Wednesday, June 21, 2017

பாலியல் என்னும் சிக்கல் - part 3

ஃப்ரிட்ஜாஃப் ஷுவான்

Image result for frithjof schuon

இந்தச் சார்புலத்தில், நாம் கண்டுவந்தபடி, பெண் என்பவள் புறவயப்படுத்துகின்ற, தளைப்படுத்துகின்ற அம்சமாக இருக்கிறாள். தூய இயறகைத் தளத்தில், ஆன்மிக வளர்ச்சி இல்லாத நிலையில், பெண்ணிய உளவியல் என்பது பருவுலகின் பக்கம் சாய்வதாகவும் உணர்ச்சி வயப்படுவதாகவும் உள்ளது. பின்னும், இந்த உள்ளார்ந்த இயல்பினால் ஒரு பிரக்ஞையற்ற மயக்கு கொண்டதாகவும் இருக்கிறது. (இங்கே நாம் கருத்துச்செல்லாத் தளத்தில் இருக்கிறோம். ஆனால், திண்ணமாகத் தெரிவது யாதெனில், பாலினங்களுக்கு இடையிலான உளவியல் வேறுபாடுகள் உண்மையில் இருக்கின்றன, செங்குத்தான பண்பியல் நிலையிலும் கிடைமட்டமான நடுநிலையிலும். இத்துடன் இன்னும் சொல்வதெனில், ஆணின் உலகியல் என்னும் வரைவுச் சட்டகத்திற்கு உள்ளேதான் பெண் தனது உலகியலை நிதர்சனமாக்கும் வழியை அடைகிறாள். அதாவது பொதுவான மனித பலகீனங்கள் பெண்ணின் குறிப்பான பலகீனங்களை நீக்குவதில்லை. முடிவாக, இச்சார்புலத்தில் சொல்லவேண்டுவது என்னவெனில், நவீன வாழ்க்கை மனிதனை நீர்த்துப்போகச் செய்வதிலும் பெண்ணை அ-பெண்மையாக்குவதிலும் முடிகிறது. இதனால் யாருக்கும் எப்பலனும் இல்லை. ஏனெனில், இந்த செயல்முறை இயற்கைக்கு முரணானதாகவும் ஒருவரது பிழைகளை திருத்துவதற்குப் பதிலாக அவற்றை மேலும் உக்கிரப்படுத்துவதாகவும் இருக்கின்றது.)

இந்த இயல்பின் காரணமாகவே, கிறித்துவர்களும் முஸ்லிம்களும் ஒரு ”புனிதப் பெண் என்பவள் பெண் அல்லள். அவள் ஓர் ஆண்” என்று சொல்வதைச் சரி காண்கிறார்கள். இது வெளிப்படையில் அபத்தமான ஒன்றாகத் தோன்றினும் நாம் பேசி வரும் பொருண்மையின் வெளிச்சத்தில் சரியான ஒன்றுதான். ஆனால். பெண்ணின் உள்ளார்ந்த இயல்பு பற்றிய இக்கருத்து சார்பியலானதே அன்றி அறுதியானது அன்று. ஏனெனில் பெண்ணும் ஆணைப் போன்றே ஒரு மனிதப்பிறவி ஆவாள், மற்றும் பாலுளவியல் என்பது அத்தியாவசியமாக ஒரு சார்புநிலையே ஆகும். ஏவாளின் பாவம் என்பது ஆதாமை வெளியுலகிற்கு இழுத்ததில் இருக்கிறது என்று சொல்லி முடிந்த அளவு ஒருவர் பேசக்கூடும். ஆனால் மர்யமின் (Mary) இயக்கம் அதற்கு நேர் எதிரானது என்பதை ஒருவர் மறந்துவிடக்கூடாது. அந்த இயக்கம் பெண்ணின் உயிரில் மலரும் சாத்தியமிருக்கிறது. எப்படியாயினும், பெண்ணின் ஆன்மிகப் பணி எனபது ஒருபோதும் ஆணை எதிர்க்கும் புரட்சியால் நடவாது. ஏனெனில் பெண்ணிய நற்பண்பு என்பது உப-இருத்தலியல் முறையில் ஒப்படைவதில் இருக்கிறது. பெண்ணுக்கு, ஆணிடம் அடிபணிதல் என்பது – எந்த ஆணிடமும் என்பதல்ல – இறைவனிடம் மனிதன் அடிபணிதலின் இரண்டாம் நிலை வடிவமாகும். இது ஏனெனில், பாலினங்கள் ஒருவித மெய்ப்பொருளியல் உறவுநிலையைக் குறிக்கின்றன; அவ்வகையில், உயிர் அகநிலையில் கடந்து போகலாம் எனினும் அதனால் புறநிலையை இல்லாமலாக்கிவிட முடியாது என்னும் இருத்தலியல் தர்க்கத்தையும் குறிக்கின்றன.
Related image

புனிதத் தன்மையை அடைந்த ஒரு பெண் தனது புனிதத்தால் ஆண் ஆகிறாள் என்று சொல்வது அவளை ஓர் இயல்புதிரிந்த நபராகக் காட்டும் என்று குற்றஞ்சுமத்தலாம். உண்மையில், ஒரு பெண் தனது பெண்ணியல்பின் செம்மை நிலையில்தான் புனித நிலையை அடைகிறாள். அது முடியாதெனில் பெண்ணைப் படைத்ததில் கடவுள் தோற்றுவிட்டார் என்றாகிவிடும். ஆனால், ஆதியாகமத்தில் நாம் பார்த்தபடி, பெண் என்பவள் “ஆணுக்கோர் உதவும் துணை” ஆவாள்; எனவே, முதலில் அவள் ஓர் ‘உதவி’யே அன்றி தடை அல்லள், அடுத்து அவள் “அவனைப் போன்றவளே” அன்றி குறைபட்டவள் அல்லள்; கடவுளால ஏற்றுக்கொள்ளப்பட அவள் தானாக இருப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டிய தேவையில்லை. (”ஆவெ க்ரேஷியா ப்ளெனா” – ‘வாழ்க, கருணை நிறைவே’ என்று மர்யமிடம் வானவர் சொன்னார். மர்யம் பெண் என்பதால் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கிறது. வானவர் “ஆவெ மரியா” – ’வாழ்க மர்யம்’ என்று சொல்லவில்லை, ஏனெனில் திருக்கன்னிக்கு அவர் தரும் பெயர் க்ரேஷியா ப்ளெனா என்பதுதான்; அதாவது கருணையின் நிறைவும் மர்யமும் ஒன்றுதான் என்பதுபோல் இருக்கிறது.)

பெண்ணின் வழியே அல்லது பெண்மையின் வழியே மோட்சம் என்னும் மர்மத்தின் திறவுகோல் மாயை என்பதன் இயல்பில் இருக்கிறது: மாயா புறம் நோக்கி ஈர்க்க முடியும் எனில் அகம் நோக்கியும் அவளால் ஈர்க்க முடியும். (சம்சாரம் என்பது நிர்வாணம் என்று அல்லது இடவலமாகச் சொல்லும்போது அதன் பொருள், நிர்வாணம் மட்டுமே இருக்கின்றது, சம்சாரம் அதன் பிரகாசமாகும் என்றாகிறது. அது மையவிலக்கல் மற்றும் மையமுறுத்தல் இரண்டுமாகும், வெளிப்படுத்தல் மற்றும் உள்ளிழுத்தல், படைத்தல் மற்றும் காத்தல் ஆகும்.)

ஏவாள் என்பது ’வாழ்க்கை’. அது மாயையின் நிதர்சனம். மர்யம் என்பது ’கருணை’. அது மாயையின் மறு-ஒருங்கிணைவு. ஏவாள் தனது பெண்மையின் அடிப்படையில் உலகாக்கும் ஆற்றலின் உறைவிடம்; மர்யம் கன்னிமையும் தாய்மையும் ஒன்றான பேரிருப்பின் பேரொளி (ஷெகீனா). அறமும் அதன் இன்மையும் அல்லாத இயல்பிலான ’வாழ்க்கை’ அறமற்றது ஆகிவிடக்கூடும். ’கருணை’ தூய பொருளாதலால் அனைத்துத் தற்செயல்களையும் தன்னுள் உறிஞ்சிக்கொள்ளும் ஆற்றலுடையது.

Image result for sita painting

ராமனின் மனைவியான சீதை, ஏவாள் மற்றும் மேரி ஆகிய இருவரையும் இணைப்பதாகத் தோன்றுகிறார். அவரின் கதை, முதற்பார்வைக்கு, பெண்மையின் தெளிவற்ற பண்பை விளக்கிக்காட்டுகிறது. மனித நிலையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையில் சீதையின் புனிதம் தெளிவாகப் பேணப்படுகிறது: சீதையைக் கடத்திய அசுரன் ராவணன் – சீதையின் ஒரு பிழையால்தான் – அவரைக் கவர்ந்துவிட்டதாய் நினைக்கிறான். ஆனால் உண்மையில் அவன் சீதையினொரு மாயத் தோற்றத்தைதான் கவர்ந்திருக்கிறானே அல்லாது சீதையை அவனால் தொடமுடியவில்லை. சீதையின் பிழை யாதெனில் நியாயமற்ற ஒரு சந்தேகம். அதற்கு அவள் பெற்ற தண்டனையும் நியாயமற்ற ஒரு சந்தேகமே! ஏவாளின் பாவம் இங்கே எடுத்துக்கொண்ட வடிவம் அது. ஆனால் அவளது வாழ்வின் இறுதியில் ராமாயணத்தின் ஏவாள் மர்யமின் பண்புகளை அடைகிறார்: சீதா, லக்‌ஷ்மியின் அவதாரமாய், தனக்கெனத் திறந்த பூமிக்குள் மறைகிறார். அதாவது இறைமையின் சுயத்தில் மறைகிறார் என்பதைத்தான் பூமியைக் குறியீடாக வைத்து அப்படிச் சொல்லப்படுகிறது. (குறிப்பு: 1. லக்‌ஷ்மி என்பது பிரக்ருதியின் பிரபஞ்ச வடிவமாகும். அது புனிதமானது. அது உள்ளமையின் பெண் துருவம். அது நன்மை அழகு மற்றும் ஆனந்தத்தின் வடிவம். 2. கீழுள்ளது என்பதால் எதிர்மறைக் குறியீட்டாக்கத்தில் பூமி என்பது கீழ்நோக்கிய நகர்வு, பெருஞ்சுமை மற்றும் இருள் ஆகிய அர்த்தங்களைப் பெறுகின்றது; இங்கே அது நேர்மறைக் குறியீட்டாக்க நிலையில் உறுதி, வளம், நீடிப்பு, தூய்மை (அதிலிருந்தும் பீறிடுகின்ற நீரூற்றுக்கள் காட்டும்படி) ஆகிய அர்த்தங்களைப் பெறுகின்றது. நீடிப்பு என்பது மேலும் ஆழம் மற்றும் வலிமை ஆகிய பண்புகளைக் குறிக்கின்றன. “கீழிறங்குதல்” மூலம் சீதை தனது புனித சுயத்தின் ஆழங்களை ஒருங்கிணைக்கிறார். அவரின் சுயம் என்பது லக்‌ஷ்மியின் ஆற்றலாகும்.) சீதை என்னும் பெயர் (மண்ணில் கீறப்பட்ட) “வரப்பு” என்னும் பொருளுடையது: சீதை, பெண்ணுக்குப் பிறக்காது பூமியன்னையிலிருந்து தோன்றினார். அதாவது, ஒரே சமயத்தில் தூயதாகவும் (கன்னிமை) படைப்பதாகவும் (தாய்மை) இருக்கின்ற மீப்பிரபஞ்சப் பொருளான பிரக்ருதியில் இருந்து தோன்றினார். (மொ.பெ.குறிப்பு: எனவே, குறியீடுகளின் அர்த்தங்களில், வரலாற்று நோக்கில் அல்ல, சீதையை மர்யமின் மகள் என்று காணலாம்.)

சீதையின் பிழை, அவர் தனது கணவனான ராமனின் மீது வைத்த அளப்பரும் காதலினால் ஏற்பட்டது என்று ஹிந்துக்கள் சமாதானம் சொல்கின்றார்கள். (சீதையின் பிழையாவது, சான்றோனாகிய லக்‌ஷ்மணனின் மீது அவத்தன்மை கொண்ட சந்தேகம் உரைத்தது. சீதையைக் காப்பதே தனது பணி ஆதலால் அவன் முதலில் அகலாது நின்றான். கடைசியில் அவன் அண்ணியின் சொல்லுக்குப் பணிந்து சென்றவுடன் அக்கதாநாயகியைக் கடத்திச்செல்ல ராவணனுக்கு வழி உண்டாயிற்று.) இக்கருத்தை நாம் பொதுமைக் குறியீடாக்கினால் கிடைக்கும் முடிவாவது: தீமையின் தோற்றுவாய் என்பது ஏவாளின் நிலையது போல் ஆர்வமோ லட்சியமோ அல்ல, ஆனால் அது மிதமிஞ்சிய அன்புதான், அதாவது நன்மையின் அளவு மீறல்தான் என்றாகிறது. (மொ.பெ.குறிப்பு: ‘அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ என்னும் தமிழ் முதுமொழியை இச்சார்புலத்தில் வைத்துப் பார்த்தால் அதன் அர்த்த ஆழம் பெருவியப்பூட்டுகிறது!) ((வால்மீகி) ராமாயணம் இந்நிகழ்வை விவரிக்குங்கால் காதற் கணவன் இடரில் சிக்கியுள்ள நிலையில் ஒரு பெண்ணின் மனம் “மேகங்கள் சூழ்ந்து மறைத்ததாக” இருக்கிறது என்று நவில்கிறது. அவளின் நம்பிக்கை ”தடுமாற்றம்” கொள்கிறது, அவளின் நா “விஷமுள்ளது” ஆகிறது. அப்பிழைக்கான பிராயச்சித்தம் அவள் தனது கணவனின் மீது வைத்துள்ள பேரன்பும் அதன் விளைவாக அவளது சுயத்தின் அன்பளிப்பும் ஆகும். இன்னொரு இடத்தில், ராமனின் சிந்தனையற்ற கோபத்திற்கு முரணாக சீதையின் மென்மையான ஞானம் மிளிர்வதை ராமாயணம் சுட்டிக்காட்டுகின்றது.)

இது பைபிளின் கண்ணோட்டத்துடன் இணைவதாகத் தோன்றுகிறது. அதாவது முதல் ஜோடியின் பாவம் அன்பின் இடமாற்றமாகும், அதாவது படைத்தவனை விடவும் படைப்பு ஒன்றனை நேசித்தல்; அதாவது, படைப்பாளனில் அல்லாது அவனுக்குப் புறத்தில் படைப்பை நேசித்தல். ஆனால், ராமாயண விஷயத்தில், அன்பு என்பது வழிபாடாக அன்றி ஆத்மாவின் ஏக்கமாக மாறிவிட்டது; புகழ்ச்சியாய் அல்லாது அனுபவத்தின் புதுமை அல்லது முழுமை வேட்டலாய் ஆகிவிட்டது, எனவே அது திசைமாறிய அன்பு அல்ல, ஆனால் அன்பின் குறை ஆகும்.
q           q            q             q           q
Related image

இம்மண்ணுலக இன்பத்தை கள்ளமற்ற இயற்கையான நிலையில் அடைவதற்கான இன்றியமையாத நியதி யாதெனில் இன்பத்தை இறைவனில் கண்டடைவதற்கான ஆன்மிக ஆற்றலும் எதனையும் அவனுக்குப் புறத்தில் அனுபவிக்க முடியாமையும் ஆகும். இறைத்தொடர்பு என்னும் நற்பண்பின் அடிப்படையில் நம்முள் ஒருவரைச் சுமந்து செல்லாமல் அவர் மீது உயிர்ப்புள்ள நீடித்த அன்பை நாம் செலுத்தமுடியாது. இந்த அகவுறவு செம்மையாக இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை, எனினும் செம்மையுறுவதற்கான அனைத்துத் தருணங்களையும் அனுமதிக்கின்ற நாட்டம் இருந்தாக வேண்டும்.

மனித ஆன்மாவின் அடிப்படை இயல்பு பக்தி அல்லது நம்பிக்கையே ஆகும். அதில் அச்சம் மற்றும் அன்பு ஆகிய அம்சங்கள் உள்ளன. இவ்விரு துருவங்களின் சமனிலையே செம்மை ஆகும். தாவோ இலச்சினையான யின் – யாங் என்பதை இது மீண்டும் நினைவூட்டுகிறது. அது சமன்பட்ட உடனிறைவைக் குறிப்பதாகும். இறைக்காதலும் அதன் பிரதிபலிப்பான கணவன்/மனைவி மீதான காதலும் உள்ளார்ந்து அச்சம் அல்லது மரியாதை என்னும் அம்சத்தைப் பெற்றுள்ளன.

இறைவனுடன் அமைதிகொண்டிருத்தல் என்பது அவனில் இன்பத்தைத் தேடி அடைவதே. நம்முடன் அவன் இணைத்திருக்கும் நபர் இந்நிலையை நாம் அதிக இலகுவாக அல்லது குறைந்த சிரமத்துடன் அடைவதற்கு உதவ வேண்டும், நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அருட்கொடைகள் மற்றும் கருணைக்கு ஏற்பவும் நமது குறைபாடுகளைக் கருத்தில் கொண்டும். (ஒரு பிரபலமான ஹதீஸின் படிக்கு, திருமணம் என்பது மார்க்கத்தில் பாதியாகும்.)


இதனைச் சொல்வதில் நாம் ஒரு முரணை அல்லது புதிரைக் கிளப்புகிறோம்: துறவை நோக்கிய உறவு அல்லது அகமியத்தை நோக்கிய புறநிலை அல்லது சாராம்சத்தை நோக்கிய வடிவம். உண்மைக் காதல் நம்மை உலகிலிருந்து விடுவித்துப் புனித நிலைக்கு இட்டுச் செல்கிறது. அவ்வகையில் அது புறத்திலான வெளிப்பாட்டின் மர்மத்தை அகத்திலான ஈடேற்றத்துடன் இணைக்கின்றது. (வேதங்கள் சொல்கின்றன: “நிச்சயமாக, கணவன் இனியவனாக இருப்பது கணவனின் காதலுக்காக அல்ல, ஆனால் அவனுள் உறையும் ஆத்மாவுக்காக. நிச்சயமாக, மனைவி இனியவளாக இருப்பது மனைவியின் காதலுக்காக அல்ல, ஆனால் அவளுள் உறையும் ஆத்மாவுக்காக.” (ப்ரிஹதாரண்யக உபநிஷத், II, 4:5))

the end.

No comments:

Post a Comment