Thursday, June 8, 2017

வெறுமனே பார்த்திருந்ததில்...

Image result for child eyes

உன் சமூகம்
எனக்கு முன்னும் பின்னும்
இடமும் வலமும்
மேலும் கீழும்
என்னிலுமாய்
என்னுடன் செல்கிறது

எத்திசையிலும்
தூர அளவேதும் இல்லை நினக்கு
சரியாகச் சொன்னால்
திசைகள் என்பதே இல்லை

கேட்கவோ தேடவோ
தட்டவோ இல்லை நான்
வெறுமனே பார்த்திருந்ததில்
அகப்பட்டுவிட்டாய் நீ

கூடுகளின் மகிமை அறிந்தவனே
கூண்டுகளை உடைக்கிறான்
நின் காதலின் ஸ்பரிசத்தால்
எனது கூண்டே ஒரு கூடாயிற்று

ஒரு குழந்தையினது போல
வார்த்தை மாம்சமானது
அர்த்தம் அழகாயிற்று
கால நியதியில்
சொல் மரூஉ ஆனபோதும்
அர்த்தம் அதுவேதான் அல்லவா?

மௌனமாய் அரும்பியிருத்தல்
ஒவ்வொரு சமயம்
ஒரு யுவதியின் நகிலென
கசிந்துருகித் தொழுதல்
ஒவ்வொரு சமயம்
ஒரு தாயின் முலையென

கன்னமே இல்லாதவன்
பெறாமல் போகலாம்
அறைகளேதும்
இழந்து போகிறான் அவன்
முத்தங்களை எல்லாம்

மனிதகுமாரன் (பனீஆதம்)
அப்பத்தால் மட்டுமே ஜீவிப்பதில்லை
என்னும் ஞானத்தைச்
சுவைத்துக்கொண்டிருக்கிறேன்
இந்த நோன்பு மாதத்தில்


No comments:

Post a Comment