Thursday, June 8, 2017

நீர்வார் கண்

எப்பருவமாயினும்,
நோன்பிருக்கும் மாதத்தில்
இரண்டொரு மழையுண்டு மகனே!

முன் தொழுகை செய்யாது
அமர்ந்துவிட்டேன்
பள்ளியின் வெண்பளிங்குத் தரையில்

சாளரத்தின் விளிம்பிலாடிய
பசிய தேக்கிலை ஒன்றைப்
பற்றிப் பிடித்துக்கொண்டது மனம்
பிரார்த்தனைக்கு அதனையொரு
பற்றுக்கோடென

மண்ணின் மார்பும் வயிறும்
வெடித்துக்கிடக்கும் காட்சிகள்
சகிக்கவில்லையே இறைவா!

நீரெனும் அருங்கொடை அமிர்தம்
என்று நினைக்கவும்
விழியிரண்டும் ஈரமாயின

நேற்று மாலை நிகழ்ந்துவிட்டது
அந்தப் பேரதிசயம்

ஒரு மாத காலமாய்
நிலத்தின் மீது உக்கிரமெழுதிய
சூரியன்
மண்ணில் யாது தரிசித்து
அப்படி அழகன் ஆனானோ?

இத்தனைக் கோபத்திற்கும்
கருகாது காதலித்து நிற்கும்
மரங்களைக் கண்டுதானோ?

சாய்ந்த வெய்யில் படிந்த பசுந்தழைகள்
மழையை முன்னறிவிக்கும் குளுந்த காற்றில்
சிறு குருவியின் சிறகுகள் போல்
படபடத்து ஒளிர்ந்த அக்காட்சியில் அடைந்தேன்
உயிர்வரை சிலிர்ப்பு ஒன்றை

ஒருநாள் மின்வெட்டு என்னும்
திருநாளாய் இருந்ததால்
நோன்பு திறக்க ஏதேனும் வாங்கிவர
ஸ்கூட்டரைக் கிளப்பினேன்

”மிகைமின் மாநிலமாம்” என்று
யாரோ ஒருவர் அங்கதம் பேசி நகர்ந்தார்
என் செய்ய?
உள்ளொளி பெருக்குவார்க்கல்லாது
மின்வெட்டுத் தாங்குதல் அரிதல்லவா?

நல்லோர் பலருள்ளார் மின்வாரியத்தில்
என்ன பாடு படுகின்றாரோ இப்போது
என்றெண்ணினேன்.
ஒவ்வொரு சோலியிலும் உண்டுதானே
அவரவர்க்குமான பாடுகள்?

கருத்துத் திரளும் மேகங்களினூடே
விமானமொன்று பறந்தது
அழகை உணராது ஊடறுத்துச் செல்லும்
அறிவின் வேகமோ அது?

குளிர்பானமும் சமோசாவும்
வாங்கித் திரும்புகையில்
தண்துளிகள் விழத்தொடங்கின
நனைவதற்குள் வீடடைய விழைந்து
வேகம் கூட்டின வாகனங்கள் எல்லாம்

’நனையலாம் நனையலாம்’ என்று
ஆர்வம் கூடிற்று மகளுக்கு

விண்மீன்கள் எல்லாம்
நீர்வார் கண்கள் ஆனாற்போல்
மாமழை பொழிந்திடாதோ?     
என்று நோக்கியபடிச் சென்றோம்

மரங்களுடன் மாடுகளுடன்
மலைப்பாறைகளுடன்
கட்டடங்களுடன்
யாமும் முற்றும் நனைய
சித்தம் கொண்டோம்

சாலையினோரம்
சில தள்ளுவண்டிகள்
அவ்வப்போது வானம் பார்த்தபடி
அவசரம் அவசரமாய்
நூடுல்ஸ் போட்டுக்கொண்டிருக்கிறார்
சகாக்களுடன் சகோதரர் ஒருவர்.
வழக்கம் போல் திருப்ப மூலையில்
கோபக் கிழவரின் வடைக் கடை.
நடுத்தர வயதுப் பெண்மணி
முல்லையும் ஜாதியும் கட்டி விற்கிறார்.
சாத்துக்குடி ஜூஸ் ரூ.20 என்று
அறிவிப்புத் தொங்குமொரு சர்பத் வண்டி.

பருவங்கள் எல்லாமும்
நோன்பிருக்கும் மாந்தர்க்கு
மழை தரும் உணர்வென்ன மகளே?No comments:

Post a Comment