Tuesday, February 21, 2012

பேர் மறந்த பாடல்




திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடக்கும் அரசுப் பொருட்காட்சிக்கு உறவினர்களோடு நேற்று சென்றிருந்தேன். ஸ்பீக்கரில் ஏதோவொரு திரைப்பாடல் அலறியபடி வரவேற்றது. கேளிக்கை என்பதைத் தாரக மந்திரமாக வைத்து மக்களை ஈக்கூட்டம் போல் ஈர்க்கும் இது போன்ற நிகழ்ச்சிகளில் நேரப் படுகொலைதான் நேர்கிறது என்பது என் அனுபவம்.

கப் அன் சாசரில் அமர்ந்து சுற்றோ சுற்றென்று சுற்றிவிட்டு, பக்கவாட்டிலும் மேலும் கீழுமாகவும் ஓடுகின்ற படகில் ’பணயம்’ செய்துவிட்டு, பிள்ளைகளை ட்ராகன் ரயிலில் வழியனுப்பிப் பின்னர் வரவேற்று அழைத்துவந்து பஞ்சு மிட்டாய், பாப்கான், பானிபூரி போன்றவை வாங்கிச் சுவைத்துக் கொண்டிருந்தபோது ஸ்பீக்கரில் ஆரம்பித்த ஒரு பாடலின் வரிகள் என் கவனத்தைக் கவர்ந்தது. பாடலின் இசையம்சங்களைப் பற்றி எழுதுவதற்கு இங்கே இடமில்லை.

வழக்கமான காதல் பாடலாகத்தான் இதுவும் இருக்க வேண்டும். நாயகனின் மீதான காதலால் உருகும் ஒரு நாயகியின் அவஸ்த்தைகளைக் கூறும் இன்னொரு பாடல்தான் இதுவும் என்பதைத் தவிர புதிதான விஷயம் ஏதுமில்லை. ஆனால் நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது, உலகிலேயே மிகப் பழமையான ஒரு விஷயம்தான் எத்தனைப் புதுமையாக இருக்கிறது! மனிதக் காதலின் நிலையில் அமைந்த பாடலாக இருந்தாலும் கேட்கும்போது என் மனம் தானாக இறைக்காதலை நோக்கி நழுவிச் சென்றுவிடும். நாயக நாயகி பாவனை (BRIDAL MYSTICISM) அமைந்த இலக்கியங்களில் உள்ள பயிற்சியால் இது என்னில் இயல்பாகவே நிகழ்ந்துவிடும். பாடல் காட்சிகள் ஆன்மிகப் பயிற்சிக்குப் பெரிய தடையாக அமைந்துவிடும் என்பதால் பல வருடங்களாகவே பாடலின் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்த்து வருகிறேன். பொதுவாகவே இசையை ரசிப்பவர்கள் அதை முழுமையாக உள்வாங்குவதற்காகக் கண்களை மூடிக்கொள்வார்கள் அல்லவா?


காதலின் அர்த்த பாவங்கள்தான் எத்தனை வினோதமானவைகளாகவும் நுட்பமானவைகளாகவும் இருக்கின்றன என்று எண்ணி வியப்பாக இருந்தது.
‘இது காதலின் பாதை…
ஒவ்வொரு காலடி வைப்பிலும்
ஆயிரம் கண்ணிகள் உள்ளன’
என்று யாரோ ஒரு சூஃபிக் கவிஞர் பாடியிருப்பதாக நினைவு வந்தது. இறைவனின் மீதான காதல் பற்றி அவர் இப்படிச் சொல்லியிருந்தாலும் லௌகீகத்தையும் சேர்த்துப் பொதுவான நிலைக்கும் பொருந்துவதாகவே இருக்கிறது. அப்படிப் பொருந்துவதால்தான் மனிதக் காதலை வைத்து இறைக்காதலைப் பேச முடிகிறது. மனிதக் காதல் என்பதே இறைக்காதலின் நிழல்தான் என்று சூஃபிகள் கூறுகின்றனர். இதை எண்ணிப் பார்த்தாலும் மிகவும் ஆச்சரியமாகவே உணர்கிறேன்.

”அழகுதான் எவ்வளவு அதிகமாகி விட்டது
அவள் இன்னும் எளிமையானதில் இருந்து”
என்கிறார் உருதுக் கவிஞர் ஹசன் அப்பாஸி.

இந்தக் காதல் இருக்கிறதே
என்ன சொல்வது?
மலிந்து பொதுவாகும்
அபூர்வப் பொருள் அது
என்கிறார் உருதுக் கவிஞர் ஃபக்ரா பதூல்.

லைலா-மஜ்னூன் போன்ற காதல் காவியங்களால் மனித மனத்தின் ஆழங்களைத் துழாவித் துழாவி ஆதார உணர்வு என்று கண்டறிந்து சொன்ன கவிஞர்கள் தங்கள் காதலர்களைச் சித்தரித்துள்ள விதத்தில் ஓர் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். அதாவது சமூக அளவீடுகளில் உள்ள ஏற்றத் தாழ்வில் அவர்கள் இருப்பார்கள். காதலி இளவரசி என்றால் காதலன் சாதாரணமான பிரஜையாக இருப்பான். இப்படி ஏதாவது ஒரு வேறுபாடு இருந்தால் அது காதலின் தீவிரத்தை உணர்த்துவதற்கான கருவாகிவிடும் என்பது ஓர் உத்தி. ஏனெனில் அந்த வேறுபாடு பல எதிர்ப்புக்களையும் சிக்கல்களையும் தடைகளையும் உருவாக்கும். அதை மீறிக் காதல் செயல்படுவதாகக் காட்டப்படும். இதுபோன்ற கதைகளில் பெரும்பாலும் காதலர்கள் தம் காதலுக்காகச் செத்துப் போவார்கள். அதாவது அமர காதலர்கள் ஆகிவிடுவார்கள்!


நான்கு வருடங்களுக்கு முன் TWILIGHT என்று ஓர் ஆங்கிலப் படம் வந்தது. வந்து நான்கு வருடங்கள் கழித்துத்தான் அதை நான் பார்த்தேன். அதில் இந்த வேறுபாடு மிக வித்தியாசமாகக் காட்டப்பட்டிருந்தது. அதாவது, மனித இனத்து யுவதிக்கும் ரத்தக் காட்டேரி (vampire) இனத்து யுவனுக்கும் காதல்! இதில் ஓநாய் இனத்து யுவன் ஒருவன் உள்ளே புகுந்து முக்கோணம் போடுகிறான். இப்படி ஒரு கற்பனைக் கதை அது. மனிதர்களின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை ஊடுறுவிப் பார்க்கும் ஆற்றல் கொண்ட அந்தக் காட்டேரி இளைஞன் தன் கல்லூரிக்குப் பயில வரும் பெல்லா என்பவள் மீது காதல் வயப்படுகிறான். அவளுடைய உள்ளத்தில் களங்கமான எந்தச் சிந்தனையும் இல்லாத காரணத்தால்! ரத்தக் காட்டேரிகளுக்கு மனித ரத்தம் என்றால் கோடையில் தாகம் தணிக்கக் கிடைத்த குளிர் இளநீர் போல! குருதி குடிக்க அவனுள் எழும் மிருக இச்சையை அவள் மீது அவன் கொண்ட தூய காதல் கட்டுப்படுத்திச் செல்கிறது என்பது உளவியல் ரீதியாக எவ்வளவு அருமையான விஷயம்!  

இதில் நான் சிந்தித்துக் கொண்டது வேறு விஷயம். ’வேறுபாடுகள் காதலை மிகவும் தீவிரமாக்கும் என்றால் இறைக்காதல் எத்தனைத் தீவிரமாக இருக்கவேண்டும்’ என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். மனிதன் இறைவனைக் காதலிப்பது என்பது சாத்தியம்தானா? சாத்தியம் எனறால் எப்படி? இது பற்றி சூஃபிகள் சொன்ன பல கருத்துக்கள் என் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. படம் அது போக்கில் டி.வி.யில் ஓடிக்கொண்டிருந்தது.

என் மனத்தின் சிந்தனைப் போக்கு இப்படித்தான். மெகா சீரியலாகவே இருந்தாலும் இதுதான் அதன் நிலை. லௌகீகத்தின் ஏதோ ஒரு கீற்றில் தெய்விகத்திற்கான சன்னல் இருப்பது தெரிந்தாலும் அதைத் திறந்து வேறு உலகை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடுவேன். சட்டென்று மனம் உள்ளே திரும்பிக்கொள்ளும். அதன்பின் கண்ணின் பாவையில் வெளியே இருந்து விழும் பிம்பங்கள் வெறுமனே சுவரில் விழும் வெய்யில்தான்.மேற்படி அரசுப் பொருட்காட்சியில் கேட்ட பாடலும் அப்படித்தான் மனதை உள்முகமாகத் திருப்பிவிட்டது.


காதலனுக்காக மருகிக் கரையும் ஒரு பெண் என்னும் குறிப்பே இறைவனுக்காகக் காதலில் கரையும் உள்ளம் என்பதை நினைத்துக்கொள்ளப் போதுமானதாக இருக்கிறது. முதலில் அந்தப் பாடலில் இருந்த பக்தி இலக்கியச் சாயல்தான் என்னைக் கவர்ந்தது. சட்டென்று சில வரிகளையும் அடையாளம் காணமுடிந்தது. தாமரைதான் இப்படியெல்லாம் எழுதுவார் என்று நான் நினைத்த அந்தப் பாடலை யாரோ விவேகா என்ற கவிஞர் எழுதியிருக்கிறார்.

“மாயம் செய்தாயோ – நெஞ்சைக்
காயம் செய்தாயோ    
கொல்ல வந்தாயோ – பதில்
சொல்ல வந்தாயோ?
வாரிச் சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை
கேட்டு நின்றேன் உன்னை”
என்பது பாடலின் பல்லவி. காதில் விழுந்தவுடனே ஆண்டாளின் பாசுர வரிகள்தான் ஞாபகம் வந்தன:
“பெய்யும் மாமுகில் போல் வண்ணா
      உன்றன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம்
      மாய மந்திரம்தான் கொலோ”

தொடர்ந்து பெரியாழ்வாரின் வரிகள் நினைவு வந்தன:
“கொத்தார் பூங்குழல் கன்னி ஒருத்தியைச்
சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தாரக் கொங்கை புணர்ந்து இரா நாழிகை
      மூவேழு சென்றபின் வந்தாய்”

இந்த வரிகள் என்ன சொல்லவருகிறது என்பது பலருக்கும் புரிவதில்லை. இவ்வரிகள்  வளர்ந்தவர்களுக்கானது, ஆன்மிகத்தில்! ஆழ்நிலை தியானத்தில் தன்னிலை இழந்து கிடப்பதை இவ்வரிகள் உணர்த்துவதாகவே நான் விளங்கிக் கொள்கிறேன். இத்தகைய நிலையை யோகிகள் ‘சமாதி’ என்றும் சூஃபிகள் ‘இஸ்திக்ராக்’ அல்லது ‘ஃபனா’ என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையை நாமாக உண்டாக்கிக் கொள்ள முடியாது. பயிற்சிகள் ஒருபக்கம் உள்ளன என்றாலும் இறை நாட்டம் யார்மீது அருள்கிறதோ அவர்களுக்குத்தான் இந்த நிலை லபிக்கும். இதுதான் இவ்வரிகள் நாயக நாயகிப் பாவிகம் கொண்டு உணர்த்தும் செய்தி. சோலை என்று சொல்லப்படுவது அகவுலகைக் குறிக்கும். இத்தியாதி விளக்கங்கள் இங்கு தேவை இல்லை, இத்தனை போதும்.

பல்லவியைத் தொடர்ந்து வந்த முதலாம் சரணத்திலும் இந்தக் கருத்துக்களே இருந்தன. அந்தச் சரணம் இது:
“நானே செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன்
காதல் கரை புரண்டு ஓடப் பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரைக் கோர்த்தேன்
மின்விசிறிக் கண்விசிறி வெகு தூரம் விழுந்தேன்
என் பேரை நான் மறந்து கல் போலக் கிடந்தேன்”

ஒட்டுமொத்த சரணமும் காதலில் ’நான்’ என்னும் அகம்பாவம் அழிதல் பற்றிய உணர்வுகளையே வெளிப்படுத்துகிறது. நான் என்னும் சுயாதீனம் வளர்ந்து முற்றிய நிலையை முதல் வரி சொல்கிறது. காதலில் அது அழிந்து முடிந்த நிலையை இரண்டாம் வரி சொல்கிறது. ‘யானை வந்து போன சோலை’ என்னும் உவமை எவ்வளவு அழகாகக் காதலின் வலிமையையும் அதனிடம் அகப்பட்ட அகத்தின் மெலிவையும் சொல்லிவிடுகிறது! தன்னிடம் எள்ளளவும் சக்தி இல்லை என்றுணரும் இந்த மெலிவே பக்தியின் ஆதார சுருதி எனலாம். அப்படி உணராமல் சரணாகதி சாத்தியமில்லை. காதலில் அது மிக எளிதாக நிகழ்ந்துவிடுகிறது.

சுயபாவம் காதலில் அழிவதைச் சொல்லும் இன்னும் இரண்டு வரிகளும் நினைவு வந்தன. இரண்டுமே ’கண்சிவந்த கவிஞன்’ வைரமுத்து எழுதியவை.
”பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும் பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது”
என்பதும்,
“சூரியன் வந்து வா எனும்போது
என்ன செய்யும் பனியின் துளி?”
என்பதும் காதலின்முன் தான் சக்தி ஏதுமற்று சரணடையும் நிலையைச் சொல்பவையே அல்லவா?

”தூண்டில் முள் நுனியில் உயிரைக் கோர்த்தேன்” என்னும் வரிகூட கேட்டவுடன் பாரதியைத்தான் ஞாபகமூட்டியது. ‘கண்ணன் என் காதலன்’ என்னும் தலைப்பில் ஒரு பெண்ணின் காதல் அவஸ்த்தைகளை அவன் பாடுகிறான்:
“தூண்டிற் புழுவினைப் போல் – வெளியே
      சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக – எனது
      நெஞ்சம் துடித்ததடி
கூண்டுக் கிளியினைப் போல் – தனிமை
      கொண்டு மிகவும் நொந்தேன்
வேண்டும் பொருளை எல்லாம் – மனது
      வெறுத்து விட்டதடீ”

’என் பேரை நான் மறந்து கல் போலக் கிடந்தேன்’ என்னும் வரிகளைக் கேட்டதும் முதலில் வாலி எழுதிய வரிகள்தான் ஞாபகம் வந்தன:
“மீன் விழுந்த கண்ணில்
நான் விழுந்தேன் அன்பே
ஊர் மறந்து எந்தன்
பேர் மறந்தேன் அன்பே”
பிறகு சட்டென்று இந்த வரிகளுக்கும் மூலமாக இருக்கக்கூடுமாய் நான் விளங்கி வைத்திருக்கும் அப்பரின் தேவாரப் பாசுர வரிகள் நினைவில் எழுந்தன:
“தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே”

”தன்னை மறந்தாள்” என்பது சரி. அது என்ன ‘தன் நாமம் கெட்டாள்’? என்று கேட்டுப் பார்ப்போம். தன்னை மறந்திருக்கும் ஒருவரிடம் ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்டால் அவர் தன் பெயரைச் சொல்ல முடியுமா? ஒருவர் தன் பெயரைச் சொல்கிறார் என்றாலே அவர் தன்னை மறக்கவில்லை என்றுதானே அர்த்தம்? தன்னை மறந்த ஒருவர் தன் பெயரைச் சொல்லமாட்டார். எதன் நினைவில் மூழ்கித் தன்னை மறந்தாரோ அதன் பெயரை அவர் சொல்லக்கூடும் அல்லவா?


லைலா-மஜ்னூன் காவியத்தில் வரும் ஒரு காட்சி: சூரியன் சுட்டெரித்துக் கிடக்கும் பாலைவனத்தில் அலங்கோலமான மஜ்னூன் கால்கள் பின்னப் பின்ன நடந்து வருகிறான், ‘லைலா லைலா’ என்று தன் காதலியின் பெயரைப் புலம்பிக்கொண்டே. அப்போது தொழுகைப் பாயை விரித்து அதில் தொழுது கொண்டு நிற்கும் ஒருவரின் குறுக்கே சென்றுவிடுகிறான். இதனால் தன் கவனம் சிதறிப்போன அவர் மஜ்னூனைப் பிடித்து நிற்கவைத்துத் திட்டுகிறார். அவரைப் பார்த்து மஜ்னூன் சொல்கிறான், “மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா, நான் என் காதலியின் நினைவில் என்னையே மறந்திருந்தேன். இறைவனின் நினைவில் உங்களையே மறந்திருக்க வேண்டிய நீங்கள் என்னை எப்படிக் கவனித்தீர்கள்?”

இந்தக் காட்சியை வைத்து கவிக்கோ அப்துல் ரகுமான் ஒரு உரையாடலைத் தீட்டினார். ரத்தினச் சுருக்கமான அந்த உரையாடல் ‘தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்’ என்று அப்பர் பாடிய நிலையைக் காட்டுகிறது. அது இது:
மஜ்னூனைப் பார்த்து ஒருவன் கேட்கிறான், ‘உன் பெயர் என்ன?’
மஜ்னூன் சொல்கிறான், “லைலா!”

சூஃபி ஞானி மன்சூர் அல்-ஹல்லாஜ் எந்த இறைக்காதல் நிலையில் ‘அனல் ஹக்’ என்று சொன்னாரோ அந்த நிலையை இந்தக் காட்சி மனிதக் காதலை வைத்து உணர்த்திவிடுகிறது.

Saturday, February 18, 2012

வலிய தீன்




“இஸ்லாம் ஒரு மதமல்ல. அது ஒரு மார்க்கம்.”

“இப்படிச் சொல்றவங்களுக்கு மதம்னாலும் என்னன்னு தெரியல மார்க்கம்னாலும் என்னன்னு தெரியல. இப்படிச் சொல்றதுல ஒரு கவர்ச்சி, ஈகோவுக்கு ஒரு சுகம் இருக்கிறதுனால சிந்திக்காம இதைச் சொல்லிக்கிட்டிருக்காங்க. இதுல உள்ள அபத்தமே அவங்களுக்கு உரைக்கிறதில்ல. இது ஒருவிதமான போதை மாத்திரை.”

“என்ன இப்புடிச் சொல்லிப்புட்டீங்க. இதுல என்னத்த அபத்தம் இருக்குங்கிறீங்க?”

“இதையே சில பேரு வேறு மாதிரியாவும் சொல்றாங்க. அதாவது ‘இஸ்லாம் மற்ற மதங்களை மாதிரி ஒரு மதமல்ல. அது ஒரு மார்க்கம்’னு சொல்றாங்க. அது இன்னும் அபத்தமான வாக்கியம்.”

“இப்படியே பேசிக்கிட்டுப் போனா எப்புடி. இதுல என்ன அபத்தம் இருக்குன்னு சொல்லுங்க.”
“மதம்னு ஒரு வார்த்தை. மார்க்கம்னு ஒரு வார்த்தை. இது இரண்டும் என்ன மொழி வார்த்தைக, இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?”

“இது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே? இரண்டும் தமிழ் வார்த்தைக. மதம்னா இறைவழிபாடுங்கற மாதிரியான விசயம். மார்க்கம்னா வாழ்க்கை வழின்னு அர்த்தம்”

“நீங்க சொல்றமாதிரிதான் பலரும் நெனக்கிறாங்க. புழக்கத்துல தமிழ்ல இருக்கிறதுனால ஒரு வார்த்தை தமிழ் வார்த்தை ஆகிடாது. மூல மொழி எது, அதுக்கு மூல மொழியில என்ன அர்த்தம்னு பார்க்கணும். அரபின்னா மட்டும் அகராதியை அலசி அர்த்தம் பேசுற ஆளுக மத்த மொழி வார்த்தைகன்னா மட்டும் புழக்க பாஷையில கழட்டுவாங்களாக்கும். தெரிஞ்சுக்கங்க, மதம்-மார்க்கம் இரண்டு வார்த்தையுமே தமிழ் இல்ல. சமஸ்கிருதம்.”

“அ…? அப்படியா?”

“மதம் என்ற வார்த்தைக்கு கொள்கை என்று அர்த்தம். மார்க்கம் என்ற வார்த்தைக்குப் பாதை என்று அர்த்தம். அப்படீன்னா, ‘இஸ்லாம் ஒரு மதமல்ல. அது ஒரு மார்க்கம்’ என்று சொல்றதுக்கு என்ன அர்த்தம் வருதுன்னு பாத்துக்கங்க. ‘இஸ்லாம் ஒரு கொள்கையல்ல, அது ஒரு பாதை’ன்னு அர்த்தம் வரும். இது சரியா? அதாவது ‘இஸ்லாம் கொள்கை இல்லாத ஒரு பாதை’ன்னு அர்த்தமாவுது. இது சரியா? ஏகத்துவம் என்ற கொள்கை இஸ்லாத்தில் இருக்குதில்லியா? அப்ப அது ஏகத்துவ மதம்தானே? இஸ்லாம் என்பது ஏகத்துவ மதமும் மார்க்கமும் ஆகும் என்று சொல்வதுதான் சரி. அதாவது மதமும் (கொள்கை) இருக்கு, அதைச் செயல்படுத்த மார்க்கமும் (வழியும்) இருக்குங்கறதுதான் சரி.”

“ஆமாங்க”

“இன்னும் சில பேர் ‘இஸ்லாம் மற்ற மதங்களைப் போல் ஒரு மதம் இல்லை. அது ஒரு மார்க்கம்’னு சொல்லிக்கிட்டிருக்காங்க. ஒரு எக்ஸ்க்லூசிவான வார்த்தை வேணும்கிற நெனப்பு. மற்றவை வெறும் மதம்தான், அவையெல்லாம் மார்க்கம் அல்ல என்பதாகவும், இஸ்லாம் மதமல்ல அது ஒரு மார்க்கம் என்பதாகவும் இவுங்களா முடிவு பண்ணிக்கிட்டாங்க. எந்த மேதாவி இப்படியெல்லாம் கண்டுபிடிச்சான்னு தெரியல.”

“அப்படீன்னா எல்லா மதமும் ஒன்னுதான்னு சொல்றீங்களா?”

“நிச்சயமா இல்லை. ஒவ்வொரு மதமும் வேறு வேறுதான். அது அதுக்குன்னு கொள்கை இருக்கு. பல கொள்கைகள் இருக்கலாம். கொள்கைகளைச் செயல்படுத்த முறைகளும் இருக்கு. அதனால ஒவ்வொன்றுமே மதமும் மார்க்கமும்தான். செயல்பாடுகள் இல்லாத ஒரு மதத்தையாவது உங்களால் சொல்ல முடியுமா?”

“முடியாது”

“அப்புறம் ஏன் மற்றவை மார்க்கம் அல்ல என்று சொல்றீங்க? வண்டி ஓடுதுன்னா அது பாதைதானே? அது பாதை அல்ல என்று எப்படிச் சொல்ல முடியும்? அது கரடுமுரடான சேறும்சகதியுமான குண்டும் குழியுமான பாதையா இருக்கலாம், அல்லது ஒற்றையடிப் பாதையாகவும் இருக்கலாம். அது போய்ச் சேருமிடம் மோசமானதாக இருக்கலாம். எப்படியிருந்தாலும் அது பாதைன்னுதான் சொல்லப்படும்.”

“அப்படீன்னா எல்லாத்துக்கும் ஒரே பேருதான்னு சொல்றீங்களா?”


“’லகும் தீனுக்கும் வலிய தீன்’ (உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு மார்க்கம்- திருக்குர்ஆன் 109:6) என்ற திருவசனத்தை நீங்கள் ஓதியதில்லையா? இரண்டுக்கும் தீன் என்ற ஒரே வார்த்தைதான் சொல்லப்படுது. இரண்டையும் குறிக்க ஒரே வார்த்தையைச் சொல்வதாலேயே இந்த தீனும் அந்த தீனும் ஒன்றாகிவிடாது. அடைமொழிதான் மாறுதே, அப்புறம் என்ன குழப்பம்? ’தீனுல் இஸ்லாம்’ அப்படீன்னு அடைமொழி வைத்துச் சொல்லிக்கிறம்ல. ஆனால் குறிப்பிடும்போது இந்து மதம், புத்த மதம், இஸ்லாம் மதம்னு ஒரே வார்த்தையைப் பயன்படுத்தலாம். மார்க்கம்னு சொன்னாலும் சரி. சமயம்னு சொன்னாலும் சரி. இதுல இன்னொரு விஷயத்தைக் கவனிச்சீங்களா?”

“என்ன விஷயம்?”

“’லகும் தீனுக்கும் வலிய தீன்’ என்ற ஆயத்துல ரெண்டையுமே குறிக்க தீன் என்ற ஒரே வார்த்தைதான் சொல்லப்படுது. இந்த ஆயத்துக்கு என்ன அர்த்தம்?”

“உங்க தீன் உங்களுக்கு. எங்க தீன் எங்களுக்கு.”

“ஆயத்தை நல்லா கவனிங்க. எங்க தீனுன்னா இருக்கு? ’வலனா தீன்’ அப்படீன்னா இருக்கு?”

“இல்லிங்க. ‘உங்க தீன் உங்களுக்கு, என் தீன் எனக்கு’ன்னு இருக்கு”

“இன்னும் நல்லா கவனிங்க. ’தீனீ - என் தீன்’ அப்படீன்னா இருக்கு?”

“இல்லிங்க. ‘வலிய தீன்’ – ’எனக்கு தீன்’ என்றுதான் இருக்கு”

“’லகும் தீனுக்கும்’ உங்க தீன் உங்களுக்குன்னு பன்மையில சொன்னதிலும், ’வ லிய’ – மேலும் எனக்கு என்று ஒருமையில் சொன்னதிலும், தீன் என்று பெயர்ச்சொல்லை மட்டும் சொன்னதிலும் என்ன தாத்பரியங்கள் இருக்குன்னு யோசிங்க. இன்னொரு விஷயத்தை கவனிச்சீங்களா?”

“இன்னொன்னா? அது என்னான்னு சொல்லுங்க.”

“இரண்டையுமே தீன் என்று ஒரே வார்த்தையாலதான் குறிக்கப்பட்டிருக்கு. ஆனாலும் இது வேறு அது வேறுங்கறதைத்தான் அந்த திருவசனம் உணர்த்துது. ஆனாலும் இரண்டுக்கும் ஒரே வார்த்தைதான் சொல்லப்படுது. இதுல சிந்தனை செஞ்சிருக்கீங்களா?”

“இல்லிங்க. நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல. லகும் தீனுக்கும்னு சொன்னது காஃபிர்களோட மதத்தை. வ லிய தீன்னு சொன்னது இஸ்லாத்தை. ரெண்டும் வேறு வேறுன்னு தெரிஞ்சுப் போச்சு. இதுக்கு மேல சிந்திக்க இதுல என்ன இருக்கு?”

“இப்படிச் சொல்றது மடத்தனம் இல்லியா? சிந்திக்க இதுக்கு மேல விஷயம் இல்லேன்னு சொல்லி நிறுத்திக்க அல்லாஹ்வோட கலாம் அவ்வளவு லேசாப்போச்சா? இனிமேல் எப்பவும் இதுமாதிரி நெனக்காதீங்க. எவ்வளவு புரிஞ்சாலும் ஒவ்வொரு வசனத்திலும் மேலும் நாம புரிஞ்சுக்க வேண்டிய உள்ளர்த்தங்கள் இருந்துக்கிட்டே இருக்கும். கவனிங்க.”

“என்னத்த கவனிக்கனும்னு நீங்களேதான் சொல்லுங்க”

“உதாரணமா ஒரு வரி சொல்றேன். ‘மல்கோவா மாம்பழம் உங்களுக்கு, ஹிமாம்பசந்த் மாம்பழம் எனக்கு.’ இந்த வரில உங்களுக்கு என்ன வெளங்குது?”

“இரண்டு வகை மாம்பழம் கையில இருக்குன்னு வெளங்குது”

“சரிதான். மல்கோவா வேறு, ஹிமாம்பசந்த் வேறுன்னு வெளங்குதில்லியா?”

“ஆமாம்”

“இப்ப இன்னொரு வரி சொல்றேன். ‘ஆப்பிள் உங்களுக்கு, மாம்பழம் எனக்கு’. இதுல என்ன வெளங்குது?”

“இதுவும் அதே மாதிரிதான் இருக்கு. ஆப்பிள் வேறு, மாம்பழம் வேறுன்னு வெளங்குது”

“சரிதான். இரண்டும் வேறுதான். ஆனால் நான் சொன்ன ரெண்டு உதாரண வரிகள்லயும் ஒரு வேறுபாடு இருக்கே, அது தெரியலியா?”

“முன்னது ரெண்டுமே மாம்பழம். அனால் பின்னதுல ரெண்டும் வேறு வேறு பழங்க”

“நல்லது. புரிஞ்சுக்கிட்டீங்க. மல்கோவா வேறு ஹிமாம்பசந்த் வேறுதான். மல்கோவா ஹிமாம்பசந்த் அல்ல, ஹிமாம்பசந்த் மல்கோவா அல்ல. ஆனால் இரண்டுமே மாம்பழம்தான். இது முதல் உதாரணத்துக்கு வெளக்கம். ஆப்பிள் வேறு, மாம்பழம் வேறுதான். ஆப்பிள் மாம்பழம் அல்ல, மாம்பழம் ஆப்பிள் அல்ல. ரெண்டுமே ஒரே வகைப் பழமும் அல்ல. இது ரெண்டாவது உதாரணத்தின் வெளக்கம். இப்ப விஷயத்துக்கு வருவோம். கூர்ந்து கவனிங்க. இந்த இரண்டு உதாரணத்துல ‘லகும் தீனுக்கும் வலியதீன்’ற ஆயத்தோட அமைப்புல இருக்கிற வரி எது?"

“கவனிக்கிறேங்க…ஆங், முதல்ல சொன்ன உதாரணம். ஏன்னா ரெண்டுமே மாம்பழம்தான். அது மாதிரி இதுல ரெண்டு தீனும் வேறு வேறா இருந்தாலும் ரெண்டுமே தீன் என்ற வார்த்தைலதான் சொல்லப்படுது”

“மல்கோவாவும் ஹிமாம்பசந்தும் வேறு வேறுதான். ஆனால் இரண்டுமே மாம்பழம்தான் அல்லவா? அப்படீன்னா மாம்பழம்னு சொல்றதுக்கான இலக்கணம் இரண்டுக்குமே அமைஞ்சிருக்கும் இல்லியா? அது என்ன? இரண்டும் வேறுபடுதுன்னா அது எப்படி?”

“ரெண்டுக்கும் டேஸ்ட் வேறுபடும். நிறம், வடிவம் இதெல்லாம் வேறுபடும்…”

“வெலயும் வேறுபடும்”

“ஹிஹ்ஹிஹி…”

“ரெண்டுமே மாம்பழம்தான்னு சொல்றதுக்கு ரெண்டுக்கும் ஒப்புமையும் இருக்கும். மேல தோல், உள்ளே சதை, அதுக்குள்ள கொட்டைங்கற அமைப்பு. ஒத்தைக் கொட்டைதான் இருக்கும், ஆரஞ்சுக்காட்டம் நெறயா வெதைங்க இருக்காது. ரெண்டுக்குமே தோலு வழவழன்னுதான் இருக்கும், பலாப்பழம் மாதிரி முள்ளு வச்ச தோலு இருக்காது. சதையும் ஒரு பத்தா இருக்கும். சாத்துக்குடி மாதிரி சுளையா இருக்காது. இப்படிப் பல ஒப்புமையும் இருக்கிறதுனாலதான் ரெண்டுமே மாம்பழம்னு சொல்ல முடியுது. இப்ப சொல்லுங்க, ’லகும் தீனுக்கும் வலிய தீன்’ என்று சொல்லும்போது ரெண்டுமே வேற வேற தீன்கள் என்றாலும் இரண்டும் தீன் என்ற பொது அடிப்படையில் ஒப்புமை அம்சஙகள் எவை? யோசிங்க…”

”இதெலலாம் நெதானமா யோசிக்கணுமுங்க”

“நல்லது. நான் முதல்ல சொன்ன உதாரண வரிதான் ஆயத்தோட வாக்கிய அமைப்புக்கு ஒத்து வருதுன்னு நீங்க சொன்னதுனால நான் அதை வச்சி பேசினேன். ஆனால் நான் சொன்ன ரெண்டாவது உதாரண வரிதான் ஆயத்தோட வாக்கிய அமைப்புக்கு ஒத்து வரும். அதாவது ‘ஆப்பிள் உங்களுக்கு, மாம்பழம் எனக்கு’ன்ற வாசகம்.”

“அது எப்படி? இதுல பொதுவான ஒரு வார்த்தையே இல்லியே? தீன்னு ஒரு பொதுவார்த்தை ஆயத்துல இருக்கிற மாதிரி இதுல பழம்னு ஒரு பொது வார்த்தை இருக்கலாமால்லியா?”

“அதான் நீங்களே சொல்லிட்டீங்களே. இதையே வேறு மாதிரி சொல்லணும்னா ’உங்களுக்கு உங்கள் பழம், எனக்குப் பழம்’னு சொல்லலாம் இல்லியா?”

“ஆமாம்”

“இப்ப சொல்லுங்க, ’உங்கள் பழம்’ என்பது என்ன?”

“?????”

“உங்க தோட்டத்துல வெளஞ்ச பழம்தான். உங்களுக்கு உங்கள் தோட்டத்தில் விளைந்த பழம். இதுல என்ன வெளங்குது”

“அவனுக்குன்னு ஒரு தோட்டம் இருக்குன்னு”

“நல்லது. ’எனக்கு என் பழம்’னு, அதாவது ’என் தோட்டத்து பழம்’னு சொல்ல முடியலன்னா என்ன அர்த்தம்?”

“எனக்குன்னு தோட்டம் இல்லேன்னு அர்த்தம்”

“’உங்களுக்கு உங்கள் தீன்’ என்பதற்கு என்ன அர்த்தம்?”

“அவங்களே உருவாக்கிக்கிட்ட தீன் என்று அர்த்தம்”

“வெரிகுட். ‘எனக்கு என் தீன்’னு நபி ஏன் சொல்லல”

“ஏன்னா தீன் நபி உருவாக்குனதல்ல”

“புரிஞ்சுக்கிட்டீங்க, தீனுல் இஸ்லாம் நபி தன் சுய இச்சையால் உருவாக்குன மதமல்ல. அதுனாலதான் ‘எனக்கு என் தீன்’ என்று ஆயத்தில் இல்லாமல், ’எனக்கு தீன்’ என்று மட்டும் இருக்கு. இதுலயும் ஒரு ஆழமான கருத்து இருக்கு. தெரியுதுங்களா?”

”ஆழமான கருத்தா? அப்ப அத நீங்கதான் வெளக்கணும்”

“நல்லது, கவனிங்க. மாம்பழத்துக்கும் பழத்துக்கும் என்ன வித்தியாசம்னு சொல்லுங்க”

“இது என்னங்க கேள்வி? மாம்பழத்துக்கும் ஆப்பிளுக்கும் என்ன வித்தியாசம்னு மொதல்ல கேட்டீங்க, நியாயம். மல்கோவாவுக்கும் ஹிமாம்பசந்துக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டீங்க, நியாயம். காய்க்கும் பழத்துக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டாலாவது அதுல ஒரு அர்த்தம் இருக்கு, பதில் சொல்லலாம். மாம்பழத்துக்கும் பழத்துக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டால் என்ன அர்த்தம்? கேள்வியே வெளங்க மாட்டேங்குதே?”

“கேள்விய உன்னிப்பாக் கவனிச்சுப் பாக்கணும். மேலோட்டமாப் பாக்குறீங்க நீங்க. கேள்வியோட அமைப்பைப் பாருங்க, ‘மாம்பழத்துக்கும் பழத்துக்கும் என்ன வித்தியாசம்?’”

“??????”

“இன்னொரு கேள்வி. கத்திரிக்காய்க்கும் காய்க்கும் என்ன வித்தியாசம்? இன்னொன்னு: கோதுமைக்கும் தானியத்துக்கும் என்ன வித்தியாசம்? இன்னொன்னு: மங்கோலியனுக்கும் மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?”

“என்னங்க இது, மங்கோலியன் மனுஷன் இல்லியா?.... அட இப்ப புடிபடுதுங்க. முன்னதுலாம் பின்னதோட ஒரு வகைங்க. பழத்தோட ஒரு வகை மாம்பழம். காயோட ஒரு வகை கத்திரி. தானியத்துல ஒருவகை கோதுமை. மனுஷன்ல ஒரு வகை மங்கோலி.”

“வெரிகுட். அதாவது TYPE AND PROTOTYPE. இப்ப ’லகும் தீனுக்கும் வலிய தீன்’ங்கற ஆயத் அமைப்பைப் பாருங்க. ’தீனுக்கும் – உங்களுடைய தீன்’ அப்படீன்னா அது type. ’தீன்’ என்பது prototype. அதாவது முன்னது குறிப்பானது, வகைப்பட்டது. பின்னது குறிப்பில்லாதது, பொதுமையானது. இந்த இடத்துல கொஞ்சம் எச்சரிக்கையாப் புரிஞ்சுக்கங்க. மார்க்கத்தோட வெளிக்கோலத்தைப் பற்றி நாம இப்போ பேசிக்கிட்டில்ல. தீனுடைய அடிப்படைய பத்திப் பேசுறோம். அது என்ன?”

‘சொல்லுங்க”

“’அவ்வலுத் தீனி மஃரிஃபத்துல்லாஹ்’. அதாவது, இறைவனை அறிவதுதான் தீன். அதாவது, இறைவனை அவனுக்குரிய தன்மைகள்ல அறிவது. ‘மா ஃகலக்துல் ஜின்ன வல் இன்ச இல்லா லியஃபுதூன்’ – ’ஜின்களையும் மனுஷனையும் எனக்கு இபாதத் (அடிமைத்தனம் - வழிபாடு) செய்வதற்கே அன்றி நான் படைக்கவில்லை’ங்கற ஆயத்துக்கு இப்னு அப்பாஸ்(ரலி) தந்த விளக்கமும் இதுதான், ‘யஃனி இல்லா லியஃரிஃபூன்’ – அதாவது ‘என்னை அறிவதற்கே அன்றி (படைக்கவில்லை)’. இப்ப திரும்பவும் ஆயத்தைப் பாருங்க: ‘லகும் தீனுக்கும் வலிய தீன்’. உங்களுக்கு உங்கள் தீன். அதாவது அவர்கள் எந்த வகையில் இறைவனைக் கற்பனை செய்து கொண்டார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். குறிப்பாகக் கற்பனை செய்துகொண்டார்கள். ’அல்லாஹ் எங்கோ ஒரு இடத்தில் இருக்கிறான், இந்தச் சிலைகள் – ஆலிஹத்துகள் அவனிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும்’னு நெனச்சு அல்லாஹ்வை வணங்கினார்கள். அதாவது அல்லாஹ் இங்கே இல்லைன்னு நெனச்சாங்க. ஒரு இடத்தை அவனுக்கு ஒதுக்கிக் குறிப்பாக்கிட்டாங்க. இப்படிப் பலரும் சிருஷ்டிகளுக்கு உரிய குறிப்புக்களை, அதாவது இடம், உருவம், திசை போன்ற குறிப்புக்களை இறைவனுக்குச் சாட்டி அந்தக் கருத்தில் இறைவனை வணங்கினார்கள். அவர்களுடைய மார்க்கம் அவர்களின் கற்பனையில் உருவானதுதான். ஆனால், ‘தீன் – மார்க்கம்’ என்று குறிப்பில்லாமல் சொல்லப்படுவது இறைவனை சிருஷ்டிகளின் குறிப்புக்களில் இருந்து பரிசுத்தமானவனாகக் காண்பது. தெய்வத்தன்மை (உலூஹிய்யத்) சிருஷ்டித்தன்மைக்கு எதிரிடையானது என்று காண்பது. இறைவன் ஓர் இடத்திலோ, உருவத்திலோ, திசையிலோ கட்டுப்படாதவன் என்று விளங்கி வணங்குவது. அல்லாஹ்வை இடத்திலும் உருவத்திலும் கண்டப்படுத்திய நிலைக்கு குஃப்ர் (மறைத்தல்) என்று பொருள். அதாவது எல்லையற்ற ஒன்றுக்கு எல்லை வகுத்து, கண்டப்படுத்திச் சிந்தனை செய்யும்போது அந்தக் கற்பனையே திரையாகி இறைவனை உனக்கு மறைத்து விடுகிறது. அப்படிப்பட்டவன் இறைவனைப் பற்றிய தன் தவறான கற்பனையை வணங்குபவனே அன்றி இறைவனை வணங்குபவன் அல்ல. அதனால்தான் காஃபிர்களைப் பார்த்து ‘லகும் தீனுக்கும்’ – உங்களுக்கு நீங்களே கற்பனையில் உருவாக்கிக் கொண்ட மார்க்கம் என்று சொல்லப்பட்டது. அவர்கள் கற்பனையில் வைத்திருந்த அல்லாஹ்வை, அதாவது குறிப்பாக்கிக் கொள்ளப்பட்ட அல்லாஹ்வை, தங்கள் கற்பனை பிரகாரம் இதுதான் அல்லாஹ் என்று அவர்கள் நினைத்து வணங்கி வருவதை நபி வணங்கமாட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது: ’லா அஃபுது மா தஃபுதூன்; வலா அன்தும் ஆபிதூன மா அஃபுது’ – நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன்; இன்னும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்ல (திருக்குர்ஆன் 109:2,3) ஏனெனில் நபிகள் நாயத்தின் காலத்திலான அறபிகளும் அல்லாஹ்வை ஏற்றே இருந்தார்கள் என்பதைக் குர்ஆன் சொல்கிறது (10:31; 23:86,87; 29:61; 43:9 முதலிய திருவசனங்கள்). ஆனால் அவர்கள் அல்லாஹ்வை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டுண்டவனாகக் கற்பனை செய்து வைத்திருந்தார்கள். அல்லாஹ் எப்படியாக இல்லையோ அப்படியாக அவனைக் கற்பனை செய்து வைத்திருந்தார்கள். எனவே தங்கள் கருத்துக்களால்- கற்பனைகளால் அவர்கள் காஃபிர்கள் (மறைப்பவர்கள்) ஆனார்கள். அல்லாஹ்வை ஒரு இடத்தில் மட்டும் இருப்பவனாக, ஓர் உருவம் உள்ளவனாக எவன் நினைக்கிறானோ அவன் சிருஷ்டித் தன்மையை இறைவன்மீது கற்பனை செய்தவன் ஆவான். அப்படியான இறைக்கொள்கை வைத்து வணங்குபவன் காஃபிர்தான். அல்லாஹ் அர்ஷில் மட்டும்தான் இருக்கிறான் என்று சொல்பவனும் அல்லாஹ்வை ஒரு சிருஷ்டியில் கட்டுண்டவனாகக் கற்பனை செய்யும் இணைவைப்புக் கொள்கையில் உள்ளவன்தான்.”

“ஆஹா… இப்படி நீங்க சொல்றத பாத்தா அல்லாஹ்வைப் பற்றிய தவறான கொள்கைல உள்ளவன் கலிமா சொன்னாலும் அவன் முஸ்லிம் இல்லைன்னுல ஆகுது.”

“இப்ப ஒரு ஆள் இப்படிச் சொல்றான்னு வச்சுக்குவம்: ‘நான் அல்லாஹ்வைத்தான் வணங்குகிறேன். லா இலாஹ இல்லல்லாஹ் என்பதை, அதாவது அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வம் இல்லைன்னு ஒத்துக்கிறேன். அதுதான் என் கொள்கை. ஆனால் அல்லாஹ்வுக்குத் தூக்கமும் மயக்கமும் உண்டு’ அப்புடீன்னு சொல்றான். இவனோட இறைக்கொள்கை தவறானதுதானே? ‘தூக்கமும் மயக்கமும் உள்ள அல்லாஹ்’ அப்படீன்னு ஒரு அல்லாஹ் இருக்கிறதா இவன் கற்பனை பண்றான். அல்லாஹ் இருக்கிறான். ஆனால் இவன் கற்பனை பண்றது மாதிரி ஒரு அல்லாஹ் இல்லை. அதனால இவன், இல்லாத அல்லாஹ்வை வணங்குறான். இருக்கும் அல்லாஹ்வை வணங்க வேண்டும்கிறதுதான் சரியான மார்க்கம். அப்படீன்னா அல்லாஹ் எப்படி இருக்கிறான்னு அறியனும், அதாவது அல்லாஹ்விடம் இருக்கும் தன்மைகள் என்னன்னு அறியணும். இதைத்தான் சுருக்கமா ஒரு வரியில் சொல்லணும்னா ‘சிருஷ்டிகளின் தன்மைகளை விட்டும் பரிசுத்தமானவன்’ என்று சொல்கிறோம். ‘சுப்ஹானல்லதீ அம்மா யஸிஃபூன்’ – அவர்கள் வருணிக்கும் தன்மைகளை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று சொல்லும்போது இறைவன் தன் தன்மைகளாகச் சொல்லிக்கொண்டவற்றை வைத்து நாம் அவனை வருணிப்பதை விட்டும் அவன் நீங்கியவன் என்று பொருள் அல்ல. ஆனால் அதற்கு மாற்றமாக மனிதர்கள் அவன் மீது சாட்டும் அனைத்து வருணிப்புக்களை விட்டும் அவன் நீங்கியவன் என்று அர்த்தம். அதாவது அல்லாஹ் பார்ப்பவன் – பஸீருன் என்று அவனே தன்னுடைய தன்மையைச் சொல்லியிருக்கிறான். இதற்கு மாற்றமாக அல்லாஹ்வுக்குப் பார்வை இல்லை என்று சொல்வது இறைநிராகரிப்பாகும். அந்த வருணனையை விட்டும் அவன் நீங்கியவன். மேலும், அல்லாஹ்வின் பார்வையை சிருஷ்டிகளுக்கு அவன் வழங்கியுள்ள பார்வைகளின் தன்மையில் விளங்கினால், அதாவது அவனுடைய பார்வைக்கு வெளி வெளிச்சம் தேவை என்றோ அவனுடைய பார்வை இவ்வளவு தூரம் வரைதான் எட்டும் என்றோ விளங்கினால் அது இணைவைப்பாகும். அத்தகைய வருணிப்புக்களை விட்டும் அல்லாஹ் பரிசுத்தமானவன். என்ன விளங்கியதா?”

“நல்லா வெளங்குச்சு. அதாவது அல்லாஹ்வே தனக்கு சொல்லிக்கொண்ட பண்புகளை அவனுக்கு இல்லைன்னு சொல்றது இறைநிராகரிப்பு. அவனுக்கு இருக்கிற பண்பை சிருஷ்டிகளின் பண்புகள் போல் விளங்குவது இணைவைப்பு.”

“சரிதான். இன்னும் ஒரு புள்ளி. இறைவனுக்கு இல்லாத பண்புகளை அவனுக்கு இருக்கிறதா கற்பிச்சாலும் அது இணைவைப்புத்தான். அப்படி மக்கள் அவன்மீது கற்பித்துக்கொண்ட பண்புகளைப் பார்த்தா அவையெல்லாம் சிருஷ்டிகளோட பண்புகளா இருக்கிறது புரியும். இதுல உச்சமானது மனிதன் தன்னுடைய பண்புகள்ல இறைவனைக் கற்பனை செய்து கொள்வது. இதை ஆங்கிலத்தில் ANTHROPOMORPHISM என்று சொல்வார்கள். அல்லாஹ்வுக்கு எதார்த்தத்திலேயே உருவமுள்ள முகம், கை, கால் எல்லாம் உண்டுன்னு சொல்ற கொள்கை. இது ‘ஜிஸ்மானிய்யத்’ – இறைவனுக்கு உடல் உண்டுன்னு சொல்ற கொள்கை. அந்த உடலுக்கு உறுப்புக்கள் உண்டுன்னு சொல்ற கொள்கை. இது அல்லாஹ்வை சிருஷ்டி மாதிரியே பாவிக்குதுங்கறது தெளிவாகவே தெரியிதில்லியா? அல்லாஹ் ஒரு இடத்துலதான் இருக்கிறான்னு சொல்றதும் இப்படித்தான், அல்லாஹ் அர்ஷுல மட்டும்தான் இருக்கிறான்னு சிலர் சொல்ற கொள்கை – அல்லாஹ் கால-இடத் தன்மைகளில் கட்டுப்பட்டவன்னு வெளங்குறது -  அந்தக் கொள்கைக்கு ‘முகய்யதா’ன்னு பேரு. இதெல்லாம் அவனை சிருஷ்டித் தன்மையில் கற்பனை செய்யும் தவறான கொள்கைகள்தான். இறைவனை சிருஷ்டித் தன்மைகளை விட்டும் பரிசுத்தமானவன், நீங்கியவன்னு வெளங்க வேண்டியது சரியான இறைக்கொள்கைக்கு அவசியம். இதுக்கு ஒரு பாடம் மாதிரி பத்து விஷயங்கள வச்சு சூஃபியாக்கள் சொல்லித்தர்றாங்க. அதுல ஒரே ஒரு தன்மை இருந்தாலும்கூட அது சிருஷ்டிதான், இறைவனல்ல. அந்தப் பத்து விஷயங்களையும் விட்டு இறைவன் தூய்மையானவன். அவனிடம் அந்தப் பத்து தன்மைகளும் கிடையாது.”

”அந்தப் பத்து தன்மைகள் என்னன்னு சொல்லுங்களேன்”

“லித், நித், ஹுலூல், இத்திஹாத், கமிய்யத், கைஃபிய்யத், தகைய்யுர், தபத்துல், தஜ்ஸிய்யத், தக்ஸீம் ஆகிய பத்துத் தன்மைகள் சிருஷ்டிகளில் காணப்படும். இவை அனைத்தையும் விட்டு இறைவன் பரிசுத்தமானவன். ஒவ்வொன்னா வெளக்குறேன், கவனிங்க.
1.லித் – எதிரிடை (OPPOSITE). அல்லாஹ்வுக்கு எதிரிடை கிடையாது. அதாவது, ஒளிக்கு எதிரிடை இருட்டு, வன்மைக்கு எதிரிடை மென்மை, மேட்டுக்கு எதிரிடை பள்ளம் இப்படியெல்லாம் சிருஷ்டிகளுக்கு இருக்கிறாப்ல உள்ள நிலை அல்லாஹ்வுக்கு இல்லை.
2. நித் – நிகர் (EQUAL). அல்லாஹ்வுக்கு நிகர் என்று எதுவுமில்லை. சிருஷ்டிகளில் ஒன்றுக்கு இன்னொன்று நிகராக இருப்பதுண்டு. இருப்பதற்கான சாத்தியம் உண்டு. ஆனால் அல்லாஹ்வுக்கு நிகர்  இருப்பதற்கான சாத்தியமே இல்லை.
3. ஹுலூல் – உள்ளிருப்பு (TO BE INSIDE (A CAVITY)). தான் அல்லாத இன்னொரு பொருளினுள் இருக்கும் தன்மை. ‘இவருக்குள்/ இதற்குள் அல்லாஹ் வந்துவிட்டான்’ என்று சொல்வது, அதாவது ’இவருக்குள்/ இதற்குள் அல்லாஹ் முழுமையாக அடங்கிவிட்டான் என்று சொல்வது தவறாகும். ஒரு டப்பாவுக்குள் ஆப்பிள் இருப்பது போன்றோ அல்லது ஒரு தட்டில் ஆப்பிள் இருப்பது போன்றோ அல்லாஹ் தானல்லாத ஒன்றில் (கைரில் – அதாவது சிருஷ்டியில்) இருக்கிறான் என்று சொல்வது இணைவைப்பாகும். அந்த சிருஷ்டி அர்ஷு குர்ஸி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் இத்தகைய கொள்கை இணைவைப்புத்தான். இந்த நிலையை அப்படியே மாற்றி, அதாவது அல்லாஹ்வுக்குள் அவனல்லாத ஒன்று உள்ளிருப்பாக இருக்கிறது என்று விளங்குவதும் இணைவைப்புத்தான். அப்போது அல்லாஹ்வுக்குள் அவனல்லாதது இருப்பதற்கு ஒரு வெற்றிடத்தை உருவாக்கிய நிலை வந்துவிடும். அது சிருஷ்டிகளின் நிலையாகும்.
4. இத்திஹாத் – கலத்தல் (PERMEATION). தான் அல்லாத ஒனறில் அல்லாஹ் கலந்துவிட்டான் என்றோ அவனல்லாத ஒன்று அவனில் கலந்துவிட்டது என்றோ விளங்குவது. அதாவது தண்ணீரில் சர்க்கரை கலந்துவிடுவது போல் என்று விளங்குவது. இந்த நிலையும் சிருஷ்டிகளுக்கு உள்ளதாகும்.
5. கம்மிய்யத் – அளவியல் வரையரை (QUANTITATIVE DEFINITION). அல்லாஹ்வை அளவியல் ரீதியான ஒருவன் என்று விளங்குவது. ஏகன்னு விளங்காமல் இருப்பது. அல்லாஹ்வுடைய பண்புகளுக்கு எல்லைகள் (BOUNDARIES, LIMITS) உண்டுன்னு விளங்குவது. அதேபோல் அல்லாஹ்வை எண்ணியல் ரீதியான ஒருவன் என்று பலரும் விளங்கி வச்சிருக்காங்க. இது ஏகத்துவத்துக்கு மாற்றமானது. அதாவது, பலவற்றில் அவனும் ஒன்று என்று விளங்குவது ஏகத்துவத்துக்கு மாற்றமானது. ஏனெனில் பல அல்லாஹ்க்கள் இல்லை. ஆனால் இதை எண்ணியல் ரீதியான ஒருமையாக விளங்கினால் அதுவும் ஏகத்துவத்துக்கு எதிரானது. ஏனெனில் அப்படிப்பட்ட எண்ணியல் ரீதியான ஒருமை சிருஷ்டிகளுக்கு இருக்க முடியும். உதாரணமாக அல்லாஹ் ஒரே ஒரு அர்ஷைத்தான் படைத்தான். அதைத் தவிர வேறு அர்ஷுகள் இல்லை. ஆனால் அதன் ஒருமை எண்ணியல் ஒருமைதான் (NUMERIC ONENESS). அல்லாஹ்வின் ஒருமை இத்தகைய சிருஷ்டியின் ஒருமைத் தன்மையை விட்டும் நீங்கியது என்பதுதான் ஏகத்துவம் – தவ்ஹீத்.
6. கைஃபிய்யத் – பண்பியல் வரையறை (QUANTITATIVE DEFINITION). இறைவனின் பண்புகள் எல்லைகள் இல்லாதவை. அளக்க முடியாதவை என்று விளங்க வேண்டும். அவனுடைய தன்மைகளுக்கு எல்லைகள் உண்டு என்று விளங்குவது சிருஷ்டிகளின் தன்மையில் அவனைக் கற்பனை செய்யும் இணைவைப்பாகும். கைஃபிய்யத் என்பதற்கு HOWNESS என்றொரு அர்த்தமும் உண்டு. அதாவது இறைவனின் நிலைகளை எப்படி என்று விளக்க முடியாது. அவை காரணங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதாம்.
7. தகய்யுர் – (இட) மாற்றம் (ஒப்புமையாக PHYSICAL CHANGE). ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எதார்த்தத்தில் பெயர்வது சிருஷ்டிகளின் தன்மையாகும். அல்லாஹ் இந்த நிலையை விட்டும் பரிசுத்தமானவன்.
8. தபத்துல் – (முழு) மாற்றம் (ஒப்புமையாக CHEMICAL CHANGE). அதாவது ஒரு சிருஷ்டி இன்னொரு சிருஷ்டியாக மாற முடியும். உதாரணமாக, செப்பு தங்கமாக மாறுவது. ஆனால் எந்த சிருஷ்டியும் இறைவனாவதோ அல்லது இறைவன் ஏதேனுமொரு சிருஷ்டியாவதோ இல்லை. அவ்வாறு மாற முடியும் என்பது இணைவைப்பாகும்.
9. தஜ்ஸிய்யா – உடைந்து சிதறுதல் (TO BE QUASHED), பாகங்கள் (ஜுஸ்வு) ஆதல் (TO BE COMPARTMENTALIZED). இறைவன் பல உறுப்புக்கள் கொண்டவன் என்றோ, பாகங்கள் கொண்டவன் என்றோ, இத்தனை பாகங்களால் ஆனவன் என்றோ விளங்குவதை விட்டும் அவன் பரிசுத்தமானவன். இவை சிருஷ்டிகளின் தன்மைகளாகும். இறைவன் வெவ்வேறு மாதிரியான பாகங்கள் (HETEROGENOUS PARTS) கொண்டவன் என்று விளங்குவதும் இணைவைப்புத்தான். (தாவர-விலங்கு-மனித இனங்களில் இந்த அமைப்பு இருக்கிறது). இறைவன் ஒரே மாதிரியான பாகங்கள் (HOMOGENOUS PARTS) கொண்டவன் என்று விளங்கினாலும் இணைவைப்புத்தான். (நட்சத்திர மீன் போன்ற வடிவங்களில் இந்த அமைப்பு இருக்கிறது.)
10. தக்சீம் – வகைப்பாட்டுக்குள்ளாதல் (TO BE CATEGORIZED). இறைவன் இன்ன வகையைச் சேர்ந்தவன் என்று சொல்ல முடியாது. வகைமை என்பது ஒரு பொதுமையை சாத்தியமாக்கும். உதாரணமாக, மல்கோவா என்பது மாம்பழ வகையைச் சார்ந்தது என்னும்போது மாம்பழம் என்னும் பொதுமையும் அதற்கு மேல் பழம் என்னும் பொதுமையும் இருக்கிறது. அல்லது அர்ஷ் போல் ஒரே ஒரு சிருஷ்டி என்றாலும் அதுவும் சிருஷ்டி என்னும் வகைப்பாட்டுக்குள்தான் வரும். அதாவது அர்ஷ் என்பது மட்டுமே சிருஷ்டி என்பதல்ல. பல சிருஷ்டிகள் இருக்கின்றன, அதில் அர்ஷும் ஒன்று. ஆனால் இந்த சிருஷ்டி நிலைகள் இறைவனுக்கு இல்லை. அவன் வகைப்பாட்டுக்கு ஆளானவன் அல்ல.
இந்தப் பத்துத் தன்மைகளும் சிருஷ்டிகளில் காணப்படும். இதில் ஏதாவது ஒன்றில் உட்பட்டாலும் அந்த இறைக்கொள்கை பிழையானது. இவற்றைவிட்டும் நீங்கிய நிலையில் இறைவனை விளங்கிக்கொண்டு அவனுக்கு வழிபாடு செய்ய வேண்டும். இந்தத் தன்மைகளில், அதாவது சிருஷ்டித் தன்மையில் இறைவனை விளங்கிக் கொண்டவன் நபியின் இறைக்கொள்கைக்கு மாற்றமான கொள்கை கொண்டவனாவான். ’லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதுதான் தன் கொள்கை என்று அவன் சொன்னாலும்கூட. அவனிடம் ‘லகும் தீனுக்கும் வலிய தீன்’ என்று சொல்லிவிடலாம். இப்ப இந்த ஆயத்தில் இன்னொரு விளக்கத்தைக் கவனிப்போம்.”

“என்னது இன்னொரு விளக்கமா?”

“பயப்படாதீங்க. ஏற்கனவே ரொம்ப பேசிட்டோம்னு தெரியுது. இந்த ஒரு பாய்ண்ட்ட கேட்டுக்கங்க. இது ஒரு க்ளோசிங் டச் குடுக்கும்”

“சரி சொல்லுங்க”

“சிருஷ்டிக் குறிப்புக்கள்ல கற்பனை செய்துகொள்கிற இறைக்கொள்கை தவறானதுன்னு இவ்வளவு நேரம் வெளக்குனேன். அதாவது, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்னு பெரியார் சொல்றாரில்லியா? அதை இப்படி விளங்கலாம், சிருஷ்டித் தன்மைகள்ல கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்னு. கடவுள்தான் சிருஷ்டிகளைக் கற்பிக்கிறார். கற்பித்தல்னா teaching அல்ல, கற்பனை செய்தல். கடவுளை நீங்கள் கற்பனை செய்தால் உருவம் வந்துதான் நிற்கும். கற்பனை என்றாலே உருவம் இல்லாமல் ஆகாது. அதுனாலதான் இங்லிஷில் அதை imagination-னு சொல்றோம். இமேஜை – உருவத்தைக் கொண்டுவருதல்.”

“அல்லாஹ்வை நாம சொர்க்கத்துல பார்ப்போம்னு ஹதீஸ்ல வருதே? அப்படீன்னா அவனுக்கு உருவம் இருக்குன்னு ஆகாதா?”

“ரொம்ப அழகான கேள்கி கேக்குறீங்க. இதைப் பத்தி அடுத்த செஷன்ல அலசுவோம். இப்ப நான் சொல்ல வந்த விஷயத்தைப் பாப்போம். நான் உங்ககிட்ட காசு கொடுத்து ‘பழம் வாங்கிக்கிட்டு வாங்க’ன்னு சொன்னா என்ன செய்வீங்க?”

“என்ன பழம்னு சொல்லுங்கன்னு கேட்பேன்?”

“சிகப்பா, உருண்டையா இருக்கிற ஆப்பிள் பழம்னு நான் சொன்னா என்ன வாங்கிக்கிட்டு வருவீங்க?”

“அப்படிப்பட்ட ஆப்பிளைத்தான் வாங்கிக்கிட்டு வருவேன்”

“அப்படித்தான், ’லிய தீன்’ – எனக்கு மார்க்கம்னு ஆயத்துல பொதுவாக ‘தீன்’ என்று சொல்லிவிட்டாலும், அதுக்குச் சில குறிப்புக்கள் இருக்கு. அதாவது ஆப்பிள்பழம்னு நான் சொன்னது போல ‘தீனுல் இஸ்லாம்’னு ஒரு பெயரும் சொல்லியாச்சு. ஆனால் அதோட நிறுத்தாம நபி(ஸல்) தீனுக்கு இஸ்லாத்தோட சேத்து இன்னும் இரண்டு குறிப்பையும் கொடுத்திருக்காங்க. அதாவது தீன் என்றால் அதுல இஸ்லாமும் ஈமானும் இஹ்ஸானும் இருக்கணும்னு. இதை விளக்குற ஹதீஸுக்கு ‘ஹதீஸே ஜிப்ரீல்’னு பேரு. அது புகாரிலயும் முஸ்லிம் கிதாபுலயும் இருக்கு. இப்ப பாருங்க, ‘சிகப்பா உருண்டையா இருக்கிற ஆப்பிள்’னு நான் கேட்டப்புறம் நீங்க தக்காளி வாங்கிக்கிட்டு வந்து நின்னு ‘இதுவும் சிகப்பா உருண்டையாத்தான் இருக்கு’ன்னு கொடுத்தீங்கன்னா நான் வாங்கிப்பேனா சொல்லுங்க?”

“வாங்கிக்க மாட்டீங்க”

“ஏன்?”

“ஏன்னா அது சிகப்பா உருண்டையா இருந்தாலும் ஆப்பிள் இல்ல”

“சரி, நீங்க மஞ்சளான சப்பையான ஒரு ஆப்பிள வாங்கிக்கிட்டு வந்தா அதை நான் ஏத்துப்பேனா?”

“மாட்டீங்க. அது ஆப்பிளா இருந்தாலும் நீங்க சொன்ன மாதிரி லட்சணத்துல இல்ல”

“அப்படித்தான் தீனுல் இஸ்லாம்னு சொல்லிக்கிட்டு அதுல ஈமானும் இஹ்ஸானும் இல்லன்னா அது அல்லாஹ்வுக்குப் பிடித்தமான, அவன் எதிர்பார்க்கிற இஸ்லாம் இல்ல. இத கவனத்துல வச்சுக்கங்க.”



Saturday, February 4, 2012

நான் நீ அவன் (தொடர்ச்சி-2)


”எப்பக்கம் நீங்கள் திரும்பினும்
அல்லாஹ்வின் திருமுகம் (உள்ளமை) இருக்கிறது” (2:115)

நடைமுறையில், நாம் திரும்பும் திசையெல்லாம் படைப்புக்கள்தான் தெரிகின்றன; அவற்றைத் தன்னில் இறைவனே காட்டிக் கொண்டிருக்கிறான் என்று சொன்னேன். படைத்தவனில் படைப்புக்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். படைப்புக்களில் படைத்தவனைப் பார்க்கும் பார்வைதான் பெறப்பட வேண்டும்.

இவ்விடத்தில், படைப்புக்கள் படைத்தவனை மறைக்கும் ஆற்றல் உடையவை அல்ல என்னும் கருத்தின்பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்துவோம். ஏனெனில் படைப்புக்கள்தான் தெரிகின்றன, படைத்தவன் காட்சியாகவில்லை என்பதால் ”படைப்புக்கள் இறைவனை மறைக்கின்றன” என்று சொல்வது தர்க்க சாத்தியமான ஒன்றுதானே?

இதற்கான விளக்கத்தை நோக்கிச் செல்ல ஒரு பழமொழியை முதலில் பார்ப்போம்: ‘கல்லைக் கண்டால் நாயைக் காணாம், நாயைக் கண்டால் கல்லைக் காணாம்’! இதற்கு என்ன பொருள்? கல்லிலே செதுக்கப்பட்ட நாயுருவம் ஒன்றுள்ளது. அந்தச் சிலையைப் பார்க்கும் ஒருவன் அது கல்தான் என்று காணும்போது நாய் அவன் சிந்தனையில் தெரிவதில்லை. அது நாய் என்று பார்க்கும்போது கல் அவனின் சிந்தனையில் தெரிவதில்லை. இறைவனும் உலகமும் இப்படித்தான் என்பது கருத்து.


இதே கருத்தைத் திருமூலர் மரத்தால் செய்த யானைச் சிலையை உவமையாக வைத்து விளக்குகிறார்”
“மரத்தை மறைத்தது பார்மத யானை
மரத்தில் மறைந்தது பார்மத யானை
பரத்தை மறைத்தது பார்மத பூதம்
பரத்தில் மறைந்தது பார்மத பூதம்”

யானை என்னும் உருவம் மரத்தை மறைத்தது. பின்பு அது மரத்தில் மறைந்தது. அதுபோல் நீர், நிலம், தீ, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐம்பூதங்கள் இறைவனை மறைத்தன. பின்பு அவை எல்லாம் இறைவனில் மறைந்தன என்பது இப்பாடலின் கருத்து.


ஐம்பூதங்களால் ஆன பிரபஞ்சம் இறைவனை மறைத்தன என்பது நம் சிந்தனையில் மட்டுமே. எதார்த்தத்தில் ஐம்பூதங்கள் என்னும் படைப்புக்களுக்கு இறைவனை மறைக்கும் ஆற்றல் கிடையாது. ஆனால் தன்னை மறைத்துக் கொண்டு படைப்பைக் காட்டும் ஆற்றல் இறைவனுக்கு உண்டு. எனவே சூஃபிகள் ‘இறைவனை உலகம் மறைத்தது’ என்று சொல்லமாட்டார்கள்; ‘உலகைக் கொண்டு அவன் தன்னை மறைத்துக்கொண்டான்’ என்றே சொல்வார்கள். அதாவது, இறைவனை மறைக்கும் ஆற்றல் எந்தவொரு சிருஷ்டிக்கும் இல்லை. ஆனால் சிருஷ்டிகளை வெளிக்காட்டித் தன்னை மறைத்துக்கொள்ளும் ஆற்றல் இறைவனுக்கு உண்டு.

சத்தியப் பொருளாய், ஏகமாய் இருக்கும் இறைவனுக்கும், இல்லாமை என்னும் தன்மை பெற்ற சுயமாய் அவனின் சிந்தனையில் – ஞானப் பூங்காவில் – இருக்கும் சிருஷ்டிகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி நிறையவே பேசிவிட்டோம். ‘இறைவன் மட்டுமே இருக்கிறான். உள்ளமை அவனுடையது மட்டுமே’ என்ற அளவில் பேசிவிடுவதுகூட இலகுவானதுதான். சிருஷ்டிகளின் நிலை என்ன என்பது பற்றி விளங்குவதுதான் சிக்கலானது. சிருஷ்டிகள் இருக்கின்றன என்பது திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் காட்டுகின்ற உண்மை. ஆனால் அவற்றின் எதார்த்தம் (ஹகீகத்) என்ன? அவை எங்கே என்னவாக இருக்கின்றன? என்பன போன்ற விஷயங்களை அறிவதில்தான் பூட்டுக்கள் திறக்கின்றன.

”உள்ளமை ஒன்று; சுயம் இரண்டு” என்பது நான் சார்ந்திருக்கும் சிந்தனைப் பள்ளியின் கொள்கை என்பதாக முன்பே விளக்கினேன். என் சிறிய தந்தையின் மகனான என் தம்பி ஒருவன் சார்ந்திருக்கும் ஒரு சிந்தனைப் பள்ளியின் கொள்கை “உள்ளமை ஒன்று; சுயம் ஒன்று” என்பதாகும். படைப்புக்களின் சுயம் என்பதெல்லாம் எதுவுமில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். அதாவது “இறைவன் மட்டுமே இருக்கிறான், சிருஷ்டிகள் இல்லை” என்பது அவரகளின் விளக்கம்.

ஒரு நாள் அந்தத் தம்பி என்னை உலாப்பேசியில் அழைத்தான். நான் சார்ந்திருக்கும் சிந்தனைப் பள்ளி போலியானது என்று அவர்களின் சிந்தனைப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர் நூலெழுதியிருப்பதாகவும் அது இணையத்தில்கூட வெளியிடப்பட்டுள்ளது என்றும் சொன்னான். நான் அதனை இணையத்தில் படித்தேன். என் குருநாதரையும், என் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த வேறு குருமகான்கள் சிலரையும் தாக்கி எழுதப்பட்ட அந்தச் சிறு நூலில் ‘உள்ளமை ஒன்று சுயம் இரண்டு’ என்னும் கொள்கையும் தவறானது என்று தாக்கப்பட்டிருந்தது. இதைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்று என் தம்பி வினவினான். முக்கால் மணிநேரமாவது உரையாடியிருப்போம்.


பொதுவாக இந்த விஷயங்களில் நான் தர்க்கவாதங்களில் இறங்குவதில்லை. அவரவருக்கு இறைவனின் கருணை என்ன விளக்குகிறதோ அதை அவரவர் விளங்கிக் கொள்வார்கள். இதில் நாம் விளக்குவதால் ஒன்றும் துலங்கிவிடப் போவதில்லை என்று மௌனமாக இருந்துவிடுவேன். என் சிந்தனைப்பள்ளியில் உள்ள சக தோழர்களிடமே பல விஷயங்களில் கருத்துவேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. பேசுந்தோறும் அவை வெளிப்பட்டுத் தெரிய வருகின்றன. இது இயல்பே. ஏனேனில் ஒவ்வொருவரையும் இறைவன் தனித்தன்மையுடன் படைத்திருக்கிறான்.

என் தம்பியின் கொள்கையைச் சார்ந்தவர்களுடன், அதாவது ‘உள்ளமை ஒன்று சுயம் ஒன்று’ என்ற கொள்கையில் இருக்கும் சிலருடன் எனக்கு நட்பு இருக்கிறது. அவர்களில் ஒருவரான அரபிப் பேராசிரியர் ஒருவருடன் இது பற்றிப் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது, ‘படைப்புக்களின் சுயம் என்பதை எப்படி அழைக்கிறீர்கள்?’ என்றார். ‘ஜாத்தே அதம் (இல்லாமைச் சுயம்)’ என்றேன். ‘நீங்களே அதை அதம் (இல்லை) என்று சொல்லிவிட்டீர்களே, இல்லாததைப் பற்றி ஏன் பேச வேண்டும்?’ என்று சொல்லிவிட்டார். நானும் அத்துடன் சிரித்துக்கொண்டே விட்டுவிட்டேன். ‘பேசப்பேசத்தான் ஞானம் நாசமாகும்’ என்று ஒருமுறை அவர் சொன்னார். ‘உனக்குத் தரப்பட்டுள்ள ஞானத்தை மௌனமாக அனுபவி’ என்று அவரின் சக சீடர்களும் என்னிடம் சொன்னதுண்டு. அவர்களின் போக்கினை நான் மதிக்கிறேன். அவர்களுடன் நட்பும் நல்லபடித் தொடர்கிறது.

ஞானம் எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என் புரிதல். ‘அறிவு என்பது இறைநம்பிக்கையாளனின் காணாமல் போன ஒட்டகம். அதை அவன் எங்கே கண்டாலும் பிடித்துக் கொள்ளட்டும்’ என்று நபிகள் நாயகம் சொன்னதற்கேற்ப, பல்சமய ஞானப் பனுவலகளைப் படிக்கும் பழக்கம் எனக்குண்டு. நண்பர் அப்துல் காதிர் பிலாலியும் அப்படிப் பட்டவர்தான். அதனால்தான் பயில்வான் சாகிபின் பல கருத்துக்களில் எமக்கு முரண்பாடு இருந்தும் அவரின் நூலைப் படித்துவிட்டு அதன் மீது சிந்தனையும் செய்து என் போன்றோருடன் கலந்துரையாடவும் செய்கிறார். ‘நாம்தான் இறைவன் என்று அறிந்துகொள்வதுதான் உண்மையான ஈமான் (இறைநம்பிக்கை). நாம் இறைவன் அல்ல என்று என்னுவது அஞ்ஞானம். அது மாயையின் விளைவு. நாம் நம்மை இறைவன் என்று அறிந்த மாத்திரத்தில் அஞ்ஞானம் அகன்றுவிடுகிறது’ என்று பயில்வான் சாகிப் சொல்வது பற்றியும் பேசியிருக்கிறோம்.

என் தம்பியுடன் நடந்த உரையாடலிலும் இந்த விஷயம்தான் அடிப்படையாக அமைந்தது. ’நான் இறைவன் அல்ல, நான் படைப்பு என்று நினைப்பது மாயையால் விளைவது. நானே இறைவன் என்று எண்ணுவதுதான் ஞானம்’ என்று சொல்லப்படுவது பற்றி உரையாடினோம். ஒரு கட்டத்தில் உரையாடல் பின்வருமாறு நகர்ந்தது.

“நான் படைப்புத்தான் என்று எண்ணுவது ஏன் மாயை ஆகிறது?”
“ஏனெனில், இறைவன் மட்டுமே இருக்கிறான், சிருஷ்டிகள் இல்லை. மாயையால் நான் சிருஷ்டி என்று ஒருவன் உணர்கிறான். மாயை அகன்றால், ஞானம் பிறந்தால் தன்னை இறைவன் என்று அவன் உணர்வான்.”
“இந்த மாயை யாரில் ஏற்பட்டுள்ளது?”
“மனிதனில்”
“அதாவது தான் படைப்பு என்று மனிதன் நினைத்துக்கொண்டிருப்பது மாயை”
“ஆம். தன்னை இறைவன் என்று அவன் அறிவதே ஞானம்”
“அதாவது அவன் எப்போதும் இறைவனாகவே இருந்திருக்கிறான், இப்போது மாயையால் தான் இறைவன் அல்ல என்று, இறைவனுக்கு வேறானவன் (கைருல்லாஹ்) என்று நினைக்கிறான்”
“ஆமாம்”
“அப்படியெனில், உங்கள் கொள்கை படிக்கு, மாயை ஏற்பட்டிருப்பது யாருக்கு?”
”மனிதனுக்குத்தான்”
“ஓர் உதாரணம் சொல்கிறேன். ஓர் இளவரசன் தான் ஒரு கோழி என்று நினைக்கிறான். ‘நான் கோழி ஆவேன், நான் இளவரசன் அல்ல’ என்கிறான்.  மந்திரி அவனிடம், ’தம்பி, நீ உண்மையில் கோழி அல்ல, இளவரசன்தான். நீயே இளவரசன் என்று அறி. அதுவே ஞானம். நீ உன்னைக் கோழியாக எண்ணுவது மாயை’ என்று சொல்கிறார். இங்கே, மாயை ஏற்பட்டிருப்பது கோழிக்கா? இளவரசனுக்கா?”
“இளவரசனுக்குத்தான். இல்லாத கோழிக்கு மாயை எப்படி ஏற்படும்”
“தான் கோழி அல்ல இளவரசன்தான் என்று நினைக்க வேண்டியது யார்? கோழியா? இளவரசனா?”
“இளவரசன்தான். கோழிதான் இல்லையே?”
“தான் படைப்பு அல்ல, தான் இறைவனே என்று நினைக்கவேண்டியது யார்? இறைவன்தான். ஏனெனில் படைப்பு என்பதுதான் இல்லையே?”
”அப்படியெனில், உங்கள் கொள்கை படிக்கு, மாயை ஏற்பட்டிருப்பது இறைவனுக்குத்தான் என்றாகிறது! தான் இறைவன் என்று மனிதன் அறிவதே ஞானம் என்றால், இப்போது தான் மனிதன் என்று இறைவனே எண்ணிக் கொண்டிருப்பதாகத்தானே பொருள்படுகிறது? அப்படியானால் இறைவனுக்கு அஞ்ஞானம் சாத்தியம் என்றல்லவா ஆகிவிடும்? அப்படியானால் அவன் பரிபூரணமான அறிவு கொண்டவன் என்பது பொய்யாகிவிடுமே? அஞ்ஞானம் அவனுக்குச் சாத்தியமில்லை என்பது உண்மை எனில், அவன் ஒருபோதும் தன்னை மனிதன் என்றோ படைப்பு என்றோ நினைக்க மாட்டான். எனவே தன்னை மனிதன் என்றும் படைப்பு என்றும் ஒருவன் எண்ணும்போது அவன் நிச்சயமாக இறைவன் அல்ல என்பது உறுதியாகிறது. அவன் தன்னை இறைவன் என்று கருதுவானாகில் அது இணைவைப்பாகும். அது ஞானமல்ல, இறைவனையும் தன்னையும் அறியாத சுத்த அஞ்ஞானமாகும்”

அதற்கு மேல் அந்த விவாதத்தை வளர்க்கவில்லை. என் சிறியதந்தை, சிறியதாயார் ஆகியோரைப் பற்றிய குசல விசாரிப்புக்களுக்குத் திரும்பிவிட்டேன். இதற்கெல்லாம் ஒரு முடிவு இருக்கப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். தர்க்கப் போக்கு நீண்ட தூரம் நம்மைக் கொண்டு சேர்க்காது. தியான அனுபவங்களில் தான் கண்டு அனுபவிக்க வேண்டியவை இவை. பேசிக்கொண்டிருந்த நேரத்திற்கு உருப்படியாகத் தன்னுள் மூழ்கிப் பார்த்திருக்கலாம். அது சால உத்தமம்.