Friday, July 22, 2011

முகம் தேடும் குரல்கள்



டாம் ஹா(ர்)ப்பர் (TOM HARPER) எழுதிய LOST TEMPLE (தொலைந்த ஆலயம்) என்னும் நாவல் வாசித்துக் கொண்டிருந்தேன். வரலாற்று அடிப்படையில் அமைந்த த்ரில்லர் கதை என்பதால் ஒரு அப்செஷனோடு படிக்க வேண்டியதாகி விட்டது. த்ரில்லர் மூவியை மெகா சீரியல் போல் ஆறப்போட்டு ஆறப்போட்டுப் பார்க்க முடியுமா? ஆனால் இரவில் தூங்குவதற்காக இடைவெளி விட்டுத்தான் ஆகவேண்டி இருந்தது. அப்போதும் அந்த இடைவெளியில் அந்தக் கதை வேறு விஷயங்களுக்குத் திசை மாறாத அடியோட்டமாக மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும். மறுநாள் புத்தகத்தை எடுத்துத் தொடரும்போது நிறுத்திவைத்த கணத்திலிருந்து அறாமல் தொடர்வது போன்ற ஒரு பாவனையை சட்டென்று உருவாக்கிக் கொண்டு அதே வேகத்தில் தொடரும். விறுவிறுப்பான எல்லா நாவல்களிலும் இது இயல்பாக நடப்பதுதான். அப்படித்தான் இந்த நாவலிலும் போய்க்கொண்டிருந்தது, 28-ம் அத்தியாயத்தின் முதல் பத்தியைப் படிக்கும் வரை.
நாவலின் கதாநாயகன் க்ராண்ட் தன் தேடலில் க்ரீட் தீவு, க்ரீஸ் ஆகிய நாடுகளைக் கடந்து துருக்கியின் இஸ்தான்பூல் நகருக்கு வந்து சேர்கிறான், பல நாட்கள் தூக்கங்கெட்டு அலைந்து திரிந்ததால் அன்று இரவு ஒரு விடுதி அறையில் அசந்து தூங்குகிறான். இதைத் தொடர்ந்து டாம் ஹா(ர்)ப்பர் எழுதுகிறார்:

“ஒரு திடுக்கிடும் சப்தத்தால் க்ராண்ட் எழுப்பப்பட்டான். அவன் எழுந்து மெத்தையில் அமர்ந்தான். அது என்ன ஓசை என்று உணரும் முன்பே தன் கைத்துப்பாக்கியின் குதிரையில் விரலை வைத்திருந்தான். அது ஒரு மோதீனின் குரல், கனவுத்தன்மையும் இருண்மையும் நிரம்பி, மெல்லிய திரைச்சீலையின் வழியே வழிந்து வந்தது. பள்ளிவாசல்களின் ஒவ்வொரு ஸ்தூபியில் இருந்தும் அந்தப் பாங்கோசை நகரம் முழுவதும் பறவைகளின் பாடல் போல் எதிரொலித்தது.”

(எனக்கு எட்டிய வகையில் மொழிபெயர்த்து தந்திருக்கிறேன். ஒரிஜினல் இது: “Grant was woken by a terrible cry. He sat up in bed, and had already thumbed off the Webley’s safety catch before he realised what it was: the chant of the muezzin, dreamy and mysterious, drifting through the thin guaze curtains. The chorus echoed all over the city, from every minaret, like birdsong.”



”கனவுத் தன்மையும் இருண்மையும் நிரம்பிய மோதீனின் பாங்கோசை” என்னும் கருத்து என் சிந்தனையில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. பொதுவாக வைகறை நேரத் தொழுகைக்கான பாங்கிலும் சில பருவங்களில் அந்தி நேரத் தொழுகைக்கான பாங்கிலும் இந்தத் தன்மைகள் இருப்பதுண்டு. என் ஞாபக அடுக்குகளில் இருந்து பழைய பதிவுகள் மேற்பரப்பில் தலைகாட்டத் தொடங்கின.
 
பாங்கோசை ஒருவித அறியாப் புதுமையுடன் என் மனதில் பதிவானது என் பால்ய வயதில். கோடை விடுமுறைக்கு திருச்சிக்குத் தாத்தா-பாட்டி வீட்டிற்கு வருவோம். அரபிக் காலேஜ் தெருவில் உள்ள எங்கள் பரம்பரை வீட்டின் முகப்பில் உள்ள விஸ்தாரமான இடத்தில் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் மெல்ல மெல்ல அந்தி கவியும். திருச்சியின் கோடை அந்தி எப்போதுமே அக்னி அந்தியாகத்தான் இருக்கும். “தங்கம் உருக்கித் தழல் குரைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதம்” என்று புதுச்சேரியின் வைகறையை பாரதியார் பாடுவது போல் அல்ல திருச்சியின் அந்தி. இதுக்கு இங்கிதமெல்லாம் என்னவென்றே தெரியாது. இதன் செக்கர், தழல் தகிக்கும் எரிமலைக் குழம்புதான். “மல்லாந்த பிணம் போல் இருக்கிறது அந்தி வானம்” என்று எவனோ ஒரு சர்ரியலிஸ்ட் தன் கவிதை ஒன்றில் வருணித்தானாம். திருச்சியின் கோடை அந்தியை அப்படி வருணிப்பதெனில் விபத்தில் ரத்தக் களறி ஆன பிணம் என்றுதான் சொல்ல வேண்டும். சரி, விசயத்தை விட்டுவிட்டு என்னென்னவோ பேசுகிறேன். அப்படி அந்தி கவியும்போது, கால்கள் செம்மண் புழுதி படிந்து மேலெல்லாம் வியர்வை கசகசத்து, அம்மா பார்த்து அப்செட் ஆகித் தலையில் அடித்துக் கொள்ளும் நிலையில் நாங்கள் இருக்கையில், தெருவின் கடைகோடியில் உள்ள மதறஸாவின் பள்ளிவாசலில் இருந்து “அல்லாஹு அக்பர்” என்று பாங்கொலி தொடங்கி நீண்டு நீண்டு பரவும். ஆரம்பித்து இரண்டு வரிகள் சொல்லப்பட்ட நிலையில் வாப்பா ’ஒளு’ செய்துவிட்டுத் தொழுகைக்குக் கிளம்பித் தெருவில் நடந்து செல்வார். (தோப்பில்.மு.மீ தன் கதைகளில் ’உப்பா’ என்பாரே, அவரேதான். தாத்தா. நாங்கள் தந்தையை அத்தா என்றும் அம்மா வழித் தாத்தாவை வாப்பா என்றும் சொல்லி வளர்ந்தோம். குடும்ப விசித்திரங்களில் ஒன்று!)
 
பாங்கோசை என்றவுடன் என் நினைவில் கிரிஷ் கர்னாட் எழுதிய “துக்ளக்” நாடகமும் ஞாபகம் வந்துவிடுகிறது. எட்டாங்க்ளாஸ் படிக்கையில் நான் புத்தகங்கள் சேர்க்கத் தொடங்கினேன். ஹோலி க்ராஸ் காலேஜில் பி.ஏ ஆங்கிலம் முடித்திருந்த என் சின்னம்மாவின் நூல்கள் சில என்னிடம் அடைக்கலம் ஆயின. மு.வ எழுதிய “கள்ளோ? காவியமோ?”, செலக்‌ஷன்ஸ் ஃப்ரம் ஆர்.எல்.ஸ்டீவன்சன், ஜெரோம்.கே.ஜெரோம் எழுதிய “த்ரீ மென் இன் எ போட்”, பெர்னாட் ஷாவின் “செய்ண்ட் ஜோன்” மற்றும் கிரிஷ் கர்னாடின் “துக்ளக்” ஆகியவை அந்த சிறிய கலெக்‌ஷனில் இருந்தன. “துக்ளக்” நாடகம் பள்ளிவாசல் பாங்கோசையில் தொடங்கி, முடியும் போதும் பாங்கோசையிலேயே முடியும் அமைப்பில் எழுதப்பட்டிருந்தது என்பது மட்டும் ஞாபகம் வருகிறது. பிறகு கிரிஷ் கர்னாடை ’காதலன்’, ‘மின்சாரக் கனவு’ ஆகிய படங்களில் கதாநாயகிகளின் தந்தையாகப் பார்த்தபோது உடனே “துக்ளக்” ஞாபகம் வர, கூடவே பாங்கோசை பாய்ண்ட்டும் நினைவுக்கு வந்து “அல்லாஹு அக்பர்” என்று முணகினேன். மனதின் விசித்திரங்களில் ஒன்று! இதற்கு ’அசோசியேட்டட் மெமரி’ என்று பெயராம். சிலருக்கு இதற்கு நேர்மாறாக நடந்திருக்கலாம். அதாவது தொழுகையில் சினிமா ஞாபகம் வந்து நாசமாக்குவது. அட! என் கைவசமே அப்படி ஒரு சம்பவம் இருக்கும்போது பிறரைச் சொல்வானேன்? பாங்கு பற்றிப் பேச்செடுத்தால் அதுவும் சில சமயம் நினைவுக்கு வரும்.
 
அப்போது எம்.சி.ஏ கடைசி வருடம். அஸ்லம் வீடு குறிஞ்சி நகரில் இருந்தது. அப்பகுதியின் விளிம்பில் புதுக்கோட்டை திசையில் ரயில் தண்டவாளம் நீண்டு கிடக்கும். உடையான்பட்டி ஸ்டேஷன் என்று ஒரு மஞ்சள் நிற பில்டிங் உண்டு. அங்கு ரயில் நிற்குமா என்று தெரியவில்லை. நின்று பார்த்ததில்லை ஒருபோதும். அந்த தண்டவாளத்தில் எத்தனையோ மாலைகள் நானும் அஸ்லமும் ஆளுக்கொரு கம்பி மீது பேலன்ஸ் செய்தபடி பேசிக்கொண்டே நடை பழகியிருக்கிறோம். தண்டவாளத்துக்கு அப்பக்கம் உடையான்பட்டி கிராமம். சில முஸ்லிம் குடும்பங்கள் இருந்ததால் அங்கே ஒரு சிறிய பள்ளிவாசல் உருவாகி இருந்தது. மண் சுவரும் கீத்துக் கூரையுமாக நின்ற அதில் இருபது பேர் தொழுவதற்கு இடம் இருந்தது. அஸ்லம் வீட்டிற்கு தினமும் செல்லும் நான் அகஸ்மாத்தாக ஓரிரு தடவை அந்தப் பள்ளிக்கு மக்ரிப் தொழுகைக்குச் சென்று வந்தேன். நகரில் இருந்து வரும் இமாம் வராததால் ஒருமுறை நானே இமாமாக இருந்து தொழுகை நடத்தவேண்டி வந்தது. அதுபோல் ஒரு நாள், அஸ்லம் வீட்டில் எங்களுடன் கமலக்கண்ணனும் இருந்தபோது, நான் அந்தப் பள்ளிக்கு மக்ரிப் தொழச் சென்றேன். அஸ்லம் மூட் இருந்தால்தான் தொழுவான். அப்போது இல்லாததால் கமலக்கண்ணனுடன் வாக்கிங் போய்விட்டான். ஒளு செய்துவிட்டு நான் பள்ளிவாசலில் காத்திருந்தேன். வேறு யாருமே வரவில்லை. எனவே மைக்கை ஆன் செய்து ஆட்காட்டி விரல்களால் காதுகளை அடைத்துக் கொண்டு “அல்லாஹூ அக்பர்” என்று பாங்கு சொல்லக் குரலெடுத்தேன். கீத்துக் கூரைக்கு மேலே லவ்டு ஸ்பீக்கர் வழி என் குரல் ஆகாயத்தில் பரவி அதிர்வதை உணர்ந்தேன். சட்டென்று இருதயம் இருமடங்கு துடிக்கிறது. பாங்கில் தவறு நேர்ந்துவிடுமோ என்ற ஒரு வெலவெலப்பு மனதில் தோன்ற முகத்தில் ஜிவ்வென்று சூடு பரவி ஊசிக் குத்தலாக இருந்தது. ஒரு வழியாக நான் மட்டுமாய்த் தொழுதும் முடித்து அஸ்லமின் வீட்டுக்கு வந்தேன். என் அனுபவத்தைச் சொன்னபோது கமலக்கண்ணன் சொன்னான், “மாப்ள, நீ நின்ன எடம் சாதாரணமான எடமா? அந்த பயம் மனசுல வரத்தானே செய்யும்?” அவன் சொன்னது சரிதான். அன்று மதியம்தான் ‘டைட்டானிக்’ பார்த்திருந்தோம். தரையே கப்பலாய் அசைவதுபோல் தோன்றும்படி மனதில் பிம்பங்கள் அலைமோதிக் கொண்டிருந்தன. 

”பள்ளிகள் பல இருந்தும் / பாங்கோசை கேட்ட பின்பும் /  பள்ளி செல்ல மனம் இல்லையோ? / படைத்தவன் நினைவில்லையோ?” என்று நாகூர் ஹனீஃபா மருகிப் பாடும் வரிகளும் நினைவில் ஒலிக்கின்றன. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் மனக்கண்ணில் ஒரு காட்சி விரிந்து கொள்கிறது. ஏழெட்டு வருடங்களுக்கு முன், மாணவர்கள் தங்கள் கலைத் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று பி.காம் வகுப்பொன்றில் ஊக்கப்படுத்திப் பேசினேன். அந்த வகுப்பில் ஜமால் முகமது என்ற மாணவன் எழுந்து நின்று மேற்படிப் பாடலைத்தான் பாடினான். பாடும்போது நாகூர் ஹனீஃபாவைப் போலவே முகபாவனை கொடுத்துப் பாடினான். அப்போது அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே என் உள்விழி, மனத் திரையில் நாகூர் ஹனீஃபாவைப் பார்த்துக் கொண்டிருந்தது. இப்போது நிலைமை தலைகீழ். எங்காவது இந்தப் பாடல் காதில் வந்து விழுந்தால், எங்காவது என்ன? பெரும்பாலும் நிக்காஹ் நிகழ்ச்சிகளில்தான் அந்த சந்தர்ப்பம் அமைகிறது, உடனே மனத்திரையில் பி.காம் வகுப்பறையும், ஒல்லி ஜமால் முகமதும் வந்துவிட, அவனுக்குத்தான் நாகூர் ஹனீஃபா டப்பிங்க் குரல் கொடுத்தார் என்று பிரம்மையும் தட்டுகிறது! ஜமால் முகமது இப்போது அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக இருக்கிறான். அடிக்கடி கண்ணில் படுகிறான்.



விதவிதமான பாங்கு சத்தங்களும் நினைவில் வருகின்றன. அவரவரின் மனநிலைகளும் ரசனைகளும் அதில் பிரதிபலிக்கின்றன என்பதை வெகு காலமாக அவதானம் செய்திருக்கிறேன். சுந்தர் நகரில் நாங்கள் குடியிருந்தபோது ஒருநாள் மாலை நானும் அஸ்லமும் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்பகுதி பள்ளிவாசலில் இருந்து பாங்கு ஒலித்தது. அந்த ஸ்டைல் பழைய இந்திப் படப் பாடல் ஒன்றின் மெட்டு என்று அஸ்லம் சொன்னான். மோதீனாரின் ஃபேவரைட் பாடலாக அது இருந்திருக்க வேண்டும். அவர் ஆழ்மனம் அந்த மெட்டையே பாங்கு சொல்வதற்கு வரித்துக் கொண்டுவிட்டது. 


பொதுவாக பாங்கோசை நீட்டி ஒலிக்கப்படும்போது அது நெளிவுகள் இன்றி நீட்டப்படுவதுதான் வழக்கம். ஆனால் எங்கள் பகுதியில் இருந்த மோதீனார் ஒருவர் அந்த மரபை உடைத்தெறிந்தார். தொண்டையில் பூகம்பம் வந்தது போல் அவர் பாங்கு சொல்லும்போது குரலையே முரமாக்கி வார்த்தைகளைப் புடைப்பது போல் தோன்றும். அல்லது அவர் ஒலிபெருக்கி முன் நின்று பாங்கு சொல்லும்போது பின்னாலிருந்து யாரோ அவரது தோள்களைப் பிடித்து அவரை உலுக்குகிறார்கள் என்பது போல் கற்பனை வரும். அந்த அளவுக்குக் கோரமான பிர்க்காவை அவரின் குரல் வெளிப்படுத்தியது.



பாங்கொலிக்கும் மோதீனார்கள் பற்றி எண்ணினாலோ பேசினாலோ யூசுஃப் நூரி அவர்களை நினைக்காமல் இருக்க முடியாது. அவருடைய குரல் தனித்தன்மையானது. பாங்கு சொல்வது மட்டுமல்ல, ஆன்மிகப் பாடல்கள் பாடுவதிலும் அவர் திறமை பெற்றிருந்தார். ஒரு நோட்டில் உருதுக் கவ்வாலிப் பாடல்கள்கூட எழுதி வைத்திருந்தார். கல்லூரிப் பள்ளிவாசலில் மோதீனாக அவர் வேலைக்குச் சேர்ந்த புதிதில் என் சகப் பேராசிரியர் ஒருவர் அவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். “எப்படி இவரைக் கண்டுபிடித்தீர்கள்?” என்று கேட்டேன். “பாங்கு சத்தம் கேட்டபோது அவருடைய குரலை வைத்துக் கண்டுபிடித்தேன்” என்று சொன்னார். ஆனால் யூசுஃப் நூரியின் பாங்கு ஸ்டைலின் பலமே அவருடைய மனம் அதில் முழுமையாகக் கரைந்துவிடுவதுதான். அரபி உச்சரிப்பில் அல்லது தஜ்வீத் என்னும் ஒலிப்பிலக்கணத்தில் அவர் டெக்னிக்கலி ஸ்ட்ராங் அல்ல என்னும் குற்றச்சாட்டிற்கு ஆளானார். “தேவையில்லாத இடத்தில் எல்லாம் இழுக்கிறீர்கள். உங்கள் பாங்கு முறையாக இல்லைன்னு சொல்றாங்கத்தா.” என்று அவர் ஒருமுறை என்னிடம் வருத்தப்பட்டார். கண்கள் லேசாகக் கலங்கியிருந்தது.

“பள்ளிகளில் பாங்கு ஒல்லிக்கின்றன
ஆனால் அவற்றில் பிலாலின் உணர்ச்சித் துடிப்பு இல்லை”

என்று மகாகவி இக்பால் பாடினார். ஒரு விஷயம் இலக்கணப்படி சரியாக இருப்பது என்பது வேறு தன்னளவில் சரியாக இருப்பது என்பது வேறு. நபித்தோழர் பிலால் (ரலி) அவர்களுக்கு சில அரபி எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்க வரவில்லை. ஆனால் நபிகள் நாயகத்தின் ஆஸ்தான மோதீனார் என்னும் பேறு அவர்களுக்குத்தான் கிடைத்தது. இதைப்பற்றி அரபிகள் சிலர் நபியிடம் குறை சொன்னபோது, பிலால் (ரலி)  அவர்களின் பாங்கொலியை இறைவன் மிகவும் உவக்கிறான் என்பது அவர்களுக்கு உணர்த்தப்பட்டது. இதை நான் யூசுஃப் நூரி சாகிபிடம் சொல்லித் தெம்பூட்டினேன். ”மனசுத்தத்துடன் நீங்கள் பாங்கு சொன்னால் அதை இறைவன் ஏற்றுக்கொள்வான். குறை சொல்பவர்களைப் பொருட்படுத்தாதீர்கள்” என்றேன்.


 
இலக்கணம் வெர்சஸ் இலக்கியம் என்னும் மோதலை வெகு காலமாகவே நான் அவதானித்து வந்திருக்கிறேன். அதன் ஆரம்பப் புள்ளி திருவையாற்றில் தொடங்கியது. என் பள்ளிப் பருவத்தில் வருடாவருடம் தியாகராஜ மகோத்ஸவம் நடைபெறும்போது பிரபல கர்நாடகப் பாடகர்களான பலரைப் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். மதுரை சோமு, டி.என்.சேஷகோபாலன், ஜேசுதாஸ், ராஜ்குமார் பாரதி, சௌம்யா, சுதா ரகுநாதன் மற்றும் பலர். பின்னாளில் திடீரென்று மனதில் ஒரு கேள்வி எழுந்தது. “தியாகராஜர் அடைந்ததை இவர்களெல்லாம் அடைந்துவிட்டார்களா? அல்லது அவர் எந்த மனநிலையில் இருந்து பாடினாரோ அந்த மனநிலையில்தான் இவர்களும் பாடுகிறார்களா? சங்கீதத்தின் தொழில்நுட்ப ரீதியில் இவர்கள் நேர்த்தியாக இருக்கலாம். ஆனால் அதன் ஆத்மாவைத் தொடுவது என்பது முற்றிலும் வேறு விஷயம். இவர்களின் பயிற்சிகளும் சாதகங்களும் தொழில்நுட்பத்தை மட்டுமே மெருகேற்றியுள்ளன. அதற்குத்தான் இத்தனை பாடுகளும். ஆனால், ஏதேனும் ஆத்மார்த்தம் தென்படுமானால் அதன் நதிமூலம் வேறு ஒன்று” என்று மனதில் தோன்றிற்று. தவிர்க்க முடியாமல் தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ புதினமும் ‘ரசிகரும் ரசிகையும்’ என்னும் சிறுகதையும் ஞாபகம் வரும்.


இந்த அலசல் பின்னாளில் திருக்குர்ஆன் ஓதும் கலையான ‘கிராஅத்’ பற்றியும் எடைபோட வைத்தது. திருக்குர்ஆன் வாக்கியங்களை அவற்றிற்கு உரிய அளபு நிறையுடனும் உச்சரிப்புடனும் ஓதுவதற்கு ஷத்து, மத்து, சுகூன் போன்ற தர்த்தீல், குன்னா செய்வது போன்ற ஒலிப்புகள், இவற்றின் இலக்கண நுட்பங்கள் வகுக்கப்பட்ட தஜ்வீத் முறை, ஏழு விதங்களில் ஓதுவதன் சபஅ கிராஅத் கல்வி, அப்படி ஓதக் கற்றவர்களுக்கு வழங்கப்படும் ’காரீ’ என்னும் பட்டம் என்று அது ஒரு தனி உலகம் என்பது புலப்பட்டது. ஆனாலும் காரீ பட்டம் பெற்ற பலரின் ஓதுதலில் ஆத்மார்த்தமாக ஒரு நிறைவின்மை, சிலரிடம் அதைவிட மோசமாக ஒரு செயற்கை இருப்பது மனதை உறுத்தியது. ஒருவேளை அவர்கள் டெக்னிக்கலி பெர்ஃபெக்டாக இருக்கக்கூடும், ஆனால் அவர்களின் கிராஅத் ஜீவனற்றுக் கிடப்பதை உணர்ந்தேன். ஒருவேளை அது கற்பூரம்தான், நான்தான் கழுதை போலும் என்றும் நினைத்துக் கொள்வேன், இல்லையெனில் ஊரே வியக்கும் ஒருவரின் கிராஅத் என் காதில் மட்டும் பூம்பூம் மாட்டுக்காரனின் மேள இழுவையாக உறுத்துவது ஏன்?

என் மனதைக் கவரும், கரைக்கும் கிராத்துக்காரர்கள் என்று ஒரு பட்டியல் என் நினைவுப்புலத்தில் உருவாகி வந்திருப்பதைக் காண்கிறேன். அவர்களில் சிலர் மிகவும் சிறிய கைகள்தான். (மௌலவிகளிலும் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய கைகள் உண்டு!) அத்தகையோரிடம் அவரவருக்கென்று பிரத்யேகமான பாணிகள் இருப்பதைக் கண்டிருக்கிறேன், ஒருவேளை தங்கள் குரலுக்கேற்ற பாணியை உருவாக்கிக் கொண்டதுதான் அவர்களின் கவர்ச்சிக்குக் காரணமோ என்னவோ தெரியவில்லை.
பொதுவாக, கிராஅத் வகை ஏழு என்று சொல்லப்பட்டாலும் கேட்டுப்பார்த்தால் எழுபதாயிரம் வகைகள் இருக்கும் போலுள்ளது. எனவே அதைக் குறிக்க நான் மெட்டு என்ற வார்த்தையைத்தான் நான் பயன்படுத்த வேண்டியுள்ளது, மென்மையான குரல் கொண்ட என் மௌலவி நண்பர் ஒருவரின் கிராஅத் என்னை மிகவும் கவர்ந்தது, அவருடைய பாணியும், அதாவது மெட்டும் புதிதாக இருந்ததை அவரிடம் சிலாகித்த போது அது மலேசியாவைச் சேர்ந்த, பொக்கை வாய் காரீ ஒருவரின் மெட்டு என்று சொன்னார்.

”பாணி என்பது வேறு. மெட்டு என்பது வேறு, இளையராஜா பாணி என்பது போல, அதே பாணியில் அவர் ஏகப்பட்ட மெட்டுக்களை உருவாக்குகிறார் அல்லவா? நீ என்னடான்னா இரண்டையும் ஒன்னுங்கிறியே?” என்று நீங்கள் கேட்கக்கூடும், நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் ஒருவர் தன் பாணியில் ஒரே மெட்டை மாத்திரம் தன் வாழ்நாள் முழுக்கப் போட்டுக்கொண்டிருந்தால் நான் சொல்வது சரிதானே? கிராஅத்துக்காரர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். ஒரு மெட்டு, அதேதான் முழுத் திருக்குர்ஆனுக்கும்! உதாரணமாக, உலகப் புகழ் பெற்ற காரீக்களில் ஒருவரான ளியாத் பட்டேலின் (ZIAD PATEL) குரலும் பாணியும் காதல் மிகுதியில் கொஞ்சிக் குழைவது போல் உள்ளன. அவர் ஓதுவதை யூ-ட்யூபில் கேட்ட மாத்திரத்தில் என் மனைவி ரசிகையாகிவிட்டாள் (சூப்பர் வாய்ஸ்!). அவளுக்குப் பிடித்த இன்னொரு இஸ்லாமியப் பாடகர் உவைஸ் ரஜா காதிரி. அதே விதத் தேன் குரல். சற்று மூக்கும் கலந்த பெண்மை ததும்பும் குரல், ளியாத் பட்டேல் எந்த வசனத்தை ஓதினாலும் காதல் இழையும் உணர்ச்சியில்தான் ஓதுகிறார். அது போர்க்கள வசனமாக இருக்கட்டும், உலக அழிவு பற்றிய வசனங்களாக இருக்கட்டும், அல்லது பாகப் பிரிவினை குறித்த வசனங்களாக இருக்கட்டும். எல்லாவற்றிலும் காதலைத் ததும்ப விடுகிறார். நான் அறிந்த உள்ளூர் மௌலவி ஒருவர் இவருக்கு நேர் எதிர், வீரக்குரல் அவருக்கு, அதற்கேற்ற மெட்டில்தார் குர்ஆனை ஓதுவார், “குர்ஆனை அதன் அளபு நிறையுடன் ஓதுங்கள்” என்று அல்லாஹ் சொன்னாலும் சொன்னான், இவர் துல்லியமாக அளக்கும் டிஜிட்டல் ஸ்கேலாகவே மாறிவிட்டார்! ’சமது’ என்று குற்றியலுகரத்தில் முடிக்க அனுமதி இருந்தாலும் சமத் என்று சடன் ப்ரேக் போட்டுத்தான் வண்டியை நிறுத்துவார், எனவே அவரின் கிராஅத்தில் ஒரு கறார் தன்மை இருக்கும். கருணை பொங்கும் வசனங்களிலும் வீரத்தை ததும்ப வைப்பது அவரின் தனித்திறமை. ஹூருல் ஈன்களுக்கு (சொர்க்கக் கண்ணிகளுக்கு) மிலிட்டரி உடை மாட்டி உலவவிடுகிறார் என்று தோன்றும். மாதவிடாய், பிள்ளைப்பேறு போன்றவை குறித்த வசனங்களை ஓதினாலும் அதே வீரக்குரல்தான்!
மேலுக்கும் மேலே குறிப்பிட்ட என் மௌலவி நண்பர் கிராஅத் கேட்பதில் எனக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்துவிட்டுத் தன் நண்பர் ஒருவரை அறிமுகப் படுத்தினார், அவர் “சுரீலி ஆவாஸ்” (இன்னிசைக் குரல்) கொண்டவர் என்று சொல்லியிருந்தார், அது உண்மைதான் என்பதை அந்தத் தொழுகையில் கண்டேன், அவரின் குரல் தேனின் தாரையாகக் காதில் பாய்ந்தது. ஆனால் ஏதோ முக்கியமான ஒன்று அதில் குறைவது போல் பட்டது, அது என்ன என்று தெளிவாகக் கூற முடியாத பட்சத்தில் ‘இவர் எனக்கானவர் அல்ல’ என்றுதான் முடிவு செய்துகொள்கிறேன், இதை என் நண்பரிடம் சொன்னபோது, “என்ன ஜீ இப்படிச் சொல்றீங்க, என்னை விட அவர் எவ்வளொ நல்லா ஓதுறார்” என்றார், அளவுகோல்கள் எப்படி மாறுகின்றன பார்த்தீர்களா? நான் ரசிப்பவர் ரசிப்பவரை என்னால் ரசிக்க முடியவில்லை.

இந்த லிஸ்டில் இருவரைக் குறிப்பிட்டே ஆகவேண்டும், அப்துல் பாசித் மற்றும் அப்துர் ரஹ்மான் சுதைசி, கிராஅத் உலகின் மன்னர்கள் என்று இந்த இருவரைத்தான் கொண்டாடுகிறார்கள், மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்கு அடுத்துதான் என்று ஒரு ஏகோபித்த முடிவு பேணப்படுவதாகத் தெரிகிறது, எனக்கென்றால் இந்த இருவர் ஓதுவதையும் துளிகூட ரசிக்கவே முடியவில்லை! ஒருமுறை கல்லூரியில் ஸ்டாஃப் நெட் கஃபேக்குள் நான் நுழைந்த போது அரபிப் பேராசிரியர் எம்.ஏ.கே ஏர்ஃபோன் மாட்டிக் கொண்டு யூ-ட்யூபில் அப்துல் பாசித் ஓதும் கிராஅத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார், என்னைப் பார்த்தவுடன் அன்புடன் “கேட்கிறீர்களா?” என்றார். வினயமாக ‘வேண்டாம் சார்’ என்று மறுத்துவிட்டேன், அந்த வீடியோவில் அப்துல் பாசித்தின் முகத்தைப் பார்த்தபோது மனதை என்னவோ செய்தது, அது என்ன பாவனை? கடுமையான வயிற்று வலியால் அவதிப்படும் ஒருவனின் முகத்தைப் போல் இருந்தது, அப்படி மூச்சை ’தம்’ கட்டி ஓதினால் சில சமயம் கழுத்து நரம்புகள் வெடித்துவிடும் என்று பேராசிரியர் கூறினார், ஏன் இப்படிக் கஷ்டப்பட்டு ரசிக்கவே முடியாதபடி ஓதவேண்டும்? என்று நான் நினைத்தேன், ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து அதைப் பாராட்டி ரசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களெல்லாம் எதை ரசிக்கிறார்கள்? ஓதுதலின் இலக்கண நுட்பங்களைத்தான் என்று நினைக்கிறேன், அதை அறியாதவர்கள் அவரின் பிரயத்தனத்தைதான் ரசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 

”இனிய குரல்களால் குர்ஆனை அலங்கரிப்பீர்” என்பது ஒரு நபிமொழி. இதை எல்லோரும் பின்பற்ற நினைப்பது இயல்புதான், ஆனால் இனிய குரல் எது என்பதில் அவரவருக்கும் தனி அபிப்பிராயங்கள் இருக்கும் அல்லவா? தான் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு யுவதியின் மனதைப் பீடித்துக் கொள்ளும்போது அவளின் இயல்பான அழகு குலைந்து ஒரு விகாரத்தன்மை படிந்துவிடுவதைப் போல, அழகாக ஓதவேண்டும் என்னும் முனைப்பே கிராஅத்தைக் கெடுத்துவிடுவதை அவ்வப்போது காணமுடிகிறது. அதிலும் குறிப்பாக, பெண்கள் ஓதும்போது இப்படி  ஆவது மிகவும் சகஜம். கல்லூரியில் பெண்கள் பிரிவு விழாக்களில் ஆரம்பத்தில் யாராவது ஒரு மாணவி கிராஅத் ஓதுவார். அந்தக் கணங்களில் மிகவும் தர்ம சங்கடமாக உணர்வேன். அழகாக ஓதுகிறேன் பேர்வழி என்று அநியாயத்துக்குக் கொஞ்சித் தொலைப்பார்கள். பெண்கள் தம் குரலில் மழலையைத் தக்கவைத்துக் கொள்வது வயதை மறப்பதற்கான அவர்களின் உளவியல்களில் ஒன்று என யுவன் சந்திரசேகர் ‘விருந்தாளி’ என்னும் சிறுகதையில் சொல்கிறார். அந்த உளவியல்தான் மாணவிகளின் கிராஅத்திலும் வெளிப்படுகிறது போலும். ஓதுகிறேன் என்று சில ஆண்கள் மிரட்டுவதைப் பார்க்கும்போது இந்தப் பெண்கள் ’மிழற்றுவது’ ஒரு குறையே இல்லை அல்லவா?

இனிய குரல் என்பதற்குப் பொது மனதில் இருக்கும் வரையரைகளில் ஒன்று ’கணீர் குரல்’ என்பது. அதை ‘வெங்கலக் குரல்’ என்று வேறு வருணிப்பார்கள். அப்படித்தான் சினிமாவில் டி.எம்,எஸ்ஸின் குரல் சிலாகிக்கப்பட்டது. தமிழக முஸ்லிம்களின் உலகில் இசைக்கு ’சினோனிமஸ்’ ஆகிவிட்ட ஒரே குரல் நாகூர் ஹனீஃபாவின் கணீர் குரல். என் தந்தை அவரின் பாடல்களை மெய்மறந்து ரசிக்கும்போதெல்லாம் நான் அதில் ஒன்ற முடியாமல் தவித்திருக்கிறேன். அபூர்வமாக சில பாடல்களில் கண்கள் கசிந்திருக்கிறேன் என்றாலும் அதெல்லாம் அப்போதைய என் மனநிலையை அல்லது அப்பாடலின் கருத்தினைச் சார்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். நிச்சயமாக நா.ஹனீஃபாஜியின் குரலுக்காக அல்ல. ”மதினா நகருக்கு…” ஆகட்டும் “கள்ளக்குடி தந்த…” ஆகட்டும், அவரின் குரல், தேவைக்கு ரொம்பவுமே அதிகமாக அலறுவதாகவே எனக்குப் படுகிறது. (அவரின் உச்சரிப்பு தனி கவனத்திற்கு உரியது. “பாங்கோஷை கேட்ட பின்பும்” என்று அவர் ப்ராமண பாணியில் உச்சரிக்கும்போது ‘ஆகா, இப்படிப் பாடினால் பின் திராவிட ஆச்சாரம் என்னாறது?’ என்று நினைத்துக் கொள்வேன்.)

என் தந்தை நாகூர் ஈ.எம்.எச்சின் ரசிகர் என்றால் நான் உருது கஜல் பாடல்களின் ரசிகன். சோகம் இழையும் ஜக்ஜீத் சிங்கின் குரலிலும், காதல் குழையும் ஹரிஹரனின் குரலிலும் சொக்கிக் கிடந்தேன். ஜக்ஜீத் சிங், தலத் அஜீஸ், சுரேஷ் வத்கர், ரூப் குமார் ரத்தோட், அனூப் ஜலோத்தா, பூபிந்தர் போன்ற புகழ் பெற்ற கஜல் பாடகர்களின் குரல்கள் ஹனீஃபா சாகிபின் கணீரில் கால்வாசிகூட தேராது.


இது இப்படி ஒரு பக்கம் இருக்க, செவ்வியல் இசையில் வோக்கல் ம்யூசிக்கைப் பொருத்தவரை கர்நாடகத்தை விடவும் ஹிந்துஸ்தானி மீது அதிகமான லயிப்பு உண்டானது. மனம் அதில் சட்டென்று ஒரு மருகலைத் தொட முடிந்தது காரணமாக இருக்கலாம். பண்டிட் ஜஸ்ராஜ், பீம்சேன் ஜோஷி, குலாம் முஸ்தஃபா, அஸ்லம் கான், ராஷித் கான் போன்றோரின் குரல்கள் லோ-ஸ்கேலில் கட்டைக் குரல்களாக ஒலித்தன. கணீர் வேறு கட்டை வேறு என்பதை அப்போது என் மனம் கண்டுகொண்டது. கணீர் நங்கென்று மூளையில் தாக்கினால் ‘கட்டை’ ஒருவிதக் கிறக்கத்தை ஊட்டிற்று.
கட்டைக்குரலில் கிராஅத் செய்து என்னைக் கவர்ந்த ஒரு இமாம் நாங்கள் கே.கே நகரில் குடியிருந்த போது அப்பகுதியின் பள்ளிவாசலில் இருந்தார். அவருடைய கிராஅத்தைக் கேட்பதற்காகவே மிக ஆர்வமுடன் பள்ளிக்குச் செல்வேன். வெள்ளிக் கிழமை ஜும்மாவில் வழக்கமாக ’சூறத்துல் லுஹா’வை ஓதுவார். “வ அம்மா பிநிஃம(த்)தி றப்பி(க்)க ஃபகத்திஸ்” என்று அவர் முடிக்கும்போது உச்சி முதல் பாதம் வரை ஒரு புளகம் பாயும். அப்படி ஓதத் தெரிந்த மனுஷனுக்கு பேச்சாற்றல் மருந்துக்கும் இல்லாமல் போனதை என்னவென்பது? வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் அவையினர் வியப்ப ‘பயான்’ பேசித்தானே ஆகவேண்டும்? கிராஅத் கேட்பதற்காக நானொருவன் வருவது போல் நல்ல பிரசங்கத்தை எதிர்பார்த்து நாலு பேர் வரத்தானே செய்வார்கள்? அவர்களையும் திருப்தி படுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் பேஷ் இமாமுக்கு இருக்கிறது அல்லவா. அதை இவர் செய்யமுடியாமல் சொதப்பித் தள்ளவே, ஜமாஅத் கமிட்டி ஒரு ஏற்பாட்டைச் செய்தது. அதாவது, ஒவ்வொரு வெள்ளியும் ‘பயான்’ செய்ய பெரிய மதறஸாவில் இருந்து ஒரு ஹஜ்றத் வருவார். இவர் தொழுகை மட்டும் நடத்துவார். சில சமயம் பயானிப்பவர் வரத் தாமதம் ஆகும்போது இமாமைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். பீதியுடன் கையைப் பிசைந்து கொண்டு பள்ளிவாசலின் வாசலில் நின்று தெருமுனையை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பார். சோதனையான சில வெள்ளிகளில் பயானி மட்டம் போட்டுவிட, வேறு வழி இல்லாமல் இவரே ஜிப்பாவில் மைக்கின் க்ளிப்பை மாட்டிக் கொண்டு பேசத் தொடங்குவார். பேசுவதற்கு பாய்ண்ட்டே இல்லாமல் தடுமாறுவார். முஸ்லிம்கள் கெட்டுப்போய்விட்டார்கள், வீடுகளில் டி.வி வைத்து சினிமா பார்க்கிறார்கள் மற்றும் திருமணங்களில் வீடியோ எடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்வார். வாய்தா வாங்கும் வக்கீல் போல் இது ஒரு கேஸ்தான் அவருக்குப் பிரசங்கப் பொருளாக இருக்கும். மிம்பர் பக்கம் திரும்பி நின்று தக்பீர் கட்டி ஓதத் தொடங்கி விட்டாலோ என் மனதைக் கரைத்துவிடுவார்.


கிராஅத்தின் அனுபவங்களில் மிக வினோதமான ஓர் அனுபவமும் ஒருமுறை ஏற்பட்டது. ஒரு மக்ரிப் தொழுகையில் பள்ளியின் இமாம் வராததால் இருந்தவர்களில் ஒருவர் தலைமை ஏற்று தொழுகை நடத்த முடிவாயிற்று. யார் என்றெல்லாம் சர்ச்சை செய்ய இடமில்லை. மார்க்கப் பணியில் எங்கள் பகுதிக்கு மூத்தவராக இருந்த ஒரு பேராசிரியர் எல்லோரையும் பார்த்துப் புன்னைகை விரித்தபடி முன்னால் நகர்ந்து தொழுகைக் கம்பளத்தில் நின்றுவிட்டார். நாங்கள் பின்னாடி வரிசையாக நின்றோம். தொழுகை தொடங்கி சென்றுகொண்டிருந்தது. கிராஅத்தின் ஒரு கட்டத்தில் அவர் தொட்ட மெட்டு என் மனதில் சொடுக்கி இழுத்தது. ஒரு கணம் என்னால் நம்பவே முடியவில்லை. மடோனாவின் “RAY OF LIGHT“ என்னும் ஆல்பத்தில் உள்ள “FROZEN“ என்னும் அற்புதமான பாடலில் மீண்டும் மீண்டும் வரும் ஹம்மிங் அது!

நான் வீட்டில் தொழும்போதெல்லாம் என் மனம் தனக்கே உரிய த்வனியில் கிராஅத் செய்கிறது. என் மனதின் அடித்தளத்தில் இருந்து எப்போதோ பதிந்த கிராஅத்துக் குரல்கள் உயிர்த்தெழுந்து வருவதைப் பார்க்கிறேன். என் மனதை உருக்கிவிட்டுச் செல்வதை உணர்கிறேன்.

2 comments:

  1. Qari Ziyaad Patel: http://www.qzp.co.za/

    ReplyDelete
  2. ///“தியாகராஜர் அடைந்ததை இவர்களெல்லாம் அடைந்துவிட்டார்களா? அல்லது அவர் எந்த மனநிலையில் இருந்து பாடினாரோ அந்த மனநிலையில்தான் இவர்களும் பாடுகிறார்களா? சங்கீதத்தின் தொழில்நுட்ப ரீதியில் இவர்கள் நேர்த்தியாக இருக்கலாம். ஆனால் அதன் ஆத்மாவைத் தொடுவது என்பது முற்றிலும் வேறு விஷயம்.///

    வாஸ்தவமான கருத்து. அவருடைய நிலையினை இவர்கள் யாருமே எட்ட முடியாதுதான். தன் இறுதிக் காலத்தில் இலக்கணத்தில் மையப்படுத்தாமல்
    பக்தி பாவத்துடன் வெளிப்பட்டார் எம் எஸ் அம்மா.

    பாங்கிலிருந்து தியகராஜ உற்சவத்திற்கும், பீம்சென் ஜோஷிக்கும்,அனுப் ஜலோட்டாவுக்கும் சட்டென்று எளிதாகத் தாவிக் குதிக்கிறீர்கள்.

    நல்ல பதிவு.

    ReplyDelete