Sunday, August 19, 2012

பேப்பர் கப்




பேப்பர் கப் ஒன்றினைக் கையில் வைத்துக் கொண்டு விளையாடியிருந்தான் மகன். மூன்றாம் வகுப்பு பயிலும் மூளையில் ஒரு குறுகுறுப்பு. எல்லோரையும் ஒரு கேள்வி கேட்டுக் கிண்டல் செய்து கொண்டிருந்தான். என்னிடமும் கேட்டான்: “இது கப்பா? பேப்பர் கப்பா?” நான் “பேப்பர் கப்” என்று சொன்னேன். உடனே சிரித்துக் கொண்டே கேட்டான்: “கப் இங்க இருக்கு. பேப்பர் எங்கே இருக்கு?”

மாற்றியும் கேட்கலாம்: “பேப்பர் இங்கே இருக்கு; கப் எங்கே இருக்கு?” இது அவரவர் பார்வையில் எது படுகிறது என்பதைப் பொருத்த விஷயம். ‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்’ என்னும் அதே தத்துவம்தான். ’மரத்தை மறைத்தது மதயானை. மரத்தில் மறைந்தது மதயானை’ – திருமூலர் கையாளும் உவமை.

சிரிப்போடு போய்விடும் விஷயம் அல்ல இது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனுடைய இந்தக் கேள்வியின் மூலம் எது என்று நான் அறியேன். அவனுக்கே தோன்றியதோ, யாராவது சொல்லிக் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால் இந்தக் கேள்வி மிக ஆழமான தத்துவம் ஒன்றினை விளக்க எழுந்த கேள்வி; சூஃபிகளின் சிந்தனை மரபில் உள்ள கேள்வி. இதே கேள்வியை ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள் ’ஸ்டீல் டப்பி’யை முன் வைத்துக் கேட்பார்கள் என்பதை நினைவு கூர்ந்தேன்.

’பேப்பர் எங்கே இருக்கிறது?’ கப் எங்கே இருக்கிறதோ அங்கேயேதான் பேப்பர் இருக்கிறது. பேப்பரை விட்டுப் பேப்பர் கப் பிரிவதற்கு வாய்ப்பே இல்லை. எனினும் பேப்பர் என்பது கப் அல்ல. கப் என்பது பேப்பர் அல்ல. பேப்பர் ஒருபோதும் கப்பாக மாறிவிடாது. கப் ஒருபோதும் பேப்பராக மாறிவிடாது. பேப்பர் பேப்பர்தான்; கப் கப்தான்.

இதே போல் ஸ்டீல் டப்பியை வைத்தும் விளக்கலாம். நீங்களே சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள். “ஸ்டீல் எங்கே இருக்கிறது?” டப்பி எங்கே இருக்கிறதோ அங்கேயேதான் ஸ்டீல் இருக்கிறது… சிந்தனையைத் தொடருங்கள்.

இந்த இடத்திலேயே பலருக்கும் தலை சுற்றிவிடுகிறது, என்ன செய்ய? “பேப்பர் ஒருபோதும் கப்பாக மாறிவிடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியென்றால் பேப்பரில் கப்பே செய்ய முடியாது என்றல்லவா அர்த்தப்படும்? பேப்பர்தான் கப்பாக மாறியிருக்கிறதே? அதனால்தானே பேப்பர்-கப் கிடைத்திருக்கிறது?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.


ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள் சொல்லும் ஒரு கருத்து இங்கே நியாபகம் வருகிறது: “ஞானம் இல்லாதவன் ஸ்டீலை டப்பியாக்கி விடுவான், டப்பியை ஸ்டீலாக்கி விடுவான்.”
கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். பேப்பர் கப்பாக மாறிவிட்டது என்றால் அங்கே பேப்பர் இருக்கக் கூடாது. கப் மட்டும்தான் இருக்க வேண்டும். அல்லது கப் பேப்பராக மாறிவிட்டது என்றால் அங்கே கப் இருக்கக்கூடாது பேப்பர் மட்டும்தான் இருக்க வேண்டும்.

பேப்பர் ஒருபோதும் கப் ஆகிவிடாது என்னும் நிலையும் கப் ஒருபோதும் பேப்பர் ஆகிவிடாது என்னும் நிலையும் இருப்பதால்தான் பேப்பர் கப் என்பதே சாத்தியமாகிறது.
உவமையை மட்டுமே சொல்லிக்கொண்டு போகிறோம், உவமேயத்தையும் சொல்லி விடுவோம். பரம்பொருளும் படைப்பும் – ஹக்கும் ஃகல்க்கும். (ஓர் எச்சரிக்கை: இந்த உவமைகள் முற்றுவமைகள் அல்ல. அதாவது உவமையின் எல்லா அம்சங்களையும் உவமேயத்தின் மீது பொருத்திப் பார்க்கக் கூடாது. இவை பிலா தஷ்பீஹ் – ஒப்புமை இன்றிக் கூறப்படுகின்றன என்பதை நினைவில் நிறுத்தவும்.)

இதே விஷயத்தை முன்பு ஒருமுறை தங்கநகை என்பதை வைத்து விளக்கியிருக்கிறேன். அது ஜோய் அலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ், எல்கேஎஸ்... எந்தக் கடையின் தங்க நகையாக இருந்தாலும் இதுதான் விதி. ஆனால் இதில் செய்கூலி இல்லை சேதாரம் இல்லை. 24 காரட் தங்கம் – அதாவது இருபத்துநான்கு மணிநேரமும் இதே நிலைதான். மாறவே முடியாது.

இதே கருத்தை நெல்லிக்குப்பம் அப்துர் ரஹ்மான் அவர்கள் இரும்பு வாள் என்னும் உவமையை வைத்து விளக்கியுள்ளதையும் விரிவாகவே முன்பு பார்த்திருக்கிறோம்

.
என் குருநாதர் அல்லாமா பிலாலி ஷாஹ் ஜுஹூரி அவர்கள் இதே கருத்தை பல உவமைகளால் விளக்கியிருக்கிறார்கள்:
“தகரப் பெட்டி என்று சொல்கிறோம். தகரம் ஜாம்ஷெட்பூரில் மட்டுமா இருக்கிறது? தகரப் பெட்டியில் தகரம் இல்லாவிட்டால் அது தகரப் பெட்டி ஆகுமா?
தங்க மோதிரம் என்று சொல்கிறோம். தங்கம் கோலாரில் மட்டுமா இருக்கிறது? தங்க மோதிரத்தில் தகரம் இல்லாவிட்டால் அது தங்க மோதிரம் ஆகுமா?
மண்-பானை என்று சொல்கிறோம். மண் பூமியில் மட்டுமா இருக்கிறது? மண்-பானையில் மண் இல்லாவிட்டால் அது மண்-பானை ஆகுமா?
அப்துல்லாஹ் என்று சொல்கிறோம். அல்லாஹ் அர்ஷில் மட்டுமா இருக்கிறான்? அப்துல்லாஹ்வில் அல்லாஹ் இல்லாவிட்டால் அவன் அப்துல்லாஹ் ஆவானா?”

ஆக, ஹக் –ஃகல்க், பரம்பொருளும் படைப்பும் உள்ள உறவுநிலை என்ன என்பதை விளக்கும் தத்துவப் பார்வைகள் இவை.


பேப்பர் ஒருபோதும் கப் ஆகிவிடாது. கப் ஒருபோதும் பேப்பர் ஆகிவிடாது.
இறைவன் ஒருபோதும் படைப்பாகிவிட மாட்டான். படைப்பு ஒருபோதும் இறைவன் ஆகிவிடாது.

“அர்றப்பு றப்புன் வயின் தனஸ்ஸல் – அல் அப்து அப்துன் வயின் தரக்கா”
(எத்தனை இறங்கிடினும் இறைவன் இறைவன்தான்; எத்தனை உயர்ந்திடினும் அடிமை அடிமைதான்.) என்கிறார்கள் இப்னுல் அரபி (ரஹ்).

பேப்பரில் கப் தெரிகிறது. அதனால் கப்பில் பேப்பரும் தெரிகிறது.
பரம்பொருளில் படைப்பு தெரிகிறது. அதனால் படைப்பில் பரம்பொருளும் தெரிகிறது.

பேப்பர்தான் கப்பைக் காட்டிக்கொண்டுள்ளது. கப் பேப்பரைக் காட்டிக் கொண்டில்லை.
பரம்பொருள்தான் படைப்பைக் காட்டிக் கொண்டுள்ளது. படைப்பு பரம்பொருளைக் காட்டிக் கொண்டில்லை.

கப் பேப்பரைக் காட்டவும் முடியாது மறைக்கவும் முடியாது.
படைப்பு பரம்பொருளைக் காட்டவும் முடியாது மறைக்கவும் முடியாது.

பேப்பர் தன்னைத் தானே காட்டிக் கொண்டு தான் அல்லாத கப் என்பதையும் தன்னில் காட்டிக் கொண்டிருக்கிறது. பரம்பொருள் தன்னைத் தானே காட்டிக் கொண்டு தான் அல்லாத கப்பையும் தன்னில் காட்டிக் கொண்டிருக்கிறது.

கப்பில் பேப்பர்தான் வெளிப்பட்டுள்ளது. கப்பில் பேப்பர் அன்றி வேறு எதுவும் வெளிப்படவில்லை. படைப்பில் பரம்பொருள்தான் வெளிப்பட்டுள்ளது. படைப்பில் பரம்பொருள் அன்றி வேறு எதுவும் வெளிப்படவில்லை.
ஏனெனில், கப்பின் மூலப்பொருள் பேப்பர் மட்டுமே. படைப்புக்களின் மூலப்பொருள் இறைவன் மட்டுமே.

பேப்பர் என்பது கப் உருவாவதற்கு முன்பே இருந்தது. கப் உருவான பின்பும் இருக்கிறது. கப் அழிந்த பின்னும் இருக்கும். (கப் என்னும் ரூபம் மாற்றப் பட்டுவிட்டாலும் பேப்பர் இருக்கும்). பரம்பொருள் படைப்புக்கள் உருவாவதற்கு முன்பே இருந்தது, படைப்புக்கள் உருவான பின்னும் இருக்கிறது, படைப்புக்கள் மறைந்த பின்னும் இருக்கும்.

இந்த இடத்தில் திருமூலரின் கருத்தை வைத்து ஒரு சிந்தனை:
மரத்தில் மறைந்தது மதயானை. ஆம், மதயானை வேறு எங்கும் மறைய முடியாது. அது தன்னைக் காட்டிக் கொண்டிருந்த மரத்தில்தான் மறைய முடியும்.
பரம்பொருளில்தான் படைப்பு மறைய முடியும்.


சுயத்தைக் கவனித்து இரண்டு பொருள்கள் உள்ளன:
(உவமை:) சுயமாக உள்ளமை கொண்ட பேப்பர் மற்றும் சுயவுள்ளமை இல்லாத கப்.
(உவமேயம்:) சுய உள்ளமை கொண்ட பரம்போருள் மற்றும் சுயவுள்ளமை இல்லாத படைப்பு.

சுயவுள்ளமை இல்லாத படைப்பு என்பதாவது இல்லாமை என்னும் சுயம் உடையது (தாத்தெ அதம்). அதாவது, பரம்பொருளின் உள்ளமையை சார்ந்து இருப்பது.

எனவே, பேப்பர் என்னும் சுயத்திற்கு அதுவே உள்ளமையாகவும் இருக்கிறது. ஆனால் கப் என்னும் சுயத்திற்கு அதற்கேயான உள்ளமை இல்லாமல் அது பேப்பரின் உள்ளமையைச் சார்ந்தே இருக்கிறது.

பரம்பொருள் என்னும் சுயத்திற்கு அதுவே உள்ளமையாகவும் இருக்கிறது. ஆனால் படைப்பு என்னும் சுயத்திற்கு அதற்கேயான உள்ளமை இல்லாமல் அது பரம்பொருளின் உள்ளமையைச் சார்ந்தே இருக்கிறது.

படைப்புக்கள் உருவாகும் முன்பே பரம்பொருள் இருந்ததால் அதன் சுயம் பூர்விகமானது (தாத்தெ கிதம்.)
படைப்புக்களுக்குச் சுயமான உள்ளமை இல்லாததால் அது இல்லாமைச் சுயம் எனப்படுகிறது (தாத்தெ அதம்)
உள்ளமை – உஜூது – EXISTENCE என்பதைக் கவனித்து ஒரே பொருள்தான் உள்ளது. பரம்பொருள் மட்டுமே உள்ளது.

“உள்ளது ஒன்று மற்றது அன்று” என்று சொல்லப்படுவது உள்ளமையைக் கவனித்துத்தானே அன்றி சுயங்களின் கவனிப்பில் அல்ல. எனவே அது படைப்புக்களை மறுப்பதாக ஆகாது.

”லைச ஃபில் உஜூதி இல்லா ஹுவ” என்று இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் சொன்னது இந்த அடிப்படையில்தான். இதுவே வஹ்தத்துல் உஜூது என்னும் தத்துவஞானம்.

திருக்கலிமாவிற்கு உள்ளமையின் பார்வையிலான விளக்கமும் இதுவே: “லா மௌஜூத இல்லல்லாஹ்” – உள்ளது இல்லை அல்லாஹ்வைத் தவிர.


படைப்புக்களுக்குத் தனியே உள்ளமை உண்டு என்று விளங்கினால் எத்தனைப் படைப்போ அத்தனை உள்ளமைகள் என்று ஆகிறது. அந்தப் படைப்பு அழியும்போது அதன் உள்ளமையும் அழிந்துவிடுகிறது என்றாகிறது. உள்ளமை என்பதன் பண்பையே இது கேள்விக்குரியதாக்கி விடுகிறது. உள்ளமை ஒருபோதும் இல்லாமை ஆகாது. இல்லாமை ஒருபோதும் உள்ளமை ஆகாது.

அந்தப் படைப்பு இருந்த ஒருசில காலத்திற்கேனும் அது இறைவனுக்குப் புறம்பான உள்ளமையாக இருந்தது என்றாகும் பட்சத்தில் அந்தக் காலகட்டத்தில், உள்ளமையைக் கவனித்து (ப இஃதிபாரெ உஜூத்), ’ஷிர்க்’ என்னும் இணைவைப்பைக் கொண்டுவந்து விடுகிறது. இது ஒருபோதும் உண்டாக முடியாத நிலையாகும். அதாவது ஷிர்க் என்பது எதார்த்தத்தில் ஒருபோதும் உண்டாகவே முடியாது. ஒரு நுண்கண்ம் (ஆன்) கூட இறைவனுக்கு இணை உண்டாவது சாத்தியமில்லை.

இப்படியிருக்க, இறைவனுக்கும் படைப்புக்கும் தனித்தனியே உஜூது (உள்ளமை) உண்டு என்று சொல்வதுதான் ஏகத்துவம் என்று சொல்வது அபத்தமான பிதற்றல்தான்.

உஜூது ஒன்றே என்று சொன்னவுடன் ”அப்படியானால் படைப்புக்கள் எல்லாம் இறைவன் என்று சொல்லி இணைவைக்கிறீர்களா?” என்று கேட்கிறார்கள். புத்திப் பிசகைப் பாருங்கள். உஜூதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் இவர்க்ளின் சிந்தனை தாத்தின் (சுயம்) பக்கம் தாவிவிடுகிறது.

இறைவனின் சுயம் மட்டுமே உள்ளது படைப்புக்களின் சுயம் என்று எதுவும் கிடையாது என்று சொன்னால் அதில் குஃப்ர் - நிராகரிப்பு உண்டாகும்.

இறைவனின் சுயமும் படைப்பின் சுயமும் ஒன்றுதான் என்று சொன்னால் அதில் ஷிர்க் இணைவைப்பு உண்டாகும்.

சுயத்தைக் கவனித்துப் படைப்பு என்பது படைத்தவனுக்கு அல்லதாக (ghair கைர்) இருக்கிறது.

உள்ளமையைக் கவனித்து பரம்பொருள் படைப்புக்கு ஒன்றியதாக (ஐன்) இருக்கிறது.

உள்ளமை என்பது பரம்பொருளுக்கும் படைப்புக்கும் தனித்தனியே இருக்கிறது என்று சொன்னால் இறைவனின் உள்ளமை பூரணமானதல்ல என்னும் குறை ஏற்படும். இறைவனின் உள்ளமையோ பூரணமானதாக (உஜூதெ முத்லக்) இருக்கிறது.

உஜூது ஒன்று. அது இறைவனது மட்டுமே. இதுவே ஏகத்துவம்.

(குறிப்பு: எந்த நீர்? என்னும் தலைப்பில் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களில் சையத் என்னும் சகோதரர் சில கேள்விகளை எழுப்பித் தன் கருத்துக்களையும் கூறியுள்ளார். சிந்தனையைத் தூண்டும் பின்னூட்டமாக இருந்தது. ”Chapter 2 Verse 255 அவனே உயிருள்ளவன் என்று சொல்வதாக நான் கருதவில்லை...” என்று தொடங்கி அவரின் கருத்துக்களை எழுதியிருக்கிறார். அதற்குப் பதில் கூற நினைத்து தட்ட ஆரம்பித்தேன். முன்னூட்டமாக இந்தக் கட்டுரை அமைந்துவிட்டது.)

1 comment:

  1. குதித்தது தவளை
    கலங்கியது நிலவு
    பிம்பம் ஒருநாளும்
    மூலம் ஆவதில்லை

    ReplyDelete