Friday, July 8, 2011

பூஜ்யம்

(இந்தச் சிறுகதை நூறு சதவிகிதக் கற்பனை அல்ல.)



திண்ணை காலியாக இருந்தது. மூனா நாள் ஃபாத்திஹா ஓதியாகிவிட்டது. நான் கடைசியாக ஃபுதைலப்பாவைப் பார்த்தது போன வாரம் செவ்வாய்க் கிழமை சாய்ங்காலம் நாலேமுக்கா மணிக்கு. வாயில் வெற்றிலை குதப்பிக்கொண்டு திண்ணையில் சப்பளமிட்டு அமர்ந்திருந்தார். மாடு அசைபோடுவது போல் அப்படி வெற்றிலை குதப்புகிறார் என்றால் தீவிரமாக ஏதோ விஷயம் மண்டைக்குள் ஓடிக்கிட்டிருக்கிறது என்று அர்த்தம்.

சீரியஸான விசயம் என்றால் இந்த வருசம் வெள்ளாம எப்படி இருக்குமோ? என்றோ, மேற்கால உள்ள நாலு ஏக்கர் வயல் தன்னோட பங்குன்னு அபுசுபியான் ஹாஜியார் போட்டிருக்கும் கேஸை எப்படிச் சமாளிப்பது? என்றோ யோசனை செய்வதல்ல. இவர் ஆளே சுத்தமா வேற ரகம்.

அவரை முதன்முதலாக நான் பார்த்தபோதும் - இரண்டு வருடங்களுக்கு முன் இதே திண்ணையில் – இப்படித்தான் அமர்ந்திருந்தார். அது அவருடைய ட்ரேட் மார்க் போஸ், பலகையில் உட்கார்ந்திருக்கும் திருவள்ளுவர் மாதிரி.

கரீமைப் பார்த்துவரலாம் என்று போன நான் திண்ணையில் அவரைப் பார்த்தவுடன் சலாம் சொன்னேன். பதில் சொல்லிவிட்டுத் தலையைச் சாய்த்து, துருவும் பார்வை ஒன்றை என்மேல் போட்டார்.

“என்னமோ ஆழமா யோசிச்சிக்கிட்டிருந்தீங்க…” என்றேன்.

பக்கவாட்டிலிருந்து ஒரு புஸ்தகத்தை எடுத்துக் காட்டினார். ‘சிவஞான சித்தியார் சுபக்கம்’ என்று போட்டிருந்தது. அவர் இருக்கும் பக்கம் யாருமே ஏன் தலை வைத்துப் படுப்பதில்லை என்பது விளங்கியது.

“டு யூ நோ வாட்டீஸ் திஸ்?” என்னும் கேள்வி தாம்பூல மணத்துடன் குழைந்து வந்து மோதியது.

“அ…?” என்று நான் பாதி வாய் அங்காந்து சொல்வதறியாது ஸ்டக் ஆகி நின்றேன். நல்ல வேளையாக கரீம் வந்துவிட்டான். ‘வாடா மாப்ள, ஏன் வாசல்லயே நிக்கிற?’ என்று கையைப் பிடித்து இழுத்துச் சென்றான். போய்க்கொண்டே கடைக்கண்ணால் திண்ணையைப் பார்த்தேன். அந்தத் துருவும் பார்வை என்னைத் தொடர்ந்து வந்தது, காரைச் சுவரில் மோதும் வரை.



“தாத்தா கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டவர்டா. தப்பா எடுத்துக்காத…” என்று சொல்லிக்கொண்டே கரீம் என்னை மாடிக்கு அழைத்துச் சென்றான். விஸ்தாரமான ஒரு ஹாலில் நாலைந்து அலமாரிகளில் புத்தகங்கள். மூலையில் ஒரு மேஜை. அதன் பக்கத்தில் ஒரு மரக் கட்டில். அவை கரீமுடையதாக இருக்க ப்ராப்பபிலிட்டி எவ்வளவு என்று நான் மனக்கணக்குப் போட்டபடி நின்றுகொண்டிருந்தேன். அந்த ஹாலின் ஒரு ஓரத்தில் இருந்த கதவைக் கரீம் திறந்தான். மாலை வெளிச்சம் உள்ளே சாய்ந்து தரையில் விழுந்தது. கூடவே சில்லென்ற காற்றும் வீசி மோதியது.

வெளியே பாதி வீட்டளவில் அது மொட்டை மாடியாக இருந்தது. பிடிச் சுவரை ஒட்டினாற்போல் இரண்டு தென்னை மரங்கள் வளர்ந்து நின்றன. கரீம் திரும்பி, “அது என் ரூம்டா மாப்ள” என்றான். என் இடது பக்கம் ஒரு சிறிய அறை இருந்தது. ஒரு ஹிந்தி நடிகையின் படத்தைச் சுவரில் ஒட்டி வைத்திருந்தான். ரசிகன்.

தென்னங்கீற்றுக்களில் அலசிக்கொண்டு வீசும் குளிர்ந்த காற்று வாங்கியபடி எங்கள் சம்பாஷனை போய்க்கொண்டிருந்தது. அந்த ஊருக்கு நான் புதிதாக வந்தவன் என்பதால் ஊரைப் பற்றி ஏ டூ ஸெட் எனக்கு அப்போதே சொல்லி முடித்துவிடுவது போல் கரீம் பேசிக்கொண்டிருந்தான். அவன் தாத்தாவின் பெயர் ஃபுதைல் அஹ்மத் என்பதையும் ஃபுதைலப்பா என்று எல்லோரும் அழைப்பார்கள் என்பதையும் அப்போது அறிந்தேன். என் மனம் அவரின் அலமாரிகளில் சிக்கிக்கொண்டிருந்தது.

“கரீம், தாத்தாவோட புக் கலெக்ஷன நான் பாக்கலாமா?” என்றேன். என் வியாதி! எந்த வீட்டிலாவது புத்தக அலமாரி இருந்தால் அதைத் துழாவிப் பார்க்கவேண்டும் என்று என் மனம் பரபரக்கும், அதாவது, அதில் ஓரளவுக்காவது புத்தகங்கள் இருந்தால்.

“தாராளமா பாரு. ஆனால் ஒனக்கு எதுவும் யூஸ் ஆவாது. எல்லாம் ஹைதர் காலத்துச் சரக்கு” என்று சொல்லிக்கொண்டே கரீம் என் முன்னால் சென்று ஹாலில் ட்யூப் லைட்டைப் போட்டான்.

“இதெல்லாம் தாத்தாவோட சொத்துடா மாப்ள. யாரையும் கையை வைக்கவிட மாட்டார். ஒரு புத்தகத்தோட மொன கிழிஞ்சாக்கூட அவருக்குத் தாங்க முடியாது. சின்னப் புள்ளயா இருக்கிறப்ப நானும் அண்ணனும் தங்கச்சியும் இங்க வந்து உருட்டிக்கிட்டிருப்போம். எதுவுமே வெளங்காது. அந்த மாதிரி புக்ஸ். தாத்தா பெரீய்ய மண்டைதான். ஆனா அவரு பேசறது யாருக்குமே புரியாது. அதனால வீட்லகூட அவருகிட்ட யாரும் தேவையில்லாம பேசறதில்ல” என்று கரீம் சொல்லிக் கொண்டிருந்தான். பூட்டுக்கள் தொங்கிய மர அலமாரிகளில் அடுக்கியிருந்த புத்தகங்களில் முக்கால்வாசிக்கு ப்ரௌன் அட்டையால் கோஷா பண்ணி வைத்திருந்ததால் ‘முதுகு’ தெரியவில்லை. தெரியும்படியாக இருந்த கால்வாசி புத்தகங்களில் முக்கால்வாசிகள் வாசியோ வாசிப்புக்களால் முதுகு வலி வந்து அவதிப்படும் வயதாகத்தான் இருந்தன. குண்டு, நடுத்தரம், ஒல்லி என்று எல்லா ரகமும் கலெக்ட் செய்திருந்தார். குரான் பிரதிகள் ஆங்கிலத்திலும் இருந்தன. அதில் ஒன்றில் ’பெய்ரூட்’ என்று கீழே போட்டிருந்தது.

“என்னது, பெய்ரூட்டில் போட்ட குரானா?” என்றேன் நான், ஆச்சரியத்தோடு.

“அப்டீன்னா? பீட்ரூட்டோட சேர்ந்த காய்கறியா?” என்று கரீம் கேட்டான். விளக்கினேன்.

“ஆமா ஆமா, ஃபுதைலப்பா அந்தக் காலத்துல எகிப்து லண்டன்லாம் போயி படிச்சவுங்களாம், அத்தா சொல்வாங்க. அங்க வாங்குன புக்ஸும் இருக்கு.” என்றான் சாதாரணமாக. எனக்குள் பளிச்சென்றது.

அப்படித்தான் அவர்மீது எனக்கு சுவாரஸ்யம் உண்டானது. அடுத்தடுத்து கரீமைப் பார்க்க அவன் வீட்டிற்கு நான் போகும்போதெல்லாம் ஆழ்ந்த யோசனையுடன் தன்னுள் மூழ்கித் திண்ணையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெரியவரின் மனதின் அலைவரிசை என்னை மௌனமாக இழுத்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். மொட்டை மாடியில் கரீமுடன் அமர்ந்து பேசுவது போல விரைவில் அவருடன் பேசிக் கொண்டிருக்கப் போகிறேன் என்று என் உள்மனம் சொன்னது.

ஒருநாள் நான் போனபோது கரீம் வீட்டில் இல்லை. அவனுடைய அண்ணன் எதுக்க வந்தவர் என்னைப் பார்த்து லேசாகப் புன்னகை செய்தார்.

“மேல போய் இருங்க தம்பி. இப்ப வந்துர்வான்” என்று சொல்லிக் கொண்டே அவரும் வெளியே கிளம்பினார்.

நான் மேலேறிச் சென்று மாடியில் காற்றில் லயித்துப் போய்க் கண்ணை மூடிக்கொண்டு செவுத்துக் கட்டையில் சாந்தபடி நின்றேன்.

“மரத்தை மறைத்தது பார்மத யானை” என்று அலறிய குரல் கேட்டுத் தூக்கிவாரிப் போட்டுக் கண்ணைத் திறந்தேன். என் முன்னால் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு ஃபுதைலப்பா நின்றார். “என்னடா இது, நெஜமாவே இவரு கழண்ட கேஸ்தானா?” என்று திகைப்பில் உடம்பெல்லாம் பூச்சி ஓடியது.

“என்னா பாக்குற? யானை தெரியுதா? இல்ல மரமா?”

திருமந்திரத்தில் இருந்து ஒரு கொக்கி. எனக்கு ஆத்திரமாக வந்தது. ’இந்தத் தத்துவ பூச்சாண்டியெல்லாம் என்கிட்ட வேகாது. நானும் கொஞ்சம் இந்த ஏரியா பக்கம் பொரட்டீருக்கேன். பேரனோட சேர்ந்துகிட்டு ’ரங்கீலா’ பாக்குறவன், இவனுக்கு என்ன தெரியும் மண்ணாங்கட்டிப் பயன்னு கெழம் நெனக்கிது போல. காட்டுறேன்’னு மனதில் ஒரு தெம்பு கிளம்பியது.

“யானையும் தெரியுது மரமும் தெரியுது” என்றேன்.

கொஞ்சம் நிதானிக்கிறார் என்று தோன்றியது. “ம்ம்ம்… பரவாயில்லியே. ரெண்டுமே தெரியுதா? எப்பிடி?”

“செலய செஞ்சவனோட பார்வை இருந்தா ரெண்டுந்தான் தெரியும். யானை அவன் சிந்தனையில இருக்கணும். அப்பத்தான் செலய சரியா செய்வான். மரமும் சிந்தனையில இருக்கணும். அப்பத்தான் விரிசலாவாம பக்குவமா செதுக்குவான்.” என்றேன். என் பதில் ஒரு கணம் எனக்கே திகைப்பாக இருந்தது. அதை நான் சொன்னது போலவே இல்லை, எனக்குள் இருந்து வேறு யாரோ சட்டென்று பேசியது போல் இருந்தது.

”குட் குட். வேல செய்யுது” என்று சொல்லிக்கொண்டே ஃபுதைலப்பா தலையை ஆட்டிக்கொண்டு சென்றார். அன்று இரவெல்லாம் இந்த உரையாடலை என் மனம் மீண்டும் மீண்டும் ரீப்ளே செய்து பார்த்துக்கொண்டிருந்தது.

ஃபுதைலப்பா பல துறைகளில் பல்விதமான திறமைகள் கொண்ட மனிதர் என்பது விரைவிலேயே தெரிந்துவிட்டது. என் மைண்ட்செட் கொண்ட சில நண்பர்களிடம் அவரைப் பற்றிச் சொன்னேன். சந்திப்பதற்கு ஆவலானார்கள். இதையெல்லாம் பார்த்துக் கரீமுக்கு ஒருவித பெருமிதம் உண்டாகியிருந்தது. தான் ஒரு ஜீனியஸின் பேரன் என்ற பெருமிதம்.

அவருடைய விரிவான படிப்புத்தான் அவருடன் பழகப் பலருக்கும் தடையாக இருந்திருக்கிறது. வயல்கள் சூழ்ந்த அந்தக் கிராமத்தில் எக்சிஸ்டென்ஷியலிசமும் ஐன்ஸ்டீனும் பேசுவதற்கு யார்தான் கம்பெனி கிடைப்பார்கள்? தங்களுக்கு விளங்காத விசயங்களாகப் பேசுகிறார் என்பது மட்டுமல்ல, அவரை வெறுப்பதற்கு வேறு காரணங்களும் ஊர் மக்களிடம் இருந்தன.

ஐரோப்பாவில் படிப்பை முடித்துத் திரும்பிய அந்தக் காலத்தில் உள்ளூர் பள்ளிவாசலில் ஜும்மா பயானுக்கு அவரைப் பேசச் சொல்லியிருக்கிறார்கள். வெளிநாட்டில் பெரிய படிப்பு படித்துவந்த எசமான் வீட்டுப் புள்ள பேசுவதைக் கேட்க எல்லோரும் ஆவலாத்தான் இருந்தார்களாம். ‘நஹ்மதுஹூ நுஸல்லி அலா றசூலிஹில் கறீம், அம்மா பஃது…” என்று சொல்லித் துவங்கும் சம்பிரதம் எதுவும் இவருக்குத் தெரியாது. “முஸ்லிம் பிரதர்ஸ்” என்று ஆரம்பித்தாராம். “எ திங் ஆஃப் பியூட்டி இஸ் ஜாய் ஃபாரெவர்’னு நம்ம ஜான் கீட்ஸ் சொல்றார்… என்று தொடர்ந்த பயான் கசமுசா ஆகி நின்றுவிட்டதாம். ”குர்ஆன் ஹதீஸ் சொல்லனும். அல்லாமா இக்பால் கவிதைகள் சொல்லலாம். இவன் யாருய்யா கீட்ஸு பூட்ஸுன்னுக்கிட்டு?” என்று பேஷ் இமாம் ரகளை செய்துவிட்டாராம்.

ஃபுதைலப்பாவின் அறிவுத் தேடல் அவரைப் பேய் போல் வாசிக்கச் செய்தது. சகல மதத் தத்துவங்களையும் கற்றுள்ளார். சகல இலக்கியங்களையும் பயின்றுள்ளார். அந்தத் தேடலில் அவருக்குக் கிடைத்த மேதாவிகளின் தொடர்பு விரிவானது. அவர்கள் எல்லாம் அவரைவிட பல வயது மூத்தவர்கள். அப்படியும் அது பெரியவர்களின் சகவாசம்தான். அவர்களின் மறைவுக்குப் பிறகு இவர் தனிமையாகிவிட்டார்.

இருபது வருடங்களுக்கு முன்னால் பள்ளிவாசல் திறப்பு விழா ஒன்றில் மீண்டும் மைக் முன் நிற்கும் சந்தர்ப்பம் வந்தது. “ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடிச்ச விஷயம் ஒன்னும் புதுசில்லே. அது குர்ஆன்-ஹதீஸில் இருக்கு…” என்று சொன்னாராம். அத்தோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவரால் ஒரு சமயம் சார்ந்து நூல் பிடித்தாற்போல் பேச முடியாது. இந்த பலவீனம் வேலையைக் காட்டிவிட்டது. “அதுமட்டுமில்ல, அந்த விஷயம் இந்து மத உபநிஷத்துக்கள்லயும் இருக்கு” என்று பேசிவிட்டார். “அட்றா அந்த காஃபிர் பயல” என்று உடனே இரண்டு மூன்று பேர் பாய்ந்து அவரை உருட்டித் தள்ளியிருக்கிறார்கள். அத்தோடு பொதுப் பேச்சுக்கு முழுக்குப் போட்டவர்தான். அதன்பின் அதிகமாக யாருடனும் பேசுவதையே நிறுத்தி விட்டார்.

இப்படிப்பட்ட வித்தியாசமான பேர்வழிகள் அவ்வப்போது தோன்றத்தான் செய்கிறார்கள். அதற்கு முன் அப்படி இரண்டு பேரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். நேரில் பார்த்தது இவரைத்தான்.

திருவையாறு அப்துல் கபூர் சாகிபு என்று ஒருவர். சித்திரக்கவியில் அபாரமான திறமை கொண்டவர். கவி.கா.மு.செரீஃப் அவரிடம் தமிழ் படித்தவர்களில் ஒருவராம். அவருடைய சித்திரக்கவிதை நூல் ஒன்று என்னிடம் உள்ளது. ஐம்பதுகளில் அவை திருலோக சீதாராம் நடத்திய ‘சிவாஜி’ பத்திரிகையில் வெளிவந்தவை. அந்தச் சித்திரக்கவிதைகள் எல்லாமே சேக்கிழார் அடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன் என்பவரைப் பற்றிப் பாடப்பட்டவை. நாகபந்தம், மிருதங்க பந்தம், தேர் பந்தம், மயில் பந்தம் என்பன போன்ற பல சித்திரக்கவிகள். அந்த நூலின் உள் ஒரு புகைப்படம். பூண் போட்ட கோலைக் கையில் பிடித்தபடி அங்கவஸ்திரம் அணிந்து புலவர் பெருமான் நிற்கிறார். எழுபது வயதைத் தாண்டிய தோற்றம். பக்கத்தில் தி.ந.இராமச்சந்திரன். நாற்பதுக்குள் மதிக்கத்தக்க வயது! தன்னைவிட அவ்வளவு இளையோனான ஒருவர்மீது இத்தனைச் சிரமமான பாடல்களை அவர் எழுதியது எனக்குப் புதிராகத்தான் உள்ளது. டி.என்.ஆர் என்று நாங்கள் ஆங்கிலத்தில் அழைக்கும் தி.ந.இராமச்சந்திரன் இப்போது தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் பகுதியில் வசித்து வருகிறார்.

நான் கேள்விப்பட்டிருந்த விசித்திரமான இன்னொரு நபர் பெயர் சுல்தான். தஞ்சாவூர் நகரின் மைய நூலகத்தில்தான் அவரைப் பார்த்தேன். என் நண்பன் சுப்பிரமணிதான் அவரை எனக்கு அறிமுகம் செய்தான். சுல்தான் பாய் நூற்கள் வாசிப்பதற்காகவே தினமும் கும்பகோணத்தில் இருந்து ரயிலில் வந்துபோய்க் கொண்டிருந்தார். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால் இலவச பாஸ் வைத்திருந்தார். இளமையில் அவர் ஒரு கர்நாடக சங்கீத வித்வான்! முறைப்படிக் கற்றுக்கொண்டு கொஞ்ச காலம் மேடையில் ஒளிர்ந்தவர். ஆனால் ஒரு ஷேக் மெஹபூப் சுப்ஹானி போல அவரால் வர முடியாமல் போயிற்று. ரயில்வே ஊழியராகிவிட்டார். ஆனால் ஒரு வெறுமை அவருக்குள் இன்னமும் இருந்தது. அதை நிரப்ப வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

பிற்பாடு நான் கல்லூரியில் வாசித்துக் கொண்டிருந்தபோது பழைய புத்தகம் ஒன்று என் கையில் அகப்பட்டது. அறுபதுகளில் வெளியான ஒல்லியான இஸ்லாமியக் கவிதைப் புத்தகம் அது. திருச்சியைச் சேர்ந்த பட விநியோகிஸ்தர்கள் இருவர் மற்றும் ஒரு பீடி கம்பெனி ஆகியோர் கொடுத்த விளம்பரங்களை வெளி-உள் அட்டைகளில் தாங்கியிருந்த அந்த நூலின் உள்ளேயும் ஆங்காங்கே விளம்பரங்கள் இருந்தன. அதில் ஒரு விளம்பரத்தில் நாகூர் ஹனீஃபாவின் படம் இருந்தது. மழித்துச் சவரம் செய்த மோவாயுடன், மீசை இல்லாமல், இழுத்துச் சீவிய சுருள்கேசத்துடன், ஹாலிவுட்டில் வெளியாகும் ’கௌபாய்’ பட ஹீரோ போல் இருந்தார்!

இன்னொரு விளம்பரத்தில் சுல்தான் இருந்தார்! இளமையான முகவெட்டு. ஜரிகை வேட்டி சட்டை அணிந்து அங்கவஸ்திரம் மேலில் தவழ மேடையில் அமர்ந்திருக்கிறார். பின்னால் தம்புரா வைத்துக் கொண்டு ஒருவர். அருகில் பக்கவாத்தியத்துடன் ஒருவர். கீழே விளம்பர வாசகம், தேவாம்ருத கானம் உங்கள் விழாக்களில் கேட்க சுல்தான் பாயை நீங்கள் புக் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியது.

காலகதியில் மனிதன் எப்படியெல்லாம் மாறிப்போகிறான், என்னவெல்லாம் ஆகிவிடுகிறான் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு விசித்திரமான மனிதர்தான் ஃபுதைலத்தா.

பெரும்பாலும் வீட்டுத் திண்ணையைத் தாண்டி நகராத அவர் மாலை வாக்கிங்க் என்ற பெயரில் என்னுடன் வரப்பு மேடுகளிலும் ஆற்றங்கரையிலும் உலவி வரத் தொடங்கினார். அவருடன் பேசுவது எங்களுக்கு சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. அவர் பேச்சு ஒரு பருந்தைப் போல் இருந்தது. உயர உயர சுற்றிக் கொண்டே போகும், சரேலென்று கீழ் நோக்கியும் பாயும், பொல்லாத ஹாஸ்யமாய். ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது, தன் பேச்சு தன் இமேஜை என்னவாக்கும், தன்னைப் பற்றிப் பிறர் என்ன சொல்வார்கள் என்று ஒருபோதும் அவர் கவலைப்படவில்லை.

அவர் இல்லாத இந்த நேரத்தில் அவருடன் கழித்த பல பொழுதுகள். கேட்ட விஷயங்கள் என் நினைவுப் பரப்பில் அலையடிக்கின்றன…

“உங்களுக்குன்னு வாழ்க்கைல ஏதாவது குறிக்கோள் இருக்கா?”

“குறிக்கோளாவது சொறிக்கோளாவது. அப்படியெல்லாம் எதுவும் இல்ல.”

“குறிக்கோள் இல்லாது கெட்டேன்னு சொல்லியிருக்காங்களே?”

”வாஸ்தவம்தான். குறிக்கோள் இல்லாம ஒருத்தன் கெடுறான்னா, குறிக்கோள் வச்சிக்கிட்டு நூறு பய கெடுறான்.”





என் நண்பன் ஹமீது ஒருமுறை அவரைப் பார்க்க வந்தபோது, “வாங்க யதுகுல காம்போஜி சார்” என்று வரவேற்றார். ஏன் அப்படிச் சொன்னார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். அது கர்நாடக சங்கீதத்தில் ஒரு ராகத்தின் பெயர் என்று நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஹமீது நம்ப மறுத்துவிட்டான். “எங்க அத்தா கெளம்பறப்பவே சொன்னாங்க, அந்த ஹறாத்துக் கெழவனையா பாக்கப் போறன்னு. ஐயரு பாஷைல கெட்டவார்த்த சொல்லித் திட்றான் பாத்தியா?” என்று குமுறிவிட்டுப் போனான்.



இதெல்லாம் அவரது மனப்பருந்தின் கீழ் நோக்கிய சரேல் பாய்ச்சல்கள். அதுவே மேலே மேலே வட்டமடித்துக் கொண்டு ஏறியதை எல்லாம் சொல்ல இப்போது சூழ்நிலை இல்லை. எவ்வளவோ விஷயங்கள்.



“இந்தக் கபாலத்துக்குள்ள ஆச்சர்யமான எண்ணங்களாக் கொட்டிக்கிட்டிருக்கு தம்பீ. ஒன்னு ரெண்டு செரட்டயத்தான் ஒங்களுக்கு மொண்டு கொடுத்திருக்கேன். அடுத்தவங்கள்ட்ட சொல்லிக்காட்டிப் பகிர்ந்துக்கணும்ங்கிற அரிப்பு நின்னுட்டாலே ஞானம் சித்திச்சிருச்சுன்னு சொல்லலாம். அது எனக்குக் கெடச்சிருக்கு.” என்று அவர் சொன்னதுதான் இந்தத் தருணத்தில் ஞாபகம் வருகிறது.



திண்ணை காலியாக இருக்கிறது. மூனா நாள் ஃபாத்திஹா ஓதியாகிவிட்டது. ஃபஜ்ருக்குப் பிறகு கப்ருஸ்தானுக்குப் போய் ஓதிமுடித்து, வந்திருந்தவங்களுக்கு பூந்தியும் பன்னும் கொடுத்தனுப்பிவிட்டு வெளியே வந்து நடந்தபோது கூடவே பேஷ் இமாம் யாசீன் ஹஜ்ரத் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்து வந்தார்.



“எவ்வளவோ விஷயங்கள் தெரிஞ்ச மனசு. அபாரமான அறிவு, அபூர்வமான மனுஷன். இப்படி ஒரு ஆள இனிமேல் இந்த ஊரு எப்போ பாக்கப்போவுது சொல்லுங்க? அவருக்குத் தெரிஞ்சதுல காவாசி தெரிஞ்ச ஆளு இப்போ இல்ல” என்று நான் புலம்பினேன்.



தலையாட்டிக் கொண்டே வந்த ஹஜ்ரத் சொன்னார், “பாருங்கஜீ, எவ்வளவு தெரிஞ்சு என்னத்துக்குப் பிரயோஜனப் படப்போவுது? கபுருல கொண்டு அடக்கியாச்சுன்னா அப்புறம் மூனே கேள்விதான். மன் ரப்புக? மன் நபிய்யுக? மா தீனுக்க?... இதுக்குப் பதில் சொல்லத் தெரியணும். அதைக் கத்துக்கிட்டா போதும் வாழ்க்கைல. மத்த எழவெல்லாம் எதுக்கு? சலாமலைக்கும்.”



சொல்லிவிட்டு சைக்கிளில் ஆரோகணித்துப் பறந்தார்.







7 comments:

  1. ஃபுதைலத்தா போல தான் நீங்களும் விஷய ஞானத்தில்
    நாங்களோ அஞ்ஞானத்தில்

    ReplyDelete
  2. அருமையான எழுத்து

    ReplyDelete
  3. பூஜ்யத்துக்குள் இத்தனை விஷயங்களா?

    யானை, கல் விளக்கம் அருமை

    குழிக்குள் கேட்கிற கேள்வியை வைத்தே பெரியோர்களை வளர விடாமல் புதைத்து விட்டார்களே ஆலிம்ஷாக்கள்..!

    ReplyDelete
  4. ///“மரத்தை மறைத்தது பார்மத யானை” என்று அலறிய குரல் கேட்டுத் தூக்கிவாரிப் போட்டுக் கண்ணைத் திறந்தேன். என் முன்னால் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு ஃபுதைலப்பா நின்றார். “என்னடா இது, நெஜமாவே இவரு கழண்ட கேஸ்தானா?” என்று திகைப்பில் உடம்பெல்லாம் பூச்சி ஓடியது.

    “என்னா பாக்குற? யானை தெரியுதா? இல்ல மரமா?”

    திருமந்திரத்தில் இருந்து ஒரு கொக்கி. எனக்கு ஆத்திரமாக வந்தது. ’இந்தத் தத்துவ பூச்சாண்டியெல்லாம் என்கிட்ட வேகாது. நானும் கொஞ்சம் இந்த ஏரியா பக்கம் பொரட்டீருக்கேன். பேரனோட சேர்ந்துகிட்டு ’ரங்கீலா’ பாக்குறவன், இவனுக்கு என்ன தெரியும் மண்ணாங்கட்டிப் பயன்னு கெழம் நெனக்கிது போல. காட்டுறேன்’னு மனதில் ஒரு தெம்பு கிளம்பியது.

    “யானையும் தெரியுது மரமும் தெரியுது” என்றேன்.

    கொஞ்சம் நிதானிக்கிறார் என்று தோன்றியது. “ம்ம்ம்… பரவாயில்லியே. ரெண்டுமே தெரியுதா? எப்பிடி?”

    “செலய செஞ்சவனோட பார்வை இருந்தா ரெண்டுந்தான் தெரியும். யானை அவன் சிந்தனையில இருக்கணும். அப்பத்தான் செலய சரியா செய்வான். மரமும் சிந்தனையில இருக்கணும். அப்பத்தான் விரிசலாவாம பக்குவமா செதுக்குவான்.” என்றேன். என் பதில் ஒரு கணம் எனக்கே திகைப்பாக இருந்தது. அதை நான் சொன்னது போலவே இல்லை, எனக்குள் இருந்து வேறு யாரோ சட்டென்று பேசியது போல் இருந்தது.

    ”குட் குட். வேல செய்யுது” என்று சொல்லிக்கொண்டே ஃபுதைலப்பா தலையை ஆட்டிக்கொண்டு சென்றார். அன்று இரவெல்லாம் இந்த உரையாடலை என் மனம் மீண்டும் மீண்டும் ரீப்ளே செய்து பார்த்துக் கொண்டிருந்தது.///

    சூப்பர் பேராசிரியரே! இப்படி ஓர் எதிர் வினையை கிழம் எதிர் பார்த்திருக்காது.
    சபாஷ் சரியான போட்டி!


    /// டி.என்.ஆர் என்று நாங்கள் ஆங்கிலத்தில் அழைக்கும் தி.ந.இராமச்சந்திரன் இப்போது தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் பகுதியில் வசித்து வருகிறார்.///

    சேக்கிழார் அடிப்பொடி டி என் ஆர் ஐயாவுடன் எனக்கு நேரடி அறிமுகம் உண்டு
    நண்பரே. அவரும் உங்கள் பக்கத்துக்காரர்தான்.திருநெய்தானம்(தில்லஸ்தானம்
    ஆம். செல்வம் நகர். மருத்துவக்கல்லூரி சாலையில் ராஜப்பாந‌கர் பேருந்து நிறுத்ததில் இறங்கி மேடு ஏறிப்போக வேண்டும்.

    ReplyDelete
  5. மிக அற்புதமான கதை. வெகு ஜன பத்திரிகைகள் இதுபோன்ற ஆளுமையுள்ள கதைகளை வெளியிடுவதில்லை. அங்கு தேவையெல்லாம் இனக்கவர்ச்சி மட்டுமே. உங்கள் கதை முழுதும் கற்பனையில்லை என்பது சரிதான். திருவையாறு கபூர் சாஹிப் அவர்கள், தி.ந.இராமச்சந்திரன் பற்றி சித்திரக்கவி எழுதியிருக்கிறார் என்பதையும் நான் அறிவேன். அந்தக் கபூர் சாஹிப் பற்றியும் நன்கு கேள்விப் பட்டிருக்கிறேன். சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் அவர்களிடம் தங்களது கதை பற்றியும் நான் தெரிவிக்கிறேன். கவி கா.மு.ஷெரிப் அவர்களுடன் தமிழரசுக் கழகத்தில் நன்கு அறிமுகமாகியிருக்கிறேன். அவர் வெளியிட்ட "தமிழ் முழக்கம்" பத்திரிகையை தொடக்கம் முதல் மூடிய வரை படித்திருக்கிறேன். பட்டுக்கோட்டையில் அவர் பத்திரிகைகளை வரவழைத்து விநியோகம் செய்யும் முகவராக இருந்திருக்கிறேன். என் மனம் கவர்ந்த கவிஞர்.அற்புதமான சில அரிய மனிதர்களைப் பற்றி எழுதியது கற்பனை அல்ல. மிகவும் பாராட்டப்பட வேண்டிய முயற்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. // “செலய செஞ்சவனோட பார்வை இருந்தா ரெண்டுந்தான் தெரியும். யானை அவன் சிந்தனையில இருக்கணும். அப்பத்தான் செலய சரியா செய்வான். மரமும் சிந்தனையில இருக்கணும். அப்பத்தான் விரிசலாவாம பக்குவமா செதுக்குவான்.” என்றேன். என் பதில் ஒரு கணம் எனக்கே திகைப்பாக இருந்தது. அதை நான் சொன்னது போலவே இல்லை, எனக்குள் இருந்து வேறு யாரோ சட்டென்று பேசியது போல் இருந்தது. //

    திடீர் தாக்குதலில் தோன்றிய ‘தன்னிழப்பு’, ‘மெத்த சுகம்’ மட்டுமல்ல, மேதமையும் தரும். நல்ல கவிதைகள்கூட இதுபோன்ற திடீர் தருணங்களில்தான் வரும்.

    // அடுத்தவங்கள்ட்ட சொல்லிக்காட்டிப் பகிர்ந்துக்கணும்ங்கிற அரிப்பு நின்னுட்டாலே ஞானம் சித்திச்சிருச்சுன்னு சொல்லலாம். அது எனக்குக் கெடச்சிருக்கு. //

    இப்படிப்பட்ட மனிதர்களை சந்தித்ததே பெரும் பயன்தான்.

    ReplyDelete