Wednesday, November 3, 2010

உருவெளிக் களங்கள் - 5

ஞானிகளின் முகங்கள் மீது எப்போதுமே ஒரு தனி ஈர்ப்பு உள்ளது. கதைகளில் வருகின்ற ஞானியாரின் உருவங்கள் எப்போதும் சில தனித்தன்மைகளுடன் சித்தரிக்கப்படுகின்றன. அதில் மிக முக்கியமானது மூக்கு. முகம் எவ்வளவுதான் களையாக, பொலிவாக, நிறமாக இருந்தாலும் மூக்கு நேர்த்தியாக இல்லையென்றால் அந்த முகம் அவ்வளவாக சோபிப்பதில்லை. சில நேரங்களில் முக அமைப்பு ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது!'கிளியோபட்ராவின் மூக்கு மட்டும் சற்றே துருத்திக்கொண்டோ அல்லது அமுங்கியோ இருந்திருந்தால் எகிப்து மற்றும் கிரேக்க நாட்டின் வரலாறு வேறு விதமாக இருந்திருக்கும்' என்று கூறுவார்கள். சமீபத்தில் திருச்சிக்கு சோனியா காந்தி வந்துபோனார். சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ராகுல் காந்தியின் படமும், பிரியங்கா காந்தியின் படமும் இருந்தது. அதைப் பார்த்த என் மனைவி என்னிடம் சொன்னாள், "நல்ல வேளை இவங்க ரெண்டு பேரும் அவங்க அப்பா ஜாடையில வந்துட்டாங்க." நேரு குடும்பத்துக்கே அடையாளமாகிவிட்ட அந்த எடுப்பான மூக்குதான் என் மனைவியைக் கவர்ந்திருக்க வேண்டும். பிரியங்காவிடம் நான் கவனித்த இன்னொரு விஷயம் அவரது சிகையலங்காரம். அதாவது பையனைப் போல் பாய்கட் வெட்டியிருக்கிறார். அது அவருடைய முகத்தோற்றத்தை அவரது பாட்டி இந்திரா காந்தியைப் போல் காட்டுகிறது. வரலாற்று மீட்டுருவாக்கம் என்பது நம் நாட்டில் இப்படித்தான் உண்டாக முடியும் போலும்!ஜெயமோகன் எழுதிய 'திசைகளின் நடுவே' என்னும் அருமையான சிறுகதை ஒன்றுண்டு. மகாபாரத காலத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை வைத்து எழுதியுள்ளார். அதில் ஒரு சார்வாகன் வருகிறான். நாத்திகத்தை மெய்காண் முறையாகக் கொண்ட பொருள்முதல்வாதி. கார்ல் மார்க்சுக்குப் பூட்டனுக்குப் பூட்டன். அவனையும் ஒரு ரிஷியாகவே காண்கிறார்கள். ஜெயமோகன் அவனை இப்படி வருணிக்கிறார்: "பெருச்சாளித் தோலால் ஆன கோவணம் மட்டும் அணிந்த, நெடிய கரிய உடல். பூச்சிக்கடியிலிருந்து தப்ப உடம்பெங்கும் சாம்பல் பூசியிருந்தான். தாடியும் மீசையும் அடர்ந்த நீண்ட முகத்தில் எடுப்பான நாசி. ஜ்வலிக்கும் சிவந்த கண்கள். ஒரு கையில் சாலமரக் கிளையிலான யோகத்தண்டு. மறுகையில் மன்டையோட்டுத் திருவோடு. இவன்தானா? பிரமிப்பும் உத்வேகமும் என்னுள் நிறைந்தன."  இதேபோல் பலரும் எழுதியிருக்கிறார்கள். ஞானி என்றால் அவருக்கு மூக்கு எடுப்பாக இருக்கவேண்டும் என்பது ஒரு எழுதாத விதியாகிவிட்டது. ஆனால் சீனா, ஜப்பான் நாட்டிலுள்ள ஞானிகளின் மூக்குகள் சப்பையாகத்தானே இருக்கும்? லாவோ சூ, சுவாங் சூ, லேய் சூ என்னும் தாவோ மும்மூர்த்திகளின் முகங்கள் எப்படியிருந்திருக்கும்? சப்பை மூக்குடன்தான்! எடுப்பான மூக்குதான் ஞானிகளின் லட்சணம் என்பதற்காக ஞானம் அடைந்த கையோடு ஆஸ்பத்திரிக்குப் போய் 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்யமுடியுமா என்ன?

சூபி ஞானிகளின் பெயர்களைப் படிக்கும்போதெல்லாம் கற்பனையில் அவர்களின் உருவங்கள் நிழலாடும். ஆனால் எந்த சூபி ஞானியையும் நான் சப்பை மூக்குடன் கற்பனை செய்து ரசித்ததில்லை. ஒரு மங்கோலியனின்  கற்பனையில் அப்படி வருவார்களோ என்னவோ? அவரவருக்குப் பெர்சனல் அளவுகோல்கள் உண்டல்லவா? இமாம் கஜ்ஜாலி என்று சொன்னவுடன் நீண்ட தாடி வைத்த ஹசன் ஹஜ்ரத் என் நினைவில் வந்துவிடுவார். பாலக்கரையில் சைக்கிளில் சுற்றித் திரியும் ஒருவர்தான் என் டைரக்ஷனில் முல்லா நஸ்ருத்தீன்! வரலாற்று நாயகர்களை இப்படி சமகாலத்தில் கண்ணெதிரே கண்டு வாழ முடிகிறது! சிங்கப்பூர் பக்கத்திலிருந்து சூபி ஞானி என்று ஒருவரின் படத்தை நண்பர் ஒருவர் காட்டியபோது எனக்குப் பெரிதும் ஏமாற்றமே ஏற்பட்டது. சப்பை மூக்கும் சரியாக முளைக்காத மீசையும் தாடியுமாக பூனை கண்களை மூடிக்கொண்டதுபோல் இருந்தார்! உருவத்தை வைத்து அவரை சூபி ஞானி என்று என்னால் ஏற்கவே முடியவில்லை! ஆனால் அந்த நாட்டில் அவருக்குப் பல சீடர்கள் இருக்கக் கூடும். ஒரு குருவின் லட்சணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சூபித்துவ நூலில் பட்டியல் போட்டிருந்தது. அதில் புற லட்சணங்கள் பற்றிய லிஸ்டில் "அவர் சீடனின் கண்களுக்கு அழகாகத் தெரியும் தோற்றத்துடன் இருக்க வேண்டும்" என்று ஒரு குறிப்பும் இருந்தது. அதாவது அவர் அழகுப்போட்டிகளில் வரும் ஆணழகனைப் போல் இருக்கவேண்டும் என்பதல்ல. முகக்களை என்று கூறுகிறோமே, அது அவரிடம் இருக்கவேண்டும். ஞான வழியிலும் கவர்ச்சி நிச்சயம் வேலை செய்கிறது. அழகின் ஆகர்ஷணம் தேவைப்படுகிறது!

"இருபது இளம்பெண்களின்
அழகில் இல்லாத ஈர்ப்பு 
ஞானியின் கண்களில் உள்ளது"
என்று மௌலானா ரூமி பாடுவதைப்போல!ஹெர்மான் ஹெஸ்ஸே எழுதிய அற்புதமான நூல் 'சித்தார்த்தா'. அதில் இளம் சித்தார்த்தன் தன் நண்பன் கோவிந்தனுடன் சென்று புத்தரைக் காணும் காட்சி மிகவும் முக்கியமான ஒன்று. புத்தர் ஒரு ஞானி என்பதை அவரது தோற்றமே அவனுக்குக் கூறிவிடும். ஹெஸ்ஸே எழுதிய மிக அழகான வரிகளில் அவர் புத்தரை வருணித்து எழுதிய வரிகளும் அடங்கும்: "பணிவுடனும், சிந்தனையில் ஆழ்ந்தும் புத்தர் தன் பாதையில் சென்றார். அவருடைய முகம் மகிழ்ச்சியாகவும் இல்லை, சோகமாகவும் இல்லை. மறைந்த புன்னகையுடன், அமைதியாக, மௌனமாக, ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் போல, காவி அணிந்தவராக அவருடைய பிட்சுக்களை மாதிரித்தான், நேர்த்தியான விதிமுறையின்படிக்  காலடி எடுத்து வைத்து, புத்தர் நடந்தார். ஆனால் அவருடைய முகமும், அவருடைய நடையும், மௌனமாய்ச் சாய்ந்த பார்வையும், மௌனமாய் அசையும் கைகளும், ஒவ்வொரு விரலும்கூட அமைதியையும், முழுமையையும் வெளிப்படுத்தின. அவற்றில் தேடல் இல்லை, போலிமை இல்லை. அவை ஓர் உதிரா நிம்மதியில்,  ஓர் உதிரா ஒளியில், தீண்ட முடியாத ஒரு அமைதியில் மெல்ல சுவாசித்தன."

2 comments:

 1. //" நேரு குடும்பத்துக்கே அடையாளமாகிவிட்ட அந்த எடுப்பான மூக்குதான் என் மனைவியைக் கவர்ந்திருக்க வேண்டும்//

  மூக்கில் தான் எத்தனை வகை!

  romanian nose, balbous nose,snub nose,aquiline nose, ......

  14 வகையான மூக்குகள் உண்டாம்.

  குமுதம் அர‌சு பதிலுக்குப் பின்னர் நீங்கள்தான் மூக்கு ஆய்வு செய்துள்ளீர்கள்..

  எங்கள் பல்கலைக்கழகத்தில் 'டாக்டர் ஆஃப் மூக்கு' ப‌ட்டம் அளித்து கெள‌ரவிக்க இருக்கிறோம்.

  ReplyDelete