Friday, June 16, 2017

எல்லோர்க்கும் பெய்த மழை

Related image

இன்னொரு மழைத்தருணம்தான்
என்றாலும்
மீண்டும் புத்தம் புதிதாய்

மேகங்கள் திரண்டுவரும்போதே
காற்று கட்டவிழ்த்துக்கொண்டது

ஓரிரு துளிகள் விழுகையிலேயே
பறவைகள் தம் சிறகுகள் படபடக்கப்
பரவசமுற்றுத் திரிந்தன

சுவர்களிலும் புற்களிலுமாய்
சாயும் வெய்யிலில்
அழகு காட்டும் சிறுமியின் முகம்

அந்தத் தேக்கிலைகளில்தான்
என்னவொரு பிரகாசம்!

எண்ணெய் தடவிக்கொண்டு
குளியலுக்குத் தயாராகி நிற்கின்றன
சிறார்கள் போல
பளபளக்கும் தென்னங்கீற்றுக்கள்

கீதாரிப் பெண்கள்
துரிதப்படுத்துவதைக் கண்டுகொள்ளாமல்
இக்கணம் விருந்தாகி வந்துள்ளதென்று
மேயுமின்பம் திளைக்கின்றன
வெள்ளாடுகள்

பலமுறை அப்படிப்
பார்த்ததுதான் என்றாலும்
இரட்டை வானவில்
இரட்டை மகிழ்ச்சிதான்

வலுக்காத மழைத்தூரல்
காற்றில் திசை மாறிக்கொண்டு
இப்படியும் அப்படியும் பெய்கிறது
“காற்று வந்து இப்படிக் கலைக்கிறதே”
என்று வருந்துகிறார் என் மனைவி

காற்று ஒளி நீர் மண் யாவும்
ஒன்றிலொன்று மயங்கும்
லீலை அல்லவா இது?

மழை சற்று ஓய்ந்தபோது
நெடிய ஜன்னலருகே
நாற்காலியிட்டு அமர்ந்துகொண்டேன்

முகத்தில் துடைப்பதுபோல்
அகத்தில் துடைக்கிறது
என்னையொரு சிறுவனாக்கி
வயதழிக்கும் மழைக்காற்று

பள்ளிவிட்டுத் திரும்பும் சிறுமிகள்
தூரல் துய்க்கும் தூமலர் முகத்தில்
சிரிக்கும் அழகேந்திச் செல்கிறார்,
சைக்கிள் கேரியரில் புத்தகப் பை
நனைவதன் கவலை ஏதுமின்றி

தாளமிடும் தகரக்கூரைக்குக் கீழே
என் ஸ்கூட்டரும்கூட
சிலிர்த்துக்கொண்டதாய்த் தோன்றியது

கண்ணாடி அணியாது வெளிக்கிளம்பினேன்
ஈரமழைக் காற்றின் ஸ்பரிசம்
வேண்டி நின்றன என் கண்கள்

ஏழெட்டு நாட்களே ஆன நாய்க்குட்டிகள்
புளகித்துப் புரள்கின்றன
வனத்துறை அலுவலகத் திருப்பத்தில்.
தம் வாழ்வில் அவை காணும்
முதல் மழை அல்லவா இது?
வாழ்த்துக்கள் பிள்ளைகளே!

நல்லுயிர்கள் இருப்பனவால்
எல்லோர்க்கும் பெய்த மழை
இன்பம் நல்கிற்று
மனிதனுக்கும்கூட.


No comments:

Post a Comment