சூஃபிகளிடம் சொலவடை ஒன்றுண்டு, “குல்லுன்ய் யர்ஜிஉ இலா அஸ்லிஹி” – ஒவ்வொன்றும்
அதன் மூலத்திடம் திரும்புகிறது. இறைவனை மனிதன் அடையத் தவிப்பது பெண் ஆணை அடையத் தவித்தல்
போன்றது. இப்பிரபஞ்சத்தின் மூலம் யாதெனக் கண்டோர் ஞானியர். ஆதியில் மூலமான அந்த ஜோதியில்
நிற்பார் அனைத்திற்கும் ஈர்ப்புக் காந்தம் ஆவர். வெளிப்பட்ட ஒவ்வொன்றும் அவரில் தம்
அந்தரங்கம் காண்கிறது. ஆனபடியால், அவரின் பக்கம் சாய்கின்றது. சூஃபிகள் பற்றி மவ்லானா
ரூமி சொல்கிறார்:
இடையறாக்
குளிர்காலத்தில்
இதமான கதகதப்பு நாம்
ஒளிவகை
பலவுடன்
சூரியன் நாம்
வீசு தென்றல் நாம்
எங்கே
எனும்படிக்
கூவென்று
கூவும் குயில்கள்
தேடுகின்றன நம்மை
மைனாக்கள்
கிளிகள்
இங்கும்
அங்கும் இடம் மாறும்
நம் அருகாமை நயந்து
நம் சேதி
கேட்டு
கருவாடு
மீண்டும்
மீனாகித் துள்ளிற்று
அந்தத்
துடிப்பின் அலைகள்
இப்போதும் வந்தபடி உள்ளன
புத்திக்குப்
புரியாத விஷயங்களுண்டு
கேட்டுக்
கேட்டுக் களிப்புற
அதற்கேயான
செவிகளுண்டு
ஆன்மாவிற்கு
***
ஒரு சாதகன்
தனக்கான குருநாதரைக் கண்டடைவது எப்படி? மவ்லானா ரூமி சொல்கிறார், “சீடன் ஆயத்தம் ஆகிவிட்டால்
அங்கே குரு வந்துவிடுவார்”. ஸ்தூலமாக அல்ல. கதவு தட்டியபடி வாசலில் வந்து நிற்பார்
எனும்படி அல்ல. ஆனால் அவரின் முகவரிக் குறிப்புக்கள் இவனை வந்தடைகின்றன. ’நறுமணம்’
என்று அதனை ரூமி குறிப்பிடுகிறார். ‘நறுமணத்தை நுகர்ந்து செல்லும் சீடன் குருவைக் கண்டடைகிறான்’
என்கிறார். அது ஆன்மாவின் நறுமணம்.
நபிகள் நாயகம் சென்ற தெருவில் அவரின் நறுமணம் நெடு
நேரம் இலங்கிக் கொண்டிருக்கும் என்றொரு சேதி உண்டு. அவர் சென்றது இவ்வழியா? அவ்வழியா?
நறுமணத்தை முகர்ந்து கொண்ட மூக்கு இவ்விஷயத்தில் குருடுதான். காதலே அந்தத் திசையைக்
காட்டித் தரும். ரூமி சொல்கிறார்:
சாலச்
சிறந்தது
நீயாக
நுகர்ந்து கொண்டதொரு நறுமணத்தைத்
தனியே நீ தொடர்ந்து போதல்
அது உன்னை
இட்டுச் செல்லட்டும்
கூஜாக்
கோப்பைகள் விட்டு
விடுதலையான ஒருவரிடம்
பழங்குடிகாரர்
சொல்லும்
பழமொழி
ஒன்றுண்டு:
‘நான் கூஜாவின் ராஜா’
அதுபோல்
ஒருவரைத் தேடி
அவர்
அருகில் அமர்
***
பருப்பொருட் தன்மையை கவனிக்க மனிதன் எத்தனைச் சிறியன்! இப்பிரபஞ்சப்
பரப்பில் நம் பூமியொரு அணு. நாமெல்லாம் எங்கே? ஆழ்பெருங்கடலில் அயிரைக் குஞ்சின் விகிதம்
என்ன? அக்கடலின் ஓரலையோ நீலத்திமிங்கலத்தைப் புரட்டி நகும் எனும்போது. பேரருள் பொங்கிய
தன் உள்ளமையில் இறைவனின் சித்தம் நம்மைச் சமைத்தது. உச்சி முதல் பாதம் வரை நாம் அவனின்
ஸ்தலம். அலையில் கடலன்றி வேறில்லை எனும்படி. ’அப்து’
(அடிமை) எனும் சொல்லின் உட்பொருள் இதுவே. ஒவ்வொரு மூச்சிலும் அப்பரம்பொருளின் நினைவு
குடித்துத் திளைக்கும் பரமக்குடிகாரர்கள் நாம்! மவ்லானா ரூமி சொல்வது கேள்:
கடலினைக்
குடிக்கின்றது மீன்
எனினும், சிறிதாவதில்லை கடல்
மேகமும்
மாலை ஒளியும்
உண்கிறோம் நாம்
ராஜ மது
பருகும்
அடிமைகள்
நாம்
***
நான் எனும் உணர்வு
நல்கி அதன் ரகசியம் ஆனான் இறைவன். சுயாதீனத்தின் கடல் மூழ்கியோர் அவனைக் கண்டார். தியானத்தில்
விரல் நுனி தன்னையே சுட்டிக் கொள்கிறது. அவனது பித்தர்கள் ’நான்’ எனும் ஆடை கிழிப்பர்.
உறையும் காகிதம், கடிதமும் காகிதம். எனினும், உரை கிழித்தால் அன்றி கடிதம் படித்தல்
ஏது? முறை கற்றுக் கிழி. இக்கடிதம் உறையின் உட்புறம் எழுதப்பட்டுள்ளது! மவ்லானா ரூமி
சொல்கிறார்:
சுய அடையாளமொரு
தொலி
அதன் கர்த்தனொரு கூர்வாள்
வாள்
உரைக்குள் நழுவிப் பொருந்திக் கொள்கிறது
மின்னும்
எஃகின் மேலொரு நைந்த உரை
காதலைத்
துலக்குமொரு காதல்
No comments:
Post a Comment