Sunday, June 25, 2017

வலது கையால் எழுதவில்லை


இந்தக் கல்வி ஆண்டுக்காகக் கல்லூரி திறந்ததும் வழக்கம்போல ஆசிரிய மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. NLP (Neuro-Linguistic Programming – நரம்பிய மொழிபியல் நிரலாக்கம்) என்னும் அணுகுமுறையில் வல்லுநரான திரு.தட்சிணாமூர்த்தி அந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக வந்து மூன்று நாட்கள் வகுப்பெடுத்தார். பொதுவாகவே இது மாதிரியான நிகழ்ச்சிகளில் முடுக்குநர்கள் எல்லாம் குறிப்பிட்ட கலைச்சொற்களையே மீண்டும் மீண்டும் பொழிந்து போரடிக்கச் செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இம்முறை முதலிரு நாட்களில் கொஞ்சம் அலுப்புத் தட்டினாலும் மூன்றாம் நாள் நிகழ்வு கலகலப்பாக இருந்தது. அதில் ஒரு பயிற்சி அடியேன் இக்கட்டுரை எழுதக் காரணம்.

Image result for hemispheres of the brain

      நமது மூளையின் இரு பாதிகளான இட மற்றும் வல மூளைகளின் தனித்தன்மையான செயல்பாடுகளைப் பற்றி விளக்கினார். இட மூளை உடலின் வலது பக்கத்துடன் நரம்பிணைப்புக் கொண்டுள்ளது, வல மூளை உடலின் இடது பக்கத்துடன் நரம்பிணைப்புக் கொண்டுள்ளது. இட மூளை தர்க்கம் பகுத்தறிவு கணித அறிவியற் சிந்தனைகள், ஆராய்ச்சி முதலிய ரீதியில் இயங்குகிறது. எனவே வலக் கரத்தால் எழுதுபவர்கள் இந்த அடிப்படைகளிலேயே சிந்தனைகளைச் சிறப்பாகப் பதிவு செய்வார்கள். வல மூளை கற்பனை, கவித்துவம், உள்ளுணர்வு, மாற்றுச் சிந்தனைகள், கலைத்துவம் முதலிய ரீதியில் இயங்குகிறது. எனவே இடக் கரத்தால் எழுதுபவர்கள் இந்த அடிப்படைகளில் சிந்தனைகளைச் சிறப்பாகப் பதிவு செய்வார்கள். இச்செய்திகளை அவர் ஓர் வரைவாக விளக்கிய பின்னர் அதைச் செயல் ரீதியில் கண்டுகொள்ள பயிற்சி ஒன்றைக் கொடுத்தார்.
      
”உங்கள் ஏட்டில் ஒரு பக்கத்தில் பட்டாம்பூச்சியைப் பற்றி எழுதுங்கள். இரண்டு நிமிட அவகாசம்” என்றார். அந்த அரங்கில் ஐந்நூறு பேராசிரியர்கள் இருந்தோம். இரண்டு நிமிடங்கள் கழித்து, “இப்போது உங்கள் ஏட்டில் அதற்கு எதிர்ப்பக்கத்தில் உங்கள் இடது கையால், பட்டாம்பூச்சியைப் பற்றி என்ன தோன்றுகிறதோ அதை எழுதுங்கள். இரண்டு நிமிட அவகாசம்” என்று சொன்னார். நான் ஏற்கனவே இடது கையால்தான் எழுதியிருந்தேன்! குசும்பு அல்ல. அடியேன் இடது கை எழுத்தாளன், எல்கேஜியில் இருந்தே!

      அவருக்கும் இந்தச் சந்தேகம் வந்திருக்க வேண்டும். “உங்களில் யாராவது இடது கையர் இருக்கின்றீர்களா?” என்று கேட்டார். நான் வலது கையைத் தூக்கினேன். அந்த அரங்கில் அடியேன் ஒருவன் மட்டுமே இடது கையன்! அவர் சொல்லாவிட்டாலும், நான் பிறகு பட்டாம்பூச்சியைப் பற்றி எனது வலது கையால் எழுதிப் பார்த்தேன். இரண்டு வயதுக் குழந்தை ஒன்று அப்படி எழுதுமெனில் அந்தக் கையெழுத்தை நிச்சயம் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்!

      சில வாலுண்டியர்களை (volunteers – ஓ, தமிழில் தன்னார்வளர் அல்லவா?) எழுப்பி அவர்கள் எழுதியதை வாசிக்கச் செய்தார். கணினிப் பேராசிரியை ஒருவர் ஆங்கிலத்தில் தான் எழுதியதை வாசித்தார். புழு நிலையிலிருந்து கூட்டுப்புழுவாகிப் பின் அது படிப்படியாகப் பட்டாம்பூச்சியாக மாறும் ”metamorphosis of a butterfly” – பட்டாம்பூச்சியின் மீவுருமாற்றம் பற்றி அவர் (வலக்கரத்தால்) எழுதியிருந்தார். இடது கையால் யார் என்ன எழுதினீர்கள் என்று கேட்டதற்கு அரபிப் பேராசிரியர் ஒருவர் எழுந்து ‘அது ஓர் வண்ணமயமான பூச்சி’ என்று வாசித்தார். அதாவது வல மூளை கவித்துவமாக சிந்திக்கிறதாம்! முடிந்தது பயிற்சி.

      இங்கே ஒருவன் இடது கையால் இரண்டு கவிதைகளை எழுதி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேனே, என்னை எழுப்பிக் கேட்கவேண்டும் என்று தோன்றாமல் போயிற்றே அவருக்கு? யாருக்கோ ஏதோ ஒரு வகை நல்லூழ் போலும்! இத்தனைக்கும் இரு கைகளாலும், எழுதிய கவிதைகளுக்கருகில் பட்டாம்பூச்சிப் படமும் போட்டு வைத்திருந்தேன். அதில் குறிப்பாக அடியேன் வலக்கரத்தால் வரைந்த பட்டாம்பூச்சி இருக்கிறதே, அடடா!, ஹிட்லரின் நாஜிப் படையினரிடம் சிக்கி வன்கொடுமைக்கு ஆளானது போல் இருந்தது! இறைவன் என்னை மன்னிப்பானாக!

Image result for lonely butterfly pictures

 நீங்கள் இருக்கிறீர்களே, அக்கவிதைகள் இரண்டும் உங்களுக்காகவே. ஹைகூ போன்று சிறிய கவிதைகள்தான். முதற்கவிதை,

      ”பூக்களே இல்லாத இவ்வனத்தில்
      எதைத் தேடிப் பறக்கிறது
      வண்ணத்துப் பூச்சி?”

      சிந்தித்ததில் இது ஒரு ஜப்பானிய ஹைகூ ஒன்றின் தழுவல் என்பது தெரிந்தது. செடிகளெல்லாம் காய்ந்து தீய்ந்து போன கோடை கால உக்கிரத்தைச் சொல்ல வந்த கவிஞர் ஒருவர் பின்வரும் ஹைகூவை எழுதினார்:

      ”ஆலய மணி மீது
      ஓய்ந்து அமர்ந்தது
      பட்டாம்பூச்சி”

Image result for butterfly

      நான் எழுதிய இரண்டாம் ஹைகூ, மேலே சொன்னபடி, பேராசிரியை தான் எழுதியதை வாசித்துக் காட்டியபோது அடியேன் என் ஏட்டில் கிறுக்கியது. அவர் சொன்ன அறிவியற் கருத்தை அப்படியே என் மனம், மன்னிக்கவும், வல மூளை கவிதையாக்கிற்று.

      ”இலை தின்ற புழு ஒன்று
      பூவாய் மலர்ந்த அதிசயம்
      பட்டாம்பூச்சி!”

      நினைத்துப் பார்த்ததில் இந்த ஹைகூவும்கூட ஏற்கனவே ஜப்பானிய கவிஞர் ஒருவர் எழுதியதை நினைவூட்டியது. இதில் என்ன இருக்கிறது? பட்டாம்பூச்சியை ஒரு பூவுடன் ஒப்பிட்டு சிலிர்த்திருக்கிறது. தோட்டத்தில் நடந்துகொண்டிருந்த கோபாயாஷி இஸ்ஸா என்னும் ஜப்பானியக் கவிஞருக்கு இதே ”காட்சிப்பிழை” (Visual Illusion) தோன்றியிருக்கிறது. அப்போது அவர் எழுதினார்,

      ”உதிர்ந்த மலர்
      கிளைக்குத் திரும்புகிறது
      வண்ணத்துப்பூச்சி!”

      இந்த ஹைகூ நினைவுக்கு வந்ததால் ஹைகூவை வேறு மாதிரி செப்பம் செய்தேன். இலை எங்காவது பூ ஆகுமா? கறிவேப்பிலை போல் புதினா போல் இலைக்கு மணம் இருக்கலாம். ஆனால் அது பூ ஆகுமா? இலை பூ ஆகத்தான் செய்கிறது. அதையே நான் உணர்த்த விரும்பினேன், இப்படி:

      ”இலை
      பூவாகப் பரிணமித்த
      அதிசயம்
      பட்டாம்பூச்சி!”

      அறிவியல் சொல்லும் மீவுருமாற்றம் என்னும் செயல்பாடு இங்கே ஒரு சிறூ கவிதையில் வியப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது. எப்படி? புழு இலையைத் தின்கிறது. அந்த இலையுணவு அதனுள் திரவங்களாக தசைகளாக மாறுகிறது. கூட்டுப்புழுவில் அது மெல்ல மெல்ல வண்ணத்துப்பூச்சியாய் வடிவ மாற்றம் பெறுகிறது. அவ்வகையில், இலை பட்டாம்பூச்சி ஆகிவிட்டதுதானே? இது அறிவியலின் தர்க்கம் அன்று. கவிதையின் தர்க்கம். ஒருவகையில் இது ஆன்மிக தர்க்கமும் கூட.

      இக்கட்டுரையின் தலைப்பை ஒட்டிய செய்தி இனிதான் தொடங்குகிறது!

Image result for ambidextrous

      மனித மூளையின் இட வலப் பகுதிகளின் செயல்பாடுகள் பற்றி திரு.தட்சிணாமூர்த்தி விளக்கிக்கொண்டிருந்த போது என் மூளையில் ஒரு மூலையில் பல்பு ஒளிர்ந்தது. இச்செய்திகள் எல்லாம் ஏற்கனவே தெரிந்திருந்தும், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஓஷோவின் நூலொன்றில் படித்தது, இதுவரை இந்த அடிப்படையில் இப்படிச் சிந்திக்காமல் போனோமே என்று வியப்பாகவும் இருந்தது. அது என்ன என்று சொல்லும் முன் ஒரு கொசுறுச் செய்தி: திரு.தட்சிணாமூர்த்தி ஓர் இரு-கையர். என்னங்க, எல்லாருக்குமே இரு கைகள் இருக்கிறதே? என்று கேட்க வேண்டாம். இரு-கையர் எனில் வலது மற்றும் இடது கைகள் இரண்டையும் ஒப்பான திறனுடன் பயன்படுத்துகின்றவர். குறிப்பாக, எழுதுவதில்! அவர் அப்படி எழுதியும் காட்டினார். இரண்டு கையெழுத்துக்களும் இரட்டைக் குழந்தைகள் போல் இருந்தன! அல்லது அவை இரண்டும்... ...  வேண்டாம் இது நோன்புக் காலம். (‘அழகான கண்களைப் போல் இருந்தன’ என்று சொல்லி உங்கள் கற்பனையை நான் தடுமாற வைக்க விரும்பவில்லை.)

      சரி, சீரியஸான விஷயத்திற்கு வருவோம். அவ்வரங்கில், மனித மூளையின் இரு பகுதிகளின் தனித்தன்மையான செயல்பாடுகள் பற்றிக் கேட்டுக்கொண்டிருக்கையில், சட்டென்று அதன் பின்புலத்தில் என் உள்மனம் குர்ஆனின் வசனப் பகுதி ஒன்றை வைத்துப் பார்த்தது. புதிய விளக்கங்கள் விரிந்தன. இறைப் பேரறிவின் அதிசயங்களை அந்த அர்த்தங்கள் உணர்த்திக்கொண்டே போயின. நபி (ஸல்...) அவர்களுக்கு குர்ஆன் என்பது மறைவெளிப்பாடாக அருளப்பட்ட நூல். அதை அவர்கள்தான் எழுதினார்கள் என்னும் தவறான கருத்து அவர்களின் காலம் தொட்டே இருந்துவருமொன்று. அதனை அவர்களின் எதிரிகள் ஒரு குற்றச்சாட்டாகவே வைக்கின்றனர். (பைபிளிலிருந்து நபியவர்கள் காப்பியடித்து எழுதிக்கொண்டார்கள் என்று யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரும் தூஷணம் செய்திருக்கிறார்.) இக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்து இறைவன் திருவசனமொன்றை அருளினான்:

      ”மேலும், இதற்கு முன்னிலிருந்து எதனையும் நீங்கள் ஓதவில்லை; மேலும், நீர் உமது வலது கையால் எழுதவுமில்லை; அப்படி இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்” (29:48).

      இத்திருவசனத்தின் நடுப்பகுதியை நான் நியாபகம் செய்தேன்: “வ லா தஃகுத்துஹு பியமீனி(க்)க” – ’நீங்கள் உமது வலது கையால் எழுதவில்லை’ என்று சொல்லியிருபப்தன் தாத்பர்யம் என்ன?

      ”வ லா தஃகுத்துஹு பியதி(க்)க” – நீங்கள் உமது கையால் எழுதவில்லை என்று பொதுவாகச் சொல்லியிருக்கலாம். அல்லது, இன்னும் பொதுவாக, ‘வ லா தஃகுத்துஹு’ – நீங்கள் எழுதவில்லை என்பதுடன் நிறுத்தியிருக்கலாம். ஏனெனில் எழுதுவது என்பதே கையால்தானே? அப்படித்தான், சில மொழிபெயர்ப்புக்கள் ’வலது’ என்பதைக் குறிப்பாகச் சிறப்பாக கவனிக்காமல் விட்டபடி மொழிபெயர்த்துள்ளனர்.

      ”உங்களுடைய கையால் நீங்கள் அதனை எழுதி(ப் பழகி)யவரும் அல்லர்” என்று பெயர்க்கிறார் அ.கா.அப்துல் ஹமீது பாகவி. ”உம்முடைய கையால் எழுதியதுமில்லை” என்று தருகிறது இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT) தமிழாக்கம். எழுதுதல் என்றாலே அது கையால்தானே, அதுவும் வலது கையால்தானே என்பது போன்ற பொதுப் புத்தியில் செய்யப்பட்ட தமிழாக்கங்கள் இவை. இப்படியான மழுப்பல்களால் அவ்வசனப் பகுதி தரும் ஆழமான அறிவுகளை நாம் அடையமுடியாமல் போகிறது.

      வார்த்தைக்கு வார்த்தை உள்ளபடி மொழிபெயர்த்துக்கொண்டு “நீர் உமது வலது கையால் எழுதவில்லை” என்று வாசிக்கும்போது பல ஆழ்ந்த அர்த்தங்கள் நம்மறிவில் விரிகின்றன.

      வலது கையால் எழுதுவது எனில் அங்கே இடது மூளையின் செயல்பாடு மிகைத்திருத்தல் வேண்டும். அது தர்க்க ரீதியாக, கணக்கிடல் ரீதியாகச் செல்லும். ’வலதுகையால் எழுதவில்லை’ என்பதன் உள்ளர்த்தம் தர்க்க ரீதியாகச் சிந்தனை செய்து எழுதவில்லை என்றாகிறது.

ஒரு நபியின் அறிவு என்பது மனித மூளையமைப்பைத் தாண்டியதாகும். உண்மையில் அது வல மூளையின் இயக்கமான தர்க்கத்துக்குக் கட்டுப்பட்டதும் அல்ல, இட மூளையின் இயக்கமான கற்பனைக்குக் கட்டுப்பட்டதும் அல்ல. அது தர்க்க ரீதியாக இயங்கலாம், கவித்துவமாகப் பேசலாம். ஆனால் அவ்விரண்டின் எல்லைக்குள் அடங்காது. அதற்கு அப்பாலான இறைத்தொடர்பின் உள்ளுதிப்பினைக் கொண்டே அனைத்தையும் பார்க்கிறது.

எனவே, குர்ஆன் என்பது வல மூளையின் இயக்கத்தில் நிகழும் கவித்துவக் காவியமும் அல்ல. இதனை இன்னொரு வசனம் நவிலக் காண்கிறோம்: ”வ மா அல்லம்னாஹுஷ் ஷிஃர வ மா யம்பகீ லஹு; இன் ஹுவ இல்லா திக்ருன்வ்வ குர்ஆனும் முபீன்” – “மேலும் நாம் அவருக்குக் கவிதையைக் கற்றுத்தரவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; திண்ணமாக இது இறைதியானமும் தெளிவான குர்ஆனுமே அன்றி வேறல்ல” (36:69)

Image result for old quran

”நீர் உமது வலது கையால் எழுதவில்லை” என்னும் வசனப் பகுதியை இவ்வாறு உளவியல் ரீதியாக விளங்கிக்கொள்ள ஒரு நிகழ்வை நோக்கலாம். நபியின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த, வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு அது. ஹுதைபிய்யா உடன்படிக்கை.

அந்நிகழ்வின் தன்மையை இங்கே ஞாபகம் செய்துகொண்டால் போதுமானது. மக்கத்திலிருந்து வந்த நிராகரிப்பாளர் குழு முன் வைத்த வரைவு மிகவும் தர்க்க ரீதியாகச் சிந்தித்துத் தமக்குச் சாதகமாகவும் முஸ்லிம்களுக்குப் பாதகமாகவும் அமைகின்ற நியதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனைக் கேட்ட உமர் (ரலி...) அவர்கள் உள்ளிட்ட அணுக்கச் சகாக்களும்கூட நபி (ஸல்…) அவர்கள் அந்த உடன்படிக்கையில் கையெழுத்து இடக்கூடாது என்று கருத்துச் சொன்னார்கள். ஏனெனில் அவர்களும் அந்த உடன்படிக்கையை தர்க்க அறிவிலேயே அப்போது காண்கிறார்கள். ஆனால், அகத்திலும் முகத்திலும் புன்னகை தவழும் நபி (ஸல்...) அவர்கள் அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு ஒப்பமிடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் அந்த உடன்படிக்கையை, தர்க்க அறிவின் எல்லைகளைத் தாண்டிய உள்ளுதிப்பின் அறிவு நிலையிலிருந்து நோக்கியிருந்தார்கள். அந்த நியதிகள் எல்லாம் பின்னாளில் தமக்கும் தம் குழாத்திற்கும் சாதகமாக மாறிவிடப் போவதை அவர்களின் தீர்க்கதரிசன அறிவு காண்கிறது.


எனவே, குர்ஆன் என்பது இதுபோல் நபி (ஸல்...) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களின் பின்னணியில் பொருத்தமுற அவ்வப்போது திருவசனங்கள் இறக்கப்பட்டு இருபத்துமூன்று ஆண்டுகளில் தொகுக்கப்பட்டது என்றபோதும் அது தர்க்க ரீதியாக எழுதிக்கொண்ட நூல் அல்ல; உள்ளுதிப்பாக நபிக்கு அறிவிக்கப்பட்டதே என்னும் கருத்தை “வலது கையால் எழுதவில்லை” என்னும் சொற்றொடர் கொண்டு அறிகின்றோம்.

அறுதி உண்மையை இறைவனே அறிவான்.


No comments:

Post a Comment