Wednesday, June 21, 2017

பாலியல் என்னும் சிக்கல் - part 2

ஃப்ரிட்ஜாஃப் ஷுவான்

Image result for frithjof schuon

”வீழ்ச்சி”யால் மாம்சம் சாபத்திற்குள்ளானது உண்மைதான். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மட்டுமே. அதாவது, இருத்தலியல் மற்றும் புறவயப் பிரிவு உண்டாயிற்று. ஆனால் ஆன்மிக மற்றும் சாராம்சத் தொடர்பு அறுந்துவிடவில்லை. மனிதப்படைப்பின் இயற்கையான அமைப்பின் மீதும் இக்கருத்தையே உரைக்கலாம். ஆணாயினும் பெண்ணாயினும் மனித உடல் என்பதொரு இறையொளிச் சுடராகும். வீழ்தலுக்குப் பின்னும் அது அப்படியே தொடர்கிறது. (”எவர் என்னைக் கண்டாரோ அவர் கடவுளையே கண்டார்” – இந்த ஹதீஸ் முதலாகவும் முற்றாகவும் அவதார நபரையே குறிக்கிறது என்றபோதும் தகுதிப்பாடுகளின்படிப் பொதுவில் மனித அமைப்பைக் குறிக்கிறது. இவ்விஷயத்தில் அது ‘இன்ன இன்ன மனிதர்’ என்பதல்ல, பொதுவாக மனிதன் என்பதேயாகும்).

ஒருவருக்கொருவர் காதலிப்பதில் தம்பதிகள் இறைவனின் ஒரு வெளிப்பாட்டையே காதலிக்கின்றனர், ஒவ்வொருவரும் ஒருவித அம்சத்தில், ஒருவித நோக்கில். மேன்மை நன்மை மற்றும் அழகு ஆகிய தெய்வாம்சங்கள் அப்படியே இருக்கின்றன. இத்தகையதொரு உறவின் அடிப்படையிலேயே, இஸ்லாம் காமம் தன்னளவில் கொண்டிருக்கும் புனிதத் தன்மையை அடையாளம் காண்கிறது. மேலும், அதன் விளைவாக, பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் ’முஸ்லிம்’ என்னும் நிலையில்தான் பிறக்கிறது, அதன் பெற்றோர்களே அதனை நிராகரிப்பில் ஆக்கிவிடுகிறார்கள் (அவர்கள் நிராகரிப்பாளர்களாய் இருக்கும் நிலையில்) என்று காண்கிறது.

கிறித்துவ இறையியல், பாவம் என்னும் கருத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, பொதுவாகப் பெண்ணிலும் குறிப்பாக ஏவாளிலும் ஒரு வசியக்காரியை வரித்துக்கொண்டு பெண்பாலினத்தை அதிகபட்ச அவநம்பிக்கையுடன் மதிப்பிட்டுள்ளது. ஆண் மட்டுமே ஆண்டவரின் தோற்றத்தில் படைக்கப்பட்டான், பெண் அல்ல என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், பைபிளோ, இறைவன் மனிதனைத் தன் தோற்றத்தில் படைத்தான் என்பதோடு “அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்” (ஆதியாகமம்:5:2) என்று சொல்கிறது. இவ்வார்த்தைகள் மதிநுட்பத்தால் திரித்து அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளன. இறையியலாளரின் இந்தப் புலனறிவுக் குறைபாடு ஒருவருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், புறவயக் கண்ணோட்டம் என்பது பொதுவாக எப்போதுமே முன்முடிவுகளை வைத்தே இயங்கும் என்பதால் இதில் வியப்பேதுமில்லை. அது எப்போதும் ஓரவஞ்சனையும் தற்சார்பும் கொண்டே வெளிப்படும். (இறையியலாளர்கள் பரிசுத்த ஆவியால் தூண்டப்படுவோர் ஆயிற்றே என்று ஆட்சேபனை தெரிவிக்கலாம்; ஆனால், தண்ணீர் பாத்திரத்தின் வண்ணத்தை எடுத்துக்கொள்ளும். ஆன்மாவுக்குத் தீது செய்யும் உள்ளார்ந்த பிழைகளை மட்டுமே பரிசுத்த ஆவி தவிர்க்கும். இன்றியமையா சத்தியத்திற்கும் கடைத்தேறுதலுக்கும் சம்பந்தமற்ற, புறவயமான சந்தர்ப்பவாத பிழைகள் ஒவ்வொன்றையும் அது தவிர்க்க வேண்டும் என்பதில்லை).

Related image

முதற்சான்று (சான்று வேண்டுமெனில்) – பெண் என்பவள் ஆணைப் போன்றே ஒரு தெய்வவடிவம். அதாவது, அவனைப் போன்றே அவளும் ஒரு மானுடம். அவள் அணங்கோ தேவதையோ அல்லள். அவனைப் போன்றே அவளுமொரு மானுடப் பிறவி. அவளது வடிவம் மனிதம், எனவே புனிதம்.

இன்னொரு சான்று – ஒரு பார்வை போதும் – அதாவது, பாலுணர்வுத் தளத்தில் மனிதனுடன் ஒப்பிடுகையில், அவளொரு தெய்வீகச் செயற்பாட்டை நிகழ்த்துபவள் ஆகிறாள். பெண்ணுடன் ஒப்பிட்டு ஆணை நோக்குகையில் அவனையும் அப்படிக் காண இயலும். அவளொரு திருப்பண்பை பொதிந்திருக்கவில்லை எனில் அச்செயல் சாத்தியமன்று. அது பூரணத்துவத்தின் பண்பல்ல. ஆனால் முடிவின்மையின் சகநிறைவுப் பண்பாகும். அது பூரணத்தின் சக்திபாவம் என்று சொல்லலாம்.

பாலியல் சார்ந்து பிரச்சனகளைக் கிளப்பி எழுந்துள்ள தாறுமாறான பல கேள்விகளுக்கும் விடை காண வேண்டும் எனில் முதலில் நாம் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் சமநிலையைப் பேணுகின்ற மூன்று உறவுநிலைகளைத் தெளிவாக வரையறுத்துக் காண வேண்டும். அவை முதலில் பாலியல், உயிரியல், உளவியல் மற்றும் சமூக உறவுநிலைகளாகும்; இரண்டாவதாக, மனித மற்றும் சகோதர உறவுநிலைகளாகும்; மூன்றாவதாக அன்மிக அல்லது புனித உறவுநிலைகளாகும்.

முதனிலை உறவில், திண்ணமாக சமமின்மை உள்ளது. இதில்தான் சமூக ரீதியில் பெண்ணொடுக்கம் வருகிறது. அது ஆயத்தமாக அவளின் உடலமைப்பிலும் உளவியலிலும் குறிக்கப்படுகிறது. ஆனால் இந்த உறவுநிலையே அனைத்தும் அல்ல. தனிமனிதர்கள் மற்றும் அவர்களின் கண்ணோட்டங்களுக்கேற்ப இவ்வுறவு நிலை பிற பரிமாணங்களால் பதிலீடு செய்யப்படலாம்.

இரண்டாம் உறவுநிலையில், அதாவது மனிதப்பண்பில், பெண் ஆணுக்கு நிகராவாள். ஏனெனில் அவனைப் போன்றே அவளும் மனித இனத்தைச் சேர்ந்தவள். இது ஒடுக்கத்தின் தளமன்று; மாறாக, நட்பின் தளமாகும். இத்தளத்தில் பாலினம் எதுவாயினும் ஒரு மனிதனைக் காட்டிலும் இன்னொரு மனிதன் உயர்ந்திருக்கக் கூடும் என்பதால் கணவனைக் காண மனைவி மேலானவளாய் இருக்க முடியும். (சூடலா என்னும் அழகிய அரசியின் கதையை யோக வசிஷ்டம் சொல்கிறது. அவள் ஆதி சங்கரர் விளக்கிய அத்வைத ஞானத்தை அடைந்தவள். தனது கணவனான மன்னன் சீகிதுவஜனின் ஞானகுருவாகவும் அவள் விளங்கினாள்).

முடிவாக, மூன்றாம் உறவுநிலையில், பெரிதும் முரணாக, ஒரு பரஸ்பர மேனிலை இருக்கின்றது: காதலில், நாம் முன்பே சொன்னதுபோல், தனது கணவனைப் பொருத்த நிலையில் பெண் ஒரு தெய்வீகச் செயற்பாட்டை நிகழ்த்துகிறாள்; பெண்ணைப் பொருத்த நிலையில் ஆணும் அவ்வாறே. (இது எவ்வளவு உண்மை எனில், பொதுவாக பாலியல் மீதும் குறிப்பாக பெண் மீதும் துறவுப் பகைமை காட்டும் பௌத்தம்கூட தெய்வாம்சமான பெண்களைக் கொண்டு தனது சொர்க்கத்தைச் சித்தரிக்காமல் இருக்க முடியவில்லை. அவ்வழியில் ஒருவர் தம்மை வெளிப்படுத்திக்கொள்ள அனுமதியாகிறது. நாம் இங்கே மஹாயான மற்றும் அகமிய பௌத்தம் பற்றிப் பேசுகிறோம். அதே பௌத்தம் அமிதாப திருமணத்தைத் தோற்றுவித்தது: ஜோடோ பள்ளியின் துறவியும் ஷின்ஷு பள்ளியின் நிறுவனருமான ஷின்ரன் தனது குருநாதர் ஹூனனிடமிருந்து ஓர் அறிவுரையைப் பெற்றார், ‘ஒரு மனைவியை அடைந்துகொள். அமிதாப புத்தர் அருளிய நேரடியான மோட்ச வழி துறவிகளுக்குப் போலவே கிரகஸ்தர்களுக்கும் கிடைக்கும் என்பதைக் காட்டு.’ இம்முறை, துறவை ஒரு முன் நியதியாகக் கொண்ட ஜோடோ அமைப்பின் வரம்புக்குள் உள்ளது).

Related image

திருமண உடன்படிக்கையின் இம்மூன்று பரிமாணங்கள் அன்றி, லௌகீக நிலையில் தனது இணையைத் தேர்வதில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும்: இணக்கம் அல்லது ஒப்புமை, மற்றும் உடனிறைவு அல்லது வேறுபாடு. காதலுக்கு இவ்விரு நியதிகளும் தேவை. மனிதன் இயல்பிலேயே தனது வகையிலான, தான் இலகுவாய்ப் பழகக்கூடிய நபரையே தேடுகிறான். இதை விளக்க வேண்டிய அல்லது நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் இத்தன்மையின் அடிப்படையில் அவன் தன்னிலும் வேறுபட்டவராகவும் இருக்கும் நபரையே தேடுகிறான். ஏனெனில் காதலின் நோக்கம் ஒருவரை ஒருவர் நிறைவு செய்ய அனுமதிப்பதே அன்றி ஒருவரை இன்னொருவர் போலச் செய்தல் அல்ல. சிலநேரங்களில் ஒருவர் தனது இணையை இன்னொரு இனத்தில் கண்டுகொள்கிறார். இது ஏன் எனில், இன வேற்றுமைக்கு அப்பால் ஏதொவொரு கோணத்தில் இணக்கத்தை உணர்கிறார், மேலும் கச்சிதமான பரஸ்பர நிறைவையும் உணர்கிறார். இவ்விஷயத்தில் அந்நபர் தனது இனத்தை விட்டு வேறு இனத்திற்கு மதிப்பளித்துவிட்டார் என்பது அர்த்தமல்ல. அவருடைய இனத்தினுள் அவருக்கான மாற்றில்லாத இணையை விதி அவருக்கு வைக்கவிவில்லை என்பதே ஆகும். சுருங்கச் சொல்வதெனில், பெருங்காதல் என்பது தேர்வதில் இருக்கிறது என்பதினும் அது பெரிதும் விதியில் இருக்கிறது: தேர்வது சாத்தியமா என்பதை, அதாவது அந்த ஆண் அல்லது பெண் தனது கச்சிதமான இணையைச் சந்திப்பாரா இல்லையா என்பதைக் கர்மாவே முடிவு செய்கிறது. முடிவாக, இணைநிறைமை என்பது அழகை விடவும் ஒருபடி மேலானது. இலட்சிய இணை என்பது செம்மையான அழகு அல்ல, ஆனால் செம்மையான இணக்கத்தின் அடிப்படையில் அமைந்த செம்மையான இணைநிறைமையே ஆகும். மனிதனுக்கு இயல்பிலேயே உருவங்களின் அவதானப் புலன் இருப்பதால், அதில் அவனுக்கு எட்டிய அளவில், அவன் மேலானதை விட்டும் கீழானதையே தேர்கிறான். ஏனெனில் பேரழகான இணைநிறைமையில் அவனுக்கு அவன் தேடும் உருவ அழகு இல்லாமல் போகலாம்.

இந்தக் கருதுதல்கள் இயற்கைத் தேர்வு என்னும் கோட்பாட்டின் கண்ணோட்டத்தில் பிறப்பனவாகும். அவற்றைப் பெரும்பாலும் அற அல்லது ஆன்மிகக் கண்ணோட்டத்தில் திருத்தியமைக்கலாம், மனித இயல்பின் சொந்த உரிமைகளை இழந்துவிடாத நிலையில். மனிதத் தன்மையை நோக்குங்கால், அழகு என்பதற்கு ஓர் அற அல்லது ஆன்மிக இணைநிறைவு தேவை. அவ்வெளிப்பாடு இல்லை எனில் மனிதன் மனிதனாக இருக்க முடியாது.

இவ்விஷயங்களை ஒருவர் அவநம்பிக்கை அல்லது ஓரவஞ்சம் இன்றி நோக்கினால் அவற்றின் உடனடி சார்புலம் தாண்டிய போதனைகள் இருப்பதைக் காணலாம். மனித நிலைக்கான நன்மைகள் அனைத்தும் அவற்றில் இருப்பதை ஒருவர் எவ்விதக் கஷ்டமும் இன்றி உணர்ந்துகொள்ளலாம்.
q          q     q     q      q      q     q

Image result for krishna and gopis paintings

விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணா பல மனைவியரைக் கொண்டிருந்தார். நமது காலத்திற்கு அருகில், இறைத்தூதர்களான மன்னர்கள் தாவூதும் சுலைமானும் (David and Solomon) அவரைப்போன்றே பலதாரங்கள் கொண்டிருந்தனர். இன்னொரு பெரும் அவதாரமான புத்தருக்கோ மனைவியில்லை (அதாவது புத்தர் ஆன பிறகு. அதற்கும் முன் போதிசத்வராக இருந்த நிலையில் அவரின் இளமையில் அவர் மணம் புரிந்திருந்தார்) கிருஷ்ணா போன்றே இந்து மரபில் வந்த ஆனால் உப அவதாரங்களான ஆதிசங்கரர், ராமாநுஜர் போன்றோருக்கும் மனைவியில்லை. இவை காட்டுவது என்னவெனில், ஆன்மிகத்தில் எது உயர்ந்தது அல்லது எது தாழ்ந்தது, தாம்பத்யானுபவமா அல்லது பிரம்மச்சரியமா? என்னும் கேள்வியெல்லாம் ஒவ்வொரு கண்ணோட்டத்தின் பாற்பட்டது. சூக்குமம், குறியீடு என்றெல்லாம் இதனைப் பற்றிப் பேசிச்செல்லலாம். அறிவியம் நடைமுறை உளவியல் அல்லது இருப்பியல் என்னும் கோணங்களில் குறுக்கிக்கொள்ளலாம். ஆனால், இக்கேள்வியில் கவனிக்க வேண்டுவது என்னவெனில், மனிதன் எதைத் தேர்ந்தெடுக்கினறான் அல்லது அவனது தனிப்பட்ட சுபாவம் எதனைக் கோருகிற்து அல்லது ஆசிக்கிறது என்பது மட்டுமல்லாது அவற்றுக்கு மேலே, இறைவன் தான் எப்படி அணுகப்பட விரும்புகிறான் என்பதாகும்: அவனல்லாத அனைத்தும் அற்ற வெறுமையின் வழியாகவா? அல்லது தனது வெளிப்பாடுகளின் பன்மியம் வழியாகவா? அல்லது மாறி மாறி இரண்டின் வழியாகவுமா? தொண்டர் வரலாறு இவற்றுக்காண பல உதாரணங்களை வழங்குகிறது. முடிவாக, தனது திரையிடல் மற்றும் திரைநீக்கல், தனது வார்த்தைகள் மற்றும் மௌனங்கள், தனது இரவுகள் மற்றும் பகல்கள் ஆகியவை மூலம் இறைவன் தன்னைத்தானே கண்டடைகிறான்.

அடிப்படையில், ஒவ்வொரு காதலும் இறைமை அல்லது இழந்த சொர்க்கத்திற்கான தேடலே ஆகும். சோகம், மென்மை அல்லது கவிதையும் இசையும் சார்ந்த பாலியற் பனுவல்களில் சித்தரிக்கப்படும் வன்மை வகையிலான காதல்கள் எல்லாம் தொலைதூர சொர்க்கத்திற்கான இந்த ஏக்கத்திற்கு சான்று கூறுகின்றன. மேலும், நான் இன்னும் கண்டிராத சொர்க்கத்தின் இனிமையைக் காட்டுகின்ற மண்ணுலகக் கனவுகளின் நிலையாமைக்கும் சான்று பகர்கின்றன.

ஜிப்ஸி வய்லின்கள் மனிதத்தன்மை மிக்க காதலின் ஏற்றத்தாழ்வுகளைத் தூண்டுவது மட்டுமல்லாது, அவற்றின் ஆழமான மிகவும் சோகமான தொனிப்புகளில் அழகின் சாராம்சமாய் இருக்கின்ற வானுலக மதுவிற்கான தாகத்தையும் கொண்டாடுகின்றன. அனைத்துப் பாலியலிசையும் அதன் உண்மைத்தன்மை மற்றும் மேன்மைக்கு ஏற்ப, தளைக்கவும் விடுவிக்கவும் செய்கின்ற கிருஷ்ணனின் புல்லாங்குழலின் ஓசையுடன் இணைகின்றன. (புலப்படும் உருவங்கள் எல்லாம் வானுலகப் படிவங்களை இங்கே ஸ்தூலமாக்கி வெளிப்படுத்துகின்றன; இசை தனது தனித்த ஒருமித்த இனிமையும் எல்லையின்மையும் கொண்ட மொழிபின் வழியே சாராம்சங்களை நினைவு கூர்ந்து ஒருவிதத்தில் இங்கே ஸ்தூலப்படுத்துகின்றது. எத்தனைதான் கடினமாயும் இசைவற்றும் தோன்றினும் மண்ணுலக அழகு, ஆற்றல்மிகு விண்ணுலக இசையின் நினைவை ஆன்மாவில் தூண்டுகிறது: ”இங்கே இனிமையாய் ஒலித்து தன்னிடம் உயிரை ஈர்க்கும் எவ்வொரு இசையும், இடியொலித்துக் கரைந்து தூவும் மேகம் போன்று, விண்ணுலக யாழினுடன் ஒப்பாகின்றது.” (தாந்தே, டிவினா காமெடியா, காண்டம்:23, வரிகள்: 87-90).)

Image result for music classical paintings
painting by Anelia Pavlova.

பெண்ணைப் போன்றே, இசையும் பூடகமானது. மேலும் அதனுடன் தொடர்புடைய கலைகளான நடனமும் கவிதையும்கூட அப்படியே. ஒன்று அதில் சுயமோகத்தின் வீக்கம் இருக்கின்றது அல்லது சாராம்சத்தில் கரைந்துபோதலின் அகமியமும் தரிசனமும் இருக்கின்றது.

பெண், மாயையின் வடிவாய், இரு தளங்களில் இயங்குகிறாள்: ஒன்று, புறவயப்படுத்துகின்ற, வேறுபடுத்துகின்ற ஒளிவீச்சாக அல்லது அகவயப்படுத்துகின்ற, மீட்டிணைக்கின்ற ஒளிவீச்சாக. ஆனால், ஆண் என்பவன் இவ்விஷயத்தில் இயக்கமற்றவனாகவும் பூடகத் தன்மை அற்றவனாகவும் இருக்கிறான்.

ஆண் பெண்ணுக்கு ஸ்திரமூட்டுகிறான்; பெண் ஆணுக்கு உயிர்மை ஏற்றுகிறாள். மேலும், திண்ணமாக, ஆண் தன்னில் பெண்ணைக் கொண்டிருக்கிறான். இடவலமுமாம். இருவருமே ஹோமோ சேப்பியன்ஸ் – பேரறிவு இனம். மனிதனை நாம் ஒரு பான்ட்டிஃபெக்ஸ் என்று, அதாவது தெய்வீகத்திற்கான பாலம் என்று வரையறுத்தால் அது நிச்சயமாகப் பெண்ணையும் உள்ளடக்கியதே, அப்பணியில் அவள் மேலும் தனது பாலினத்திற்கே பிரத்தியேகமான அனுமானிக்க இயலாது விரைந்து மாறுகின்ற தன்மையைச் சேர்க்கிறாள் என்றபோதும். (பெண் என்பவள் ஆணுடன் “ஒரே சதை” என்னும்போது, அவள் அவனது “சதையின் சதை, எலும்பின் எலும்பு” என்னும்போது, ஆண் எந்த ஆத்மாவைக் குறித்து நிற்கிறானோ, பெண் அதன் தொடர்ச்சியே அன்றி பிரிவு அல்லள் என்பதையே இது காட்டுகிறது.)

ஆண் தனது சந்திர மற்றும் ஏற்பு அம்சத்தில், தன்னுள் உயிர்மை ஏற்றி மலரச் செய்யும் பெண் என்னும் சூரியன் இல்லை எனில் உதிர்ந்து போவான். மாறாக, ஆண் என்னும் சூரியன் பெண்ணுக்கு அவளின் சூரியத்தன்மையை நீடிக்கச் செய்யும் சுய அறிதலுக்கான வெளிச்சத்தை வழங்குகிறது.

கற்பு என்பது சதைத் தூண்டல்களைத் தடுப்பதையும், அதனினும் ஆழமாக, பாலினங்களின் எதிர்நிலையை விட்டுத் தப்புதலையும், மேலும் ஆதி மனிதனின் ஒருமை நிலைக்கு ஒருங்கிணைதலையும் தனது இலக்குகளாகக் கொள்ளலாம். அவரவர் மனநிலைகள் மற்றும் கற்பனைகளுக்கேற்ப, இஃதொரு இன்றியமையா நியதி அல்ல எனினும் தெளிந்த துல்லியமான துணைமை ஆகும்.
 q           q            q            q              q

கிறித்துவத்திலும், பொதுவாக பௌத்தத்திலும், காமம் என்பது ஒரு பாவமாகக் கருதப்படுகிறது. இதன் விளக்கம் யாதெனில், ஆன்மா உயர்ந்தது, உடல் தாழ்ந்தது என்பதால் சதையின் தீவிரமான சுகம் என்பது ஆன்மாவின் சுகத்தைக் காட்டிலும் கீழானதே ஆகும் என்பதாம். மூலப்படிவத்தினின்றும் செயல்பாடுகளைப் பிரிந்தது என்னும் நிலைப்பாட்டில் பொருட்கள் இருப்பதைப் பொருத்த அளவில் இக்கண்ணோட்டம் சரி என்றாகலாம். ஆனால், தனது தளத்தில் பிரிவு என்பதை இல்லாமலாக்குகின்ற இன்றியமையாத தொடர்ச்சியை இக்கண்ணோட்டம் விட்டுவிடுகிறது என்ற அளவில் இது மிகவும் தவறானதாகும். ஒரு பக்கம், மாம்சம் என்பது ஆன்மாவிற்கு வேறுபட்டது என்றபோதும், மறுபக்கம் அதுவே ஆன்மாவுடன் இணைந்ததாகவும் அதனை வெளிப்படுத்துவதாகவும் நீட்டிப்பதாகவும் இருக்கின்றது, அதாவது, அது இணைவான, செங்குத்தான ஆரத்தில் இருக்கிறதே அன்றி, பிரிக்கின்ற மட்ட ஆரத்தில் அல்லது சுற்றுவட்டத்தில் இல்லை என்பதாகக் காணும் வரை; முன்னதில் மையம் நீட்டப்படுகிறது, பின்னதில் அது மறைக்கப்படுகின்றது.

கற்பனையாக அல்லாது உண்மையாகவே ஒரு நபர் தியானிப்பில் இருக்கும் பட்சத்தில் உடல் என்பது ஆன்மாவின் நீட்சியாய் இருக்கும் மர்மம் அவருக்கு ஆன்மிகப் பயனை நல்கும். சமய முறைகள் இம்மர்மத்தில் அவரை நேரற்ற மற்றும் ஏற்பு நிலையில் பங்கெடுக்கச் செய்யக்கூடும். இதில் உள்ள மையவிலக்கின் அபாயங்களை அந்நபரின் கண்ணோட்டமும் சமய நெறிகளும் தவிர்த்துவிடும், அதில் அந்நபர் முறையாக ஈடுபடும்போது. உண்மையாக தியானிப்பவருக்கு, ஆகுமான ஒவ்வொரு சுகமும் தெய்வீகத்தின் சந்திப்பே அன்றி நிலையற்ற கீழுலக வீழ்ச்சி அல்ல.

Related image
Meister Eckhart

மெய்ஸ்டர் எக்கார்ட்டின் பார்வையில், உண்ணுதல் பருகுதல் ஆகிய சாதாரண செயல்கள்கூட, ஒருவர் தன் செயலின் ஆழத்தை உணர்ந்திருந்தால், ஒரு புனித வழிபாடே ஆகும். பல தளங்களில், குறிப்பாக கைவினை மற்றும் கலையில், இட்டுப்பார்க்கத் தோதுள்ள இக்கூற்றின் விளக்கங்களுக்குள் செல்லாது நாம் சொல்வது என்னவென்றால், இக்காரியங்கள் எல்லாம் ”சிறிய அற்புதங்கள்” என்னும் வகைமையில் ஆவன. ஆனால், பாலியல் என்பதோ, இதுதான் அதில் உள்ள இருமுகத் தன்மையின் அபாயம், “பெரிய அற்புதங்கள்” என்னும் வகையைக் குறித்ததாய் இருக்கிறது, கானாவில் மது காட்டியதைப் போல. இது தொடர்பாக நாம் ஒன்றைச் சொல்லவேண்டும். பாலுறவின் ஏற்புநிலை அன்பளிப்பு ஆழந்த உறக்கமாகும். இதிலும்கூட தெய்வீக இணைவின் முன்னோட்டம் உள்ளது. வேறுபாடு ஒன்றுண்டு. அதாவது, உறக்கத்தில் அதன் திருவருளின் தொடக்கம் முற்றிலும் இறைவனின் பக்கம் உள்ளது, அதாவது அதனை அவன் தான் விரும்புவோர் மீது அருளுகிறான். ஆனால், பாலுறவின் ஆழ்ந்த உறக்கம் என்பது ஏற்கனவே மனிதன் எந்த அளவுக்குத் திருவருளை அடைந்திருக்கின்றானோ அந்த அளவின்படியே ஆகும்.

இஸ்லாத்தில், புனிதம் மற்றும் புனிதமற்றது, அல்லது ஆன்மா மற்றும் உடல் ஆகியவற்றுக்கு இடையே பாலமாக விளங்குமொரு கோட்பாடு உண்டு. அதன் பெயர் ”பரக்கத்”. அதாவது, “உள்ளார்ந்த அருள்”. இயற்கைக்கு மாற்றமான, வரம்புமீறிய, தனிநபருக்கும் சமூகத்துக்கும் தீங்கு பயக்கக்கூடிய பாவங்கள் அன்றி ஆகுமாக்கப்பட்டதும் இறைவனின் பெயரால் அனுபவிக்கப்படுவதுமான வரம்புக்குள் வருகின்ற ஒவ்வொரு சுகமும் ’பரக்கத்’தைக் கொண்டுள்ளது. அதாவது, அது வெறுமனே இயற்கையான திருப்தியாகவோ, தவிர்க்கவொண்ணாதது என்பதால் சகிக்கப்படுவதாகவோ இல்லாது தன்னில் ஓர் ஆன்மிக மதிப்பும் ஒரு தியான நறுமணமும் கொண்டதாக இருக்கின்றது.
q           q            q             q           q

கிறித்துவப் பார்வையின் அடிப்படையான நோக்கத்தை நாம் சரியாக உணர்ந்துகொள்ள பின்வரும் விஷயத்தைக் கவனிக்கவேண்டும்: இறைவனிடம் செல்லும் வழி எப்போதுமே ஒரு கவிழ்ப்பை (inversion) கோருகிறது: புறத்திலிருந்து ஒருவர் அகத்திற்கு நகரவேண்டும், பன்மையிலிருந்து ஒருமைக்கு, பரவலிலிருந்து குவிதலுக்கு, பற்றிலிருந்து துறப்பிற்கு, கொந்தளிப்பிலிருந்து அமைதிக்கு. கிறித்துவம் உலக இன்பத்திற்கும் தியாகத் துன்பத்திற்கும் இடையிலான எதிர்மறையின் அடிப்படையில் இயங்குகிறது. அது ஏன் இன்பத்திற்கு, அதாவது அறிவின்பம் அல்லாத செயலின்பத்திற்கு எதிராக இருக்கிறது என்பதை இது விளக்குகிறது. கிறித்துவம் என்பது ஒரு கோட்பாடு என்பதினும் ஒரு வழியாக இருப்பதால் – கிரேக்கருடன் நடைபெற்ற விவாதங்கள் அதற்கான சான்று – அதன் பார்வையில் ஈடேற்றும் கடவுளுக்கு அருகில் நம்மை ஆக்கக்கூடியவை என்று எவற்றைக் கருதுகிறதோ அவற்றை மிகவும் வலியுறுத்துகிறது. கிறித்துவத்தின் கடவுளோ தானே துன்புறுதலின் மாதிரியாகவும் வழியாகவும் இருக்கிறார்.

Related image

புனிதப் பாலியல் தொடர்புள்ள அனைத்தின் மீதும் கிறித்துவர்கள் கொண்டிருக்கும் காழ்ப்புமிகு ஐயத்தை இந்தக் கோணம் விளக்குகின்றது. திருமணம் என்பது புனிதமாயிற்றே என்று கேட்கலாம். ஆம், ஆனால் அது இனவிருத்திக்கும் உடலியல் உளவியல் மற்றும் சமூகவியல் சமனிலைக்குமான கருவி என்னும் நோக்கில்தான் புனிதமென்று பார்க்கப்படுகிறதே அன்றி காதல் அல்லது இணைதல் என்னும் நோக்கிலன்று, கிறித்துவின் வார்த்தைகள் அப்படியான கருதுதலுக்கு இடமளிக்கின்ற போதும். புறவயம் என்பது ஒருவித தனிப்படுத்தல் மற்றும் மாற்றுப்படுத்தலின் கண்ணோட்டத்தை ஏற்படுத்தி மலினப்படுத்தல் மற்றும் வகைப்படுத்தலுக்கு வித்திடுகிறது. ஒருவித தெளிவுத்தன்மை அதில் இருக்கலாம், ஆனால் அதில் முழுமை இருப்பதில்லை.

பாலியலெதிர்ப்பு என்பது எங்கனும் ஏதோவொரு வகையில் குறிப்பிட்ட விகிதத்தில் இருக்கத்தான் செய்கிறது. அது பௌத்தத்தின் தனிப்பண்பாகவும் இருக்கிறது என்பதை நாம் முன்பு குறிப்பிட்டோம். உட்பொருண்மையின் அடிப்படையில் நிறுவப்படும் இப்பார்வையில் பெண் என்பவள் நம்மை உள்ளார்ந்த ஆனந்த நிலையை விட்டும் பிரித்து வெளியேற்றுகின்ற ஒரு புறக்காரணியாக இருக்கிறாள். பெண் என்பவள் ஒரு தற்செயல் ஆதலால் தற்செயல்களை நோக்கி ஈர்க்கிறாள். ஆனால் ஆணின் தியான மற்றும் ஒருங்கிணைக்கும் அகத்தன்மை நிர்வாணச் சத்பொருளிற்கு உரியதாகவும் அதன் பக்கம் நோக்குவதாகவும் உள்ளது.


இது பின்வரும் அவதானத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது: பௌத்தம் புறவயமான பருப்பொருண்மையான அப்பாலான கடவுளை மறுப்பது ஏனெனில் அது தனது முழு அழுத்தத்தையும் அகமியமான உட்பொருண்மையான உள்ளுறையும் தெய்வீகத்தின் மீது வைக்கிறது – அது நிர்வாணம் என்றும் ஆதிபுத்தர் என்றும், அல்லது வேறு பெயரால் அழைக்கப்ட்டாலும். எனவே பௌத்தத்தை நாத்திகம் என்று விளக்குவதற்கு இடமில்லாது போகிறது. பௌத்தத்தின் அமித்தாபப் பிரிவில் அமித்தாபர் நமக்கு வெளியே இருப்பவர் அல்ல அல்லது நாமின்றி அவர் இல்லை.  இதற்கொப்பான கோட்பாடுகளை நாம் எக்கார்ட் மற்றும் சிலெசியஸ் ஆகியோரில் காணலாம். கலம் இன்றிப் பண்டம் பற்றிப் பேச்சில்லை ஆதலால், அவரது உள்ளுறைமயும் ஈடேற்றுமாற்றலும் நமது இருத்தல் மற்றும் நமது சுயத்திலிருந்தே விளைகின்றன. சுருக்கமாக, பௌத்தம் கடவுளின் இடத்தில் மனிதனை வைப்பது ஏனெனில் ஒரு ஸ்தூலப் பொருண்மையாக மனிதன் என்பவன் உள்ளார்ந்த ஈடேற்றும் சத்பொருளின் கொள்கலனாக இருக்கிறான் என்பதாலாம்.

the final part will follow...

No comments:

Post a Comment