Sunday, September 16, 2012

எறும்பின் கண் (தொடர்ச்சி-1)


திருக்குர்ஆனில் எறும்பிற்கு ஒரு கண்ணியமான இடத்தை இறைவன் வழங்கியுள்ளான். அதன் இருபத்தேழாவது அத்தியாயம் ’அந்-நம்ல்’ – ‘எறும்புகள்’ என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் எறும்பைப் பற்றிக் கூறப்பட்டுள்ள திருவசனம்:

“இறுதியாக எறும்புகளின் சமவெளிக்கு அவர்கள் (மன்னராகிய சுலைமான் நபியும், மனிதர்கள் ஜின்கள் மற்றும் பறவைகள் அடங்கிய அவரது படையும் -27:17) வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) ‘எறும்புகளே! நீங்கள் உங்கள் தங்குமிடங்களுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய சேனைகளும் அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு’ என்று கூறிற்று” (27:18)

மேற்சொன்ன திருவசனத்தையே எறும்புகளுக்குக் கண் உண்டு என்பதற்கான ஆதாரமாக நான் முன் வைத்தேன். ஏனெனில் சுலைமான் நபி தம் படைகளுக்குத் தலைமை தாங்கி வருகிறார்கள் என்பதை அந்தத் தலைமை எறும்பு பார்த்துள்ளது.


வகுப்பறையில் நடந்த விவாதத்தை நான் விலங்கியல் பேராசிரியர் ஒருவரிடம் சொல்லிக் கேட்டபோது அவர் மிகச் சுருக்கமாக, “எறும்புகளுக்கு நம் கண்களைப் போன்ற கண்கள் இல்லை. ஆனால் அவற்றுக்கு compound eyes உண்டு” என்று சொல்லிச் சென்றார். எறும்பியல் பற்றிப் படித்துப் பார்த்தபோது மேலும் தகவல்கள் கிடைத்தன.

உலகில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எறும்பு வகைகள் உள்ளன! அவற்றில் கண் உள்ள எறும்பு வகைகளும் உண்டு. கண் இல்லாத எறும்பு வகைகளும் உண்டு. தொல்காப்பியர் குறிப்பிடும் அறிஞர்கள் கண்ணற்ற எறும்புகளை அவதானித்து அதனை மூன்றாம் அறிவு வகையில் சேர்த்திருக்கிறார்கள். திருக்குர்ஆன் குறிப்பிடுவது கண்கள் உள்ள எறும்பு வகையை ஆகும். பெரும்பான்மை எறும்பு வகைகளுக்குக் கண்கள் உண்டு என்பதே அறிவியலின் கண்டுபிடிப்பு. இப்படி ஒரு முடிவு சொல்லலாம். இதைவிட இன்னொரு பொருத்தமான முடிவும் உண்டு. அதைக் கூறும் முன் இரண்டு விஷயங்களை முன்னோட்டமாகச் சொல்கிறேன்.


இத்திருவசனம் பல ஆச்சரியமான விசயங்களை நமக்கு உணர்த்துகின்றது. அந்த எறும்புகள் இருந்த இடம் நபி சுலைமான் (அலை) அவர்களின் சாம்ராஜ்ஜியத்தில் உள்ள ஓர் இடம்தான். ஆனால் இறைவன் அவ்விடத்தை ”வாதிந்நம்ல்” ’எறும்புகளின் சமவெளி’ என்று குறிப்பிட்டுள்ளான். இயற்கையில் எல்லா உயிரினங்களுக்கும் அவற்றிற்குரிய நிலங்கள் உண்டு. காடு திருத்தி கழனி ஆக்கும் அனுமதி மனிதனுக்கு உள்ளதென்றாலும் அதற்கு ஓர் எல்லை இருக்க வேண்டும். தேவையின்றி அத்துமீறிப் பிற உயிரினங்க்ளின் இருப்பிடங்களை அழித்தொழிக்கும் உரிமை மனிதர்களுக்குக் கிடையாது. அப்படி அழித்துக் கொண்டே போனால் உலகமே அழியும் நிலை வரும்.

அந்தத் தலைமை எறும்பு ஒரு பெண்! “காலத் நம்லத்துன்” (எறும்பு கூறிற்று) என்னும் சொற்றொடரில் அதற்குப் பெண்பால் விகுதி கொடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. எறும்புகளின் சமூகத்தில் ராணி எறும்பு (Queen), ஆண் எறும்புகள் (Drones) மற்றும் சேவக எறும்புகள் (Workers, Soldiers) என்னும் மூவகை உண்டு. பொதுவாக ராணி எறும்பு ஒன்றுதான் இருக்கும். சேவக எறும்புகளும் பெண்கள்தான்.  

எறும்பின் கண் பற்றிய இன்னொரு முடிவை இப்போது சொல்கிறேன். ‘ராணி எறும்பிற்குக் கண்கள் உண்டு. அதையே திருக்குர் ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் பெரும்பான்மையாக உள்ள சேவக எறும்புகளுக்குக் கண்கள் கிடையாது. அவற்றையே தொல்காப்பியம் கருத்தில் கொண்டு வகைப்படுத்தியுள்ளது.’

இது திருக்குர்ஆனின் திருவசனத்திலேயே பொதிந்துள்ள கருத்தாகும். ஏனெனில் சேவக எறும்புகளால் காண இயலாத காரணத்தினால்தான் அந்த ராணி எறும்பு தான் கண்டு அவற்றுக்குக் கூறுகின்றது. எறும்பியல் நூல்கள் தரும் தகவல்கள் இதனை மெய்ப்பிக்கின்றன.


அதாவது, கண்ணுள்ள எறும்புகளிடம் பொதுவாக இருவகைக் கண்கள் உள்ளன. ‘கூட்டுக் கண்கள்’ (Compound eyes) இரண்டு பக்கவாட்டிலும் அமைந்துள்ளன. இவை பெரிதானவை. இவை பல அடுக்குகள் கொண்ட OMMATIDIA என்பவற்றால் உருவாகியுள்ளன. அவற்றுக்குள் கார்னியா, ரெட்டினா போன்ற உட்பகுதிகளும் நரம்புத் தொடர்களும் உண்டு. ஆண் எறும்பின் ஒரு கூட்டுக் கண்ணில் ஏறத்தாழ ஆயிரம் ஒம்மடிடியா இருக்கும். ஆனால் சேவக எறும்புகளில் ஒன்றே ஒன்றுதான் இருக்கும். சில எறும்பு வகைகளில் சேவக எறும்புகளுக்கு ஒம்மடிடியாவே இல்லை. இவை தவிர கபாலத்தின் உச்சியில் ஆய்த எழுத்து வடிவில் மூன்று கண்கள் உண்டு. அவை ஒசெல்லி (OCELLI) எனப்படும் எளிய கண்கள் ஆகும். கூட்டுக் கண்கள் இல்லாத எறும்புகளில் இந்த எளிய கண்களும் இருக்காது.

எறும்பிற்குக் கண்கள் மட்டுமல்ல, மொழியும் உண்டு என்று இத்திருவசனம் காட்டுகிறது. எறும்பு அறபி மொழி பேசியது என்று இதற்கு யாராவது வியாக்கியானம் சொன்னால் அது சரியல்ல. ஏனெனில் எறும்பின் மொழியை சுலைமான் நபி அறிந்து வைத்திருந்தார்கள் என்பதுதான் அவர்களின் அற்புதம் (முஃஜிஸா). சுலைமான் நபியின் மொழியை எறும்புகள் பேசுகின்றன என்றால் அது எறும்பின் அற்புதம்தான். மேலும், சுலைமான் நபியின் தாய்மொழி அறபி அல்ல.

அந்த எறும்புகளின் புற்றுக்களுக்கு இத்திருவசனத்தில் பாவிக்கப்பட்டிருக்கும் சொல் “மசாக்கின்” என்பதாகும். இஃது ‘மஸ்கன்’ (இல்லம்) என்பதன் பன்மை. எனவே இச்சொல் வீடுகள் என்னும் அர்த்தத்தில், ஒரு புற்றினுள் எறும்புகளுக்கு உரிய அதனதன் அறைகளைக் குறிக்கும். சுகூன் என்றால் அமைதி என்றும், தங்குதல் என்றும் பொருள். வீடு என்பது அமைதி பெறும் இடம் அல்லவா? எனவே வீட்டிற்கு அதே வேர்ச்சொல்லில் இருந்து மஸ்கன் என்று பெயர் உருவாகியுள்ளது. (அறபியில் சாம்பல் நிறத்திற்கு சகனீ என்று பெயர். அதாவது, சாம்பல் என்பது தீ இயங்கி முடிந்த நிலை, தீயின் அமைதி!)

இந்த ராணி எறும்பு இப்படிச் சொன்னதைக் கேட்டு சுலைமான் நபி சிரித்தார்கள் என்கிறது அடுத்த திருவசனம். “அப்போது அதன் சொல்லைக் கேட்டு அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும் அவர் பிரார்த்தித்தார், ‘என் ரட்சகனே! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும் நீ எனக்கு அருள் செய்வாயாக! மேலும், உன் அருளைக் கொண்டு உன் நல்லடியார்களில் என்னைச் சேர்த்தருள்வாயாக!’” (27:19)

சுலைமான் நபியின் புன்னகையின் பொருள் என்ன? அது நுட்பத்தைப் புரிந்து கொண்ட புன்னகை மட்டுமல்ல. அல்லது நகைச்சுவையாக எடுத்துக் கொண்ட சிரிப்பு மட்டும் அல்ல. இரண்டும் கலந்த புன்னகைச் சிரிப்பு என்பதை ‘ஃபதபஸ்ஸம ளாஹிகன் மின் கவ்லிஹா’ (அதன் சொல்லைக் கேட்டு அவர் புன்னகை கொண்டு சிரித்தார்) என்னும் சொற்றொடர் காட்டுகிறது.

சுலைமான் நபி அந்த எறும்பு பேசியதைக் கேட்டார்கள் என்பது அவர்களுக்கு இறைவன் வழங்கியிருந்த இரண்டு அற்புதங்களைக் காட்டுகிறது. ஒன்று அத்தனைப் படைப் பரிவாரங்களின் ஓசைகளுக்கு இடையிலும் அந்த எறும்பின் குரலை அவர்கள் கேட்டது அவர்களின் கேட்கும் சக்தியைக் காட்டுகிறது. இரண்டாவது, அவர்கள் அந்த எறும்பின் மொழியைப் புரிந்து கொண்டது. இந்த ஆற்றலும் ஞானமும் சுலைமான் நபியின் பெற்றோர்களுக்கும் வழங்கப் பட்டிருந்தது என்பதை ”நிஃமதக்கல்லதீ அன்அம்த அலய்ய வ அலா வாலிதய்ய” (நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருளிய கொடைகள்) என்று அவர் செய்த பிரார்த்தனையால் விளங்கும்.

இந்த அருட்கொடை பற்றி அல்லாஹ் இப்படிச் சொல்கிறான்:
“தாவூதுக்கும் சுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: ‘புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன்தான்
இறைவிசுவாசிகளான தன் நல்லாடியார்களில் அநேகரை விட நம்மை மேன்மை ஆக்கினான்’ என்று கூறினார்கள்.” (27:15)

தாவூத் நபியும் சுலைமான் நபியும் அரசர்களாக இருந்தவர்கள். ஆனால் அவர்கள் பிறரை விடவும் மேன்மை அடைந்தது அந்த அரசாட்சிகளால் அல்ல, இறைவன் அவர்களுக்கு வழங்கிய ஞானத்தினால்தான் என்று இத்திருவசனம் காட்டுகிறது. இறைவனிடத்தில் மேன்மை அடைவது செல்வங்களால் அல்ல, அவனைப் பற்றிய ஞானத்தால்தான்.

நபி (ஸல்) அவர்களின் அருள்மொழி ஒன்று இக்கருத்தினை வலியுறுத்துகிறது: “அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள் ஆவர். இறைத்தூதர்கள் திர்ஹம்களையும் தீனார்களையும் சொத்துக்களாக விட்டுச் செல்வதில்லை, ஆனால் ஞானத்தையே (தம் சொத்தாக வழங்கிச் செல்கிறார்கள்)” (அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரலி), நூற்கள்: அபூதாவூத், திர்மிதி)

”அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும் ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றை எல்லாம் அவருக்குக் கற்பித்தான்” (வ ஆதாஹுல்லாஹுல் முல்க வல் ஹிக்மத்த வ அல்லமஹு மிம்மா யஷாஉ -2:251) என்னும் திருவசனம் இருவகையான சொத்துக்களையும் சுட்டுகிறது. ஆனால் இறைவன் விரும்புவது ஞானத்தைதான் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.

“பின்னர் சுலைமான் தாவூதின் வாரிசானார்” (வ வரஸ சுலைமானு தாவூத – 27:16). வெளிப்படையான அரசாட்சியை சுலைமான் நபி தன் தந்தையிடம் இருந்து அடைந்திருந்தாலும் ’வாரிசானார்’ என்பதன் தாத்பரியம் ஞானத்தின் வாரிசு என்பதுதான்.

ஏனெனில், எதிலும் இறைவனையே நோக்கும் ஞான அகப்பார்வை (இஹ்சான் – முஷாஹதா) தாவூத் நபியிடமும் சுலைமான் நபியிடமும் இருந்தது. தாவூத் (அலை) அவர்களைப் பற்றி, “வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைப்பீராக. நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார்” (வத்குர் அப்தனா தாவூத தல் ஐதி; இன்னஹூ அவ்வாபுன் -38:17) என்று சொல்லும் அல்லாஹ் பின்னர் சுலைமான் நபியைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்: “மேலும், தாவூதுக்கு சுலைமானைக் கொடையாக வழங்கினோம். (சுலைமான்) சிறந்த அடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்” (வ வஹப்னா லிதாவூத சுலைமான்; நிஃமல் அப்து; இன்னஹூ அவ்வாபுன் -38:30)

ஞானம் வழங்கப்பட்டதும் அவ்விருவரும் “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே” என்று புகழ்ந்தாக இத்திருவசனம் (27:15) சொல்கிறது. ஞானத்தின் அடையாளம் இறைவனைப் புகழ்வதாகும். இந்த ஞானத்தைக் கொண்டுதான் ஞான நூலான திருக்குர்ஆன் ஆரம்பமாகிறது! ”அல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்” - “அகில உலகங்களின் ரட்சகனான அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்” (1:1)

“எறும்புகள்” (அந்-நம்ல்) என்று தலைப்பிடப் பட்டிருக்கும் இந்த அத்தியாயத்தில் வரும் இந்த இரண்டாம் பகுதி (ருகூஃ) சுலைமான் நபிக்கும் ‘ஸபா’ நாட்டின் அரசியான பல்கீஸுக்கும் இடையில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கூறுவதுதான். கூர்ந்து கவனித்தால் இந்த ராணி எறும்பு அந்த பல்கீஸ் ராணிக்கு ஒரு குறியீடாக அமைந்திருப்பதைக் காணலாம்.


பல்கீஸ் அரசியைப் பற்றி சுலைமான் நபியிடம் முதலில் அறிவிப்புச் செய்தது ஒரு ஹுத்ஹுத் (HOOPOE) பறவை ஆகும். அது சுலைமான் நபியின் செல்லப் பறவை. தாவூத் நபியும் சுலைமான் நபியும் பெற்றிருந்த ஞானக்கொடை யாது என்பதை மேற்கண்ட திருவசனத்திற்கு அடுத்த வசனம் சொல்கிறது:

“பின்னர் சுலைமான் தாவூதின் வாரிசானார். அவர் கூறினார், ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கிறது. மேலும், நாங்கள் எல்லாவிதப் பொருள்களில் இருந்தும் கொடுக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருட்கொடை ஆகும்.’” (27:16) [இவ்வசனத்தில் வரும் ‘மன்திக்கத் தைர்’ (பறவைகளின் பாஷை) என்பதைத்தான் சூஃபி ஞானக்கவி ஃபரீதுத்தீன் அத்தார் (ரஹ்) தன்னுடைய பரிபாஷைக் காவியத்திற்குப் பெயராகச் சூட்டியிருக்கிறார்.]

தாவூத் நபிக்கு இறைவன் மலைகளையும் பறவைகளையும் வசமாக்கிக் கொடுத்திருந்தான். எதற்காக? அவை அவர்களுடன் சேர்ந்து இறைத்துதி செய்வதற்காக. இறைவனின் கட்டளை இவ்வாறு இருந்தது: “மலைகளே! அவருடன் நீங்களும் எதிரொலியுங்கள். பறவைகளே! (நீங்களும்)” (யா ஜிபாலு அவ்விபீ மஅஹு வத்தைர – 34:10)

இதன் தாத்பரியம் என்ன? மலைகளும் பறவைகளும் தாவூத் நபியுடன் இணைந்து இறைவனை தியானம் செய்ய வேண்டுமே அன்றி அவற்றுடன் அவர்கள் சேரும்படிச் சொல்லப்படவில்லை. நம்மை விட ஆன்மிக நிலையில் உயர்ந்தவர்களுடன் நாம் இணைந்து இறைவனை தியானிப்பதுதான் இறைவனுக்கு உவப்பானதாகும்.

தாவூத் நபியுடன் இணைந்ததால் அந்தப் பறவைகள் எத்தகைய உயர்வைப் பெற்றன என்பதைத் திருக்குர்ஆன் சொல்கிறது: “மேலும் பறவைகளை ஒன்று திரட்டி (வழங்கினோம்) அனைத்தும் அவனையே நோக்குபவையாக இருந்தன” (வத்தைர மஹ்ஷூரத்தன்; குல்லுன் லஹூ அவ்வாபுன் -38:19)

அதாவது, தாவூத் நபி மற்றும் சுலைமான் நபியைக் குறித்துச் சொன்ன ‘அவ்வாபுன்’ என்னும் அதே சொல்லைக் கொண்டு இந்தப் பறவைகளை அல்லாஹ் வருணித்துள்ளான். தாவூத் (அலை) அவர்களின் சகவாசத்தின் பயனாக அவற்றிற்கும் இறைவனை நோக்கும் அகப்பார்வை அருளப்பட்டது!

(தொடரும்) 

1 comment: