21, மே – உலகம் எங்கும் தேநீர் தினம் என்று ஐ.நா. சபை அறிவித்ததன் பேரில் உலகெங்கும் தேநீர் கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன. எனக்கோ தியானத்திற்கு உதவியாக ஒரு கோப்பைத் தேநீர் அமையும் தினம் எல்லாமே அக உலகின் தேநீர் தினம்தான்.
ஆம்,
தேநீருக்கும் தியானத்திற்கும் தொடர்பு உண்டு. தேநீரைக் கண்டு பிடித்தவர் போதி
தர்மர் என்கிறார்கள். சீனாவில் அவர் பயணித்தபோது அதைக் கண்டு பிடித்திருக்கிறார்.
அதாவது தேநீர் இலைகளைக் கொதிக்க வைத்து பானம் தயாரிக்கலாம் என்பதைக்
கண்டுபிடித்திருக்கிறார். சீன மொழியில் அதற்கு ’டே’ (Te) என்று பெயர். அதையே
ஆங்கிலத்தில் டீ என்றும், அதன் பானத்தை தமிழில் தே+நீர் = தேநீர் என்றும்
அழைக்கிறோம். நியாயப்படி, போதிதர்மரின் பிறந்த தினத்தைதான் உலகத் தேநீர் தினமாகக்
கொண்டாட வேண்டும்.
உலகத்
தேநீர் தினம் பற்றிய செய்தியை வாசித்ததும், அண்மையில் நான் பருகிய அருமையான தேநீர்
குறித்து என் நினைவு ஓடியது. (அண்மையில் காஃபி தருணங்கள் சிலவும் அமைந்தன. சென்ற
மாதம் சென்னையின் ஃபீனிக்ஸ் மாலில் பருகிய ஹேகன் டாஸ் (Haagen Dazs), பெசண்ட்
நகரில் அருந்திய தேர்டு வேவ் காஃபி, ஸ்ரீரங்கம் முரளி ஃபில்டர் காஃபி, ‘ஆஸி
பைட்ஸ்’ என்னும் கடையில் பருகிய பச்சை நிறத்திலான பிஸ்தா காஃபி ஆகியவை முதல்
நான்கு நாட்களுக்கு முன் ஏற்காடு கிராஞ்ச் எஸ்டேட்டில் பருகிய ஹேஸல்நட் காஃபி
வரை.)
சென்ற
மாத இறுதியில் சில நாட்கள் சென்னையில் சகலையின் வீட்டில் தங்கி இருந்தேன்.
வாசிப்பதற்கு என்று ஓஷோவின் நூல் ஒன்றை எடுத்துச் சென்றிருந்தேன். ”தி புக் ஆஃப்
விஸ்டம்” என்னும் அந்த நூல் திபெத்திய ஞானி அதிஷா என்பவர் மனம் செம்மையுற போதித்த
ஏழு பயிற்சிகள் (seven points of mind training) குறித்து விரிவாகப் பேசுகிறது.
‘அடிப்படையான சாட்சிபாவத்தில் அமைந்து விடு. அதாவது சாராம்சத்தில்’ என்று அவர்
சொல்கிறார். ”பாஸ் அன்ஃபாஸ்” என்று சூஃபிகள் கூறும் மூச்சுப் பயிற்சியில் அதுதான்
நிகழ்கிறது.
சகலையின்
தந்தைக்கு திடீரென்று உடம்புக்குச் சரியில்லாமல் போய் ’கெரி கேர்’ மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். அண்ணன் ஹஜ் பயணத்திற்குப் புறப்படும் ஏற்பாட்டில் இருந்ததால்
சில மணி நேரங்கள் நான் மருத்துவமனையில் துணைக்கு இருந்தேன். ஆதம்பாக்கம் முதலாம்
சாலையின் நெடுக்கில் சென்றால் நேரு நெடுஞ்சாலையில் கொண்டு போய் மருத்துவமனைக்கு
அருகில் விட்டுவிடுகிறது. இரண்டு முறை மருத்துவமனைக்குப் போய் வந்தேன். காலை
பதினொரு மணி வாக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது தேநீர் அருந்த வேண்டும்
என்று தோன்றியது. யூனிவர்சல் என்று ஒரு டீக்கடை இருந்தது. அதில் கூட்டம்
மொய்த்தது. தனிமையில் அமர்ந்து தேநீர் அருந்த ஏதேனும் கடை கிடைத்தால் பார்க்கலாம்
என்று நகர்ந்துவிட்டேன். சற்று தூரம் வந்ததும் அப்படி ஒரு கடை கண்ணில் பட்டது. ’Seasoned
Café’ என்னும் அந்தச் சிற்றுண்டிக் கடையில் யாருமே இல்லை, கடைக்காரர் கூட! உள்ளே
போய் அழைத்த பின்னர் உள்ளறை ஒன்றிலிருந்து வந்தார். மெனு பார்த்துவிட்டு ஒரு லெமன்
டீ சொன்னேன். தோராயமாகப் பத்துக்குப் பத்து சதுர அடிகள் உள்ள இடத்தில் மூன்று
மேஜைகள் போட்டு சிறிய புல்வெளி போல் பரப்பி செடிகள் வைத்து ஜென் தோட்டம் போல்
அலங்கரித்திருந்தார். கண்ணாடிக் கோப்பையில் அவர் கொடுத்த லெமன் டீ வீட்டில்
சகதர்மினி போட்டுத் தரும் தேநீரின் நிறத்திலேயே இருந்தது. (அவள் தரும் சுலைமானி டீ
எப்போதும் ’தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி’ என்று சூரியன் உதிக்கும்
கீழ்வானம் பற்றி பாரதி சொல்வது போல் ஆரஞ்ச் நிறமாக இருக்கும். மேலும் பால் கலந்த
தேநீரில் அவளே கண்டுபிடித்த தயாரிப்பு முறையில் இரண்டு வகை உண்டு. அவற்றுக்கு நான்
ஸ்மோக்கீ பானு டீ மற்றும் ரோஸி பானு டீ என்று பெயர்கள் சூட்டியிருக்கிறேன்.) நிதானமாக
பதினைந்து நிமிடங்கள் அனுபவித்துப் பருகினேன். அதுவரை டீ தழல் குறையாமல் – அதாவது
சூடு ஆறாமல் – இருந்தது. சென்னையின் தட்ப வெப்பம் அதற்கு உறுதுணை செய்தது. எல்லாப்
புகழும் இறைவனுக்கே! நான் பருகி எழும் வரை கடைக்கு வேறு எவரும் வரவில்லை.
மீண்டும், எல்லாப் புகழும் இறைவனுக்கே!
தேநீரை
வைத்து சீனர்களிடமும் ஜப்பானியர்களிடமும் வாழ்வியல் பார்வைகள் பல உருவாகி உள்ளன.
அவற்றுள் ஒன்று: தேநீர்க் கோப்பையை ஒருபோதும் முழுமையாக நிரப்பக் கூடாது.
விருந்தினருக்கு அளிக்கும்போதும் முக்கால் பாகம் மட்டுமே நிரப்பித் தர வேண்டும்.
இது ஏன்? இதற்கான காரணத்தை, சீனாவின் ஷென்சென் மாகாணத்தின் பண்பாட்டு மற்றும்
சுற்றுலாத் தூதரும் டிஜிட்டல் ஆளுமையுமான டான் லீ என்பவர் இப்படி விளக்கிச் சொல்கிறார்:
”சீனாவில்
நாங்கள் எப்பொதும் ‘நிறைவாக’ அல்லது ‘முழுமையாக’ இருப்பதைத் தவிர்க்கிறோம். என்
மேற்கத்திய நண்பர்களால் இதைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. உதாரணமாக, யாரேனும்
‘நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்கள்’ என்றோ, ‘நீங்கள் கச்சிதமாகச் செய்தீர்கள்’
என்றோ சொன்னால், சீனர்களாகிய நாங்கள் உடனே ‘மெய் யூ மெய் யூ’ – ‘இல்லை இல்லை’ –
‘நின் குவோ ஜியாங் லே’ – ‘நீங்கள் என்னை மிகையாகப் புகழ்ந்து விட்டீர்கள்’
என்றுதான் சொல்வோம். இதையே என் ஆங்கிலேய நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் ‘நன்றி’
என்றும் ‘நீங்கள் மிகவும் அன்பானவர்’ என்றும் சொல்வார்கள்.
”மேற்கத்திய
ஓவியங்கள் மற்றும் சீன ஓவியங்கள் ஆகியவற்றுக்கு இடையே நீங்கள் இந்த ஒரு
வித்தியாசத்தையும் கவனிக்கலாம். மறுமலர்ச்சிக் காலத்தில் (Renaissance period)
அல்லது பரோக் (Baroque) காலத்தில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஓவியங்களைப் பாருங்கள்.
கேன்வஸ் (திரை) முழுமயாக நிரப்பப் பட்டிருக்கும். பொருட்கள், ஒளி, மனிதர்கள்,
பூக்கள்… என்று திரை முழுவதும் நிரப்பப்
பட்டிருக்கும். ஆனால், சீன ஓவியங்களில் வேண்டுமென்றே வெற்றிடங்கள் விடப்பட்டிருப்பதை
நீங்கள் மிக எளிதாக கவனிக்கலாம். சில மலைகள், ஒரு ஆறு, ஒற்றைப் படகில் ஒரு மீனவன்,
மற்றும் நிறைய வெற்றிடங்கள்.
”இது சீனத் தத்துவத்தில் எளிய சிந்தனை
ஒன்றைச் சுட்டுகிறது: ’மன் ஜாவோ சுன் கின் ஷௌ இ’ – ‘நிறைவு சரிவைத் தொடங்கி
வைக்கிறது, குறைவு வளர்ச்சிக்கான அழைப்பாகிறது.’ இதனால்தான், நீங்கள் சீனர்
ஒருவரின் வீட்டுக்கு விருந்தாளியாகச் சென்றால், அவர் உங்களிடம் ‘மன்னிக்க
வேண்டும், இன்றிரவு உணவு அவ்வளவு நன்றாக இல்லை’ என்றோ ’என் உபசரிப்பு அவ்வளவு
நன்றாக இல்லை’ என்றோ கூறுவார். மேஜை முழுவதும் சுவையான பல உணவுகள் நிரப்பப்
பட்டிருந்தாலும் அவர் உங்களிடம் ’போதிய அளவு உணவு வகைகள் இல்லை’ என்றே சொல்வார்.
என் ஆங்கிலேய நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள், ‘டான், பாராட்டுக்களை
நீங்கள் ஏன் எப்போதும் மறுத்துக் கொண்டே இருக்கிறீர்கள்? உங்கள் உபசரிப்பு நன்றாக இல்லை என்றே ஏன்
எப்போதும் சொல்கிறீர்கள்?’ அது ஏனெனில், நாங்கள் மிகையை, அளவு மீறுவதை எப்போதும்
தவிர்க்கிறோம்.
“நிலவு தன் முழுமையை அடையும்போது தேய
ஆரம்பிக்கிறது. ஒரு கோப்பையில் தேநீர் நிரம்பியதும் அது வெளியே சிந்த
ஆரம்பிக்கிறது. ஆற்றல் தன் சிகரத்தை அடைந்தவுடன் குறைய ஆரம்பிக்கிறது.
“சீனர்களிடம் உள்ள 24 சூரிய கால
வாக்குகளில் ஒன்று: ஜியாவ்மன் – சிறிய நிறைவு. இது ‘டாமன்’ – பெரிய நிறைவு அல்ல.
அப்படி ஒன்று கிடையாது. ஆனால், ஜியாவ்மன் – சிறிய நிறைவு உள்ளது. அது, தானியங்கள்
ஏகபோகமாக விளைந்து, ஆனால் இன்னும் முற்றாத பருவகாலத்தைக் குறிக்கிறது. நீர்
எழுந்து வருகிறது, மழை அதிகமாகிறது, ஒவ்வொன்றும் அபிவிருத்தியை நோக்கிச் சீர்
மல்கி வருகின்றன. ஆனால் எதுவும் இன்னும் அவற்றின் எல்லையை அடையவில்லை. இது ஒரு
வகையான சமனம். இந்த நிலையைத்தான் சீனர்கள் அடைய விழைகின்றனர். அதனால்தான் சீனத்
தேநீர்க் கோப்பை ஒருபோதும் நிரம்பியதாக இல்லை.”
டான் லீ-யின் பேச்சில் தாவோவின்
தாக்கம் அதிகம் தெரிகிறது. வேறு எப்படி இருக்க முடியும்? குறிப்பாக இந்த வரிகள்:
நிலவு
தன் முழுமையை அடையும்போது
தேய
ஆரம்பிக்கிறது.
ஒரு
கோப்பையில் தேநீர் நிரம்பியதும்
அது
வெளியே சிந்த ஆரம்பிக்கிறது.
ஆற்றல்
தன் சிகரத்தை அடைந்தவுடன்
குறைய ஆரம்பிக்கிறது.
இது அப்படியே ’தாவோ தெ ச்சிங்’ நூலில்
லாவோ சூ பேசுவது போன்று உள்ளது.
டான் லீ-யின் விளக்கத்தை
அவதானித்தபோது என் பால்ய காலத்தின் நினைவு ஒன்றை அடைந்தேன். அப்போது எனக்கு
ஏழெட்டு வயது இருக்கலாம். என் தாய் வழித் தாத்தாவின் வீட்டில் ஓவியம் ஒன்று
சுவரில் தொங்க விடப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தின் வடிவமும் மூலப்பொருளும்தான் என்
கருத்தை முதலில் கவர்ந்திருக்க வேண்டும். அது ஓரடி அகலமும் மூன்றடி உயரமும்
கொண்டதாக இருந்தது, மிக நீளமாக. அது ஓலைச் சுவடி போல் மெல்லிசான மூங்கில்
பிளாச்சுகளைக் கோர்த்து உருவாக்கப் பட்டிருந்தது. அதன் இரண்டு ஓரங்களில் மெல்லிய
மூங்கில் குச்சிகள் பொருத்தப் பட்டிருந்தன. பழுப்பு மஞ்சள் நிறமான அந்த மூங்கில்
திரையில் ஒரு சீன ஓவியம் அச்சிடப்பட்டிருந்தது. அது கறுப்பு நிற மை கொண்டு மட்டுமே
வரையப் பட்டிருந்தது. உயரமான மலைகள். அவற்றின் முகடுகள் மீது தவழும் மேகங்கள்.
அருவி ஒன்று இறங்கி ஆறாக ஓடுகிறது. மலை முகட்டில் ஒரு குடில். கீழே ஆற்றில் ஒரு
படகு. அதில் ஒரு மீனவன். அதன் ஓரிடத்தில் சீன மொழியில் ஏதோ எழுதியிருந்தது.
‘இவ்வளவு பெரிய காட்சியை எப்படி இவ்வளவு சிறிய திரையில் வரைய முடிந்தது?’ என்று
நான் மீண்டும் மீண்டும் அந்த ஓவியத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஓவிய
உலகின் நுட்பங்களிடம் என்னை ஈர்த்த முதல் ஓவியம் அதுவாகத்தான் இருக்கும்.
தாவோ மற்றும் ஜென் குறித்துப்
பின்னால் வாசிக்கும்போதுதான் தெரிந்தது. தியானத்திற்கான அறையில் இத்தகைய ஓவியம்
ஒன்றை மாட்டி வைப்பார்கள். அந்த ஓவியத்துடன் ஒரு ஹைகூ கவிதை எழுதப்பட்டிருக்கும்.
தியானத்திற்கு முன் பச்சைத் தேநீர் தந்து உபசரிப்பார்கள். ஓவியம், ஹைகூ, பச்சைத்
தேநீர் ஆகியவை எல்லாம் தியானத்திற்கு இட்டுச் செல்பவையாக இருக்கும். பால்ய வயதில்
நான் ரசித்த அந்த ஓவியத்தில் இருந்த சீன எழுத்துக்கள் தாவோ வாசகங்களாக இருக்க
வேண்டும். லாவோ சூ-வின் சொற்களாகவும் இருக்கலாம்.
டான் லீ சுட்டிக் காட்டுவது போல் அந்த
ஓவியத்திலும் வெற்றிடங்கள் அதிகமாக இருந்தது. ஆனால், திரையைப் பொறுத்துதான் அது
வெற்றிடம். ஓவியன் தீட்டாமல் விட்ட அந்த வெற்றிடம் காற்று நிரம்பிய வெளியைக் குறிக்கிறது.
அல்லது, தீட்டாமல் விடும் உத்தியைக் கையாண்டு அந்த ஓவியன் காற்றை
வரைந்திருக்கிறான் என்றும் சொல்லலாம்.
அந்த ஓவியத்தைப் பார்க்கும் போது அதன் வெற்றிடம் குறிக்கும் காற்றை நாம்
சுவாசிக்க ஆரம்பித்து விடுகிறோம். அப்படியாக அது நம்மை தியானத்திற்குள் இட்டுச்
செல்கிறது. உலகின் ஏனைய மரபுகளில் ஓவியர்கள் புறவுலகம் நம் மனத்தில் படிவதை
வரைகிறார்கள் என்றால் சீன மற்றும் ஜப்பானிய ஓவியர்கள் புறவுலகைத் தன்னில்
வைத்திருக்கும் பிரக்ஞையைப் பார்வையாளன் உணரும்படி வரைகிறார்கள்.
சீன மற்றும் ஜப்பானிய (அதாவது, தாவோ
மற்றும் ஜென்) கலைகள் அனைத்திலுமே இந்த வெற்றிடம் உண்டு. அதுவே அந்தக் கலைக்கு
உயிர்ப்பைத் தருகிறது. அது உருவத்துக்கும் அருவத்துக்கும் பாலமாகிறது. அவர்களின்
கவிதைகள் மிகவும் குறைந்த சொற்களால் ஆனவை. சில சொற்களை எடுத்து வைத்தல்தான்
அவர்களின் கவிதைக் கலை. நம்மிடம் இருப்பது போல் சொற்களின் பிரவாகம் அல்ல.
அவர்களின் இசையிலும் அந்த வெற்றிடம் இருக்கிறது. சில ஸ்வரங்களை வாசிப்பதுதான்
அவர்களின் இசை. அது விட்டிசைப்பு அதிகம் உள்ளது. ஒற்றைக் கருவி இசையே அவர்களிடம்
முதன்மையாக உள்ளது. ஐரோப்பிய சிம்ஃபொனி போன்ற ஆரவாரமான கூட்டிசை அவர்களிடம்
கிடையாது. அதேபோன்றுதான் அவர்களின் நடனமும். மிக மெதுவான அசைவுகளைக் கொண்டது.
வெற்றிடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தத் தன்மையே அவர்களின் கலையில்
இயல்பான ஓர் எளிமையைக் கொடுத்து விடுகிறது.
இந்தக் கட்டுரையை எழுதிக்
கொண்டிருக்கும் வேளையில் இரண்டு முறை தேநீர் அருந்திவிட்டேன். ஒன்று, வீட்டில்
நானே தயாரித்துப் பருகியது. மற்றது, கடையில். கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் முன்
பருகிய தேநீர் வழக்கமான லெமன் டீதான். ஆனால், அதில் இன்று ஒரு புதிய சேர்க்கை. ஒரு
சிறு கொப்பு ரோஸ்மேரி. [உலகமயமாக்கலின் சாதகமான அம்சங்களில் ஒன்று இது.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மட்டுமே விளையும் என்றிருந்த பழங்களும் தாவரங்களும்
எல்லா ஊர்களிலும் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. ஸ்ட்ராபெரியைத் தொடர்ந்து
ப்ளூபெரியும் வந்துவிட்டது. முன்பெல்லாம் கொத்துமல்லி, புதினா மட்டும்தான்
அறிவோம். பின்னர் வெங்காயத் தாள், செலரி, லீக்ஸ் என்று வந்தன. அந்த வரிசையில்
இப்போது உலராத ரோஸ்மேரி கொப்புகளைக் கொத்துக்கட்டி வைத்திருக்கிறார்கள்.]
இன்று மாலை, வேறொரு வேலையாக தில்லை நகர் சென்றேன். இடையே, ‘பிரவ்ன் ஷுகர்’
கஃபேயில் நுழைந்தபோது பாரிஸ்டாவின் மேஜை மீது தேநீர்க் கோப்பைகளின் நடுவில் ஒரு
பீங்கான் கிண்ணமும் மூங்கில் பிரஷ்ஷும் இருப்பதைப் பார்த்தேன். ‘மாட்ச்சா டீ
இருக்கா?’ என்று கேட்டபோது பணிப்பெண் ’ஆம்’ என்றார். தியானத்தில் தூங்கி வழியாமல்
இருப்பதற்காக ஜென் மடங்களில் சாதகர்கள் இந்த மாட்ச்சா தேநீர் அருந்துவது மரபு.
அந்த பானத்தைத் தயாரிப்பதே ஒருவிதமான தியானம்தான். அவ்வளவு நிதானமாகவும்
ஈடுபாட்டுடனும் தயாரிப்பார்கள். ஆனால், கஃபேயில் மிகத் துரிதமாக ‘போட்டு’க் கொண்டு
வந்து என் மேஜையில் வைத்துவிட்டார்கள். அந்த ’ப்ரோ’விடமே புகைப்படம் எடுத்துத்
தரச் சொன்னேன். மிக சந்தோஷத்துடன் என்னைப் படம் பிடித்துக் கொடுத்தார்.
ஜப்பானிய ஹைகூ கவியுலகின் சிகரங்களில்
ஒருவரான கோபயாஷி தனக்கு ‘இஸ்ஸா’ என்று புனைபெயர் வைத்துக் கொண்டார். அதற்கு
‘தேநீர்க் கோப்பை’ என்று பொருள். ஒவ்வொரு ஹைகூவும் ஒரு கோப்பைத் தேநீர்தான். பாஷோ
எழுதிய ஒரு தேநீர் ஹைகூவுடன் மௌனிக்கலாம்:
காலை
பச்சைத் தேநீர் அருந்தியபடி
அமைதியாக
ஒரு துறவி,
சாமந்திப் பூக்கள்.

.jpeg)




