கற்களின் வசீகரம்
குறைந்ததாயில்லை
புற்களின் அழகிற்கொன்றும்
புல்
அவளின் நடனம்
கல்
தியானம்.
உயிரின் அலைவுகளை
தேகமெங்கும் கோடெழுதிக்
கிடக்கின்றன இந்தக்
கல்வனமெங்கும்
ஓடைக்கரை நெடுகில்
நீரின் கல்வெட்டு
கதிரில் கனலுமொரு
பெருங்கல்லின் நிழலில்
தண்ணென்றிருக்குமொரு
சிறிய கல்.
மனதில் மிதப்பதாய்
இருக்குமிந்தக் கற்கள்
கனப்பதாயிருக்கக்கூடும்
கைகளில்
கல்லொலி சொல்லும்
கதைகள் கேட்டபடிக்
காலாற நடந்தேன்
தொடர்வண்டிப் பாதையில்
அன்றொரு நாள்
கண்கொட்டாமல்
பார்த்துக்கொண்டிருக்கையில்
கருவிழிகளைக்
கண்ணீரால் கழுவியது
பிளவுக் காயத்தில்
ஊழிக் கருமை மின்ன
கிடந்ததொரு
அனாதைக் கல்.