Thursday, July 18, 2024

இத்ரீஸ் ஷாஹ்…?

 


            அண்மையில் நூல் ஒன்று வெளிவந்துள்ளது. அதைப் பற்றிய குறுஞ்ச் செய்தி ஒன்றை சகோதரர் உவைஸ் எனக்கு அனுப்பியிருந்தார்.



            அந்த நூலின் பெயர் “Empire’s Son, Empire’s Orphan”; எழுதியவரின் பெயர் நைல் கிரீன். இந்த நூல் எதனைப் பற்றியது? “The Fantastical Lives of Ikbal and Idries Shah” என்று அதன் அட்டையிலேயே ஒற்றை-வரியம் (one-liner) குறிப்பிடப்பட்டுள்ளது. ஈண்டு இக்பால் என்று குறிப்பிடப்படுபவர் அல்லாமா இக்பால் அல்லர்; இவர் இத்ரீஸ் ஷாவின் தந்தையான சர்தார் அக்பர் அலீ ஷாஹ் (1894-1969) என்பவராவார். இதனை கவனம் கொண்டு மேற்செல்க.

            இக்பால் அலீ ஷாஹ் மற்றும் இத்ரீஸ் ஷாஹ் ஆகியோரின் குற்றங் குறைகளை இந்நூல் விவரிக்கிறது. தந்தையும் தனையனும் தம் சிந்தை சித்தரித்த கற்பனைக் கதைகளால் ஐரொப்பிய அறிவுலகை மயக்கிவிட்டனர் என்பது குற்றச்சாட்டின் சாரம்.



            நான் பெரிதும் மதிக்கும் அறிஞர் அன்னிமேரி ஷிம்மெல் சொல்கிறார்: “இத்ரீஸ் ஷாஹ்வையும், தி ஸூஃபீஸ் உள்ளிட்ட அவரின் நூற்ளையும் ’சீரியஸ்’ஆன மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.” பீட்டர் லம்பான் வில்சன் என்பாருக்கு எழுதிய கடிதமொன்றில் அவர் மேலும் சொல்கிறார்: “அவருக்கு கல்விப்புலப் பின்னணி இல்லை. அவரின் விட்டேற்றியான எழுத்துக்கள் இயைபு படுத்த முடியாத விடயங்களால் நிரம்பியுள்ளன. வரலாற்று ஈடுபாடோ சுழியம். துல்லியம் துக்குனியூண்டு மட்டுமே… ஓர் அறிஞராக இல்லாவிடினும் ஆழமான ஆத்மானுபவம் கொண்ட ஒருவரை, அவரால் தன்னை ‘கல்விப்புல’ பாணியில் வெளிப்படுத்திக் கொள்ள முடியாவிடினும், அவரின் சொற்களில் உண்மையும் நேர்மையும் சுடர்விடும் எனில், ஸூஃபி என்று ஏற்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். அது ஒரு பிரச்சனை அன்று. ஆனால், வெறும் பாசாங்குகளை முன் வைக்கும் இத்ரீஸ் ஷாஹ்வை என்னால் ஏற்க முடியாது.”



            சகோதரர் உவைஸ் அனுப்பி வைத்த குறுஞ்செய்தியை வாசித்துவிட்டு வெகு நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ”நான் நேசித்த நூற்கள்” என்னும் நூலில் இத்ரீஸ் ஷாஹ் பற்றி ஓஷோ சொல்லியிருக்கும் கருத்தையும் நினைவு கூர்ந்தேன்: “இந்த மனிதனின் ஒவ்வொரு நூலையும் நான் பரிந்துரைக்கிறேன். பயப்பட வேண்டாம், நான் இன்னமும் பைத்தியமாகத்தான் இருக்கிறேன்! என்னை எதுவும் தெளிய வைக்க முடியாது. ஆனால், இத்ரீஸ் ஷாஹ்வின் ஒரு நூல் ஏனைய நூற்கள் அனைத்துக்கும் மேலே உயர்ந்து நிற்கிறது. எல்லாமே அழகான நூற்கள்தாம். அவை அனைத்தையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் தி ஸூஃபீஸ் (ஸூஃபிமார்) என்னும் இந்த நூல் ஒரு வைரம். தி ஸூஃபீஸில் அவர் செய்திருக்கும் பணியின் மதிப்பு அளவிட முடியாதது. பேசுவது எனக்கு எளிதான ஒன்றுதான். தூங்கும்போதுகூட என்னால் பேச முடியும், அதுவும் தர்க்க பூர்வமாக! நல்லது. இது போன்ற ஒன்றை எப்போது நான் அடையாளம் கண்டாலும் அதை நான் பாராட்டுவேன். இது மிகவும் அழகானது – இத்ரீஸ் ஷாஹ்வின் தி ஸூஃபீஸை நீங்கள் புரிந்து கொண்டால் இதையும் புரிந்து கொள்வீர்கள். அவர்தான் மேற்குக்கு முல்லா நஸ்ருத்தீனை அறிமுகப்படுத்தியவர். அதன் மூலம் அவர் மகத்தான பணி செய்துள்ளார். அவருக்குக் கைம்மாறு அளிக்க இயலாது. மேற்கு என்றென்றைக்குமாக அவருக்குக் கடன்பட்டே இருக்க வேண்டியதுதான். எளிய சிறிய நஸ்ருத்தீன் கதைகளை இத்ரீஸ் ஷாஹ் மேலும் அழகாக்கிவிட்டார். அந்த குறுங்கதைகளைத் துல்லியமாக மொழிபெயர்ப்பது மட்டுமன்று, அவற்றை அழகு படுத்தவும், அவற்றை மேலும் சிந்தனையுடையதாக்கவும், கூர்மையாக்கவும் அவரால் இயன்றுள்ளது. நான் அவரின் நூற்கள் அனைத்தையும் (என் பட்டியலில்) சேர்க்கிறேன்.”

            அன்னிமேரி ஷிம்மெல் கூறுவதில் நான் ஏற்கும் கருத்தும் இருக்கிறது, மறுக்கும் கருத்தும் இருக்கிறது. அதே போல் ஓஷோ கூறுவதிலும்.



            இத்ரீஸ் ஷாஹ்வின் பெருநூல் என்று கருதப்படும் தி ஸூஃபீஸ் என்னும் நூலினை நான் இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அது ஓர் அருமையான நூல் என்றே இன்றளவும் கருதுகிறேன். பின்னர், மௌலானா ரூம்யின் வாழ்வில் நூறு கதைகள், தர்வேஷ்களின் கதைகள், முல்லா நஸ்ருத்தீன் கதைகள் 1-5 பாகங்கள் என்று அவரின் ஏழு நூற்களைத் தமிழாக்கமும் செய்துவிட்டேன். உண்மையில் என் கருத்தில் இத்ரீஸ் ஷாஹ் பற்றிய மதிப்பீடு என்ன?

            இத்ரீஸ் ஷாஹ்வை ஒருபோதும் நான் ஒரு ஸூஃபி மகான் என்றோ இறை நேசர் அல்லது இறை ஞானி என்றோ கருதியதில்லை. ஆனால் அவர் ஸூஃபித்துவம் பற்றி பரக்க எழுதிய ஓர் ’அறிஞர்’ என்றே கருதுகிறேன்.

            சிக்கல் எங்கே வருகிறதென்றால், அன்னிமேரி ஷிம்மெல் சொல்வது போல் அவர் ’ஆதார’பூர்வமாக எழுதவில்லை, புனைவுகளைக் கலந்து எழுதியிருக்கிறார் என்னும்போது அவரை எவ்விதத்தில் அறிஞர் என்று ஏற்க முடியும் என்பதில்தான். அகாடெமிக் ரீதியில் அவர் ஓர் அறிஞர் என்றும்கூட ஏற்கப்பட முடியாதவர் என்று அன்னிமேரி கருதுகிறார். அதனால்தான், “சீரியஸ்” மாணவர்கள் அவரின் நூற்களைத் தவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். ஆனால், நான் யோசித்துப் பார்க்கிறேன், இந்த சீரியஸ் மாணவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய? அவர்களால் ஸூஃபித்துவத்தில் ஈடுபட முடியுமா? ஸூஃபித்துவம் வெறுமனே அகாடெமிக் ஆராய்ச்சியன்று. சொல்லப்போனால், சீரியஸ் மாணவர்கள் அதில் நடைபோட முடியாது என்றே சொல்லலாம். ஏனெனில் அது பகுத்தறிவுப் புலம் அன்று. உன் அறிவைக் கழற்றி வைத்துவிட்டு வா என்பதே அத்துறையில் முதல் நிபந்தனையாக இருக்கும். நாகூர் ரூமி எழுதிய “திராட்சைகளின் இதயம்” நாவலை வாசித்துப் பாருங்கள், நான் சொல்வது புரியும். ஸூஃபித்துவத்துக்கு ’சீரியஸ்’ மாணவர்கள் தேவையில்லை, ’சின்சியர்’ சீடர்கள்தாம் தேவை.

            புத்தகங்களை வாசிப்பதால் ஒருவர் ஸூஃபியாகிவிட முடியாது என்பதை ஸூஃபி மகான்கள் காலந்தோறும் வலியுறுத்தி வந்துள்ளனர். இதில் கல்விப் புலம் சார்ந்த ஆராய்ச்சி நூற்களை ஸூஃபி மகான்கள் பெரிதாகவே கருத மாட்டார்கள் என்பதற்கான நியாயங்கள் உண்டு. அத்தகு நூற்கள் ஸூஃபித்துவத்தின் உள்ளுணர்வுப் புலனை விட்டும் வெகு தொலைவிலானவை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

            இத்ரீஸ் ஷாஹ் பற்றிய ஓஷோவின் மேற்கோளை மீண்டும் படித்துப் பாருங்கள். கல்விப் புலம் சார்ந்த இறுக்கமான தர்க்க ரீதியான சிந்தனை முறை அமைந்த ஒருவருக்கு அது பித்தனின் பிதற்றல் போன்றுதான் ஒலிக்கும். இத்ரீஸ் ஷாஹ்வின் நூற்களும் பல இடங்களில் அது மாதிரிதான் எதிர்பாராத திருப்பங்களைக் காட்டிக் கொண்டே இருக்கும். ஸுஃபித்துவம் என்பதற்கு “ஃகிலாஃபே ஆதத்” – பழக்கங்களுக்கு முரண்படுதல் என்று ஒரு வரையறை உண்டு!

            இத்ரீஸ் ஷாஹ் ஒரு சூஃபி நெறியின் குருவாகவோ பிரதிநிதியாகவோ அறியப்பட்டவர் அல்லர். அவர் இன்ன ’சில்சிலா’ என்னும் குருவழித் தொடரைச் சேர்ந்தவர் என்று நான் எங்குமே வாசித்ததில்லை. தான் அனைத்து சூஃபி நெறியிலும் வல்லவர் என்பது போல் அவரின் எழுத்துக்களில் தொனிக்கலாம். அதைத்தான் அன்னிமேரி ஷிம்மெல் சாடுகிறார் எனில் அதில் எனக்கும் உடன்பாடு உண்டு.

            ஆனால், ஸூஃபிப் பள்ளிகளின், குறிப்பாக நவீன கல்விப் போக்கிற்கு இயைந்து செல்பவற்றின் ‘சின்சியர்’ சீடர்களுக்கு ‘சமிக்ஞைகள்’ வழங்குகின்றவை என்று அவரின் நூற்களைக் கருதுகிறேன். அவ்வகையில் அவை முக்கியமானவை என்றே சொல்ல வேண்டும்.   

No comments:

Post a Comment