Saturday, November 6, 2010

உருவெளிக் களங்கள் - 6

வரலாற்றைவிட புனைவுகள்தான் மனிதர்களின் ஆழ்மனதிற்குத் திருப்தியைத் தர முடியும் என்பதையே கலைகள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றன. முகலாய மன்னர் அக்பரின் ராஜபுத்திர மனைவி ஜோதாபாயின் கதை திரைப்படமாக வந்தபோது அக்பராக ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்ததை அறிந்து இப்படித்தான் தோன்றியது. வரலாற்றுக் குறிப்புக்களில் காணக்கிடைக்கும் அக்பரின் தோற்றத்துடன் ஹிருத்திக்கின் முகமும் உடலும் எந்த விதத்திலும் பொருந்தாது!அக்பர்  GENU VARUM என்று அழைக்கப்படும் கவட்டக் கால்கள் - வளைந்த கால்கள் - கொண்டவர். எனவே அவர் நடந்தால் 'டேஷூன்ட்' நாய் நடப்பதைப்போல் இருக்கும்! அத்துடன் அக்பர் சற்றே பருமனானவரும்கூட. அவரின் முகம் பம்பளிமாஸ் போல் பொத்தென்று இருக்கும். மூக்கு உருண்டை. கன்னத்தில் ஒரு பெரிய மரு. இப்படியொரு தோற்றத்தைத் தேடிக்கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்றுதான் ஹிருத்திக்கை அக்பராக நடிக்க வைத்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அல்லது அப்படிப்பட்ட உருவம் காமெடியனாகத்தான் தோன்றுமே தவிர ஹீரோவாக எடுக்காது என்பது காரணமாக இருக்கலாம். எப்படியோ ஒரு கவட்டைக்கால் குள்ளனை உலக அழகி ஒருத்தி உருகி வழிந்து காதலிக்கும் 'வரலாற்றுக் காட்சி'களை ரசிக்கும் வாய்ப்பு இந்தியர்களுக்குக் கிடைக்காமலே போய்விட்டது. குடும்பக் கட்டுப்பாட்டு முக்கோண வடிவமும் கத்திமூக்கும் சாம்பல் கண்ணும் செம்பட்டைத் தலையும் கொண்ட ஹிருத்திக்கின் முகம் எந்த விதத்திலாவது மன்னர் அக்பருக்குப் பொருந்துமா சொல்லுங்கள்?

ஆனால் வெகுஜனத்திற்குத் தேவை வரலாறு அல்ல. செவ்வியல் புனைவுகள்தான்! அந்த வகையில் பல்வேறு கால தேச மாற்றங்களுக்கு ஏற்ப பலவகைகளில் உருவகிக்கப்பட்ட இரண்டு ஆளுமைகள் என்று ஏசு நாதரையும் புத்தரையும்தான் கூறவேண்டும்.ஏசுநாதர் யூத மரபில் பிறந்தவர். எனவே அவருடைய தோல் கோதுமை நிறத்தில்தான் இருந்திருக்க வேண்டும். தலைமுடி நிச்சயமாகக் கறுப்புத்தான். கண்மணிகளின் நிறமும் கறுப்பே. இப்படித்தான் ஏசுவின் அசல் உருவத்தை நாம் நிர்ணயிக்க முடியும். ஆனால் ஐரோப்பிய ஓவியங்களையும் உலகெங்கிலும் உள்ள தேவாலயங்களையும் பார்த்தால் விதவிதமான ஏசு நாதர்களைக் காணலாம்! தங்க நிறக் கேசம் கொண்ட BLONDE ஏசுநாதர்கூட இருக்கிறார்! அரக்கு அல்லது நீல நிற விழிகள் கொண்ட ஏசுவையும் காணலாம். ஏசு அப்படித் தோன்றியிருக்க வேண்டுனானால் அவர் காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டிருந்திருக்க வேண்டும்!

இயேசுநாதரின் முகத்தை இவ்வாறு பல ஓவியர்களும் தங்கள் கற்பனைகளுக்கு ஏற்ப வரைந்துகொண்டிருந்தார்கள். அதில் அவர்களின் இனம், நாடு சார்ந்த அடையாளங்களை ஏற்றினார்கள். ஆனால் இந்தியாவின் தேவாலயங்களில் இந்தியனின் அடையாளமுள்ள ஒரு ஏசுவை நாம் காண முடிவதில்லை. ஏனெனில், வெள்ளையர்களின் ஆட்சியில் அவர்கள் வெள்ளைக்கார ஏசுவைதான் நமக்கு வழங்கினார்கள்! அமெரிக்கா, ஆப்ரிகா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கும் ஐரோப்பிய ஜாடை கொண்ட ஏசுநாதர்தான் சென்றார். வெள்ளையர்கள் கருப்பர்களைத் தாழ்வாக நடத்தும் போக்கு பல நூற்றாண்டுகளாக நடந்து வருவதால், தேவாலயங்களிலும் அந்த நிறபேதம் முகத்தில் அறையவே, தன்னை நாயை விடக் கேவலமாக நடத்தும் ஒருவனின் இன அடையாளங்களுடன் இருக்கும் ஏசுவை வழிபட கறுப்பர்களின் மணம் ஒப்பவில்லை. அவர்கள் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது தங்கள் நீக்ரோ அடையாளத்தில் ஒரு கறுப்பு ஏசுவை (BLACK JESUS ) உருவாக்கிவிட்டார்கள்!


கறுப்பின விடுதலை இயக்கத்தின் (BLACK LIBERATION MOVEMENT ) சமயவியல் கூறு என்று இதனைச் சொல்லலாம். யூத ஏசுவை ஐரோப்பியர்கள் ஒரு வெள்ளை ஏசுவாக மாற்றுவது சாத்தியம் என்றால் அவரை ஒரு நீக்ரோ ஏசுவாக மாற்றுவது ஏன் சாத்தியமாகாது? எனவே கறுப்பர்கள் தங்களுக்கான கறுப்பு ஏசுவை உருவாக்கி தங்களுக்கான தேவாலயங்களில் அவரைச் சிலுவையில் தொங்கவிட்டு வழிபடுகிறார்கள். கறுப்பு ஏசுவின் படங்களுடன் பைபிள் கதைகளை அச்சிட்டுத் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள்!ஆனால் பிரச்சனை இத்துடன் முடியாது. ஏசுவின் அன்னை மரியா ஒரு யூதப் பெண்ணாயிற்றே? அவருக்கு எப்படி நீக்ரோ குழந்தை பிறந்ததாகக் கூறுவது? எனவே, கன்னி மரியாளையும் ஒரு கறுப்புப் பெண்ணாக மாற்றிவிட்டார்கள்!

ஏசுநாதரின் உருவம் எப்போதும் சோகமயமாகவே வரையப்படுகிறது. சோகம்தான் ஆன்மிக வெளிப்பாடு என்பது போன்ற ஒரு கருத்தாக்கத்தை ஏசுவின்மீது ஏற்றிவிட்டார்கள். அவருடைய கண்களில் ஒருவித ஏக்கம் தென்படுவதையும் காணலாம். ஆனால் ஏசு ஒரு புரட்சியாளர். ஓஷோவின் பாஷையில் கூறுவதானால் அவர் ஒரு கிளர்ச்சியாளர்! ஐந்து வயது சிறுவனாகத் தன் பிறந்த மண்ணை நீங்கிச் செல்லும் ஏசு முப்பது வயது இளைஞனாக மீண்டும் ஜெருசலேம் நகருக்கு வருகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் எங்கு சென்றார் என்ன செய்தார் என்னும் விவரம் பைபிளில் இல்லை. எஸ்ஸீன்ஸ் என்னும் ஆன்மிகப் பள்ளியில் பயின்றார் என்றும், இந்தியாவிற்கு வந்து யோகிகளுடன் வளர்ந்து ஆன்மிகம் பயின்றார் என்றும், புத்த ஞானிகளுடன் தங்கி தியானம் பயின்றார் என்றும் பல யூகங்கள் உள்ளன. ஆனால் ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. முப்பது வயதில் அவர் வந்தபோது துடிப்பு மிக்க இளைஞனாக, யூதர்களின் அநியாயங்களை என்திர்க்கும் ஒரு கிளர்ச்சியாளராகத்தான் அவர் வந்தார்.ஜெருசலேமின் யூதக் கோயிலுக்குள் (SYNAGOGUE ) நுழையும் ஏசு அங்கே அமர்ந்து வட்டித்தொழில் செய்துகொண்டிருந்தோரையும் வேன்புராக்களைக் கூண்டில் அடைத்து விற்றுக் கொண்டிருந்தோரையும் சாட்டையால் விளாசித் தள்ளினார் என்று பைபிள் கூறுகிறது (மார்க்கு 11 : 15 ). இக்காட்சியை ஒரு ஐரோப்பிய ஓவியத்தில் கண்டபோது முதன் முதலாக ஏசுவின் முகத்தில் வீரம் ததும்புவதைக் கண்டேன். ( குறிப்பு: பைபிளின் இந்தக் காட்சிதான் 'எங்கள் வீட்டுப் பிள்ளை' படத்தில் இரண்டாம் எம்.ஜி.ஆர் எண்ட்ரி ஆகி 'நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்' என்று சாட்டையை விளாசிக்கொண்டு பாடும் பாடலுக்கான இன்ஸ்பிரேஷன் என்று எண்ணுகிறேன்.) 

வாயில் பற்கள் தெரிய சிரிக்கும் ஏசுவைப் பார்க்க வேண்டும் என்றும் ஒரு ஆசை இருந்தது. ஏனெனில் ஏசுவுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கோ சிரிக்கும் முகங்களைத்தான் பிடிக்கும். சிடுசிடு மூஞ்சிகளையோ உம்மனாமூஞ்சிகளையோ அவர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே ஏசு மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டிருந்த கணங்கள் அவர் வாழ்க்கையில் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அந்தக் கணங்களை மெல் கிப்சன் (MEL GIBSON ) இயக்கிய "THE PASSION OF THE CHRIST " (2004 ) என்னும் திரைப்படத்தில் கண்டேன். தன் அன்னை மரியைக்கு மகனாக, ஒரு தச்சனாக சாதாரணமான வாழ்க்கைக் கணங்களை முழுமையாக வாழும் ஒரு ஏசுநாதரைச் சில காட்சிகளில் மெல் கிப்சன் காட்டியிருந்தார்.
பைபிள் குறிப்பின்படி ஏசுநாதருக்கு முப்பத்துமூன்று வயதாக இருக்கவேண்டும் என்பதால் ஜேம்ஸ் கேவீசல் (JAMES CAVIEZEL ) என்னும் 33 வயது நடிகரை ஏசுநாதராக இப்படத்தில் மெல் கிப்சன் நடிக்கவைத்திருந்தார். இந்த விஷயமும் என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில், தொலைக்காட்சியில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்த என் சிறு பிராயத்தில் ஏதேனும் கிருத்துவப் பண்டிகை வந்துவிட்டால் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் ஒரு பாடலைக் கட்டாயம் போடுவார்கள். "தேவ மைந்தன் போகின்றான், மேரி மைந்தன் போகின்றான்" என்று வரும் அப்பாடலில் சிலுவை சுமந்து செல்லும் ஏசுவாக ஒருவரைக் காட்டுவார்கள். அவருக்கு ஐம்பது வயது இருக்கும்! பாருங்கள், ஏசுநாதர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்னும் நல்ல எண்ணம் ஒரு தமிழ்ப்பட இயக்குனருக்குத்தான் இருந்திருக்கிறது! 

ஏசுநாதரின் ஜாடை உண்மையில் யாருடையது? அவர் 'தந்தை' இல்லாமல் பிறந்தவர். அசெக்சுவல் பிறப்பின் வெளிப்பாடு. இதை பைபிளும் குரானும் கூறுகின்றன. வானவர் தலைவர் ஜிப்ரயீல் (GABRIEL ) மண்ணுக்கு வந்து அருள்வாக்கு சொல்லி ஏசுவின் ஆன்மாவை கன்னிப் பெண்ணான மரியாவின் கர்ப்பப் பைக்குள் 'ஊதி'யதால் ஏசு பிறக்கிறார். அதாவது அவருடைய உடல் என்பது முழுக்கவும் மரியாவின் 24 குரோமோசோம்களைக் கொண்டு உருவானது. மரியாவின் DNA -வில் அவருடைய பெற்றோர்களின் ஜீன் செய்திதான் இருக்கும். அந்தச் செய்திகளின் அடிப்படையில் உருவான ஏசுநாதரின் உருவ அமைப்பு மரியாவின் தந்தையைப் போல் இருக்க வாய்ப்பு உள்ளது. தாத்தாவின் ஜாடையில் பேரப் பிள்ளைகள் இருப்பது சகஜம்தானே? மரியாவின் தந்தை ஒரு மன்னர். 'இம்ரான்' என்பது அவர் பெயர். திருக்குரானின் மூன்றாம் அத்தியாயம் 'ஆலி இம்ரான்' (இம்ரானின் குடும்பம்) கன்னி மரியை மற்றும் ஏசுநாதர் பற்றிப் பேசுகிறது. ஆக, ஏசுவின் உருவத்தில் ஒரு ராஜ களை இருந்திருக்க வேண்டும். "I AM THE KING " என்று அவர் பேசியது ஆன்மிக அடிப்படையில் என்றாலும் ரோம் கவர்னருக்கு அது அரசியல் சிக்கலை உண்டாக்கியதற்கு இதுவும் ஒரு காரணமாகலாம்!

ஏசுவின் உருவமூலம் பற்றி இன்னொரு பார்வையும் உள்ளது. சூஃபி ஞானி இப்னுல் அரபி அவர்களின் கருத்து அது. அதாவது ஏசுநாதர் எந்த உருவத்தில் பிறக்க வேண்டும் என்று இறைவனின் ஞானத்தில் இருந்ததோ அந்த உருவம் கொண்டுதான் ஜிப்ரயீல் கன்னி மரியாவின் முன் தோன்றினார் என்று அவர் கூறியுள்ளார். இந்தக் கருத்து உண்மையிலேயே புதுமையானதுதான்.  

மரியாவின் முன் வானவர் தலைவர் ஜிப்ரயீல் தோன்றி நற்செய்தி சொல்லும் சம்பவம் பைபிளிலும் குரானிலும் வருகிறது. ஆனால் விவரணைகள் சற்று வேறுபடுகின்றன. இந்த நிகழ்வைக் கூறும் பைபிள் பகுதி லூக்கா ( 26 -38 )-ல் தனிமையில் இருந்த மரியாவிடம் வானவர் ஜிப்ரயீல் தன் சுய உருவில் வந்ததாக இடம்பெற்றுள்ளது. அதாவது அவர் சிறகுகள் வைத்துக்கொண்டு வந்தார் என்பது கருத்து. எனவேதான் இந்த நிகழ்வை ஓவியங்களாகத் தீட்டிய பல கிருத்துவ ஓவியர்கள் ஜிப்ரயீலை சிறகுகளுடன் வரைந்தார்கள்.இது சூபி ஞானி இப்னுல் அரபியின் கருத்தில் பொருந்தவில்லை. ஏனெனில், அவர் வாதத்தின் படி, ஜிப்ரயீல் சிறகுகளுடன் மரியாவின் முன் தோன்றியிருந்தால் ஏசுநாதரும் சிறகுகளுடன் பிறந்திருக்கவேண்டும்! இப்னுல் அரபியின் கருத்து திருக்குரானை அடிப்படையாகக் கொண்டது. ஏசுவின் பிறப்பு பற்றிப் பேசுகின்ற திருக்குரானின் இன்னொரு அத்தியாயம் 'மர்யம்' (எண்: 19 ). மனிதர்களை விட்டு ஒதுங்கித் தனிமைத் தியானத்தில் இருந்த மரியாவின் முன் வானவர் ஜிப்ரயீல் தோன்றியதை இந்த அத்தியாயத்தின் 16 ,17 -ம் வசனங்கள் பின்வருமாறு பேசுகின்றன:

"இந்த வேதத்தில் மர்யமை நினைப்பீராக.
அவர் தன் இல்லத்தினரை நீங்கிக்
கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் தனித்தபோது
அவர்களை விட்டு ஒரு திரையை அமைத்துக் கொண்டார்.
அப்போது நாம் அவரிடத்தில் நம் ஆன்மாவை அனுப்பிவைத்தோம்.
அவருக்கு ஒரு நிறைவான மனிதராக
அவர் தோன்றினார்"

இந்த வசனத்தில் "நிறைவான மனிதராக அவர் தோன்றினார்" என்பது அரபி மூலத்தில் " பதமஸ்ஸல லஹா பஷரன் சவிய்யா" என்றுள்ளது. தமஸ்ஸுல் என்பது கண்ணுக்குப் புலப்படும் உருவத் தோற்றத்தைக் குறிக்கும். பஷர் என்னும் அரபிச் சொல்லும் உருவ நிலையில் உடல் தோற்றம் கொண்ட மனிதனையே குறிக்கும். சவிய்யா என்னும் அரபுச் சொல் 'செவ்வை' (PERFECT ) - குறைகளற்ற என்னும் பொருள் தரும். எனவே, வானவர் தலைவர் ஜிப்ரயீல் குறையற்ற ஒரு மனித உடலின் தோற்றத்துடன் வந்தார்கள் என்றாகிறது. இதை வைத்துத்தான் இப்னுல் அரபி தன் கருத்தை முன்வைத்துள்ளார்கள்.

ஏசுவின் ஆன்மா கன்னி மரியாவின் கர்ப்பவறைக்குள் எவ்வாறு சேர்ந்தது என்பதைச் சிந்திக்கும் போது பெண்ணின் உடலியல் சார்ந்த சிந்தனைகள் எழுந்துவிடுகின்றன. இந்த நிலை பல முஸ்லிம் சிந்தனையாளர்களைச் சங்கடப் படுத்தியுள்ளது. இறைத்தூதராக முஸ்லிம்கள் மதிக்கும் ஏசுநாதரின் பரிசுத்த அன்னையின் மீது சற்றே பிசகிய எண்ணம் எழுவதையும் ஒரு முஸ்லிமால் அனுமதிக்க முடியாது! இதனால், ஏசுவின் ஆன்மா மரியமின் கற்பத்திற்குள் சேர்க்கப்பட்ட முறை பற்றிச் சிந்திப்பதில் பலரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதில்லை. இந்த நிகழ்வு கிருத்துவ இறையியலில் ANNUNCIATION என்று கூறப்படுகிறது. இதைப் பற்றித் திருக்குரானின் 66 -ம் அத்தியாயம் "அத்-தஹ்ரீம்" ( 'தடை' என்று அர்த்தம்!)-ல் வரும் 12 -ம் வசனம் பின்வருமாறு கூறுகிறது:

"மேலும் இம்ரானின் புதல்வியான மர்யமையும்
(அல்லாஹ் உதாரணமாக்கினான்)
அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்.
நாம் அதில் நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம்"  

இந்த வசனத்தின் அரபி மூலத்தில் "ஃபர்ஜ்" என்னும் வார்த்தை வந்துள்ளது. ஃபர்ஜ்  என்னும் வார்த்தை இங்கே ஆகுபெயராக அல்லது குறியீட்டுப் பெயராகக் 'கற்பு' என்று அர்த்தம் பெற்றுள்ளது. அதன் நேரடி அர்த்தம் "யோனி" என்பதாகும். கற்பைக் காப்பது என்பது மறைவுறுப்பைப் பாவங்களை விட்டும் காப்பதுதானே! நான் மேலே கொடுத்திருக்கும் வசன மொழிபெயர்ப்பு ஹாஜி முஹம்மது ஜான் அவர்களுடையது.
அவர் மிகத் தெளிவாகவே கற்பு என்று மொழிபெயர்த்துள்ளார். இதை வைத்துத்தான் "நாம் அதில் நம் ஆத்மாவிலிருந்து ஊதினோம்" என்னும் வசனப் பகுதியை விளங்க முடியும். இதை இவ்வாறு விளங்குவதற்கு சில மனங்கள் தயங்குகின்றன. சவூதி அரசு வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பில், முஹம்மது தகியுத்தீன் ஹிலாலி மற்றும் முஹம்மது முஹ்சின் கான் ஆகிய மொழிபெயர்ப்பாளர்கள் ஆத்மாவை இறைவன் மர்யமின் ஆடையின் கையுறையில் ஊதினான் என்பதாகக் கூறியுள்ளார்கள். அவர்களின் மொழிபெயர்ப்பு இது:

"And Maryam (Mary), the daughter of 'Imran who guarded her chastity. And We breathed into (the sleeve of her shirt or her garment) through Our Ruh [i.e. Jibril (Gabriel)]" (66: 12)

இவ்வசனத்தின் மொழிபெயர்ப்புக்கான அடிக்குறிப்பில் அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளார்கள்: 
"*It is said that Jibril (Gabriel) had merely breathed in the sleeve of Maryam's (Mary) shirt, and thus she concieved ."

இந்த மொழிபெயர்ப்பும் அடிக்குறிப்பும் வசனத்தின் அரபி மூலத்திற்குப் பொருந்தவில்லை. ஊதப்பட்டது ஆன்மாதான். அது ஸ்தூலத்தை எவ்விதத்திலும் பாதிக்காமல் செல்லவல்லது. எனவேதான் கர்ப்பம் தரித்த பின்னரும் மர்யம் கன்னியாகவே இருந்தார்கள்!

  

4 comments:

 1. அற்புதம்.அமெரிக்காவில் வாழ்ந்த எட்கார் கேசி என்ற மறை உணர்வாளர் கொடுத்த ஏசு பற்றிய சித்திரம் ஏறக குறைய இதே மாதிரியானதே.ஏசு ஆறடி கனத்த சரீரம் உடையவர்.உணவுப் பிரியர்.வழக்கமான சோகப் பிம்பத்துக்கு மாறாக நகைச்சுவை உணர்வு மிக உடையவர் என்பார்.விவிலியத்தை சற்று முன் முடிவுகளைக் கழற்றிவிட்டுப் படித்தால் அவரது நகைச் சுவை உணர்வை ஆங்காங்கே காணலாம்.சீசருக்கு வரி கொடுக்க வேண்டுமா கடவுளுக்கா என்ற பார்சிக்களின் கேள்வியிலிருந்து அவர் தப்பித்த விதம நிச்சயம் புன்னகையை வரவழைக்கும்.ஆனால் என்ன செய்வது.. அவரை ட்ராஜடி கிங்காக காட்டுவதே கிறித்துவத்தை பரப்ப எளிதான வழி என்று பால் நினைத்துவிட்டார்!

  ReplyDelete
 2. அருமை,அருமை,
  கருத்துக்கள் செறிந்த குறும்புகள் நிறைந்த
  எழுத்துச் சித்திரம் உங்கள் கைவண்ணத்தில்

  ReplyDelete
 3. http://www.jesusneverexisted.com/melange.html

  ReplyDelete
 4. கருப்பின ஏசுவின் உருவையும், மரியாளையும் முதல் முறியாக இங்கேதான் தரிசித்தேன். நல்ல் ஆய்வுடன் எழுதியுள்ளீர்கள்.சிறப்பான கட்டுரை.

  ReplyDelete