Wednesday, January 11, 2012

மானின் நரம்புகள்




உன் கானகத்து மரத்தில்
இழைத்துச் செய்ததொரு
இசைக்கருவி கொண்டு
காத்திருக்கிறேன்

முறுக்கி வைத்த
மானின் நரம்புகள்
தளரும் முன்னம் வா

கானகம் எங்கும்
எதிரொலிக்கும் எனினும்
உன்னைச் சேரா இசை
என்ன இசை?

உன் அருகாமையே
மனதை
விரல்களில் சேர்க்கும்

உன் நெருக்கமே
விரல்களை
யாழில் சேர்க்கும்

கையில்தான் இருக்கிறது கருவி
என்றபோதும்
மீட்டாமல் எழுமோ இசை?

முறுக்கி வைத்த
மானின் நரம்புகள்
தளரும் முன்னம் வா.

Tuesday, January 10, 2012

ஆனந்தக் கொலைவெறி!




Kola-veri  / …./(Tamil) [U] 1. An intense feeling : I am kolaveri over this matter  ; 2.Killing rage : why this kolaveri upon an innocent boy?

யார் கண்டது? அரை லட்சம் வார்த்தைகள் கொண்ட ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் அடுத்த பதிப்பில் அறுநூற்று சொச்சமாவது பக்கத்தில் ko… என்று தொடங்கும் சொற்பட்டியலில் ‘கொலவெறிஎன்னும் வார்த்தை இப்படி இடம்பெற்றிருந்தால் ஆச்சரியமில்லை.

ஏற்கனவே இந்தியா ஆங்கிலத்திற்குப் பல சொற்களை கொலை... மன்னிக்கவும், கொடை செய்திருக்கிறது. GURU, KARMA, YOGA போன்ற சொற்கள் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் உள்ளன. இவையெல்லாம் இந்தியாவின் ஆன்மிகப் பண்பாடு சார்ந்த சொற்கள். ஆனால் ‘கொலவெறி’? இந்தியாவின் அரசியல் கலாச்சாரம் சார்ந்த சொல் என்று கூறலாம்!

இப்படியெல்லாம் தோன்றும் அளவுக்கு ‘வைதிஸ் கொலவெறிடிபாடல் வையமெல்லாம் பரவிவிட்டது. அமித்தாபச்சன், சல்மான் ருஷ்டி, ஒபாமா போன்றோர் இந்தப் பாடல் பற்றி ட்விட்டரில் பாராட்டி எழுதியிருக்கிறார்கள் என்னும் செய்திகள் வந்தன. “பாருங்கள், தமிழ் தெரியாதவர்கள்கூட இந்தப் பாடலை ரசிக்கிறார்கள். இது தமிழராகிய நமக்கெல்லாம் பெருமையான விஷயம்என்றார் ஒரு அப்பாவி ஆறுமுகம். இதிலென்ன ஆச்சரியம்? ஏதோ அவர்களெல்லாம் சிலப்பதிகாரத்தை ரசித்துவிட்டது போல் பேசுறீங்களே, இது ஓர் ஆங்கிலப் பாடல்தானே?என்றேன்.

உண்மைதானே? சிலப்பதிகாரத்திற்கு ‘உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்என்றொரு விவரிப்பு உண்டு. அதுபோல் இந்தப் பாடல் ‘தமிழிடை இட்ட ஆங்கிலப் பாடல்தானே? பிறகு எல்லோரும் ரசிப்பதில் என்ன சிக்கல்? “ஜெய்ஹோ” (ஸ்லம்டாக் மில்லியனெய்ர்) பாடலை உலகமே ரசித்ததே, அதை வேண்டுமானால் சொல்ல்லாம், இசைக்காகவே ரசித்தார்கள் என்று. (ஜெய்ஹோ என்னும் சொல்லும் ஆங்கில அகராதியில் இடம்பிடித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.)

ஆனால் இந்தக் கொலவெறிப் பாட்டு இப்படி சகட்டு மேனிக்கு ஹிட் ஆகும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். லேப்டாப்பை ஆன் செய்தாலே என் மகன் இந்தப் பாடலைத்தான் போடச் சொல்கிறான். அன்று ஒருநாள் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது “வைதிஸ் கொலவெறி...டிஎன்று பாடியபடி நான்கைந்து பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தன. இப்படிப் பிஞ்சுப் பிள்ளைகளை எல்லாம் தெருவில் கொலைவெறியோடு சுற்ற விட்டிருக்கிறதே இந்தப் பாடல் என்று நினைத்துக் கொண்டேன். நன்றாகப் பேசிக்கொண்டிருந்த பிள்ளைகள் ‘பப்பாப்பப்பா... பெப்பெப் பெப்பே...என்று ஊமைகளைப் போல் திரிகின்றன.


மிக அதிகமாக ரீமிக்ஸ் செய்யப்பட்ட தமிழ்ப்பாடல்- ஆல்ஸோ இந்தியப் பாடல் இதுவாகத்தான் இருக்கவேண்டும். செப்புமொழி பலவற்றிலும் ரீமிக்ஸ் செய்யப்பட்டாலும் ‘கொலவெறிஎன்னும் கலைச்சொல் (Technical term! நெலமடா சாமி!) மட்டும் அப்படியே தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. (தக்கயாக பரணிங்கறது இதுதானா சார்? –கு.குசலா)

சோனு நிகமின் ச்சோட்டூ (பையன்) பாடிய மழலை இழையும் ரீமிக்ஸ், ஒரு பண்ணாடைப் பயல் பாடியிருக்கும் பாடாவதியான அரபி ரீமிக்ஸ் (Why this color very green?”  என்கிறான். கொலைச் சொல் மிஸ்ஸிங்.), மூன்று அணில்கள் – Chipmunks – பாடும் துள்ளலான ரீமிக்ஸ், பஞ்சாபி மொழியில் பெயர்த்து ஜெ.எஸ்.எல்.சிங் பாடியிருக்கும் ‘தேசிரீமிக்ஸ் (பாங்க்ராவின் தனித்தன்மையான துடிப்பு!) ஆகிய மறுகலக்கல்களைச் செவி மடுத்தேன்.

ஒரு இசைப்பாடலை எப்படி அணுகுவதென்றே பலருக்கும் தெரியவில்லை என்பதற்கு இந்தப் பாடலும் ஓர் உதாரணமாகிவிட்டது. அதற்குக் காரணம் இந்தப் பாடல் பெற்றிருக்கும் அதீதமான பிரபல்யம்தான் என்று தோன்றுகிறது. அதைப் பார்த்துப் பலரும் மருண்டிருகக் கூடும். சிறுபத்திரிகை ஒன்று “தமிழ்மீது ஏனிந்தக் கொலைவெறி?என்று தலையங்கம் தீட்டியிருந்தது (திட்டியிருந்தது). செம்மொழியான தமிழ்மொழியாம்...என்று கலைஞர் எழுதியது போல் தனுஷும் எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தால் நியாயமா?

“கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வைரமுத்து மாதிரியான கவிஞர்களின் பாடலெல்லாம் உலகப் புகழ் பெறல. இவன் எழுதின பாட்டு இவ்ளோ ஃபேமஸாயிடிச்சு”என்றார் ஒரு நண்பர். இந்த ஒப்பீடே அபத்தம் என்று அவருக்குப் புரியவில்லை. தனுஷ் முதலில் தருமியைப் போன்ற ஒரு கவிஞன்கூட அல்ல. அந்தப் பாடலின் பலமே அது ஒரு கவிதையாக இல்லை என்பதுதான்! அதனுடைய கேஷுவல் ஃபீலிங்தான் அதன் உயிரோட்டம். ஒரு கல்லூரி மாணவன் காதல் தோல்வி அடைந்ததும் ஐந்திலக்கணம் கைவரப்பெற்றவன் போல் எதுகை மோனை பேணிப் புலமை செறிந்த பாடலைப் பாடுவான் என்பதுதான் செயற்கை. அந்தச் செயற்கை பழைய படங்களிலே இருந்தது. இப்போது எதார்த்தம் – காஷுவல்னெஸ் தலையெடுக்கிறது.

இந்தச் சூழலை மேலை நாட்டுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கவிதைக்கும் இசைப்பாடலுக்கும் உள்ள வேறுபாடு அங்கே தெளிவாகப் பேணப்படுகிறது. கவிதைகளைத்தான் மேற்கோள் காட்டுவார்கள், இசைப்பாடலகளின் வரிகள் மேற்கோள் காட்டப்படுவது மிகவும் அபூர்வமாகத்தான் நடக்கும். மில்டன், ஷேக்ஸ்பியர், வால்ட் விட்மன், ப்ளேக், வோர்ட்ஸ்வொர்த், கீட்ஸ், ஷெல்லி, எலியட் போன்றவர்கள் கவிஞர்கள். அவரக்ள் எழுதியவை கவிதைகள். பீட்டில்ஸ், போனியம், அப்பா, பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ், பாய்ஸோன், ஸ்பைஸ் கேர்ள்ஸ் போன்றவை இசைக்குழுக்கள். அவர்கள் எழுதிப்பாடியவை இசைப்பாடல்கள். எல்விஸ் ப்ரிஸ்லி, மைக்கேல் ஜாக்ஸன், பாப் மார்லி, மடோனா, ஷனையா ட்வெய்ன், செலீன் டியான் போன்றவர்கள் இசைக்கலைஞர்கள். அவர்கள் பாடியவை இசைப்பாடல்கள். இசைப்பாடலகள் என்பவை கவிஞர்களின் வரிகளைப் போல் அர்த்தகனம் கொண்டவையாக, அழுத்தமும் ஆழமும் கொண்டவையாக இருக்கவேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் அப்படி இருக்கக் கூடாது என்றுகூட சொல்லலாம். அதில் பிரதிபலிக்க வேண்டியது இயல்புநவிற்சி – காஷுவல்னெஸ் மட்டுமே. தத்துவத்தையே சொன்னாலும் அது இயல்புநவிற்சியாகத்தான் வெளிப்படுத்த வேண்டும். பொழுதுபோக்கு இசைப்பாடலுக்கு அதற்கு மேல் மதிப்புக் கிடையாது. அதனால்தான் மைக்கேல் ஜாக்ஸன், மடோனா போன்றவர்களை ‘entertainers’  என்று அழைக்கிறார்கள்.

ஆனால் தமிழகச் சூழலில் விளைந்த விபரீதம், இங்கே வள்ளுவர் தொடங்கி கம்பன் வழியாக வள்ளலார், பாரதி, பாரதிதாசன் என்று வந்துகொண்டிருந்த கவிதை ரூட் மக்களின் மனத்தொகுப்பில் அப்படியே சினிமாவுக்குள் புகுந்து கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி, வைரமுத்து, நா.மு, பா.வி என்று போய்க்கொண்டிருக்கிறது. இசைப்பாடலகள் தாம் இதுகாறும் அணிந்திருந்த கவிதையெனும் வேடத்தைக் களையும் தருணம் இது என்று சொல்லலாம். உலகளாவிப் பொதுமைப்பட்டு வரும் நவீன இசை இந்த நிர்ப்பந்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

கொலவெறிஎன்னும் சொல்லாடல் பல சிந்தனைகளை என் மனதில் தூண்டி விட்ட்து. இது ஒரு காதல் பாடல். அதில் எங்கிருந்து கொலைவெறி வந்தது? என்று நினைக்கலாம். காதல் மனிதனின் அகம்பாவத்தை, நான்என்னும் தன்முனைப்பை (ego) அழிக்கிறது. காதல் என்னும் போரில் தன் அழகென்னும் ஆயுதத்தால் காதலனின் தன்முனைப்பை வெட்டி வீழ்த்துபவளாகக் காதலி சித்தரிக்கப்படுவது அனைத்து இலக்கிய மரபுகளிலும் உள்ளது. சமய மரபுகளிலும் இந்தக் குறியீடு உண்டு. அசுரனின் தலையை வெட்டி ரத்தம் சொட்டச் சொட்டத் தன் கையில் பிடித்தபடி சிவனின் உடல் மீது ஏறி நிற்கும் காளியின் ஓவியம் ஞாபகம் வந்தது. மேற்சொன்ன கொலைவெறி இதுதான்.


நஸீர் அக்பராபாதி (1735-1830) என்னும் உருதுக் கவிஞர் எழுதிய அற்புதமான கஜல் ஒன்றும் ஞாபகம் வந்தது. “ஃகூன்-ரேஸ் கரிஷ்மா நாஸ் சிதம் கம்ஸோன் கி ஜுகாவத் வெய்சீஹிஎன்னும் அந்தப் பாடல் முஸஃப்பர் அலி இசையமைத்து வெளியிட்ட ‘ஹுஸ்னே ஜானா’ (காதலியின் அழகு) என்னும் சூஃபி ஆல்பத்தில் இருக்கிறது. அப்பாடலின் தோராயமான மொழியாக்கம்:
ரத்தக் களறி செய்யும்
அந்தப் பேரழகியின் வாள்விழிகள்
மெல்ல கவிழும்போது
எப்போதும் அப்படித்தான்.
இரக்கம் அற்றவள், கொடியவள்
கவலை அற்றவள், ஓய்வில்லாள்
அரட்டைக்காரியின் ஆடம்பரங்கள்
ஒளிமயமாய் ஜ்வலிப்பதென்ன?
உள்ளமோ கடினமானது
ஊழிக்கல் போன்று
ஆனால் அவளின் பேச்சு
கனியின் ரசம்!
அவளின் முகத்தில்
அழகின் தகிப்பில்
ஒவ்வொரும் கணமும்
ஒளிரும் முத்தாகிறது.
துளிர்க்கும் வியர்வையின்
ஒவ்வொரு துளியும்
மின்னுகின்றது
நூறு முத்துக்களின் ஒளியாய்.

அன்றொரு நாள் இலக்கிய வகுப்பில் சிதம்பரம்பற்றிப் பேச்சு வந்தது. (ஊரைப் பற்றித்தான் ஐயா, ஆளைப் பற்றி அல்ல!) சிதம்பரத்தின் பழைய பெயர் தில்லை. தில்லைக் காடுகள் மண்டியிருந்த ஊர். தில்லை என்றதும் ருத்ர தாண்டவம் ஞாபகம் வந்துவிடும். நான் மாணவர்களிடம் சொன்னேன், “உண்மையான ருத்ர தாண்டவத்தை நீங்கள் அடர்ந்த காட்டின் நடுவேதான் உணர முடியும். புயல் போல் காற்று வீசும்போது உங்களைச் சுற்றிலும் ஐம்பதடிக்கும் உயரமான பன்னூறு மரங்கள் கிளை பரப்பி நின்றாடும் காட்சியைக் கொஞ்சம் கறபனை செய்யுங்கள். அதுதான் ருத்ர தாண்டவம். அதுதான் ஊழிக்கூத்து! சிவன் சுடுகாட்டில் இருப்பான் (அழிவு!) என்று கேட்டுக் காரைக்கால் அம்மையார் அக்காட்டில் சென்று இருந்தபோது இதனைக் கண்டிருக்க வேண்டும். ‘திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்என்னும் பெயரை இதற்கான குறிப்பாகக் கொள்ளலாம். காட்டு மரங்கள் அப்படி ஆடும் காட்சி எப்படி இருக்கும்? நான் சிறுவனாக இருக்கும்போது மழைக்காலத்தில் இக்காட்சியை எங்கள் வீட்டின் கொள்ளைப்புறத்தில் கண்டிருக்கிறேன். ஆனால் நான் கண்டது பத்து பனிரண்டுதென்னை மரங்கள். கிளையில்லாத தென்னை மரம் ஒன்று ஓலை மட்டைகளைக் காற்றில் வீசி ஆடும் காட்சியே வெறியேற்றத்தில் பெண்ணொருத்தி கூந்தல் விரித்தாடும் காட்சியை ஒத்திருந்தது என்றால், கானகத்தில் ஆயிரக் கணக்கான மரங்கள் ஒவ்வொன்றும் பன்னூறு கிளைகள் விரித்தாடும் காட்சி எப்படி இருக்கும்? ஓருடலில் பல கைகள் கொண்ட ஒருவனின் நடனமாக அதனைக் கவித்துவ மனம் உருவகித்துள்ளது. இயற்கையில் இறைவனின் வல்லமை வெளிப்படும் கணம் அது. அதனை சிவனின் தாண்டவமாக, கூத்தாகக் குறியீடு தந்திருக்கிறார்கள். தில்லை என்பது இயற்கை சார்ந்த பெயர். சிதம்பரம் என்பது தத்துவம் சார்ந்த பெயர் என்பதைக் கவனியுங்கள். இயற்கையின் இயக்கத்தில் வெளிப்படும் இறையாற்றலை மனம் கிரகித்துக்கொண்டு அதை ஒரு தத்துவமாக்கிப் பின் அந்தத் தத்துவத்திற்கு ஒரு குறியீட்டைக் கொடுத்துள்ளது. இயற்கையில் நீங்கள் காண்பது இயக்கத்தை. சிலையில் காண்பது அந்த இயக்கத்தின் ஒரு பிம்பத்தை. பிம்பத்திலிருந்து இயக்கத்தை உருவகித்துக் கொள்ளவேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுவிட்டது. எந்தக் காட்டில் இருந்து தத்துவத்தை மனிதன் கிரகித்துக் கொண்டானோ அந்தக் காட்டையே அழித்து அந்தத் தத்துவத்திற்கு ஒரு குறியீட்டை உருவாக்கியிருப்பது ஒரு நகைமுரண். ஆனால் நாகரிக வளர்ச்சியின் போக்கு இப்படித்தான் செல்லும். அதைத் தடுக்கவியலாது. காட்டில் கண்ட நடனத்திற்கு மனிதன் தன் உருவத்தில் குறியீடு செய்திருக்கிறான். இல்லையெனில், சிவன் மரமுமல்ல மனிதனுமல்ல. இப்போது மனிதன் தன்னுள் காடு கண்விழிக்கும் கணத்தைக் கண்டடைய வேண்டும். இல்லையெனில் தாண்டவம் விளங்காது. இந்தக் குறியீட்டுச் சிற்பத்தில் கவனிக்க வேண்டியது முகபாவம். அத்தனை உக்கிரமான நடனத்தை இயற்றுபவனுக்கு அத்தனை சாந்தமான முகம்! அகத்தின் அழகு முகத்தில்! ஒரு புயலின் மையம் போன்றது அது. மௌலானா ரூமி வகுத்த சுழலும் நடனத்தில் இதைத்தான் கவனிக்கச் சொல்கிறார்கள். உடல் எத்தனை வேகமாகச் சுழன்றாலும் மனம் பேரமைதி கொண்டு அசைவற்றிருக்க வேண்டும். இறைவனின் ஆற்றல் சூறையாக மழையாக நிலநடுக்கமாக ஆழிப்பேரலையாக அழிக்கும் கோலத்தில் வெளிப்பட்டாலும் அவனுடைய நிலை பேரமைதிதான் – சலாமத். அந்த அமைதியைத் தன் ஆன்மாவில் தொட்டவனுக்கு இவற்றால் கலக்கம் இல்லை!



சிவனின் நடனம் வெறுமனே அழிவின் நடனம் மட்டுமல்ல. ருத்ர தாண்டவம் என்று சொல்லப்படும் அதுவே ஆன்ந்தத் தாண்டவம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் ஒருகோணத்தில் அழிவாகத் தெரிவது வேறொரு கோணத்தில் ஆக்கமாக இருக்கும். ஆக்கத்திற்காகவே அழிக்கும் நடனம் அது. கன்னிமை அழியாமல் தாய்மை சாத்தியம் இல்லை. கல் அழிக்கப்படுவதாகத் தோன்றுவது சிற்பத்தின் ஆக்கம்தான். ஒரு கோலம் அழிந்து மறுகோலம் பிறக்கிறது. “சக்தியை ஒரு வடிவிலிருந்து வேறு வடிவிற்கு மாற்றி அமைக்க முடியும். ஆனால் அதனை ஆக்கவோ அழிக்கவோ இயலாது”  (Energy can be transformed from one form to another but cannot be created or destroyed.)  என்பது தெர்மோடைனமிக்ஸ்-ன் முதல் விதி. இந்த சூட்சுமம் தெரிந்தவர் ஒரு கோலத்தின் அழிவில் அமைதி இழப்பதில்லை. விதை தான் அழிந்துகொண்டிருப்பதாகப் புலம்பலாம். ஆனால் அதை விருட்சமாக வளர்த்துக் கொண்டிருக்கும் இறைக்கருணை தன் விளையாடலை நிறுத்துவதில்லை. அது ஆனந்தக் கொலைவெறி!

சூஃபிகள் இறைப்பண்புகளை இரண்டு வகைப்பட்டதாக விளக்குகிறார்கள். அவனது வல்லமை – ஆற்றல் சார்ந்த திருக்கல்யாண குணங்கள் (ஜலால்) மற்றும் அவனது கருணை – அழகு சார்ந்த திருக்கல்யாண குணங்கள் (ஜமால்). Majesty and Beauty என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. குறியீடாக, ஆற்றலுக்கு ஆணையும் அழகிற்குப் பெண்ணையும் சொல்வதுண்டு. ஆற்றல் வீரமாக வெளிப்படும். அழகு அன்பாக, காதலாக, அருளாக வெளிப்படும். இவற்றில் ஒன்று மற்றதை விட்டு விலகியதில்லை. ஒன்று மற்றொன்றினைச் சார்ந்தது, தாவோ வட்டம் குறிப்பதைப் போல.

“இறைவனின் ஆற்றல் அழகில் வெளிப்படும் கணங்கள் உண்டு. அதைக் காணும் பக்தன் அழகின்முன் பணிந்துவிட வேண்டும். உண்மையில் அது ஆற்றலுக்குப் பணிவதாக இருக்கும். இறைவனின் அழகு ஆற்றலில் வெளிப்படும் கணங்கள் உண்டு. அப்போது அந்த அழகை பக்தன் வியந்து பரவசம் அடைய வேண்டும். அப்படி இல்லை எனில் அவன் புரிந்துகொள்ளவில்லை என்றாகிவிடும்என்று சூஃபி ஞானி இப்னுல் அரபி சொல்கிறார்.

இது ஒருவகையான Reversal Role Play. காதலில் ஆண் பெண்ணைப் போலும், பெண் ஆணைப் போலும் நடந்துகொள்ளும் தருணங்கள். இந்தத் தத்துவத்தை மௌலானா ரூமியின் கவிதை வரி ஒன்று மிக அழகாக வருணிக்கிறது: “மான் புலியை வேட்டை ஆடும் நிலை. இதே நிலையை குணங்குடி மஸ்தானின் கண்ணி ஒன்றும் இப்படிச் சொல்கிறது:
“பல்லை இதழ் கடிக்கப்
      பானை தடி ஒடிக்கக்
 கல்லைத் தேங்காய் உடைக்கக்
      காண்பாய் மனோன்மணியே.

காதலில் காதலன் காதலியின் நினைவில் மூழ்கி விடுகிறான். அவள் அல்லாது அவன் உள்ளத்தின் உள்ளே வேறு எதுவும் இருப்பதில்லை. அதுவரை அவன் தன் மனதிற்குள் சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் காதலியின் நினைவு இரக்கம் காட்டாமல் அழித்துவிடுகிறது. தன்னை நேசிப்பவனின் இதயத்தை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்பதே அதன் குறி. இது இறைக்காதலுக்கே மிகவும் பொருத்தம் என்று சூஃபிகள் காண்கின்றனர். ஏனெனில் இறைநம்பிக்கையாளனின் இதயம் இறைவனின் ஆசனம்என்பது நபிமொழி.



திருக்குர்ஆனின் 27-வது அத்தியாயமான “அந்-நம்ல்” (எறும்பு) இறைத்தூதர்ரும் மன்னருமான சுலைமான் (அலை) அவர்களின் கதையைச் சொல்கிறது. ஷீபா நாட்டின் அரசியான பல்கீஸ் என்பவருக்கு சுலைமான் நபி கடிதம் எழுதி தற்பெருமையை அகற்றி இறைவனுக்குப் பணிந்த நிலையில் தன்னிடம் வருமாறு சொல்கிறார்கள். அந்தக் கடித்த்தைப் படித்த அரசி பஸ்கீஸ் தன் அமைச்சர்களிடம் ஆலோசனை செய்கிறார். சுலைமானுடன் போரிடலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். அதற்கான படை வலிமை தங்களிடம் உள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். அதை மறுத்து பல்கீஸ் சொல்கிறார்:
“அரசர்கள் ஒரு நகரத்திற்குள் நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறுதான் இவர்களும் செய்வார்கள்.(27:34)

இந்த வசனத்தின் ஆன்மிக உட்பொருளாக சூஃபி மகான் இப்னுல் அரபி அவர்கள் தரும் வியாக்யானம்: “இறைவனின் ஒளிச்சுடர்கள் பக்தனின் இதயத்திற்குள் புகும்போது அதில் இருக்கும் உலக இச்சைகளை முற்றிலுமாக அழித்து விடுகிறது.

‘கொலவெறிஎன்னும் சொல்லாடல் என் மனதில் இன்னொரு ஞாபகத்தையும் தூண்டியது. பாரதியார் எழுதிய ஊழிக்கூத்துஎன்னும் பாடல். அண்டங்களின் அழிவை சொற்களின் சந்தத்திலும் ஓசையிலும் தொனிக்க அவன் இதில் செய்திருக்கும் பிரயத்தனம் வியப்பூட்டுகிறது. அதன் இறுதியில் வரும் இரண்டு வரிகள் இவை:
“காலத் தொடுநிர் மூலம்படு மூவுலகும் – அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியாய் இலகும்

காலத்தின் முடிவில் (கியாமத் – காலத்தின் நிற்றல்) அகில உலகங்கள் அழிந்து போக இறைவனின் ஒளி மட்டும் தனித்திருக்கும் என்பது இவ்வரிகளின் கருத்து. இக்கருத்து திருக்குர்ஆன் வசனமொன்றின் கருத்தினை அப்படியே பிரதிபலிக்கின்றது:
அதன் மீதுள்ள அனைத்தும் அழிந்துவிடும்.
மாட்சிமையும் பேரருளும் கொண்ட
உம் ரட்சகனின் திருமுகமே
நிலைத்திருக்கும்
(55:26,27)

Monday, January 9, 2012

ஒரு துண்டு வானம்




எப்போது பார்த்தாலும் அவன்
மண்ணைக் கிளறிக்கொண்டிருப்பான்

என்ன தேடுகிறான் என்று
ஒருவருக்கும் தெரியாது ஒன்றும்

மண் கிளறும் கிறுக்கன்
என்பதல்லால்
விமரிசனம் வேறொன்றும்
விளம்பப் படவில்லை.

மண்ணைக் கிளறிக்கொண்டிருந்தாலும்
தோட்டக்காரனோ
உழவனோ
தொழிலாளியோ
அல்ல அவன்

விதைப்பதற்கோ
புதைப்பதற்கோ
அல்ல அவன் தோண்டுவது

ஒரு கோப்பைத் தேநீர் தந்து
சிநேகம் பிடித்தேன் அவனை

மண்ணைத் தோண்டுவது
தன்னைத் தோண்டுவதே
என்றான்.

ஒருநாள் மாலை
நேயச் சிரிப்புடன் வந்தான்
மண்ணில் கிடந்ததென்று சொல்லி
ஒரு துண்டு வானம்
கையில் தந்தான்.

Friday, January 6, 2012

என்னுள்ளே என்னுள்ளே... (தொடர்ச்சி)




 அவிலா தெரசாவின் இளம்பிராயத்தின் முதற்கட்டத்தை அவரின் ஏழாம் அகவையிலிருந்து சில வருடங்கள் வரை என்று கூறலாம். அக்கால கட்டத்தில் அவர் தன் அண்ணனான ரொட்ரிகோவுடன் சேர்ந்து மூர் இனத்தினர் வாழும் பகுதிக்குச் சென்று கிறிஸ்துவுக்காக உயிரை அர்ப்பணிக்க வேண்டும் என்று முயல்வதைக் காண்கிறோம். ஆனால் அந்த முயற்சி நிறைவேறவில்லை. தன் வீட்டின் தோட்டத்தில் சக வயதுப் பிள்ளைகளுடன் அவர் விளையாடும்போது கிறித்துவ நாடோடி ஞானிகள் போல் தம்மை பாவித்துக் கொண்டு குகைகள் அமைத்து அதில் தியானத்தில் ஈடுபடுவது போல் விளையாடியிருக்கிறார்.

 

ஆனால் அவர் டீனேஜ் என்று சொல்லப்படும் விடலைப் பருவத்திற்குள் நுழையும்போது அவரது மனோபாவத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுபற்றி “புனித அவிலா தெரசாவின் வாழ்க்கைநூலின் முன்னுரையில் சொல்லப்பட்டிருப்பதாவது:

“ஏறத்தாழ இக்காலத்தில்தான் இளம்பெண்ணாக இருந்த தெரசாவின் பக்தி குறைந்தது. பல்வேறு சாகச்ச் செயல்களைப் புரிந்த வீர்ர்களைப் பற்றியும் அவர்களின் சாதனைகளைப் பற்றியும் எடுத்துரைக்கும் அற்புத நவிற்சிக் கதைகளை விரும்பி வாசிக்க ஆரம்பித்தார். மேலும் தனது பெண்மையின் பொலிவை மெருகூட்டவும் திருமணம் செய்யவும் வேண்டுமென்ற திட்டமும் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சாகசச் செயல்களைப் பற்றியும், சாதனை பற்றியும் இரசித்துக் கற்பனையில் மிதந்த தெரசா, தானும் தன் சகோதரனோடு சேர்ந்து இந்த வீரதீரச் செயல்களை மையமாக வைத்துக் கதை ஒன்று எழுதினார். தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இயேசு சபையைச் சேர்ந்த ரிபேரா அந்தக் கதை சிறப்பாக அமைந்திருந்தது எனக் கூறுகிறார்.

“தெரசாவின் தாய் 1528-ம் ஆண்டு நவம்பர் மாதம் இறந்தார். அதன் பின்னர் தெரசா தன் அத்தை டோனா எல்வீராதே செப்பீதா என்பவரின் மகன்களுடன் அதிக அன்புடன் பழகிய காரணத்தாலும், தன்னைப் பக்தி வழியிலிருந்து பிரித்துக் கொண்டிருந்த வேறொரு முன்பின் தெரியாத உறவினரோடு நட்புறவு கொண்டிருந்ததாலும் வீட்டிலிருந்து எதிர்ப்புக்கு உள்ளானார். பிந்திய காலத்தில் தெரசா தனது வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது இதற்காக வருத்தப்பட்டது மட்டுமல்ல; தனது ஆரம்பகால ஆர்வங்களைத் திசைதிருப்பிய விருப்பமற்ற சூழ்நிலைகள் இவை என்று கூறுகின்றார். .... தெரசாவுக்கு அப்போது பதினாறு வயது.” (பக்.3,4)


 

முதற்கால கட்டம் அவருடைய ஆன்மிக வாழ்வின் விதைப்பருவம் என்பதாகவும் இரண்டாம் காலகட்டம், அவிலா தெரசாவே வருத்தப்பட்ட்து போல் ஆன்மிகத்திற்கு எதிரான போக்கு கொண்ட காலகட்டமாகவும் தெரியலாம். ஆனால் உளவியல் பகுப்பாய்வு மூலம் அணுகும்போது இந்தக் காலகட்டமும் அவரின் ஆன்மிக ஆளுமை உருவானதற்குரிய முக்கியமான கூறுகளைக் கொண்டிருப்பதை விளங்க இயலும்.

 

எந்த ஒரு நபருக்கும் நிகழ்வதைப் போலவே அவர் தன் டீனேஜில் அதற்குரிய உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்களை அடைந்திருக்கிறார். இந்த இடத்தில் ஒரு விஷயம் சொன்னால் பொருத்தமாக இருக்கும். பல வருடங்களுக்கு முன் ஒரு சிறுவன், வீட்டை விட்டு விலகி வந்து, தன்னை ஒரு துறவியாக அறிவித்துக்கொண்டு குட்டிச் சாமியார்என்னும் பெயரில் பிரபலமாகித் தமிழ்நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டார். தொலைக்காட்சியில் அவரின்பேட்டியை நான் பார்த்திருக்கிறேன். பல மந்திரங்களை, ஞான வாசகங்களை எல்லாம் மனனம் செய்து வைத்துக்கொண்டு பேச்சுத் திறமையால் சக்கை போடு போட்டார். அப்போது நான் என் நண்பர்களிடம் சொன்னேன், “இவர் இன்னும் சோதனைக் கட்டத்திற்கே வரவில்லை. அதற்குள் இவரை சித்தி அடைந்த ஒரு ஞானியாக மக்கள் கொண்டாடுகிறார்கள். இப்போதுதான் பத்து வயதோ என்னவோ ஆகிறது. இன்னும் நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் சோதனை கட்டமே ஆரம்பமாகும். அதற்கப்புறம் குறைந்தது இருபது வருடங்களாவது சாமியார் தன் ஆன்மிக வளர்ச்சியை நிரூபித்தாக வேண்டும். அப்போதும் அவர் குட்டிச் சாமியாராகவே இருப்பாரானால் ஆன்மிகத்தில் அவர் வளரவில்லை என்று தெரிந்துவிடும்!

 

அவிலா தெரசா தன் டீன் பருவத்தில் ஒரு சாகசவீரனைத் தன் வாழ்வின் கதாநாயகனாகக் கற்பனை செய்தது, தன் பெண்மையின் பொலிவை மெருகூட்டிக் கொண்டது ஆகிய செயல்கள் மிகவும் இயற்கையானவை என்றே கருதுகிறேன். அவருடைய கற்பனைப் புலன் வலுப்பெற்று வளர்ந்த காலகட்டம் இது என்னும் கோணத்தில் இக்கட்டம் மிகவும் முக்கியத்துவம் பெருகின்றது. அவர் தனக்கு அவ்வயதில் ஆண் நண்பர்களைத் தேடிக்கொண்டதை அவருடைய நாட்டின் கலாச்சாரச் சூழல் சார்ந்து பார்க்கவேண்டும். இந்த இடத்தில் கண்ட கற்பனைகளையும் செய்து அவரின் வாழ்க்கைக்குள் துழாவ வேண்டிய அவசியம் இல்லை. தன் ஆன்மிக வாழ்விற்கு எதிரான விருப்பமற்ற சூழ்நிலைகள் என்று இவற்றை அவிலா தெரசாவே சொல்கிறார். என்றாலும், அப்படி நடக்கவேண்டி இருந்தது. எனவே கீதை சொல்வது போல், எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

 

இத்தருணத்தில் அவிலா தெரசா அவரின் ஊரில் இருந்த அருள்மரி கன்னியர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கே டோனா மரியா பிரிசேனோ என்னும் கன்னிகாஸ்திரியிடம் இருந்து ஆன்மிகம் பற்றித் தெரிந்து கொண்டார். துறவு வாழ்வின் மீது அவருக்கு ஈர்ப்பு தோன்றிற்று. துறவியாக வாழ்ந்த அவருடைய மாமா டோன் பெதுரோ தே செப்பேதா என்பவரின் வாயிலாக ‘தூய ஜெரொமின்  கடிதங்கள்என்னும் நூலை வாசித்தார். (இவர்தான் பைபிளை ஹீப்ரூ மொழியிலிருந்து லத்தீன் மொழிக்குப் பெயர்த்தவர்.) இல்லறத்திற்கும் துறவறத்திற்கும் இடையில் ஊசாடிக்கொண்டிருந்த அவருடைய மனநிலைக்கு அந்நூல் ஒரு தெளிவை நல்கிற்று. அதன்படி, 02.11.1535-ல் தன் இருபதாம் வயதில் கார்மெல் சபைக் கன்னியர் மடாலயத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

 

அந்த மடாலயத்தில் தியானம் பிரார்த்தனை புகழ்ப்பாடல்கள் மௌனம் ஆகியவை பொதுவாக நடைமுறையில் இருந்தது. ஆனால் ஆழ்நிலை தியானத்திற்கான சூழல் இல்லை. இது பற்றி புனித அவிலா தெரசாவின் வாழ்க்கைநூலின் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது கவனத்திற்குரியது: “நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று உண்டு. கார்மெல் சபை ஒழுங்குத் தொடர் செபத்தை வலியுறுத்தினாலும், தெரசா தனது வாழ்வில் தன் மாமா ஒசுனா என்பவரின் ‘மூன்றாம் ஆன்மிக அகரவரிசை’ (Third Spiritual Alphabet)  என்னும் புத்தகத்தை வாசிப்பதுவரை செபிப்பது பற்றியோ, தியானத்தில் இருப்பது பற்றியோ தெரிந்துகொள்ளவில்லை என்பதே! அவர் கூறும் ஆன்மிக புத்தகங்கள் கார்மெல் சபையினரால் எழுதப்பட்டவை அல்ல; அவை பிரான்சிஸ்கன் சபையினரால் எழுதப்பட்டவை. மேலும் தனது நவதுறவு வாழ்வில் தியான செபத்தைப் பற்றிய பயிற்சி பெறவும் இல்லை” (ப.6)

 


இந்த முன்னுரைப் பத்தியில் “பிரான்சிஸ்கன் சபைஎன்னும் சொல்தான் எனக்கு மூளையில் மணி அடிக்கிறது. பிரான்சிஸ்கன் சபை என்பது அஸிஸ்சியின் தூய ஃப்ரான்சிஸ் (St.Francis of Assissi) என்பவரின் பெயரால் அமைந்தது. இத்தாலியில் உள்ள அஸிஸ்சி என்னும் ஊரில் கி.பி.1182-ல் பிறந்த ப்ரான்சிஸ் கிறித்துவத்தில் முக்கியமான ஓர் ஆன்மிக ஆளுமை. சூஃபித்துவத்தின் தாக்கம் அவரின் ஆளுமையில் உண்டு என்கிறார் இத்ரீஸ் ஷாஹ். தன் பிரபலமான “THE SUFIS” என்னும் நூலில் மேற்குலக ஆன்மிக ரகசியங்கள் என்னும் பகுதியில் ப்ரான்சிஸ் பற்றி ஒரு தனி அத்தியாயமே எழுதியிருக்கிறார் (“MYSTERIES IN THE WEST / IV. St.FRANCIS OF ASSISSI.)

 


ஃப்ரான்சிஸ் ஆரம்ப காலத்தில் ஒரு கவிஞராக இருந்தார். 11-ம் நூற்றாண்டில் இத்தாலி, ஸ்பெய்ன், கிரீஸ் முதலிய நாடுகளில் பரவியிருந்த த்ரூபதூர்’ (TROUBADOUR) என்னும் கவிதை இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தார். த்ரூபதூர்கள் வீரம் மற்றும் காதலைப் பொருண்மையாகக் கொண்ட இசைப்பாடல்களைப் பாடி வந்தார்கள். இந்த இயக்கம் 14-ம் நூற்றாண்டில் மறைந்து போயிற்று.

 

 ஃப்ரான்சிஸின் ஆளுமையில் முக்கியமாக மூன்று சூஃபி ஞானியரின் தாக்கம் பற்றி இத்ரீஸ் ஷாஹ் பேசுகிறார் : நஜ்முத்தீன் குப்ரா, ஃபரீதுத்தீன் அத்தார் மற்றும் மௌலானா ரூமி.

 

நஜ்முத்தீன் குப்ரா (மார்க்கத்தின் மகா நட்சத்திரம்) என்று அழைக்கப்பட்ட ஷைக் அபுல் ஜன்னாப் அஹ்மதிப்னு உமர் அவர்கள் 13-ம் நூற்றாண்டில் ஃகாரிஸ்ம் என்னும் நகரில் வாழ்ந்தவர். இவரின் சூஃபி ஆன்மிகப் பள்ளி குப்ரவிய்யா தரீக்காஎன்று அழைக்கப்படுகிறது. சில ஆன்மிகப் பள்ளிகள் குறிப்பிட்ட காலகட்டம் மட்டுமே செயலாற்றிவிட்டுப் பிற ஆன்மிகப் பள்ளிகளினுள் கலந்து போய் மறைந்துவிடுவதுண்டு. குப்ரவிய்யா பள்ளி அவ்வாறு நக்‌ஷ்பந்தியா மற்றும் சுஹ்ரவர்தியா பள்ளிகளினுள் கலந்து மறைந்த ஒன்று எனப்படுகிறது. நஜ்முத்தீன் குப்ரா அவர்களின் சூஃபி குருநாதர் எகிப்து நாட்டில் வாழ்ந்த ருஸ்பிஹான் பக்லி அல்-ஷிராஸி அவர்களாவார். ருஸ்பிஹான் பக்லி அவர்களின் நாட்குறிப்புக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. சூஃபி வட்டங்களில் பயிலப்படும் அந்த நூல் கனவிலும் நனவிலும் ருஸ்பிஹான் அடைந்த திருக்காட்சிகள் பற்றிக் கூறுகின்றது. நஜ்முத்தீன் குப்ரா அவர்களின் ஆன்மிகப் பள்ளியிலும் திருக்காட்சிகள் (VISIONS) என்னும் பொருண்மை முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.

 

இவ்விடத்தில், நஜ்முத்தீன் குப்ராவின் தாக்கம் அஸிஸ்சியின் ஃப்ரான்சிஸ் மீது இருந்தது பற்றி இத்ரீஸ் ஷாஹ் சொல்லியிருப்பது கவனத்திற்குரியது: “13-ம் நூற்றாண்டின் ஆரம்பக் கடட்த்தில், ஃப்ரான்சிஸின் செயல்பாடுகள் பற்றித் திருப்தி அடைந்த மூன்றாம் போப் இன்னசெண்ட் ப்ரான்சிஸ்கன்ஸ் (FRANCISCANS) என்றழைக்கப்பட்ட “இளைய சகோதரகள்” (MINOR BROTHERS / LESSER BRETHREN)  என்னும் அமைப்பைத் தொடங்க அனுமதி அளித்தார். பணிவு அடக்கம் ஆகியவற்றின் அடையாளமாகக் கூறப்பட்ட LESSER BRETHREN என்னும் அடைமொழியைக் காணும் ஒருவர் அப்படியெனில் ‘மூத்த சகோதரர்கள்’ (GREATER BRETHREN) என்று ஒரு கூட்டம் இருந்ததா? என்று கேட்கலாம். தூய ப்ரான்சிஸின் சமகாலத்தில் அவ்வகையில் அழைக்கப்பட்டவர்கள் நஜ்முத்தீன் குப்ராவின் சூஃபிப் பள்ளியைச் சேர்ந்தவர்களே! (குப்ரா = மாபெரிய, GREATER.) இந்தத் தொடர்பு மிகவும் சுவையானது. ஏனெனில், இந்த சூஃபி குருவின் முக்கியமான பண்புகளில் ஒன்று விலங்குகள் மீது அவருக்கு இருந்த தனித்தன்மையான தாக்கம். பறவைகளால் சூழப்பட்டவராகவே பழைய ஓவியங்கள் அவரைச் சித்தரிக்கின்றன. வெறுமனே தன் ஒரு பார்வையாலேயே வெறிநாய் ஒன்றை அவர் அடக்கினார். தூய ஃப்ரான்சிஸ் அவ்வாறே ஓநாய் ஒன்றை அடக்கிய கதை மிகப் பிரசித்தம். தூய ஃப்ரான்சிஸ் பிறப்பதற்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பே நஜ்முத்தீன் குப்ராவின் அற்புதங்கள் பற்றிய செய்திகள் கிழக்குலகில் பரவியிருந்தன.

 

தூய ஃப்ரான்சிஸ் எப்போதும் பறவைகள் சூழ இருப்பார் என்பது ஸுப்ரசித்தம். அவருடைய படங்கள் பெரும்பாலும் அப்படியே வரையப்படுகின்றன. இந்தப் படிமம்

இன்னொரு ஒப்புமையை எழுப்புகிறது, “மன்திக்குத் தைர் - பறவைகளின் மாநாடுஎன்னும் ஞான காவியம் தந்த ஃபரீதுத்தீன் அத்தார் அவர்களுடன். “சூஃபி குருவான அத்தாரைப் போலவே தூய ஃப்ரான்சிஸ் தன் அங்கியை பிச்சைக்காரன் ஒருவனுடன் மாற்றிக்கொண்டார்என்கிறார் இத்ரீஸ் ஷாஹ்.

 

நஜ்முத்தீன் குப்ராவின் முக்கியமான சீடர்களில் ஒருவர் பஹாவுத்தீன் வலத். இவர் மௌலானா ரூமியின் தந்தை என்பது குறிப்பிட்த்தக்கது. இவருடைய வாழ்விலும் ஆன்மிக நிலைகளிலும் கனவிலும் கண்ட திருக்காட்சிகள் முக்கிய இடம் பெறுகின்றன. அவற்றை அவர் ‘மஆரிஃப்என்னும் நூலாக எழுதியிருக்கிறார். மௌலானா ரூமி தன் குருவான ஷம்சுத்தீன் தப்ரேஸியைச் சந்திக்கும் முன் அவருக்கு ஞான பாடமாக இருந்தது அந்த நூல்தான். இவ்வாறு, தூய ஃப்ரான்சிஸ் மீது தாக்கம் உள்ள நஜ்முத்தீன் குப்ராவின் தாக்கம் மௌலானா ரூமியின் ஆளுமையிலும் உண்டென்பது ஒருபக்கம் இருக்க மௌலானா ரூமியின் தாக்கமும் தூய ஃப்ரான்சிஸ் மீது உண்டு! இது பற்றி இத்ரீஸ் ஷாஹ் தரும் விளக்கங்களைக் கவனியுங்கள்:

“1224-ல் அல்லது அதன் பக்கத்தில், தூய ஃப்ரான்சிஸின் அதி முக்கியமான பாடல் இயற்றி முடிக்கப்பட்ட்து: CANTICO DEL SOLE – சூரியனின் பாடல். சுழலும் தர்வேஷ்களின் தலைவரும் ஃபார்சி மொழியின் உன்னதக் கவியுமான மௌலானா ஜலாலுத்தீன் ரூமி தப்ரேஸின் சூரியன் – ஷம்சுத்தீன் தப்ரேஸி என்று பெயர் கொண்ட தன் குருவின் மீது ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருந்தார். அவருடைய பாடல்களின் தொகுப்பை ‘தீவானே ஷம்ஸி தப்ரேஸ்’  என்றே அழைத்தார். அக்கவிதைகளில் ஷம்ஸ் – சூரியன் என்றே தன் குருவை அவர் மீண்டும் மீண்டும் அழைக்கக் காண்கிறோம்.

 


மௌலானா ரூமியின் ஆன்மிகப் பள்ளி ‘மௌலவியா தரீக்காஎன்று அழைக்கப்பட்டது. அதன் ஆன்மிகப் பயிற்சிகளில் இசையுடன் இயைந்து சுற்றிச் சுழலும் தியானம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. (இந்தியாவில் அது தற்போது ஓஷோவின் ஆஸ்ரமத்தில்தான் கற்றுத்தரப்படுகிறது, அதனுடன் ரூமி கட்டமைத்த அரபிப் பிரார்த்தனைகள் நீங்கலாக.) எனவே ரூமியின் பள்ளியைச் சேர்ந்தவர்கள் ‘சுழலும் தர்வேஷ்கள்’ (THE WHIRLING DERVISHES) என்று அழைக்கப் படுகின்றனர். தூய ஃப்ரான்சிஸ் மீது மௌலானா ரூமியின் தாக்கம் பற்றிப் பேசும் இத்ரீஸ் ஷாஹ் அதற்கு இன்னொரு சான்றாக ஃப்ரான்சிஸின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறார்:

“அவரின் (ஃப்ரான்சிஸ்) கவிதைகள் நாம் வியக்கும் வண்ணம் ரூமியின் காதல் கவிதைகளை ஒத்திருக்கின்றன. எனவே, அவற்றைக் காணும் ஒருவர் தூய ஃப்ரான்சிஸ் எவ்வகையிலாவது சுழலும் தர்வேஷ்களுடன் தொடர்புடையவரா என்று நினைப்பது இயல்பே. தூய ஃப்ரான்சிஸின் வாழ்காலத்தில் சுழலும் தர்வேஷ்கள் இயக்கம் ஆசியா மைனர் முழுக்கப் பரவியிருந்த்து, அதன் ஸ்தாபகரான மௌலானா ரூமியும் உயிருடன் இருந்தார். புதிரான அந்த சுழலும் கதை இதோ:

டஸ்கானி நகரில் ஒருநாள் ஃப்ரான்சிஸ் தன் சீடரான சகோ.மஸ்ஸேயோவுடன் நடந்திருந்தார். பாதைகள் பிரியும் ஒரு முனைக்கு அவர்கள் வந்தடைந்தார்கள். ஃப்ளாரன்ஸ், அரெஸ்ஸோ மற்றும் சியெனா ஆகிய ஊர்களுக்குப் பாதைகள் பிரிந்திருந்தன. எந்தப் பாதையில் போவது என்று மஸ்ஸேயோ கேட்டார்.

இறைவன் காட்டும் பாதையில்

‘அது எது?

அதை நாம் குறிப்பால் அறியலாம். உனக்குக் கட்டளையிடுகிறேன், நான் நிறுத்தச் சொல்லும்வரை குழந்தைகள் சுழல்வதுபோல் நீ சுழலவேண்டும்

எனவே, பரிதாபத்திற்குரிய மஸ்ஸேயோ சுற்றிச் சுழன்றார். கிறுகிறென்று மயக்கம் வந்து கீழே விழுந்தார். சுதாரிப்பு வந்ததும் எழுந்து தன் குருவைப் பார்த்தார். அவர் மௌனமாக இருக்கவே மீண்டும் சுழலத் தொடங்கினார். தன் வாழ்நாள் முழுவதும் சுழன்றிருந்தது போன்று அவருக்குத் தோன்றிய கணத்தில் தன் குருவிடமிருந்து ‘நிறுத்து, உன் முகம் காணும் பாதை எது?என்னும் வார்த்தைகளைக் கேட்டார். வாயைத் திறந்து மூச்சிரைத்தபடி ‘சியெனாஎன்றார்.

எனில் சியெனாவிற்கு நாம் செல்ல வேண்டும்என்று சொன்ன ஃப்ரான்சிஸ் அதன் பாதையில் சென்றார்.

 

இவை மட்டுமல்ல, போப்பிடம் அரபிக் குறியீடு கொண்ட ஒரு கதையைச் சொன்னது, போப் தன் கனவில் பேரீச்சை மரத்தைக் கண்டது, தர்வேஷ்களின் தியான முறை போல் அவர் வடிவமைத்துக் கொண்ட பிரார்த்தனை, மொரொக்கோ மற்றும் ஸ்பெய்ன் நாட்டின் தர்வேஷ்களினது போல் தன் இயக்கத்திற்கு அவர் வடிவமைத்த அங்கி, பிஸ்மில்லாஹ் என்னும் மந்திரத்தின் குறியீடாக சூஃபிகள் கூறும் ஆறு சிறகுகள் கொண்ட வானவரை அவர் தியானக் காட்சியாகக் கண்டது, சிலுவைப் போரின் போது அவர் நைல் நதியைக் கடந்து ஏகி சுல்தான் மாலிகல் காமில்-ஐச் சந்தித்துப் பேசியதும், கிறித்துவப் படையிடம் மீண்டு வந்து அவர்கள் போர் புரியாமல் திரும்பிவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட்தும், கிறித்துவப் பாதிரியாக அவர் மறுத்துத் தன் போதனைகளை சமூகத்தின் எளிய மக்கள் வரை எடுத்துச் சென்றது, தன் பிரசங்கத்தை ஆரம்பிக்கும்போது – தனக்குக் கடவுளால் அருளப்பட்ட வாசகம் என்று அவர் சொல்லும் – ‘இறைவனின் அமைதி உங்கள் மீது நிலவட்டும் என்னும் வாசகம் இஸ்லாமிய முகமனான ‘அஸ்ஸலாமு அலைக்கும் என்பதன் நேரடியான மொழிபெயர்ப்பாக இருப்பது என்று பல ஒப்புமைகளை இத்ரீஸ் ஷாஹ் சுட்டிக்காட்டுகிறார்.

 

ஃபிரான்சிஸ்கன் ஆன்மிகப் பள்ளியின் சூழலும் அமைவும் வேறு எதனை விடவும் தர்வேஷ் அமைப்பிற்கு மிகவும் நெருக்கமானது. சூஃபி குருமார்களுடன் தூய ஃப்ரான்சிஸை ஒப்பிட்டுக் கூறப்படும் பிரபலமான கதைகளைத் தாண்டி, அனைத்துப் புள்ளிகளும் ஒத்திசைகின்றன(The atmosphere and setting of the Franciscan Order is closer to a dervish organization than anything else. Apart from the tales about St.Francis which are held in common with Sufi teachers, all kinds of points coincide.) என்று இப்பொருண்மை நோக்கில் இத்ரீஸ் ஷாஹ் சொல்வது முத்தாய்ப்பான பார்வை.

 

ஃப்ரான்சிஸின் ஆளுமையின் மீதான இஸ்லாமியத் தாக்கம் என்பது பரவலானதொரு ஆய்வுக்களமாக உள்ளது. அமெரிக்காவின் பழங்குடியினரைக் கிறித்துவ சமயத்திற்குக் கொண்டு வந்ததில் ஃப்ரான்சிஸ்கன் சபையினர் ஆற்றிய பங்களிப்பைப் பற்றிய The Evangelization of the Americas:St. Francis as Conquistadorஎன்னும் கட்டுரையில் வில்லியம்.ஜெ.கார்க் (William.J.Cork) இக்கோணத்தில் இரண்டு முக்கியமான புள்ளிகளைத் தருகிறார்:

1.     தன் இயக்கத்தினர் கிறித்துவப் பிரச்சாரம் செய்யும்போது இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் பற்றிக் குறை பேசக்கூடாது என்று அவர் விதித்திருந்தார். இது அக்கால மிஷனரி போக்கிற்கு மாற்றமானது.

2.     இஸ்லாம் பரவியிருந்த மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வந்த அவர் அங்கே மசூதிகளின் மினாராக்களில் தொழுகைக்கான அழைப்பாளர் – முஅத்தின் – ஏறி நின்று பாங்கு ஒலிப்பதைப் போல் கிறித்துவ தேவாலயங்களின் கோபுரங்களில் இருந்தும் மக்களை தினமும் ஜெபத்திற்கு அழைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்குக் கடிதம் எழுதினார்.

 

அவிலா தெரசாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த கட்டுரையில் இடையே இவ்வளவு நீளத்திற்கு அஸிஸ்ஸியின் ஃப்ரான்சிஸ் பற்றிப் பேசக் காரணம், அவிலா தெரசாவின் ஆழ்நிலை தியானத்திற்கான வேர் ஃப்ரான்சிஸ்கன் பள்ளியைச் சேர்ந்த நூற்களால் வந்தவை என்னும் குறிப்பை விளங்கிக் கொள்ளத்தான். அதுவோ, சூஃபித்துவத் தாக்கம் (ரூமி, அத்தார், நஜ்முத்தீன் குப்ரா) - த்ரூபதூர்கள் - தூய ஃப்ரான்சிஸ் - அவிலா தெரசா என்று ஒரு நீட்சியை நமக்குத் தருகிறது. இந்த நீட்சி ஆழ்நிலை தியானம், காட்சிகள், குறியீட்டுக் கவிதைகள் ஆகிய கோணங்களில் மிகவும் அர்த்தமுள்ளது. 


(தொடரும்...)