Tuesday, June 6, 2017

பருந்தின் பாடல்

Related image

ஜுன் 5 “உலகச் சுற்றுச்சூழல் தினம்” என்றது செய்தித்தாள். அப்படியா? என்று வியந்துகொண்டேன். யார் இதையெல்லாம் நிர்ணயம் செய்கிறார்கள். உலக அழகி என்னும் அறிவுப்புக்களைப் போன்ற அபத்தங்களாகவே இந்த நாள் குறிப்புக்களும் படுகின்றன. இதற்கான நாள் அதற்கான நாள்... எனக்கோ எல்லாம் எல்லா நாளிலும் சாஸ்வதம். மொத்த வாழ்வும் ஒரு நாள். அதுவே எல்லாக் குறிப்புக்களையும் கொண்டுள்ளது.

      “இயற்கையோடு வாழவும், விளையாடவும் நேரம் ஒதுக்குங்கள்” என்னும் தலைப்பிலொரு கட்டுரை (தி இந்து, திங்கள் ஜூன் 5, 2017; ப.5.). அப்படிச் சொல்ல வேண்டிய நிலையில் நாம் ஆகிவிட்டோம் என்பதே துயர்தான். காற்றோடு விளையாட நேரம் ஒதுக்குங்கள் என்று சொல்லலாம், காற்றோடு வாழ நேரம் ஒதுக்குங்கள் என்று சொல்ல முடியுமா? ஒவ்வொரு கணமும் சுவாசிக்க அது வேண்டுமே? இயற்கை நமக்குக் காற்றினைப்போல் அவசியமான ஒன்று என நாம் உணரத் தவறிவிட்டோம் என்பதையே இத்தலைப்பு உணர்த்துகிறது.

      ”இயற்கையோடு மக்களை இணைத்தல்” (Connecting People with Nature) என்னும் அடிக்கருத்தை வைத்து எழுதப்பட்ட அக்கட்டுரையில் இணைத்தலுக்கான வழிமுறைகள் சிலவற்றை மதுரை அமெரிக்கன் கல்லூரியின் விலங்கியல் பேராசிரியர் எம்.ராஜேஷ் மிகுந்த அக்கறையுடன் சொல்லியிருந்தார்.

      ”இயற்கையை ரசிக்கும்போது இறைவனின் படைப்பில் இவ்வளவு அற்புதமா, எவ்வளவு அழகாக இருக்கிறதே என்று சொல்லும்போது, நம்மை அறியாமலேயே நம்முடைய தசை நார்கள் சுருங்கி விரியும்போது இயற்கையோடு இணைகிறோம். நமக்குக் கூடுதல் சக்தியும் சிந்திக்கும் திறனும் ஏற்படுகிறது.
     
”வனப்பகுதிக்குள் செல்வதென்றால் நடந்துதான் செல்ல முடியும். அப்படிச் செல்வதால் நல்ல உடற்பயிற்சியும் காற்றும் கிடைக்கும்.” என்றும்,

      ”காடுகளுக்குச் சென்று வந்தால் இயற்கையாகவே மனதில் மாற்றம் நிகழ்கிறது. அதனால், வீட்டுக்கு அருகில் இருக்கும் இயற்கையான ஒரு இடத்துக்குச் செல்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இப்படி தினமும் இயற்கையோடு இணைந்து வேலை பார்த்தால் சுற்றுச்சூழல் நமக்கு உகந்ததாக மாறும்” என்றும் அவர் சொல்லியிருந்த கருத்துக்களில் எல்லாம் ஒரு மனிதமையப் பார்வை (Anthropocentric view) இருப்பதைக் கண்டேன். அழுது அடம் பிடிக்கும் வால் பிள்ளையைச் சமாதானப்படுத்த அதனை தாஜா செய்து சாம-தான முறைகளில் கெஞ்சுவது போல் இந்த அறிவுரைகள் நம் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இயற்கையின் எதிர்வினை பேத-தண்ட முறையில்தான் இருக்கும் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நிலநடுக்கங்கள் ஆழிப்பேரலைகள் சூறாவளிகள் என்று எத்தனை முறை நம்முடன் பேசிவிட்டது?

Image result for saleem khan chennai environmentalist

      நாளேற, வாட்ஸ்-அப்பில் ஒரு செய்தி வந்திருந்தது. சுற்றுச்சூழல் மற்றும் பருவகால மாற்றம் பற்றி ஆய்வு நிகழ்த்திவரும் விஞ்ஞானி சலீம் ஃகான் அனுப்பியிருந்தார் (அவர் என் மனைவியின் ஒன்றுவிட்ட தம்பி.) தி இந்து ஆங்கில நாழிதளின் மெட்ரோ ப்ளஸ் இணைப்பில் சென்னையில் இந்நாளை முன்னிட்டு நிகில்.அஸ்ரானி என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றின் க்ளிப்பிங் அது. சலீம் ஃகானின் மேற்கோள் ஒன்று அதில் இடம்பெற்றிருந்தது: “நாம் விழிப்படைந்து உணர்ந்து நமது வாழ்முறையைத் தேர்வு செய்து, உலகளாவிச் சிந்தித்து ஊர் சார்ந்து செயல்பட்டு வன்முறையற்றுப் பணியாற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியம். தமது வாழ்வுக்கு அலையாத்திக் காடுகளையே முழுவதும் சார்ந்திருக்கும் பிச்சாவரத்தின் இருளர்கள் போன்ற சிறு சமூகங்கள் பல இருக்கின்றன. கடற்கரைப் பகுதிகளில் நிகழும் இயற்கைப் பேரிடர்களின் போது அலையாத்திகள் காப்பரண் ஆகின்றன. நாம் இப்போது செயல்படாவிடில் அலையாத்திகள் விரைவில் அற்றுவிடும் என நான் அஞ்சுகிறேன்.”   
     
 ”தி க்ரீன் புக்” என்னும் தலைப்பிட்ட அக்கட்டுரையில் முகப்புரையாக அஸ்ரானி பின்வருமாறு எழுதியிருந்தார்: “NGO-க்களும் கார்ப்பரேட்களும், குடியிருப்புச் சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று உலக சுற்றுச்சூழல் தினம் பேணுகின்றனர். நீங்கள் உமது பங்கினைச் செய்கின்றீரா?” (NGOs, Corporates, housing societies come together today to commemorate World Environment Day. Are you doing your bit?)
      
இத்தகைய தூண்டும் பரப்புரைகளில் எனக்குப் பெருஞ்சலிப்பே ஏற்படுகிறது. யாரெல்லாம் காடழிவின் பெரும்பங்களிப்போரோ அவர்களே இயற்கையின் காப்பாளர்கள் என்பதான முரண் இவ்வரிகளில் உறுத்துகிறது. நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்தைக் குறைப்பதில் பங்காற்றாத எவனும் இயற்கைப் பாதுகாப்பில் தானொரு அங்கம் என்று சொல்லிக்கொள்ள நியாயம் இல்லை. உண்மையில் இயற்கை அழிதலின் காரணிகளாகத் தாமிருப்பதன் குற்றவுணர்வு மேலடுக்கு மக்களை உளைப்பதன் பின்னணியில்தான் அத்ற்கொரு பிராயச்சித்தம் தேடும் முயற்சியாக இம்மாதிரியான நாட்கள் குறிக்கப்பட்டுப் பேணப்படுகின்றன. அன்றொரு நாள் மூக்குச் சிவக்கக் கைக்குட்டையை நனைத்தால் மனப்பாரம் நீங்குமல்லவா?
            
இம்மாதிரி நாட்களில் நாம் செய்வன எதிர்மறை விளைவுகளையாவது ஏற்படுத்தாமல் இருக்கவேண்டாமா? ”சேவ் நேச்சர்” என்னும் வாசகம் லோகோவுடன் அச்சிடப்பட்ட ஒரு கோடி டி-ஷர்ட்டுகள் இந்நாளுக்கெனத் தயாரிப்பீர்கள் (அதனை அணிந்து கொண்டு மேரத்தான் ஓடுவீர்கள்). அந்தத் தயாரிப்பு ஒரு பிட் அளவுக்குச் சுற்றுச்சூழலை அழிக்கும். இயற்கையை விதந்தோதும் வாசகங்களுடன், அது நமக்குத் தரும் நன்மைகளை விளக்கும் வரிகளுடன் வினைல் விளம்பரங்களும் துண்டறிக்கைகளும் அச்சிடுவீர்கள். அச்செயலில் மேலுமொரு பிட் அளவுக்குச் சுற்றுச்சூழலை அழிப்பீர்கள். அன்றொரு நாள் மட்டும் கார் கிளப்ப மாட்டீர்கள். இயற்கை அப்படியே பூரித்து விடுமாக்கும்? உங்கள் சுய ஏமாற்றை உணருங்கள் பிட்டிஸென்களே!

      அது சரி, இன்று எனது ’பிட்’டுக்காக நான் என்ன மண் சுமந்தேன்? என்று எண்ணினேன்.
    Image result for chinese paintings birds

  காலையில் காற்று வாங்கியபடி வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்திருந்தேன், பசிய புற்களையும் பூவிட்டிருக்கும் பப்பாளிச் செடியையும் சுற்றுப்புற மரங்களையும் பார்த்தபடி, நாலைந்து விதப் பறவைகளின் உஷை காலத்து கீதத்தை ரசித்தபடி. இன்று மழை வரவேண்டும் என்னும் பிரார்த்தனையுடன் வான் பார்த்தேன். (மழைக்காலத்தை விடவும் கோடை காலத்தில்தானே நமக்கு மழை அதிகம் தேவை? என்று முல்லாவின் ஞானத்துடன் கேட்டுக்கொண்டேன்.)

      செடி நட வேண்டும் என்கிறார்கள். என் விரல்களின் நக இடுக்குகளில் மண் ஏற பலமுறை நட்டிருக்கிறேன். அப்படியாக முற்றத்தில் நட்டுவைத்து இப்போது மதிலுக்கு மேல் தலை நீட்டுமளவு வளர்ந்து வந்திருக்கும் வேங்கை மரக்கன்று கம்பிவேலியுடன் சாய்ந்துகிடந்தபோது தூக்கி நிறுத்திக் கடுங்காற்றிலும் வேலி சாயாதபடி உடன் கழியொன்று நட்டுக் கட்டிவைத்தேன்.

      இன்னொரு நிகழ்வு. குமுளியிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தோம். இரு மருங்கும் மலைக்காட்டில் கனத்த நெடுமரங்கள். அவற்றின் பேருருவை அவதானிக்கப் பிள்ளைகளைப் பழக்கினேன். இயற்கை பற்றி ரால்ஃப் வால்டோ எமெர்சன் எழுதியது ஞாபகம் வந்தது. இயற்கையின் முன் மனிதன்தான் எவ்வளவு சிறியவன் என்னும் உணர்வைத் தூண்டும் பார்வையை அதில் அவர் நல்கியிருப்பார். விரிவானம் அன்று, அந்தப் பணிவுணர்வைத் தூண்ட இது போன்றதொரு நெடுமரமே போதும் என்று பட்டது. அப்போது மகனிடம், “இந்தக் காட்டுச் சாலையைப் போலவே இங்கிருந்து திருச்சி வரை இருந்தால் எப்படி இருக்கும்?” என்று கேட்டேன். அதனையே என் மனத்தின் வேட்டலாக அல்லாஹ்விடம் வைத்தேன்.

Image result for chinese paintings birds
      குறுங்கவிதை ஒன்று மனதில் தோன்றிற்று. பிள்ளையின் வாய்க்குள் ஒரு கற்கண்டு துண்டு போல் அதனைப் பலமுறை சொல்லிப்பார்த்தேன்:

”கிளைகளெல்லாம் கவிஞர்கள்
பூக்களும் கனிகளுமாய்

பறவைகலெல்லாம்
தீங்குரல் இசைக்கும்
பாடகர்கள்

ரசிகனாய் இருப்பதினும்
மனிதன் பெரும் பேறு
வேறுண்டோ?”


      எம்.ராஜேஷ், சலீம் ஃகான், நிகில் அஸ்ரானி ஆகியோரைப்போல் நானுமோர் சூழ்நிலைக் கைதிதான். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடம் செய்யப்படும் கருத்துப்பரப்புப் பணிகளிடம் நான் இன்னும் பேராசையுடன் எதிர்பார்க்கிறேன் என்றே தோன்றுகிறது. ஏனெனில், இயற்கைப் பாதுகாப்பில் எனது கண்ணோட்டம் கொஞ்சம் வேறுமாதிரி. சுருங்கச் சொல்வதெனில், ecology கொண்டு இயற்கையைப் பாதுகாக்க முடியாது, அதற்கு ‘deep ecology’ வேண்டும்.

      சூழியல் என்னும் அறிவியற் துறையின் போதாமைகளையும் அது தந்த ஏமாற்றங்களையும் கண்டு நொந்த பின்னர் உருவானதோர் அறிவியற்புலமே ஆழ்-சூழியல் (Deep Ecology). இயற்கை முழுவதையும் ஒற்றை உயிரியாய்க் காணும் முழுமை அணுகுமுறையை (holistic approach) அது வலியுறுத்துகிறது. புழுவாயினும் பூச்சி ஆயினும் எவ்வொரு உபவுயிரியும் மனிதனுக்கு எவ்விதத்திலும் கீழானது அல்ல, மனிதன் எவ்விதத்திலும் பிற உயிர்களினும் மேலானவன் அல்லன் என்று அது சொல்கிறது. கீழ்-மேல் என்னும் வஞ்சப் பிரிவினையை உயிரினங்களிடையே பாவிக்கலாகாது என்று போதிக்கும் தத்துவம் அது. மனிதமையச் சூழியலை அது ஒரு குறுகிய அல்லது ஆழமற்ற (narrow or shallow) அணுகுமுறையாகக் கண்டு புறந்தள்ளுகிறது.

      காட்டைப் பற்றிய தகவலறிவை அல்ல, அதன் மீதான ரசனையையே மக்களிடம் வளர்த்தெடுக்க வேண்டும் என்று ஆழ்-சூழியல் சொல்கிறது. ஒரு பேராசிரியனாக, people and environment என்னும் பொருண்மையைத் தகுதித் தேர்வுக்கான நோக்கில் பல ஊர்களில் பல மாணவர்களுக்குப் பாடம் நடத்தியபோதும், அதனை ஒரு வாய்ப்பாகக்கொண்டு இயற்கையைப் பற்றிய ரசனையைத் தூண்டவே முயற்சி செய்தேன். அதற்கெனப் பெரிதும் மெனக்கெட்டேன். பாடச் சட்டகத்துக்கு வெளியே ரொம்பவும் நகர்கிறேன் என்னும் விமர்சனமும் பெற்றேன். நம் பாடத்திட்டங்கள் தகவல்களால் நிரம்பி ரசனை அற்று நீர்த்துப்போய் உள்ளன. அவற்றில் ரசனையேற்றுவது நம் முதற்கடமை. (குழந்தைகளே! உங்கள் பாடநூற்களை ஈரமாக்குங்கள்!) 
 
நாள் நகர்ந்து போயிற்று. அந்தியில் நோன்பு திறந்த பின்னரும் சூழலியற் சிந்தனைகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன, பல கோணங்களில். வேறு என்னவெல்லாம் செய்திருக்க முடியும்?

”காடுகளில் உள்ளது உலகின் ஆயுள்” (”In wilderness is the preservation of the world”) என்று ஹென்ரி டேவிட் தோரோ சொன்ன வைர வாக்கியம் ஞாபகம் வந்தது. கூடவே, சென்ற மாதம் சுற்றிப்பார்த்துவிட்டு வந்த கேரள வனங்கள் நினைவில் எழுந்தன. இயற்கை சார்ந்து வாழும் பழங்குடிகளை நாகரிகத்தார் சுரண்டியழிப்பது பற்றி யோசித்தேன். மெல் கிப்சன் இயக்கிய ’அபோகாலிப்டோ’ மற்றும் டேனியல் க்வின் எழுதிய “இஸ்மயீல்” என்னும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதும் ஆந்தொனி ஹாப்கின்ஸ் நடித்ததுமான ’இன்ஸ்டின்க்ட்’ ஆகிய படங்கள் ஞாபகம் வந்தன. (”நாம் கைவிட வேண்டியது ஒன்றே ஒன்றுதான், நமது ஏதேச்சதிகாரம். நாம் இன்னும் மன்னர்கள் அல்லர், கடவுளர்கள் அல்லர். நாம் அதை விட்டுவிட முடியுமா? விலை மதிப்பற்றதல்லவா, இந்த அதிகாரம்? மாபெரும் தூண்டுதல் அல்லவா, கடவுளாய் இருத்தல்?”  என்கிறார் உயிரியல் விஞ்ஞானி எதான் பாவெல், இத்திரைப்படத்தில்.)

இயற்கையின் மீதான ரசனையைத் தூண்டுமான உமக்குப் பிடித்த பாடல்கள் ஒன்றிரண்டை வழியவிட்டபடிக் கண்மூடி அமர்ந்திருக்கலாம். அப்படி நானும் “தென்றல் வந்து தீண்டும்போது...” மற்றும் “இளங்காத்து வீசுதே சுதியோடு பேசுதே...” ஆகியவற்றை மனத்தினுள் இழையவிட்டேன். (நவீன மேற்கிசைக்கு இந்தியாவின் பதில் என்பது போல் பார்க்கப்படும் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பட்டிக்காட்டு இளவயது உழவன் போன்று “மாரிமழ பெய்யாதோ மக்க பஞ்சம் தீர /  சாரமழ பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற...” என்று பாடிய பாடலொன்றுண்டே, நினைவுள்ளதா?)

இயற்கை பற்றி இயற்கையில் தோய்ந்தோர் சொன்ன வரிகளைக் கொஞ்ச நேரம் வாசித்திருந்தேன். இயற்கையில் வசித்தல் என்றால் என்ன? இதோ ஒரு ஜென் கவிதை:

”எனது குடிலை ஏன் நான்
மலைக்காட்டில் அமைக்கிறேன் என்று
நீங்கள் வினவுகின்றீர்

நான் புன்னகைக்கிறேன்
மௌனமாயிருக்கிறேன்

எனது ஆன்மாவும்கூட
சும்மாயிருக்கிறது
எவருடைய உடைமையும் ஆகாத
வேறொரு உலகில் வசிக்கின்றது அது

கொன்றை மரங்கள் பூக்கின்றன
நதியோடை பாய்கிறது”
                  -லீ போ.
Image result for zen forest

இயற்கையில் தன்னை இழத்தல் என்றால் என்ன? இதோ இன்னொன்று:

”பறவைகள் விண்ணுள் மறைந்துவிட்டன
கடைசி மேகமும் கரைந்து போகிறது

யாம் உடன் அமர்ந்திருக்கிறோம்,
மலையும் நானும்,
மலை மட்டுமே என்றாகும் வரை”
                  -லீ போ.
“உலகின் இறுதி நாள் இது என்று உறுதியாய்த் தெரிந்தாலும் உன் கையிலிருக்கும் மரக்கன்றை விட்டுவிடாதே. நட்டு வை” என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள். லீ போ-வைப்போல் இயற்கையில் தானழிந்து அக அமைதி கண்டவர்கள்தான் அத்தருணத்தில் அப்படிச் செயல்பட முடியும். அந்த போதம் (conscience) உண்டாக்கப்பட வேண்டும் என்பதையே இந்த ஹதீஸ் குறிப்புக் காட்டுகிறது என்று விளங்குகிறேன்.

Image result for osho meditation

இயற்கை ரசனையை என்னுள் ஆழமாய்த் தூண்டி வளர்த்தவர்களுள் ஓஷோவை இன்று நினைவு கூர்ந்தேன். தனது கம்யூனை ஒரு காட்டுக்குள் இருப்பது போலவே அமைத்தவர் அவர். சுவாங்சூ அரங்கக் கட்டடத்தின் மீது பெருமரம் ஒன்று சாய்ந்து வளர்வது பற்றி எச்சரிக்கப்பட்ட போது, ”கட்டடத்தை வளைத்துக்கட்டுங்கள், மரத்தை வெட்டக்கூடாது. நான் என் காட்டினை நேசிக்கிறேன்!” என்று சொன்னவர். ”இயற்கையுடன் இயைந்திருப்பதே மதம் என்பதற்கான என் வரையறை” என்றும் ”நாம் அனைவரும் விருந்தாளிகள். ஆனால், இந்த அழகிய பூமியை ஒரு புகைவண்டி நிலைய விருந்தினர் விடுதிபோல் பயன்படுத்தாதீர்கள். இது ஒரு காத்திருப்பு அறை அல்ல. இப்பொழுதுக்கு, இது நம் இல்லம். இன்னொருவருக்கான வீடாக அது நீடித்திருக்கும். பத்து நிமிடத்தில் என் ரயில் வருகிறது, நான் போய்விடுவேன். காத்திருப்பறையை நான் அசிங்கம் செய்து போனால் யாருக்கு என்ன கவலை? என்று கஞ்சத்தனமாக யோசிக்காதே. உன்னைத் தொடர்ந்து வரப்போகும் விருந்தினருக்காக இந்தப் பூமியை இன்னும் கொஞ்சம் அழகானதாக, இன்னும் கொஞ்சம் வாசமானதாக விட்டுச் செல்” என்றும் சொன்னவர்.

இறுதியாக, அமெரிக்க ஜென் கவிஞர் ஜேம்ஸ் வில்லியம் ஹேக்கட் (1929-2015) எழுதிய ஒரு கவிதையுடன் இந்நாளின் சிந்தனைகளை முடிக்க எண்ணுகிறேன். ஆழ்-சூழியல் என்னும் கோட்பாடு தனது வேர்களை கீழைத்தேய ஆன்மிக மரபுகளிலேயே கண்டுகொண்டது. அக்கோட்பாடு மெல்ல உருவாகி வந்ததில் கீழைத்தேய ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த கவிஞர்களின் பங்களிப்பு அழுத்தமானது. வால்ட் விட்மன், எமர்சன், தோரோ, கேரி ஸ்னைடர், ரொபர்ட் ப்ளை போன்றோரின் எழுத்துக்களில் கீழக்கின் ஆன்மிக ஒளி, இந்து ஞான மரபு, தாவோ மற்றும் ஜென் மரபுகளின் தாக்கம் இருப்பதைக் காணலாம். அவர்களில் ஒருவரான ஜேம்ஸ் வில்லியம் ஹேக்கட் ஆங்கிலத்தில் ஜென் ஹைகூ கவிதைகள் எழுதிப் புகழ் பெற்றவர். 1960-ஆம் ஆண்டு கனடா நாட்டின் கடற்பகுதியில் உள்ள பைலேட்ஸ் தீவுக்கு அவர் சென்றபோது மனித நாகரிக ’வளர்ச்சி’ (?) காடுகளை அழித்து வருவதைக் கண்டார். தனது ஆதங்கத்தை “பெருவனத் தீவு” (Island of wilderness) என்னும் கவிதையாக வெளிப்படுத்தினார். இரண்டு பகுதிகளைக் கொண்ட அக்கவிதையின் இரண்டாம் பகுதியை இங்கே தமிழ் செய்திருக்கிறேன்:
Image result for pylades island
பருந்தின் பாடல்
தன் அருட்கொடைகளுக்கெல்லாம்
இவ்வுலகில் எத்துனை அபாயத்தில் உள்ளது
காட்டுத்தீவு

காற்றில் தன் பெருங்குரலால்
என்னில் எதிரொலிக்கும்
காணாத பருந்தொன்றின் பிரார்த்தனை கொண்டு
என் மேல் கவியும் அதன் எச்சரிப்புக் குறிப்புக்களை
இங்கே இசைக்க முனைகிறேன்

மனிதா,
உன் நகரங்கள் நிலத்தை வீணடிக்கவும்
உன் தொழிற்சாலைகளின் விஷம்
காற்றிலும் நீரிலும் கலந்திடவும்
எம் காட்டின் புனித மௌனத்தை
உன் இரைச்சலிடும் எந்திரங்கள் அறுக்கவும்,
பூமியின் மீது மனிதத் துயரை
உன் குருட்டுப் பெருமிதத்தின் வழியே பார்.
தனக்கும் அதிகமதிகமாய் அவன்
பெருக்கிக் குவிப்பதன் பேரிடர் காண்.

நீயே நினக்கு எப்போதும் எதிரி எனினும்
அதீத அதிகாரமும் பேராசையும் பீடித்து
உயிர்கள் அனைத்திற்கும் ஓர் அச்சுறுத்தல் ஆனாய்.

உன் மனத்தின் அபத்தங்கள்
வாழ்வை ஒரு கொடுங்கனவாய் மாற்றும் முன்,
--இன்னமும் அவகாசம் இருக்கின்றது--
இக்கணத்தின் ஒருமைக்கு விழித்துக்கொள்,
பருந்தின் பாடல் சொல்வதைக் கேள்:

தத்வமஸி – நீயே அது!


No comments:

Post a Comment