Friday, January 4, 2013

ஒரு பரப்பியல் நூல் மீதான பார்வைகள் - 6


’எவன் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபப்படுகிறான்’ என்னும் ஹதீஸை இவ்விஷயத்தில் கொண்டு வந்து மேற்கோள் காட்டுவதும் பொருத்தமில்லாத ஒன்றாகும். ஏனெனில் இந்நபிமொழியின் கருத்து அல்லாஹ்விடம் ஒருபோதும் துஆவே செய்யாமல் இருப்பவனின் நிலையை அறிவிக்கிறதே தவிர தனக்காக இன்னொருவரிடம் துஆ செய்யச் சொல்வதைத் தடுக்கவோ அவ்வாறு துஆ செய்யச் சொல்பவர் மீது அல்லாஹ் கோபப்படுவான் என்று கூறவோ இல்லை.
             
உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் அதிகமும் துஆ செய்துகொண்டுதான் இருந்தார்கள். அந்நிலையில்தான் உவைஸுல் கர்னி (ரஹ்) அவர்களிடம் தன் பாவமன்னிப்புக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யச்சொல்லி கேட்டுக்கொள்ளுமாறு அவர்களுக்கு நபி(ஸல்) அறிவுரை நல்கி நேர்வழி காட்டினார்கள். நபி(ஸல்) இவ்வாறு நேர்வழி காட்டியதைத்தான் இந்த வஹ்ஹாபிசக் குறைகுடங்கள் ”இடைத்தரகரை ஏற்படுத்திக்கொள்வது” என்று கொக்கரிக்கின்றன. அல்லாஹ்வுக்கும் நமக்கும் இடையே நமக்காகப் பிரார்த்திக்கும் ஒருவரைத் தேடிக்கொள்வது ஆகுமானதுதான் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் உறுதிப்படுத்துகின்றன.

இதே விஷயத்தில் இந்நூலின் இன்னொரு இடத்திலும் இவர்கள் எழுதுகிறார்கள்:
“மேலும் எவர் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களிடமோ, ஜின்கள் மற்றும் மலக்குகளிடமோ பிரார்த்தனை செய்து, உதவி வேண்டினாலோ அல்லது அவர்களை அல்லாஹ்விடம் சிபாரிசு செய்ய வேண்டினாலோ இச்செய்கை இறைவனுக்கு இணைவைப்பதாகும்” (பக்கம்: 58)

இறைத்தூதர் (ஸல்) அவர்களையோ ஜின்கள் மலக்குகள் அவ்லியாக்கள் யாரையுமோ பிரார்த்திப்பது ஷிர்க் என்பது மார்க்கத்தில் தெளிவான ஒன்று. ஆனால் சிபாரிசு செய்யக் கோரிக்கை வைப்பது மார்க்கத்தில் ஆகுமான ஒன்றுதான். அது இறைவனுக்கு இணை வைப்பது என்று இவர்கள் சொல்வது மார்க்கத்தை விளங்காத மடத்தனத்தின் வெளிப்பாடு ஆகும்.

சிபாரிசு செய்யுமாறு கோருவது ஷிர்க் என்று சொல்லும் இவர்கள் இந்நூலின் பின் அட்டையில் நபியின் சிபாரிசு குறித்த ஒரு ஹதீஸை அச்சிட்டிருக்கிறார்கள் என்பது ஒரு முரண். அந்த நபிமொழி:
“ஒவ்வொரு நபிக்கும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு பிரார்த்தனை உண்டு. என் சமுதாயத்திற்கு (மறுமையில்) சிபாரிசு செய்வதற்காக எனது பிரார்த்தனையை விட்டு வைத்திருக்கிறேன். அல்லாஹ் நாடினால், என் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் மரணித்தவருக்கு அந்த சிபாரிசு கிடைக்கும்.” (அபூஹுரைரா(ரலி), திர்மிதி)

சிபாரிசு என்பது ஷிர்க் என்பதாக இருக்குமானால் அது நபிக்கும் அனுமதிக்கப் பட்டிருக்காது. நபிக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதிலிருந்தே சிபாரிசு என்பது ஷிர்க் அல்ல என்பது விளங்கும்.

சிபாரிசு என்பது நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும்தான் என்றும் இந்த ஹதீஸை வைத்துக்கொண்டு வாதாட முடியாது. அல்லது சிபாரிசு என்பது நபிமார்களுக்கு மட்டும்தான் என்றும் இந்த ஹதீஸின் அடிப்படையில் வாதாட முடியாது. ஏனெனில் உவைஸுல் கர்னியின் துஆவைக் கொண்டு பெரும் எண்ணிக்கை மக்கள் சுவர்க்கம் செல்வார்கள் என்பது முன்பு நாம் சுட்டிய நபிமொழியால் அறியலாகிறது. எனவே இறைநேசர்களுக்கும் சிபாரிசின் உரிமை உண்டு என்பது அதனால் உறுதிப்படுகிறது. அல்லாஹ் தந்திருக்கும் இந்த உரிமையை இல்லை என்றும் தவறு என்றும் ஷிர்க் என்றும் கூறும் வஹ்ஹாபிசப் போக்கு கடைந்தெடுத்த இறைவிரோதமே அன்றி வேறில்லை.

மேற்காணும் ஹதீஸின் மொழிபெயர்ப்பில் அடைப்புக்குறியிட்டு (மறுமையில்) என்று இவர்கள் போட்டிருப்பது சம்மந்தமாக ஒரு கருத்து: ”சிபாரிசு என்பது மறுமையில் மட்டும்தான் ஆகும்; பூமியில் அதைச் செய்தால் ஷிர்க்” என்றும் இந்த ஹதீஸை வைத்துச் சொல்ல முடியாது. ஏனெனில், ஒரு காரியம் ஷிர்க்காக இருக்குமே எனில் அதை அல்லாஹ் ஒருபோதும் ஆகுமாக்க மாட்டான். இம்மையிலாகட்டும் மறுமையில் ஆகட்டும், அல்லாஹ் ஷிர்க்கான ஒரு காரியத்தை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலோ அல்லது குறிப்பிட்ட இடத்திலோ ஒரு கணமேனும் ஆகுமாக்கினான் என்பது கிடையவே கிடையாது. ஷிர்க்கை அல்லாஹ் ஒருபோதும் எவருக்கும் அனுமதிக்கவே இல்லை, அனுமதிக்கவும் மாட்டான். இம்மையில் ஷிர்க்காக இருக்கும் ஒன்று மறுமையில் ஆகுமாகிவிடும் என்னும் பேச்சுக்கே இடமில்லை. எனவே, மறுமை என்று போட்டாலும் சரி இப்போது பூமியிலும் அது ஷிர்க் அல்ல என்பது உறுதியாகிறது. (ஆனால் மறுமையில் ஹலாலாகும் ஒரு விஷயம் இம்மையில் ஹராமாக இருக்க வாய்ப்புண்டு. மது போல. அது முந்திய சமூகத்துக்கு ஹலாலாக இருந்தது. சொர்க்கத்தில் மது இருக்கும். ஆனால் பூமியில் இந்த உம்மத்துக்கு அது ஹராமாக்கப் பட்டுள்ளது. பட்டு தங்கம் ஆகியன இம்மையில் இந்த உம்மத்தின் ஆண்களுக்கு ஹராமாக்கப் பட்டுள்ளது. ஆனால் மறுமையில் அது ஆண்களுக்கும் சொர்க்கத்தில் ஹலாலாக இருக்கும். ஹலால்-ஹராம் விஷயத்தில் ஷரீஅத்துக்களுக்கு இடையே மாறுதல்கள் இருக்கலாம், இருந்துள்ளன. ஆனால் ஒரு விசயம் ஷிர்க்காக இருக்கும் எனில் அது எப்போதும் எவ்விடத்திலும் யாருக்குமே ஷிர்க்தான். இந்த அடிப்படையில், ’சிபாரிசு என்பது மறுமையில்தான் ஹலால். இம்மையில் அது தடுக்கப்பட்டது’ என்று வாதாடினாலாவது அதில் அர்த்தம் இருக்கிறது எனலாம். ஆனால், சிபாரிசு என்பதெ ஷிர்க் என்று சொல்வது மார்க்கத்திற்கு எதிரான கருத்து என்பதே உண்மை.)

உவைஸுல் கர்னி (ரஹ்) அவர்களின் பரிந்துரையின் (சிபாரிசு – ஷஃபாஅத்) காரணமாக முளர் மற்றும் ராபிஆ கிளையினரின் ஆடுகளில் உள்ள ரோமம் அளவு மக்கள் சொர்க்கம் செல்வார்கள் என்றும் அவரிடம் துஆ செய்யச் சொல்லும்படியும் நபி(ஸல்) அவர்கள் நஸீஹத்துச் செய்தார்கள்.

எனவே சிபாரிசுத் தேடிக்கொள்வது என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதும் நபிவழியும் ஆகும் என்பது உறுதியாகிறது.

நபிவழியான ஒரு விஷயத்தை ஷிர்க் என்று எழுதியிருப்பது இந்த வஹ்ஹாபிகளின் அடாவடித்தனத்தையும் மார்க்கத்தை விளங்காத மட்டபுத்தியையுமே எடுத்துக் காட்டுகிறது.

இந்நூலிருந்து இன்னொரு கருத்து:
“இறந்தவர்களுக்கு ஃபாத்திஹா ஓதி, அவர்களிடம் துஆ செய்வதை தடுத்துக்கொள்ள வேண்டும். அது இறைவனுக்கு இணைவைப்பதாக அமையும்.” (பக்கம்:58)

இவ்வாசகமும் டிபிக்கல் வஹ்ஹாபிஸ விஷம வாக்கியம் ஆகும். இதை இரண்டு விதங்களில் புரிந்து கொள்ளலாம். இவர்கள் எந்த விதத்தில் பொருள் கொண்டு எழுதினார்கள் என்று விளங்கவில்லை.

முதல் கோணம்: “இறந்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதுவதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்; அதன்பின் அவர்களிடம் துஆ செய்வதை தடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவ்வாறு துஆ செய்வது இணை வைப்பதாக அமையும்.” இப்படிப் பொருள் கொண்டால் அது முற்றிலும் சரி என்று ஒப்புக்கொள்ளலாம்.

இக்கோணத்தில் ““இறந்தவர்களுக்கு ஃபாத்திஹா ஓதி, அவர்களிடம் துஆ செய்வதை தடுத்துக்கொள்ள வேண்டும். அது இறைவனுக்கு இணைவைப்பதாக அமையும்.” என்னும் இவர்களின் வாசகம் எப்படி இருக்கிறது எனில் ”வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு விஷம் சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அது உயிரைப் போக்கிவிடும்” என்று சொல்வது போல் இருக்கிறது. இதிலிருந்து யாரேனுமொருவன் “எனவே வாழைப்பழம் சாப்பிடுவது உயிருக்கு ஆபத்து; விஷம் சாப்பிடுவதும் உயிருக்கு ஆபத்து” என்று சொல்வானாகில் அவனது அறிவை என்னவென்பது? அதே போல்தான் மேற்படி வாசகத்தின்படி “இறந்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதுவதும் ஷிர்க்; இறந்தவர்களிடம் துஆ கேட்பதும் ஷிர்க்” என்று ஒருவன் சொல்வதும் அமையும். ஆனால் வஹ்ஹாபிகள் இந்தக் கருத்தைத்தான் கொண்டுவர நினைக்கிறார்கள். இவற்றில் முதலாவது கருத்து தவறு என்றும் இரண்டாவது கருத்து சரி என்றும் நாம் சொல்கிறோம்.

இரண்டாவது கோணம்: ”இறந்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதுவது என்பதே அவர்களிடம் செய்யப்படும் துஆதான்” என்னும் அர்த்தம். இந்தக் கருத்தைத்தான் வஹ்ஹாபிகள் நாடுகிறார்கள்.
இறந்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதும்போது அது எப்படி அவர்களிடம் துஆ செய்வதாக முடியும்? என்ற கேள்வி எழுகிறது. இந்நூலில் அதற்கான விளக்கம் ஏதும் இல்லை. (எதற்குத்தான் விளக்கம் இருக்கிறது. எல்லாமே மொண்ணையான மட்டையடி கருத்துக்கள்தான்.) அப்படிச் சொல்வதற்கான முகாந்திரம் என்று எதை இவர்கள் தவறாக விளங்கிக்கொண்டு கூறுகிறார்கள் என்று சிந்தித்த போது ஒரு கோணம் தோன்றியது. அதாவது, சூறா ஃபாத்திஹாவில் வரும் “இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்” (உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.) என்னும் திருவசனத்தின் அடிப்படையில்தான் அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். அந்த தர்க்கம் என்னவெனில், ”சூறா ஃபாத்திஹாவில் இவ்வாறு வருவதால் அதை இறந்தவர்களுக்காக ஓதும்போது இந்த வசனம் அந்த இறந்தவரை நோக்கிச் சொல்வதாக அமையுமாதலால் அது அவரிடமே துஆ கேட்பதாகும். எனவே அது ஷிர்க் – இணை வைப்பதாகிவிடும்.”

இதுதான் இவர்களின் நூலில் காணும் மேற்படி கருத்துக்கான வாதம் எனில், இந்த வாதத்தையும் நாம் நம் பாணியிலான கோட்டக்கல் வைத்தியம் செய்து சரிப்படுத்துவோம்.

இறந்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதுவது என்பது இறந்தவர்களை நோக்கி ஓதுவது அல்ல. இரண்டுக்கும் பாரதூரமான வித்தியாசம் இருக்கிறது.

இறந்தவர்களை நோக்கி ஃபாத்திஹா ஓதப்படுமெனில் அது அப்பட்டமான ஷிர்க்காக அமையும். அப்போதுதான், “இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்” என்று கூறுவது அந்த இறந்தவருக்காக என்று ஆகி அது ஷிர்க்கை உண்டாக்கும்.

ஆனால், இறந்தவருக்காக என்னும் போது அது அந்த ஃபாத்திஹா ஓதியதன் பலன், நன்மை அவரின் ரூஹுக்குச் சேரவேண்டும் என்பதாகப் பொருள்படும். (ஒருவர் ஓதும் நன்மை இன்னொருவருக்குப் போய்ச்சேரும் என்பது எமது நம்பிக்கை. சேராது என்று வஹ்ஹாபிகள் நம்புகிறார்கள். குர்ஆன் – ஹதீஸ் ஆதார அடிப்படையில் இது தனி அலசலுக்கு உரிய விவாதப்பொருண்மை.)

இறந்தவர்களுக்காக ஓதுதல் என்பது வேறு இறந்தவர்களை முன்னோக்கி ஓதுவது வேறு என்பதை எங்களால் ஏற்க முடியாது. இரண்டும் ஒன்றுதான் என்று வஹ்ஹாபிகள் பிடிவாதம் பிடித்தால் அவர்களின் கூற்றின் அடிப்படை என்ன என்பதைப் பார்க்க வேண்டும். “யாரை முன்னோக்கி எதை ஓதுகிறோமோ அந்த வாசகம் அவரைத்தான் குறிப்பதாகும்” என்னும் நிலையில்தான் இது சொல்லப்படுவதாக முடியும். அப்படி எனில், இந்த ஷரத்து திருக்குர்ஆனுக்குப் பொருந்தாது என்பது அடியேனின் கருத்து. அதற்கான காரணங்கள் பின்வருமாறு:

காரணம்1: ஓதப்படும் வாசகம் யாரை முன்னிலைப்படுத்தி ஓதப்படுகிறதோ அவரைத்தான் குறிக்கும் என்று சொன்னால் பல திருவசனங்களை நாம் தொழுகையில் ஓதவே முடியாது. தொழுகை என்பது அல்லாஹ்வை முன்னிலைப்படுத்தித் தொழுவது. (உடல் கிப்லாவை முன்னோக்கினும், தொழுபவனுக்கும் கிப்லாவுக்கும் இடையில் தொழுபவனின் றப்பு (அல்லாஹ்) இருக்கிறான் என்று புகாரியில் பதிவான ஹதீஸின் கருத்தை நினைவு கொள்க. அதனால்தான் தொழுகையில் நின்றதும் இன்னீ வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ்ஸமாவாத்தி வல் அர்ள ஹனீஃபன் வ மா அனா மினல் முஷ்ரிகீன் – நிச்சயமாக நான் வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றி படைத்தவனின் (அல்லாஹ்வின்) பக்கமே முன்னோக்குகிறேன், நான் இணை வைப்போரில் ஒருவனாக இல்லை என்னும் ஆயத்தை ஓதுகிறோம்.) ஆக அல்லாஹ்வை முன்னோக்கி நின்றுதான் தொழுகையில் திருக்குர்ஆனை ஓதுகிறோம். தொழுகையில் நாம் வேறு யாரையும் முன்னோக்கவில்லை, நபியையோ மலக்கையோ ஜின்னையோ இமாமையோ முன்னோக்கவில்லை. இந்நிலையில் ஃபாத்திஹா ஓதும்போது ”இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்” என்னும் முன்னிலைக்கான இலக்கணமுள்ள வாசகத்தை ஓதும்போது அது யாரைக் குறிக்கும்? நிச்சயமாக அல்லாஹ்வைத்தான் குறிக்கும். சரி, தொழுகையில் ஒருவர் யாசீன் சூறாவை ஓதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதில் வரும் “இன்னக்க லமினல் முர்சலீன்” (நிச்சயமாக நீர் தூதர்களில் நின்றுமுள்ளீர்) என்னும் திருவசனத்தை அவர் ஓதும்போது அது யாரைக் குறிக்கும்? முன்னிலையில் இருக்கும் அல்லாஹ்வையா? அப்படிச் சொன்னால் அல்லாஹ்வை தூதர்களில் உள்ளவன் என்று சொன்ன ஷிர்க் ஆகிவிடுமே? அல்லாஹ்வை முன்னோக்கி நிற்கும் தொழுகையில் ஓதினாலும் அந்த ஆயத் யாரைக் குறிக்குமோ அவரைத்தான் குறிக்கும், அதாவது றசூலுல்லாஹ்வைத்தான் குறிக்கும் என்றுதான் நாம் நிய்யத் வைக்கிறோம், விளங்குகிறோம். அது அல்லாஹ்வைக் குறிக்கும் என்று விளங்கினால் அப்போது ஷிர்க் ஆகிவிடும். அதுபோல், இறந்தவருக்காக நன்மையை நாடி ஃபாத்திஹா ஓதும்போது அந்த ஃபாத்திஹாவில் வரும் “இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்” என்னும் திருவசனம் அல்லாஹ்வைக் குறிப்பதாக நாம் விளங்கியிருக்கும்வரை ஷிர்க் என்பது ஏற்படாது. அது அல்லாஹ்வைத்தான் குறிக்கிறது என்றுதான் ஃபாத்திஹா ஓதும் நல்லடியார்கள் அனைவரும் விளங்கிக் கொண்டிருக்கிறோம். மாறாக, வஹ்ஹாபிகள் விளங்குவது போல், அது அந்த இறந்தவரைக் குறிக்கும் என்று விளங்கினால் அப்போதுதான் ஷிர்க் உண்டாகும். நாம் அப்படி விளங்குவதில்லை.

இன்னொரு விளக்கம் என்னவெனில் உயிருடன் இருக்கும் ஒருவருக்காக – அதாவது அவருக்குப் பலன் சேருவதற்காக – நாம் ஃபாத்திஹாவை ஓதும் போது ஷிர்க் ஏற்படுவது இல்லை. எனவே இறந்தவருக்காக ஓதும் போதும் ஷிர்க் ஏற்படாது என்பது.

உயிருடன் உள்ளவருக்கு நன்மை உண்டாவதற்காக ஃபாத்திஹா ஓதுவது என்றால் அது என்ன என்பதை விளங்க பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்:
சூறா ஃபாத்திஹா ஒவ்வொரு நோய்க்கும் மருந்தாகும்” (தாரிமி, பைஹகீ)

நோய்களும் அதற்கான மருந்துகளும் இரண்டு வகை என்று காணலாம்: உடல்நோய் மற்றும் ஆன்மிக நோய். உடலுக்கான மருந்துகளும் உள்ளன. ஆன்மிகத்துக்கான மருந்துகளும் உள்ளன.

சூறா ஃபாத்திஹா இரண்டு வகை நோய்களுக்குமான மருந்தாக இருக்கிறது. பின்வரும் ஹதீஸைக் கவனியுங்கள்:
அபூ சயீதுல் குத்ரி (ரலி) அறிவிக்கிறார்கள்: “நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம். ஓரிடத்தில் இறங்கி இளைப்பாறிக்கொண்டிருந்த போது அடிமைப் பெண் ஒருத்தி வந்து ‘எங்கள் கோத்திரத்தின் தலைவரைத் தேள் கடித்துவிட்டது. ஆண்கள் எவரும் துணைக்கு இங்கே இல்லை. உங்களில் வைத்தியம் செய்யும் யாராவது இருந்தால் உதவுங்கள்’ என்று கேட்டாள். எங்களில் ஒருவர் எழுந்து அவளுடன் சென்றார். அவருக்கு எதுவும் வைத்தியம் தெரிந்திருக்கும் என்று நாங்கள் கருதவில்லை. ஆனால் அவர் ஏதோ ஓதி அந்தக் கோத்திரத் தலைவரைக் குணப்படுத்திவிட்டார். அதற்காக அவருக்கு அந்தத் தலைவர் முப்பது ஆடுகளைச் சன்மானகாகவும் மேலும் நாங்கள் அனைவரும் பருகுவதற்குப் பாலும் தந்து அனுப்பினான். அவர் வந்ததும் நாங்கள் அந்த எம் நண்பரிடம் கேட்டோம், “ஓதி வைத்தியம் பார்க்க உமக்குத் தெரியுமா?” அதற்கு அவர் சொன்னார், “இல்லை, ஆனால் நான் உம்முல் கிதாபை (சூறா ஃபாத்திஹாவை) மட்டுமே ஓதினேன்.” நாங்கள் சொன்னோம், “இது பற்றி நாம் ரசூலுல்லாஹ்விடம் கேட்கும்வரை எதுவும் பேசாதே” என்று நாங்கள் சொன்னோம். மதினாவை அடைந்ததும் இதை ரசூலுல்லாஹ்விடம் கூறினோம், அதாவது நாங்கள் பெற்றுக்கொண்ட ஆடுகள் எமக்கு ஹலாலா அல்லது ஹராமா என்று அறிந்து கொள்வதற்காக. நபி(ஸல்) சொன்னார்கள், “அது (அல்-ஃபாத்திஹா) வைத்தியத்திற்குப் பயன்படும் என்பதை அவர் எப்படி அறிந்தார்? உங்கள் சன்மானங்களைப் பகிர்ந்து கொடுங்கள். அதில் எனக்கும் ஒரு பங்கு வையுங்கள்” (புகாரி ஷரீஃப்; குர்ஆனின் சிறப்புக்கள்.)

இன்னொரு நபிமொழியையும் கவனியுங்கள்:
“ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தைத் தழுவி மீண்டும் தன்னுடைய மக்களிடம் சென்றார். அவர் போகும் வழியில் ஒரு கூட்டத்தைச் சந்தித்தார். அவர்களில் ஒருவர் பைத்தியம் பிடித்த நிலையில் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தார். அவர்கள் சொன்னார்கள், இந்த மனிதரின் தோழர் (நபி (ஸல்)) நல்ல விஷயங்கள் உடையவராவார். எனவே அந்த மனிதர் சூறா ஃபாத்திஹாவை ஓதி அந்தப் பைத்தியக்காரனுக்கு மந்திரித்தார். அவன் குணமடைந்தான். எனவே அந்த மக்கள் அவருக்குச் சன்மானமாக நூறு ஆடுகளைத் தந்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து நடந்ததைச் சொன்னார். சூறா ஃபாத்திஹாவைத் தவிர அவர் வேறு எதனையும் ஓதினாரா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். நபி(ஸல்) சொன்னார்கள்: “இந்த மக்கள் தவறான மந்திரங்களால் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இவர் ஹலாலான வழியில் தனக்கு நூறு ஆடுகளைச் சம்பாதித்துக் கொண்டார்” (சுனன் அபூதாவூத்)

எனவே சூறா ஃபாத்திஹாவை ஓதும்போது ”இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்” என்று வருகின்ற காரணத்தால் அது நோயாளியை நோக்கி ஓதுவதாகும் என்றும் அதனால் ஷிர்க் ஆகும் என்றும் விளங்க இடமில்லை. அப்படி விளங்குவது நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தும் மாபாதகச் செயலாகிவிடும். ஏனெனில் சூறா ஃபாத்திஹாவை நோயாளிகள் மீது ஓதிப்பார்ப்பதை நபி (ஸல்) அவர்களே அங்கீகரித்திருக்கிறார்கள், அது ஹலால் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம்: ஓதிப்பார்ப்பதற்குச் சன்மானம் வாங்குவது ஹலால் என்பதற்கும் மேற்கண்ட ஹதீஸ்கள் ஆதாரங்களாகின்றன.

இதைச் சொல்லும்போது ஒரு கருத்து நியாபகம் வருகிறது. இந்நூலின் அணிந்துரையில் ஷம்சுத்தீன் காஸிமி எழுதியிருக்கும் ஒரு சொற்றொடரின் இரண்டு சொற்கள்: ’முரீது வியாபாரம்’. அதாவது தரீக்கா அமைப்பை, முர்ஷித்-முரீத் அமைப்பை இவர் முரீது வியாபாரம் என்று கிண்டலடிக்கிறார்.
இதன்மீது இரண்டு கோணங்களில் விளக்கம் தர விரும்புகிறேன்:
1.   வியாபாரத்தை அல்லாஹ் ஹலால் ஆக்கி வைத்திருக்கிறான். ஹலாலானது என்பதற்கான ஒரு சொல்லைக் கூறி மகிழ வைத்திருக்கிறீர்கள். அல்லாஹ் இதற்கான நற்கூலியை உங்களுக்கு வழங்குவானாக.
2.   நபி(ஸல்) அவர்களுக்கு அவர்களின் முரீதுகளான (சீடர்களான, மாணவர்களான) சத்திய சஹாபாக்கள் அன்பளிப்புக்கள் வழங்கியிருக்கிறார்கள். அந்த வழிமுறையில் ஷைகுகளுக்கு முரீதுகள் அன்பளிப்புக்கள் வழங்கினால் அதை வியாபாரம் என்று எள்ளி நகையாடுவது நபிவழியை அசதி ஆடும் அயோக்கியத்தனமாகும். (அதாவது, ராஇனா என்னும் சொல்லைக் கொண்டு நபி(ஸல்) அவர்களை யஹூதிகள் விளித்தார்கள். அதற்கு எம்மைப் பாருங்கள் என்னும் அர்த்தம் இருந்தாலும் சிலேடையாக ‘எங்கள் ஆடு மேய்ப்பவரே’ என்னும் அர்த்தமும் தொனிக்கும். அதைக்கொண்டு அவர்கள் ஏளனத் தொனியில் அழைத்ததை அல்லாஹ் கண்டிக்கிறான். அனைத்து நபிமார்களும் ஆடு மேய்த்திருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்களே அருளியிருக்கிறார்கள் என்றபோதும் யஹூதிகள் ‘மேய்ப்பர்’ என்னும் சொல்லைக் கொண்டு நபியை ஏளனப்படுத்தவே கையாண்டனர். எனவே அல்லாஹ்வின் கண்டனத்திற்கு ஆளானார்கள் (காண்க அல்குர் ஆன் 2:104). அந்த யஹூதிகளின் மனநிலையில் இந்த வஹ்ஹாபிசக் கொள்கைக்காரரும் வியாபாரம் என்னும் சொல்லை ஏளனத் தொனியில் இங்கே பயன்படுத்தி இறைநேசர்களைக் கிண்டலடித்திருக்கிறார்).

”முரீது வியாபாரம்” என்று சொல்லியிருக்கும் ஷம்சுத்தீன் காஸிமி அணிந்துரை வழங்கி நன்னூல் என்று ஒப்பியிருக்கும் இந்நூலில் மீலாது விழாக்கள் கொண்டாடுவது புதிதாகப் புகுத்தப்பட்ட அனாச்சாரம் என்று சொல்லப்பட்டிருப்பதால் அதுவே அன்னாரின் கொள்கையுமாகும் என்று கொள்வோம். அப்படியாயின் மீலாது விழாக்கள் என்று நடைபெறுகின்ற எதிலும் அவர் கலந்து கொள்ளாமல் இருப்பதுதான் நேர்மை. ஆனால், எம் கல்லூரியில் (ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சி) ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் ’மீலாது விழா’விற்கு சிறப்புச் சொற்பொழிவாளர்களை அழைக்கும் நியதியின் கீழ் ஒருமுறை ஷம்சுத்தீன் காஸிமியும் அழைக்கப்பட்டார். “மீலாது கொண்டுவதைக் கொள்கை ரீதியாக எதிர்ப்பவன் நான் என்பதால் கலந்துகொள்ள மாட்டேன்” என்று கூறியிருந்தால் அது நேர்மை. ஆனால் அவர் ஓடோடி வந்து கலந்து கொண்டு மேடையில் தன் அரைவேக்காட்டு உரையை முழங்கியதோடு பணமும் பெற்றுக்கொண்டார். ஆக, இது தன் கொள்கைக்கு மாற்றமான நிலையிலும் பணம் வருகிறதென்றால் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் அப்பட்டமான வியாபாரத் தந்திரம் அல்லாமல் வேறு என்ன? அதிலும் கொள்கைக்கு உடன்பாடான விஷயத்திற்குப் பணம் என்றால் கூட அதை ஹலாலான வியாபாரம் எனலாம். இது நேர்மையற்ற பித்தலாட்ட வேலை என்பதால் இதை வட்டி சேர்ந்த வியாபாரம் என்றுதான் சொல்ல வேண்டும். பேசாமல் இவரை ”தாவா சேட்” என்று அழைக்கலாம் போல் தோன்றுகிறது. (இதே நூலுக்கு மற்றொரு அணிந்துரை வழங்கியுள்ள காலாவதி.பெரியார்தாசன் அவர்களும் ஜமால் முகம்மது கல்லூரிக்கு மீலாது விழா சொற்பொழிவு ஆற்ற வந்திருந்தார். பணமும் வாங்கிக்கொண்டார். கூடவே ஒரு ஆளை அழைத்து வந்திருந்தார். அவர் அரங்கத்திற்கு வெளியே (கல்லூரிக்கு உள்ளேதான்) கடைவிரித்து இந்நாள் அப்துல்லாஹ் ஆன மேனாள் பெரியார் தாசனின் குறுவட்டுக்களையும் (அதாங்க சி.டி) நூல்களையும் விற்றார்.)

கடைசியாக இந்நூலில் இருந்து ஒரு புள்ளி:
“பல மார்க்க அறிஞர்களின் அயராத பணியால் ‘தவ்ஹீது’ என்ற கொள்கை இஸ்லாமிய வரலாற்றில் தனித்துவம் கொண்டது. உயிர் பெற்றது. இமாம்களான அபூஹனீஃபா (ரஹ்), மாலிக் (ரஹ்), ஷாஃபி (ரஹ்), அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) போன்றவர்களும், இவர்களுக்கு பின்னால் வந்த ஹதீஸ் துறை இமாம்கள் அனைவருமே மக்களை தவ்ஹீதின் பக்கமே செயல்படுமாறு அழைப்பு விடுத்தார்கள்” (பக்கம்:55)

இந்த வரிகளின் கருத்து மிகவும் உண்மை. ஆனால் இந்நூலில் இதனை இவர்கள் எழுதியிருப்பதன் பின்னணியில் அப்பட்டமான சூழ்ச்சி உள்ளது. அதாவது, அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்திற்கு எதிரான கருத்துக்களைப் பிரச்சாரம் செய்யும் இந்நூலில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் இமாம்கள் பெயர்களைப் போட்டு அவர்களெல்லாம் இவர்களின் கொள்கைக்காரர்கள் என்பதாகக் காட்ட முனைந்திருக்கிறார்கள். இது அப்பட்டமான பித்தலாட்டமாகும். இவ்வாறான பிரச்சாரம்தான் இவர்களின் பாணி எனில் நேர்வழி என்பதற்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை, குறுக்கு வழிதான் இவர்களின் தனி வழி என்று எண்ணத்
தோன்றுகிறது.

இந்நூலில் இஸ்லாமிய ஆன்மிக வழிமுறையை ‘முரீது வியாபாரம்’ என்று எள்ளி நகையாடிக் கொக்கரித்துக் கொண்டே இமாம்களின் பெயரைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

ஃபிக்ஹுக் கலையில் மேலான அறிவைப் பெற்றிருந்த இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் ஆன்மிக ஞானத்தைப் பெறுவதற்கான சய்யிதினா ஜஃபர் சாதிக் (ரஹ்) அவர்களிடம் இரண்டு ஆண்டுகள் சீடராக இருந்து கற்க வேண்டியிருந்தது. “இரண்டு வருடங்கள் இல்லை எனில் நுஃமான் நாசமாகியிருப்பான்” என்றும் ”இரண்டு வருடங்கள் நான் சய்யிதினா ஜஃபருஸ் ஸாதிக் அவர்களுடன் இருந்தேன். அவர்களிடம் நான் பெற்ற ஞானக் கல்வியே என்னை ஒரு இறைஞானியாக ஆக்கியது” என்றும் அவர்களே சொல்லியிருக்கிறார்கள். (துர்ருல் முக்தார் பாகம்1). இத்தனைக்கும் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் சய்யிதினா ஜஃபர் சாதிக் (ரஹ்) அவர்களைக் காட்டிலும் வயதால் மூத்தவர்களாக இருந்தார்கள். சூஃபி நெறியில் இவ்வாறு நிகழ்வதைக் காணலாம், அதாவது, சீடரின் வயது முர்ஷிதின் வயதை விட அதிகமாக இருக்கக்கூடும். ஆனால் ஞானம் மட்டுமே தகுதியாகக் கவனிக்கப்படும் நிலையில் இளையவர் குருவாகவும் மூத்தவர் சீடராகவும் இருப்பதுண்டு.

இன்னொரு விஷயம், அல்லாஹ்வின் திருப்பண்புகள் பற்றி விளக்கும் போது சூஃபிகள் சபஅ சிஃபாத் (ஏழு திருப்பண்புகள்) என்னும் ஒரு கோட்பாட்டினைச் சொல்வதுண்டு. இறைவனின் அழகிய திருநாமங்களில் ஏழினை விசேஷமாகக் குறிப்பிட்டு அல்லாஹ்வுடைய சுயத்தின் முக்கியப் பண்புகளாக அவற்றைச் சொல்வார்கள். இதர திருப்பண்புகள் இவ்வேழு பண்புகளைச் சார்ந்திருக்கும் நிலையை விளக்கி இவற்றை உம்முஹாத்தே சிஃபாத் (திருப்பண்புகளின் தாய்) என்றும் சிஃபாத்தே சுபூதிய்யா (ஸ்தாபிதமான திருப்பண்புகள்) என்றும் போற்றுவர்.

சூஃபிகளின் இவ்விளக்கத்தை வஹ்ஹாபிசக்காரர்கள் கடுமையான மொழியில் விமரிசனம் செய்துவந்துள்ளனர். அதாவது, சூஃபிகள் அல்லாஹ்வின் திருப்பண்புகளில் ஏழினை மட்டுமே ஏற்றுக்கொண்டு பிறவற்றை நிராகரிக்கிறார்கள் என்று அபாண்டமாகச் சொல்லும் அளவுக்கு அவர்களின் அராஜகப் பிரச்சாரம் சென்றதுண்டு. ஆனால் இவர்கள் இந்நூலில் தவ்ஹீதை மக்களுக்குப் போதித்த நேரான இமாம்கள் என்று ஒத்துக்கொள்வதாகக் காட்டியிருக்கும் இமாமகளில் ஒருவரான இமாமுல் அஃழம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் அல்-ஃபிக்ஹுல் அக்பர் நூலின் ஐந்தாம் புள்ளி பின்வருமாறு கூறுகிறது:
“அவனது சுயத்திற்கான சிஃபத்துக்கள் யாவை எனில் அவை: ஹயாத் (ஜீவன்), குத்ரத் (சக்தி), இல்மு (அறிவு), கலாம் (பேச்சு), சமாஅத் (கேள்வி), பஸாரத் (பார்வை) மற்றும் இராதா (நாட்டம்). அல்லாஹ்வுடைய செயல்பாட்டின் (அஃப்ஆல்) தொடர்புள்ள சிஃபத்துக்கள் யாவை எனில் அவை: படைத்தல், பரிபாலித்தல், தோற்றுவித்தல், உண்டாக்குதல், உருக்கொடுத்தல் மற்றும் பிற செயல்களின் திருப்பண்புகளாகும்.”

இதே நூலில் “இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான்” என்று சொல்வது தவ்ஹீதுக்கு எதிரானதாகும் என்று சொல்லியிருக்கும் இவர்கள், அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்று சுன்னத் வல் ஜமாஅத்தின் உலமாக்களும் உரஃபாக்களும் கொண்டிருக்கும் கொள்கையையும்கூட ஷிர்க் என்று சொல்லியே ஜல்லியடித்து வந்திருக்கிறார்கள். ”அல்லாஹ் அவனின் சுயத்தைக் கொண்டு அர்ஷில் மட்டும்தான் இருக்கிறான் வானிலோ பூமியிலோ அவனின் சுயம் இல்லை, அவனின் அறிவுதான் இருக்கிறது” என்பதாகத் திருக்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் எதிரான கொள்கையையே தவ்ஹீத் என்பதாகப் பிரச்சாரம் செய்தும் வருகிறார்கள். இவ்வாறு இறைவனுக்கு எல்லை கற்பித்து விளங்கி வைத்திருக்கும் இவர்கள் சரியான தவ்ஹீதை போதித்ததாகச் சொல்லி இந்நூலில் குறிப்பிட்டிருக்கும் இமாம்களின் கொள்கை என்னவாக இருந்தது என்பதற்கு இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் ஃபிக்ஹுல் அக்பரில் இருந்து இருபத்தைந்தாவது புள்ளியைக் கவனியுங்கள்:
“அவனுக்கு எல்லையோ முடிவோ இல்லை”

தவ்ஹீதை சரியாக விளக்கிய இமாமகளின் பட்டியலில் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் பெயரையும் இவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதே சமயம், கப்ரு ஜியாரத் செய்வது ஷிர்க் என்றும், தர்கா கட்டுவது அனாச்சாரம் என்றும், தர்காவிற்குச் செல்வதால் நன்மையே கிடையாது என்றும் எழுதி இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கொண்டிருந்த கொள்கைக்கு மாற்றமான எதிரான விஷயங்களையே பிரச்சாரம் செய்துள்ளார்கள். எனவே இவர்களின் கூற்றுப்படிக்கே, இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் நேர்வழியில் உண்மையான தவ்ஹீதில் இருந்தவர்கள் ஆதலால் அவர்களின் கருத்துக்களுக்கு எதிராகப் பேசும் இவர்கள் போலித் தவ்ஹீதை போதிக்கும் இப்லீசின் சீடர்கள் என்பதும் வழிகேட்டில் ஓடிக்கொண்டிருப்பவர்கள் என்பதும் உறுதியாகிறது.

ஏனெனில், இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களுக்கு ஏதேனும் துன்பங்கள் பிரச்சனைகள் வந்தால் அவர்கள் உடனடியாக இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் அடக்கத்தலத்திற்கு (கப்ருக்கு, தர்காவுக்கு) சென்று அதனருகில் இரண்டு ரகஅத்துகள் அல்லாஹ்வைத் தொழுது அவனிடம் துஆ கேட்பார்கள். அவ்வாறு துஆ கேட்பதில் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களை வஸீலாவாக (இணைக்கும் இடைப்பொருளாக ஆதரவாக) வைத்துக் கேட்பார்கள். இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் வழியே அல்லாஹ் வழங்கும் பரக்கத்தால் அவர்களின் பிரச்சனைகள் நீங்கிவிடும். அவர்கள் அங்கு தொழும் இரண்டு ரகஅத்துக்களையும்கூட ஹனஃபி மத்ஹபின் முறையில் நிறைவேற்றுவார்கள். ஏன் அவ்வாறு தொழுகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது ‘இங்கே அடங்கியிருப்பவரின் கண்ணியத்திற்காக’ என்று சொன்னார்கள். (மத்ஹபுகள் மார்க்கத்தில் பிளவை உண்டாக்கி முஸ்லிம்களைப் பிரிக்கின்றன என்று உளறிக்கொட்டும் வஹ்ஹாபிச மூடர்கள் இதைக் கவனிக்கவும்.) [இந்தச் செய்தி ஷாஃபி அறிஞரான இமாம் இப்னு ஹஜரல் மக்கி (ரஹ்) அவர்களின் ”அல்-ஃகைராத்தல் ஹிசான் ஃபீ மனாக்கிபல் இமாம் அபூஹனீஃபா அல்-நுஃமான்” என்னும் நூலிலும் ஹனஃபி அறிஞரான இப்னு ஆபிதீன் ஷாமி (ரஹ்) அவர்களின் நூலான ரத்துல் முக்தாரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.]

”இஸ்லாத்தில் வலியுறுத்தப்படும் அடிப்படைக் கொள்கைகள்” என்னும் வஹ்ஹாபிசப் பிரச்சார நூலின் மீது இதுவரை சொல்லி வந்த விமரிசனங்கள் எழுபது பக்கங்களைத் தொட்டிருக்கும் நிலையில் போதுமான அளவு பேசியிருப்பதாக நினைக்கிறேன். இது போல் இன்னும் பல மடங்கு விரிவாக விவாதிக்க சாத்தியமான சில புள்ளிகளையும் நாம் சுருக்கமாகவே தொட்டிருக்கிறோம். அத்தன்மையில் அமைந்த இன்னொரு புள்ளி ஒன்றை மட்டும் சொல்லி நிறைவு செய்ய விழைகிறேன்.

இந்நூல் அரபியில் பிம்பாஸ் (Bin Baaz) என்னும் வஹ்ஹாபிசக் கொள்கைவாதி எழுதிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவரும் வஹ்ஹாபிசக் கொள்கையில் இவருக்கு முன்னோடியாக இருந்த அல்-பானி என்னும் அற்பனும் மார்க்கத்தின் ஆதாரங்களை மாற்றுவது, குறைப்பது அதாவது கையாடல் செய்வது போன்ற பித்தலாட்டங்களில் கைதேர்ந்தவர்கள் என்பதை இஸ்லாமிய உலகம் நன்கறியும். தாம் சார்ந்த கொள்கைக்கும் மாற்றமாக இருக்கக்கூடிய ஹதீஸ்களை எல்லாம் ஆதாரமற்றவை என்றும் பலஹீனமானவை என்றும் புதிதாக முத்திரை குத்தி அவற்றை ஹதீஸ் கிரந்தங்களில் இருந்து நீக்கும் ஷைத்தானிய செயலை, உரிமை அத்து மீறலை அரங்கேற்றியவர்கள் இந்த அல்பானி மற்றும் பிம்பாஸ் குழுவினர் என்பதை உலகமெங்குமுள்ள அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் விளக்கி முஸ்லிம்களை எச்சரித்திருக்கின்றார்கள். இந்த அல்-பானி செய்த மாபெரும் பித்தலாட்டம் என்னவெனில் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தொகுத்துத் தந்த ஹதீஸ் கிரந்தமான அல்-அதபல் முஃப்ரத் என்னும் நூலில் இருந்து 83 அத்தியாயங்களை (329 ஹதீஸ்களை) ஆதாரமற்றவை என்றும் ஷிர்க்கானவை என்றும் சொல்லி நீக்கியதாகும். அவ்வாறு அவர் முடிவு செய்ததற்குக் காரணம், வஹ்ஹாபிச சுண்டைக்காய் மூளைக்கு ஷிர்க் என்று தோன்றிவிட்டால் அது அப்படித்தான் என்னும் அடாவடித்தனமான போக்குதான். அவ்வாறு நீக்கப்பட்ட ஹதீஸ் பாடங்களில் ஒன்று “கைகளையும் பாதங்களையும் முத்தமிடுதல்” என்பதாகும். அதில் பின்வரும் ஹதீஸ்கள் உள்ளன:

அல்-வாஸிப்னு ஆமிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “நாங்கள் (மதீனா) வந்தோம். ‘அவர்கள்தான் அல்லாஹ்வின் தூதர்’ என்று எங்களிடம் சொல்லப்பட்டது. நாங்கள் அல்லாஹ்வின் தூதரின் கைகளையும் பாதங்களையும் முத்தமிட்டோம்” (அல்-முஃப்ரத் ஹதீஸ் எண் 976)

ஷுஐப் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “அப்பாஸ் (ரலி) அவர்களின் கைகளையும் பாதங்களையும் அலீ (ரலி) அவர்கள் முத்தமிட்டதை நான் கண்டேன்” (அல்-முஃப்ரத் ஹதீஸ் எண் 975)

இந்த நபிவழியை இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் அதப் (நற்குணம்) என்று பதிவு செய்திருக்கிறார்கள். மட்டுமல்ல, இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் கொள்கையும் இதுவாகவே இருந்தது. இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் பாதங்களை முத்தமிட வேண்டும் என்று இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அனுமதி கேட்ட நிகழ்ச்சி இதனைக் காட்டுகின்றது.

இந்த நபிவழியைத்தான் வஹ்ஹாபிச மூடர்கள் ஷிர்க் என்று பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் இப்லீசின் சீடர்களாக இருக்கிறார்கள். இப்லீசின் சிந்தனைக்கும் இவர்களின் சிந்தனைக்கும் என்ன தொடர்பு என்பதை இந்த விஷயத்தை (பாதங்களை முத்தமிடுதல்) இன்னும் விரிவாகப் பேசும்போது விளக்கி வரைவேன், இன்ஷா அல்லாஹ்!

எனவே, இது போன்ற ஷைத்தானியக் கொம்பூதிகளின் நூல்களை முஸ்லிம்கள் புறக்கணித்துத் தங்களின் ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்னும் செய்தியுடன் நிறைவு செய்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் கருணை செய்வானாக! ஆமீன்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நஜ்தில் ஷைத்தானின் கொம்பு முளைத்து (1703 ஆம் ஆண்டு) பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு மிக விளக்கமான நுணுக்கமான சரியான தெளிவான விளக்கங்களோடு பதிலாக வந்திருக்கும் முதல் தமிழ் கட்டுரை (நூல்) இதுவாகத் தான் இருக்கும்.

    மிக்க நன்றிகள்..

    குரான் ஷரீஃபோடும், ஹதீது ஷரீஃபோடும் இவர்கள் நடத்தும் நுண்ணரசியலை பிரிவினையை தேவையில்லாத குழப்பங்களால் விளைவித்த பாமரர் மயங்கும் வாதத்திறன்(திமிர்) படைத்தவர்களுக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான பதில் மரியாதை இந்த கட்டுரையில் உள்ளது.

    அல்லாஹ்வுடைய உதவியினாலும் பெரியோர்களுடைய துவா பரக்கத்தினாலும் மேலும் மேலும் எழுதி என் போன்றோர்கள் பயன் பெற உங்களுக்கு உதவ வேண்டுமாய் வேண்டுகிறேன்.

    ReplyDelete