(இந்தச் சிறுகதை இம்மாத “இனிய திசைகள்” தமிழ் மாதிகையில் வெளியாகியுள்ளது. வெளியிட்ட பேராசிரியர் டாட்கர் சேமுமு அவர்களுக்கு நன்றி. ’இனிய திசைகள்’ மாதிகையின் பொறுப்பாசிரியர் மவ்லவி நூ.அப்துல்ஹாதி பாகவி இந்தக் கதையை எடிட்டிங் பண்ணிக் கொண்டிருந்தபோது கைப்பேசி வழி என்னை அழைத்து ஐயங்கள் கேட்டுத் தெளிந்தார். ‘பொறுப்பாசிரியர்’ என்னும் சொல்லுக்கு அவர் எவ்வளவு பொருத்தமாகப் பணியாற்றுகிறார் என்று மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கும் என் நன்றி.)
ரெண்டு மூனு நாட்களாக நிப்பேனா என்று பெய்துகொண்டிருந்த மழை
விட்டிருந்தது. காலை ஆறரை மணிக்கே கிழக்கில் இருந்து இள வெயில் பாய்ந்தது. ஜன்னல் வழியாகப்
பார்த்துவிட்டு பானு வாஷிங் மிஷினை ஓட விட்டாள். நாலு நாள் துணி துவைக்கப்படாமல் அப்படியே
கிடக்கிறதே என்று புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு இன்று நல்லபடியாக விடிந்திருக்கிறது.
சட்டென்று மழை பிடித்துவிடாமல் இருக்க வேண்டுமே என்று கைப்பேசியில் பருவநிலை முன்னறிவிப்பைப்
பார்த்துக்கொண்டாள். ”பத்து மணிக்கு மேல மழைன்னு போட்டிருக்கான். அதுக்குள்ள கொஞ்சம்
காஞ்சுட்டாலும் எல்லாத்தையும் எடுத்து உள்ளயே காயப் போட்டுக்கலாம்” என்றாள்.
மாலை வரை மழை இல்லை. ஒரு பகலில் அடித்த வெயில், மூன்று நாள்
பெயலின் சுவடே இல்லாமல் உலர்த்திவிட்டது. “மாடிக்குப் போய் பாக்கணும், மழைல என்னவாயிருக்கோ”
என்றாள். வழக்கமான மாலை நடையை மொட்டை மாடியில் நிகழ்த்தலாம் என்று திட்டமாயிற்று.
கீழ்
மொட்டை மாடியிலிருந்து கொய்யா மரத்தை ஆராய்ந்தாள். புதிதாக ரெண்டு கொப்புகளில் பூ விட்டிருந்தது.
ஏற்கனவே ஒரு வாரத்துக்கு முன் பார்த்து வைத்திருந்த ஆறேழு பிஞ்சுகள் நெல்லிக்காய் அளவுக்குப்
பருத்திருந்தன. “கட்டக் காயாவ்ல இருக்கு?” என்று சற்று ஏமாற்றமாகக் கேட்டாள். நன்றாகப்
பூத்துக் காய்த்துப் பழுத்துத் தள்ளிக்கொண்டிருந்த மரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு
பூவும் வைக்காமல் செம்மறி ஆட்டுக் காதுகள் போல் நீளமான இலைகளை மட்டும் மல்கிக் கொண்டு
நின்றது. தின்னோமோ சலிச்சோமோ என்று இருந்தது. அம்புட்டு ருசி வேறு. “நம்ம மரத்துப்
பழத்த சாப்பிட்டுட்டு வெளிய வாங்குற பழமே எனக்கு நல்லாயில்ல” என்று அடிக்கடி அலுத்துக்
கொண்டிருந்தாள். தவிர, சொந்த பந்தங்கள் அக்கம் பக்கத்தினர் என்று எல்லோருக்கும் பை
பையாகக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ”அடுத்து காக்யவே இல்லியாம்மா” என்று நேரிலும்
ஃபோனிலும் அவர்கள் கேட்கும்போது முகம் சுண்டிப்போய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
”என்னங்க
ஆச்சு இந்த மரத்துக்கு?” என்று ஒருமுறை கேட்டாள், நான் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிக்
கொண்டிருந்தபோது. “பால் மாற்றம்தான்” என்றேன். “என்னது?” என்றாள், இலக்கணச் சொல் புரியாமல்.
“ஆம்பள
மரமா மாறீருச்சுடீ”
“அப்படியெல்லாம்
ஆவுமா?” - வாய் அங்காந்திருக்க, விழிகள் விரிய வியந்தாள்.
“மனுசன்ல
ஆவுதுல்ல. அப்புறம் ஏன் மரத்துல ஆவாது?”
“சுப்ஹானல்லாஹ்”
– வியப்பு மெல்ல மாறி ஒரு சோகம் கவிந்துவிட்டது. “அப்ப இது திரும்பவும் மாறாதா?”
“ஆண்டவன்
நாடுனா மாறீட்டுப் போவுது” என்று சொல்லிவிட்டு மோட்டரை அமுத்த நகர்ந்தேன்.
இல்லை.
சிகிச்சை செய்துதான் அதை மாற்ற வேண்டும் என்று அவள் கண்டு கொண்டாள். ஒருநாள், கைப்பேசியில்
அகஸ்மாத்தாக வந்த ஒரு ரீல்ஸில் சொல்லியிருந்த சிகிச்சையை என்னிடம் விவரித்தாள். “மரத்துல
ஆணி அடிச்சோம்னா பூக்காத மரமும் பூத்துக் காய்க்கும்னு சொல்றாங்க.”
“என்னது?
மரத்துல ஆணி அடிக்கணுமா? அப்படி செஞ்சா பூக்கும்னு கெளப்பி விட்ருக்கானுங்களா?”
“மல்லிகாம்மாவும்
சொன்னாங்க, அப்படிப் பண்றது ஒரு மொற இருக்காம். பூக்குமாம்” என்றாள். வீட்டு வேலைக்கு
வைத்த அம்மாளின் ஆலோசனையும் சேர்ந்துவிட்டது. இனி என்ன செய்வது? இதற்கு ஏதாவது அறிவியல்
ரீதியான விளக்கம் இருக்கிறதா என்று யோசித்தேன். மரங்களுக்கு நம் உணர்வுகளை கிரகிக்கும்
ஆற்றல் இருக்கிறது என்று எப்போதோ வாசித்த ஞாபகம். ஒரு மரத்தை வெட்டுவதற்காக ஒருத்தன்
கோடாலி எடுத்துக்கொண்டு அதை நெருங்கினால் அது நடுங்குமாம். இந்த தினுசில் யோசித்துப்
பார்த்ததில், ஆணி அடிப்பதால் மரம் அதிர்ச்சி ஆகி அதன் விளைவாகப் பூக்கவும் காய்க்கவும்
ஆரம்பித்துவிடும் போலும் என்று தோன்றியது. அது கிளை பிரியும் இடத்துக்குக் கீழாக ஓரிடத்தில்
ஆணி அடித்து வைத்தேன். இந்த அதிர்ச்சியில் அது மீண்டும் பெண்ணாக மாறிவிடுகிறதா, இல்லை
மூன்றாம் பாலினம் ஆகிவிடுமான்னு பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
ஒரு
மாதம் கழித்து அது பூத்திருந்தது. பானுவின் கண்ணில்தான் முதலில் பட்டது. ஆனந்த கண்ணீர்
வார்க்காத குறையாக என்னிடம் கூப்பிட்டுக் காட்டினாள். எனக்கும் சந்தோஷம்தான். ‘ஆகா, மீண்டும் பூப்படைந்து விட்டதே!’ என்றேன்.
இப்போது மழை விட்ட நாளில் மீண்டும் மொட்டை மாடிக்கு வந்து சோதித்தபோது மேலும் சில பூக்கள்
விட்டிருக்கின்றன. ஒரு வாரமாக பருத்து வந்திருக்கும் காய்களைப் பார்த்துவிட்டு, “கட்டக்
காயாவ்ல இருக்கு?” என்று அவள் ஏமாற்றத்துடன் கேட்டதும், “பையப் பையதாம்ப்பா பழைய நெலைக்கு
வரும். ரெண்டு வருசமா ஆம்பிளையா இருந்துட்டு இப்பத்தான் மறுபடியும் பெண்ணா மாறீருக்கு”
என்று அவளுக்கு ஆறுதல் கூறினேன். “ஆணிய புடுங்கீட்டம்னா திரும்பவும் ஆம்பளையா மாறீருமோ?”
என்று கேட்டவனைப் பார்த்து முறைத்தாள். வாயை மூடிக்கொண்டு மேல் மொட்டை மாடிக்கு ஏறினேன்.
ஐந்தரை மணி வாக்கில் மேற்கிலிருந்து வரும் இண்டிகோ விமானம் தொலைவில் வந்து கொண்டிருந்தது. நட்சத்திரம் மாதிரி அதன் விளக்கு சுடர்ந்தது. வீடு கட்டிய புதிதில் அது எங்கள் வீட்டைக் கடந்து போகும் காட்சியை நான் வீடியோ பிடித்திருக்கிறேன். இப்போது தினமும் பார்க்கும் காட்சியாகிவிட்டது. மொட்டை மாடியில் உலாத்திக் கொண்டே தெருவையும் ஆரெஸ்புரம் பூங்காவையும் ஆகாசத்தையும் வேடிக்கை பார்ப்பது ஒரு தனி சுகம்தான்.
மேற்குப்
பக்கம் கிடக்கும் காலி மனையில் மூத்ததும் இளையதுமாய் இரண்டு வேப்ப மரங்கள் இருக்கின்றன.
மூத்த மரம் எங்கள் வீட்டை விட உயரமாக வளர்ந்து நிற்கிறது. அதன் உச்சியில் ஒரு கிளி
உட்காருந்து பழங்களை ருசித்துக் கொண்டிருந்தது. இளையது வீட்டின் உயரத்தை ஏறத்தாழ எட்டிவிட்டது.
அதன் உச்சியில் பார்த்தேன். இரண்டு பட்டாம்பூச்சிகள் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
’எல்லா உயிர்க்கும் இன்பம்’ என்று தொல்காப்பியர் சொன்னது நினைவு வந்தது. அந்த ஜோடியைப்
பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. கொத்துக் கொத்தாக வெண்ணிறச் சிறு பூக்களுடன் வேப்பங்க்
கிளைகள் காற்றில் அசைய அவற்றுக்கு இயைந்து அந்த ஜோடியும் பறந்து கொண்டிருந்தது. பின்னர்
சட்டென்று இரண்டும் ஆளுக்கொரு பூவில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தன. அப்போது மனதில் சட்டென்று
ஒன்று தோன்றியது. பூவும் பட்டாம்பூச்சியும் அல்லது பூவும் வண்டும் காதலர்கள் என்று
கவிகள் எழுதி வைத்திருக்கிறார்கள், திரைப்படத்திலும் குறியீடாகக் காட்சிப் படுத்துகிறார்கள்,
அது எவ்வளவு அபத்தம்! வண்ணத்துப் பூச்சிக்கு ஜோடி ஒரு வண்ணத்துப் பூச்சியாகத்தான் இருக்க
முடியும். பூ எப்படி அதன் ஜோடியாகும்? அப்படியானால் இந்தப் பூக்கள் எல்லாம் அந்த ஜோடிகள்
வந்து அமர்ந்து கதைத்துப் போகும் கஃபே போலும்! ‘பானு, இங்கே பார், நாம் காஃபி டேயிலும்
பராஷியிலும் காஃபி குடிக்கிறாப்ல இதுங்களுக்கு இந்த மரம் ஒரு கஃபேவா இருக்கு!”
இன்னொரு
யோசனையும் பிறந்தது. வண்ணத்துப் பூச்சிகள் இவ்வளவு உயரத்துக்குப் பறக்குமா? கோ.வசந்தகுமாரன்
எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வந்தது: ”பூக்களின் / உயரம் வரைதான் / வண்ணத்துப் பூச்சிகளின்
ஆகாயம்.” நூறு மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஒரு தொட்டியில் பூச்செடி வளர்த்தால்?
அப்போது அங்கேயும் பட்டாம்பூச்சி வருமா? அது வரை அதன் ஆகாயம் உயருமா? ஆம், வரும் என்று
என் உள்மனம் சொன்னது. அவ்வளவு உயரத்துக்கு ஒரு பட்டாம்பூச்சி பறக்குமா என்ன? கூகிள்
பண்ணிப் பார்த்தால் விடை தெரியும். எந்த வகைப் பட்டாம்பூச்சி எவ்வளவு உயரம் வரை பறக்கும்
என்று தகவல்களை அள்ளி விடலாம். அவை இந்த வியப்பை இல்லாமல் ஆக்கிவிடும். வேண்டாம், இப்படியே
ஆச்சரியப் பட்டுக்கொண்டு இருப்பதுதான் இப்போது அறிவுக்கு அழகு என்று தோன்றியது. நூர்
பள்ளியிலிருந்து ‘அல்லாஹு அக்பர்’ என்று பாங்கு தொடங்கவும், ’வாங்க போகலாம். பூட்டீட்டு
எறங்குங்க’ என்றாள் பானு.



