Saturday, August 18, 2012

கண் திறந்த கதை



ஒரு சிறிய கதை:

ஓர் ஊரில் ஒரு கவிஞன் இருந்தான். அவன் பார்வை இழந்த குருடனாக இருந்தான். அவனுடைய கவிதைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. அவனுக்கு ரசிகர்கள் பலர் இருந்தனர்.

அவனுக்கு ஒரு காதலி இருந்தாள். மாபெரும் சாம்ராஜ்யத்தின் இளவரசியாக இருக்கும் தகுதி பெற்ற பேரழகி அவள். ஆனால் அவள் ஆடுகளை மேய்க்கும் இடைச்சியாக இருந்தாள்.

பால்ய பருவத்தில் இருந்தே அவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவனின் கவித்திறமைக்கு அவள் ஊக்கம் அளித்து வளர்த்தாள். பருவங்கள் மாறிய போது அந்த நட்பு மெல்ல மெல்ல காதலாக மாறியது. அதனை அவர்கள் இருவரும் உணர்ந்து கொண்டார்கள்.

அவள் மீது அவன் கவிதைகள் எழுத ஆசைப்பட்டான். அழகியே! என்று வருணிக்க மட்டுமே அவனால் முடிந்தது. அவளின் லட்சணங்களை அவன் நேரில் ஒருபோதும் கண்டதில்லையே!

செவி வழிச் செய்தியாக அவளைப் பற்றி அவன் அறிந்து வைத்திருந்ததை அடிப்படையாக வைத்துக் கொண்டு அவளை வருணித்துக் கவிதைகள் எழுதினான். அவற்றை அவளிடம் வாசித்துக் காட்டினான். ஆனால் அது அவர்கள் இருவருக்குமே திருப்தியாக இல்லை. ஏனெனில் அவை அனுபவத்தில் பிறந்தவையாக இல்லை.

எப்போதும் நெருக்கமாகவே இருந்து வந்துள்ள தன் காதலியைத் தான் ஒருபோதும் கண்களால் காணாமல் இருப்பது பற்றி அவன் மனதில் வேதனை குடைந்தது.

இந்த நிலையில் சில ஆண்டுகள் ஓடின. பக்கத்து ஊர் ஒன்றில் ஒரு தேர்ந்த மருத்துவர் இருப்பதாகவும் அவரின் வைத்தியத்தில் குருடர்கள் மீண்டும் பார்வை பெற்று வாழ்கிறார்கள் என்றும் அவன் கேள்விப்பட்டான். மனதில் ஒரு முடிவுக்கு வந்தவனாக அவரைச் சந்திக்கப் புறப்பட்டுவிட்டான்.

அவன் தன்னை அந்த வைத்தியரிடம் முழுமையாக ஒப்படைத்துக் கொண்டான். அவர் அவனின் கண்களைப் பரிசோதித்துப் பார்த்தார். ”மகனே! உன் கண்களின் நரம்புகள் பலம் இழந்துள்ளன. முறையான சில பயிற்சிகள் செய்தால் அவற்றை உறுதிப் படுத்த முடியும். அவை பலமடைந்தால் உனக்குப் பார்வை கிடைக்கும்” என்று அவர் சொன்னார். அவர் தரும் பயிற்சிகளைச் செய்ய அவன் இசைந்தான்.

கவிதைகள் பாடுவதை அவன் நிறுத்திவிட்டான். ஒரு சுண்ணாம்புச் சுவற்றை நோக்கி அவன் நாளெல்லாம் அமர்ந்திருந்தான். பார்வை இல்லாத தன் கண்களை வெறித்த படி அதனையே உற்று நோக்கியும், மேலும் கீழும் இடமும் வலமுமாகச் சுழற்றிக் கொண்டும் இருந்தான். அவனைப் பார்த்தவர்கள் அவன் மீது பரிதாபப் பட்டார்கள்.

“பாவம். நம் ஊரின் சிறந்த கவிஞனாக இருந்தவன் இப்படி ஆகிவிட்டானே! அந்த மருத்துவர் இவனைக் கிறுக்கனாக்கி விட்டார்.” என்றும், “தன் காதலியைப் பற்றிக்கூட இப்போது அவன் கவிதைகள் பாடுவதில்லையாம். நிலைமை இவ்வளவு மோசமாகி விட்டது” என்றும் அவர்கள் பேசிக்கொள்வது அவன் செவிகளில் அவ்வப்போது விழுந்து கொண்டிருந்தது.

அவன் மனம் துடித்தது. சந்தேகத்தின் புகை அவன் மனதிற்குள் மூட்டம் போட்டன. நரகத் தீயில் இருந்து வரும் அந்தப் புகையில் அவனின் மூச்சு திணறும் போதெல்லாம் அவன் மருத்துவரை நோக்கி ஓடினான். மருத்துவ முறைகளைப் பற்றி அவர் அவனுக்கு விளக்கினார். மனம் தெளிவு பெற்றது. ஊர்ப் பேச்சிற்குக் காது கொடுக்கக் கூடாது என்னும் மனவுறுதி அவனுக்கு வாய்த்தது. அவன் முன்பை விட இன்னும் ஆழமாகப் பயிற்சியில் தோய்ந்து ஈடுபட்டான்.

அவனது கண்களின் நரம்புகள் பலமடைந்து வந்தன. பார்வை கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. தன் காதலியை அவன் பார்க்கத் தொடங்கினான். அவளின் உருவம் முதலில் நிழல் போல் தெரிந்தது. காலப் போக்கில் அவனின் கண்கள் முழுமையான பார்வையை அடைந்தபோது அவளின் தரிசனத்தில் அவன் சொக்கி நின்றான்.


இப்போது அவன் எழுதும் கவிதைகள் ஜீவன் கொண்டிருந்தன. ஏனெனில் அவை இரவல் தகவல்களில் இருந்து பிறக்கவில்லை. அவனுடைய நேரடி தரிசன அனுபவத்தில் இருந்து பிறந்தன. அவனின் ஒவ்வொரு சொல்லும் இப்போது அவளின் மனதில் இனித்தது. அவள் அவனை மேலும் மேலும் நேசித்தாள்.

அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஐம்புலன்கள் கரையும் அனுபவங்களை அவன் அவளிடத்தில் அடைந்தான். அவன் கவித்திறன் தன் இயலாமையில் அவளின் முன் மண்டியிட்டது. அவனே அவளை வருணிக்கும் கவிதை ஆனான்.

இதுவரை நீங்கள் கேட்டு வந்த இந்தக் கதை வெறும் மாயப் புனைகதை (FAIRY TALE) அல்ல. இது ஒரு சூஃபி குறியீட்டுக் கதை. சூஃபி தத்துவம் ஒன்றினை விளக்குவதற்காகவே இந்தக் கதை என் மனதில் தோன்றியது.

இஸ்லாமிய மூல மந்திரம் ‘கலிமா’ எனப்படுகிறது. அதற்கு ‘கலிமா தய்யிபா’ (நறுமணமிக்க திருமந்திரம்) என்றும் ஒரு வருணிப்பு உண்டு. “லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வை அன்றி வேறு பரம்பொருள் இல்லை) என்பது அந்தத் திருக்கலிமாவின் முற்பகுதி. 

சூஃபிகளிடம் இந்தத் திருக்கலிமா சார்ந்து ஒரு கோட்பாடு உண்டு. ஃபார்சி மொழியில் அதனை இவ்வாறு கூறுகிறார்கள்: ‘கலிமா கூ தான் பீன் ஷூ’

இதன் அர்த்தம்:
கலிமா கூ – மந்திரம் சொல்
கலிமா தான் – மந்திரம் அறி
கலிமா பீன் – மந்திரம் காண்
கலிமா ஷூ – மந்திரம் ஆகு.

அதாவது, திருக்கலிமாவை நாவால் உரைப்பது, மனத்தால் அறிவது, அகக்கண்ணால் தரிசிப்பது, அதன் அனுபவமாகவே ஆகிவிடுவது என்னும் நான்கு ஆன்மிக நிலைகளை இது சுட்டுகிறது.

மேலே நாம் கேட்ட சிறிய கதை இந்த நான்கு நிலைகளை விளக்குகின்றது.

”ஓர் ஊரில் ஒரு கவிஞன் இருந்தான். அவன் பார்வை இழந்த குருடனாக இருந்தான்.” அந்தக் கவிஞன் நாம்தான். ஆன்மிகச் சாதகனின் ஆரம்ப நிலை இது. அவன் பிறவிக் குருடன் அல்ல. இடையில் பார்வையை இழந்தவன்.”


நம் அகக்கண் இப்போது அகப்பார்வையை இழந்துள்ளது. நாம் அகக் குருடர்களாக இருக்கிறோம். ஆனால், இறைவன் நம்மைப் படைத்த ஆன்ம உலகில் நம் ஆன்மா அவனின் தரிசனத்தில் லயித்திருந்தது. அவனைக் கண்டுகொண்டே அவனுடன் உரையாடினோம்.

“உன் ரட்சகன் ஆதமின் மக்களுடைய முதுகுகளிலிருந்து
அவர்களின் சந்ததிகளை வெளியாக்கி
அவர்களை அவர்களது உயிர்களின் மீது சாட்சியாக்கி
‘நான் உங்களுடைய ரட்சகன் அல்லவா?’ என்று கேட்கவும்
‘மெய்தான், நாங்கள் சாட்சி ஆகின்றோம்’
என்று அவர்கள் சொன்னதை நினைவூட்டுக”
(7:172)

ஆன்மாக்கள் பூமிக்கு இறக்கப்பட்டு, உடல் என்னும் கூண்டில் அடைபட்டவுடன் அவை தம் பார்வையை இழந்துவிட்டன. உடலின் புறக்கண்கள் திறந்து கொண்டன; உயிரின் அகக்கண்கள் மூடிவிட்டன. படைப்புக்களைப் பார்க்கும் புறப்பார்வை கிடைத்தது; படைத்தவனைப் பார்க்கும் அகப்பார்வை போய்விட்டது.

”அவனுக்கு ஒரு காதலி இருந்தாள். மாபெரும் சாம்ராஜ்யத்தின் இளவரசியாக இருக்கும் தகுதி பெற்ற பேரழகி அவள். ஆனால் அவள் ஆடுகளை மேய்க்கும் இடைச்சியாக இருந்தாள்.”

இங்கே காதலி என்பது இறைவனுக்கான குறியீடு. ஆன்மாவின் காதலி இறைவன் மட்டுமே. அவனே மஃஷூக்கே ஹகீகி – மெய்ம்மைக் காதலி.

இறைவன் பற்றிய இரண்டு நிலைகள் இதில் பேசப்படுகின்றன. படைப்புக்கள் அனைத்தையும் விட்டு விலகிய அவனுடைய சுயநிலை ஒன்று. அதற்கு ‘ஷானே தன்ஸீஹ்’ என்று பெயர்.

”திண்ணமாக அல்லாஹ்
அகில உலகங்களை விட்டும்
தேவை அற்றவன்”
(3:97)
என்பது அந்நிலையின் வருணிப்பு.

அனைத்து வஸ்துக்களிலும் தான் வெளிப்பட்டு நிற்கும் அவனுடைய கருணை நிலை மற்றொன்று. அதற்கு ’ஷானே தஷ்பீஹ்’ என்று பெயர்.

“கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன
எப்பக்கம் நீங்கள் திரும்பினாலும்
அல்லாஹ்வின் திருமுகமே நிறைந்துள்ளது.
நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்
அனைத்தையும் அறிந்தவன்”
(2:115)

”அல்லாஹ் அனைத்து வஸ்த்துக்களின் மீதும்
பிரசன்னமாக இருக்கிறான்”
(58:9)

“அவனே 
ஆதியாகவும் அந்தமாகவும்
புறமாகவும் அகமாகவும்
இருக்கிறான்”
(57:3)

“அல்லாஹ்
வானங்கள் மற்றும் பூமியின்
ஒளியாக இருக்கிறான்”
(24:35)
அகிய திருவசனங்களும் அன்ன பிறவும் அவனின் ‘ஷானே தஷ்பீஹ்’ என்பதன் வருணிப்புக்கள் ஆகும்.

”அவனின் உதாரணம் போல் எதுவுமில்லை
அவன் கேட்பவனாகவும் காண்பவனாகவும் இருக்கிறான்”
(42:11)
என்னும் திருவசனத்தில் அவனது தன்ஸீஹ் மற்றும் தஷ்பீஹ் ஆகிய இரு நிலைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன என்று மகான் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.


படைப்புக்கள் எதற்குமே எட்டாத சுயநிலை கொண்ட இறைவன் அனைத்துப் படைப்புக்களிலும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு தன் கருணையால் மிக எளியவனாகி நிற்கிறான்.

”பால்ய பருவத்தில் இருந்தே அவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவனின் கவித்திறமைக்கு அவள் ஊக்கம் அளித்து வளர்த்தாள்.”

இங்கே நட்பு என்று சொல்லப்படுவது பொதுவான நேசமாகும்.
“அல்லாஹ் இறைநம்பிக்கையாளரின் நேசன்” (அல்லாஹு வலிய்யுல்லதீன ஆமனூ -2:257) என்று சொல்லப்பட்டுள்ளது பொதுவான நேசத்தைக் குறிக்கின்றது.

இறைவன் படைப்புக்களை விட்டு ஒருபோதும் பிரிந்ததில்லை. அவனைப் பிரிந்து படைப்பு எதுவும் இருக்கவே இயலாது. அவனில் அது; அதில் அவன் என்னும் உறவாகவே அதை அவன் படைத்த கணம் தொட்டு இருந்து வருகின்றது.

இறைவன் தன் கருணையால் அதனை ரட்சித்து வருகின்றான். “ரப்” என்னும் பெயர் அதைத்தான் குறிக்கிறது. அதன் குறிக்கோளினை நோக்கி அதனைச் சன்னஞ் சன்னமாக கொண்டு செல்பவன் அவனே.

அவனுடைய ஜீவன், அறிவு, நாட்டம், சக்தி, கேள்வி, பார்வை, பேச்சு ஆகியவற்றின் ஒளிச்சுடர்கள் வீசுவதாலேயே படைப்புக்களில் திறமைகள் வெளியாகின்றன. இல்லையேல், அவற்றில் புகழுக்குரிய எந்தத் திறமையும் வெளிப்படாது.

”பருவங்கள் மாறிய போது அந்த நட்பு மெல்ல மெல்ல காதலாக மாறியது. அதனை அவர்கள் இருவரும் உணர்ந்து கொண்டார்கள்.”

நேசம் ஆழமாகும் போது காதலாகிறது. இறைநம்பிக்கையாளர்கள் இறைவனின் மீது வைத்திருப்பது லேசான நேசம் அல்ல. மிக ஆழமான உறுதியான நேசமாகும்.

”இறை நம்பிக்கை கொண்டவர்கள்
அல்லாஹ்வின் நேசத்தில் மிக உறுதியானவர்கள்”
(2:165)

ஆன்மாவின் மீது பருவங்கள் கடந்து செல்லும்போது இறைவனின் மீதான நேசம் ஆழமாகிவிடுகிறது. இறைக்காதல் உண்டாகிவிடுகிறது.

”அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்
அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள்”
(6:119)


சாமானியர்கள் இறைவன் தங்களுக்கு வழங்கும் அருட்கொடைகளுக்காக இறைவனை நேசிக்கிறார்கள். இறைக்காதலர்கள் இறைவனுக்காகத் தன்னையே இழக்கத் தயாராக இருக்கிறார்கள். இறைவனை அடைய வேண்டும் என்பதே அவர்களின் ஒரே இலட்சியமாக இருக்கிறது.

“கூறுக:
எனது தொழுகையும்
எனது தியாகமும்
எனது வாழ்வும்
எனது மரணமும்
அகிலங்களின் ரட்சகனான
அல்லாஹ்வுக்கே”
(6:162)

”அவள் மீது அவன் கவிதைகள் எழுத ஆசைப்பட்டான். அழகியே! என்று வருணிக்க மட்டுமே அவனால் முடிந்தது. அவளின் லட்சணங்களை அவன் நேரில் ஒருபோதும் கண்டதில்லையே!”

பொருள் உணராமலேயே திருக்கலிமாவைச் சொல்லிக் கொண்டிருக்கும் நிலைதான் முதலில் இருக்கிறது. திருக்கலிமாவின் மீது நேசம் இருக்கிறது. ஏனெனில் அது தன் நேசனின் வருணனையாக உள்ளது. ஆனால் அதனைப் பற்றிய அறிவுகள் இன்னும் அடையப்படவில்லை.

கலிமா கூ – மந்திரம் சொல் என்னும் நிலையில் இவன் இருக்கிறான்.

(தொடரும்)

Tuesday, August 14, 2012

மாநிசி அன்ன மாநபி



”நபியே!
மகத்தான இரவு
நீங்கள்
இதர இரவுகள்
நாங்கள்”

சிறிது நேரச் சிந்தனைக்குப் பின் இந்த வரிகளுக்கு வந்து சேர்ந்தேன்.

நீரூற்றி வளர்த்ததில் பூத்த நறுமண மலர் இந்தக் கவிதை. ஆனால் விதைக்குச் சொந்தக்காரன் நான் அல்ல. அது என் இதய நிலத்தில் இறைவனின் கருணை தூவிய ஒன்று.

மகத்தான இரவு (லைலத்துல் கத்ர்) பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்த இரவே நபிகள் நாயகத்திற்கு ஓர் அழகிய உவமையாய் அமைந்திருப்பதைக் கண்டேன்.


நபிகள் நாயகம் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் அல்ல. இது என் கொள்கை. இந்தக் கொள்கையை மகத்தான இரவு உவமையாய் நின்று உணர்த்துவது என் உள்ளத்தில் தித்தித்தது.

”நபிகள் நாயகம் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்தான்” என்று கொள்கை கொண்டோர் உண்டு. ஆதாரம் என்று அவர்கள் எடுத்துக் காட்டும் திருமறை வசனம் என் மனக் கண்ணில் பளிச்சிட்டது.

”கூறுக: நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்
என்னிடம் இறையுதிப்பு உண்டாகிறது”
(41:6)

இவ்வசனத்தின் மூலத்தில் ‘பஷர்’ என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. அதனைக் கவனித்து ”கூறுக: வெளித்தோற்றத்தில் நான் உங்களைப் போன்ற மனிதன்தான்” என்று பொருள் கொள்ளவேண்டும்.

இவ்வசன நடை அமைப்பைக் கவனித்தும் அப்படிப் பொருள் கொள்ளலாம். அதாவது இதில் நபியின் புறமும் அகமும் சுட்டப்பட்டுள்ளன. ’நான் உங்களைப் போன்ற மனிதன்தான்’ என்பது நபியின் புறத்தோற்றத்தைக் குறிக்கும். ‘என்னிடம் இறையுதிப்பு உண்டாகிறது’ (யூஹா இலய்ய) என்பது நபியின் அகத்தைக் குறிக்கும். ஏனெனில் இறையுதிப்பு (வஹீ) உண்டாவது இதயத்தில்தான்; அன்றி உடலில் அல்ல.


மகத்தான இரவை வருணிக்கும் ’கத்ர்’ அத்தியாயத்தின் திருவசனங்களைக் கவனிப்போம்.

“நிச்சயமாக நாம் அதனை
மகத்தான இரவில் இறக்கினோம்”
(97:1)

அதனை என்பது திருக்குர்ஆனைக் குறிக்கிறது. மற்ற இரவுகளில் அது இறக்கப்படவில்லை. அதுபோல், திருக்குர்ஆன் நபியின் இதயத்தில் இறக்கப்பட்டது. வேறு எவரின் இதயத்திலும் அல்ல.

மகத்தான இரவில் திருக்குர்ஆன் முழுமையும் முதல் வானத்தில் இறக்கப்பட்டுப் பின்பு சன்னஞ் சன்னமாக இருபத்து மூன்றாண்டுகள் நபிக்கு அறிவிக்கப்பட்டது என்று ஒரு விளக்கம் உண்டு. இறைவெளிப்பாடுகள் முதலில் நபியின் எதார்த்தத்திற்குத் தரப்படுகின்றன. அவர்களின் வழியாகவே அவற்றை முந்தைய இறைத்தூதர்களும் அடைந்து வந்தார்கள்.


“மேலும், மகத்தான இரவு என்ன என்பதை
உமக்கு அறிவித்தது எது?”
(97:2)

அதாவது, ‘மகத்தான இரவு என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?”
இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்? ‘அது ஓர் இரவு’ என்று சொல்வது பதிலாகுமா? அது ஓர் இரவுதான். ஆனால் அதனை இரவாக அறிந்திருப்பதால் மட்டுமே அதனை நீங்கள் அறிந்துவிட்டீர்கள் என்பதற்குப் போதுமானதல்ல. மாறாக, நீங்கள் அதனை அறியவில்லை என்பதற்கே அது ஆதாரமாகும்.

“முஹம்மத் (ஸல்) யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” இதற்கு என்ன பதில்? ‘அவர் ஒரு மனிதர்’ என்பது இதற்கு விடையாகுமா? அவர் ஒரு மனிதர்தான். ஆனால் அவர்களை மனிதர் என்று அறிந்திருப்பதால் மட்டுமே அவர்களை நீங்கள் அறிந்துவிட்டீர்கள் என்பதற்குப் போதுமானதல்ல. மாறாக, நீங்கள் அவர்களை அறியவில்லை என்பதற்கே அது ஆதாரமாகும்.

”மகத்தான இரவு
ஆயிரம் மாதங்களினும் சிறந்ததாகும்”
(97:3)

தோற்றத்தில் (ஷகல்) அதுவும் ஓர் இரவுதான். மற்ற இரவுகள் கறுப்பாக இருப்பதைப் போல் இதுவும் கறுப்பாகத்தான் இருக்கும். மற்ற இரவுகளில் நிலவும் விண்மீன்களும் வருகின்றன. இதிலும் அப்படித்தான். மாற்றமாக சூரியனோ வானவில்லோ தோன்றுவதில்லை. ஆனால் இறைவனின் பார்வையில் அந்த இரவிற்கு உள்ள அந்தஸ்த்தில் அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.

தோற்றத்தில் நபியும் ஒரு மனிதர்தான். மற்ற மனிதர்களின் தோற்றம் போல், இரு கைகள், இரு கால்கள், முகம் – அதில் கண்கள் மூக்கு வாய் காது என்பன போன்றுதான் நபியும் இருப்பார்கள். மாற்றமாக, அவர்களுக்குச் சிறகுகள் இருக்கவில்லை. ஆனால் இறைவனின் பார்வையில் அந்த நபிக்கு உள்ள அந்தஸ்த்தில் அவர்கள் இறைவனின் பிற படைப்புக்கள் அனைத்தைக் காட்டிலும் சிறந்தவர்கள் – ஃகைரி ஃகல்க்கிஹி.

இவ்வசனத்தில் அல்லாஹ் மகத்தான இரவை பிற இரவுகளுடன் ஒப்பிடவில்லை. மாறாக மாதங்களுடன் ஒப்பிட்டுள்ளான். அதாவது, முப்பது இரவுகள் சேர்ந்து உண்டாகும் மாதத்துடன் ஒப்பிட்டுள்ளான். ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்தது என்றால் அது முப்பதாயிரம் இரவுகளினும் சிறந்தது என்று பொருளாகிறது.

‘ரமலான் என்னும் மாதத்தினுள் ஒரு நாளின் இரவாக வருவதாலேயே இந்த இரவை நீங்கள் லேசாக நினைக்காதீர்கள். இதுவோ ஆயிரம் மாதங்களைக் காட்டிலும் சிறந்தது’ என்று இறைவன் நம்மை நோக்கிச் சொல்வது போல் இருக்கிறது.

அரபியர்கள் என்னும் இனத்தில் ஒரு மனிதராக இருப்பதாலேயே நபியை நீங்கள் இவரும் நம்மில் ஒரு மனிதர்தானே என்று லேசாக எண்ணிவிடாதீர்கள். அவர்கள் அனைத்து மனித இனங்களைக் காட்டிலும் சிறந்தவர்கள். இன்னொரு மனிதனை அவர்களுடன் ஒப்பிடுவது எங்கே? மனித குலத்தையே அவர்களுடன் ஒப்பிட முடியாது!


”அதில் வானவர்களும் ஆன்மாவும்
தம் ரட்சகனின் கட்டளையின்படி
சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்”
(97:4)

இவ்வசனத்தில் மகத்தான இரவில் நடைபெறும் செயல்பாடுகள் (ஃபி’ல்) சுட்டிக் காட்டப் படுகின்றன. மகத்தான இரவில் வானவர்கள் இறங்கும் அளவிற்கு வேறு இரவுகளில் அவர்கள் இறங்குவதில்லை. சகல காரியங்களுடனும் – மின் குல்லி அம்ர் அவர்கள் வருகின்றார்கள். இதர இரவுகளில் சில வானவர்கள் சில காரியங்களுக்காக இறங்கலாம். ஆனால் இந்த இரவின் அளவு இல்லை. எனவே இது மகத்தான இரவாக இருக்கிறது.

அதுபோல், நபி(ஸல்) அவர்களின் செயல்களைக் கவனியுங்கள். அவர்களின் செயல் (ஃபி’ல்) ஒவ்வொன்றுமே அற்புதம் (முஃஜிஸா) என்பது நபிக் காதலர்களுக்குத் தெரியும். அவர்களில் நிகழும் செயல்கள் இறைவனின் உத்தரவுப் படியாகவே இருந்தன.

”அவர்களை வெட்டியது நீங்கள் அல்ல
ஆனால் அல்லாஹ்வே அவர்களை வெட்டினான்;
நீங்கள் எறிந்தபோது நீங்கள் எறியவில்லை
ஆனால் அல்லாஹ்வே எறிந்தான்”
(ஃபலம் தக்துலூஹும் வலாகின்னல்லாஹ கதலஹும்
மா ரமைத்த இத் ரமைத்த வலாகின்னல்லாஹ ரமா)
(8:17)
என்பது அவர்களின் செயலுக்கான வருணனை.

எல்லா இறைத் தூதர்களுக்கும் அற்புதங்கள் வழங்கப் பட்டிருந்தன. ஆனால் அவை அனைத்தும் நபி(ஸல்) அவர்களில் ஒன்று திரண்டிருந்தன. எனவே அவர்கள் நபிமார்களின் முத்திரையாகவும், நபிமார்களின் தலைவராகவும் இருக்கிறார்கள்.

”யூசுஃபின் பேரழகு ஏசுவின் மூச்சு மூசாவின் வெண்கரம்
அவை அனைத்து அற்புதங்களும்
    ஒருமித்துள்ளன உங்களில் தனியே”
(ஹுஸ்னே யூசுஃப் தமே ஈசா யதே பைளாதாரி
ஆன்ச்செ ஹமா ஃகூபான் தரந்த் தூ தன்ஹாதாரி)
என்று வியக்கிறது ஒரு ஃபாரசி கவிதை.


“பேரமைதி
அது விடியல் உதிக்கும்வரை
நிலவியிருக்கும்”
(97:5)

இந்தத் திருவசனத்தில் மகத்தான இரவின் பண்பு (சிஃபாத்) பேசப்படுகிறது. அந்த மகத்தான இரவு பேரமைதி (சலாம்) நிரம்பியதாகும். ஆனால் அதே இரவில் ஒரு மனிதன் விடியும் வரை மனநிம்மதி இல்லாமல் தவிக்கிறான் என்றால் அது அவனுடைய மனநிலையின் குறையே தவிர அந்த இரவில் பேரமைதி இல்லை என்பதற்கு அது ஆதாரம் அல்ல. அப்படி வாதிடுபவன் அகக்குருடனாகத்தான் இருப்பான். காதலியோ அழகின் திரட்சியாக இருக்கிறாள்; ஆனால் குருட்டுப் பயலால் அந்த அழகை எப்படிக் காண முடியும்? அவளிடம் அழகே இல்லை என்று அவன் வாதிடுவதால் யாருக்கு நட்டம்?

நபியின் பண்பு (சிஃபத்) எப்படிப்பட்டது என்பதைக் கொஞ்சம் கவனியுங்கள். ஓர் உதாரணம்:  
”அவர் தம் இச்சையின்படிப் பேசுவதில்ல
அது அவருக்கு உதிப்பாக்கப்பட்ட
இறைச் செய்தியே அன்றி வேறில்லை”
(மா யன்திகு அனில் ஹவா
இன்ஹுவ இல்லா வஹ்யுன் யூஹா)
(53:3,4)
என்பது அவர்களின் பேச்சிற்கான வருணிப்பு.


ஒட்டு மொத்தமாகச் சொல்வதென்றால்,
“மேலும், (நபியே!) நீங்கள்
மகத்தான பண்புடையவராக இருக்கின்றீர்”
(வ இன்னக லஅலா ஃகுலுகின் அழீம்)
(68:4)

அது எத்தகைய பண்பு? என்ன பண்பு? இதற்கு விடை நபிமொழியிலேயே இருக்கிறது:
“இறைப்பண்புகள் கொண்டு உன்னை நீ உருவாக்கிக் கொள்” (தஃகல்லகூ பி அஃக்லாக்கில்லாஹ்)

நபி இறைவன் வெளிப்படும் மகத்தான தளமாக (மழ்ஹரே அதம்மு) இருக்கிறார்கள். அதனை அகக்குருடனால் காண முடியவில்லை. அவனோ நபியும் பிற மனிதர்களைப் போன்றவர்தான் என்று பிதற்றிக் கொண்டிருப்பான். ‘இதுவும் பிற இரவுகளைப் போல் ஒரு சாதாரண இரவுதான்’ என்று அகக்குருடன் தன் மனதில் நிம்மதி இன்றி மகத்தான இரவில் புலம்பிக் கொண்டிருப்பதைப் போல்!

Sunday, August 12, 2012

விரதச் சத்து



பசித்திரு, விழித்திரு, தனித்திரு

ஆன்மிக நெறி செல்லும் சீடர்களுக்கு தலையான ஓர் உபதேசம் இது.

ரமலான் மாதத்தில் இந்த முப்பயிற்சிகளும் இடம்பெறுகின்றன என்பதைச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

உடலுக்கான உணவும் உறவும் தவிர்த்தலில் ’பசித்திரு’ என்னும் பயிற்சி உள்ளது. இரவில் சிறப்புத் தொழுகையில் ’விழித்திரு’ என்னும் பயிற்சி உள்ளது. வழிபாடுகள் பெருகச் செய்வதில் (மக்களை விட்டுத்) ’தனித்திரு’ என்னும் பயிற்சி உள்ளது.

நோன்பு என்னும் நதியின் கரையில் நின்றாலே கால் நனைக்கும் கருத்துக்கள் இவை. நான் அந்த நதியில் இடையளவும் நெஞ்சளவும் தலையளவும் இறங்கிப் பார்க்க ஆசை வைத்தேன்.

’பசித்திரு’ என்னும் பதத்தின் பதம் பார்த்துக் கொண்டிருந்தேன். பழைய ஞாபகங்களைக் கொஞ்சம் கிளறினேன்.

“நோன்பின் நோக்கம் என்ன?” என்னும் வினாவைப் பலரிடமும் தொடுத்திருக்கிறேன். ‘ஏழைகளின் பசியை நாமும் உணரவேண்டும் என்பதே நோன்பிருப்பதன் நோக்கம்’ என்னும் பதிலைப் பலரும் சொன்னதுண்டு. அவர்களிடம் நான் கேட்கும் அடுத்த கேள்வி, “அப்படியெனில் வருடம் முழுவதும் பசியின் கடுமையை உண்ர்ந்து கொண்டிருக்கும் ஏழை முஸ்லிமாக இருந்தாலும் அவர் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருப்பது ஏன்?”

இது போதும், நோன்பின் நோக்கமாக அவர் கருதிக் கொண்டிருக்கும் சிவப்புச் சிந்தனையின் சாயம் வெளுத்துவிடும். என் வினா எஞ்சி நிற்கும்: “நோன்பின் நோக்கம் என்ன?”


இம்முறை இன்னும் அடிப்படையான ஒரு வினா: “நோன்பு என்பது என்ன?” உணவு உண்ணாமல் இருப்பது என்னும் வழக்கமான விடை திருப்தியாக இல்லை.

“நோன்பு நோற்கும் பலருக்கு அவர்களின் நோன்பில் இருந்து பசி தாகம் தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை. இரவில் விழித்து வணங்கும் பலருக்கு விழித்திருப்பதைத் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை” (தாரிமி) என்னும் நபிமொழியில் என் சிந்தனை ஊன்றி நின்றது.

பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் கண் விழித்திருப்பதும் நோன்பின் நோக்கம் அல்ல என்பதை இந்த நபிமொழி தெளிவு படுத்துகிறது. அவை நோன்பின் நோக்கமாக இருக்குமே ஆனால் மேற்சொன்ன நபர்களுக்கு இறைவன் அவை கிடைக்குமாறு விட்டிருக்க மாட்டான்.

இன்னொரு நபிமொழி: “யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் தவிர்க்கவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் தவிர்ப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை” (புகாரி, முஸ்லிம்)

பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் நோன்பின் அடையாளங்களில் உள்ளவையே தவிர அவையே நோன்பு அல்ல என்பதை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

நோன்பு உடலிலும் உள்ளத்திலும் நிகழவேண்டும். உடலால் மட்டும் நோன்பு வைப்பவர்களுக்கு வெறும் பசியும் தாகமும் மட்டுமே கிடைக்கிறது. உடலால் மட்டுமே வணங்குபவர்களுக்கு வெறும் கண் விழித்தல் மட்டுமே கிடைக்கிறது. நோன்பின் நோக்கம் இவை அல்ல.

இன்னொரு நபிமொழியும் என் சிந்தனையை வெகு நேரம் மீட்டிக் கொண்டிருந்தது:
“’ஆதமுடைய மகனின் (மனிதனின்) ஒவ்வொரு செயலும் அவனுக்கு உரியதாகும், நோன்பைத் தவிர. நிச்சயமாக நோன்பு எனக்கே உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.” (புகாரி #1904)

’ஒவ்வொரு செயலும் மனிதனுக்கு உரியதாக உள்ளது, நோன்பைத் தவிர’ என்பதன் அர்த்தம் என்ன? எல்லா வழிபாடுகளுமே இறைவனுக்காகத்தான் செய்யப்படுகின்றன. லில்லாஹி – அல்லாஹ்வுக்காக என்னும் எண்ணத்தின் அடிப்படையில்தான் செய்யப்படுகின்றன. தொழுகை நோன்பு ஜகாத் (ஏழை வரி), ஹஜ் புனிதப் பயணம் எல்லாமே அல்லாஹ்வுக்காக என்பதுதான் நிய்யத் (பிரதிக்ஞை). இதில் நோன்பு மட்டும் தனித்து நிற்கிறது. அது மனிதனுக்கு உரியதாக இல்லை; அல்லாஹ்வுக்கு உரியதாக இருக்கிறது என்று சொல்லப்படுவது எதன் அடிப்படையில்?

”ஆதமுடைய மகனின் (மனிதனின்) ஒவ்வொரு செயலும் அவனுக்கு உரியதாகும், நோன்பைத் தவிர.” என்று அல்லாஹ் கூறுவதை சற்றே சிந்தியுங்கள்.

’யாருக்காக நிகழ்த்தப் படுகிறது’ என்பதை வைத்து உடைமை என்னும் அடிப்படையில் பார்க்கும்போது தொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் குர்பானி போன்ற வழிபாடுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்காகத்தான் நிகழ்த்தப் படுகின்றன.

‘நோன்பு என்றால் என்ன?” என்பதை ஆராய்வதற்கான – தஹ்கீக் செய்வதற்கான வாசல் இங்கே திறக்கிறது.

இதை விளக்க ஒரு விஷயத்தைப் பார்ப்போம். நோன்பாளி தூங்கும்போது நோன்பு முறிவதில்லை. அதாவது நோன்பு என்பது அடியான் நிகழ்த்தும் ஒரு செயலாக இருக்குமேயானால் தூங்கினால் அது முறிந்துவிடும். அதாவது தூக்கத்தில் அது நிகழ முடியாது.

தொழுகை அடியான் நிகழ்த்தும் செயல். எனவே தூங்கிக் கொண்டே தொழுவது சாத்தியம் இல்லை.

ஆனால் நோன்பு அடியானின் செயலினைச் சார்ந்ததாக இல்லை. எனவே அவன் தூங்கினாலும் அது தொடர்கிறது. அது சோர்வும் தூக்கமும் அறவே இல்லாத இறைவனுக்கு உரியது. அதாவது தூங்கும் அடியானில் நோன்பு என்பது தூங்காத இறைவனால் பேணப்படுகிறது. அடியான் விழித்திருக்கும்போதும் அவனில் நோன்பைப் பேணுவது இறைவன்தான்.


இங்கே இன்னொரு நபிமொழி கவனத்திற்கு உரியது:
”ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தமது நோன்பை முழுமைப் படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்” (புகாரி #1933)

நோன்பைத் தன் பக்கம் சாற்றிக் கூறிய அல்லாஹ் அடியானுக்கு உரியதை (உணவை) அடியானின் பக்கம் சாற்றி அப்போதும் நோன்பு முறியாமல் பாதுகாக்கிறான். ஏனெனில் நோன்பு அவனுக்குரியது; அடியானுக்கு உரியதல்ல.

ஆனால் தெரிந்தே ஒருவன் சிறிதளவு சாப்பிட்டாலும் அல்லது பருகினாலும் நோன்பு முறிந்துவிடும். அதாவது அடியானில் அவனின் சுய இச்சையைக் காணும் அல்லாஹ் அவனிலிருந்து நோன்பை விலக்கி விடுகிறான்.

உணவின் தேவையே இல்லாத அல்லாஹ் அடியானை உண்ணவும் பருகவும் வைத்து அவனில் நோன்பையும் பாதுகாக்கிறான்! எத்தனை அற்புதமான நிலை!

ரஜ்ஜாக் என்றால் இரணம் (ரிஜ்க்) அளிப்பவன் என்பது மட்டும்தான் பொருளா? ரிஜ்கின் பக்கம் தான் முற்றிலும் தேவையற்ற நிலையில் இருந்தபடி ரிஜ்க் தேவைப்படும் அனைத்துப் படைப்புக்களுக்கும் தான் மட்டுமே ரிஜ்கை அளிப்பவன் அவன்.

“நிச்சயமாக அல்லாஹ்
அவனே உணவளிப்பவன்
சக்தி உள்ளவன்
வலிமை மிக்கவன்”
(51:58)
என்னும் திருவசனத்தைக் கவனியுங்கள்.

உணவளிப்பவன் (ரிஜ்க்) என்பதுடன் நிறுத்தவில்லை. அவனுடைய சக்தி (குவ்வத்) என்பதையும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது ஏன்?

ரிஜ்க் என்பது என்ன என்று விளங்க இது ஒரு குறிப்பு. ’ரிஜ்க்’-ஐ அடைவது என்பது உண்மையில் இறைவனிடமிருந்து அவனின் சக்தியை நாம் அடைந்து கொள்வதுதான். உணவு உண்ணும்போது அந்த உணவின் போர்வையில் நாம் அல்லாஹ்வின் குவ்வத் – சக்தியைத்தான் பெற்றுக் கொள்கிறோம்.

சக்தி தராத உணவினால் என்ன பயன்? அது உடலை எப்படி ரட்சிக்கும்? உதாரணமாக, ஐந்து இட்லி, ஆனால் ஜீரோ கலோரி என்றால் அதைச் சாப்பிடுவதில் என்ன பயன்? பசித்தவன் அதை உட்கொள்வதில் அர்த்தம் என்ன?

உணவின் போர்வையில் தன்னுடைய சக்தியைத் தன் படைப்பிற்கு அல்லாஹ் தரும்போது அவனுக்குப் பெயர் ரஜ்ஜாக்.

உணவின் போர்வையில் தன் சக்தியை வழங்குவது அல்லாஹ்வின் நடைமுறையாக இருந்தாலும் அப்படித்தான் அவன் வழங்க முடியும் என்னும் நிர்ப்பந்தம் அவன் மீது இல்லை. உணவு என்னும் போர்வையை நீக்கிவிட்டு தன் சக்தியை நேரடியாக வழங்கவும் அவனால் முடியும். இதைத்தான் நபி(ஸல்) தன் தொடர் நோன்பு பற்றிய விளக்கத்தில் தெளிவுபடுத்தினார்கள்.

“நபி(ஸல்) அவர்கள் மக்கள் மீது இரக்கப்பட்டுத் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள், ’நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் உங்களைப் போன்றவன் அல்லன். என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் வழங்குகிறான்’ என்று கூறினார்கள்” (புகாரி #1964)

இங்கே ‘உண்ணவும் பருகவும் வழங்குகிறான்’ என்பது ஆன்மிக ரீதியாக நேரடியாக ஊட்டப்பட்ட இறைசக்தி ஆகும். மாறாக, பருப்பொருளான உணவும் பானமும் என்று விளங்கினால் தொடர் நோன்பு என்பதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.


”நோன்பு எதற்காக?” என்னும் கேள்விக்கு, “பசியை நாம் நன்றாக உணர்வதற்காக” என்று சிலர் பதில் சொல்கிறார்கள். இப்படி விடை கூறிய ஒருவரிடம் நான் சொன்னேன், “இல்லை. நோன்பு என்பது பசியை உணர்வது அல்ல; பசியை உணராமல் இருப்பது.” குழம்பிப் போன அவர் நான் சொல்லியதை விளக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.

“உணவு உட்கொள்ளாத நிலையில் பசியும் தாகமும் ஏற்படுவது மனிதப் பண்புதான். ஆனால் நோன்பு என்பது ஒரு வழிபாடு (இபாதத்). அடிமை தன் பண்பின் கவனிப்பில் மூழ்கி இருப்பது வழிபாடு ஆகாது. தன் அடிமைத்தனத்தில் தன் எஜமானின் கருணையைக் கவனிப்பதுதான் வழிபாடாகும். தொழுகையைப் பற்றிச் சொல்லும் அல்லாஹ்,
‘நிச்சயமாக நானே அல்லாஹ்
என்னை அன்றி வேறு தெய்வம் இல்லை
எனக்கே அடிமைத்தனம் செய்யுங்கள்
என்னை நினைவு கூர்வதற்காகவே
தொழுகையை நிலைப்படுத்துங்கள்”
(20:14)
என்று சொல்கிறான். தொழுகையின் நோக்கம் இறை நியாபகம்தான். அது இல்லாத தொழுகை தொழுகையே அல்ல. உடல் தனியாக நியாபகம் செய்யாது. அது மனத்திலும் உயிரிலும் நிகழ்வது.

அனைத்து வழிபாடுகளின் நோக்கமும் இறைவனை நியாபகம் செய்வதற்குத்தான். நோன்பு என்பதும் அடியான் தன் பண்பின் பக்கம் கவனம் வைப்பதற்கல்ல; இறைவனின் பக்கம் கவனத்தை நிறுத்துவதற்குத்தான். அப்போதுதான் அது அவனை வழிபட்டதாகும்.

பசியும் தாகமும் அடியானின் பண்பு. உணவு தேவை என்னும் நிலை அடியானின் பண்பு. பசி தாகம் அற்ற நிலை இறைவனின் பண்பு. உணவு தேவை இல்லை என்னும் நிலை இறைவனின் பண்பு.

நோன்பில் பசி தாகத்தைக் கவனிக்கும்போது நாம் நம் பண்புகளையே கவனிக்கிறோம். அதாவது நாம் நம்மையே நியாபகம் செய்கிறோம். பசி தாகத்தின் பக்கம் சாயும் நம் கவனத்தை இறை நியாபகத்தில் நிறுத்திப் பழக்க வேண்டும். இறைவனின் நினைவில் பசி தாகம் மறந்த நிலை நம்மில் உருவாக வேண்டும். அப்போதுதான் நோன்பு நோன்பாக இருக்கும்.

இறை நினைவு நான்கு நிலைகளில் நிகழவியலும்:
இறைவனின் திருநாமத்தை (இஸ்மு) நியாபகம் செய்வது.
இறைவனின் செயல்பாட்டை (ஃபி’ல்) நியாபகம் செய்வது.
இறைவனின் திருப்பண்புகளை (சிஃபாத்) நியாபகம் செய்வது.
இறைவனின் சுயத்தை (தாத்) நியாபகம் செய்வது.

நோன்பு என்னும் வழிபாட்டில் நாம் இறைவனின் திருப்பண்பினை நினைவு கூரும் வாசல் திறக்கிறது. அல்லாஹ் உணவு பானம் உடை இடம் காலம் மற்றும் சகல பொருட்களின் தேவையும் அறவே இல்லாதவன்.
“நிச்சயமாக அல்லாஹ்
அகில உலகங்களிடமும்
தேவை அற்றவன்”
(3:97)
நோன்பில் இந்த தன் பண்பினை அல்லாஹ் தன் அடியானில் பிரதிபலிக்கிறான். அந்தப் பிரதிபலிப்பைக் கண்டு லயித்து அவன் நினைவில் மூழ்கியிருப்பதே சூஃபிகளின் நோன்பு.

“இறைநம்பிக்கை கொண்டோரே!
உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப் பட்டது போல்
உங்கள் மீதும் நோன்பு கடமை ஆக்கப் பட்டுள்ளது
நீங்கள் இறையச்சம் உள்ளோர் ஆகும் பொருட்டு”
(2:183)

நோன்பின் நோக்கம் தக்வா (இறையச்சம்) என்பதை இந்தத் திருவசனம் குறிப்பிடுகிறது. ’தக்வா’ என்பதற்குப் பொதுவாக இறையச்சம் என்று அர்த்தம் சொல்லப்படுகிறது. ‘தவிர்த்துக் கொள்வது’ என்பது நேர்ப்பொருள். இறையச்சம் உள்ளவன் என்று யாரைச் சொல்வோம்? இறைவனுக்குப் பிடிக்காதவற்றைத் தவிர்த்துக் கொள்பவனை அல்லவா? தக்வா என்பதை இறையச்சம் என்று விளங்குவது இந்தத் தொடர்பினால்தான். மற்றபடி தக்வா என்பது வேறு அச்சம் என்பது வேறு.

அரபியில் மூன்று சொற்களை இங்கே நாம் கவனிக்க வேண்டும்: கவ்ஃப், கஷிய்யத் மற்றும் தக்வா. மூன்றுக்குமே நாம் அச்சம் என்று அர்த்தம் தந்துவிடுகிறோம்.

கவ்ஃப் என்றால் அச்சம் என்றே பொருள்.
“அறியுங்கள், நிச்சயமாக
அல்லாஹ்வின் அன்பர்கள்
அவர்கள் மீது
அச்சம் என்பது இல்லை
அவர்கள் கவலைப்படுவதும் இல்லை”
(10:62)
என்பதில் கவ்ஃப் என்னும் சொல் வந்துள்ளது.

இனி கஷிய்யத் மற்றும் தக்வா என்னும் இரண்டு சொற்கள் உள்ளன. இரண்டிற்குமே இறையச்சம் என்று பொதுவாக அர்த்தம் விளங்கப் படுகிறது. இவ்விடத்தில் திருக்குர்ஆன் வசனமொன்று நம் சிந்தனைக்கு முன் நிற்கிறது:
“இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும்
அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து
அல்லாஹ்வுக்கு கஷிய்யத் செய்து
மேலும் அல்லாஹ்வுக்கு தக்வா செய்கிறார்களோ
திண்ணமாக அவர்களே வெற்றி பெற்றவர்கள்”
(24:52)

கஷிய்யத் என்பது வேறு தக்வா என்பது வேறு என்று இந்தத் திருவசனம் தெளிவாகப் பிரித்துக் காட்டியிருக்கிறது. இரண்டிற்குமே இறையச்சம் என்று அர்த்தம் வைப்பது இந்தத் திருவசனத்தை அபத்தமாக விளங்க வைத்துவிடும். இந்தத் திருவசனத்தின் பேரில் அல்லாமா கரீமி ஷாஹ் ஆமிரி அவர்கள் பேசியதன் ஒரு பகுதியைக் கவனியுங்கள்:

”கஷிய்யத் என்ன? தக்வா என்ன? இரண்டிற்குமே அச்சம் என்று பொருள் சொன்னால் எப்படி? ‘அல்லாஹ்வை அஞ்சுவார்கள் மேலும் அல்லாஹ்வை அஞ்சுவார்கள்’ என்றால் சரியான விளக்கமா அது?
நூர் (ஒளி) அத்தியாயத்தின் திருவசனம் இது. நூரீயிடம் கேளுங்கள், அவர் உங்களுக்குச் சொல்வார் இது என்ன என்று. நூரீயால் (நூரி ஷாஹ் (ரஹ்)) நூரி (ஒளிமயம்) ஆக்கப்பட்ட யாரேனும் ஒருவரிடம் கேளுங்கள். அல்லாஹ்வின் கலாம் (பேச்சு) இது. கலீமியிடம் கேளுங்கள். அவர் உங்களுக்குச் சொல்வார் இது என்ன என்று.” ஆக, இறைஞானம் கொண்ட சூஃபிகளிடம் கேட்டுத் தெரியுங்கள் என்று சொல்கிறார்கள்.

இதனை விளக்க பின்வரும் திருவசனங்களைக் கவனிப்போம்:
“இறைநம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்
அவர்கள் எத்தகையோர் எனில்
தம் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்
மேலும், வீணானவற்றை விட்டும் விலகி இருப்பார்கள்”
(23:1-3)

மேற்சொன்ன திருவசனங்களில் உள்ளச்சம் என்பதற்கு மூலத்தில் கஷிய்யத் என்றுள்ளது. (24:52) திருவசனத்தில் கஷிய்யத்தைத் தொடர்ந்து தக்வா சொல்லப்பட்டது. இந்தத் திருவசனங்களின் (23:2,3) அமைப்பில் முறையே அவை விளக்கப்படுவதாகக் கொண்டால் தக்வா என்பது தவிர்த்தல் – விலகுதல் என்னும் அர்த்தம் பெறுகிறது.

பொதுமையாக இப்படிச் சொல்லலாம்:
கவ்ஃப் – அச்சம்
கஷிய்யத் – உள்ளச்சம்
தக்வா – தவிர்ப்பு.

’வீணானவற்றை விட்டும் விலகி இருப்பார்கள்’ என்பதன் பொருள் என்ன? பொதுவாகவே, ஆகாதவை என்று இறைவனும் இறைத்தூதரும் அறிவித்த அனைத்தையும் விட்டு அடியான் விலகி இருக்க வேண்டியது அவசியம். ஆகுமானவற்றிலும் அவன் அளவைப் பேணுவது அவசியம். இது பொதுவான தக்வா – தவிர்த்தல் ஆகும்.

சூஃபிகள் தக்வா என்பதற்கு இன்னும் ஆழமான நிலைகளில் பொருள் கொள்கிறார்கள். படைப்புக்களின் பண்புகளைப் படைப்புக்களின் பக்கமும் இறைவனின் பண்புகளை இறைவனின் பக்கமும் சேர்க்க வேண்டும் என்பதே அவர்களின் தக்வா ஆகும்.

படைப்புக்களில் இறைவனின் பண்புகள் பிரதிபலித்துக் கொண்டிருப்பதால் இது மிகவும் அவசியமாகிறது. இந்தத் தக்வா விளக்கம் இல்லாதவன் இணைவைப்பு (ஷிர்க்) என்னும் பாவத்தில் விழுவான். படைப்புக்களின் பண்பினை இறைவனின் பக்கம் சேர்த்துவிடுவான் அல்லது இறைப்பண்புகளைப் படைப்புக்களின் பக்கம் சேர்த்துவிடுவான் அல்லது இரண்டையுமே செய்வான். இந்த நிலையில் இருந்து தப்பிக்க தக்வா அவசியம்.

இறையச்சம் (கஷிய்யத்) என்பதை இறைஞானம் இல்லாமலே செய்ய முடியும். ஆனால் தக்வா செய்ய இறைஞானம் அவசியம்.

படைப்புக்களில் இறைவனின் பிரதிபலிப்பு இருக்கிறது. அதனைப் படைப்பிற்கு உரியதாக விளங்கிவிடாமல் இறைவனுக்குரியதாகக் காணும் தக்வா வாய்ப்பதற்கே நோன்பு கடமை ஆக்கப்பட்டுள்ளது.

நோன்பு அடியானில் நிகழ்வதாக இருப்பினும் அது இறைவனுக்கு உரியதாகவே இருக்கிறது என்பதன் தாத்பரியத்தை அந்தத் தக்வா உள்ளவர்களே புரிந்துகொள்ள முடியும்.