உள்ள பெற்றாவில் இருக்கும் ஓர் இடம், ஜெருசலேம் நகரம், ஈஸ்டர் தீவுகள் ஆகியவை பிரபஞ்சத்தின் மையம் என்று கருதப்பட்டதால் அவை "தொப்புள்" என்று அழைக்கப்பட்டுள்ளன. மனித உடலின் மையம் என்று தொப்புளை அவர்கள் கருதியிருக்கிறார்கள். எனவே தங்கள் ஆலயங்களைப் பிரபஞ்சத்தின் மையம் என்று குறிக்க அவற்றைத் தொப்புள் என்று அழைத்துள்ளார்கள்! 



இதில் பாவ்லோ கொயல்லோ மீது நொந்துகொள்வது ஏன் என்று புரியவில்லை. ஒரு பாப் பாடகியின் தொப்புளைப் பார்த்ததும் அவரது சிந்தனை ஆன்மிக மரபுகளின் திசையில் திரும்பியிருக்கிறது என்பதே வியப்பான ஒன்றுதான். 'வயசாயிடுச்சில்ல...வேற என்னா தோணும்?' என்று கூறிவிடமுடியாது. வயதாவதாலேயே ஒருவருக்கு ஆன்மிகப் பார்வையெல்லாம் வந்துவிடாது. அவர் மனதில் அசலாக ஒரு ஆன்மிக நோக்கு இருப்பதால்தான் அவரின் சிந்தனை இந்தத் திசையில் திரும்புகிறது.

உலகின் பல புராதன ஆலயங்கள் தொப்புள் என்னும் பெயரால் அழைக்கப்பட்டுள்ளன என்னும் செய்தி என் சிந்தனையைக் கிளறுகிறது. நான் என் தொப்புளைத்தான் பார்த்துக் கொள்கிறேன்! தொப்புள் வடு என்பது ஓர் ஆதி உறவின் குறியீடு. தாய்கூட தன் குழந்தையின் முகத்தைப் பார்க்காத காலத்தின் அடையாளம் அது. தாயின் கருவறைக்குள் உண்டான ரத்த உறவின் அடையாளம். பிரபஞ்சம் வெளிப்படாமல் இறைவனின் சிந்தனையில் படிவங்களாகத்  தரிப்பட்டிருந்த காலத்தில் இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இருந்த உறவின் குறியீடு என்று இதனைக் காணலாம். எனவேதான் ஆலயங்கள் தொப்புள் என்று அழைக்கப்பட்டன போலும்! (வெளிப்பாட்டிற்கு முன் பிரபஞ்சம் இறைவனின் சிந்தனையில் - ஞானத்தில் படிவங்களாகத் தரிப்பட்டிருந்த நிலையை சூஃபித்துவத்தில் வாஹிதிய்யத் என்று கூறுவர். அந்தப் படிவங்களுக்கு "அஃயானே தாபிதா" என்று பெயர்.) 

புராதன ஆலயங்கள் இவ்வாறு தொப்புள் என்று அழைக்கப்பட்டிருக்க எனக்குத் தெரிய ஒரு ஆலயம் மட்டும் 'முலை' (BREAST ) என்று அழைக்கப் பட்டுள்ளது! உலகெங்கிலும் முஸ்லிம்கள் தங்கள் தொழுகையில் முன்னோக்கும் "கஃபா" (KA'BA ) -வைத்தான் சொல்கிறேன். மெக்கா நகரில் அமைந்துள்ள கஃபாதான் உலகின் மையம் என்ற கருத்து முஸ்லிம் அறிஞர்களிடையே நெடுங்காலமாக உள்ளது. அதற்கான எதிர்க்கருத்துக்களும் விவாதிக்கப் படுகின்றன. பல ஆன்மிக மரபுகள் உலகின் பல இடங்களைப் பூமியின் தொப்புள் என்று கூறியள்ளது போலவே மெக்கா நகரில் உள்ள கஃபாவும் "NAVEL OF THE EARTH " என்று அழைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அது பூமியின் முலையாகவும் பார்க்கப்பட்டுள்ளது. தமிழில் எழுதப்பட்டுள்ள இஸ்லாமிய நூல்களில்கூட மெக்கா நகரைக் குறிப்பிடும்போது "மண்ணின் மார்பகம்" என்றே சிலர் எழுதியிருக்கிறார்கள். (மண்ணின் தொப்புள் என்று இவர்கள் எழுதவில்லை.)



ஒரே ஆலயம் தொப்புளாகவும் மார்பாகவும் வருணிக்கப் பட்டுள்ளது. மனித உடலின் மையப்புள்ளி என்று தொப்புளைத்தான் கூறமுடியும். அந்த அர்த்தத்தில்தான் ஆலயங்கள் பூமியின் தொப்புள் எனப்பட்டன. 'மார்பு' என்று கூறப்பட்டது வேறு பொருளில். பிறந்து வெளியே வந்தபின் தாயுடன் ஒரு குழந்தை கொள்ளும் உறவின் குறியீடு அது! "கஃபா" என்னும் சொல்லுக்கு நேரடியான அர்த்தம் கன சதுரம் (CUBE ) என்பதுதான். "காஃப் - ஐன் -பே" என்னும் மூன்றேழுத்து வேர்ச்சொல்லில் இருந்து உருவான வார்த்தை அது. அதன் சார்பு அர்த்தங்களையும் சேர்த்துப் பின்வரும் மூன்று அர்த்தங்களைக் கூறலாம்:
1 . உயர்த்தப் பட்ட இடம். 
2 . கன சதுரம் (CUBE ) ( CUBE என்னும் ஆங்கில வார்த்தையின் மூலம் கஃபா என்னும் அரபி வார்த்தைதான்.) 
3 . உருவாகி வரும் வடிவம்.

கஃபா என்னும் சொல்லுக்குரிய வேர்ச்சொல்லுடன் தொடர்புடையதாக "காயிப்" என்னும் சொல் கருதப்படுகிறது. 'காயிப்' என்றால் 'முலை' என்று பொருள். தாயின் முலை குழந்தைக்குப் பால் ஊட்டி வளர்ப்பதுபோல் கஃபா மனிதனின் ஆன்மாவுக்குச் சக்தியைப் புகட்டுகிறது என்னும் கருத்தில் அதனை "மண்ணின் மார்பகம்" என்று அழைக்கிறார்கள்.
"ஆதி இறையில்லமே!
பூமியின் ஒற்றை முலையே!"
என்று ஒரு கவிதையில் கஃபாவைப் பற்றி என் பேராசிரியர் பீ.மு.மன்சூர் எழுதியிருந்தார்.

குழந்தை பிறந்து வெளியே வந்தவுடன் தாயின் பரிபாலனத்தைப் பெறுவதன் அடையாளமாக முலை இருப்பதால், இப்பிரபஞ்சம் வெளிப்பட்ட பின் இறைவனால் பரிபாலிக்கப் படுவதன் குறியீடாக அதனைக் கூறலாம். பிரபஞ்சம் வெளிப்படுத்தப் பட்டுள்ள நிலைக்கு சூஃபித்துவத்தில் 'அஃயானே காரிஜா' என்று சொல்லப்படும். ஒரே ஆலயம் இவ்வாறு தொப்புளாகவும் முலையாகவும் வருணிக்கப்படுவதன் மூலம் அது உள்ளும் புறமுமாக இருப்பதைச் சுட்டுகிறது. இறைத்தூதர் இத்ரீஸ் என்று கருதப்படும் ஹெர்மேஸ் (HERMES ) என்னும் கிரேக்க ஆத்மஞானி கூறிய "AS ABOVE SO BELOW , AS WITHIN SO WITHOUT " என்னும் தத்துவத்தை இது குறிப்பதாகவும் காணலாம்.

'கஃபா என்பது கன சதுர வடிவம். காயிப் என்பது கோள வடிவம். சதுரத்திற்கும் வட்டத்திற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா?' என்று மண்டையைச் சொறிந்தபோது பல விஷயங்கள் பளிச்சிட்டன. அவற்றைப் பின்னர் சொல்கிறேன்.

4 comments:

  1. //அவற்றைப் பின்னர் சொல்கிறேன்.//
    அருமை ஆசானே,
    அடுத்தது எப்போவென‌ ஆவலானேன்.

    ReplyDelete
  2. அரபுத் தமிழனோடு சேர்த்து இந்த சிங்கை தமிழனும் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  3. // அரபுத் தமிழனோடு சேர்த்து, இந்த சிங்கை தமிழனும், //

    இந்த நாகூர் எம் அப்துல் காதரும், சவுதியில்
    காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. //தாயின் முலை குழந்தைக்குப் பால் ஊட்டி வளர்ப்பதுபோல் கஃபா மனிதனின் ஆன்மாவுக்குச் சக்தியைப் புகட்டுகிறது என்னும் கருத்தில் அதனை "மண்ணின் மார்பகம்" என்று அழைக்கிறார்கள்.
    "ஆதி இறையில்லமே!
    பூமியின் ஒற்றை முலையே!"
    என்று ஒரு கவிதையில் கஃபாவைப் பற்றி என் பேராசிரியர் பீ.மு.மன்சூர் எழுதியிருந்தார்.//

    அப்படியா? முதல்முறையக இதனைக் கேள்விப் படுகிறேன்.

    ReplyDelete