Tuesday, October 4, 2011

உள்முகக் காலம் (தொடர்ச்சி #3 )



இனி, போர்ஹேயின் மூன்றாம் அவதானத்தைப் பார்ப்போம்: ’மூன்று காலங்களும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.’

அதாவது இறந்த-காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்னும் மூன்றுமே நிகழ்காலத்தில் இங்கே இப்போது நடந்து கொண்டிருப்பவைதான். காலத்தை இப்படி மூன்றாகப் பிரித்து வைத்திருப்பது மனிதனின் மிகப்பெரிய மூடநம்பிக்கை என்கிறார் ஐன்ஸ்டீன். எதார்த்தத்தில் இருப்பது பிரிவுகளே இல்லாத அல்லது பிரிக்க முடியாத ஒற்றைக் காலம்தானாம். அதைத்தான் இங்கே போர்ஹேவும் சுட்டிக் காட்டுகிறார். இது சராசரி மனதைக் கொண்டு உணர்ந்துகொள்ள, விளங்கிக்கொள்ள முடியாத, கொஞ்சம் கடினமான விஷயம்தான். காலம் என்று ஒன்று இருக்கிறது என்பதற்கு ஆதாரம் கடிகாரம்தான் என்னும் ரீதியில் யோசிக்கும் மண்டைகளை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்ய?



‘மூன்று காலங்களும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன’ என்னும் இந்த த்ரில்லிங்கான கருத்தை நான் முதன் முதலில் பார்த்தது ஹாரூன் யஹ்யா (HARUN YAHYA) எழுதிய ‘THE ETERNITY HAS ALREADY BEGUN’ என்னும் நூலில்தான். காலம் என்பதைப் பற்றிய நம் முன்னனுமானங்களைக் கேள்விக்குள்ளாக்கிக் கலைத்துப் போடும் அற்புதமான நூல் அது. (அறிவியல் என்று வந்தால் ஜாகிர் நாயக் என்னும் அரைவேக்காட்டின் பெயரை முன்மொழியும் என் நண்பர்களுக்கு நான் எப்போதும் ஹாரூன் யஹ்யாவின் பெயரை சிபாரிசு செய்து வருகிறேன்.)

காலம் பற்றிய நம் பிரக்ஞையை உருவாக்குவதே நம் நினைவுப் புலம்தான் என்பதை முதலில் விளக்கும் ஹாரூன் யஹ்யா, மனிதனின் குறுகிய நினைவுப்புலம் என்பதிலிருந்து இறைவனின் முழுமையான நினைவுப் புலம் வேறுபடுவதை அடுத்து விளக்குகிறார். இரண்டின் வழியே காலம் பற்றிய பிரக்ஞை எப்படி வேறுபடும் என்பதை நமக்கு உணர்த்த பல பரிசோதனைகளையும் உதாரணங்களையும் முன்வைக்கிறார். அதைத் தொடர்ந்து நூலின் தலைப்பில் அமைந்த மூன்றாம் அத்தியாயத்தில் அவர் குறிப்பிடும் பல வரிகள் முக்காலமும் இக்காலமே என்பதைக் குறிப்பிடுவதாக உள்ளன. அவற்றில் சில சுவாரஸ்யமான வரிகளை இங்கே எடுத்துக்காட்ட எனக்குச் சின்ன சின்ன ஆசை.

”இறைவனின் நினைவகம் (Memory) முடிவிலி என்பதால் அவனில் உள்ளது எதுவும் தொலைவது இல்லை. அதாவது, அவனால் படைக்கப்பட்ட எப்பொருளும் மறைவது இல்லை, எந்தப் பூவும் வாடுவதில்லை, எந்தப் பானமும் முடிவதில்லை, எந்த காலகட்டமும் முற்றுப் பெறுவதில்லை, எந்த உணவும் தீர்வதில்லை.” (ப.68)

“படைக்கப்பட்டவை அனைத்தின் மீதும் இறைவன் நிரந்தரத் தன்மையை அருள்கிறான். அதாவது, உள்ளன எல்லாம் அவை படைக்கப்பட்ட கணத்திலேயே நிரந்தரத்தன்மையை அடைந்துவிட்டன.” (ப.69)



”முடிவிலியில் நிரந்தரமாக, அனைத்தும் இறைவனின் பார்வையில் உள்ளன.
அதுபோல், இறைத்தூதர் சாலமன் (சுலைமான் (அலை)) தன் குதிரையின் கால்களைப் பரிவுடன் தடவிக்கொடுத்த கணம் நிரந்தரமாய் உள்ளது. ஒரு திரைக்குப் பின்னால் அக்குதிரைகள் மறைந்ததும், ஸபா அரசிக்கு சாலமன் நபி அனுப்பிய கடிதமும், அக்கடிதத்தை அரசியும் அவரது சிப்பாய்களும் படித்த கணமும், சாலமனின் அரண்மனைக்கு அந்த அரசி வரவேற்கப் பட்டதும், அரண்மனையின் தரையை அந்த அரசி தடாகம் என்று நினைத்த கணமும், ’சுலைமானுடன் இப்போது நான் இஸ்லாத்தில் பணிந்தேன், அகிலங்களின் ரட்சகனுக்கு’ (சூரத்துந் நம்ல்:44) என்று அவர் சொன்னதும் இப்போது உள்ளன, இனி எப்போதும் இருக்கும்.” (ப.71)

”நம்மைப் பொருத்தவரை ஓரிடத்திற்குப் போய் சேருவது என்பது காலத்தின் நகர்விலும் கொஞ்சம் ஆற்றலைச் செலவழித்தும்தான் சாத்தியமாகிறது. ஆனால், அனைத்துப் பரிமானங்களையும் படைத்தவனான இறைவனுக்கு அனைத்துக் காரியங்களும் நடந்தேற ’ஒற்றை’க் கணமே எடுக்கிறது. அடுத்த முக்கியமான விஷயம் ‘காரியங்களின் உடனிகழ்வு’ (the simultaneity of these events). முன்பே சொல்லப்பட்டது போல், இறைவனின் பார்வையில், தொடர் காலம் பற்றிப் பேசுவது சாத்தியமில்லை; அனைத்தும் ’ஒற்றை’க் கணத்தில் நடந்து முடிகின்றன.

இதே கணத்தில், களி மண்ணிலிருந்து நபி ஆதம் படைக்கப்படுகிறார், இப்போதே வானவர்கள் நபி ஆதமுக்குத் தலை பணிகிறார்கள். அதுபோல், இப்போது அவர் பூமிக்கு அனுப்பப்படுகிறார். மேலும், நாம் பேசிக்கொண்டிருக்கும் ‘கணம்’ என்பது நீங்கள் இந்த வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் ‘கணம்’தான்! 

இன்னொரு உதாரணமும் உங்களுக்கு இந்தப் புள்ளியை விளக்கக்கூடும். நபி மூசா அவர்களைப் பற்றி நினைத்துக்கொள்வோம். குழந்தை மூசாவை அவரது அன்னை மரப்பெட்டியில் வைத்து நைல் நதியில் மிதக்கவிட முனைந்த அந்தக் கணம் இப்போதும் உள்ளது, அது ஒருபோதும் மறையவில்லை, இனி எப்போதும் அது இருக்கும். நபி மூசா அவர்கள் எகிப்து மன்னன் ஃபிரௌனிடம் சென்று இறைவனின் செய்தியை எடுத்துரைத்த கணம் இப்போதும் உள்ளது. எதார்த்தத்தில், இந்தக் கணத்தில் மூசா நபி அவர்கள், சத்தியத்தை ஏற்கும்படி ஃபிரௌனுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். துவா என்னும் புனித வெளியில் நபி மூசா (அலை) இறைவனின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொண்டிருக்கும் கணம் இதுவே என்பதும் உண்மைதான். இப்போது இதே கணத்தில்தான் நபி மூசா அவர்கள் தம் மக்களுடன் ஃபிரௌனை விட்டும் விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இக்கணத்தில் மூசா நபியும் அவரது மக்களும் கடந்து செல்வதற்குக் கடல் பிளந்து பாதை திறக்கிறது. கடல் திறக்கும் இக்கணம் நிரந்தரமாக என்றென்றும் இறைவனின் நினைவில் இருக்கும்.” (பக். 73,74)



ஞானிகளைப் பற்றிப் பேசும்போது ‘அவர் முக்காலமும் உணர்ந்தவர்’ அல்லது ‘முக்காலமும் துறந்தவர்’ என்றும், ஞானி என்பவர் இக்கணத்தில் வாழ்பவர் என்றும் சொல்கிறார்களே, அதெல்லாம் இதைத்தான் போலும்.

ஓஹோ! இதே கணத்தில்தான் நீங்கள் பிறக்கிறீர்கள், அழுதுகொண்டே ஸ்கூலுக்குள் தள்ளப் படுகிறீர்கள், பதில் தெரியாமல் அலங்க மலங்க விழித்து டீச்சரிடம் ஸ்கேலால் அடி வாங்குகிறீர்கள், மெல்ல எட்டிப்பார்க்கும் குறுகுறு மீசையைத் தடவிப் பார்க்கிறீர்கள், முதலிரவில் முதல் ஸ்பரிசம் சுகிக்கிறீர்கள், மாத்திரைகளால் வாய் கசந்திருக்க காய்ச்சலுடன் விதியே என்று கஞ்சி குடிக்கிறீர்கள், கட்டையை நீட்டிப் படுத்திருக்க கடைசியாகக் குளிக்கிறீர்கள், மண்ணுக்குள் வைக்கப் படுகிறீர்கள். எல்லாம் இப்போதே நடந்துகொண்டிருக்கின்றன, இதே கணத்தில்!


4 comments:

  1. Very Very Interesting but
    still difficult to Understand.

    Space ம் Time ம் ஒரே சூலில்
    பிறந்த இரட்டைக்குழந்தைகள் என‌
    'சமுத்ரா' அவர்களின் பதிவில்
    படித்து ஆச்சர்யம் அடைந்தேன்.

    ReplyDelete
  2. ///(அறிவியல் என்று வந்தால் ஜாகிர் நாயக் என்னும் அரைவேக்காட்டின் பெயரை முன்மொழியும் என் நண்பர்களுக்கு நான் எப்போதும் ஹாரூன் யஹ்யாவின் பெயரை சிபாரிசு செய்து வருகிறேன்.)///

    அப்பா! இங்கே ஒருவர் ஜாகிர் நாயக்கை இப்படி அழைக்க இருக்கிறாரா?

    நாயக்கின் அறிவு பற்றி வியப்பவர்களுக்கு, அவருக்கு இருப்பது நினைவாற்றல்,
    அறிவல்ல என்று கூறியுள்ளேன்.

    சரமாரியாக மறையிலிருந்து 'கோட்' செய்து, எண்களையும் படபடவென்று சொல்லும் போது வாய் பிளந்து கூட்டம் கை தட்டுகிறது. அவர் சொல்லுவதை அவர் வேகத்துக்கு மறை நூலைத் திறந்து சரிபார்க்க யாரும் இல்லை.

    ReplyDelete
  3. கிரீன்விச் சென்று கடிகாரம் கண்டுபிடிக்க அறிவியல் செய்த முயற்சிகளைக் கண்டேன்.

    என்னமோ இதெல்லாம் எவ்வளவு பெரிய அபத்தம் என்ற எண்ணமே மனதில் தோன்றியது..

    ReplyDelete
  4. ’அனைத்தும் முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டன’ என்பதில் எனக்கு வியப்பு ஏதும் இல்லை. எனது அனுபவமும் அதுதான்.

    பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்பது போல, நாம்தான் காலத்தைச் சுற்றுகிறோமா?

    எழுதப்பட்டது நடக்கிறது என்றால், கட்டப்பட்ட புலன்களுடன், திணிக்கப்பட்ட வாழ்க்கையை ‘வாழ்ந்த’வனுக்கு, எப்படி தீர்ப்பும் தண்டனையும்?

    ReplyDelete