Monday, June 19, 2017

பெரியன்

Image result for god is great
திருமண வைபவ மண்டபத்தில்
சேடிகளுடன் சேர்ந்து (சி.டி.யில்தான்)
தக்பீர் முழக்கம் பாடிக்கொண்டிருந்தார்
நாகூர் ஹனீஃபா:
அல்லாஹு அக்பர்
இறைவன் மிகப் பெரியன்

சிறுவயதில் அபத்தமாய்த் தோன்றியதுண்டு
எவ்வளவு பெரியவன் என்னும் கேள்வி.
அறிவுப்பூர்வமான கேள்வி அது என்றும்கூட!

இன்னமும் அதற்கு சீரியஸாய் விடையளிக்கும்
அறிவாளிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

நானொரு மண் துகள் எனில்
அவன் இப்பூமிப் பந்தோ?

நானொரு சிறுமீன் எனில்
அவன்தான் சாலப் பெருங்கடலோ?

நானொரு குறுங்கொசு எனில்
அவன்தான் விரிவானமோ?
(கொசுவை உவமை சொல்ல வெட்கமென்ன?)

நானும்தானொரு அணுத்துகள் எனில்
அவன் இப்பிரபஞ்ச முழுமையோ?

அல்லது அதனினும்
‘நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்த’
அண்டங்கள் எல்லாம் அடக்கிய
இப்பிரபஞ்சமேயொரு
‘இல்நுழை கதிரின் துன் அணு’
ஆகிவிடும்படிக்கு அத்தனைப் பெரியனோ?

இவ்வியப்புக்கள் எல்லாம் ஓய்ந்து போயின
உவமைகளில் உண்மை கவியவில்லை
எனும் உணர்தலில்

இவ்வெண்ணங்களில் எல்லாம் இருக்கிறதே
நானுமொரு இருத்தல்
அவனுமொரு இருத்தல்
என்னும் இருமையின் உறுத்தல்

அவனுடன் எப்பொருளும் இல்லாத
ஆதி முதற்றே அவன்
இருத்தலில் இணையிலி அல்லவா?

சிறிய என்று எதனையும் ஒப்பிட்டுச் சொல்ல
அவனன்றி வேறொன்று இல்லாதிருக்கும்
பெரியன் அப்பெரியன் அப்பெரியன்.



(குறிப்பு: இறைவன் பெரியன் என்பதை ஒப்பீட்டு அளவில் விளக்க முனைந்த அற்புதமான சிந்தனைகளில் ஒன்று மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் ‘திருவண்டப் பகுதி’யின் ஆரம்பத்தில் கிடைக்கிறது. ”அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் / அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி / ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் / நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன / இல்நுழை கதிரின் துன் அணுப் புரைய / சிறிய ஆகப் பெரியோன்” என்று இறைவனின் பெருமையை வியக்கிறார் அவர்.)

No comments:

Post a Comment