Thursday, June 14, 2012

தனிமை இனிமை



”தனிமையிலே இனிமை காண முடியுமா?”
பழைய திரைப்பாடல் ஒன்றில் காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்ட கேள்வி. தனிமை என்பது பிரிவு நிலையாக இருக்குமேயானால் இனிமை காண முடியாதுதான்.

“தனிமை கண்டதுண்டு, அதிலே சாரம் இருக்குதம்மா”

இது, தனிமையில் இனிமை கண்ட பாரதியாரின் வாக்கு. இந்தத் தனிமை ஆன்மிகத்தில் சொல்லப்படுவது. இது காதலர்கள் சொல்லும் பிரிவுத் தனிமை அல்ல.

மனிதர்கள் புரிந்து கொள்ளாத அற்புதமான விஷயங்களில் ஒன்று தனிமை. தன்னுள் மூழ்கும் தருணங்களைத் தவிர்ப்பதே மனிதர்களின் பழக்கமாகிவிட்டது. எனவே தனிமையை அவர்கள் இனிமையாக நினைப்பதில்லை.

தனிமை என்றால் என்ன? என்ற கேள்விக்குப் பலரிடமும் தவறான பதிலே இருக்கிறது. நம்முடன் யாரும் இல்லாத நிலை என்று அதனைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இரண்டும் வேறு வேறு என்கிறார்கள் கவிஞர்களும் ஞானிகளும்.

“தனிமையில் இங்கே வாழ்வதென்பது வேறு விஷயம்
உன்னுடன் யாருமே இல்லை என்பது வேறு விஷயம்”
என்கிறார் பாடலாசிரியர் மெஹ்பூப்.

ஓஷோவும் இந்த வித்தியாசத்தைத் தெளிவுபடுத்தி ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார். LONELINESS என்பது வேறு, ALONENESS என்பது வேறு என்று விளக்கும் அவர் ALONENESS என்பது வேறு ஒருவரின் உடனிருத்தல் உங்களுக்குத் தேவைப்படாத நிலையில் உங்களின் சுயத்தில் நீங்கள் நிறைவடைந்து இருக்கும் நிலை என்றும் அது ஒரு முக்கியமான ஆன்மிகப் பண்பு என்றும் கூறுகிறார்.

தனிமையில்தான் நாம் நம்மை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. நம் சுயத்தின் முகம் நமக்கே தரிசனமாகும் கண்ணாடியாகத் தனிமை இருக்கிறது. கூட்டத்தில் பெரும்பாலும் நாம் நம் சுயத்தை மிக எளிதாக இழந்து விடுகிறோம்.

“இரவெல்லாம் தனிமையில் இருந்தேன்
பகலெல்லாம் நான் மட்டும் இருந்தேன்
நகரத்தின் மக்கள் கூட்டத்தில்
என்னைப் போல் நான் இருந்தேன்”
என்கிறார் கஜல் கவிஞர்.

சில அனுபவங்கள் நம் சுயத்தை நமக்குத் திறந்து காட்டிவிடுகின்றன. காதலும் ஞானமும் அவற்றில் முதன்மையானவை. எனவே காதலர்களும் ஞானிகளும் தனிமையை நாடுபவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் உடன் இருப்பதும் கூட அப்போது பெரிய சுமையாகிவிடுகிறது. தனிமையில் இருந்து நினைவுகளில் திளைப்பதே இனிமையாகப் படுகிறது.

”யாரை வேண்டுமானாலும் பாருங்கள்
அவரவரில் மூழ்கி இருக்கிறார்கள்.
மொழி கிடைத்திருக்கிறது நமக்கு
உரையாடுபவர்கள் கிடைப்பதில்லை”
(ஜிசே பி தேக்கியே வொ அப்னே ஆப் மே(ன்) கும் ஹே
 ஸபான் மிலீ ஹே மகர் ஹம் ஸபான் நஹீ(ன்) மில்தா)
என்று ஒரு கஜல் கவிஞர் சொல்கிறார். ஏனெனில் உரையாடல் என்பது வாய்க்கும் செவிக்கும் இடையில் நடப்பதல்ல. இதயத்திற்கும் இதயத்திற்கும் இடையில் நடப்பது.

”மனம் மீண்டும் ஆசிக்கிறது
ஓய்வான அந்த இரவு பகல்
காதலியின் நினைவுகளில் மூழ்கி
அமர்ந்திருக்க நாடுகிறது”
என்கிறார் மீர்ஸா காலிப்.

சூஃபிகளின் காதலி இறைவன்தான். எனவே அவர்களுக்குத் தனிமை என்பது உண்மையில் இறைவனுடன் தனித்திருப்பதாகிறது. ஏனெனில் இறைவன் ஒருபோதும் நம்மை விட்டுப் பிரிவதில்லை.
“நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான்” (54:4)

சூஃபி ஞானி ஒருவரின் சீடர் ஒருவர் வேளாண் துறையில் பணியில் இருந்தார். மலைப் பிரதேசத்தில் ’ஆள் இல்லாத காட்டுக்கு’ அவரை மாற்றினார்கள். குடும்பத்தை அங்கே அழைத்துச் செல்ல முடியாத நிலையில் அவர் மட்டும் சென்று தங்கினார். பெரும்பாலும் தனிமைதான். சில நாட்களில் நொந்து போய்விட்டது. தன்  குருநாதருக்கு ஃபோன் செய்து பேசினார். ”இப்படி நிலைமை, நான் என்ன செய்வேன்?” என்று புலம்பினார். குரு வேறு கோணத்தில் இதைப் பார்க்க வைத்தார், “எவ்வளவு அருமையான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது! அல்லாஹ் உங்களுடன் இருப்பதை உணர்வதற்கு அவனே ஏற்படுத்தித் தந்த வாய்ப்பு அல்லவா இது? இதைத் தவற விட்டுவிடாதீர்கள். இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவனே உங்கள் மீது பிரியம் கொண்டு உங்களுக்குத் தந்திருக்கும் வாய்ப்பு இது. அதற்காக மகிழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவன் உங்களுடன் இருப்பதையே கவனித்துக் கொண்டிருங்கள்.” (நான் சார்ந்திருக்கும் சூஃபிப் பள்ளியில் இப்போது அந்த சீடர் இறைநேசராக, குருமகானாக இருக்கிறார்கள். அவரே சொல்ல இதை நான் கேட்டேன்.)

இறைவனின் உடனிருத்தலை சதா உணர்ந்துகொண்டே இருப்பது என்பது சூஃபித்துவத்தின் அடிப்படையான பயிற்சிகளில் ஒன்று. அதில் மூழ்க மூழ்க தனிமை என்பது மிகவும் இனிமையாக மாறிவிடுகிறது. சிலருக்கு இறைநினைவு எந்த அளவு லயித்துவிடுகிறது என்றால் அதன் வாடையே இல்லாத மக்களின் சகவாசத்தை அவர்களால் சகித்துக்கொள்ளவே முடிவதில்லை. அவர்கள் மக்கள் சகவாசத்தை விட்டு ஓடுகிறார்கள்.

“ஊர் ஊராகத் திரிகின்றேன்
தனிமையைச் சுமந்துகொண்டு
உன் பரிச்சயத்திற்கு
என்ன பெயர் தருவேன் நான்?”
(ஷெஹர் தர் ஷெஹர் லியே பிர்த்தா ஹூ(ன்) தன்ஹாயி கோ
கோன்ஸா நாம் தூ(ன்) மெய்(ன்) தேரீ ஷனாஸாயி கோ)
என்கிறார் ராஷித். (ஹரிஹரன் இந்த கஜலை அருமையாகப் பாடியிருக்கிறார். கேட்க: http://www.youtube.com/watch?v=dEPOLtlN4IA )

அதாவது, அவருடைய பெயரும்கூட இப்போது அவரிடம் இல்லை. அப்படிப்பட்ட தனிமையாம்!
“நிழலும்கூட நீங்கிப் போய்விடுமே
அப்படியொரு தனிமை
அழ நினைத்தாலும் கண்ணீர் வரவில்லை
அப்படியொரு தனிமை”
என்று பாடுகிறார் நுஸ்ரத்.
நிழலும் நீங்கிவிடும் அந்தத் தனிமை நல்லதுதான். அதில் நாம் நிஜத்தை அறிந்துகொள்ளலாம். நிழல் பொய் என்பதால் அது நீங்கிப் போய்விடக் கூடும். ஆனால் நிஜம் (ஹக்) ஒருபோதும் நம்மை விட்டு நீங்குவதில்லை.

”என் பெயரையே மறக்கச் செய்துவிட்ட உன் பெயருக்கு என்ன பெயர் தருவேன் நான்?” மஜ்னூனின் முற்றிய காதல் பித்தம் பற்றி அப்துல் ரகுமான் இப்படி எழுதினார்: “உன் பெயர் என்ன?” என்று ஒருவர் கேட்கிறார். மஜ்னூன் சொல்கிறான் “லைலா”!

“என்னை விடவும் என்னை
நெருங்கி இருக்கின்றாய் நீ
யாரேனும் என் பெயரைக் கேட்டால்
உன் பெயரைச் சொல்வதே
சரியாகப் படுகிறது.”

’மனம் சதா பேசிக்கொண்டே இருக்கிறது, என்ன செய்வது?’ என்று கேட்டார் நண்பர் ஒருவர். ’நெருப்பு ஏன் சுடுகிறது என்று கேட்டால் என்ன சொல்வது?’ என்றேன் நான். மனம் பேசிக்கொண்டே இருக்கிறது என்றால் அதன் படைப்பமைப்பே அப்படி. சிந்தனை அற்ற மனம் என்று ஒன்று இல்லை. வேண்டுமானால் வார்த்தைகள் அற்ற நிலை என்று சொல்லலாம். சிந்தனை என்பது பிரக்ஞைதான். வார்த்தைகளை அது போர்த்திக் கொள்கிறது. ‘சிந்தனையே இல்லை என்ற சிந்தனை ஒன்று இருக்கத்தான் செய்யும்’ என்றார்கள் மகான் ஃபைஜி ஷாஹ் (ரஹ்).

மனம் சதா பேசுகிறது என்பது சரிதான். ஆனால் அது யாரிடம் பேசுகிறது? பேசிக்கொண்டே இருப்பது போல் அது படைக்கப்பட்டது ஏன்?
“நிச்சயமாக நாமே மனிதனைப் படைத்தோம்
அவனுடைய மனம் அவனிடம் பேசுபவற்றை நாம் அறிவோம்
நாம் அவனது பிடரி நரம்பைவிட
அவனுக்கு நெருக்கமாக இருக்கின்றோம்” (50:16)
என்று இறைவன் கூறுகின்றான்.

உன் மனம் உன்னிடம் திரும்பியிருக்கிறது. எனவே அது தெளிவில்லாமல் உளறிக்கொண்டிருக்கிறது. உன் மனத்தை இறைவனிடம் திருப்பு. அது அவனுடன் பேசிக்கொண்டிருப்பதற்காகப் படைக்கப் பட்டது. “தொழுபவன் தன் ரட்சகனுடன் உரையாடுகிறான்” என்று நபி(ஸல்) சொல்வதை சிந்தித்துப் பார். ஐவேளை மட்டுமல்ல, உன் உள்மனம் இறைவனிடம் உரையாடிக் கொண்டிருக்கும் நேரமெல்லாம் நீ அந்தரங்கத் தொழுகையில் இருக்கிறாய். அப்போது நெருப்பு பூஞ்சோலையாக மாறிவிடும்!

மனம் பேசும் நிலையை நீ சரியாகப் புரிந்து கொண்டால் மௌனம் என்னும் நிலையும் எளிதாகப் புரிந்துவிடும். தனிமை (ஃகல்வத்) என்பதன் இனிமை (ஹல்வத்) என்ன என்பதை நீ சுவைத்து அறிந்து கொள்வாய். சூஃபிகளின் தனிமைப் பயிற்சி (ஃகல்வத்) என்பது இறைவனுடன் தனித்திருப்பதுதான். மற்றபடி நீ மட்டுமே தனியாக இருக்கும் நிலை என்பது கிடையாது. எனவேதான், “நம் சிந்தனைப் பள்ளியில் தனிமை என்பதே இல்லை” (ஹமாரி சில்சிலா மே(ன்) தன்ஹாயிபன் நஹீ(ன்) ஹே) என்று சூஃபி அலீமிஷாஹ் ஆமிரி சொன்னார்கள்.

ஞானியின் பேச்சும் மௌனமும் இறைவனுடனாகவே இருக்கும். காதலர்கள் தனிமையில் உரையாடிக் கொண்டிருக்கும் நிலையும் உண்டு; உரையாடல் தேவைப்படாத நிலையும் உண்டு!


Wednesday, June 6, 2012

கிணற்றுப் பாதை - 2




தும்ரி பாணியும் கஜல் பாணியும் கலந்த கவிதைகளை சிஷ்தியா சூஃபிகள் எழுதினார்கள். காதிரிய்யா தரீக்காவின் முன்னோடியான முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) மற்றும் சிஷ்தியாவின் இந்திய முன்னோடியான ஃக்வாஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்) ஆகியோர் மீதும் அத்தகைய பாடல்கள் எழுதப்பட்டன.
”மோரி அரஜ் சுனோ தஸ்தகீர் பீர்” (என் கோரிக்கையைக் கேளுங்கள், குருநாதரே கைகொடுப்பவரே)
“அரஜ் சுன்லோ மோரி முயீனுத்தீன்” (என் கோரிக்கையைக் கேளுங்கள் முயீனுத்தீனே!)
“ஏரீ சகீ மோரா ஃக்வாஜா கர் ஆயே” (தோழியே! என் ஃக்வாஜா வீடு வந்தார்)
“கிர்பா கரோ மஹராஜ் முயீனுத்தீன்” (கிருபை செய்யுங்கள் மாமன்னரே முயீனுத்தீன்)
(இந்தப் பாடல்களைக் காலகாலமாக கவ்வாலிப் பாடகர்களும் ஹிந்துஸ்தானிப் பாடகர்களும் பாடி வருகிறார்கள். உஸ்தாத் ராஷித் ஃகான் பாடியிருக்கும் இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள்: http://www.youtube.com/watch?v=0NmRheqQOao)

பீர் நசீருத்தீன் நசீர் 

இன்றும் தொடரும் இந்த சூஃபிக் கவிமரபில் கவிதை எழுதுபவர்கள் வெறும் கவிஞர்கள் அல்லர். பல்லாயிரம் சீடர்களுக்கு ஆன்மிக வழிகாட்டும் குருமகான்களின் கவிதைகள் இசையுடன் பாடப்பட்டு சிலாகிக்கப் படுகின்றன. உதாரணமாக, பீர் நஸீருத்தீன் நஸீர் (ரஹ்) அவர்கள் எழுதிய ‘உன்கே அந்தாஸே கரம் உன் பெ வொ ஆனா தில் கா’ என்னும் கஜல் நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகானின் இசையில் மிகவும் பிரபலமானது. (கேட்க: http://www.youtube.com/watch?v=RmbF8mfdoNQ  )

”அந்தப் பேரன்பின் வெளிப்பாடுகள்…
அன்பின் மீது இதயம் பொங்கும் அந்த நிலை…
ஹா, இதயத்தின் அந்தப் பொழுதுகள்,
அந்த உரையாடல்கள், அந்தக் காலம்…”

இது ஒரு தோராயமான மொழிபெயர்ப்புத்தான். உருதுவின் இலக்கணம் தரும் வசதியைத் தமிழ் அனுமதிக்கவில்லை. ‘உன்கே’ என்பதை அவளின்/ அவனின்/ அவரின் என்று விளங்க முடியும். அதேபோல் ’வொ’ என்பது அவள்/ அவன்/ அவர்/ அது என்று எப்படியும் பொருள்படும். உன்கே அந்தாஸே கரம் என்பதை ‘அவளின் அந்தப் பேரன்பின் வெளிப்பாடு’ என்று காதலியைப் பாடுவதாக எடுத்துக்கொள்ளலாம். இறைவனைப் பாடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம், இறைத்தூதரைப் பாடுவதாகவும் விளங்கலாம். ‘அவள்’ என்று வைத்து மொழிபெயர்ப்பதானால் அப்பாடல் இப்படித் தொடரும்:

“என் உள்ளத்தின் கதையை அவள்
முகம்கொடுத்துக் கேட்கவும் இல்லை
ஆயுள் கழிந்துவிட்டது
ஆனால் இதயத்தின் வலி நீங்கவில்லை
காதல் விளையாட்டுக்கள் இதயத்தில் சேர்ந்து
கரைத்து விடுகின்றன காதலனை
இறைவா! என் எதிரியின் இதயத்திலும்கூட
காதல் நோய் வந்துவிட வேண்டாம்!
அவளும் எனதாகவில்லை
இதயமும் கையை விட்டுப் போனது
இந்த நிலை ஆவதை விடவும் நல்லது
இதயத்தில் அன்பில்லாமல் இருப்பது!
அவள் புன்னகையின் மீது ஆணையாக, நஸீர்,
அவளின் சபையில் நான் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டேன்
என் இதயம் என் கைநழுவிப் போவதை”

இன்னொரு உதாரணம், ஹழ்ரத் ஷாஹ் முஹம்மது தகீ அஜீஸ் மியான் ராஸ் நியாஜி (ரஹ்) அவர்கள் எழுதிய ‘பான்கே பியா சே மோரீ லட் கயீ நஜரியா’ (காதலனின் பார்வை மீது மோதியது என் பார்வை) (உஸ்தாத் ராஷித் கான் இப்பாடலை மிக இனிமையாகப் பாடியிருக்கிறார். கேட்க: http://www.youtube.com/watch?v=XJzcv5HYPtg )

அபூ முஹம்மத் & பரீத் அயாஜ் 

இன்னொரு உதாரணம், மேற்சொன்ன அதே சூஃபி ஞானி எழுதிய ‘இஷ்க் மே(ன்) தேரே கோஹெ கம்’ (உன் காதலில் துன்பத்தின் மலையை...) என்று தொடங்கும் கஜல். (ஃபரீத் அயாஜ், அபூ முஹம்மத் மற்றும் குழுவினர் இதனை கவ்வாலியாகப் பாடியுள்ளதைக் கேட்க: http://www.youtube.com/watch?v=OKfjdA2FxO8 ) ஃபரீத் அயாஜின் இடைப்பேச்சுக்களுடன் இந்த கஜலில் அவர் பாடாமல் விட்ட வரிகளையும் சேர்த்து முடிந்தபடிக்கு மொழிபெயர்க்கிறேன்:

தெய்வீகத்தின் நறுமணம் உள்ளது காதலில்
இறைவனின் மீது காதல் கொண்டவருக்கு.
இது அனைவருக்குமான விளையாட்டல்ல!
உன் காதலில் துன்பத்தின் மலையை
என் தலைமீது ஏற்றேன், ஆவது ஆகட்டும்
வாழ்வின் இன்பங்களையும் வசதிகளையும்
விட்டுவிடேன், ஆவது ஆகட்டும்.
விளையாட்டாகப் பற்றவைத்த காதல் தீயில்
பஞ்சினைப் போல் எரிந்து போய்விட்டது இதயம்
உடல் உள்ளம் உயிர் எதுவும் மிச்சமில்லை
எனில் ஆவது ஆகட்டும்.
என் போன்ற நோயாளியின் மீது
மருத்துவரே! கை வைக்க வேண்டாம்
இதனை இறைவனிடம் விட்டுவிடுங்கள்
இறைவனுக்காக, ஆவது ஆகட்டும்.
பகுத்தறிவின் பள்ளியில் இருந்து எழு
காதலின் மதுக்கூடத்திற்கு வா
இந்தப் பேச்சுக்கள் பகுத்தறிவாளருக்கு ஒருபோதும் புரிவதில்லை
பகுத்தறிவுவாதி ஒருபோதும் காதலிக்கவும் முடியாது!
தன்னை இழத்தலின் கோப்பையைப் பருகு
இப்போது, ஆவது ஆகட்டும்.
பிரிவின் வேதனைகளை அவள் முன் எடுத்துச் சொன்னேன்
அலட்சியமாகப் புன்னகைத்துச் சொன்னாள் ‘ஆவது ஆகட்டும்’
இருத்தலின் இந்தக் கானலில்
இரவின் மேல் இரவாக இருக்கின்றது
இல்லாமையின் விடியல் தென்பட்டது
காலடி எடுத்தேன், ஆவது ஆகட்டும்.
உலகின் நேக்குப் போக்குகளுடன், நியாஸ்
எனக்கெதுவும் வேலை இல்லை
எது வெளிப்பட்டதோ அதைச் செய்தேன்
ஆவது ஆகட்டும்.”

கலையைப் பொருத்தவரை இந்தப் பண்பாட்டியல் இணைவின் இனிமையான முதல் கனி ஹழ்ரத் அமீர் ஃகுஸ்ரோ (ரஹ்). அவருடைய பாடல்கள் எளிமையான ஹிந்தியிலும் தெளிவான ஃபார்சியிலும் அமைந்துள்ளன. நபிகள் நாயகத்தின் மீதும் தன் குருநாதரான ஹழ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா (ரஹ்) அவர்களின் மீதும் அமீர் ஃகுஸ்ரோ எழுதியுள்ள பாடல்கள் மிகவும் பிரபலமானவை. ’தோத்தாயே ஹிந்த்’ – இந்தியாவின் கிளி என்று அழைக்கப்படும் இவரின் பாடல்களைப் பாடாத ஒரு கவ்வாலிப் பாடகர் இருக்கவே முடியாது. அவருடைய புகழ் மிக்க பாடல்களில் சில:
“ஆஜ் ரங் ஏரீ மா ரங் ஹே” (இன்று வண்ணமயம் அம்மாவே! வண்ணமயம்…)
”நமீ தானம் ச்செ மன்ஸில் பூத்” (நாம் அறியோம் எந்த இடத்தை அடைந்தோம் என்று)
“ஸிஹாலே மிஸ்கீன் மகுன் தகாஃபுல்” (இந்த இரவலனின் நிலையை மறந்துவிடாதீர்கள்)
”ஏரீ சஃகீ மோரே ஃக்வாஜா கர் ஆயே” (தோழியே! என் தலைவர் இன்று வீடு வந்தார்)
”மெய்(ன்) நிஜாம் சே நய்னா லகா ஆயி ரே” (குருவுடன் நான் கண்கள் சந்தித்து வந்தேன்)
“ஃகப்ரம் ரசீத் இம்ஷப் கெ நிகார் ஃக்வாஹி ஆமத்” (சேதி கிடைத்துள்ளது நான் விரும்புபவன் இன்றிரவு வருவான் என்று)
”மோஹே அப்னே ஹி ரங் மே(ன்) ரங் தே” (உங்கள் வண்ணத்தில் எனக்கு வண்ணம் கொடுங்கள்)
“ச்சாப் திலக் சப் ச்சீனி ரே மோசே நய்னா மிலை கே” (என் உள்ளம் என் உயிர் அனைத்தையும் பரித்துக்கொண்டார் கண்களால் தொட்டு)

இந்த வரிசையில் அமீர் ஃகுஸ்ரோ எழுதியுள்ள ஒரு பாடலை இங்கே கொஞ்சம் அலசிப் பார்க்க ஆசை. “பொஹொத் கடின் ஹே டகர் பங்கட் கி” (கிணற்றுக்குச் செல்லும் பாதை மிகவும் கடினமாக உள்ளது) என்று தொடங்குகிறது அந்தப் பாடல். ஃகாஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்) அவர்களின் தர்கா உள்ள இடம் ராஜஸ்தானின் அஜ்மீர். அந்த மாநிலத்தின் பின்னணியில்தான் இப்பாடல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், அமீரும் அவரின் குருநாதரான நிஜாமுத்தீன் அவ்லியாவும் தில்லியைச் சேர்ந்தவர்கள் என்றாலும்கூட. இளம்பெண் ஒருத்தி பாடுவதாக இப்பாடலை அமீர் ஃகுஸ்ரோ எழுதியிருக்கிறார். 


இப்பாடலையும் பலரும் பல மெட்டுக்களில் பாடியிருக்கிறார்கள். ஹரிஹரன் இதனை அவருக்கே உரிய கஜல் பாணியில் பாடியிருக்கிறார், LAHORE KE RANG HARI KE SANG என்னும் ஆல்பத்தில். (கேட்க: http://www.youtube.com/watch?v=V1iuripdbMI


முன்ஷி ரஸியுத்தீனும் அவருடைய மகன்களான ஃபரீத் அயாஜ், அபூ முஹம்மத் ஆகியோரும் சேர்ந்து இப்பாடலைக் கவ்வாலியாகப் பாடியுள்ளனர். (கேட்க: http://www.youtube.com/watch?v=gozs3kR5Zjo ) முன்ஷி தரும் விளக்கங்களுடன் இப்பாடலை முடிந்தபடி மொழிபெயர்த்துத் தருகிறேன்:

காதலனே! இது மட்டும் நினைக்காதே
உன் பிரிவில் நான் நிம்மதியாய் இருக்கிறேன் என்று.
விளக்கு இரவில் மட்டும்தான் எரியும்
நான் எரிகின்றேன் இரவும் பகலும்.
நயவஞ்சகர்களே! எச்சரிக்கை!
இப்பாதையில் ஒருபோதும் காலடி வைக்காதீர்,
இது காதலின் வீதி,
அனைவருக்குமான பாதை அல்ல.
கிணற்றுக்குச் செல்லும் பாதை மிகவும் கடினமாக உள்ளது
எப்படி நான் நிரப்பி வருவேன் மண்பானையை அங்கிருந்து?
பதில் சொல்லுங்கள், குருவே நிஜாமுத்தீனே!
..................     …………………..     ……………….
அறியா மருத்துவனே! அப்பால் போ,
காதலரின் மதத்தில் நிம்மதி என்பது வேறு
இந்த மதுவின் போதை என்பது வேறு
பாடசாலையில் திரட்டிய அறிவு என்பது ஒன்று
காதலின் அடையப்படும் அறிவு என்பது வேறு
……………  ……………… ………...........
கிணற்றுக்குச் செல்லும் பாதை மிகவும் கடினமாக உள்ளது
எப்படி நான் நிரப்பி வருவேன் மண்பானையை அங்கிருந்து?
(பொஹத் கடின் ஹே டகர் பங்கட் கி/ கெய்சே மே(ன்) பர் லாவூன் மத்வா சே மட்கி)

கேட்டவுடனே தெரிந்துவிடுகிறது, இப்பாடல் தியானத்தைப் பற்றிப் பேசுகிறது. இதயத்தைத் தூய்மை ஆக்குதல் (தஸ்கிய்யதுன் நஃப்ஸ்) என்னும் பயிற்சியைப் பற்றிப் பேசுகிறது. மண்பானை என்று இங்கே சொல்லப் பட்டிருப்பது சூஃபியின் மனத்தைக் குறிக்கிறது. எளிதாக உடைந்து விடக்கூடிய ஒரு பாத்திரம்!


இந்து ஞான மரபிலும் பானை இப்படிக் குறியீடாகச் சொல்லப்பட்டுள்ளது. கோபிகைகளின் மனம் பானையாக உருவகப் படுத்தப்பட்டது. அதில் அவர்கள் எடுத்துச் செல்லும் வெண்ணெய் சிறுகச் சிறுகத் திரட்டிய புண்ணியங்கள்தான். ஆனால் அது ஒரு தன்முனைப்பாக உருவெடுக்கும்போது பாரமாகிறது. அதைக் கண்ணன் உடைத்துத் தள்ளுகிறான். பிறகு மீண்டும் தன்முனைப்பின் உருவாக்கம், நான் இவ்வளவு புண்ணியங்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று. அல்லது, அந்த வெண்ணெயை அவன் திருடி உண்கிறான். அதாவது நாம் செய்தவை என்று சொல்லப்படுவதெல்லாம் பரம்பொருளின் ரகசியத்தில் மறைந்து விடுகின்றன என்னும் கருத்தை இப்படிச் சுட்டியிருக்கிறார்கள்.

ஒரு சூஃபிக்குத் தன் மனம் சார்ந்து இரண்டு பணிகள் உள்ளன. ஒன்று, அதைத் தூய்மை செய்வது. அதாவது, பாத்திரத்தை சுத்தமாக வைத்திருப்பதைப் போல். மற்றொன்று, அதில் இறையொளியை/ இறைநம்பிக்கையை/ இறைதியானத்தை நிரப்புவது. அதாவது, அப்பாத்திரத்தில் தேவையான பொருளை நிரப்பி வைப்பதைப் போல். இந்தக் காரியம் மிகவும் கடினமானது என்கிறார் அமீர் ஃகுஸ்ரோ.

பாலைவனத்தில் நீர் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. வரண்ட பூமியில் எங்கோ ஒரு சில இடங்களில்தான் நீரூற்றுக்கள்/ கிணறுகள் இருக்கும். அங்கு வரை நடந்து சென்று நீர் சேந்தி வரவேண்டும். அதுபோல் உலகில் இறையருளின் ஊற்றாக இருக்கும் இறைநேசர்கள் மிக அரிதாகவே இருக்கிறார்கள். அவர்களின் இதயத்திலிருந்து நம் இதயத்திற்கு இறையொளியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நீர் என்பதற்கு அரபியில் அமன் என்றொரு சொல் உண்டு. அதே வேரிலிருந்து வரும் சொல்தான் ஈமான் (இறைநம்பிக்கை). எனவே இப்பாடலில் நீர் என்பதற்கு இறை நம்பிக்கை என்று பொருள் கொள்ளலாம்.

வெறும் பானையை வைத்துக்கொண்டு தாகம் தணிக்கவோ சமையல் செய்யவோ முடியாது, அது எவ்வளவு தூய்மையாக இருந்தாலும்கூட. பானைக்குள் நீர் நிரப்பப் பட்டிருக்க வேண்டும். அதுபோல் தூய்மையாக இருந்தாலும் மனதில் நிம்மதி வர வேண்டும் என்றால் அதில் இறைதியானம் இருக்க வேண்டும். எனவே இப்பாடலில் நீர் நிரப்புதல் என்பது இதயத்தில் இறைதியானம் நிரம்புவதைக் குறிக்கும்.

”அறிக, அல்லாஹ்வின் தியானத்தைக் கொண்டே
இதயங்கள் நிம்மதி அடைகின்றன”
(அலா பிதிக்ரில்லாஹி தத்மஇன்னுல் குலூப் – 13:28)

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் காலிப் பானையை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கப் போகிறோம். “போய் நீர் அள்ளி வா” என்று அனுப்பப்பட்டுள்ளோம். பானையும் உடைந்து விடக்கூடாது, வெறும் பானையையும் கொண்டுவர முடியாது.
பகரப் பணமும் கொடுக்க முடியாது, பிள்ளையைக் கவனித்துக் கொண்டிருந்துவிட்டேன் என்று சாக்குப் போக்கும் சொல்ல முடியாது.

“அந்நாளில் செல்வமோ பிள்ளைகளோ
பலனளிக்க மாட்டார்கள்
எவன் அல்லாஹ்விடம்
நிறைவான இதயத்துடன் வந்தானோ
அவனைத் தவிர”
(யவ்ம லா யன்ஃபஉ மாலுன் வ லா பனூன் /
இல்லா மன் அதல்லாஹ பிகல்பின் சலீம் – 26:88,89)

கிணற்றுப் பாதை




”சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? –என்னை
விட்டுப்பிரிந்து போன கணவன் வீடு திரும்பல”
கீச்சுக்குரலில் ஒரு பெண் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பழைய திரைப்பாடல் நியாபகம் வந்தது, நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான் அவர்கள் ‘BANDIT QUEEN’ திரைப் படத்திற்காக இசையமைத்துப் பாடிய ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தபோது. அந்தப் பாடலும் கணவனைப் பிரிந்த ஓர் இளம் மனைவியின் மனவேதனைகளை வெளிப்படுத்துகிறது. ’என் கணவனோ அயல் தேசம் சென்றான்” (மோரே சய்யான் தொ ஹே(ன்) பர்தேஸ்) என்று பல்லவி தொடங்கும் அந்தப் பாடலை ‘தேஸ்’ ராகத்தில் இசையமைத்துப் பாடியுள்ளார் நுஸ்ரத்!

”கார்காலம் வந்தது தூரலுடன்
காதலின் காலம் வந்துவிட்டது
அழகிய இளம்பெண்ணே!
கரிய மேகங்கள் வந்துவிட்டன
கிறுகிறுத்துத் திரண்டு வந்தன பார்
மந்தார நீல மேகங்கள்
என் ஆடைகளைப் படபடக்கச் செய்கிறது
குளிர்ந்த மழைக்காற்று இன்று
பூக்களின் திரை நனையும் இந்த இயற்கையில்
என் இதயம் எரிகின்றது...
என் கணவனோ அயல் தேசம் சென்றான்
இந்த மழைப் பருவத்தை என்ன செய்வேன் நான்?
காதலன் இல்லாது வெறுமையாகிவிட்டது உலகம்
நான் அவனையே தேடிக்கொண்டிருப்பேன்”

இப்பாடல் வெளிப்படுத்தும் உணர்வின் வேர் மிகவும் தொன்மையானது. முதன்மையான இலக்கியங்கள் என்று இந்திய மொழிகளில் கிடைக்கும் பாடல்களில் அந்த வேர் உயிர்த்துடிப்புடன் இருப்பதைக் காணலாம். தமிழில் அது ஈராயிரம் ஆண்டுகள் தொன்மையான சங்க இலக்கியமாக நம்மிடம் உள்ளது. இப்பாடலின் வரிகள் குறுந்தொகைப் பாடலைப் போலவே ஒலிக்கின்றன. கணவனின் வரவிற்காகக் காத்திருக்கும் இளம் மனைவியின் ஏக்கத்தைப் புலப்படுத்தும் பாடல்கள் நூற்றூக் கணக்கில் சங்க நூல்களில் உள்ளன. ‘இருத்தலும் இருத்தல் நிமித்தமும்’ என்னும் உரிப்பொருள் சார்ந்த அந்தப் பாடல்கள், முல்லை நிலத்தின் பின்புலத்தில் எழுதப்பட்ட அந்த அகச்சித்திரங்கள், கார்காலத்தையே தலைவனின் வருகைக்கான காலமாகச் சொல்கின்றன. அதே கார்காலத்தைத்தான் நுஸ்ரத்தின் பாடலும் பின்னணியாகக் கொண்டிருக்கிறது.

நுஸ்ரத் பாடியுள்ள இப்பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. கதீல் ஷிஃபாயி இதே வரியில் தொடங்குவதாக எழுதியுள்ள வேறு ஒரு பாடலும் உள்ளது. அவ்வாறு புகழ்பெற்ற ஒரு வரியை வைத்துத் தொடங்கி எழுதுவது ஒருவித கவிமரபு. பாபா புல்லே ஷாஹ் எழுதிய “ராஞ்சா ராஞ்சா கர்தி ஹூன் மெய்(ன்)” என்னும் சூஃபிப் பாடலின் வரியை வைத்துத் தொடங்கி குல்ஸார் சமீபத்தில் ஒரு பாடல் எழுதினார் ‘ராவன்’ திரைப்படத்தில்! நுஸ்ரத் பாடியுள்ள இப்பாடலும் மரபான ஒரு பாடலாகவே இருக்கவேண்டும்.

ஆண்-பெண் காதலை அடிப்படையாக வைத்து இவ்வாறு பல்லாயிரம் பாடல்கள் இந்த மண்ணிலே எழுதப்பட்டுள்ளன. அவை ஏன் எழுதப்படுகின்றன? அவற்றின் தேவை என்ன? மனித உணர்வுகளில் மிகவும் ஆழமான ஓர் உணர்வை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்ப்பதில் எதை அடைகின்றன? மனித உணர்வுகளின் ரகசியம் என்ன என்பதை அறிந்துவிடத் துடிக்கும் மனங்கள்தான் இப்பாடல்களை எழுதியிருக்கின்றன. தெய்வீகத்தின் சுவை இந்த உணர்வில் இருப்பதை அனுபவிக்கும் பேறு அருளப்பட்ட மனங்கள்தான் இவற்றை மீண்டும் மீண்டும் சிலாகித்து வருகின்றன.

ஆரம்ப காலங்களில் பெயர் குறிப்பிடாமல்தான் இந்த அகப்பாடல்கள் எழுதப் பட்டுள்ளன. ஒரு காதலன் ஒரு காதலி / ஒரு கணவன் ஒரு மனைவி, அவ்வளவுதான். அவற்றை எழுதியவர்களும் மனித உணர்வுகளை வியப்பவர்களாக, கொண்டாடுபவர்களாக இருந்திருக்கிறார்களே தவிர ஆன்மிகப் பார்வை கொண்டவர்கள் அல்ல. ஆனால் இறைக்காதலைச் சொல்லும் ஒரு கருவியாக இந்த மனிதக் காதலை ஆன்மிகம் எடுத்துக் கொண்டபோது அதற்கென்று முன்மாதிரிக் காதலர்கள் (PROTOTYPE LOVERS) உருவாக்கப் பட்டார்கள். இந்தியாவில் அப்படி உருவாகி வந்த மிகப் பழமையான காதலர்கள் கண்ணன்-ராதை ஜோடிதான். கவிதையும் இசையும் கலந்து மீண்டும் மீண்டும் இந்த இணையைப் பாடிப் பரவசமடைந்துள்ளன. “மோரே சய்யா(ன்) தொ ஹே(ன்) பர்தேஸ்” என்னும் இப்பாடலும் கண்ணன் – ராதை ஜோடியை வைத்து எழுதப்பட்டதாக இருக்கக்கூடும்.

கணவனைக் குறிக்கும் சொற்களான சய்யா(ன்), பாலம், சான்வரியா, சஜன், பியா போன்றவை இப்பாடல்களில் மீண்டும் மீண்டும் வருகின்றன. கோயல் (குயில்), மோர் (மயில்), தோத்தா (கிளி) போன்ற பறவைகளின் பெயர்களும் வசந்த காலம் மற்றும் கார்காலத்தைக் குறிக்கும் சாவன், பஸந்த் போன்ற பெயர்களும், பெண்ணின் அணிகலன்களையும் ஆடையையும் குறிக்கும் பாயல், ஆன்ச்சல், கூங்கட் போன்ற சொற்களும் இப்பாடல்கள் பன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய கிராமம் ஒன்றில் நிகழ்வது போன்ற உணர்வை எழுப்புகின்றன.

இதே பாணியில் அமைந்த இன்னொரு மரபுப் பாடல்: ‘சாவன் பீதோ ஜாயே பிஹர்வா’ (கார்காலம் கடந்து போகிறது, கணவனே!). இப்பாடலும் பல்வேறு கலைஞர்களால் பாடப்பட்டு வந்துள்ளது. TABEER என்னும் ஆல்பத்தில் ஷஃபகத் அமானத் அலீ இப்பாடலை ஃகமாஜ் என்னும் ராகத்தில் பாடியிருக்கிறார். (கேட்க: http://www.youtube.com/watch?v=PQm7-m0vqNk )

”கார்காலம் கடந்து போகின்றது, கணவனே!
என் மனம் அஞ்சுகிறது...
இப்படி என்னை விட்டுச் சென்றாய் அயல்தேசம்
நிம்மதி கூடவில்லை ஒருபோதும்
என் அன்பன் பேசவில்லை என்னுடன்
நான் ஆயிரம் தந்திரங்கள் செய்து தோற்றேன்
நீ இல்லை எனில், நேசனே!
நான் ஆளற்ற அறை போல் ஆனேன்
பாதை பார்த்து உறைந்திருக்கும் விழிகளில்
கண்ணீர் தளும்ப வைக்காதே
என் நேசத்தின் ஆழம் என்ன என்று
ஒருபோதும் நீ அறியமாட்டாய் போலும்
அன்பனே! நான் இல்லாமல் போகும்போது…
அப்போதுதான் வருவாயோ, சொல்?”

இது போன்ற பாடல்கள் என்ன ஆன்மிகக் கருத்துக்களைச் சொல்கின்றன? இப்பாடலில் தத்துவச் சொல்லாடல்கள் எதுவுமே இல்லையே? என்று நாம் நினைக்கலாம். ஆனால் இதுபோன்ற சூஃபிப் பாடல்கள் ஏராளம் உள்ளன. இப்பாடல் பிரிவைப் பற்றிப் பாடுகிறது என்று பார்த்த மாத்திரத்தில் தெரிகிறது. பிரிவு (ஹிஜ்ர்) உண்டாக்கும் மனவேதனையை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. இறைவனின் ஒளிச்சுடர்கள் பாய்வது தடைப்பட்ட நிலையில் மனம் சுருங்கி, சுணங்கிக் கிடப்பதை சூஃபிகள் ’கப்ள்’ என்று கூறுவார்கள். இதற்கு எதிரான நிலை, இறைவனின் உள்ளுதிப்புக்கள் இதயத்தில் நிறைந்து விரிவடையும் மனநிலை ‘பஸ்த்’ எனப்படும். இந்த இரண்டு மனநிலைகளுமே இறைவனால்தான் உண்டாகிறது.
“அல்லாஹ்தான் சுருங்கச் செய்கின்றான்
மற்றும் விரிவாக்குகின்றான்”
(அல்லாஹு யக்பிளு வ யப்சுத் – 2:245)

”கார்காலம் கடந்து போகின்றது, கணவனே!
என் மனம் அஞ்சுகிறது...
(சாவன் பீதோ ஜாயே பிஹர்வா மன் மோரா கப்ராயே)
பல விஷயங்களில், உலகின் பராக்குகளில் ஆயுள் காலம் வீணாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஞானம்/ முக்தி – விலாயத் கைகூடவில்லை. தாய்ப்பால் ஊட்டப்படாத குழந்தை போல் இறையொளியின் சுடர்கள் ஊட்டப்படாமல் இதயம் தவிக்கின்றது.

இப்படி என்னை விட்டுச் சென்றாய் அயல்தேசம்
நிம்மதி கூடவில்லை ஒருபோதும்
(ஏசோ கயே பர்தேஸ் பியா தும்/ ச்செய்ன் ஹமே(ன்) நஹி ஆயே)
இறைத் தொடர்பின் உணர்வு தடைப்பட்டுவிட்டது. உண்மையில் மனம்தான் உலகத்தின் பக்கம் திருப்பப்பட்டுள்ளது. படைப்புக்கள் தெரிகின்றன, படைத்தவனின் அகதரிசனம் மறைந்துவிட்டது. இந்த நிலையில் நிம்மதி என்பதே இல்லை.

என் அன்பன் பேசவில்லை என்னுடன்
நான் ஆயிரம் தந்திரங்கள் செய்து தோற்றேன்
(மோரே சய்யா(ன்) மோசே போலே நா / மெய்(ன்) லாக் ஜதன் கர் ஹாரி)
உறவாடல் என் வசத்தில் இல்லை. அது அவன் இஷ்டத்தில் இருக்கிறது. அவன் நாடினால்தான் எல்லாம் நடக்கும். நாமாக அவனை அடைய இயலாது. அவன் உறவைப் பெறும் விஷயத்தில் அறிவு ஆயிரமாயிரம் தந்திரங்கள் செய்து தோற்றுப் போய்விட்டது. அவன் பகுத்தறிவின் எல்லைகளுக்குள் பிடிபடாமல் அப்பால் இருக்கிறான்.

நீ இல்லை எனில், நேசனே!
நான் ஆளற்ற அறை போல் ஆனேன்
(தூ ஜோ நஹி தொ எய்சா பியா ஹம்/ ஜெய்சே சூனா ஆங்கனா)
சரணாகதி! அறிவு தோற்றுவிட்டதை ஒப்புக் கொண்டபின் பணிவு உருவாகிவிட்டது. லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் – இறைவனைக் கொண்டே தவிர ஆற்றலும் இல்லை சக்தியும் இல்லை. இறைவா! உனக்குத் தேவைகள் ஏதுமில்லை (அல்லாஹுஸ் ஸமது) உனக்கு நான் தேவையில்லை, ஆனால், எனக்கு முழுமுதல் தேவையே நீதான். நீ இல்லாத நான் ஆள் இல்லாத காலி அறைதான். அது விரைவில் பாழடைவது திண்ணம். அறை இருக்கிறதே என்று மகிழ முடியாது. அதில் யாரும் குடியில்லை என்றால் அந்த அறை இருப்பதில் அர்த்தமில்லை. பின் எதற்காக அது கட்டப்பட்டது? அதுபோல், நான் இருக்கிறேன் என்று நான் மகிழ முடியாது. என்னில் நீ இல்லை என்றால் நான் இருப்பதற்கு அர்த்தம் ஏது? பின் எதற்காக நான் படைக்கப்பட்டேன்?

பாதை பார்த்து உறைந்திருக்கும் விழிகளில்
கண்ணீர் தளும்ப வைக்காதே
(நய்ன் திஹாரி ராஹ் நிஹாரே / நய்னன் கோ தர்சாவோ நா)
பாதை (சிராத்/ தரீக்கா) இருப்பதில் மட்டும் நான் எப்படி மகிழ்ச்சி அடைய முடியும்? எல்லோரும் இங்கே மகிழ்ச்சியாக அதில் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அந்த பாதை இருப்பது தாங்கள் நடப்பதற்குத்தான் என்று நினைக்கிறார்கள். இந்தப் பாதையில் நீனும் நானும் கைகோர்த்து நடந்திருந்ததை நான் எப்படி மறப்பேன்? பாதையில் என் பார்வை நிலைகுத்தி நிற்கிறது. பாதையில் உன்னைக் கண்டால்தான் நான் மகிழ்ச்சி அடைய முடியும். அன் தஃபுதல்லாஹ கஅன்னக தராஹு – ’அல்லாஹ்வை வணங்கு நீ அவனைப் பார்ப்பதைப் போல்’ என்று நபி(ஸல்) சொன்ன இஹ்சான் என்னும் நிலையை எனக்குக் கொடு. நிராசயில் என் கண்கள் அழும்படிச் செய்துவிடாதே. புன்னகை மலரச் செய். ஏனெனில் அழ வைப்பதும் சிரிக்க வைப்பதும் நீயே!
”திண்ணமாக அவனே
சிரிக்கவும் அழவும் வைக்கின்றான்”
(வ அன்னஹூ ஹுவ அள்ஹக வ அப்கா – 53:43) 


என் நேசத்தின் ஆழம் என்ன என்று
ஒருபோதும் நீ அறியமாட்டாய் போலும்
அன்பனே! நான் இல்லாமல் போகும்போது…
அப்போதுதான் வருவாயோ, சொல்?”
(ப்யார் துமே கித்னா கர்தே ஹே(ன்)/ தும் எ சமஜ் நஹி பாவோகே
ஜப் ஹம் ந ஹோங்கே தொ பிஹர்வா/ போலோ க்யா தப் ஆவோகே)
விஷயம் பிடிபட்டுவிட்டது. நீ ஏன் தாமதம் செய்கிறாய் என்று தெரிந்துவிட்டது. இறுதியாக நான் ஒரு தந்திரம் செய்கிறேன். உன்னை மிகவும் ஆழமாக நேசிப்பதாகச் சொல்கிறேன். உனக்காக ஈருலகையும் துறந்து விட்டதாகச் சொல்கிறேன். இதெல்லாம் நீ அறியாததா என்ன? நீ சொல்கிறாய், ‘இந்தப் பித்தலாட்டம் எல்லாம் என்னிடம் செல்லாது. நீ எனக்காகத் துறந்தவை நீ அல்ல. எனக்காக உன்னையே எப்போது துறக்கப் போகிறாய்.’ உன் கொள்கை அதுதான். நீ இருக்கவேண்டும், என்னை இல்லாமல் ஆக்க வேண்டும்.

மௌலானா ரூமியின் அற்புதமான வரி ஒன்று இங்கே நினைவில் எழுகின்றது:
“சூரியனைக் காதலித்த நிழல் அது வரும்போது நிற்குமா?”

இப்பாடல்களின் இன்னொரு முக்கியமான அம்சம் இவற்றின் மொழி. உருதுவோ ஹிந்தியோகூட அல்ல, இவை ப்ரிஜ்பாஷா என்னும் மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஹிந்திக்கு முன்னோடியான மொழிகளில் மிக முக்கியமானது ப்ரிஜ்பாஷா. சம்ஸ்க்ருதம் தத்துவச் செழுமை கொண்ட மொழியாக இருந்தது என்றால் ப்ரிஜ்பாஷா எளிய கிராமிய வாழ்வின் மொழியாக இருந்தது. எனவே தத்துவச் சுமை இல்லாமல் நேரடியாக மனதைப் பிசையும் காதல் சுவையை வெளிப்படுத்தும் பாடல்களை எழுதுவதற்கு இம்மொழி தேர்ந்த கருவியாகிவிட்டது. தும்ரி, ஃகயால், தாத்ரா, கஜ்ரி, பிலூ போன்ற ஹிந்துஸ்தானி இசைவடிவங்களில் அவை வெளிப்பட்டன. இந்துக்களும் முஸ்லிம்களுமாக இசைக்கலைஞர்கள் பண்டிட் என்றும் உஸ்தாத் என்றும் முறையே அழைக்கப்படுபவர்கள் இந்த மரபை பல நூற்றாண்டுகளாக வளர்த்தெடுத்தார்கள். அக்பரின் அவையில் ஒரு ரத்தினமாக ஜொலித்த மியான் தான்சேன் இந்த நெடிய மரபில் வந்த ஒரு விழுது மட்டுமே. ஆனால் அவரிலிருந்து இந்த மரபிற்கு முறையாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு வரலாறு கிடைத்திருக்கிறது.

அவ்வழியில் வந்த பல பாடல்கள் என் நெஞ்சில் அலையடிக்கின்றன:
‘ஆனந்த முக சந்த்’ (மகிழ்ச்சியான நிலா முகம்), ‘மன் ஹரன் ச்சலே நந்தராஜு’, ‘பான்சுரி பாஜ் ரஹீ துன் மதுர் கண்ஹையா’ (குழலில் இனிய கானம் இசைக்கிறான் கண்ணன்), ’போலோ ரே பபீஹா’ (சொல் என் செல்லக் கிளியே!) – மியான் தான்சேன் இசையமைத்தவை என்று அவரின் பரம்பரையில் வந்த சரோத் கலைஞர் உஸ்தாத் அலீ அக்பர் ஃகான் மீட்டுக் கொடுத்தவை. இவற்றை ஆஷா போன்ஸ்லே பாடியிருந்தார். (ஆல்பம்: LEGACY)

”நயன் கி மத் மாரோ தல்வரியா” (விழிகளின் வாள் வீசாதே), ’திவானா கியே ஷாம் கியா ஜாதூ டாலா’ (என்னவொரு மாயம் செய்துவிட்டான் கரிய கண்ணன்!), ’மத் சே பரே தோரே நய்ன்’ (மயக்கம் நிறைந்த உன் கண்கள்), ’ஏ மா பியா நஹி ஆயே காலி பதரியா பர்சே’ (அம்மாவே! கணவன் வரவில்லை, கார்மேகங்கள் பொழிந்தன), ’ஆவோ பியா மோரே ஆவோ ஜீ நா ஜாவோ ரத்தியா’ (வா துணைவனே வா, இந்த இரவு வாழ்க!) - கிரிஜா தேவியின் குரலில் ’தும்ரி’கள்.

‘கா கரூ(ன்) சஜ்னி ஆயே ந பாலம்’ (என்ன செய்வேன் தோழி, கணவன் வரவில்லையே?) – உஸ்தாத் படே குலாம் அலீ ஃகான் இயற்றி இசையமைத்துப் பாடிய உலகப் புகழ் பெற்ற பாடல். ‘ஸ்வாமி’ என்னும் படத்தில் இப்பாடலை ஜேசுதாஸ் பாடினார், அவருடைய தேன் குரலில். ஆனால் அதில் படே சாஹிபின் பாணி இல்லை. படே சாஹிபின் இசைமரபில் வந்த பண்டிட் அஜய் சக்ரபொர்த்தி  இதே பாடலை அவரது இசைப்பள்ளிக்கு அடையாளமான வேகமான பிர்க்காக்களுடன் அற்புதமாகப் பாடியிருக்கிறார். (’ஹே ராம்’ படத்தில் வரும் ‘இசையில் தொடங்குதம்மா’ பாடலில் இவரின் திறமையை நீங்கள் உணரலாம்.)

’சூஃபி இசையின் சிகரம்’ என்று சொல்லத்தகும் உஸ்தாத் நுஸ்ரத் ஃப்தேஹ் அலீ ஃகான் அவர்கள் கவ்வாலி பாணியிலும், நவீன பாடல்களின் பாணியிலும் இத்தகைய பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.
“வியாகுல் ஜியரா ச்செய்ன் பாயே நா” (வியாகூலம் பெருகும் என் நெஞ்சம் நிம்மதி அடையவில்லை)
“பியா ரே பியா ரே தேரே பினா லாகே நாஹி மோரா ஜியாரே” (அன்பனே! அன்பனே! உன் பிரிவில் என் நெஞ்சம் நிலைகொள்ளவில்லை)
“சான்வரே தோரே பின் ஜியா ஜாயே நா” (நேசரே! நீங்களன்றி உயிரில் உறுதியில்லை)
”பாலம் கர் நஹி ஆயே”, “மோஹெ பியா பின் கர் நஹி ஆயே” (கணவன் இல்லம் வரவில்லை)
“மேரா பியா கர் ஆயா ஓ லால்னி” (என் கணவன் வீடு வந்தான், தோழியே!)

கலை மற்றும் ஆன்மிக ரீதியாக இன்னொரு வரலாற்றுக் கோணமும் இங்கே கவனிக்கத்தக்கது. இஸ்லாம் வடக்கே இந்தியாவிற்குள் வந்தபோது ஏற்பட்ட ஒரு மலர்ச்சி அது. இஸ்லாத்தை இங்கே எடுத்து வந்தவர்கள் சூஃபிகள். குறிப்பாக சிஷ்தியா தரீக்காவினர். அஜ்மீரில் ஆன்மிக அரசோச்சும் ஹழ்ரத் ஃகாஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்) அவர்களின் வாயிலாகவே அந்த வருகை நிகழ்ந்தது. சிஷ்தியா ஆன்மிகப் பள்ளியில் இசையை இறைதியானத்திற்குப் பயன்படுத்துவது ஒரு முக்கியமான அம்சமாகும். ஏற்கனவே ஆன்மிக ரீதியாக இங்கே இசை கனிந்திருந்த நிலையில் அந்த இசை மரபை இலகுவாகவே சிஷ்தியா தரீக்கா தழுவிக்கொண்டது. அவர்கள் அரபி – பாரசீக மரபில் இருந்து கஜல் வடிவத்தைக் கொண்டுவந்தார்கள். இசைக்கருவிகளில் இங்கே ’பக்கவாஜ்’ இருந்தது. பாரசீக மரபிலிருந்து தப்லா கிடைத்தது. இங்கே வீணை இருந்தது. பாரசீக மரபிலிருந்து ரபாப் உருமாறி சரோத் கிடைத்தது. இங்கே பஜன் இருந்தது. சிஷ்தியாக்களின் வருகையில் அது உருமாறி ’கவ்வாலி’ பிறந்தது. ப்ரிஜ்பாஷா, சிந்தி, போஜ்பூரி, ராஜஸ்தானி, பஞ்சாபி போன்ற மொழிகளுடன் ஃபார்சியும் அரபியும் கலந்ததில் உருது பிறந்தது. (உருது என்றால் ’படை மொழி’ அல்லது ’சந்தை மொழி’ என்று பொருள்.) உருதுவில் ஒரு சொலவடை உண்டு:
ஜப் தோ தல்வாரேன் டக்ராத்தே ஹே(ன்)
தோ தெஹ்ஸீப் மில்தீ ஹைன்
(இரண்டு வாள்கள் மோதும்போது இரண்டு பண்பாடுகள் சந்திக்கின்றன!).

(தொடரும்...)