Saturday, October 22, 2011

தைல ஓவியம்


இறைவனின் வண்ணங்கள்
ஈரமாய்க் குழைந்திருக்கும்
தூரிகை நீ

கிழக்கிலும் மேற்கிலும்
கிட்டாத தைலம் கொண்டு
ஓவியம் தீட்டப்படும்
கேன்வஸ் திரை நான்

என் தூரிகையே!
இறைவனின் கையில்
கருவியாகும் உன்னுடல்
என்னொரு கிளையாலானது

வண்ணம் தீட்டும்
உன் குஞ்சம்
ஒளியாலான பூ.

தீற்றல்களின்
ஈரம் காய்வதே
என் சுவாசம்.

உன்னைக் கொண்டு
என்னில் தோன்றும்
பல்வித ஓவியங்கள்
ஒவ்வொரு முறையும்
மாறி மாறி

மரபு ஓவியம்
மாடர்ன் ஓவியம்
அவனதே எல்லாம்.

உன்னை இயக்கும்
ஆதி ஓவியனின்
கையொப்பம்
உன்னைக் கொண்டு
என்னில் எழுதப்படும்
அந்தத் தருணம்
என் மோட்சம்.

2 comments:

  1. ///இறைவனின் வண்ணங்கள்
    ஈரமாய்க் குழைந்திருக்கும்
    தூரிகை நீ

    கிழக்கிலும் மேற்கிலும்
    கிட்டாத தைலம் கொண்டு
    ஓவியம் தீட்டப்படும்
    கேன்வஸ் திரை நான்///

    நீங்கள் ஒரு சுஃபிதான். கவிதையே பேசுகிறது.இறைவனின் எண்ணங்கள் நம் இதயத் திரையில் ஓவியமாக...!ஆஹா! இனிய கவிதை

    ReplyDelete
  2. படத்திற்காக கவிதையா
    கவிதைக்காக வரையப்பட்ட
    ஓவியமா ?

    மிக அருமை

    ReplyDelete